உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 மார்ச் பக். 20-25
  • தொடர்ந்து விசுவாசத்தின்படி நடங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • தொடர்ந்து விசுவாசத்தின்படி நடங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது
  • துணையைத் தேர்ந்தெடுக்கும்போது
  • நமக்கு வழிநடத்துதல் கிடைக்கும்போது
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • சந்தேகங்களை விரட்டியடியுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • யெகோவாவைச் சந்தோஷப்படுத்தும் முடிவுகளை எடுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 மார்ச் பக். 20-25

படிப்புக் கட்டுரை 12

பாட்டு 119 நமக்குத் தேவை விசுவாசம்

தொடர்ந்து விசுவாசத்தின்படி நடங்கள்

“நாம் கண்ணால் பார்க்கிறபடி நடக்காமல் விசுவாசத்தின்படி நடக்கிறோம்.”—2 கொ. 5:7.

என்ன கற்றுக்கொள்வோம்?

வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது நாம் எப்படி விசுவாசத்தின்படி நடக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1. கடந்துவந்த பாதையை நினைத்து பவுல் ஏன் சந்தோஷப்பட்டார்?

தன்னைச் சீக்கிரம் கொன்றுவிடுவார்கள் என்பது அப்போஸ்தலன் பவுலுக்குத் தெரிந்திருந்தது. தான் வாழ்ந்த வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தபோது அவருக்கு ரொம்ப திருப்தியாக இருந்தது. “என் ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடித்திருக்கிறேன், கிறிஸ்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்திருக்கிறேன்” என்று கடந்துவந்த பாதையைப் பற்றி அவர் சொன்னார். (2 தீ. 4:6-8) கிறிஸ்தவ ஓட்டத்தில் பவுல் ஞானமான முடிவுகளை எடுத்திருந்தார். தன்னைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படுவார் என்று உறுதியாக நம்பினார். நாமும் கடவுளுக்குப் பிடித்த நல்ல நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும் என்றுதான் ஆசைப்படுகிறோம். ஆனால் அதை எப்படிச் செய்வது?

2. விசுவாசத்தின்படி நடப்பது என்றால் என்ன?

2 தன்னைப் பற்றியும் மற்ற கிறிஸ்தவர்களைப் பற்றியும் பவுல் இப்படிச் சொன்னார்: “நாம் கண்ணால் பார்க்கிறபடி நடக்காமல் விசுவாசத்தின்படி நடக்கிறோம்.” (2 கொ. 5:7) பவுல் என்ன சொல்ல வருகிறார்? சிலசமயம் பைபிளில், ‘நடப்பது’ என்ற வார்த்தை, ஒருவர் வாழ்கிற விதத்தைக் குறிக்கிறது. கண்ணால் பார்க்கிறபடி நடக்கிற ஒருவர், எதைப் பார்க்கிறாரோ எதைக் கேட்கிறாரோ அல்லது எப்படி உணர்கிறாரோ அதை வைத்து மட்டுமே முடிவுகளை எடுப்பார். ஆனால், விசுவாசத்தின்படி நடக்கிற ஒருவர், யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கையை அடிப்படையாக வைத்து முடிவுகளை எடுப்பார். யெகோவா தனக்குப் பலன் கொடுப்பார் என்று நம்புவதை அவருடைய முடிவுகள் காட்டும். பைபிள் சொல்கிற ஆலோசனையைக் கேட்டு நடப்பது தனக்குப் பிரயோஜனமாக இருக்கும் என்றும் அவர் நம்புவார்.—சங். 119:66; எபி. 11:6.

3. விசுவாசத்தின்படி நடப்பதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? (2 கொரிந்தியர் 4:18)

