புது சபைக்கு மாறிப் போவது—சவாலை சமாளிக்க உதவி
நீங்கள் ஒரு புது சபைக்கு மாறிப் போயிருக்கிறீர்களா? அப்படியென்றால், சகோதரர் ஷான் சார்ல்ஸ் சொல்வதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள். “ஒரு புது சபைக்கு மாறிப் போகும்போது, அந்தச் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும். அதோடு சேர்த்து, குடும்பத்தில் இருக்கிறவர்கள் யெகோவாவோடு நெருக்கமாக இருக்கவும் உதவி செய்ய வேண்டும். இந்த இரண்டையும் ஒரே சமயத்தில் செய்வது ஒரு பெரிய சவால்தான்” என்று சொல்கிறார். ஒரு புது சபைக்கு மாறிப் போகும்போது புது வேலையைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும், வீட்டைக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும், ஒருவேளை பிள்ளைகளையும் புது ஸ்கூலில் சேர்க்க வேண்டியிருக்கலாம். அதுமட்டுமல்ல, அங்கிருக்கும் வானிலை, கலாச்சாரம், ஊழியம் செய்யும் பகுதி என எல்லாமே புதிதாக இருக்கலாம்.
நிக்கோலாவுக்கும் செலினுக்கும் ஒரு வித்தியாசமான சவால் வந்தது. பிரான்சு நாட்டு கிளை அலுவலகம் அவர்களை ஒரு புது சபைக்கு மாறிப் போக சொன்னது. அவர்களும் அந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டார்கள். அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “ஆரம்பத்தில் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாகவும் உற்சாகமாகவும் இருந்தது. ஆனால், போகப் போக எங்கள் பழைய சபையில் இருந்த நண்பர்களை நாங்கள் மிஸ் பண்ண ஆரம்பித்தோம். ஏனென்றால், புது சபையில் இருந்தவர்களோடு நாங்கள் இன்னும் நெருக்கமாகவில்லை.”a ஒரு புது சபைக்கு நீங்கள் மாறிப் போகும்போது எப்படிச் சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யலாம்? மாறி வருகிறவர்களுக்கு மற்றவர்கள் எப்படி உதவலாம்? புது சபையில் நீங்கள் எப்படி உற்சாகம் பெறலாம், மற்றவர்களை எப்படி உற்சாகப்படுத்தலாம்?
உங்களுக்கு உதவும் நான்கு நியமங்கள்
யெகோவாவையே நம்பியிருங்கள்
1. யெகோவாவையே நம்பியிருங்கள். (சங். 37:5) ஜப்பானில் இருக்கிற கசூமி என்ற சகோதரியின் அனுபவத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவருடைய கணவரின் வேலை வேறு இடத்துக்கு மாறியதால் அவர்கள் 20 வருஷங்களாக இருந்த சபையை விட்டு போக வேண்டியிருந்தது. கசூமி எப்படித் தன்னுடைய ‘வழியை யெகோவாவிடம் ஒப்படைத்தார்’? இப்படிச் சொல்கிறார்: “எனக்கு இருந்த பயம், தனிமையுணர்ச்சி, கவலை எல்லாவற்றையும் நான் யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டினேன். ஒவ்வொரு தடவை நான் அப்படி செய்தபோதும் அவர் எனக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தார்.”
நீங்கள் எப்படி யெகோவாவை முழுமையாக நம்பியிருக்கலாம்? ஒரு செடி நன்றாக வளர வேண்டுமென்றால், அதற்கு நிலத்தில் இருந்து தண்ணீரும் ஊட்டச்சத்தும் தேவை. அதேமாதிரி, நம் விசுவாசம் வளர வேண்டுமென்றால், அதற்கும் ஊட்டச்சத்து தேவை. ஏற்கெனவே நாம் பார்த்த நிக்கோலா அதைத்தான் செய்தார். ஆபிரகாம், இயேசு, பவுல் போன்றவர்களைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்த்தார். அவர்கள் எல்லாருமே யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக நிறையத் தியாகங்களைச் செய்திருந்தார்கள். அவர்களைப் பற்றி யோசித்துப் பார்த்தது, யெகோவா கண்டிப்பாக உதவி செய்வார் என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுத்தது. பைபிளைத் தவறாமல் படித்தால், நம் வாழ்க்கையில் வருகிற எந்த மாற்றத்தையும் சமாளிக்க முடியும். புது சபையில் இருக்கிறவர்களை உற்சாகப்படுத்துகிற குறிப்புகளையும் கண்டுபிடிக்க முடியும்.
