அதிகாரம் 6
உதவி ஊழியர்கள் மதிப்புமிக்க சேவை செய்கிறார்கள்
அப்போஸ்தலன் பவுல் பிலிப்பியில் இருந்த சபைக்கு அனுப்பிய கடிதத்தில், “கிறிஸ்து இயேசுவோடு ஒன்றுபட்டிருக்கிற பரிசுத்தவான்கள் எல்லாருக்கும், கண்காணிகளுக்கும், உதவி ஊழியர்களுக்கும் கிறிஸ்து இயேசுவின் அடிமைகளான பவுலும் தீமோத்தேயுவும் எழுதுவது” என்று குறிப்பிட்டிருந்தார். (பிலி. 1:1) உதவி ஊழியர்களைப் பற்றி பவுல் இங்கே சொல்லியிருப்பதைக் கவனித்தீர்களா? அன்று இருந்த சபைகளைக் கவனித்துக்கொள்வதில் இவர்கள் மூப்பர்களுக்கு ரொம்ப உதவியாக இருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இன்றும் உதவி ஊழியர்கள் மூப்பர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள், சபையில் எல்லாம் ஒழுங்காக நடக்கவும் உதவுகிறார்கள்.
2 உங்கள் சபையில் யாரெல்லாம் உதவி ஊழியர்களாக இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? உங்களுக்கும் சபையில் இருக்கிற எல்லாருக்கும் உதவ அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் செய்கிற வேலைகளை யெகோவா ரொம்ப மதிக்கிறார். அவர்களைப் பற்றி பவுல் இப்படி எழுதினார்: “நல்ல விதத்தில் ஊழியம் செய்கிற ஆண்கள் நல்ல பெயர் எடுக்கிறார்கள், அதோடு கிறிஸ்து இயேசுவின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்தைப் பற்றி எந்தத் தயக்கமும் இல்லாமல் பேசுகிறார்கள்.”—1 தீ. 3:13.
உதவி ஊழியராக ஆவதற்கான தகுதிகள்
3 உதவி ஊழியர்கள் பைபிள் சொல்கிறபடி வாழ வேண்டும், பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும், கொடுக்கப்படும் வேலைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தான் தீமோத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில் பவுல் குறிப்பிட்டார். “உதவி ஊழியர்கள் பொறுப்புடன் நடக்கிறவர்களாகவும், இரண்டு விதமாகப் பேசாதவர்களாகவும், திராட்சமதுவை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர்களாகவும், அநியாய லாபம் சம்பாதிக்க அலையாதவர்களாகவும், விசுவாசத்தின் பரிசுத்த ரகசியத்தைச் சுத்த மனசாட்சியோடு காத்துக்கொண்டிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். அதோடு, இவர்கள் தகுதியுள்ளவர்களா என்று முதலில் சோதிக்கப்பட வேண்டும்; இவர்கள்மேல் எந்தக் குற்றச்சாட்டும் இல்லையென்றால் இவர்கள் உதவி ஊழியர்களாகச் சேவை செய்யலாம். உதவி ஊழியர்கள் ஒரே மனைவியை உடைய கணவர்களாகவும், தங்கள் பிள்ளைகளையும் வீட்டாரையும் நல்ல விதத்தில் நடத்துகிறவர்களாகவும் இருக்க வேண்டும்” என்று அவர் எழுதினார். (1 தீ. 3:8-10, 12) உதவி ஊழியர்களுக்கு இந்த உயர்ந்த தகுதிகள் இருப்பது அவசியம்; இல்லாவிட்டால், முக்கியமான பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ள நபரின் தகுதியைக் குறித்து சபையில் இருக்கிற யாராவது கேள்வி எழுப்பலாம்.
4 உதவி ஊழியர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி, சுறுசுறுப்பாக ஊழியம் செய்வார்கள். யெகோவாவைப் போலவே, மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள். (ஏசா. 9:7) அதனால், இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி வைராக்கியத்தோடு ஊழியம் செய்வார்கள்.