3 பார்க்கிற, கேட்கிற அல்லது மனதுக்குத் தோன்றுகிற விஷயங்களை வைத்து நாம் சில முடிவுகளை எடுப்பது உண்மைதான். ஆனால், அதை மட்டுமே வைத்து முக்கியமான முடிவுகளை எடுத்தால் பிரச்சினைகள் வர வாய்ப்பு இருக்கிறது. ஏன் அப்படிச் சொல்கிறோம்? பார்க்கிற அல்லது கேட்கிற விஷயங்கள் எப்போதுமே சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது. அப்படியே அது சரியாக இருந்தாலும், அதை மட்டுமே நம்பி முடிவுகளை எடுக்கிற பழக்கம் ஆபத்தானது. ஏனென்றால், கடவுளுடைய விருப்பத்தை அல்லது ஆலோசனைகளை மீறி எதையாவது நாம் செய்துவிட வாய்ப்பு இருக்கிறது. (பிர. 11:9; மத். 24:37-39) ஆனால், விசுவாசத்தின்படி நடப்பது நம்முடைய பழக்கமாக இருந்தால், ‘எஜமானுக்குப் பிரியமான’ முடிவுகளை எப்போதுமே எடுப்போம். (எபே. 5:10) கடவுளுடைய ஆலோசனைகள் நமக்கு மனநிம்மதியையும் உண்மையான சந்தோஷத்தையும் தரும். (சங். 16:8, 9; ஏசா. 48:17, 18) முடிவில்லாத வாழ்க்கையும் கைகூடும்.—2 கொரிந்தியர் 4:18-ஐ வாசியுங்கள்.

4. விசுவாசத்தின்படி நடக்கிறோமா அல்லது கண்ணால் பார்க்கிறபடி நடக்கிறோமா என்பதை எதை வைத்து முடிவு செய்யலாம்?

4 நாம் விசுவாசத்தின்படி நடக்கிறோமா அல்லது கண்ணால் பார்க்கிறபடி நடக்கிறோமா என்பதை எதை வைத்துச் சொல்ல முடியும்? நாம் எடுக்கும் முடிவுகளை வைத்துச் சொல்ல முடியும். பார்க்கிற, கேட்கிற விஷயங்களை வைத்து மட்டுமே முடிவெடுக்கிறோமா அல்லது, கடவுள்மேல் இருக்கிற நம்பிக்கையையும், அவருடைய ஆலோசனைகளையும் மனதில் வைத்து முடிவெடுக்கிறோமா என்பதை வைத்துச் சொல்ல முடியும். இப்போது, மூன்று சூழ்நிலைகளைப் பார்க்கலாம். அவற்றில் நாம் எப்படி விசுவாசத்தின்படி தொடர்ந்து நடக்கலாம் என்று கற்றுக்கொள்ளலாம். (1) வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது, (2) கல்யாணம் செய்ய துணையைத் தேர்ந்தெடுக்கும்போது, (3) கடவுளுடைய அமைப்பிலிருந்து வழிநடத்துதல்கள் வரும்போது.

வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது

5. ஒரு வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?

5 நம்மையும் நம் குடும்பத்தையும் கவனித்துக்கொள்வதற்காக கண்டிப்பாக உழைக்க வேண்டும். (பிர. 7:12; 1 தீ. 5:8) சில வேலைகளில் நிறைய சம்பளம் கிடைக்கலாம். அதனால், அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்துகொண்டு எதிர்காலத்துக்காக சேர்த்து வைக்கவும் முடியும். வேறுசில வேலைகளில் சம்பளம் ரொம்ப குறைவாக இருக்கலாம். குடும்பத்தின் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே கையில் பணம் இருக்கலாம். ஒரு வேலையில் சேரலாமா வேண்டாமா என்று முடிவு செய்யும்போது எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று யோசிப்பது எதார்த்தம்தான். ஆனால், சம்பளத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து முடிவெடுத்தால், நாம் கண்ணால் பார்க்கிறபடி நடக்கிறோம் என்றுதான் சொல்ல முடியும்.

6. வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் எப்படி விசுவாசத்தின்படி நடக்கலாம்? (எபிரெயர் 13:5)

6 விசுவாசத்தின்படி நடந்தால் நாம் தேர்ந்தெடுக்கிற வேலை, யெகோவாவோடு நமக்கு இருக்கிற பந்தத்தை எப்படிப் பாதிக்கும் என்று யோசிப்போம். நம்மையே இப்படியெல்லாம் கேட்டுக்கொள்வோம்: ‘இந்த வேலையில் சேர்ந்தால் யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்குமா?’ (நீதி. 6:16-19) ‘வணக்க விஷயங்களில் ஈடுபட முடியாத மாதிரி ஆகிவிடுமா? என் குடும்பத்தோடு அதிக நாட்கள் இல்லாத மாதிரி ஆகிவிடுமா?’ (பிலி. 1:10) இந்தக் கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ‘ஆமாம்’ என்று இருந்தால், அந்த வேலையைத் தேர்ந்தெடுக்காமல் இருப்பதே நல்லது. வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தாலும், அப்படிச் செய்வதுதான் ஞானமானது. நாம் விசுவாசத்தின்படி நடந்தால், நம்முடைய தேவைகளை யெகோவா பார்த்துக்கொள்வார் என்று உறுதியாக நம்புவோம். அந்த நம்பிக்கை இருப்பதை நம் முடிவுகளில் காட்டுவோம்.—மத். 6:33; எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.