பழைய சபையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்
2. பழைய சபையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். (பிர. 7:10) ஜூல் என்ற சகோதரர் ஆப்பிரிக்காவில் இருக்கிற பெனின் நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிமாறி போனார். அங்கிருந்த கலாச்சாரம் அவருக்கு ரொம்ப வித்தியாசமாக இருந்ததால் அதற்கேற்ற மாதிரி அவர் மாற வேண்டியிருந்தது. அவர் என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “நான் சந்தித்த ஒவ்வொருவரிடமும் என் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்” என்கிறார். இது அவருக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்ததால், சபையில் இருக்கிறவர்களிடம் பேசாமல் தன்னையே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், சகோதர சகோதரிகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகு, தான் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொண்டார். அவர் இப்படிச் சொல்கிறார்: “இந்தப் பூமியில் நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, நாம் எல்லாருமே மனிதர்கள்தான். நாம் பேசும் விதமும் நடந்துகொள்ளும் விதமும்தான் வித்தியாசம். மக்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே அவர்களை ஏற்றுக்கொள்வது ரொம்ப முக்கியம்.” அதனால், உங்கள் புது சபையைப் பழைய சபையோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஆன்-லீஸ் என்ற பயனியர் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்குத்தான் நான் புது இடத்துக்கு வந்திருக்கிறேன். இந்தப் புது இடமும், நான் விட்டுவந்த இடத்தைப் போலவே இருக்கும் என்ற எண்ணத்தோடு நான் வரவில்லை.”
மூப்பர்களும் புது சபையைத் தங்களுடைய பழைய சபையோடு ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. புது சபையில் சில விஷயங்களைச் சகோதரர்கள் வித்தியாசமாக செய்யலாம். ஆனால் அதெல்லாம் தவறு என்று அர்த்தம் கிடையாது. புது இடத்தில் சூழ்நிலைகள் எப்படி இருக்கிறது என்று நன்றாகத் தெரிந்துகொண்ட பிறகு, உங்கள் கருத்துக்களைச் சொல்வது நல்லது. (பிர. 3:1, 7ஆ) அதேமாதிரி உங்களுடைய கருத்துக்களை மற்றவர்கள்மேல் திணிக்காமல், உங்கள் முன்மாதிரியின் மூலம் கற்றுக்கொடுப்பது நல்லது.—2 கொ. 1:24.
புது சபையில் சுறுசுறுப்பாக சேவை செய்யுங்கள்
3. புது சபையில் சுறுசுறுப்பாக சேவை செய்யுங்கள். (பிலி. 1:27) ஒரு புது இடத்துக்கு மாறிப் போகும்போது நீங்கள் நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். அதற்கே நிறைய நேரம் செலவாகிவிடலாம்; நீங்கள் சோர்ந்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தச் சூழ்நிலையிலும், கூட்டங்களில் கலந்துகொள்வதும் ரொம்ப முக்கியம். அதுவும், முடிந்த அளவுக்கு ஆரம்பத்திலிருந்தே நேரில் கலந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது. புது சபையில் இருக்கிறவர்கள் உங்களைப் பார்க்கவே இல்லையென்றால், அல்லது எப்போதாவதுதான் உங்களைப் பார்க்கிறார்கள் என்றால், அவர்களால் எப்படி உங்களுக்கு உதவி செய்ய முடியும்? லுசின்டா என்ற சகோதரி தன்னுடைய இரண்டு மகள்களோடு தென் ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு பெரிய நகரத்துக்குக் குடிமாறி போனார். அதைப் பற்றி அவர் இப்படிச் சொல்கிறார்: “‘புது சபையில் இருக்கிறவர்களோடு நன்றாக பழகு, அவர்களோடு ஊழியம் செய், கூட்டங்களில் நன்றாக கலந்துகொள்’ என்றெல்லாம் என்னுடைய நண்பர்கள் ஆலோசனை கொடுத்தார்கள். அதனால் நாங்கள் நிறைய முயற்சி எடுத்தோம். ஊழியக் கூட்டம் நடத்த எங்கள் வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றுகூட சகோதரர்களிடம் சொன்னோம்.”
