வாழ்க்கை சரிதை
கூச்ச சுபாவம் என்ற கூட்டைவிட்டு மிஷனரி வானில்...
சின்ன வயதில், எனக்குப் பயங்கர கூச்ச சுபாவம் இருந்தது; மக்களைப் பார்த்தாலே பயமாக இருக்கும். காலங்கள் போகப் போக, மக்களை நேசிப்பதற்கும் ஒரு மிஷனரியாக ஆவதற்கும் யெகோவா எனக்கு உதவினார். எப்படித் தெரியுமா? ஆரம்பத்தில், என் அப்பா சொல்லிக்கொடுத்த நல்ல விஷயங்கள் மூலம் உதவினார். அடுத்து, டீனேஜ் வயதில் இருந்த ஒரு சகோதரியின் நல்ல உதாரணத்தின் மூலம் உதவினார். கடைசியாக, என் கணவர் சொன்ன அன்பான, ஞானமான வார்த்தைகள் மூலமாக உதவினார். என் வாழ்க்கைப் பயணத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.
1951-ல் ஆஸ்திரியாவில் இருக்கிற வியன்னாவில், ஒரு கத்தோலிக்க குடும்பத்தில் நான் பிறந்தேன். எனக்கு ரொம்ப கூச்ச சுபாவம். அவ்வளவாக யாரிடமும் பேச மாட்டேன். ஆனால், எனக்குக் கடவுள் நம்பிக்கை இருந்ததால் அவரிடம் அடிக்கடி ஜெபம் பண்ணுவேன். எனக்கு ஒன்பது வயது இருந்தபோது, யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து அப்பா பைபிள் படிக்க ஆரம்பித்தார். கொஞ்ச நாளில் அம்மாவும் படிக்க ஆரம்பித்தார்.
என் தங்கை எலிசபெத்தோடு (இடது)
வியன்னாவில் இருந்த டூப்லிங் சபைக்கு நாங்கள் போனோம். ஒரு குடும்பமாக, நிறைய விஷயங்களை நாங்கள் செய்தோம்—சேர்ந்து பைபிள் படித்தோம், கூட்டங்களுக்குப் போனோம், மாநாடுகளில் வாலண்டியர் சேவை செய்தோம். நான் சின்னப் பெண்ணாக இருந்தபோதே, யெகோவாவை நேசிக்க அப்பா உதவினார். சொல்லப்போனால், நானும் என் தங்கையும் பயனியர்களாக சேவை செய்ய வேண்டும் என்று அப்பா எப்போதும் ஜெபம் செய்வார். ஆனால், அந்த ஆசை அப்போது எனக்கு இல்லை.
முழுநேர சேவையை ஆரம்பித்தேன்
1965-ல், 14 வயதில் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். இருந்தாலும், ஊழியத்தில் முன்பின் தெரியாத ஆட்களிடம் பேசுவது எனக்குக் கஷ்டமாக இருந்தது. என்னையே நான் தாழ்வாக நினைத்தேன். என் வயதில் இருந்த மற்ற பிள்ளைகளுக்கு என்னைப் பிடிக்க வேண்டும் என்று ஏங்கினேன். அதனால், ஞானஸ்நானம் எடுத்த கொஞ்ச நாளிலேயே, சாட்சிகளாக இல்லாத நிறைய பேரோடு சேர்ந்து பழகினேன். அது எனக்குப் பிடித்திருந்தது. இருந்தாலும், ‘சத்தியத்தில் இல்லாதவர்களோடு நிறைய நேரம் செலவு செய்கிறேனே’ என்று நினைத்தபோது என் மனசாட்சி குத்தியது. என்னால் அவர்களை விட்டுவிட்டு வர முடியவில்லை. எனக்கு எது உதவியது தெரியுமா?
