படிப்புக் கட்டுரை 21
பாட்டு 107 கடவுள் காட்டும் அன்பின் வழி
பொருத்தமான துணையைக் கண்டுபிடிக்க...
“திறமைசாலியான மனைவியை யாரால் கண்டுபிடிக்க முடியும்? அவளுடைய மதிப்பு பவளங்களைவிட மிக உயர்ந்தது.”—நீதி. 31:10.
என்ன கற்றுக்கொள்வோம்?
பொருத்தமான துணையை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறவர்களுக்கு சபையில் இருக்கிற மற்றவர்கள் எப்படி உதவி செய்யலாம்? இதற்கு உதவுகிற சில பைபிள் நியமங்களைக் கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) டேட்டிங் செய்ய ஆரம்பிப்பதற்கு முன்பு ஒரு கிறிஸ்தவர் எதைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டும்? (ஆ) டேட்டிங் செய்வது என்றால் என்ன? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
நீங்கள் கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறீர்களா? கல்யாணம் செய்தால்தான் சந்தோஷம் என்று சொல்லிவிட முடியாதுதான்; இருந்தாலும், நிறைய பேர் கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறார்கள். கல்யாணம் பண்ணுகிற எண்ணத்தோடு ஒருவரிடம் பழகுவதற்கு முன்பு, முதலில் உங்களுக்கும் யெகோவாவுக்கும் இடையில் இருக்கிற பந்தம் பலமாக இருக்க வேண்டும். உங்களைப் பற்றி உங்களுக்கே நன்றாகத் தெரிந்திருக்க வேண்டும். கல்யாணம் செய்துகொண்டால், உங்கள் குடும்பத்துக்குத் தேவையான பணம்-பொருளை சம்பாதிக்கிற அளவுக்கு நீங்கள் பொறுப்புள்ளவராக இருக்க வேண்டும்.a (1 கொ. 7:36) இப்படியெல்லாம் செய்யும்போது உங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
2 ஆனாலும், ஒரு பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கலாம். (நீதி. 31:10) அப்படியே கண்டுபிடித்தாலும், டேட்டிங் செய்ய ஆரம்பிப்பது, அதாவது கல்யாணம் பண்ணுகிற எண்ணத்தோடு அவரிடம் பழக ஆரம்பிப்பது, அவ்வளவு சுலபமாக இருக்காது.b இந்தக் கட்டுரையில், இந்த இரண்டையும் செய்ய உங்களுக்கு உதவி கிடைக்கும். கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறவர்களுக்கு சபையில் இருக்கிற மற்றவர்கள் எப்படி உதவலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.
பொருத்தமான துணையைக் கண்டுபிடிப்பது
3. துணையைத் தேர்ந்தெடுக்கும்போது நீங்கள் எதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
3 ஒருவேளை நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைத்தால், துணையாக வரப்போகிறவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள். இல்லையென்றால், பொருத்தமான ஒருவர் இருந்தும் அவரைத் தேர்ந்தெடுக்காமல் போய்விடுவீர்கள். அல்லது, பொருத்தமில்லாத ஒருவரைத் தேர்ந்தெடுத்துவிடுவீர்கள். ஞானஸ்நானம் எடுத்த ஒரு கிறிஸ்தவரைத்தான் நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள் என்பது உண்மைதான். (1 கொ. 7:39) ஆனால், ஞானஸ்நானம் எடுத்த எல்லாருமே உங்களுக்குப் பொருத்தமான துணையாக ஆகிவிட மாட்டார்கள். அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வாழ்க்கையில் எனக்கு என்ன குறிக்கோள்கள் இருக்கின்றன? என்னுடைய துணையிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்? நான் எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கிறதா?’
4. சிலர் எதற்காக ஜெபம் செய்கிறார்கள்?
