உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp24 எண் 1 பக். 10-13
  • பைபிள் சொல்வது என்றுமே தப்பாகாது!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் சொல்வது என்றுமே தப்பாகாது!
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • 1. கல்யாணம்
  • 2. மற்றவர்களை நடத்தும் விதம்
  • 3. பணம்
  • 4. செக்ஸ்
  • திருமணத்தில் நீ வெற்றி காணக்கூடுமா?
    உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல்
  • திருமண நாளுக்குப் பின்
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • திருமணம்—கடவுளின் பரிசு
    கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள்
  • சந்தோஷமான குடும்பம்—பகுதி 1
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2024
wp24 எண் 1 பக். 10-13

பைபிள் சொல்வது என்றுமே தப்பாகாது!

வாழ்க்கையின் நான்கு முக்கியமான விஷயங்களில் பைபிளின் ஆலோசனை லட்சக்கணக்கான மக்களுக்கு உதவி செய்திருக்கிறது. அதை இப்போது பார்க்கலாம்.

1. கல்யாணம்

ஒரு அழகான இடத்தில் ஒரு தம்பதி ஒன்றாக சேர்ந்து நடந்துகொண்டே சந்தோஷமாக நேரம் செலவு செய்கிறார்கள்.

கல்யாணத்தைப் பற்றியும், சந்தோஷமான கல்யாண வாழ்க்கைக்கு என்ன தேவை என்பதைப் பற்றியும் மக்கள் வித்தியாசமான கருத்துகளை சொல்கிறார்கள்.

பைபிள் ஆலோசனை: “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள்மீது அன்பு காட்டுவதுபோல், உங்கள் மனைவிமீதும் அன்பு காட்ட வேண்டும்; மனைவி தன் கணவனுக்கு ஆழ்ந்த மரியாதை காட்ட வேண்டும்.”—எபேசியர் 5:33.

அர்த்தம்: கல்யாண வாழ்க்கையை ஆரம்பித்து வைத்தது கடவுள்தான். அதனால் தம்பதிகள் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அவரால் மட்டும்தான் சொல்ல முடியும். (மாற்கு 10:6-9) கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் கணவனும் மனைவியும், ‘எனக்கு என்ன தேவை’ என்று யோசிக்காமல் ‘என்னால் என் துணைக்கு என்ன செய்ய முடியும்’ என்று யோசிக்க வேண்டும். மனைவிமேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு கணவர், மனைவியை நன்றாகப் பார்த்துக்கொள்வார், அவளைப் பாசமாகவும் நடத்துவார். கணவர்மேல் மரியாதை வைத்திருக்கும் ஒரு மனைவி, அவரிடம் பேசும் விதத்திலும், நடந்துகொள்ளும் விதத்திலும் அந்த மரியாதையைக் காட்டுவார்.

பைபிள் ஆலோசனை கைகொடுத்தது: வியட்நாமில் வாழும் ஸஷாங் மற்றும் ரிங்க்கி தம்பதியைப் பற்றிப் பார்க்கலாம்.a அவர்களுடைய கல்யாண வாழ்க்கை கசக்க ஆரம்பித்தது. ஸஷாங் கொஞ்சம்கூட அன்பே இல்லாமல் நடந்துகொண்டார். அவர் சொல்கிறார்: “ரிங்க்கியின் மனதைப் புரிந்துகொள்ளாமல் அவளை எப்போதுமே கஷ்டப்படுத்திக்கொண்டே இருந்தேன். அவளை மட்டம்தட்டிப் பேசினேன்.” அதனால், ரிங்க்கி தன்னுடைய கணவரை விவாகரத்து செய்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். ரிங்க்கி சொல்கிறார்: “அவர் மாறுவார் என்ற நம்பிக்கையே எனக்கு இல்லை. அவர்மேல் இருந்த மரியாதையே போய்விட்டது.”

