இன்று மக்கள் எப்படி இருப்பார்கள் என்று பைபிள் அன்றே சொன்னதா?
பைபிள் தரும் பதில்
போகப்போக மக்கள் மோசமாகத்தான் இருப்பார்கள் என்று பைபிளில் முன்பே சொல்லியிருக்கிறது. அதனால் மக்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். எதற்குமே ஒத்துப்போகாமல் ஏனோதானோவென்று வாழ்வார்கள் என்று சொல்கிறது.a (2 தீமோத்தேயு 3:1-5) ஆனால், சிலர் வித்தியாசமாக இருப்பார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. அவர்கள் கடவுளுடைய உதவியால் இந்த கெட்ட விஷயங்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு, கடவுளுக்கு பிடித்த மாதிரியே யோசிக்கவும் நடக்கவும் கற்றுக்கொள்வார்கள் என்று சொல்கிறது.—ஏசாயா 2:2, 3.
இந்தக் கட்டுரையில். . .
சுயநலமாக நடக்கிறவர்களால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?
மக்கள் இப்படி மோசமாகிக்கொண்டே போவதை பார்க்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் நாட்களில் வாழும் மக்கள் எப்படி நடந்துகொள்வார்கள், எப்படி யோசிப்பார்கள் என்று பைபிளில் முன்பே என்ன சொல்லியிருக்கிறது?
மக்களுடைய யோசனைகளும் செயல்களும் இப்படி மோசமாக இருப்பதற்கு பொதுவான ஒரு காரணம் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. அதுதான் சுயநலம். மனிதர்கள் “சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்களாக,“ ”சுயநலக்காரர்களாக,” “கடவுளை நேசிக்காமல் சுகபோக வாழ்க்கையை நேசிக்கிறவர்களாக” இருப்பார்கள்.—2 தீமோத்தேயு 3:2-4
பைபிள் சொன்ன மாதிரியே, இன்று வாழும் நிறைய மக்கள் அவர்களை பற்றி மட்டும்தான் யோசிக்கிறார்கள். ‘எனக்கு என்ன வேண்டும், எனக்கு எது பிடிக்கும், நான் நன்றாக இருந்தால் போதும் அதுதான் முக்கியம்’ என்று இதை பற்றி மட்டும்தான் யோசிக்கிறார்கள். இப்படி நினைப்பது இன்று ரொம்ப சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இவர்கள்தான் ‘நான்தான்’ என்று நினைக்கும் தலைமுறை. சொல்லப்போனால் ‘நான்தான், நான் மட்டும்தான், ‘எனக்கு ராஜாவாக நான் வாழ வேண்டும்’ என்று நினைக்கும் தலைமுறை. இப்படி அவர்களைப் பற்றியே ரொம்ப யோசிப்பதால், நல்ல குணங்களை காட்ட வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. ”நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக,” ”நன்றிகெட்டவர்களாக” இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இருப்பதை வைத்தும் சந்தோஷப்பட மாட்டார்கள்; மற்றவர்கள் செய்யும் உதவிக்கும் நன்றி காட்ட மாட்டார்கள்.—2 தீமோத்தேயு 3:2, 3.
நம் காலத்தில் வாழும் மக்களிடம் இன்னும் மோசமான வேறு குணங்களும் இருக்கும் என்று பைபிள் சொல்கிறது. அதற்கு ஆணி வேரும் சுயநலம்தான்.
பேராசை. எங்கு பார்த்தாலும் ‘பண ஆசை பிடித்தவர்கள்’ இருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கையின் வெற்றியைத் தீர்மானிப்பதே அவர்களுடைய வருமானமும் அவர்களிடம் இருக்கும் வசதியான பொருள்களும்தான் என்று நினைக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:2.
பெருமை. நிறையப்பேர் ”ஆணவமுள்ளவர்களாக, கர்வமுள்ளவர்களாக,“ ”தலைக்கனம் பிடித்தவர்களாக“ இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:2, 4) ‘என்னிடம் அது இருக்கிறது, இது இருக்கிறது’ என்று அவர்களுடைய திறமைகளையும் தகுதிகளையும் பணத்தையும் வைத்து பெருமையடிக்கிறார்கள்.
பொய். ‘கடவுளை நிந்திக்கிறவர்களும்,’ ‘மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேசுகிறவர்களும்’ எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:2, 3) இந்த மக்கள் கடவுளைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் பொய் சொல்லி அவர்களை அவமானப்படுத்துகிறார்கள்.
பிடிவாதம். நிறையப்பேர் ”உண்மையில்லாதவர்களாக,” “எதற்குமே ஒத்துப்போகாதவர்களாக,” “நம்பிக்கைத் துரோகிகளாக, அடங்காதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீமோத்தேயு 3:2-4) இப்படிப்பட்டவர்கள் மற்றவர்களோடு ஒத்துப்போக வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்றோ சொன்னதை செய்ய வேண்டும் என்றோ நினைக்க மாட்டார்கள்.
கோபம். இன்று நிறையப்பேர் ”கொடூரமானவர்களாக” இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் அவர்களுக்கு சட்டென கோபம் வருகிறது. இதனால் காட்டுமிராண்டித்தனமாக, வெறித்தனமாக நடக்கிறார்கள்.—2 தீமோத்தேயு 3:3.
அநியாயம். நம் காலத்தில் ‘அக்கிரமம் அதிகமாகும்’ என்று இயேசு முன்பே சொன்னார். (மத்தேயு 24:12) இதனால் எங்கு பார்த்தாலும் ‘போர்களும் கலவரங்களும்’ வெடிக்கும் என்றும் சொன்னார்.—லூக்கா 21:9.
