படிப்புக் கட்டுரை 14
பாட்டு 8 நம் தஞ்சம் யெகோவா
யாரை வணங்குவதென்று நீங்களே முடிவு செய்யுங்கள்!
“நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்.”—யோசு. 24:15.
என்ன கற்றுக்கொள்வோம்?
என்ன காரணங்களுக்காக யெகோவாவை வணங்க நாம் முடிவெடுத்தோம் என்பதை யோசித்துப் பார்க்க இந்தக் கட்டுரை உதவும்.
1. நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டும், ஏன்? (ஏசாயா 48:17, 18)
நம் அப்பா யெகோவா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார். இன்றும் என்றும் நாம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (பிர. 3:12, 13) சில அபாரமான திறமைகளோடு அவர் மனிதர்களைப் படைத்திருப்பது உண்மைதான். இருந்தாலும், தங்களையே ஆட்சி செய்துகொள்ளும் திறமையோடு அவர் மனிதர்களைப் படைக்கவில்லை. அதேபோல், மனிதர்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை முடிவு செய்யும் உரிமையையும் அவர் அவர்களுக்குக் கொடுக்கவில்லை. (பிர. 8:9; எரே. 10:23) அதோடு, நாம் அவரை வணங்கினால்தான்... அவர் கொடுத்திருக்கும் சட்டங்கள்படி வாழ்ந்தால்தான்... உண்மையிலேயே சந்தோஷமாக இருப்போம் என்றும் அவருக்குத் தெரியும்.—ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.
2. நாம் எதை நம்ப வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான், அவன் சொன்னது பொய் என்பதை யெகோவா எப்படிக் காட்டியிருக்கிறார்?
2 ‘யெகோவா தேவையில்லை, மனிதர்களால் தங்களையே நல்லபடியாக ஆட்சி செய்துகொள்ள முடியும்’ என்று நம்மை நம்பவைக்க சாத்தான் முயற்சி செய்கிறான். (ஆதி. 3:4, 5) சாத்தான் சொன்னது பொய் என்பதை நிரூபிப்பதற்காக மனிதர்களுடைய ஆட்சியைக் கொஞ்சக் காலத்துக்கு யெகோவா விட்டுவைத்திருக்கிறார். மனித ஆட்சி படுதோல்வி அடைந்திருப்பதை நம்மால் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. இவையெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், யெகோவாவை வணங்கியதால் ரொம்ப சந்தோஷமாகவும் திருப்தியாகவும் இருந்த நிறைய பேரைப் பற்றி பைபிள் சொல்கிறது. அவர்களில் ரொம்பவே சந்தோஷமாக இருந்த ஒருவர்தான் இயேசு கிறிஸ்து. யெகோவாவை வணங்க அவர் ஏன் முடிவு செய்தார் என்று இந்தக் கட்டுரையில் முதலில் பார்க்கலாம். அடுத்து, நம்முடைய வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவா ஏன் தகுதியானவர் என்பதைப் பார்க்கலாம். பிறகு, என்ன காரணங்களுக்காக யெகோவாவை வணங்க நாம் முடிவெடுத்தோம் என்பதையும் பார்க்கலாம்.
யெகோவாவை வணங்க இயேசு ஏன் முடிவு செய்தார்
3. இயேசுவுக்கு எதைக் கொடுப்பதாக சாத்தான் சொன்னான், அப்போது இயேசு என்ன முடிவெடுத்தார்?
3 இயேசு பூமியில் இருந்தபோது, யாரை வணங்குவது என்ற முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது. அவர் ஞானஸ்நானம் எடுத்த பிறகு, சாத்தான் அவரிடம் வந்தான். ஒரேவொரு தடவை இயேசு தன்முன் விழுந்து வணங்கினால், இந்த உலகத்தில் இருக்கிற எல்லா ராஜ்யங்களையும் அவருக்குத் தருவதாக சொன்னான். அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும், அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’ என எழுதப்பட்டிருக்கிறதே” என்றார். (மத். 4:8-10) இயேசு ஏன் இந்த முடிவை எடுத்தார்? சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.