5 உடை, அலங்காரம், பேச்சு, மனப்பான்மை, நடத்தை என எல்லாவற்றிலும் உதவி ஊழியர்கள் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கிறார்கள். தெளிந்த புத்தியுள்ளவர்களாக நடந்துகொள்வதன் மூலம் மற்றவர்களின் மதிப்பைச் சம்பாதிக்கிறார்கள். அதுமட்டுமல்ல, யெகோவாவோடு இருக்கும் பந்தத்தையும் சபையில் இருக்கும் பொறுப்புகளையும் முக்கியமானதாக நினைக்கிறார்கள்.—தீத். 2:2, 6-8.
6 இந்தச் சகோதரர்கள், ‘தகுதியுள்ளவர்களா என்று முதலில் சோதிக்கப்பட்டிருக்கிறார்கள்.’ இவர்கள், உதவி ஊழியர்களாக நியமிக்கப்படுவதற்கு முன்பே, முழு ஈடுபாட்டோடு வேலை செய்பவர்கள் என்றும்... கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பவர்கள் என்றும்... கூடுதலான பொறுப்புகளைச் செய்யத் தயாராக இருப்பவர்கள் என்றும்... நிரூபித்தவர்கள். சபையில் இருக்கிற மற்றவர்களுக்கு இவர்கள் உண்மையிலேயே முன்னுதாரணங்களாக இருக்கிறார்கள்.—1 தீ. 3:10.
அவர்களுடைய வேலைகள்
7 உதவி ஊழியர்கள், சகோதர சகோதரிகளின் சார்பாக பல வேலைகளைச் செய்வதால், சபையில் போதிப்பதற்கும் கடவுளுடைய மந்தையை மேய்ப்பதற்கும் மூப்பர்களால் அதிக நேரம் செலவிட முடிகிறது. மூப்பர் குழுவில் இருக்கிறவர்கள், உதவி ஊழியர்களின் திறமைகளையும் சபையின் தேவைகளையும் மனதில் வைத்து அவர்களுக்கு நியமிப்புகளைக் கொடுக்கிறார்கள்.
உதவி ஊழியர்கள், சகோதர சகோதரிகளின் சார்பாகப் பல வேலைகளைச் செய்வதால், சபையில் போதிப்பதற்கும் கடவுளுடைய மந்தையை மேய்ப்பதற்கும் மூப்பர்களால் அதிக நேரம் செலவிட முடிகிறது
8 அவர்கள் செய்யும் வேலைகள் சிலவற்றை இப்போது கவனிக்கலாம். ஒரு உதவி ஊழியர் பிரசுரங்கள் சம்பந்தப்பட்ட வேலைகளைக் கவனித்துக்கொள்வார். நாம் படிப்பதற்கோ, ஊழியத்தில் கொடுப்பதற்கோ தேவைப்படுகிற பிரசுரங்களை இவரிடம் வாங்கிக்கொள்ளலாம். சிலர், ஊழியப் பகுதியின் பதிவுகளை அல்லது சபைக் கணக்குகளை கவனித்துக்கொள்வதற்கு நியமிக்கப்படலாம். இன்னும் சிலர், மைக்கைக் கையாளுவது, சவுண்ட் சிஸ்டத்தை இயக்குவது, அட்டன்டண்டுகளாகச் சேவை செய்வது போன்ற பல வழிகளில் மூப்பர்களுக்கு உதவுகிறார்கள். ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வது, பராமரிப்பது சம்பந்தப்பட்ட ஏராளமான வேலைகளைச் செய்வதற்கும் இவர்கள் உதவுகிறார்கள்.