7-8. தென் அமெரிக்காவில் இருக்கும் ஒரு சகோதரர் எப்படி விசுவாசத்தின்படி நடந்தார்? (படத்தையும் பாருங்கள்.)

7 விசுவாசத்தின்படி நடப்பது எவ்வளவு முக்கியம் என்பதை தென் அமெரிக்காவில் இருக்கிற ஹாவியர்a என்ற சகோதரர் புரிந்துவைத்திருந்தார். அவர் சொல்கிறார்: “இப்போது வாங்கும் சம்பளத்தைவிட இரண்டு மடங்கு அதிகமாகச் சம்பளம் கிடைக்கும் ஒரு பெரிய வேலைக்காக விண்ணப்பம் போட்டிருந்தேன். அந்த வேலை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.” ஆனால், பயனியர் செய்ய வேண்டும் என்ற ஆசையும் ஹாவியருக்கு இருந்தது. அவர் தொடர்ந்து சொல்கிறார்: “வேலையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அதேசமயத்தில், கடவுளுடைய சேவையில் நான் வைத்திருக்கிற குறிக்கோள்களை எட்டிப்பிடிக்க இந்த வேலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் நினைத்தேன். அந்த கம்பனியின் பெரிய மேனேஜரோடு எனக்கு இன்டர்வியூ வந்தது. இன்டர்வியூவுக்கு முன்பு, யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்தேன். எனக்கு எது நல்லது என்று யெகோவாவுக்குத் தெரியும் என்பதை உறுதியாக நம்பினேன்.”

8 ஹாவியர் சொல்கிறார்: “நான் நிறைய ஓவர்டைம் செய்ய வேண்டியிருக்கும் என்று அந்த மேனேஜர் சொன்னார். ஆனால் அப்படிச் செய்தால், என்னுடைய வணக்க விஷயங்கள் பாதிக்கப்படும் என்று அவரிடம் எடுத்து சொன்னேன்.” பிறகு, ஹாவியர் அந்த வேலையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இரண்டு வாரத்துக்குப் பிறகு, பயனியர் செய்ய ஆரம்பித்தார். அதே வருஷத்தில், பகுதிநேர வேலை ஒன்று அவருக்குக் கிடைத்தது. “என் ஜெபத்தைக் கேட்டு, நான் பயனியர் செய்வதற்கு ஏற்ற மாதிரி ஒரு வேலையை யெகோவா கொடுத்தார். இப்போது நான் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்கிறேன். ஏனென்றால், யெகோவாவுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சேவை செய்ய இப்போது எனக்கு நிறைய நேரம் இருக்கிறது” என்கிறார் ஹாவியர்.

ஒரு சகோதரர், வேலை செய்யும் உடையில் கையில் பாதுகாப்பு ஹெல்மெட்டோடு இருக்கிறார். அவருடைய சூப்பர்வைசர் அவரை ஒரு ஆஃபிஸ் ரூமுக்குக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். அவருக்கு பதவி உயர்வு தருவதாகச் சொல்கிறார்.

வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்போது யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை எப்படிக் காட்டலாம்? (பாராக்கள் 7-8)