4-5. யெகோவாவை வணங்க வேண்டும் என்று இயேசு முடிவு எடுத்ததற்குச் சில காரணங்கள் என்ன?
4 யெகோவாவை வணங்க வேண்டும் என்று இயேசு முடிவு எடுத்ததற்கான முக்கியமான காரணமே அன்புதான். தன்னுடைய அப்பாவான யெகோவாமேல் அவருக்கு ஆழமான அன்பும், அளவில்லாத பாசமும் இருந்தது. (யோவா. 14:31) அதுமட்டுமல்ல, யெகோவாவை வணங்குவதுதான் சரியானது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. (யோவா. 8:28, 29; வெளி. 4:11) யெகோவாதான் உயிரின் ஊற்று என்பது அவருக்குத் தெரியும். யெகோவா நம்பகமானவர், தாராள குணமுள்ளவர் என்பதும் அவருக்குத் தெரியும். (சங். 33:4; 36:9; யாக். 1:17) யெகோவா எப்போதுமே உண்மையைத்தான் இயேசுவிடம் பேசினார். அதோடு, இயேசுவிடம் இருக்கிற எல்லாவற்றையும் கொடுத்ததும் அவர்தான். (யோவா. 1:14) ஆனால், சாத்தான் அப்படி இல்லை. அவன் பொய் பேசுகிறவன், பேராசை பிடித்தவன், சுயநலக்காரன்; மனிதர்களுக்குச் சாவு வருவதற்கே அவன்தான் காரணம். (யோவா. 8:44) இதெல்லாமே இயேசுவுக்குத் தெரியும். அதனால்தான், சாத்தான் மாதிரி யெகோவாவை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணம்கூட அவருக்கு வரவில்லை.—பிலி. 2:5-8.
5 யெகோவாவுக்குச் சேவை செய்ய இயேசு முடிவு எடுத்ததற்கு இன்னொரு காரணம் இதுதான்: யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்வதால் வரும் நன்மைகளைப் பார்க்க அவர் ஆசையாக இருந்தார். (எபி. 12:2) அவர் உண்மையாக இருந்தால், யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்த முடியும் என்பது அவருக்குத் தெரியும். அதோடு, சாத்தானால் வந்த சாவு உட்பட எல்லா கஷ்டங்களையும் சரிசெய்ய முடியும் என்பதும் அவருக்குத் தெரியும்.
நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்ள யெகோவா ஏன் தகுதியானவர்
6-7. இன்று ஏன் நிறைய பேர் யெகோவாவை வணங்குவதில்லை, ஆனால் நாம் ஏன் அவரை மட்டுமே வணங்குகிறோம்?
6 இன்று நிறைய பேர் யெகோவாவை வணங்காததற்குக் காரணம், அவருடைய அழகான குணங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. அவர்களுக்காக யெகோவா என்ன செய்திருக்கிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த மக்கள் மாதிரிதான், அன்று பவுல் பிரசங்கித்த அத்தேனே நகர மக்களும் இருந்தார்கள்.—அப். 17:19, 20, 30, 34.
7 உண்மையான கடவுள்தான், “எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும் மற்ற எல்லாவற்றையும் தருகிறார்” என்று பவுல் அத்தேனே நகர மக்களிடம் சொன்னார். அதோடு, “அவரால்தான் நாம் உயிர் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்” என்றும் சொன்னார். அவர்தான் ‘ஒரே மனுஷனிலிருந்து எல்லா தேசத்து மக்களையும் உண்டுபண்ணின’ படைப்பாளர். அப்படியென்றால், நம் வணக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான உரிமை அவருக்குத்தான் இருக்கிறது.—அப். 17:25, 26, 28.
8. யெகோவா என்ன செய்யவே மாட்டார்? விளக்குங்கள்.