4 நீங்கள் கல்யாணம் பண்ண ஆசைப்பட்டால், ஒரு நல்ல துணையைக் கண்டுபிடிக்க உதவ சொல்லி ஜெபம் செய்திருப்பீர்கள். (பிலி. 4:6) கல்யாணம் பண்ண நினைக்கிறவர்களுக்கு ஒரு துணையைக் கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், உங்களுடைய தேவைகளையும் உணர்ச்சிகளையும் அவர் கவனித்துக்கொள்வார். ஒரு பொருத்தமான துணையைக் கண்டுபிடிக்க நீங்கள் முயற்சி எடுக்கும்போது அவர் உங்களுக்கு உதவுவார். அதனால், உங்களுடைய மனதில் இருக்கிற எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். (சங். 62:8) பொறுமையாக இருக்கவும், ஞானமாக நடந்துகொள்ளவும் ஜெபம் செய்யுங்கள். (யாக். 1:5) அமெரிக்காவில் இருக்கிற ஜான்c என்ற கல்யாணமாகாத சகோதரர் எதைப் பற்றியெல்லாம் ஜெபம் செய்வார் என்று சொல்கிறார்: “எனக்குத் துணையாக வரப்போகும் பெண்ணிடம் என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன் என்பதை யெகோவாவிடம் சொல்வேன். அப்படி ஒரு பெண்ணைப் பார்க்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் கேட்பேன். அதுமட்டுமல்ல, ஒரு நல்ல கணவராக இருக்க என்னென்ன குணங்கள் தேவையோ அவற்றையெல்லாம் வளர்த்துக்கொள்ள உதவி செய்யுங்கள் என்றும் ஜெபம் செய்வேன்.” இலங்கையில் இருக்கிற டானியா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “பொருத்தமான துணையைத் தேடிக்கொண்டிருக்கிற அதேசமயத்தில், நான் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும்... நம்பிக்கையோடு இருக்க வேண்டும்... சந்தோஷமாக இருக்க வேண்டும்... அதற்கெல்லாம் உதவி செய்யுங்கள் என்று ஜெபம் செய்வேன்.” ஒருவேளை, பொருத்தமான துணையை உங்களால் உடனே கண்டுபிடிக்க முடியாமல் போனாலும், உங்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதாகவும் உங்களுக்கு அன்பையும் பாசத்தையும் கொடுப்பதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.—சங். 55:22.
5. யெகோவாவை நேசிக்கிற கல்யாணமாகாத சகோதர சகோதரிகளை சந்திக்க எப்படி வாய்ப்பு கிடைக்கும்? (1 கொரிந்தியர் 15:58) (படத்தையும் பாருங்கள்.)
5 “நம் எஜமானுடைய வேலையை அதிகமதிகமாக” செய்ய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:58-ஐ வாசியுங்கள்.) இப்படி, யெகோவாவுடைய சேவையில் பிஸியாக இருக்கும்போதும் நிறைய சகோதர சகோதரிகளோடு நேரம் செலவு செய்யும்போதும் உங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். யெகோவாவுக்கு சேவை செய்ய விரும்புகிற கல்யாணமாகாத சகோதர சகோதரிகளையும் சந்திக்க முடியும். அதேசமயத்தில், யெகோவாவை சந்தோஷப்படுத்த உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யும்போது நீங்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருப்பீர்கள்!
