படிப்புக் கட்டுரை 25
பாட்டு 96 தேவன் தந்த வேதம்
மரணப் படுக்கையில் ஒரு தீர்க்கதரிசனம்—பாகம் 2
“அவரவருக்குத் தகுந்த ஆசீர்வாதத்தைத் தந்தார்.” —ஆதி. 49:28.
என்ன கற்றுக்கொள்வோம்?
மரணப் படுக்கையில் இருந்தபோது யாக்கோபு தன்னுடைய எட்டு மகன்களுக்குச் சொன்ன தீர்க்கதரிசனத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்வோம்.
1. மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்தில் எதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்?
யாக்கோபை சுற்றி அவருடைய மகன்கள் நின்றுகொண்டு இருக்கிறார்கள். அவர்களை அவர் ஆசீர்வதித்துக்கொண்டிருக்கிறார். அவர் சொல்கிற வார்த்தைகளைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ரூபன், சிமியோன், லேவி மற்றும் யூதாவிடம் யாக்கோபு சொன்ன வார்த்தைகளை போன கட்டுரையில் பார்த்தோம். அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது, அடுத்த எட்டு மகன்களும் ‘அப்பா என்ன சொல்ல போகிறாரோ?’ என்று யோசித்துக்கொண்டு இருக்கலாம். செபுலோன், இசக்கார், தாண், காத், ஆசேர், நப்தலி, யோசேப்பு மற்றும் பென்யமீனிடம் யாக்கோபு சொன்ன வார்த்தைகளை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.a அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.
செபுலோன்
2. செபுலோனுக்கு யாக்கோபு என்ன சொன்னார், அது எப்படி நிறைவேறியது? (ஆதியாகமம் 49:13) (பெட்டியையும் பாருங்கள்.)
2 ஆதியாகமம் 49:13-ஐ வாசியுங்கள். செபுலோன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் கடலோரமாக வாழ்வார்கள் என்று யாக்கோபு சொன்னார். 200 வருஷங்களுக்குப் பிறகு, செபுலோன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு, கலிலேயா கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையில் இருந்த பகுதி கொடுக்கப்பட்டது. அது வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் வடக்கே இருந்தது. அவர்களைப் பற்றி மோசே இப்படித் தீர்க்கதரிசனம் சொன்னார்: “செபுலோனே, நீ வெளியே போகும்போது சந்தோஷப்படு.” (உபா. 33:18) இதற்கு என்ன அர்த்தம்? செபுலோன் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் சந்தோஷமாக இருப்பதற்குக் காரணம் இருந்தது. அவர்கள் வாழ்ந்த பகுதி, இரண்டு கடல்களுக்கு நடுவில் இருந்ததால் வர்த்தகம் செய்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்திருக்கும். இதை மனதில் வைத்து மோசே அப்படிச் சொல்லியிருக்கலாம்.
3. சந்தோஷமாக இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
3 நமக்கு என்ன பாடம்? நாம் எங்கே வாழ்ந்தாலும் சரி, நம்முடைய சூழ்நிலை எப்படி இருந்தாலும் சரி, நாம் சந்தோஷமாக இருப்பதற்குக் கண்டிப்பாகக் காரணங்கள் இருக்கும். ஆனால் அப்படிச் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், நம்மிடம் இருப்பதை வைத்து திருப்தியாக வாழ வேண்டும். (சங். 16:6; 24:5) சிலசமயங்களில், நம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்குவது சுலபம். ஆனால் அதற்குப் பதிலாக, நம்மிடம் இருப்பதை நினைத்து சந்தோஷப்பட பழகிக்கொள்ள வேண்டும்.—கலா. 6:4.
இசக்கார்
4. இசக்காரைப் பற்றி யாக்கோபு என்ன சொன்னார், அது எப்படி நிறைவேறியது? (ஆதியாகமம் 49:14, 15) (பெட்டியையும் பாருங்கள்.)