9. சகோதரர் ட்ரேசரின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

9 இப்போது, நம்முடைய விஷயத்துக்கு வரலாம். ஒருவேளை, விசுவாசத்தின்படி நடக்க நம்முடைய வேலை தடையாக இருந்தால் என்ன செய்வது? காங்கோவில் இருக்கிற சகோதரர் ட்ரேசரின் அனுபவத்தைப் பாருங்கள். அவர் சொல்கிறார்: “எனக்குப் புதிதாக ஒரு வேலை கிடைத்தது. அந்த வேலை அவ்வளவு லேசில் யாருக்கும் கிடைத்துவிடாது. இதற்கு முன்பு நான் வாங்கிய சம்பளத்தைவிட மூன்று மடங்கு சம்பளம் அதிகம். மக்களும் என்னைப் பெரிய ஆளாகப் பார்த்தார்கள்.” ஆனால், நிறைய ஓவர்டைம் செய்ததால் ட்ரேசரால் அடிக்கடி கூட்டங்களுக்கு வரமுடியாமல் போய்விட்டது. அதோடு, வேலையில் நடந்த தில்லுமுல்லை எல்லாம் மூடிமறைப்பதற்காக பொய் சொல்லவும் அவரைக் கட்டாயப்படுத்தினார்கள். வேலையை விட்டுவிடலாம் என்று ட்ரேசர் நினைத்தார். ஆனால் வேறு வேலை கிடைக்காதோ என்று பயந்தார். அவருக்கு எது உதவி செய்தது? அவரே இப்படிச் சொல்கிறார்: “ஆபகூக் 3:17-19 எனக்கு உதவியது. வருமானமே இல்லாமல் போனாலும் யெகோவா என்னை எப்படியாவது பார்த்துக்கொள்வார் என்று அந்த வசனங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. அதனால் வேலையை ராஜினாமா செய்தேன்.” கடைசியாக அவர் இப்படிச் சொன்னார்: “பணத்தை அள்ளி வீசினால் ஒருவர் எதை வேண்டுமானாலும் விட்டுவிட்டு வந்துவிடுவார் என்று நிறைய முதலாளிகள் நினைக்கிறார்கள். குடும்பம், கடவுள் என எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிடுவார் என்று நினைக்கிறார்கள். ஆனால் யெகோவாவோடு இருக்கிற பந்தமும், என் குடும்பத்தோடு இருக்கிற நெருக்கமும் குறைந்துவிடாத மாதிரி நான் பார்த்துக்கொண்டேன். அதனால் சந்தோஷமாக இருக்கிறேன். ஒரு வருஷத்துக்கு அப்புறம் எனக்கு ஒரு வேலை கிடைத்தது. சம்பளம் குறைவாக இருந்தாலும் யெகோவாவுடைய சேவையை நன்றாகச் செய்ய முடிகிறது. யெகோவாவுக்கு நாம் முதலிடம் கொடுக்கும்போது சிலசமயம் பணம் இல்லாமல் கஷ்டப்பட வேண்டியிருக்கலாம். ஆனால், யெகோவா நம்மை எப்போதுமே பார்த்துக்கொள்வார்.” யெகோவா கொடுத்திருக்கும் ஆலோசனைகளையும், வாக்குறுதிகளையும் நம்பினால், விசுவாசத்தின்படி தொடர்ந்து நடப்போம்; யெகோவாவின் ஆசீர்வாதத்தை அள்ளிக்கொள்வோம்.

துணையைத் தேர்ந்தெடுக்கும்போது

10. துணையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் ஒருவர் எப்படி கண்ணால் பார்க்கிறபடி நடந்துவிடலாம்?

10 கல்யாணம் என்பது யெகோவாவிடமிருந்து கிடைக்கும் பரிசு. கல்யாணம் செய்ய ஆசைப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. ஒரு சகோதரி ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்கலாம்? அந்தச் சகோதரர் பார்ப்பதற்கு எப்படி இருக்கிறார், அவர் எப்படி நடந்துகொள்கிறார், அவர் என்ன பெயர் எடுத்திருக்கிறார், அவருக்கு எவ்வளவு வருமானம் வருகிறது, என்னென்ன குடும்ப பொறுப்புகள் அவருக்கு இருக்கின்றன, தன்னை அவர் சந்தோஷமாக வைத்துக்கொள்வாரா என்றெல்லாம் யோசிக்கலாம்.b இவையெல்லாம் முக்கியமான விஷயங்கள்தான். ஆனால் இவற்றை மட்டுமே அந்தச் சகோதரி யோசித்தால், கண்ணால் பார்க்கிறபடி நடப்பதுபோல் இருக்கும்.

11. ஒரு துணையைத் தேர்ந்தெடுக்கிற விஷயத்தில் நாம் எப்படி விசுவாசத்தின்படி நடக்கலாம்? (1 கொரிந்தியர் 7:39)