யெகோவாவுடைய சேவையை சுறுசுறுப்பாக செய்யும்போதும் நிறைய சகோதர சகோதரிகளுடன் நேரம் செலவு செய்யும்போதும், கல்யாணம் பண்ண விரும்புகிற நிறைய பேரை சந்திக்கலாம் (பாரா 5)
6. துணையைத் தேடுகிற சமயத்தில் நாம் எதையும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
6 ஆனாலும், ஒரு விஷயத்தில் கவனமாக இருங்கள்: துணையைத் தேடுவதிலேயே மூழ்கிவிடாதீர்கள். (பிலி. 1:10) உண்மையான சந்தோஷம் நீங்கள் கல்யாணம் பண்ணிக்கொள்வதைப் பொறுத்து இல்லை; உங்களுக்கும் யெகோவாவுக்கும் எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. (மத். 5:3) அதுமட்டுமல்ல, கல்யாணம் பண்ணாமல் தனியாக இருக்கும் சமயத்தில் ஊழியத்தை இன்னும் நிறைய செய்ய சுதந்திரம் இருக்கும். (1 கொ. 7:32, 33) அந்த நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். அமெரிக்காவில் இருக்கிற ஜெசிக்கா என்ற சகோதரி கிட்டத்தட்ட 40 வயதில் கல்யாணம் செய்தார். அவர் இப்படி சொல்கிறார்: “ஊழியத்தில் நான் பயங்கர பிஸியாக இருந்தேன். அதனால், கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்ற ஆசை ஒருபக்கம் இருந்தாலும், என்னால் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடிந்தது.”
நேரம் எடுத்து கவனியுங்கள்
7. ‘உங்களைப் பிடித்திருக்கிறது’ என்று ஒருவரிடம் சொல்வதற்கு முன்பு நேரம் எடுத்து கவனிப்பது ஏன் முக்கியம்? (நீதிமொழிகள் 13:16)
7 ஒருவரைப் பார்க்கும்போது, ‘இவர் எனக்குப் பொருத்தமானவர்’ என்று தோன்றினால் என்ன செய்வது? உடனடியாக அந்த நபரிடம் போய் ‘உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்று சொல்ல வேண்டுமா? ஞானமுள்ள ஒரு நபர், எந்தவொரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வார் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 13:16-ஐ வாசியுங்கள்.) அதனால், ஒருவரிடம் நேரடியாகப் போய் பேசுவதற்கு முன்பு நேரம் எடுத்து அவரைக் கவனியுங்கள். நெதர்லாந்தில் இருக்கிற எஷ்வின் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்: “உணர்ச்சிகள் மடமடவென்று வளரும். அதேசமயத்தில், அது சீக்கிரமாக மறைந்துவிடும். அதனால், ஒருவரை கவனிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி செய்யும்போது, உணர்ச்சிவசப்பட்டு உங்கள் விருப்பத்தை அவரிடம் சொல்லிவிட மாட்டீர்கள்.” ஒருவரை நீங்கள் நன்றாகக் கவனிக்கும்போது அவர் உங்களுக்குப் பொருத்தமானவராக இல்லை என்பதைக்கூட உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.
8. நீங்கள் எப்படியெல்லாம் ஒருவரை கவனிக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
8 ஆனால், நீங்கள் கவனிக்கிறீர்கள் என்பது அப்பட்டமாகத் தெரியாத மாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். அதை எப்படி செய்யலாம்? உதாரணத்துக்கு, கூட்டங்களிலோ கெட்டுகெதரிலோ (get-together) இருக்கும்போது அவர் மற்றவர்களிடம் எப்படிப் பழகுகிறார்... அவரிடம் என்ன மாதிரியான குணங்கள் இருக்கின்றன... ஆன்மீக விஷயங்களை எப்படி செய்கிறார்... என்றெல்லாம் கவனியுங்கள். அவருடைய நண்பர்கள் யார்? அவர் எதைப் பற்றி அடிக்கடி பேசுகிறார்? (லூக். 6:45) அவருடைய குறிக்கோள்களும், உங்களுடைய குறிக்கோள்களும் ஒத்துப்போகிறதா என்றும் யோசியுங்கள். அவருடைய சபையில் இருக்கிற மூப்பர்களிடமோ, அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்த முதிர்ச்சியுள்ள சகோதர சகோதரிகளிடமோ நீங்கள் அவரைப் பற்றி விசாரிக்கலாம். (நீதி. 20:18) அவர் என்ன மாதிரி பெயரை சம்பாதித்திருக்கிறார், அவர் எப்படிப்பட்டவர் என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். (ரூத் 2:11) அவரைக் கவனிக்கும்போது, தர்மசங்கடப்படுத்துகிற மாதிரி எதையும் செய்துவிடாதீர்கள். அவருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுங்கள். கவனிக்கிறேன் என்ற பெயரில், அவரையே சுற்றி சுற்றி வராதீர்கள். அவரைப் பற்றி ஒன்று விடாமல் எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் நினைக்காதீர்கள்.