பின்பு ஸஷாங்க்கும் ரிங்க்கியும் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார்கள். எபேசியர் 5:33-ல் சொல்லியிருக்கிற விஷயத்தைக் கல்யாண வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று கற்றுக்கொண்டார்கள். ஸஷாங் சொல்கிறார்: “ரிங்க்கியிடம் அன்பாக, பாசமாக நடந்துகொள்வது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள இந்த வசனம் எனக்கு உதவி செய்தது. அவளுக்குத் தேவையானதை வாங்கிக்கொடுக்க வேண்டும்... அவளுக்கு ஒத்தாசையாக இருக்க வேண்டும்... அவளுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வேண்டும்... என்று நான் கற்றுக்கொண்டேன். நான் இப்படியெல்லாம் செய்வதால் அவளுடைய அன்பையும் மரியாதையையும் சம்பாதிக்க முடிகிறது.” ரிங்க்கி இப்படி சொல்கிறார்: “எபேசியர் 5:33-ல் சொல்லியிருக்கிற மாதிரி நான் நடந்துகொள்கிறேன். நான் அவருக்கு மரியாதை காட்ட காட்ட அவர் என்னிடம் ரொம்ப அன்பாக நடந்துகொள்கிறார். நான் இப்போது ரொம்ப நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறேன்.”

கல்யாண வாழ்க்கையைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள jw.org-ல், “குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்” என்ற தலைப்பில் வெளிவந்த எண் 2, 2018, விழித்தெழு! பத்திரிகையைப் படியுங்கள்.

சூப்பர்மார்க்கெட்டில் ஒரு தம்பதி ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அதைக் கண்டுபிடிக்க ஒரு பெண் உதவி செய்கிறார். நிறைய டாட்டூக்களைப் போட்டுக்கொண்டு பார்ப்பதற்கே அந்தத் தம்பதி வித்தியாசமாக இருந்தாலும் அவர்களை அந்தப் பெண் கனிவாக நடத்துகிறார்.

2. மற்றவர்களை நடத்தும் விதம்

ஒருவர் வேற இனத்தையோ தேசத்தையோ மதத்தையோ சேர்ந்தவராக இருந்தால் அல்லது பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தால் பெரும்பாலும் மக்கள் அவரை மோசமாக நடத்துகிறார்கள். ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுகிறவர்களையும் அப்படித்தான் நடத்துகிறார்கள்.

பைபிள் ஆலோசனை: “எல்லா விதமான ஆட்களுக்கும் மதிப்புக் கொடுங்கள்.”—1 பேதுரு 2:17.

அர்த்தம்: ஒருவர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவதாலோ, வேற நாட்டையோ இனத்தையோ சேர்ந்தவராக இருப்பதாலோ அவரை வெறுக்க வேண்டும் என்று பைபிள் சொல்லித்தருவதில்லை. அதற்குப் பதிலாக ஏழையோ பணக்காரரோ, எந்த நாடோ இனமோ, யாராக இருந்தாலும் சரி, எல்லா விதமான மக்களுக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும் என்றுதான் பைபிள் சொல்லித்தருகிறது. (அப்போஸ்தலர் 10:34) அவர் நம்புகிற விஷயமும், நடந்துகொள்கிற விதமும் நம்மோடு ஒத்துப்போகவில்லை என்றாலும் நம்மால் அவரிடம் அன்பாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்ள முடியும்.—மத்தேயு 7:12.

பைபிள் ஆலோசனை கைகொடுத்தது: டானியல் என்பவருடைய உதாரணத்தைப் பார்க்கலாம். ஆசியாவை சேர்ந்தவர்கள் எல்லாம் ரொம்ப மோசமானவர்கள், அவர்கள் நம் நாட்டைக் கெடுத்துவிடுவார்கள் என்பதைத்தான் அவர் கேட்டு வளர்ந்திருக்கிறார். அதனால், ஆசியாவிலிருந்து வந்த யாரையுமே அவருக்கு சுத்தமாகப் பிடிக்காது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நாலுபேர் முன்னால் அவர்களை அசிங்கப்படுத்துவார். அவர் சொல்கிறார்: “நான் இப்படி நடந்துகொள்வது தவறு என்றே எனக்குத் தோன்றவில்லை. என் நாட்டின் நல்லதுக்காகத்தான் அப்படியெல்லாம் செய்கிறேன் என்று நினைத்தேன்.”