8 யெகோவா நம் படைப்பாளராக இருப்பதாலும் இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசராக இருப்பதாலும், தன்னை வணங்கச் சொல்லி அவரால் நம்மைக் கட்டாயப்படுத்த முடியும். ஆனால், அவர் அப்படிச் செய்யவே மாட்டார்! அதற்குப் பதிலாக, அவர் இருக்கிறார் என்பதற்கும், நம் ஒவ்வொருவர் மேலும் நிறைய அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கும் ஆதாரங்களைக் கொடுக்கிறார். எவ்வளவு பேர் முடியுமோ அவ்வளவு பேர் தன்னுடைய நண்பர்களாக ஆக வேண்டும்... என்றென்றும் வாழ வேண்டும்... என்று அவர் ஆசைப்படுகிறார். (1 தீ. 2:3, 4) அதனால், நாம் மக்களுக்கு அவருடைய விருப்பத்தைப் பற்றியும், என்னென்ன நன்மைகளை மக்களுக்குத் தரப்போகிறார் என்பதைப் பற்றியும் சொல்லிக்கொடுக்க நமக்கு அவர் பயிற்சி கொடுக்கிறார். (மத். 10:11-13; 28:19, 20) நம்மை சபைகளாக ஒழுங்கமைத்து, நம்மை கவனித்துக்கொள்வதற்காக அன்பான கண்காணிகளையும் கொடுத்திருக்கிறார்.—அப். 20:28.
9. யெகோவா எப்படி எல்லா மனிதர்களுக்கும் அன்பு காட்டியிருக்கிறார்?
9 தான் இருப்பதை நம்பாத ஆட்களுக்குக்கூட நல்ல நல்ல விஷயங்களைச் செய்வதன் மூலமாக தன்னுடைய அன்பை யெகோவா காட்டியிருக்கிறார். இதை யோசித்துப் பாருங்கள்: சரித்திரத்தில் கோடிக்கணக்கான ஆட்கள் யெகோவாவை ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். அவர்களுக்கு எது சரி, எது தப்பு என்று தோன்றுகிறதோ அதற்கேற்ற மாதிரிதான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், வாழ்வதற்கும் வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிப்பதற்கும் என்ன தேவையோ, அதையெல்லாம் அவர்களுக்கும் யெகோவா இரக்கத்தோடு கொடுத்திருக்கிறார். (மத். 5:44, 45; அப். 14:16, 17) நண்பர்களுடன் சந்தோஷமாக இருப்பதற்கும், பிள்ளைகளை பெற்றெடுத்து குடும்பத்தை உருவாக்குவதற்கும் தேவையான திறமைகளை அவர் மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். அதோடு, கடினமாக உழைப்பதால் வரும் சந்தோஷத்தை அனுபவிக்கவும் அவர்களை விட்டிருக்கிறார். (சங். 127:3; பிர. 2:24) நம்முடைய பரலோக அப்பா எல்லா மனிதர்கள்மீதும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் ஆதாரம். (யாத். 34:6) சரி, யெகோவாவை வணங்க நாம் ஏன் முடிவெடுத்தோம் என்பதற்கான காரணங்களை இப்போது யோசித்துப் பார்க்கலாம். பதிலுக்கு, அவர் நம்மை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்பதையும் பார்க்கலாம்.