4 ஆதியாகமம் 49:14, 15-ஐ வாசியுங்கள். இசக்காரை யாக்கோபு பாராட்டுகிறார். வலிமையான எலும்புகளைக் கொண்ட... கடினமாக உழைக்கிற... கழுதைக்கு அவனை ஒப்பிடுகிறார். சுமை சுமப்பதற்காகத் தன்னுடைய தோளை இசக்கார் கொடுப்பான் என்று அவர் சொல்கிறார். அதோடு, இசக்காருக்கு ஒரு அருமையான இடம் கிடைக்கும் என்றும் சொல்கிறார். அவர் சொன்ன மாதிரியே நடந்தது. இசக்கார் வம்சத்தில் வந்தவர்களுக்கு யோர்தான் ஆற்றுக்குப் பக்கத்தில் செழிப்பான ஒரு இடம் கிடைத்தது. (யோசு. 19:22) இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் நிலத்தைப் பயிர் செய்வதற்காக நிச்சயம் கடினமாக உழைத்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, மற்றவர்களுடைய நலனுக்காகவும் அவர்கள் தோள் கொடுத்தார்கள். (1 ரா. 4:7, 17) இஸ்ரவேல் தேசத்துக்காகப் போர் செய்ய அவர்கள் எப்போதுமே தயாராக இருந்தார்கள். உதாரணத்துக்கு, சிசெராவை எதிர்த்து போர் செய்ய, நியாயாதிபதி பாராக்கும் தீர்க்கதரிசியான தெபொராளும் மற்றவர்களிடம் உதவி கேட்டார்கள். அப்போது, இசக்கார் கோத்திரமும் அந்தப் போரில் கலந்துகொண்டார்கள்.—நியா. 5:15.
5. நாம் ஏன் கடினமாக உழைக்க வேண்டும்?
5 நமக்கு என்ன பாடம்? இசக்கார் கோத்திரத்தின் கடின உழைப்பை யெகோவா உயர்வாகப் பார்த்ததுபோல், அவருடைய சேவையில் நாம் கடினமாக உழைப்பதையும் உயர்வாகப் பார்க்கிறார். (பிர. 2:24) உதாரணத்துக்கு, சபையைக் கவனித்துக்கொள்ளும் சகோதரர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். (1 தீ. 3:1) அந்தச் சகோதரர்கள், இசக்கார் கோத்திரத்தார் போல் கடவுளுடைய மக்களைப் பாதுகாக்க நிஜமான போர்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால், ஆன்மீக விதத்தில் எந்த ஆபத்தும் வந்துவிடாத மாதிரி அவர்களைப் பாதுகாப்பதற்குக் கடினமாக உழைக்கிறார்கள். (1 கொ. 5:1, 5; யூ. 17-23) சபையைப் பலப்படுத்துவதற்கு உற்சாகம் தரும் பேச்சுகளைத் தயாரித்துக் கொடுக்கவும் கடினமாக உழைக்கிறார்கள்.—1 தீ. 5:17.
தாண்
6. தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு என்ன நியமிப்பு கிடைத்தது? (ஆதியாகமம் 49:17, 18) (பெட்டியையும் பாருங்கள்.)
6 ஆதியாகமம் 49:17, 18-ஐ வாசியுங்கள். தன்னைவிட பெரிய மிருகங்களைத் தாக்குகிற—ஒரு போர் குதிரையையே தாக்குகிற—பாம்பு மாதிரி, தாண் இருப்பான் என்று யாக்கோபு சொன்னார். தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தைரியசாலிகளாக இருந்தார்கள். இஸ்ரவேல் தேசத்தின் எதிரிகளைத் தாக்க எப்போதும் தயாராக இருந்தார்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் அணி அணியாகப் போன சமயத்தில், தாண் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் ‘மற்ற எல்லா கோத்திரங்களுக்கும் பின்னால் காவலாகப் போனார்கள்.’ (எண். 10:25) அவர்கள் செய்த இந்த நியமிப்பு மற்றவர்களின் கண்ணில் பெரிதாகப் பட்டிருக்காது. ஆனால், அது ரொம்ப ரொம்ப முக்கியமான ஒரு நியமிப்பு.
