படிக்க டிப்ஸ்
இணைவசனங்களில் இருந்து நன்மையடையுங்கள்
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில் இருக்கும் இணைவசனங்கள் கூடுதல் விவரங்களைக் கொடுக்கின்றன; பைபிளில் இருக்கும் விஷயங்கள் எப்படி ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகிறது என்பதை அவை காட்டுகின்றன. இணைவசனங்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? வசனத்தில் இருக்கும் வார்த்தைகளுக்குப் பக்கத்தில், சின்னதாக ஒரு ஆங்கில எழுத்து இருக்கும். அதே ஆங்கில எழுத்தை, பக்கத்தின் ஓரத்தில் இருக்கும் பட்டியலில் கண்டுபிடியுங்கள். எழுத்துக்குப் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்கள்தான் இணைவசனங்கள். jw.org வெப்சைட்டில் அல்லது JW லைப்ரரியில், அந்த எழுத்தைத் தொட்டாலே போதும், இணைவசனங்கள் தெரியும்.
கீழே இருப்பது போன்ற விவரங்களை இணைவசனங்களை வைத்து தெரிந்துகொள்ளலாம்:
இணையான பதிவுகள்: அதே சம்பவம் பைபிளில் வேறு எங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டும். உதாரணத்துக்கு, 2 சாமுவேல் 24:1 மற்றும் 1 நாளாகமம் 21:1-ஐ பாருங்கள்.
மேற்கோள்கள்: ஒரு சொற்றொடர் அல்லது வாக்கியம் முதல்முதலில் எங்கே சொல்லப்பட்டது என்பதைக் காட்டும். உதாரணத்துக்கு, மத்தேயு 4:4 மற்றும் உபாகமம் 8:3-ஐ பாருங்கள்.
நிறைவேறிய தீர்க்கதரிசனங்கள்: தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் காட்டும். உதாரணத்துக்கு, மத்தேயு 21:5 மற்றும் சகரியா 9:9-ஐ பாருங்கள்.