புது சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள்கூட “தோளோடு தோள் சேர்ந்து” பாடுபடும்போது, “நல்ல செய்தியின் மேல் வைத்திருக்கிற விசுவாசத்துக்காக” உங்களால் உழைக்க முடியும். முன்பு பார்த்த ஆன்-லீஸ் என்ற சகோதரியிடம், எல்லாரோடும் சேர்ந்து ஊழியம் செய்யச் சொல்லி மூப்பர்கள் சொன்னார்கள். அப்படிச் செய்ததால் என்ன பலன்? “சபையில் நானும் ஒருவள்தான் என்று உணருவதற்கு இது ஒரு முக்கியமான வழி என்பதை நான் சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன்” என்று அவர் சொல்கிறார். ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் வேலையிலும் பராமரிப்பு வேலையிலும்கூட நீங்கள் கலந்துகொள்ளலாம். அப்படிச் செய்யும்போது, புது சபையை உங்களுடைய சபையாக பார்க்கிறீர்கள் என்பதைச் சகோதர சகோதரிகள் புரிந்துகொள்வார்கள். இதையெல்லாம் நீங்கள் எந்தளவுக்குச் செய்கிறீர்களோ, அந்தளவுக்கு உங்களால் சகோதர சகோதரிகளோடு நன்றாகப் பழக முடியும், அவர்களை உங்கள் குடும்பமாகவும் ஆக்கிக்கொள்ள முடியும்.
புது நண்பர்களைக் கண்டுபிடியுங்கள்
4. புது நண்பர்களைக் கண்டுபிடியுங்கள். (2 கொ. 6:11-13) நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்கு மற்றவர்கள்மேல் அக்கறை காட்டுவது ஒரு நல்ல வழி. அதனால், கூட்டங்களுக்கு முன்பும் பின்பும் மற்றவர்களிடம் போய் பேசுவதற்கும் அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்வதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள். சகோதர சகோதரிகளுடைய பெயர்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். அப்படிச் செய்யும்போதும் அவர்களிடம் அன்பாகப் பேசும்போதும், அவர்கள் உங்களிடம் நன்றாகப் பழகுவார்கள். உங்களுக்கு நல்ல நண்பர்களும் கிடைப்பார்கள்.
‘சகோதர சகோதரிகள் என்னை ஏற்றுக்கொள்வார்களா?’ என்று நினைத்து கவலைப்படுவதற்குப் பதிலாக, உங்களைப் பற்றி அவர்கள் நன்றாகத் தெரிந்துகொள்வதற்குச் சூழ்நிலைகளை ஏற்படுத்துங்கள். சகோதரி லுசின்டா சொல்வதுபோல நீங்கள் செய்து பார்க்கலாம். “எங்களுடைய வீட்டுக்கு நாங்கள் நிறையப் பேரைக் கூப்பிட்டோம். அதனால் எங்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைத்திருக்கிறார்கள்” என்று அவர் சொல்கிறார்.
“ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும்”
உங்கள் சபைக்குப் புதிதாக வருகிறவர்களுக்கு நீங்கள் எப்படி உதவி செய்யலாம்? முன்பின் தெரியாத நபர்கள் இருக்கிற ராஜ்ய மன்றத்துக்குள் நுழையும்போது சிலருக்குப் பதற்றமாக இருக்கலாம். அதனால், அப்போஸ்தலன் பவுல் சொன்னதுபோல் செய்யுங்கள். “கிறிஸ்து நம்மை வரவேற்றதுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் வரவேற்க வேண்டும்” என்று அவர் சொன்னார். (ரோ. 15:7) கிறிஸ்துவைப் போலவே இன்று மூப்பர்களும், சபைக்குப் புதிதாக வருகிறவர்களை வரவேற்கலாம். (“புது சபைக்கு மாறும்போது...” என்ற பெட்டியைப் பாருங்கள்.) அதேசமயத்தில், சபையில் இருக்கிற எல்லாரும், சின்ன பிள்ளைகள்கூட, புதிதாக வருகிறவர்களிடம் அன்பாகப் பேசி பழகலாம், அவர்களைச் சவுகரியமாக உணர வைக்கலாம்.
ஒருவரை ஒருவர் வரவேற்பதில், மற்றவர்களை வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரிப்பதும் அவர்களுக்குத் தேவையான மற்ற உதவிகளைச் செய்வதும் உட்பட்டிருக்கிறது. ஒரு சகோதரி என்ன செய்தார் என்று கவனியுங்கள். புதிதாக வந்திருந்த ஒரு சகோதரிக்கு அந்த ஊரைச் சுற்றிக் காட்டினார். அதற்காக தன்னுடைய பொன்னான நேரத்தைச் செலவு செய்தார். பஸ்ஸிலும் ட்ரெயினிலும் எப்படிப் போக வேண்டும் என்றும் சொல்லிக்கொடுத்தார். அவர் அப்படிச் செய்தது, புதிதாக வந்திருந்த சகோதரிக்கு ரொம்பப் பிடித்திருந்தது. அந்த ஊரும் அவருக்குப் பழகியது.
