உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஆகஸ்ட் பக். 31
  • வாசகர் கேட்கும் கேள்விகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • வாசகர் கேட்கும் கேள்விகள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • இதே தகவல்
  • சீக்கிரத்தில் யெகோவா எப்படி மக்களை நியாயந்தீர்ப்பார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஆகஸ்ட் பக். 31

வாசகர் கேட்கும் கேள்விகள்

நாம் இப்போது செய்யும் பிரசங்க வேலை எப்போது முடிவுக்கு வரும்?

“கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய இந்த நல்ல செய்தி உலகம் முழுவதும் இருக்கிற எல்லா தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; பின்பு முடிவு வரும்” என்று இயேசு சொன்னார். (மத். 24:14) இந்த வசனத்திலும், வசனங்கள் 6 மற்றும் 13-லும், “முடிவு” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை, டீலாஸ். இந்த வார்த்தை, அர்மகெதோனில் சாத்தானுடைய உலகத்துக்கு வரப்போகிற இறுதி முடிவைக் குறிக்கிறது. (வெளி. 16:14, 16) அப்படியென்றால், அந்த இறுதி முடிவுக்குச் சற்று முன்பு வரை, நாம் நல்ல செய்தியைத் தொடர்ந்து பிரசங்கிப்போம். இது நம் புரிந்துகொள்ளுதலில் வந்திருக்கும் ஒரு மாற்றம்.

நாம் முன்பு என்ன நினைத்தோம்? மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும்போது, அதாவது, மகா பாபிலோனுக்கு அழிவு வரும்போது, நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதை நிறுத்திவிடுவோம் என்று நினைத்தோம். (வெளி. 17:3, 5, 15, 16) இந்தச் சம்பவம், ‘யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தின்’ முடிவாக இருக்கும் என்று நம்பினோம். (ஏசா. 61:2) மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைக்கும் ஆட்கள், தாங்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதை மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்பே நிரூபித்திருப்பார்கள் என்றும் நினைத்தோம். இவர்களை, கி.மு. 607-ல் எருசலேமுக்கு வந்த அழிவில் இருந்து தப்பித்த யூதர்களோடு ஒப்பிட்டோம். அந்த யூதர்கள் ஒவ்வொருவரும் யெகோவாவை வணங்கியதாலும், அக்கிரமத்தை வெறுத்ததாலும், அழிவுக்கு முன்பே தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தைப் பெற்றவர்கள். (எசே. 5:11; 9:4) ஆனால், இப்படி ஒப்பிடுவது இனிமேலும் பொருந்தாது. ஏனென்றால், இது மத்தேயு 24:14-ல் இயேசு சொல்லியிருக்கும் விஷயத்தோடு ஒத்துப்போவதில்லை. இறுதி முடிவுக்குச் சற்று முன்புவரை, அதாவது அர்மகெதோனுக்குச் சற்று முன்புவரை, நல்ல செய்தியைக் கேட்டு மனம் மாறுவதற்கான வாய்ப்பு மக்களுக்கு இருக்கலாம் என்பதை இயேசுவின் வார்த்தைகள் காட்டுகின்றன.