7. யெகோவாவுடைய சேவையில் நமக்கு ஒரு நியமிப்பு கிடைக்கும்போது நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?
7 நமக்கு என்ன பாடம்? நீங்கள் செய்கிற ஏதாவது வேலை மற்றவர்களுடைய பார்வையில் படாமல் போயிருக்கிறதா? ஒருவேளை, ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்கிற அல்லது பராமரிக்கிற வேலை... மாநாட்டுக்காகச் செய்கிற வேலை... போன்ற ஏதாவது ஒன்றை நீங்கள் செய்திருக்கலாம். அந்த மாதிரி வேலைகளை நீங்கள் செய்து வருகிறீர்கள் என்றால், உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும்! யாருமே அதைக் கவனிக்கவில்லை என்றாலும், யெகோவா அதைக் கவனிக்கிறார். அவருக்காக நீங்கள் செய்கிற ஒவ்வொரு விஷயத்தையும் பெரிதாக மதிக்கிறார். மற்றவர்களுடைய பாராட்டுக்காக அல்ல, யெகோவாமேல் இருக்கிற அன்பினால் நாம் ஒரு விஷயத்தைச் செய்யும்போது அவர் அதைப் பொக்கிஷமாக நினைக்கிறார்.—மத். 6:1-4.
காத்
8. காத் கோத்திரம் குடியிருந்த பகுதி ஏன் ஆபத்தானதாக இருந்தது? (ஆதியாகமம் 49:19) (பெட்டியையும் பாருங்கள்.)
8 ஆதியாகமம் 49:19-ஐ வாசியுங்கள். காத்தை ஒரு கொள்ளைக்கூட்டம் தாக்கும் என்று யாக்கோபு சொன்னார். 200 வருஷங்களுக்குப் பிறகு, காத் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே குடியேறியபோது அவர்களுடைய எல்லையை ஒட்டி எதிரி தேசங்கள் இருந்தன. அதனால், எதிரிகளிடம் இருந்து தாக்குதல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன. இருந்தாலும், அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்தைத்தான் தேர்ந்தெடுத்தார்கள். ஏனென்றால், அவர்களுடைய ஆடு, மாடுகளை மேய்ப்பதற்கு அங்கே செழிப்பான இடங்கள் இருந்தன. (எண். 32:1, 5) காத் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் தைரியமான வீரர்களாக இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர்கள் யெகோவாவை நம்பியிருந்தார்கள். யெகோவா அவர்களுக்குக் கொடுத்த இடத்தைப் பாதுகாப்பதற்கு யெகோவாவே உதவுவார் என்று நம்பினார்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் மீதி பகுதியை, அதாவது யோர்தானுக்கு மேற்கே இருந்த பகுதியை, கைப்பற்ற இவர்களுடைய கோத்திரத்தில் இருந்து போர் வீரர்களைப் பல வருஷமாக அனுப்பினார்கள். (எண். 32:16-19) அந்த மாதிரி சமயத்தில், வீட்டில் இருந்த தங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் யெகோவா பாதுகாப்பார் என்று நம்பினார்கள். அவர்களுடைய இந்த வீரதீர செயல்களுக்காகவும் அவர்கள் செய்த தியாகத்துக்காகவும் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்.—யோசு. 22:1-4.
9. யெகோவாவை நம்புகிறோம் என்பதை நாம் எடுக்கும் முடிவுகளில் எப்படிக் காட்டலாம்?