நாம் ஏன் யெகோவாவை வணங்க முடிவு செய்தோம்
10. (அ) யெகோவாவை நாம் வணங்குவதற்கான முக்கிய காரணம் என்ன? (மத்தேயு 22:37) (ஆ) யெகோவாவின் பொறுமை உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்திருக்கிறது? (சங்கீதம் 103:13, 14)
10 நாம் யெகோவாவை வணங்குவதற்கான காரணம், இயேசு மாதிரியே நமக்கும் அவர்மேல் ஆழமான அன்பும் பாசமும் இருக்கிறது. (மத்தேயு 22:37-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் குணங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள தெரிந்துகொள்ள, அவரிடம் நெருங்கிப் போக வேண்டும் என்ற ஆசை நமக்கு வருகிறது. உதாரணத்துக்கு, அவர் எவ்வளவு பொறுமையாக நடந்துகொள்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். இஸ்ரவேலர்கள் தனக்குக் கீழ்ப்படியாமல் போனபோதும்கூட, “தயவுசெய்து கெட்ட வழிகளையும் கெட்ட பழக்கவழக்கங்களையும் விட்டுவிட்டுத் திருந்துங்கள்” என்று யெகோவா அவர்களிடம் கெஞ்சிக் கேட்டார். (எரே. 18:11) நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்றும், நாம் வெறும் மண் என்றும் யெகோவாவுக்குத் தெரியும். (சங்கீதம் 103:13, 14-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் பொறுமையைப் பற்றியும், அவருடைய மற்ற அழகான குணங்களைப் பற்றியும் ஆழமாக யோசிக்கும்போது, அவரை என்றென்றும் வணங்க வேண்டும் என்ற ஆசை உங்களுக்கும் வருகிறதா?
11. நம் பரலோக அப்பாவை வணங்குவதற்கு வேறென்ன காரணங்கள் இருக்கின்றன?
11 நாம் யெகோவாவை வணங்குவதற்கான இன்னொரு காரணம்: அவரை வணங்குவதுதான் சரியானது! (மத். 4:10) அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் நமக்குத் தெரியும். நம்மால் அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த முடியும். பிசாசை ஒரு பொய்யன் என்று நிரூபிக்க முடியும். யெகோவாவுடைய மனதைச் சந்தோஷப்படுத்தவும் முடியும். யெகோவாவை வணங்க இன்று முடிவெடுத்தால், என்றென்றும் அவருக்குச் சேவை செய்யும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கும்.—யோவா. 17:3.
12-13. ஜேன் மற்றும் ஜெனி சகோதரிகளுடைய அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
12 சின்ன வயதிலேயே யெகோவாமேல் ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ள முடியும். நாம் வளர வளர, அந்த அன்பு அதிகமாகிக்கொண்டே போகும். ஒரு அக்கா-தங்கையின் அனுபவத்தைப் பாருங்கள். அக்கா பெயர் ஜேன், தங்கை பெயர் ஜெனி.a அவர்கள் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தபோது, ஜேனுக்கு 11 வயது, ஜெனிக்கு 10 வயது. அவர்களுடைய அப்பா அம்மாவுக்கு பைபிள் படிப்பில் ஆர்வம் இல்லை. ஆனால், பிள்ளைகள் தங்களோடு சேர்ந்து சர்ச்சுக்கு வருவதாக இருந்தால், சாட்சிகளோடு பைபிளைப் படிக்கலாம் என்று சொல்லியிருந்தார்கள். ஜேன் சொல்கிறார்: “என்னுடைய நண்பர்கள் என்னை போதைமருந்து எடுக்கவும் ஒழுக்கங்கெட்ட விஷயங்களில் ஈடுபடுவும் தொல்லை கொடுத்தார்கள். அதையெல்லாம் சமாளிப்பதற்கு, யெகோவாவின் சாட்சிகள் பைபிளிலிருந்து சொல்லிக்கொடுத்த விஷயங்கள்தான் உதவி செய்தது.”
13 டீனேஜில் இருந்தபோதே ஜேன் மற்றும் ஜெனி பிரஸ்தாபிகளாக ஆகிவிட்டார்கள். பிறகு, பயனியர் சேவையும் ஆரம்பித்தார்கள். அப்பா அம்மாவுக்கு வயதானபோது அவர்களையும் கவனித்துக்கொண்டு பயனியர் சேவையையும் தொடர்ந்து செய்தார்கள். தன்னுடைய அனுபவத்தைப் பற்றி ஜேன் சொல்கிறார்: “யெகோவா தன்னுடைய நண்பர்களை ரொம்ப நன்றாகப் பார்த்துக்கொள்வார் என்பதை என்னுடைய சொந்த அனுபவத்தில் கவனித்திருக்கிறேன். ‘தனக்குச் சொந்தமானவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்’ என்று 2 தீமோத்தேயு 2:19 சொல்கிறது. இது எவ்வளவு உண்மை என்பதை நான் ருசித்திருக்கிறேன்.” உண்மைதான், யெகோவாமேல் அன்பு வைத்து அவருக்குச் சேவை செய்கிறவர்களை அவர் ஒருநாளும் கைவிடுவதில்லை.