டாரத்தியிடமிருந்து (இடது) நிறைய கற்றுக்கொண்டேன்
அந்தச் சமயத்தில்தான், டாரத்தி எங்கள் சபைக்கு வந்தாள். அவளுக்கு அப்போது 16 வயது. வீட்டுக்கு வீடு ஊழியத்தை அவள் ஆர்வமாக செய்வாள். அவள் என்னைவிட சின்னப் பெண்தான். இருந்தாலும், ஊழியத்தில் படு சுறுசுறுப்பு. அவளைப் பார்த்தபோது எனக்குள்ளேயே இப்படிச் சொல்லிக்கொண்டேன்: ‘என் அப்பா-அம்மா யெகோவாவின் சாட்சிகள். ஆனால், டாரத்தியின் குடும்பத்தில் யாருமே சத்தியத்தில் இல்லை. அவளுடைய அம்மாவும் உடம்பு முடியாதவர். அப்படியிருந்தும், அவள் எப்போதுமே ஊழியத்துக்கு வந்துவிடுகிறாளே!’ அவளுடைய உதாரணம்தான் யெகோவாவுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசையைத் தூண்டியது. சீக்கிரத்திலேயே நானும் டாரத்தியும் சேர்ந்து பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். முதலில், துணைப் பயனியர் செய்தோம். அப்போதெல்லாம், அதை விடுமுறை பயனியர் என்று சொல்வார்கள். பிறகு, ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தோம். டாரத்தியின் ஆர்வம் என்னையும் தொற்றிக்கொண்டது. முதல் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு அவள்தான் எனக்கு உதவினாள். நாட்கள் போகப் போக மக்களிடம் பேசுவது எனக்குக் கொஞ்சம் சுலபம் ஆனது. வீட்டுக்கு வீடு ஊழியம் மற்றும் தெரு ஊழியம் செய்யும்போதும், மற்ற சந்தர்ப்பங்களில் மக்களிடம் பேசும்போதும் என்னுடைய பதட்டம் குறைந்தது.
நான் ஒழுங்கான பயனியராக ஆன முதல் வருஷத்தில், எங்கள் சபைக்கு ஹைன்ட்ஸ் என்ற ஒரு சகோதரர் வந்தார். அவரும் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர். கனடாவில் யெகோவாவின் சாட்சியாக இருந்த தன்னுடைய அண்ணனைப் பார்க்கப் போனபோது சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்டார். ஹைன்ட்ஸ், எங்கள் சபைக்கு விசேஷ பயனியராக வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்குப் பிடித்துவிட்டது. ஆனால் மிஷனரியாக ஆக வேண்டும் என்பது அவருடைய குறிக்கோள்; எனக்கு அந்த ஆசை சுத்தமாக இல்லை. அதனால், அவரை எனக்குப் பிடித்திருக்கிறது என்பதை ஆரம்பத்தில் சொல்லவில்லை. கொஞ்ச நாளுக்குப் பிறகு நானும் அவரும் டேட்டிங் பண்ண ஆரம்பித்தோம். பிறகு கல்யாணம் செய்துகொண்டோம். ஆஸ்திரியாவில், நாங்கள் இரண்டு பேரும் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்ய ஆரம்பித்தோம்.
மிஷனரி சேவை என்ற வானை நோக்கி...
ஒரு மிஷனரியாக ஆக வேண்டும் என்ற தன்னுடைய ஆசையைப் பற்றி ஹைன்ட்ஸ் அடிக்கடி என்னிடம் பேசுவார். அவர் என்னை வற்புறுத்தவில்லை என்றாலும், யோசிக்க வைக்கும் கேள்விகளைக் கேட்பார். உதாரணத்துக்கு, “நமக்குத்தான் பிள்ளைகள் இல்லையே, அதனால் யெகோவாவின் சேவையில் இன்னும் நிறைய செய்யலாமே” என்று கேட்பார். ஆனால் எனக்குத்தான் கூச்ச சுபாவம் ஆயிற்றே! மிஷனரியாக சேவை செய்வதைப் பற்றி நினைக்கும்போதே பயமாக இருக்கும். நான் பயனியராக இருந்தது உண்மைதான்; இருந்தாலும், மிஷனரி சேவை எனக்கு மலை மாதிரி தெரிந்தது. ஹைன்ட்ஸ் ரொம்ப பொறுமையாக எனக்கு உதவினார். அதைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டே இருந்தார். நான் என்னைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பதைவிட, மக்கள்மேல் எப்படி அக்கறை காட்டலாம் என்பதைப் பற்றி அதிகமாக யோசிக்கச் சொன்னார். அவர் கொடுத்த இந்த ஆலோசனை எனக்கு உதவியாக இருந்தது.