மத்தேயு 24:14-ஐ நாம் புரிந்துகொண்ட விதத்தில் ஒரு மாற்றம் வந்திருப்பதால், வெளிப்படுத்துதல் 16:21-ல் சொல்லப்பட்டிருக்கும் ஆலங்கட்டிச் செய்திகளைப் புரிந்துகொண்ட விதத்திலும் இப்போது மாற்றம் தேவைப்படுகிறது. ஆராய்ந்து பார்த்ததில், இந்த இரண்டு வசனங்களும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போவது தெரிகிறது. எப்படியென்றால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்திக்கு மக்கள் எப்படிப் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்துதான், அது அவர்களுக்கு நல்ல செய்தியாக அமையுமா அல்லது ஆலங்கட்டிச் செய்தி போல இருக்குமா என்பது தெரியும். “மீட்பின் வழியில் போகிறவர்களுக்கு” அந்தச் செய்தி “வாழ்வின் வாசனையாக,” அதாவது நல்ல செய்தியாக, இருக்கிறது என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். கடவுளுடைய எதிரிகளுக்கு அது “மரண வாசனையாக,” அதாவது கெட்ட செய்தியாக, இருக்கிறது என்றும் சொன்னார். (2 கொ. 2:15, 16) நல்ல செய்தியை அவர்கள் வெறுப்பதற்கான காரணம்: அவர்கள் நேசிக்கும் இந்த உலகம் உண்மையிலேயே எப்படிப்பட்டது என்பதை அது வெட்ட வெளிச்சமாக்குகிறது. அதாவது, இந்த உலகம் அக்கிரமம் நிறைந்தது, சாத்தானால் ஆளப்படுகிறது, சீக்கிரம் அழியப்போகிறது என்பதை அம்பலப்படுத்துகிறது.—யோவா. 7:7; 1 யோ. 2:17; 5:19.

அடையாள அர்த்தமுள்ள இந்த ஆலங்கட்டி மழை “மிகக் கொடியதாக” இருக்கும். இது எதைக் காட்டுகிறது? மிகுந்த உபத்திரவத்தின் சமயத்தில் நாம் மக்களிடம் இன்னும் ரொம்ப வலிமையாகவும், ஒளிவுமறைவின்றி நேரடியாகவும் நல்ல செய்தியைச் சொல்வோம். சரித்திரம் காணாத அளவுக்கு யெகோவாவின் பெயர் மக்களிடம் அறிவிக்கப்படும். (எசே. 39:7) நறுமணத்தின் பக்கம் மக்கள் ஈர்க்கப்படுவதுபோல், மகா பாபிலோன் அழிக்கப்பட்ட பிறகு, அந்தச் சமயத்தில், நல்ல செய்தியின் பக்கம் சிலர் ஈர்க்கப்படுவார்களா? வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், பொய் மதத்துக்கு முடிவு வரும் என்று பல காலமாக யெகோவாவின் சாட்சிகள் அறிவித்து வந்தது, அப்போது ஒருவேளை அவர்களுடைய நினைவுக்கு வரலாம்.

இதே மாதிரி ஒரு விஷயம் அன்று எகிப்தில் நடந்தது. யெகோவா “எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் [தண்டித்த]” பிறகு, இஸ்ரவேலர்களாக இல்லாத “பலதரப்பட்ட ஜனங்களில் ஏராளமானோரும்” இஸ்ரவேலர்களோடு சேர்ந்துகொண்டார்கள். (யாத். 12:12, 37, 38) இந்த அன்னியர்கள், பத்து தண்டனைகளைப் பற்றி மோசே கொடுத்த எச்சரிப்பு நிறைவேறியதைப் பார்த்ததற்குப் பிறகு யெகோவாவின் பக்கம் வந்திருக்கலாம்.

மகா பாபிலோன் அழிந்த பிறகு யெகோவாவின் பக்கம் வருகிறவர்களுக்கு, பூமியில் அப்போது மீதியிருக்கும் கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு ஆதரவு கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும். (மத். 25:34-36, 40) அப்படி ஆதரவு கொடுத்து, செம்மறியாடாக நியாயந்தீர்க்கப்படுவதற்கான வாய்ப்பு அர்மகெதோனுக்குச் சற்று முன்பு முடிவுக்கு வந்துவிடும். அதாவது, பரலோக நம்பிக்கை உள்ளவர்கள் பரலோகத்துக்குப் போன பிறகு அது முடிவுக்கு வரும்.

இந்தப் புதிய புரிந்துகொள்ளுதல், யெகோவாவின் மகத்தான அன்பையும் இரக்கத்தையும் பெரியளவில் படம்பிடித்துக் காட்டுகிறது. “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்” என்பது எவ்வளவு உண்மை!—2 பே. 3:9.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்