ஒருவரைப் பிடித்திருக்கிறது என்று சொல்வதற்கு முன்பு, வெளிப்படையாக தெரியாத மாதிரி அவரைக் கவனியுங்கள் (பாராக்கள் 7-8)
9. விருப்பத்தை சொல்வதற்கு முன்பு, நீங்கள் எதில் உறுதியாக இருக்க வேண்டும்?
9 ஒருவரிடம் உங்கள் விருப்பத்தை சொல்வதற்கு முன்பு அவரை எவ்வளவு காலம் கவனிக்க வேண்டும்? ஒருவேளை, ரொம்ப சீக்கிரமாகவே சொல்லிவிட்டால், நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுக்கிற ஒரு நபர் என்று அவர் நினைத்துவிடலாம். (நீதி. 29:20) அதேசமயத்தில், ரொம்ப நாள் எடுத்துக்கொண்டால், நீங்கள் முடிவெடுக்க தெரியாமல் திணறுகிற ஒரு நபர் என்று அவர் நினைக்கலாம்; அதுவும், நீங்கள் அவரை விரும்புவது அவருக்குத் தெரிந்திருந்தால் அவர் அப்படி நினைக்க நிறைய வாய்ப்பிருக்கிறது. (பிர. 11:4) ஆனால், இந்த விஷயத்தை மறந்துவிடாதீர்கள்: ஒருவரிடம் உங்கள் விருப்பத்தை சொல்வதற்கு முன்பே அவரைத்தான் கல்யாணம் பண்ண வேண்டும் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டியதில்லை. அதேசமயத்தில், இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும்: (1) கல்யாணத்துக்குத் தயாராக இருக்கிறீர்கள் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். (2) அந்த நபர் உங்களுக்குப் பொருத்தமானவராக இருக்கலாம் என்பதிலும் உறுதியாக இருக்க வேண்டும்.
10. உங்களுக்கு ஒருவர்மேல் விருப்பமில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
10 ஒருவேளை, ஒருவருக்கு உங்கள்மேல் விருப்பம் இருக்கிறது என்று தெரிய வருகிறது; ஆனால், உங்களுக்கு அவர்மேல் விருப்பமில்லை. இந்த சூழ்நிலையில் என்ன செய்வது? உங்களுக்கு விருப்பமில்லை என்பதை செயல்கள் மூலம் தெளிவாகக் காட்டுங்கள். அப்படி செய்வதுதான் சரியாக இருக்கும். இல்லையென்றால், அவர் ஆசையை வளர்த்துக்கொண்டு போகலாம். கடைசியில், அவருக்கு ஏமாற்றமாக இருக்கும்.—1 கொ. 10:24; எபே. 4:25.
11. இன்னொருவருக்காக நீங்கள் துணையைத் தேடுகிறீர்கள் என்றால் என்னென்ன விஷயங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?