9 சில சபைகளில், இந்த வேலைகள் ஒவ்வொன்றையும் செய்ய ஒவ்வொரு உதவி ஊழியர் நியமிக்கப்படலாம். மற்ற சபைகளில், ஒரு உதவி ஊழியரே பல வேலைகளைக் கவனிக்க வேண்டியிருக்கலாம். இன்னும் சில சபைகளில், ஒரு வேலையைக் கவனிக்க ஒன்றுக்கும் அதிகமான உதவி ஊழியர்கள் நியமிக்கப்படலாம். இந்த வேலைகளில் சிலவற்றைச் செய்து முடிக்க போதுமான உதவி ஊழியர்கள் இல்லையென்றால், ஞானஸ்நானம் எடுத்த, நல்ல முன்மாதிரிகளாக இருக்கிற மற்ற சகோதரர்களை மூப்பர் குழு பயன்படுத்தலாம். அந்த வேலைகளில் அவர்களுக்குக் கிடைக்கும் அனுபவம், பிற்பாடு உதவி ஊழியர்களாக நியமிக்கப்படும்போது அவர்களுக்குக் கைகொடுக்கும். ஒருவேளை சகோதரர்களே இல்லையென்றால், நல்ல முன்மாதிரியாக இருக்கிற ஒரு சகோதரியிடம் சில வேலைகளைக் கொடுக்கலாம். ஆனால், அவரை உதவி ஊழியராக நியமிக்க முடியாது. முன்மாதிரியாக இருக்கும் சகோதரர் அல்லது சகோதரி, ஆன்மீக விஷயங்களிலும் சரி, மற்ற விஷயங்களிலும் சரி, மற்றவர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பார். உதாரணத்துக்கு, கூட்டங்களிலும் ஊழியத்திலும் தவறாமல் கலந்துகொள்வார்; அதோடு, குடும்ப வாழ்க்கை, பொழுதுபோக்கு, உடை, அலங்காரம் போன்ற விஷயங்களிலும் மற்றவர்கள் பார்த்துப் பின்பற்றும் அளவுக்கு இருப்பார்.
10 மூப்பர்கள் குறைவாக இருக்கிற சபைகளில், ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறவர்களிடம் பைபிள் போதனைகள் சம்பந்தப்பட்ட கேள்விகளைக் கேட்பதற்கு, தகுதியுள்ள உதவி ஊழியர்களைப் பயன்படுத்தலாம். இந்தக் கேள்விகளை இணைப்பில், “பகுதி 1: கிறிஸ்தவ நம்பிக்கைகள்” என்ற தலைப்பில் பார்க்கலாம். “பகுதி 2: கிறிஸ்தவ வாழ்க்கை” என்ற தலைப்பில் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகள் இருப்பதால், அதை ஒரு மூப்பர்தான் நடத்த வேண்டும்.
11 ஏதாவது நல்ல காரணம் இருந்தால், மூப்பர் குழு, ஒரு உதவி ஊழியர் செய்கிற வேலையை வேறொரு உதவி ஊழியருக்கு எப்போதாவது கொடுக்கலாம். ஆனாலும், உதவி ஊழியர்களின் வேலைகளை அடிக்கடி மாற்றாமல் இருப்பது ரொம்ப நல்லது. ஒரு வேலையைக் கொஞ்சக் காலத்துக்காவது தொடர்ந்து செய்யும்போதுதான் அவர்களுக்கு அனுபவமும் திறமையும் கிடைக்கும்.
12 ‘எல்லாருக்கும் தெளிவாகத் தெரியும்’ அளவுக்கு முன்னேற்றம் செய்திருக்கும் உதவி ஊழியர்களுக்கு, சபையின் தேவைகளுக்கு ஏற்றபடி வேறு சில பொறுப்புகளையும் கொடுக்கலாம். (1 தீ. 4:15) போதுமான மூப்பர்கள் இல்லையென்றால், தொகுதிக் கண்காணிக்கு உதவியாளராக ஒரு உதவி ஊழியரை நியமிக்கலாம். சிலசமயங்களில், அவரையே ஒரு தொகுதி ஊழியராக நியமிக்கலாம். அப்படி நியமிக்கப்பட்டால், மூப்பர்களுடைய ஆலோசனைப்படி அவர் செயல்படுவார். வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் சில பாகங்களை உதவி ஊழியர்களுக்கு நியமிக்கலாம். தேவைப்பட்டால், சபை பைபிள் படிப்பை நடத்தச் சொல்லலாம். பொதுப் பேச்சுகளைக் கொடுக்கும்படியும் சொல்லலாம். இதைத் தவிர, வேறு ஏதாவது தேவைகள் ஏற்பட்டால் அவற்றையும் கையாளும்படி உதவி ஊழியர்களிடம் சொல்லலாம். ஆனால், அவற்றைச் செய்வதற்குத் தேவையான தகுதிகள் அவர்களிடம் இருக்க வேண்டும். (1 பே. 4:10) மூப்பர்கள் கொடுக்கிற இந்த வேலைகளையெல்லாம் உதவி ஊழியர்கள் மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்.