9 நமக்கு என்ன பாடம்? கஷ்டங்கள் இருந்தாலும் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கு, நாம் அவர்மேல் நம்பிக்கை வைக்க வேண்டும். (சங். 37:3) நம்பிக்கை வைத்திருப்பதை இன்று நிறைய பேர் எப்படிக் காட்டுகிறார்கள்? யெகோவாவுடைய சேவையில் தியாகங்கள் செய்வதன் மூலமாகக் காட்டுகிறார்கள். உதாரணத்துக்கு, கட்டுமான வேலை செய்ய... தேவை அதிகம் உள்ள இடத்தில் சேவை செய்ய... அமைப்பு தரும் வேறு நியமிப்புகளைச் செய்ய... தியாகங்களைச் செய்கிறார்கள். யெகோவா தங்களுடைய தேவைகளை எப்போதும் பார்த்துக்கொள்வார் என்று முழுமையாக நம்புவதால் இப்படிப்பட்ட தியாகங்களைச் செய்கிறார்கள்.—சங். 23:1.
ஆசேர்
10. ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்ன செய்யாமல் போய்விட்டார்கள்? (ஆதியாகமம் 49:20) (பெட்டியையும் பாருங்கள்.)
10 ஆதியாகமம் 49:20-ஐ வாசியுங்கள். ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வளமாக வாழ்வார்கள் என்று யாக்கோபு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்தது. இஸ்ரவேல் தேசத்தின் செழிப்பான சில இடங்கள், இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்தன. (உபா. 33:24) அந்தப் பகுதி, மத்தியதரைக் கடலை ஒட்டி இருந்தது. வர்த்தகத்தில் செழித்தோங்கிய சீதோன் துறைமுகமும் அங்கேதான் இருந்தது. ஆனால் ஆசேர் கோத்திரத்தார், அங்கே இருந்த கானானியர்களைத் துரத்தாமல் விட்டுவிட்டார்கள். (நியா. 1:31, 32) கானானியர்களோடு இருந்த பழக்கமும், செல்வச் செழிப்பான வாழ்க்கையும், யெகோவாவுடைய வணக்கத்தில் இவர்கள் மந்தமானதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். நியாயாதிபதி பாராக், கானானியர்களை எதிர்த்துப் போர் செய்ய உதவி கேட்டபோது ஆசேர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் உதவிக்குப் போகவில்லை. அதனால், ‘மெகிதோவின் தண்ணீருக்குப் பக்கத்தில்’ யெகோவா இஸ்ரவேலர்களுக்குக் கொடுத்த அபாரமான வெற்றியில் இவர்களுக்குப் பங்கில்லாமல் போனது. (நியா. 5:19-21) வெற்றிப்பெற்ற சந்தோஷத்தில் பாராக்கும் தெபொராளும் யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு ஒரு பாடலைப் பாடினார்கள். அதில், “கடற்கரையிலேயே ஆசேர் சோம்பலோடு உட்கார்ந்துவிட்டான்” என்ற வரியும் இருந்தது. இது அந்தக் கோத்திரத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்!—நியா. 5:17.
11. நாம் ஏன் பணம் பொருள் பின்னால் ஓடக் கூடாது?
11 நமக்கு என்ன பாடம்? நம்மிடம் இருக்கிற மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்ய வேண்டுமென்றால், பணம் பொருளுக்கோ சொகுசான வாழ்க்கைக்கோ அதிக முக்கியத்துவம் கொடுத்துவிடக் கூடாது. (நீதி. 18:11) பணத்தை, வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். (பிர. 7:12; எபி. 13:5) தேவையில்லாத விஷயங்களுக்குப் பின்னால் ஓடி யெகோவாவுடைய சேவையை இரண்டாவது இடத்துக்குத் தள்ளிவிடக் கூடாது. நம் நேரத்தையும் சக்தியையும் யெகோவாவின் சேவைக்காகப் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால், ரொம்ப சீக்கிரத்தில் அருமையான... பாதுகாப்பான... எதிர்காலத்தை அவர் நமக்குக் கொடுக்கப்போகிறார்.—சங். 4:8.
நப்தலி
12. நப்தலிக்கு யாக்கோபு சொன்ன வார்த்தைகள் எந்த விதத்தில் நிறைவேறியிருக்கலாம்? (ஆதியாகமம் 49:21) (பெட்டியையும் பாருங்கள்.)