யுகோஸ்லாவிய மொழி சபையில் காவற்கோபுர படிப்பை ஹைன்ட்ஸ் நடத்துகிறார். ஆஸ்திரியா, 1974
கொஞ்சம் கொஞ்சமாக மிஷனரி சேவைக்கான ஆசை எனக்கும் வந்தது. அதனால், கிலியட் பள்ளிக்கு விண்ணப்பம் போட்டோம். முதலில் நாங்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டால் உதவியாக இருக்கும் என்று கிளை அலுவலக ஊழியர் ஆலோசனை சொன்னார். அவர் சொன்ன மாதிரியே ஆங்கிலத்தை நன்றாகக் கற்றுக்கொள்ள முயற்சி எடுத்தோம். மூன்று வருஷங்களுக்குப் பிறகு, நாங்கள் கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒரு நியமிப்பு கிடைத்தது. ஆஸ்திரியாவில், சால்ஸ்பர்க் என்ற இடத்தில் இருக்கிற யுகோஸ்லாவியா சபைக்கு எங்களை நியமித்தார்கள். அங்கே நாங்கள் ஏழு வருஷம் சேவை செய்தோம். அதில் ஒரு வருஷம் வட்டார சேவை செய்தோம். அங்கே பேசப்பட்ட செர்பிய-குரோஷிய மொழி கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும், எங்களுக்கு நிறைய பைபிள் படிப்புகள் கிடைத்தன.
பல்கேரியா நாட்டில் பிரசங்க வேலைக்குத் தடை இருந்தது. அதனால், 1979-ல் அமைப்பு எங்களுக்கு ஒரு நியமிப்பு கொடுத்தது. சகோதரர்கள் அந்த நாட்டுக்கு எங்களை விடுமுறைக்குப் போகிற மாதிரி போகச் சொன்னார்கள். பிரசங்க வேலைக்காக அல்ல, அந்த நாட்டில் இருந்த ஐந்து சகோதரிகளுக்கு ரகசியமாக பிரசுரங்களைக் கொடுப்பதற்காக! இந்த நியமிப்பை நினைத்தபோதே கை-கால் எல்லாம் உதறியது. ஆனால், யெகோவா எனக்கு உதவி செய்தார். அந்தப் பிரசுரங்கள் குட்டி குட்டியாக அச்சடிக்கப்பட்டிருந்தன. அந்தச் சகோதரிகள், நாட்டின் தலைநகரான சோஃபியாவில் இருந்தார்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழ்நிலையில் இருந்தார்கள். ஆனாலும், அவர்கள் தைரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தார்கள். அதைப் பார்த்தபோது, யெகோவாவின் அமைப்பு நமக்கு என்ன வேலை கொடுத்தாலும் அதைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டும் என்ற மனஉறுதி எனக்குக் கிடைத்தது.
இதற்கு இடையில், நாங்கள் கிலியட் பள்ளிக்கு மறுபடியும் விண்ணப்பம் போட்டோம். இந்த முறை எங்களுக்குக் கிடைத்துவிட்டது! அமெரிக்காவில் நடக்கிற ஆங்கிலப் பள்ளியில் கலந்துகொள்வோம் என்று நினைத்தோம். ஆனால், நவம்பர் 1981-ல் ஜெர்மனியிலேயே கிலியட் பள்ளியின் வகுப்புகள் நடக்க ஆரம்பித்தன. அதில் எங்களைக் கலந்துகொள்ளச் சொன்னார்கள். ஜெர்மன் மொழியிலேயே வகுப்புகள் நடந்ததால் எனக்குச் சுலபமாக இருந்தது. அடுத்தது எங்களுக்கு எங்கே நியமிப்பு தெரியுமா?