11 சில நாடுகளில், பிள்ளைகளுக்காக துணையைத் தேடும் பொறுப்பை அப்பா-அம்மா அல்லது பெரியவர்கள் செய்யலாம். வேறு சில நாடுகளில், கல்யாணம் பண்ணிக்கொள்ள நினைக்கும் ஒருவருக்கு, குடும்பத்தாரோ நண்பர்களோ ஒரு துணையைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் இரண்டு பேரும் சந்தித்து பேச ஏற்பாடு செய்கிறார்கள். ஒருவேளை, ஒரு மாப்பிள்ளையோ பொண்ணையோ பார்த்துத் தர சொல்லி உங்களிடம் யாராவது கேட்டால், அந்த பையனுக்கும் பொண்ணுக்கும் இருக்கிற விருப்பங்களும், தேவைகளும் என்னென்ன என்று நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளுங்கள். ஒருவர் பொருத்தமாக இருப்பார் என்று உங்களுக்குத் தோன்றினால், அவருடைய சுபாவம்... குணம்... முக்கியமாக யெகோவாவோடு அவருக்கு எப்படிப்பட்ட பந்தம் இருக்கிறது... என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். பணம், கல்வி, அந்தஸ்து போன்றவற்றைவிட யெகோவாவோடு அவருக்கு நெருக்கமான பந்தம் இருக்கிறதா என்பதுதான் ரொம்ப முக்கியம். எப்படியிருந்தாலும் சரி, கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என்ற முக்கியமான முடிவை அந்த இரண்டு பேரும்தான் எடுக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள்.—கலா. 6:5.
டேட்டிங் செய்ய ஆரம்பிப்பது எப்படி?
12. ஒருவரை டேட்டிங் செய்ய ஆசைப்பட்டால், அதை எப்படி அவரிடம் சொல்லலாம்?
12 நீங்கள் ஒருவரை டேட்டிங் செய்ய ஆசைப்பட்டால், உங்கள் மனதில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்லலாம்?d பொது இடத்தில் அவரோடு பேசுவதற்கு நீங்கள் ஏற்பாடு செய்யலாம். அல்லது ஃபோன் மூலமாகக்கூட பேசலாம். அப்படிப் பேசும்போது, அவரைக் கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறீர்கள் என்றும், அவரைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்றும் தெளிவாக சொல்லுங்கள். (1 கொ. 14:9) தேவைப்பட்டால், அவர் யோசித்து சொல்வதற்கு நேரம் கொடுங்கள். (நீதி. 15:28) ஒருவேளை, அந்த நபருக்கு விருப்பமில்லை என்றால் அவருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
13. உங்களைப் பிடித்திருப்பதாக ஒருவர் சொன்னால் நீங்கள் என்ன செய்யலாம்? (கொலோசெயர் 4:6)
13 உங்கள்மேல் விருப்பம் இருப்பதாக ஒருவர் சொன்னால் என்ன செய்வது? அதை சொல்வதற்குக் கண்டிப்பாக அவருக்குத் தைரியம் தேவைப்பட்டிருக்கும். அதனால், அவரிடம் அன்பாகவும் மரியாதையாகவும் பேசுங்கள். (கொலோசெயர் 4:6-ஐ வாசியுங்கள்.) யோசித்துப் பார்க்க உங்களுக்கு நேரம் தேவைப்பட்டால் அதையும் சொல்லுங்கள். ஆனால், முடிந்தளவுக்கு உங்களுடைய பதிலை சீக்கிரமாகவே சொல்லுங்கள். (நீதி. 13:12) உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், அதையும் அன்பாகவும் தெளிவாகவும் சொல்லுங்கள். ஆஸ்திரியாவில் இருக்கிற ஹான்ஸ் என்ற சகோதரருக்கு இப்படி ஒரு அனுபவம் இருந்தது. அவரைப் பிடித்திருப்பதாக ஒரு சகோதரி சொன்னார். ஹான்ஸ் எப்படிப் பதில் சொன்னார்? “என்னுடைய முடிவை அன்பாகவும் தெளிவாகவும் சொன்னேன்; நேரம் கடத்தாமல் உடனே சொன்னேன். ஏனென்றால், அவர் தேவையில்லாமல் ஆசையை வளர்த்துக்கொள்ளக் கூடாது. அதற்குப் பிறகு, அவரிடம் பேசுகிற விதத்திலும் நடந்துகொள்கிற விதத்திலும் நான் ரொம்ப கவனமாக இருந்தேன்” என்கிறார். ஆனால், உங்களுக்கும் அந்த நபர்மேல் விருப்பம் இருந்தால்? உங்களுடைய உணர்ச்சிகளைப் பற்றியும், டேட்டிங் செய்கிற சமயத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றியும் அவரிடம் சொல்லுங்கள். ஏனென்றால், கலாச்சாரத்தினாலோ வேறு காரணங்களாலோ நீங்கள் எதிர்பார்ப்பதும் அவர் எதிர்பார்ப்பதும் வித்தியாசப்படலாம்.