12 ஆதியாகமம் 49:21-ஐ வாசியுங்கள். நப்தலியைப் பற்றிச் சொல்லும்போது, அவன் “இனிமையான வார்த்தைகளைப் பேசுவான்” என்று யாக்கோபு சொன்னார். இயேசு ஊழியம் செய்தபோது அவர் பேசிய விதத்தை யாக்கோபின் வார்த்தைகள் குறிக்கலாம். மிகச் சிறந்த போதகரான இயேசு, கப்பர்நகூம் பகுதியில்தான் நிறைய நேரம் செலவு செய்தார். நப்தலியுடைய பகுதியில்தான் கப்பர்நகூம் இருந்தது. சொல்லப்போனால், கப்பர்நகூமை இயேசுவின் ‘சொந்த ஊர்’ என்றே சொன்னார்கள். (மத். 4:13; 9:1; யோவா. 7:46) செபுலோன் மற்றும் நப்தலி மக்கள், “பெரிய வெளிச்சத்தை” பார்ப்பார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசனமாகச் சொன்னார். (ஏசா. 9:1, 2) அந்த வெளிச்சம் இயேசுதான். ஏனென்றால், அவர்தான் தன்னுடைய போதனைகள் மூலம், ‘எல்லா விதமான மனிதர்களுக்கும் ஒளி கொடுக்கிற அந்த உண்மையான ஒளியாக’ இருந்தார்.—யோவா. 1:9.
13. யெகோவாவைச் சந்தோஷப்படுத்துகிற மாதிரி நாம் எப்படிப் பேசலாம்?
13 நமக்கு என்ன பாடம்? நாம் என்ன பேசுகிறோம்... எப்படிப் பேசுகிறோம்... என்று யெகோவா பார்க்கிறார். “இனிமையான வார்த்தைகளை” நாம் பேசும்போது அவர் சந்தோஷப்படுகிறார். அதை எப்படிச் செய்யலாம்? முதலில், உண்மையைப் பேச வேண்டும். (சங். 15:1, 2) மற்றவர்களைக் குறை சொல்வதற்கு முந்திக்கொள்ளாமல், அவர்களைப் பாராட்டுவதற்கு முந்திக்கொள்ள வேண்டும். அதே மாதிரி, எல்லாவற்றிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டும் இருக்கக் கூடாது. அப்போதுதான், நாம் மற்றவர்களைப் பலப்படுத்துகிறவர்களாக இருப்போம். (எபே. 4:29) அதோடு, மக்களிடம் பேச்சை ஆரம்பிக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளவும் நாம் குறிக்கோள் வைக்கலாம். அப்படிச் செய்யும்போது, நல்ல செய்தியைச் சொல்வதற்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
யோசேப்பு
14. யோசேப்பைப் பற்றி யாக்கோபு சொன்னது எப்படி நிறைவேறியது? (ஆதியாகமம் 49:22, 26) (பெட்டியையும் பாருங்கள்.)
14 ஆதியாகமம் 49:22, 26-ஐ வாசியுங்கள். யோசேப்பை நினைத்து யாக்கோபு ரொம்ப பெருமைப்பட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் யெகோவா, யோசேப்பை அவருடைய ‘சகோதரர்களிலிருந்து விசேஷமாகத் தேர்ந்தெடுத்தார்.’ யோசேப்பை, “பழ மரத்தின் அடிக்கன்று” என்று யாக்கோபு வர்ணித்தார். அந்த மரம், யாக்கோபு. அந்த அடிக்கன்று, யோசேப்பு. யாக்கோபுடைய அன்பு மனைவியான ராகேலின் மூத்த மகன்தான் யோசேப்பு. லேயாளின் மூத்த மகனான ரூபனுக்குக் கிடைக்காமல் போன இரண்டு பாகம், யோசேப்புக்குக் கிடைக்கும் என்பதை யாக்கோபின் வார்த்தைகள் காட்டுகின்றன. (ஆதி. 48:5, 6; 1 நா. 5:1, 2) அவர் சொன்ன மாதிரியே யோசேப்புடைய மகன்களான எப்பிராயீமும் மனாசேயும் இஸ்ரவேல் தேசத்தில் தனித்தனி கோத்திரமாக ஆனார்கள். அவர்கள் இரண்டு பேருக்கும் தனித்தனியாகப் பங்கு கிடைத்தது.—ஆதி. 49:25; யோசு. 14:4.