14. நாம் எப்படி வார்த்தைகளாலும் செயல்களாலும் யெகோவாவை ஆதரிப்பதைக் காட்டலாம்? (படங்களையும் பாருங்கள்.)
14 யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நாம் ஆசைப்படுகிறோம். இதை யோசித்துப் பாருங்கள்: உங்களுக்கு ஒரு நெருக்கமான நண்பர் இருக்கிறார். அவர் ரொம்ப இரக்கமானவர், தாராள குணமுள்ளவர், மன்னிக்கிறவர். ஒருநாள், அவரைப் பற்றி இன்னொருவர், ‘அவர் ரொம்ப மோசமானவர், நேர்மை இல்லாதவர்’ என்றெல்லாம் தப்பு தப்பாகச் சொல்கிறார். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? கண்டிப்பாக உங்கள் நண்பருக்கு ஆதரவாகப் பேசுவீர்கள். அதேபோல், சாத்தானும் அவன் பக்கம் இருப்பவர்களும் யெகோவாவின் பெயரைக் கெடுப்பதற்காக அவரைப் பற்றிப் பொய்களைப் பரப்புகிறார்கள். அதனால், யெகோவாவை ஆதரித்து அவரைப் பற்றிய உண்மைகளை மக்களிடம் நாம் சொல்கிறோம். அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்கும் வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுகிறோம். (சங். 34:1; ஏசா. 43:10) நம்முடைய வார்த்தைகளாலும் செயல்களாலும் யெகோவாவை முழு மூச்சோடு வணங்க விரும்புவதைக் காட்டுகிறோம்.
யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க கைகொடுப்பீர்களா? (பாரா 14)b
15. வாழ்க்கையில் தன்னுடைய லட்சியங்களை மாற்றிக்கொண்டதால், அப்போஸ்தலன் பவுலுக்கு என்ன பலன் கிடைத்தது? (பிலிப்பியர் 3:7, 8)
15 யெகோவாவின் மனதைச் சந்தோஷப்படுத்த அல்லது அவருடைய சேவையை இன்னும் அதிகமாகச் செய்ய, நம் லட்சியங்களை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறோம். அப்போஸ்தலன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். யூத சமுதாயத்தில் அவர் பெரிய ஆளாக இருந்தார். ஆனால் கிறிஸ்துவுக்கும் யெகோவாவுக்கும் சேவை செய்வதற்காக, அவருக்கு இருந்த அந்தஸ்தைத் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். (கலா. 1:14) அப்படி அவர் முடிவு எடுத்ததால், ரொம்ப திருப்தியான வாழ்க்கையை வாழ்ந்தார். பரலோகத்தில் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆட்சி செய்யும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. யெகோவாவுக்குச் சேவை செய்ய அவர் எடுத்த முடிவை நினைத்து அவர் ஒருநாள்கூட வருத்தப்படவில்லை. யெகோவாவுக்குச் சேவை செய்ய நாமும் முடிவெடுத்தால், அதை நினைத்து என்றுமே வருத்தப்பட மாட்டோம்.—பிலிப்பியர் 3:7, 8-ஐ வாசியுங்கள்.
16. ஜூலியாவின் அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (படங்களையும் பாருங்கள்.)