மற்றவர்கள் எப்படி ஆதரவாக இருக்கலாம்
14. கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்பதை நம் பேச்சில் எப்படிக் காட்டலாம்?
14 கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறவர்களுக்கு நாம் எல்லாரும் எப்படி ஆதரவு கொடுக்கலாம்? என்ன பேசுகிறோம் என்பதில் கவனமாக இருப்பதன் மூலம் அப்படி செய்யலாம். (எபே. 4:29) நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘கல்யாணம் பண்ணிக்கொள்ள ஆசைப்படுகிறவர்களை சங்கடப்படுத்துகிற மாதிரி நான் கிண்டல் பண்ணுகிறேனா? கல்யாணம் ஆகாத ஒரு சகோதரரும் சகோதரியும் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்தால், அவர்கள் காதலிக்கிறார்கள் என்று நானே நினைத்துக்கொள்கிறேனா?’ (1 தீ. 5:13) அதுமட்டுமல்ல, கல்யாணம் பண்ணாமல் இருப்பதால் அவர்கள் எதையோ இழக்கிறார்கள் என்றும் அவர்களை உணர வைக்கக் கூடாது. ஏற்கெனவே பார்த்த ஹான்ஸ் இப்படி சொல்கிறார்: “சில சகோதரர்கள், ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்கொள்ளவில்லை? உனக்கு வயசு ஆகிக்கொண்டே போகிறதே!’ என்று சொல்வார்கள். இப்படியெல்லாம் சொல்வது, கல்யாணமாகாத சகோதர சகோதரிகளுக்குக் கஷ்டமாக இருக்கலாம். எதற்குமே பிரயோஜனம் இல்லாத மாதிரி அவர்களை உணர வைக்கலாம். மற்றவர்களெல்லாம் இப்படிப் பேசுகிறார்களே என்பதற்காக அவர்கள் கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் நினைக்கலாம்.” அதனால், கல்யாணம் ஆகாதவர்களைப் பாராட்டுவதற்கு வாய்ப்புகளைத் தேடுங்கள்!—1 தெ. 5:11.
15. (அ) ரோமர் 15:2-ல் இருக்கிற நியமத்தின்படி, ஒருவருக்கு மாப்பிள்ளையையோ பொண்ணையோ கண்டுபிடித்து சொல்வதற்கு முன்பு நாம் எதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) வீடியோவிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)
15 ஒரு பையனும் பொண்ணும் கல்யாணம் பண்ணிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் என்ன செய்வது? மற்றவர்களுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 15:2-ஐ வாசியுங்கள்.) கல்யாணமாகாத நிறைய பேர், தங்களுடைய துணையைத் தாங்களே கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்; அவர்களுடைய விருப்பத்தை நாம் மதிக்க வேண்டும். (2 தெ. 3:11) வேறு சிலருக்கு உதவி தேவைப்படலாம். ஆனால் அவர்கள் உதவி கேட்டால் மட்டும் செய்யுங்கள்.e (நீதி. 3:27) வேறு சிலர், நேரடியாக ஒருவரை அறிமுகப்படுத்துவதை விரும்பாமல் இருக்கலாம். ஜெர்மனியில் இருக்கிற கல்யாணமாகாத லிடியா என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “அந்த பையனையும் பொண்ணையும் கெட்டுகெதருக்கு (get-together) கூப்பிடலாம். அவர்கள் இரண்டு பேரும் பேசி பழகுவதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கலாம்; மற்றதை அவர்களே பார்த்துக்கொள்ள விட்டுவிடலாம்.”