15. தனக்கு அநியாயம் நடந்தபோது யோசேப்பு எப்படி நடந்துகொண்டார்?
15 “வில்வீரர்கள் அவனுக்கு எப்போதும் தொல்லை கொடுத்தார்கள். அவன்மேல் அம்புகளை எறிந்தார்கள். அவனைப் பகைத்துக்கொண்டே இருந்தார்கள்” என்று யாக்கோபு யோசேப்பைப் பற்றிச் சொன்னார். (ஆதி. 49:23) இந்த வில்வீரர்கள் யாரைக் குறிக்கிறது? ஒருகாலத்தில் யோசேப்புமேல் பொறாமைப்பட்டு அவரைப் பகைத்த அவருடைய சகோதரர்களைக் குறிக்கிறது. யோசேப்புக்கு நடந்த நிறைய அநியாயங்களுக்கு அவர்கள்தான் காரணம். ஆனால், யோசேப்பு எப்படி நடந்துகொண்டார்? அதைப் பற்றி யாக்கோபு இப்படிச் சொன்னார்: “[யோசேப்பு] வில்லைக் கையில் தயாராக வைத்திருந்தான். அவனுடைய கைகள் வலிமையுடனும் துடிப்புடனும் இருந்தன.” (ஆதி. 49:24) யோசேப்பு தன்னுடைய சகோதரர்கள்மேல் பகை, வெறுப்பு போன்ற அம்புகளை எய்தாரா? இல்லை! அவர்களை மன்னித்து, அன்பாக நடத்தினார். (ஆதி. 47:11, 12) யெகோவாமீதும் அவர் கோபத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. கஷ்டங்கள் வந்த சமயத்தில் அவர் யெகோவாவைத்தான் நம்பியிருந்தார். தனக்கு வந்த கஷ்டங்களை ஒரு நல்ல பயிற்சியாகப் பார்த்தார்; தன்னைப் புடமிடுவதற்கான, அதாவது நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்கான, வாய்ப்பாகப் பார்த்தார். (சங். 105:17-19) இப்படி அவர் நடந்துகொண்டதால், யெகோவாவால் யோசேப்பை ஒரு பெரிய அளவில் பயன்படுத்த முடிந்தது.
16. கஷ்டங்கள் வரும்போது நாம் எப்படி யோசேப்பு மாதிரி நடந்துகொள்ளலாம்?
16 நமக்கு என்ன பாடம்? கஷ்டங்கள் வரும்போது யெகோவாவையும் சகோதர சகோதரிகளையும் விட்டு நாம் தூரமாகப் போய்விடக் கூடாது. நாம் தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும். அப்போதுதான் நமக்குத் தேவையான பயிற்சியை யெகோவாவால் கொடுக்க முடியும். (எபி. 12:7, அடிக்குறிப்பு) அந்தப் பயிற்சி, நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வதற்கும், அவற்றை இன்னும் நன்றாகக் காட்டுவதற்கும் உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு இரக்கம், மன்னிப்பு போன்ற நல்ல குணங்களைக் காட்டுவதில் நாம் முன்னேற முடியும். (எபி. 12:11) நாம் சகித்திருந்தால், யோசேப்பை எப்படி யெகோவா ஆசீர்வதித்தாரோ அதே மாதிரி நம்மையும் ஆசீர்வதிப்பார்.
பென்யமீன்
17. பென்யமீனைப் பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? (ஆதியாகமம் 49:27) (பெட்டியையும் பாருங்கள்.)