யுத்த பூமியில் சேவை
எங்களுக்கு கென்யாவில் நியமிப்பு கிடைத்தது. ஆனால், கென்யா நாட்டுக் கிளை அலுவலகம் எங்களைப் பக்கத்து நாட்டில், அதாவது உகாண்டாவில், சேவை செய்யச் சொன்னது. பத்து வருஷங்களுக்கு முன்பு, ராணுவத் தளபதியான இடி அமீன் தலைமையில் புரட்சி நடந்தது. அதில், உகாண்டா அரசாங்கம் கவிழ்ந்தது. அடுத்து வந்த வருஷங்களில், இடி அமீனின் சர்வாதிகார ஆட்சி நடந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். லட்சக்கணக்கானோர் சொல்ல முடியாத சித்திரவதையை அனுபவித்தார்கள். 1979-ல் அவனுடைய சர்வாதிகார ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இவ்வளவு பயங்கரமான ஒரு நாட்டுக்குச் சேவை செய்யப் போவதை நினைத்தபோது எனக்கு வெலவெலத்துப் போனது. ஆனால், யெகோவாவை முழுமையாக நம்பியிருக்க வேண்டும் என்று கிலியட் பள்ளியில் கற்றுக்கொண்டோம். அதனால், அந்த நியமிப்புக்கு ‘ஓகே’ சொன்னோம்.
உகாண்டா ஒரு கலவர பூமியாக இருந்தது. அங்கே இருந்த சூழ்நிலையைப் பற்றி ஹைன்ட்ஸ் 2010 இயர்புக்கில் இப்படிச் சொல்லியிருந்தார்: “தண்ணீர் சப்ளை, தகவல்தொடர்பு போன்ற வசதிகள் துண்டிக்கப்பட்டிருந்தன. . . . முக்கியமாக இரவு வேளைகளில், துப்பாக்கிச் சூடும் திருட்டும் சர்வசாதாரணமாக நடந்தன. . . . எல்லாரும் வீட்டிற்குள்ளேயே இருந்தார்கள்; அதுவும், ‘கொள்ளைக்காரர்கள் யாரும் வந்துவிடக் கூடாதே’ என்று நினைத்தபடி, அதற்காக அடிக்கடி பிரார்த்தனையும் செய்துகொண்டு இருந்தார்கள்.” இவ்வளவு மோசமான சூழ்நிலையிலும், சகோதரர்கள் அங்கே யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்துகொண்டிருந்தார்கள்.
வாயிஸ்வா குடும்பத்தாருடைய வீட்டில் சமையல் செய்தபோது
1982-ல் ஹைன்ட்ஸும் நானும் உகாண்டாவின் தலைநகரமான கம்பாலாவுக்கு வந்தோம். முதல் ஐந்து மாதங்களுக்கு, நாங்கள் சாம் மற்றும் கிறிஸ்டினா வாயிஸ்வா என்ற தம்பதியின் வீட்டில் தங்கியிருந்தோம். அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். அதே வீட்டில் அவர்களுடைய நான்கு சொந்தக்காரர்களும் தங்கியிருந்தார்கள். நிறைய சமயங்களில், ஒரு வேளை சாப்பாடுதான் அவர்களுக்கு இருக்கும். இந்தச் சூழ்நிலையில் அவர்கள் எங்களையும் உபசரித்தார்கள். எவ்வளவு பெரிய மனசு! வாயிஸ்வா குடும்பத்தோடு நாங்கள் தங்கியிருந்த சமயத்தில் வாழ்க்கைக்குத் தேவையான நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அது, எங்களுடைய மிஷனரி சேவைக்குப் பிரயோஜனமாக இருந்தது. உதாரணத்துக்கு, தண்ணீரை எப்படிச் சேமிப்பது என்று கற்றுக்கொண்டோம். ரொம்ப கம்மியான தண்ணீரைப் பயன்படுத்தி குளிப்போம். குளித்த தண்ணீரை வீணடிக்க மாட்டோம். அதை எடுத்து வைத்து கழிவறையில் ஊற்றுவோம். 1983-ல் கம்பாலாவில் இருக்கிற பாதுகாப்பான ஒரு இடத்தில் எங்களுக்கு வீடு கிடைத்தது. அங்கே குடிமாறினோம்.