11 துணையைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில், யெகோவா கொடுத்திருக்கும் ஆலோசனைப்படி நிறைய சகோதரிகளும், சகோதரர்களும் செய்கிறார்கள். அவர்களைப் பார்த்து யெகோவா எவ்வளவு பெருமைப்படுவார்! “இளமை மலரும் பருவத்தை” கடந்த பிறகு டேட்டிங் செய்ய வேண்டும் என்று யெகோவா தந்திருக்கும் ஆலோசனையை அவர்கள் கேட்டு நடக்கிறார்கள். (1 கொ. 7:36) ஒரு நல்ல கணவனாக/மனைவியாக இருக்க என்னென்ன குணங்கள் இருக்க வேண்டுமென்று யெகோவா சொல்லியிருக்கிறாரோ அந்தக் குணங்களை வளர்த்திருக்கிற ஒருவரைத்தான் துணையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். (நீதி. 31:10-13, 26-28; எபே. 5:33; 1 தீ. 5:8) ஒருவேளை, யெகோவாவை வணங்காத ஒருவர் தங்களைக் காதலித்தாலும் இவர்கள் அதில் விழுவதில்லை. 1 கொரிந்தியர் 7:39-ல் சொல்லியிருப்பதுபோல் “எஜமானைப் பின்பற்றுகிற ஒருவரையே” கல்யாணம் பண்ண நினைக்கிறார்கள். (வாசியுங்கள்.) வேறு யாரையும்விட யெகோவா தங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார் என்ற நம்பிக்கையோடு, விசுவாசத்தின்படி தொடர்ந்து நடக்கிறார்கள்.—சங். 55:22.

12. சகோதரி ரோசாவின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

12 கொலம்பியாவில் இருக்கிற ஒரு பயனியர் சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவர் பெயர் ரோசா. வேலை விஷயமாக அவர் ஒருவரை அடிக்கடி சந்திக்க வேண்டியிருந்தது. அந்த நபர் ரோசாவைக் காதலிக்க ஆரம்பித்தார். ரோசாவுக்கும் அவரைப் பிடித்திருந்தது. ரோசா சொல்கிறார்: “அவர் நல்லவராகத் தெரிந்தார். எல்லாருக்கும் உதவிகளைச் செய்தார். அவருக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. அவர் என்னை நடத்திய விதமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ஒரு கணவரிடம் நான் எதிர்பார்க்கிற எல்லாமே அவரிடம் இருந்தது. ஆனால் என்ன, அவர் ஒரு யெகோவாவின் சாட்சி கிடையாது.” ரோசா தொடர்ந்து சொல்கிறார்: “அவர் என்னைக் காதலிப்பதாகச் சொன்னபோது அவரை வேண்டாம் என்று சொல்வது எனக்குக் கஷ்டமாக இருந்தது. அந்தச் சமயத்தில், எனக்கும் ஒரு துணை தேவைப்பட்டது. நான் ரொம்ப தனிமையாக உணர்ந்தேன். கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், சத்தியத்தில் எனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை.” ரோசா, தன் கண்ணுக்குத் தெரிந்த விஷயங்களை வைத்து மட்டுமே முடிவு எடுக்கவில்லை. தன்னுடைய முடிவு யெகோவாவோடு இருந்த பந்தத்தை எப்படிப் பாதிக்கும் என்று யோசித்தார். அதற்குப் பிறகு, அந்த நபரைப் பார்ப்பதையே நிறுத்திவிட்டார். யெகோவாவுடைய சேவையில் சுறுசுறுப்பாக முன்னேறினார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு கிடைத்தது. இப்போது, அவர் ஒரு விசேஷ பயனியராகச் சேவை செய்கிறார். “யெகோவா என்னுடைய மனதைச் சந்தோஷத்தால் நிரப்பியிருக்கிறார்” என்று ரோசா சொல்கிறார். விசுவாசத்தின்படி நடப்பது எப்போதுமே சுலபமாக இருக்காதுதான். அதுவும், நம் மனதுக்கு ரொம்ப பிடித்த ஒரு விஷயத்தை விட்டுவிட்டு வருவது அவ்வளவு சுலபம் இல்லை. ஆனால் அப்படிச் செய்யும்போது, நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும்.

நமக்கு வழிநடத்துதல் கிடைக்கும்போது

13. அமைப்பிடமிருந்து வழிநடத்துதல்கள் வரும்போது சிலசமயம் நமக்கு என்ன தோன்றலாம்?

13 மூப்பர்களிடமிருந்து, வட்டாரக் கண்காணிகளிடமிருந்து, கிளை அலுவலகத்திடமிருந்து அல்லது ஆளும் குழுவிடமிருந்து நமக்கு வழிநடத்துதல்கள் கிடைக்கலாம். சிலசமயத்தில் அந்த வழிநடத்துதல்கள் நமக்குப் புரியாமல் இருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில், அவை உண்மையிலேயே நமக்குப் பிரயோஜனமாக இருக்குமா என்று நாம் சந்தேகப்படலாம். அல்லது, அதைக் கொடுத்தவர்களிடம் இருக்கும் குறைகளைப் பார்க்க ஆரம்பித்துவிடலாம்.