17 ஆதியாகமம் 49:27-ஐ வாசியுங்கள். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள், சண்டை போடுவதில் ஓநாய் மாதிரி திறமைசாலிகளாக இருப்பார்கள் என்று யாக்கோபு சொன்னார். (நியா. 20:15, 16; 1 நா. 12:2) “காலையில்,” அதாவது இஸ்ரவேலர்களுடைய ஆட்சி காலத்தின் ஆரம்பத்தில், பென்யமீன் கோத்திரத்திலிருந்து வந்த சவுல் இஸ்ரவேலர்களின் முதல் ராஜாவாக ஆனார். அவர் பெலிஸ்தியர்களுக்கு எதிராகப் பயங்கரமாக சண்டை போட்டார். (1 சா. 9:15-17, 21) “சாயங்காலத்தில்,” அதாவது இஸ்ரவேலர்களுடைய சரித்திரத்தில் பல வருஷங்களுக்குப் பிறகு, பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த எஸ்தர் ராணியும் பிரதம மந்திரி மொர்தெகாயும் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றினார்கள். பெர்சிய ஆட்சியின் கீழ் இருந்த இஸ்ரவேலர்கள் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடாதபடி பாதுகாத்தார்கள்.—எஸ்தர் 2:5-7; 8:3; 10:3.
18. பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்களைப் போல் நாம் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம்?
18 நமக்கு என்ன பாடம்? பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் ராஜாவாக ஆனதைப் பார்த்து, அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பெருமைப்பட்டிருப்பார்கள்; அவர்களைப் பற்றிச் சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறியதைப் பார்த்து சந்தோஷப்பட்டிருப்பார்கள். ஆனால் யெகோவா, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த தாவீதை அடுத்த ராஜாவாக ஆக்கினார். இந்த மாற்றத்துக்கு பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் பிற்பாடு ஆதரவு கொடுத்தார்கள். (2 சா. 3:17-19) பல வருஷங்களுக்குப் பிறகு, 10 கோத்திரத்தார் யூதா கோத்திரத்துக்கு எதிராகக் கலகம் செய்தபோது, பென்யமீன் கோத்திரத்தார் யூதா கோத்திரத்துக்கு ஆதரவு கொடுத்தார்கள். யெகோவா நியமித்த ராஜாவுக்கு உண்மையாக இருந்தார்கள். (1 ரா. 11:31, 32; 12:19, 21) இன்று, தன்னுடைய மக்களை வழிநடத்த யெகோவா யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ அவர்களுக்கு நாமும் உண்மையாக ஆதரவு கொடுக்கலாம்.—1 தெ. 5:12.
19. மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் எப்படி நன்மை அடைகிறோம்?
19 மரணப் படுக்கையில் யாக்கோபு சொன்ன தீர்க்கதரிசனம் நம் எல்லாருக்குமே ரொம்ப பிரயோஜனமாக இருக்கிறது. அது எப்படி நிறைவேறியது என்பதைப் பார்த்தது, யெகோவா சொல்லியிருக்கிற தீர்க்கதரிசனங்கள்மேல் நமக்கு இருக்கிற விசுவாசத்தை அதிகமாக்குகிறது. யாக்கோபின் மகன்களுக்குக் கிடைத்த ஆசீர்வாதத்தைப் பார்க்கும்போது, நாம் எப்படி யெகோவாவைச் சந்தோஷப்படுத்தலாம் என்பதையும் புரிந்துகொள்கிறோம்.
பாட்டு 128 முடிவுவரை சகித்திருப்பாயே!
a ரூபன், சிமியோன், லேவி மற்றும் யூதாவை அவர்கள் பிறந்த வரிசைப்படி யாக்கோபு ஆசீர்வதித்தார். ஆனால், மற்ற மகன்களை ஆசீர்வதித்தபோது அவர் அப்படிச் செய்யவில்லை.