டானியல் பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொண்டார். “எல்லா நாட்டை சேர்ந்தவர்களையும் கடவுள் ஒரே மாதிரிதான் பார்க்கிறார். நானும் அப்படித்தான் பார்க்க வேண்டும் என்று கற்றுக்கொண்டேன். அதனால், யோசிக்கும் விதத்தையே நான் அடியோடு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது” என்று அவர் சொல்கிறார். இப்போது டானியல் எப்படி நடந்துகொள்கிறார்? “மக்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்றெல்லாம் நான் யோசிப்பதில்லை. எல்லாரையும் நான் நேசிக்கிறேன். வேறு வேறு நாட்டை சேர்ந்தவர்கள்கூட இப்போது எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள்.”

கூடுதலாகத் தெரிந்துகொள்ள jw.org-ல், “என்று ஒழியும் இந்தப் பாகுபாடு?” என்ற தலைப்பில் வெளிவந்த எண் 3, 2020, விழித்தெழு! பத்திரிகையைப் படியுங்கள்.

ரோட்டோரமாக வண்டியில் கடை போட்டிருக்கும் ஒருவர், சாப்பாட்டு பார்சலை கஸ்டமருக்குக் கொடுக்கிறார்.

3. பணம்

பணக்காரர்களாக ஆவதற்குத்தான் நிறைய பேர் முயற்சி செய்கிறார்கள். அப்போதுதான் சந்தோஷமும் நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்றெல்லாம் நினைக்கிறார்கள்.

பைபிள் ஆலோசனை: “பணம் பாதுகாப்பு தருவதுபோல் ஞானமும் பாதுகாப்பு தரும். ஆனால், பணத்தைவிட சிறந்தது அறிவும் ஞானமும்தான். ஏனென்றால், அவை ஒருவருடைய உயிரையே காப்பாற்றும்.”—பிரசங்கி 7:12.

அர்த்தம்: பணம் நமக்குத் தேவைதான். ஆனால், பணம் இருந்தால் மட்டும் நமக்கு சந்தோஷமும் நல்ல எதிர்காலமும் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. (நீதிமொழிகள் 18:11; 23:4, 5) பைபிளில் கடவுள் கொடுத்திருக்கும் ஞானமான ஆலோசனைகளின்படி நடந்தால்தான் உண்மையான சந்தோஷமும் நல்ல எதிர்காலமும் நமக்குக் கிடைக்கும்.—1 தீமோத்தேயு 6:17-19.

பைபிள் ஆலோசனை கைகொடுத்தது: இந்தோனேஷியாவில் இருக்கிற கார்டோ, பணம்தான் வாழ்க்கை என்று நினைத்தார். அவர் சொல்கிறார்: “மற்றவர்கள் ‘மூக்குக்குமேல் விரல் வைக்கிற மாதிரி’ நான் ஆடம்பரமாக வாழ்ந்தேன். நினைத்த இடத்துக்கெல்லாம் என்னால் போக முடிந்தது. கார், பங்களா என்று ஆசைப்பட்ட எல்லாவற்றையும் வாங்க முடிந்தது.” ஆனால் இதெல்லாம் நிலைக்கவில்லை. அதைப் பற்றி அவரே இப்படி சொல்கிறார்: “சிலர் என்னை ஏமாற்றி என்னிடம் இருந்ததையெல்லாம் பிடிங்கிக்கொண்டார்கள். எத்தனையோ வருஷங்களாக நான் ஓடி ஓடி உழைத்தது எல்லாம் கண்ணை மூடித் திறப்பதற்குள் காணாமல் போய்விட்டது. பணம் பணம் என்றே நான் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டிருந்தேன். ஆனால், எனக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டும்தான். கடைசியில் என்னிடம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. நான் எதற்குமே லாயக்கில்லாததுபோல் எனக்குத் தோன்றியது.”

பணத்தைப் பற்றி பைபிள் சொல்கிறபடி அவர் வாழ ஆரம்பித்தார். சொத்துசுகத்துக்குப் பின்னால் போவதற்குப் பதிலாக எளிமையாக வாழ அவர் முடிவெடுத்தார். அவர் சொல்கிறார்: “கடவுளோடு நமக்கிருக்கும் நெருக்கமான நட்புதான் உண்மையிலேயே ஒரு பெரிய சொத்து. நிஜமாக சொல்ல வேண்டும் என்றால் இப்போதுதான் நான் ஒரு பெரிய பணக்காரன். என்னால் நிம்மதியாகத் தூங்க முடிகிறது, நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன்.”

பணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள jw.org-ல், “கல்வியும் பணமும் நிறைவான வாழ்க்கையைத் தருமா?” என்ற கட்டுரையை எண் 3, 2021, காவற்கோபுர பத்திரிகையில் பாருங்கள்.

4. செக்ஸ்

செக்ஸைப் பற்றி உலகம் முழுவதும் மக்களுக்கு வித்தியாசமான கருத்து இருக்கிறது.

பைபிள் ஆலோசனை: ‘நீங்கள் . . . பாலியல் முறைகேட்டுக்கு விலகியிருக்க வேண்டும் என்பது கடவுளுடைய விருப்பம். உடலைப் பரிசுத்தமாகவும் மதிப்புள்ளதாகவும் வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டும். கடவுளைப் பற்றித் தெரியாத உலக மக்கள் திருப்தியடையாமல் கட்டுக்கடங்காத காமப்பசிக்கு இடம்கொடுப்பது போல நாம் இடம்கொடுக்கக் கூடாது.’—1 தெசலோனிக்கேயர் 4:3-5.

அர்த்தம்: துணைக்குத் துரோகம் செய்வது, விபச்சாரம், கல்யாணமாகாதவர்கள் வைத்துக்கொள்கிற உடலுறவு, ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் வைத்துக்கொள்கிற உடலுறவு, மிருகங்களோடு வைத்துக்கொள்கிற உடலுறவு போன்றவற்றைத்தான் ‘பாலியல் முறைகேடு’ என்று பைபிள் சொல்கிறது. இவையெல்லாம் தவறு என்றும் பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 6:9, 10) கல்யாணமான ஆணும் பெண்ணும்தான் செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு மட்டும்தான் கடவுள் அதைப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.—நீதிமொழிகள் 5:18, 19.

பைபிள் ஆலோசனை கைகொடுத்தது: ஆஸ்திரேலியாவில் வாழும் கிளாராவின் அனுபவத்தைக் கேளுங்கள்: “‘கல்யாணம் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒருவரோடு செக்ஸ் வைத்துக்கொண்டாலே அந்த நபர் என்னை நேசிப்பார், நன்றாகப் பார்த்துக்கொள்வார்’ என்று ஒருகாலத்தில் நான் நினைத்தேன். ஆனால் அதற்கு நேர் எதிராக, என்னுடைய பயமும் கவலையும்தான் அதிகமானது.”

பிறகு, செக்ஸைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று கிளாரா கற்றுக்கொண்டார், அதன்படி நடந்தார். அவர் சொல்கிறார்: “நம்மை வலி, வேதனையிலிருந்து பாதுகாப்பதற்குத்தான் கடவுள் பைபிளில் நிறைய ஆலோசனைகளைக் கொடுத்திருக்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன். எனக்குக் கல்யாணம் ஆகிவிட்டது. நான் இப்போது சந்தோஷமாக இருக்கிறேன். உண்மையான அன்பும் பாதுகாப்பும் இப்போதுதான் எனக்குக் கிடைத்திருக்கிறது.”

கூடுதலாகத் தெரிந்துகொள்ள jw.org-ல், “கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?” என்ற கட்டுரையைப் படியுங்கள்.

எது சரி, எது தவறு என்று நம்மைப் படைத்த கடவுள் நமக்கு சொல்லித்தருகிறார். அவர் சொல்வதுபோல் செய்வது எல்லா சமயத்திலும் சுலபம் இல்லைதான். ஆனால், முயற்சி எடுத்து அதை செய்தோம் என்றால் நம் வாழ்க்கை எப்போதுமே சந்தோஷமாக இருக்கும். அதில் எந்த சந்தேகமும் இல்லை.

போன கட்டுரைகளில் பார்த்த வாலிபர் ஒரு செங்குத்தான ஒத்தையடி மலைப் பாதையில் நடந்துபோகிறார். சங்கிலிகளால் அதில் தடுப்புப் போடப்பட்டுள்ளது. தூரத்தில் ஒரு தொங்கு பாலமும் அதைத் தாண்டி ஒரு மலையின் உச்சியும் தெரிகிறது.

a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்