நானும் என் கணவரும் ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்தோம். ஒரு மாதம், நாங்கள் 4,000 பத்திரிகைகள் கொடுத்தோம். அது எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அங்கே இருந்த மக்கள் சத்தியத்தைக் கேட்டு சந்தோஷப்பட்டார்கள். அவர்களுக்குக் கடவுள்மேல் மரியாதை இருந்தது. பைபிளைப் பற்றிப் பேசுவதுகூட அவர்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஹைன்ட்ஸுக்கும் எனக்கும் ஆளுக்கு 10 முதல் 15 பைபிள் படிப்புகள் இருந்தன. எங்களிடம் பைபிள் படித்தவர்களிடமிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம். ஒவ்வொரு வாரமும் கூட்டங்களுக்கு அவர்கள் நடந்தே வருவார்கள், திரும்பவும் நடந்தே போவார்கள். அதை அவர்கள் கஷ்டமாக நினைத்ததே கிடையாது. எப்போதுமே முகத்தில் ஒரு புன்னகை இருக்கும். அவர்களுடைய ஆர்வத்தையும் உற்சாகத்தையும் பார்த்து நாங்கள் கற்றுக்கொண்டோம்.
1985 மற்றும் 1986-ல் உகாண்டாவில் மறுபடியுமாக இரண்டு போர்கள் வெடித்தன. அந்தச் சமயத்தில், சின்னப் பசங்களெல்லாம் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளைத் தூக்கிக்கொண்டுச் சுற்றினார்கள். போகிற வருகிற எல்லாரையும் சோதனை செய்துகொண்டும், கண்காணித்துக்கொண்டும் இருந்தார்கள். அந்தச் சமயத்தில், பதட்டம் இல்லாமல் நிதானமாக இருப்பதற்கும் ஞானமாக நடப்பதற்கும் யெகோவாவிடம் உதவி கேட்டோம். ஆர்வம் உள்ளவர்களைக் கண்டுபிடிக்கவும் உதவி கேட்டோம். யெகோவா எங்கள் ஜெபங்களுக்குப் பதில் கொடுத்தார். நிறைய சமயங்களில், ஆர்வமுள்ள ஒருவரைக் கண்டுபிடித்த உடனே எங்கள் பயம் பறந்துவிடும், சந்தோஷமாகிவிடுவோம்.
ஹைன்ட்ஸும் நானும் டாட்டியானாவுடன் (நடுவில்)
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடமும் நாங்கள் சாட்சி கொடுத்தோம். டாட்டர்ஸ்தானில் (மதிய ரஷ்யா) இருந்து வந்த ஒரு தம்பதியோடு சேர்ந்து பைபிள் படிப்பு படித்தோம். அந்தக் கணவர் பெயர் மூரட், மனைவி பெயர் தில்பார் இபாதுலின். மூரட் ஒரு டாக்டர். அந்தத் தம்பதி சத்தியத்துக்கு வந்தார்கள். இன்றுவரை யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்கிறார்கள். பிறகு, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த டாட்டியானா விலேஸ்கா என்ற பெண்ணுக்கு நாங்கள் சத்தியம் சொன்னோம். அந்தச் சமயத்தில், அவர் தற்கொலை செய்துகொள்வதைப் பற்றி யோசித்துக்கொண்டு இருந்தார். ஆனால், சத்தியத்தை ஏற்றுக்கொண்டு அவர் ஞானஸ்நானம் எடுத்தார். பிறகு, அவர் உக்ரைனுக்கே திரும்பிப் போனார். நம் பிரசுரங்களை மொழிபெயர்க்கிற வேலையைக்கூட செய்தார்.a
புதிய நியமிப்பு
1991-ல், நானும் ஹைன்ட்ஸும் ஆஸ்திரியா நாட்டுக்கு விடுமுறைக்குப் போயிருந்தோம். அப்போது, அங்கிருந்த கிளை அலுவலகம் எங்களுக்குப் புதிய நியமிப்பு ஒன்றைக் கொடுத்தது. சகோதரர்கள் எங்களை பல்கேரியாவுக்குப் போகச் சொன்னார்கள். கிழக்கு ஐரோப்பாவில் இருந்த கம்யூனிச ஆட்சி கவிழ்ந்த பிறகு யெகோவாவின் சாட்சிகளுக்கு பல்கேரியாவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நானும் என் கணவரும் முன்பு அந்த நாட்டுக்குப் பத்திரிகைகளை ரகசியமாகக் கொண்டுபோயிருந்தோம். ஆனால், இப்போது அங்கே ஊழியம் செய்வதற்காகப் போகப் போகிறோம்.