16 யெகோவாவுக்குச் சேவை செய்வதுதான் வாழ்க்கையிலேயே ரொம்ப ரொம்ப முக்கியம் என்று முடிவெடுத்தால், நம்மால் திருப்தியான, சந்தோஷமான வாழ்க்கையை இப்போதே வாழ முடியும். எதிர்காலத்திலும், சந்தோஷமான வாழ்க்கையை யெகோவா நமக்குக் கொடுப்பார். ஜூலியா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, சின்ன வயதிலிருந்தே சர்ச்சின் பாட்டுக் குழுவில் ஒருவராக இருந்தார். ஜூலியாவுக்கு இருந்த பாட்டுத் திறமையை கவனித்த ‘ஓப்ரா’ பாடகர் ஒருவர், அவருக்குப் பாடுவதில் பயிற்சி கொடுத்தார். சீக்கிரத்திலேயே ஜூலியா ரொம்ப பிரபலமாகிவிட்டார். பெரிய பெரிய இசை அரங்குகளில் பாட ஆரம்பித்தார். பிறகு, ஒரு பிரபலமான இசைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கே படித்துக்கொண்டிருந்தபோது, அவரோடு படிக்கும் ஒருவர், கடவுளைப் பற்றியும் கடவுளுடைய பெயர் யெகோவா என்பதைப் பற்றியும் சொன்னார். பிறகு, ஜூலியா பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தார், அதுவும் வாரத்துக்கு இரண்டு தடவை! கடைசியில், அவர் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். இசைத்துறையில் முன்னேறிக்கொண்டே போவதற்குப் பதிலாக, யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தார். அந்த முடிவை எடுப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. ஜூலியா சொல்கிறார்: “என்னுடைய திறமையை நான் வீணடிப்பதாக நிறைய பேர் சொன்னார்கள். ஆனால், நான் என் வாழ்க்கையை யெகோவாவுக்கு முழுமையாக கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.” 30 வருஷத்துக்கு முன்பு ஜூலியா எடுத்த இந்த முடிவைப் பற்றி இப்போது அவர் என்ன நினைக்கிறார்? அவரே இப்படிச் சொல்கிறார்: “எனக்கு மனஅமைதி இருக்கிறது. என்னுடைய எல்லா ஆசைகளையும் எதிர்காலத்தில் யெகோவா நிறைவேற்றித் தருவார் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.”—சங். 145:16.
யெகோவாவுக்குச் சேவை செய்வதை வாழ்க்கையில் முக்கியமாக வைத்தால், இருப்பதிலேயே சந்தோஷமான வாழ்க்கை நமக்குக் கிடைக்கும் (பாரா 16)c
தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
17. உலகத்தின் முடிவு பக்கத்தில் இருப்பதால், யெகோவாவுக்குச் சேவை செய்யாதவர்களும், சேவை செய்கிறவர்களும் என்ன புரிந்துகொள்ள வேண்டும்?
17 இந்த உலகத்தின் முடிவுக்கு ரொம்ப பக்கத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அப்போஸ்தலன் பவுல் இப்படிச் சொன்னார்: “இன்னும் ‘கொஞ்ச நேரம்தான் இருக்கிறது,’ ‘வரப்போகிறவர் தாமதிக்காமல் வந்துவிடுவார்.’” (எபி. 10:37) இதிலிருந்து என்ன புரிந்துகொள்கிறோம்? யெகோவாவை வணங்க வேண்டும் என்ற முடிவை எடுக்க மக்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம்தான் இருக்கிறது. (1 கொ. 7:29) நாம் ஏற்கனவே கடவுளுக்குச் சேவை செய்துகொண்டிருந்தால், நாம் கஷ்டங்களைச் சகித்திருக்கப் போவதும் இன்னும் “கொஞ்ச நேரம்தான்”!
18. இயேசுவும் யெகோவாவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
18 இயேசு, தன்னுடைய சீஷர்களிடம் தன்னைப் பின்பற்றி வரும்படி மட்டுமே சொல்லவில்லை; தொடர்ந்து பின்பற்றி வரும்படி சொன்னார். (மத். 16:24) அதனால், நாம் பல வருஷங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருந்தாலும், அந்தச் சேவையை விடாமல் இருப்பதற்கு உறுதியோடு இருக்க வேண்டும். நாம் எடுத்த முடிவுக்கு ஏற்ற மாதிரி வாழ வேண்டும் என்றுதான் யெகோவாவும் ஆசைப்படுகிறார். இது ஒருவேளை சுலபமாக இருக்காது. ஆனாலும், அப்படி வாழ்வதால் இப்போதே நமக்குக் கிடைக்கிற சந்தோஷங்கள் எக்கச்சக்கம்!—சங். 35:27.