பாசம் இல்லாத குடும்பம். ”அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படியாதவர்களாக,” “பந்தபாசம் இல்லாதவர்களாக” இருக்கிறவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களை சரியாக கவனிப்பதில்லை. அவர்களை மோசமாக நடத்துகிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள்.—2 தீமோத்தேயு 3:2, 3.
பக்திமான் போல் வேஷம் போடுவது. இன்று நிறையப்பேர் அவர்களை ‘பக்திமான்களைப் போல் காட்டிக்கொள்கிறார்கள்.’ (2 தீமோத்தேயு 3:5) கடவுள் என்ன செய்யச் சொல்கிறாரோ அதை செய்வதை விட்டுவிட்டு இவர்களுக்கு ஏற்ற மாதிரி பேசுகிற மதத்தலைவர்கள் சொல்வதைத்தான் கேட்கிறார்கள்.—2 தீமோத்தேயு 4:3, 4.
சுயநலமாக நடக்கிறவர்களால் மற்றவர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்?
நிறையப்பேர் ரொம்ப சுயநலமாக நடந்துகொள்வதால் மக்கள் மனதளவில் ரொம்ப பாதிக்கப்படுகிறார்கள். அதனால் அவர்களுக்கு மனநல பிரச்சினைகளும் வருகின்றன. (பிரசங்கி 7:7) உதாரணமாக, பண ஆசை பிடித்தவர்கள் மற்றவர்களை சுரண்டி பிழைக்கிறார்கள். பாசமே இல்லாமல் சொந்த குடும்பத்தில் இருக்கிறவர்களையே ரொம்ப மோசமாக நடத்துகிறார்கள். அதனால் அவர்களுடைய குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் வருகிறது, ஏன் தற்கொலைகூட செய்துகொள்கிறார்கள். இன்னும் நிறையப்பேர் துரோகம் செய்கிறார்கள், முதுகில் குத்துகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மனதளவில் உடைந்துபோகிறார்கள். அவர்களால் அதிலிருந்து மீண்டுவரவே முடிவதில்லை.
மக்கள் ஏன் இன்னும் இன்னும் மோசமாகிக்கொண்டே போகிறார்கள்?
இதற்கான காரணத்தை பைபிள் சொல்கிறது.
மக்களுக்கு கடவுள் மேலும் மற்றவர்கள் மேலும் உண்மையான அன்பு குறைந்துகொண்டே வருகிறது. (மத்தேயு 24:12) அதனால் சுயநலம் அதிகமாகிக்கொண்டே போகிறது.
பிசாசாகிய சாத்தான் பரலோகத்தில் இருந்து பூமிக்கு தள்ளப்பட்டான். (வெளிப்படுத்துதல் 12:9, 12) அந்த சமயத்திலிருந்து அவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கிற மக்களும் அவனைப் போலவே மோசமாக, சுயநலமாக நடந்துகொள்கிறார்கள்.—1 யோவான் 5:19.
மக்கள் இப்படி மோசமாகிக்கொண்டே போவதை பார்க்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
”இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:5) அதற்காக நாம் யாரோடும் சேராமல் ஒதுங்கியே இருக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. ஆனால் சுயநலமாக இருக்கிறவர்களோடு, கடவுளுக்கு பிடிக்காத வாழ்க்கையை வாழ்கிறவர்களோடு நாம் நெருக்கமாக பழகக்கூடாது.—யாக்கோபு 4:4.
எல்லாருமே மோசமானவர்களாக ஆகிவிடுவார்களா?
இல்லை. ”நடக்கிற எல்லா அருவருப்புகளையும் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக் குமுறுகிற“ ஆட்கள் இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (எசேக்கியேல் 9:4) அப்படிப்பட்டவர்கள் சுயநலமாக இருக்க மாட்டார்கள். கடவுளுக்கு பிடித்த மாதிரி வாழ்வார்கள். இவர்கள் நடந்துகொள்ளும் விதமும், பேச்சும் மற்ற மக்களிடமிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். (மல்கியா 3:16, 18) உதாரணமாக, எல்லாரிடமும் சமாதானமாக இருக்க அவர்கள் முயற்சி செய்வார்கள். போரையும் வன்முறையையும் ஒதுக்கித் தள்ளுவார்கள்.—மீகா 4:3.
இப்படியே போனால் மொத்த சமுதாயமே நாசமாகிவிடுமா?
இல்லை. மனித சமுதாயம் ஒரேயடியாக நாசமாகிவிடாது. வேண்டுமென்றே கடவுளுடைய பேச்சை கேட்காமல் இருக்கும் மக்களை சீக்கிரத்தில் கடவுள் அழித்துவிடுவார். (சங்கீதம் 37:38) அவர் ‘புதிய பூமியை’ உண்டாக்குவார். அதாவது, தாழ்மையான மக்கள் சமுதாயம் என்றென்றும் சமாதானமாக இந்த பூமியில் வாழ்வார்கள். (2 பேதுரு 3:13; சங்கீதம் 37:11, 29) இது வெறும் கற்பனை கிடையாது. ஏனென்றால் இன்றுகூட, நிறையப்பேர் கடவுளுக்கு பிடித்த மாதிரி அவர்களுடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்வதற்கு பைபிள் உதவி செய்கிறது.—எபேசியர் 4:23, 24.
a பைபிள் தீர்க்கதரிசனங்களையும் உலக நிலைமைகளையும் பார்க்கும்போது, நாம் வாழும் காலம்தான் ‘கடைசி நாட்கள்’ என்று தெரிகிறது. அப்போது, ”சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்“. (2 தீமோத்தேயு 3:1) கூடுதல் தகவலுக்கு, ”உலக அழிவை நினைத்து பயப்பட வேண்டுமா?“ என்ற கட்டுரையை பாருங்கள்.