13 மூப்பர்கள் செய்யும் வேலைக்கும் உதவி ஊழியர்கள் செய்யும் வேலைக்கும் வித்தியாசம் இருப்பது உண்மைதான். ஆனால், உதவி ஊழியர்களின் வேலை மதிப்புக் குறைந்தது கிடையாது. அவர்களுடைய வேலையும் பரிசுத்த சேவையின் ஒரு பாகம்தான், சபை நன்றாகச் செயல்படுவதற்குத் தேவைப்படும் முக்கியமான சேவைதான். உதவி ஊழியர்கள் தங்களுடைய வேலைகளைத் தொடர்ந்து நன்றாகச் செய்தால்... மேய்ப்பர்களாகவும் போதகர்களாகவும் ஆவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொண்டால்... மூப்பர்களாக நியமிக்கப்படுவதற்கு அவர்கள் சிபாரிசு செய்யப்படலாம்.
14 நீங்கள் ஒரு டீனேஜ் சகோதரரா? அல்லது சமீபத்தில் ஞானஸ்நானம் எடுத்த சகோதரரா? அப்படியானால், உதவி ஊழியராக ஆவதற்கு முயற்சி செய்கிறீர்களா? (1 தீ. 3:1) ஒவ்வொரு வருஷமும் ஏராளமானவர்கள் யெகோவாவின் சாட்சிகளாக ஆவதால், சபையில் பொறுப்புகளை எடுத்துச் செய்ய தகுதியுள்ள சகோதரர்கள் தேவைப்படுகிறார்கள். அந்தத் தகுதியை நீங்கள் பெற, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசையை வளர்த்துக்கொள்ளுங்கள். அதற்கு ஒரு வழி, இயேசுவின் அருமையான உதாரணத்தைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்ப்பதுதான். (மத். 20:28; யோவா. 4:6, 7; 13:4, 5) கொடுப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவிக்க அனுபவிக்க, கொடுக்க வேண்டுமென்ற ஆசை இன்னும் அதிகமாகும். (அப். 20:35) அதனால், நீங்களாகவே போய் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். ராஜ்ய மன்றத்தைப் பராமரிக்க உதவுங்கள். வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்தில் மாணவர்கள் யாராவது வராதபோது அவர்களுடைய நியமிப்பைச் செய்ய முன்வாருங்கள். நீங்கள் உதவி ஊழியராக ஆக விரும்பினால், தனிப்பட்ட படிப்பைத் தவறாமல் படிப்பதன் மூலம், நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது முக்கியம். (சங். 1:1, 2; கலா. 5:22, 23) அதோடு, சபைப் பொறுப்புகளை நம்பி ஒப்படைப்பதற்குத் தகுதியானவர் என்று பெயர் எடுப்பதும், கொடுக்கப்பட்ட வேலைகளை உண்மையோடு செய்து முடிப்பதும் முக்கியம்.—1 கொ. 4:2.
15 உதவி ஊழியர்கள் கடவுளுடைய சக்தியால் நியமிக்கப்படுகிறார்கள். அவர்களுடைய உதவியால் சபை நன்மை அடைகிறது. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலைகளை அவர்கள் செய்யும்போது, சபையார் எல்லாரும் அவர்களோடு ஒத்துழைக்கிறார்கள். இதன் மூலம், உதவி ஊழியர்களுடைய கடின உழைப்புக்குத் தாங்கள் நன்றியோடு இருப்பதைக் காட்டுகிறார்கள். அதோடு, சபை ஒழுங்காகச் செயல்படுவதற்கு யெகோவா செய்திருக்கும் இந்த ஏற்பாட்டுக்கு நன்றியோடு இருப்பதையும் காட்டுகிறார்கள்.—கலா. 6:10.