14. அமைப்பிடமிருந்து வழிநடத்துதல்கள் வரும்போது விசுவாசத்தின்படி நடப்பதற்கு எது உதவும்? (எபிரெயர் 13:17)

14 நாம் விசுவாசத்தின்படி நடந்தால் யெகோவாதான் இந்த அமைப்பை வழிநடத்துகிறார் என்று நம்புவோம். அவருக்கு நம் சூழ்நிலை தெரியும் என்றும் நம்புவோம். கீழ்ப்படியத் தயாராக இருப்போம்; அதுவும், சந்தோஷத்தோடு அப்படிச் செய்வோம். (எபிரெயர் 13:17-ஐ வாசியுங்கள்.) நாம் கீழ்ப்படியும்போது சபை ஒற்றுமையாக இருக்கும் என்பதைப் புரிந்துவைத்திருப்போம். (எபே. 4:2, 3) நம்மை வழிநடத்துபவர்கள் குறையுள்ளவர்களாக இருந்தாலும், நாம் அவர்களுக்குக் கீழ்ப்படியும்போது யெகோவா நம்மை ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்புவோம். (1 சா. 15:22) உண்மையிலேயே சரிசெய்ய வேண்டிய விஷயங்கள் ஏதாவது இருந்தால், சரியான சமயத்தில் யெகோவா அதைச் சரிசெய்வார் என்றும் நம்புவோம்.—மீ. 7:7.

15-16. அமைப்பு கொடுத்த வழிநடத்துதல்களின் மேல் சில சந்தேகங்கள் இருந்தாலும் ஒரு சகோதரர் எப்படி விசுவாசத்தின்படி நடந்தார்? (படத்தையும் பாருங்கள்.)

15 விசுவாசத்தின்படி நடப்பதால் வரும் பலனைப் பற்றித் தெரிந்துகொள்ள இந்த அனுபவத்தைக் கவனியுங்கள். பெரு என்ற நாட்டில் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழி பேசப்படுகிறது. ஆனால், உள்ளூரில் பேசப்படுகிற மொழிகளும் நிறைய இருக்கின்றன. அவற்றில் ஒன்று கச்வா மொழி. பல வருஷங்களாக, கச்வா மொழி பேசுகிற சகோதர சகோதரிகள் தங்களுடைய ஊழியப் பகுதியில், அந்த மொழியைப் பேசும் மக்கள் எங்கெல்லாம் இருக்கிறார்கள் என்று தேடிப்போனார்கள். ஆனால், அரசாங்க விதிமுறைகளுக்கு ஏற்றபடி நடப்பதற்காக, ஊழிய ஏற்பாட்டில் அமைப்பு சில மாற்றங்களைச் செய்தது. (ரோ. 13:1) இந்த மாற்றத்தால், ஊழியம் பாதிக்கப்படுமோ என்று சகோதரர்கள் சிலர் யோசித்தார்கள். ஆனால், அமைப்பின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிந்ததால் யெகோவாவின் ஆசீர்வாதத்தைப் பார்த்தார்கள். கச்வா மொழி பேசுகிற நிறைய பேரைக் கண்டுபிடிக்க யெகோவா அவர்களுக்கு உதவினார்.