19. ஜீனுடைய அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
19 யெகோவாவுக்குச் சேவை செய்தால், வாழ்க்கையை அனுபவிக்க முடியாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஒரு இளைஞராக, உங்களுக்கும் எப்போதாவது அப்படித் தோன்றியிருக்கிறதா? ஜீன் என்ற இளம் சகோதரர் சொல்வதைப் பாருங்கள்: “யெகோவாவின் சாட்சியாக இருப்பது, என்னை ரொம்ப கட்டுப்படுத்துகிற மாதிரி இருந்தது. என்கூட இருக்கிற பசங்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிற மாதிரி தெரிந்தது. எல்லாரும் பார்ட்டிக்குப் போனார்கள், டேட்டிங் செய்தார்கள், வன்முறையான வீடியோ கேம்ஸ் விளையாடினார்கள். ஆனால் நான் மட்டும் கூட்டங்களுக்கும் ஊழியத்துக்கும் போய்க்கொண்டு இருந்தேன்!” இப்படி யோசித்தது ஜீனை எப்படிப் பாதித்தது? அவர் சொல்கிறார்: “யெகோவாவின் சாட்சிகளோடு இருக்கும்போது ஒரு மாதிரியும், மற்றவர்களோடு இருக்கும்போது வேறு மாதிரியும் வாழ ஆரம்பித்தேன். கொஞ்ச நாளுக்கு ஜாலியாக இருக்கிற மாதிரிதான் தெரிந்தது. ஆனால் அந்தச் சந்தோஷம் எதுவுமே நிலைக்கவில்லை. அதற்கு அப்புறம்தான், பைபிள் சொல்கிறபடி வாழ்வதால் என்னென்ன பிரயோஜனம் இருக்கிறது என்று யோசிக்க ஆரம்பித்தேன். முழு இதயத்தோடு யெகோவாவுக்கு சேவை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். அந்தச் சமயத்திலிருந்து, யெகோவா என்னுடைய ஒவ்வொரு ஜெபத்துக்கும் பதில் கொடுத்திருக்கிறார்.”
20. நாம் என்ன முடிவெடுக்க வேண்டும்?
20 ஒரு சங்கீதக்காரர் இப்படிப் பாடினார்: “உங்களுடைய பிரகாரங்களில் தங்குவதற்காக நீங்கள் யாரைத் தேர்ந்தெடுத்து, உங்கள் பக்கத்தில் கொண்டுவருகிறீர்களோ அவர் சந்தோஷமானவர்.” (சங். 65:4) அதனால், “நானும் என் குடும்பத்தாரும் யெகோவாவை மட்டும்தான் வணங்குவோம்” என்று யோசுவா மாதிரி நாமும் முடிவெடுக்கலாம்!—யோசு. 24:15.
பாட்டு 28 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b படவிளக்கங்கள்: மாநாட்டு மன்றத்துக்கு வெளியே யெகோவாவின் சாட்சிகளுக்கு எதிராகப் போராட்டம் செய்கிற கும்பலை ஒரு பெண் பார்க்கிறார். பிறகு, அந்த மன்றத்துக்குப் பக்கத்தில் சாட்சிகள் வீல் ஸ்டாண்ட் வைத்திருப்பதைக் கவனிக்கிறார். அங்கே இருக்கிற சாட்சிகளிடம் பைபிள் உண்மைகளைக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார்.
c படவிளக்கம்: யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக ஜூலியா எடுத்த தீர்மானம் சித்தரித்துக் காட்டப்பட்டிருக்கிறது.