எங்களை மறுபடியும் உகாண்டாவுக்குப் போக வேண்டாம் என்றும், நேராகவே பல்கேரியாவுக்குப் போங்கள் என்றும் சொல்லிவிட்டார்கள். அதனால், உகாண்டாவில் இருக்கிற எங்களுடைய மிஷனரி இல்லத்துக்குப் போய் பொருட்களை எடுத்துவர முடியவில்லை. அங்கிருந்த நண்பர்களுக்கும் ‘போய்விட்டு வருகிறோம்’ என்றுகூட சொல்ல முடியவில்லை. நாங்கள் நேராக ஜெர்மனியில் இருந்த பெத்தேலுக்குப் போனோம். அங்கிருந்து காரில் பல்கேரியாவுக்குப் போய்ச் சேர்ந்தோம். சோஃபியா நகரத்தில் இருந்த ஒரு சின்னத் தொகுதிக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். சுமார் 20 பிரஸ்தாபிகள்தான் அங்கே இருந்தார்கள்.
பல்கேரியாவில் புதுப் புது பிரச்சினைகள் வந்தன. முதலில், அந்த ஊர் மொழி எங்களுக்குத் தெரியவில்லை. அந்த மொழியில் இருந்ததே இரண்டு பிரசுரங்கள்தான். ஒன்று, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம். இரண்டாவது, என்னுடைய பைபிள் கதை புத்தகம். அதனால், பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பது கஷ்டமாக இருந்தது. இந்தப் பிரச்சினைகள் இருந்தாலும், அங்கே இருந்த அந்தச் சின்னத் தொகுதி ரொம்ப சுறுசுறுப்பாக ஊழியம் செய்தது. இதெல்லாம், அங்கிருந்த ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் கண்ணை உறுத்த ஆரம்பித்தது. அப்போதுதான் பிரச்சினை வெடித்தது.
1994-ல் யெகோவாவின் சாட்சிகளுக்குக் கொடுக்கப்பட்ட சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அந்த அரசாங்கம் ரத்து செய்தது. அதனால், நாம் ஏதோ ஆபத்தான மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுபோல் மக்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். சில சகோதரர்களைக் கைது செய்தார்கள். மீடியா நம்மைப் பற்றித் தப்புத் தப்பாக வதந்திகளைப் பரப்ப ஆரம்பித்தது. ‘யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய சொந்தப் பிள்ளைகளையே கொன்றுவிடுகிறார்கள்... மற்ற சாட்சிகளைக்கூட தற்கொலை செய்யத் தூண்டுகிறார்கள்’ என்றெல்லாம் கதை கட்டியது. இந்தச் சூழ்நிலைமையில் ஊழியம் செய்வது எனக்கும் என் கணவருக்கும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. ஊழியம் செய்தபோது, மக்கள் எங்களிடம் அடிக்கடி வெறித்தனமாக நடந்துகொண்டார்கள். எங்களைப் பார்த்து காட்டுக் கத்து கத்துவார்கள். போலீஸைக் கூப்பிடுவார்கள். கையில் கிடைத்ததையெல்லாம் எடுத்து தூக்கி அடிப்பார்கள். பல்கேரியாவுக்குள் பிரசுரங்களைக்கூட கொண்டுவர முடியவில்லை. கூட்டங்களை நடத்துவதற்கு மன்றங்களை வாடகைக்கு எடுப்பதும் கஷ்டமாக இருந்தது. ஒருதடவை, மாநாடு நடந்துகொண்டு இருக்கும்போது போலீஸ் உள்ளே புகுந்து எல்லாவற்றையும் தடுத்து நிறுத்திவிட்டார்கள். இந்தளவு வெறுப்பை நாங்கள் சந்தித்ததே இல்லை; இது எங்களுக்கு ரொம்ப புதிதாக இருந்தது. உகாண்டாவில் நாங்கள் செய்த ஊழியத்துக்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம்! அங்கே மக்கள் ரொம்ப அன்பாகப் பேசுவார்கள். இங்கே? நிலைமையே தலைகீழ்! சோர்ந்துபோகாமல் சந்தோஷமாக ஊழியம் செய்ய எது எங்களுக்கு உதவியது என்று நினைக்கிறீர்கள்?