16 கச்வா மொழி பேசுகிற சபையில், கெவின் ஒரு மூப்பராக இருக்கிறார். அமைப்பு கொடுத்த வழிநடத்துதலைப் பற்றி அவருக்கும் சந்தேகம் இருந்தது. அவர் சொல்கிறார்: “‘அமைப்பு சொல்கிற மாதிரி செய்தால் கச்வா மொழி பேசுகிறவர்களை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?’ என்று நான் யோசித்தேன்.” அதற்குப் பிறகு கெவின் என்ன செய்தார்? அவரே சொல்வதைக் கேளுங்கள்: “நீதிமொழிகள் 3:5-ஐ நான் யோசித்துப் பார்த்தேன். பிறகு, மோசேயைப் பற்றி யோசித்தேன். யெகோவா மோசேயிடம் இஸ்ரவேலர்களை செங்கடல் பக்கமாகக் கூட்டிக்கொண்டு போகச் சொன்னார். ஆனால், அந்த வழியில் போனால் தப்பிப்பதற்கு வழியே இல்லாத மாதிரி இருந்தது. துரத்திக்கொண்டு வருகிற எகிப்தியர்களிடம் அவர்கள் மாட்டிக்கொள்வார்கள். இருந்தாலும், மோசே கீழ்ப்படிந்தார். யெகோவா அவரை ஆசீர்வதித்தார், மிகப் பெரிய அற்புதத்தைச் செய்தார்.” (யாத். 14:1, 2, 9-11, 21, 22) கெவின் தன் யோசனையை மாற்றிக்கொண்டு, அமைப்பு சொன்ன விதத்தில் ஊழியம் செய்ய ஆரம்பித்தார். அதனால் என்ன பலன் கிடைத்தது? கெவின் சொல்கிறார்: “யெகோவா எங்களை ஆசீர்வதித்ததைப் பார்த்து ரொம்ப ஆச்சரியப்பட்டேன். முன்பெல்லாம் ஊழியத்தில் நடையாய் நடப்போம். ஆனால், கச்வா மொழி பேசுகிற சிலரைத்தான் கண்டுபிடிக்க முடிந்தது. இப்போதோ, கச்வா மொழி பேசுகிறவர்கள் அதிகமாக இருக்கிற பகுதிகளுக்கு நிறைய கவனம் கொடுக்கிறோம். அதனால் நிறைய பேரிடம் பேச முடிகிறது. நிறைய மறுசந்திப்புகளும் பைபிள் படிப்புகளும் கிடைத்திருக்கிறது. கூட்டங்களுக்கும் நிறைய பேர் வருகிறார்கள்.” விசுவாசத்தின்படி நடக்கும்போது யெகோவா எப்போதுமே நமக்குப் பலன் கொடுப்பார்!

கச்வா மொழி பேசும் ஒருவர், சாட்சியாக இருக்கும் ஒரு தம்பதியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். கச்வா மொழி பேசுகிறவர்கள் இருக்கும் இடத்தை அந்தத் தம்பதிக்கு அவர் காட்டுகிறார்.

கச்வா மொழி பேசுகிறவர்களை அக்கம்பக்கத்தில் எங்கே கண்டுபிடிக்கலாம் என்று உள்ளூர் மக்கள் நம் சகோதரர்களுக்குச் சொன்னார்கள் (பாராக்கள் 15-16)


17. இந்தக் கட்டுரையிலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

17 மூன்று முக்கியமான விஷயங்களில் நாம் எப்படி விசுவாசத்தின்படி நடக்கலாம் என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். ஆனால், வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலுமே நாம் தொடர்ந்து விசுவாசத்தின்படி நடக்க வேண்டும். நாம் என்ன மாதிரியான படங்களைப் பார்க்கிறோம், ஓய்வு நேரத்தில் என்ன செய்கிறோம், நம்முடைய கல்வி, அல்லது குழந்தைகளை வளர்ப்பதைப் பற்றி என்ன தீர்மானங்கள் எடுக்கிறோம் என எல்லாவற்றிலுமே விசுவாசத்தின்படி நடக்க வேண்டும். முடிவுகளை எடுக்கும்போது கண்ணால் பார்ப்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து முடிவு எடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்தையும், அவர் கொடுத்திருக்கிற ஆலோசனையையும், நம்மைப் பார்த்துக்கொள்வதாக அவர் கொடுத்திருக்கிற வாக்குறுதியையும் அடிப்படையாக வைத்து முடிவு எடுக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்தால், “நாம் நம்முடைய கடவுளாகிய யெகோவாவின் வழியில் என்றென்றும் நடப்போம்.”—மீ. 4:5.

நாம் எப்படி விசுவாசத்தின்படி நடக்கலாம் . . .

  • வேலையைத் தேர்ந்தெடுக்கும்போது?

  • துணையைத் தேர்ந்தெடுக்கும்போது?

  • வழிநடத்துதல்கள் கிடைக்கும்போது?

பாட்டு 156 விஸ்வாசத்தால் . . .

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இந்தக் கட்டுரை, ஒரு சகோதரி தனக்கு ஒரு துணையைத் தேர்ந்தெடுப்பதுபோல் எழுதப்பட்டிருந்தாலும், இதில் இருக்கிற ஆலோசனை சகோதரர்களுக்கும் பொருந்தும்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்