கல்யாணம் பண்ண விரும்புகிறவர்கள் பேசிப் பழக கெட்டுகெதர் நல்ல வாய்ப்பு (பாரா 15)
16. கல்யாணமாகாத சகோதர சகோதரிகள் எதை மனதில் வைத்துக்கொள்ளலாம்?
16 கல்யாணமாகி இருந்தாலும் சரி, ஆகவில்லை என்றாலும் சரி, நம்மால் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ முடியும்! (சங். 128:1) ஒருவேளை, உங்களுக்குக் கல்யாணம் செய்ய ஆசை இருந்தும், பொருத்தமான ஒருவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது? யெகோவாவுடைய சேவையைத் தொடர்ந்து செய்யுங்கள். மக்காவ் என்ற ஊரில் இருக்கிற சின்-யி என்ற சகோதரி இப்படி சொல்கிறார்: “பூஞ்சோலையில் உங்கள் துணையோடு நீங்கள் செலவு செய்ய போகிற நேரத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இப்போது கல்யாணமாகாமல் நீங்கள் இருக்கிற காலம் ரொம்ப கொஞ்சம்தான். அதனால், இந்த நேரத்தை நன்றாக எஞ்சாய் பண்ணுங்கள், நல்லபடியாகவும் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” ஒருவேளை, ஒரு பொருத்தமான துணையைக் கண்டுபிடித்து நீங்கள் ஏற்கெனவே டேட்டிங் செய்ய ஆரம்பித்திருந்தால் என்ன செய்யலாம்? நல்ல முடிவுகளை எடுக்க அடுத்த கட்டுரை உங்களுக்கு உதவும்.
பாட்டு 137 அன்றும் இன்றும் மின்னும் பெண்கள்!
a கல்யாணம் செய்துகொள்ள நீங்கள் தயாரா என்று தெரிந்துகொள்ள, “டேட்டிங்—பாகம் 1: டேட்டிங் செய்ய நான் தயாராக இருக்கிறேனா?” என்ற கட்டுரையை jw.org-ல் பாருங்கள்.
b கல்யாணம் பண்ணும் எண்ணத்தோடு ஒருவரோடு பழகுவதைத்தான் ‘டேட்டிங்’ செய்வது என்று இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்வதற்கும், தனக்குப் பொருத்தமான துணையாக அவர் இருப்பாரா என்பதை யோசித்துப் பார்ப்பதற்கும் இந்த சமயம் அவர்களுக்கு உதவும். சில நாடுகளில், இதை கோர்ட்ஷிப் (courtship) அல்லது பாய்ஃபிரண்டாக-கேல்ஃபிரண்டாக (boyfriend-girlfriend) பழகுவது என்றுகூட சொல்கிறார்கள். ஒரு ஆணும் ஒரு பெண்ணும், ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது என்று சொன்னப் பிறகு டேட்டிங் செய்யும் காலம் ஆரம்பிக்கும். டேட்டிங் செய்யும் இரண்டு பேர் கல்யாணம் பண்ணிக்கொள்ள முடிவு செய்யலாம்; அல்லது, ஒத்துப்போகாது என்பதைப் புரிந்துகொண்டு பிரிந்துபோகவும் முடிவு செய்யலாம்.
c சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
d சில கலாச்சாரங்களில், கல்யாணம் பண்ண விரும்புவதை சகோதரர்கள்தான் சொல்வார்கள். ஆனால், சகோதரிகள்கூட தங்கள் விருப்பத்தை சகோதரர்களிடம் சொல்லலாம். (ரூத் 3:1-13) இதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள, நவம்பர் 8, 2004 விழித்தெழு! பத்திரிகையில், “இளைஞர் கேட்கின்றனர் . . . என் மனதில் இருப்பதை எப்படி அவரிடம் சொல்வேன்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
e jw.org வெப்சைட்டில் விசுவாசத்துக்காகப் போராடுகிறவர்கள்—கல்யாணமாகாத கிறிஸ்தவர்கள் என்ற வீடியோவைப் பாருங்கள்.