வளருவதற்கு ஒரு வாய்ப்பு
ஒரு பறவை குஞ்சு கூட்டைவிட்டு வெளியே வருவதற்கும் பறக்க ஆரம்பிப்பதற்கும் முதலில் தயங்கும். ஆனால், அது வெளியே வந்து பறக்க முயற்சி எடுத்தால்தான் உயரமாக பறக்க முடியும். புது சபைக்கு மாறிப் போவதும் அந்த மாதிரிதான். ஆரம்பத்தில் மற்றவர்களோடு பழக நமக்குத் தயக்கமாக இருக்கலாம். ஆனால், உங்களுடைய பயத்தைவிட்டு வெளியே வந்தால் உங்களால் யெகோவாவுடைய சேவையில் உயரமாக பறக்க முடியும். முன்பு பார்த்த நிக்கோலாவும் செலினும் இப்படிச் சொல்கிறார்கள்: “குடிமாறிப் போவது ஒரு நல்ல பயிற்சி. ஏனென்றால், புது இடத்துக்கும் புது ஆட்களுக்கும் ஏற்ற மாதிரி மாறுவதற்கு நாங்கள் நிறையக் குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டியிருந்தது.” ஆரம்பத்தில் பார்த்த ஷான் சார்ல்ஸ், தன்னுடைய குடும்பத்துக்குக் கிடைத்த நன்மையைப் பற்றி இப்படிச் சொன்னார்: “நாங்கள் மாறிப் போனதால் எங்களுடைய பிள்ளைகள் புது சபையில் நன்றாக முன்னேறினார்கள், யெகோவாவோடும் இன்னும் நெருக்கமானார்கள். நாங்கள் போய் கொஞ்ச மாதங்களிலேயே எங்கள் மகள் வாரநாள் கூட்டத்தில் மாணவர் நியமிப்பைச் செய்ய ஆரம்பித்தாள். மகன், ஒரு ஞானஸ்நானம் எடுக்காத பிரஸ்தாபியாக ஆனான்.”
ஒருவேளை, உங்களால் ஒரு புது சபைக்கோ, தேவையிருக்கிற இடத்துக்கோ மாறிப் போக முடியவில்லை என்றால் என்ன செய்வது? நீங்கள் இப்போது இருக்கிற சபையையே ஒரு புது சபையாக நினைத்து இந்தக் கட்டுரையில் பார்த்த ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கலாம். யெகோவாவை முழுமையாக நம்புங்கள், சபை சம்பந்தப்பட்ட வேலைகளை நன்றாகச் செய்யுங்கள், எல்லாரோடும் ஊழியம் செய்வதற்கும், புது நண்பர்களைக் கண்டுபிடிப்பதற்கும் ஏற்கெனவே இருக்கிற நண்பர்களோடு இன்னும் நெருக்கமாவதற்கும் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். உங்கள் சபைக்குப் புதிதாக வருகிறவர்களுக்கும் கஷ்டப்படுகிறவர்களுக்கும் நீங்கள் உதவி செய்யலாம். அன்புதான் உண்மை கிறிஸ்தவர்களுடைய அடையாளம். (யோவா. 13:35) அதனால், நீங்கள் இப்படியெல்லாம் அன்பு காட்டும்போது யெகோவாவிடம் நெருங்கிப் போவீர்கள். “இப்படிப்பட்ட பலிகளைக் கடவுள் மிகவும் விரும்புகிறார்” என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம்.—எபி. 13:16.
சவால்கள் இருந்தாலும் நிறையக் கிறிஸ்தவர்கள் புது சபைக்குச் சந்தோஷமாக மாறிப் போயிருக்கிறார்கள். அங்கே யெகோவாவுக்கு நிறையச் சேவை செய்கிறார்கள். உங்களாலும் அப்படிச் செய்ய முடியும். “புது சபைக்கு மாறிப் போனது நிறையப் பேரோடு பழக எனக்கு உதவி செய்தது” என்று ஆன்-லீஸ் சொல்கிறார். கசூமி இப்படிச் சொல்கிறார்: “குடிமாறி போனால், அதுவரைக்கும் இல்லாத அளவுக்கு யெகோவாவுடைய உதவியை உணர முடியும்.” ஜூல் இப்படிச் சொல்கிறார்: “இங்கே எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பதால் ஒரு புது இடத்தில் இருப்பதைப் போல் நான் உணருவதே இல்லை. இப்போது இந்தச் சபையை விட்டு போவதுதான் எனக்குக் கஷ்டமாக இருக்கும்; அந்தளவுக்கு நான் எல்லாரோடும் நெருக்கமாகிவிட்டேன்.”
a இதைப் பற்றிய ஆலோசனைகளுக்கு, மே 15, 1994 காவற்கோபுரத்தில் வெளிவந்த “கடவுளுடைய சேவையில் வீட்டு ஞாபகத்தை சமாளிப்பது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.