அங்கே இருந்த சகோதர சகோதரிகளுடன் நேரம் செலவு செய்தது எங்களுக்கு உதவியது. சத்தியத்தைக் கண்டுபிடித்ததை நினைத்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். நாங்கள் அவர்களோடு இருந்ததை நினைத்தும் சந்தோஷப்பட்டார்கள். நாங்கள் எல்லாருமே நெருங்கி இருந்தோம். ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருந்தோம். இந்த அனுபவம், மக்கள்மேல் அக்கறை இருந்தால், எவ்வளவு கஷ்டமான நியமிப்பையும் சந்தோஷமாக செய்ய முடியும் என்பதை எங்களுக்குக் கற்றுக்கொடுத்தது.
பல்கேரியா கிளை அலுவலகத்தில், 2007
காலங்கள் போகப் போக நிலைமை மாறியது. 1998-ல் யெகோவாவின் சாட்சிகளுக்கு மறுபடியும் சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்தது. பிறகு, பல்கேரிய மொழியில் நிறைய பிரசுரங்கள் கிடைக்க ஆரம்பித்தது. 2004-ல் ஒரு புதிய கிளை அலுவலகம் கட்டி, அதை அர்ப்பணித்தார்கள். இன்று, பல்கேரியாவில் 57 சபைகள் இருக்கின்றன. 2,953 பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள். போன ஊழிய ஆண்டில், நினைவு நாளுக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 6,475. ஒரு காலத்தில், சோஃபியா நகரத்தில் வெறும் ஐந்து சகோதரிகள்தான் இருந்தார்கள். இப்போது அங்கே ஒன்பது சபைகள் இருக்கின்றன! “கொஞ்சம் பேர் ஆயிரம் பேராக” ஆனதை எங்கள் கண்ணால் பார்த்திருக்கிறோம்.—ஏசா. 60:22.
சொந்தப் பிரச்சினைகளோடு போராட்டம்
எனக்கு ஏகப்பட்ட உடல்நல பிரச்சினைகள் வந்தது. எனக்கு அடிக்கடி உடம்பில் கட்டிகள் வந்தது. மூளையிலும் ஒரு கட்டி வந்தது. அதைச் சுருங்க வைக்க கதிர்வீச்சு சிகிச்சை (Radiation Therapy) கொடுத்தார்கள். பிறகு, சிகிச்சைக்காக இந்தியா போனேன். அந்தக் கட்டியை எடுக்க 12 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. பிறகு, இந்திய கிளை அலுவலகத்தில்தான் தங்கியிருந்தோம். ஓரளவு குணமான பிறகு, எங்களுடைய நியமிப்பைச் செய்வதற்காக மறுபடியும் பல்கேரியாவுக்கு வந்தோம்.
ஹைன்ட்ஸுக்கு, ஹன்டிங்டன் நோய் என்ற அரிய வகை பரம்பரை நோய் வந்தது. அதனால், அவர் நடப்பதற்கும் பேசுவதற்கும் கஷ்டப்பட்டார். அவருடைய அசைவுகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. நோய் முற்றிக்கொண்டே போனது. நாட்கள் போகப் போக, அவர் என்னையே சார்ந்திருக்கிற மாதிரி ஆகிவிட்டது. சில சமயத்தில், நான் ரொம்ப சோர்ந்து போய்விடுவேன். அவரைக் கவனித்துக்கொள்ள முடியாமல் போய்விடுவதால், எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். அப்போதுதான், பாபி என்ற ஒரு இளம் சகோதரர் எங்களுக்கு உதவி செய்தார். ஹைன்ட்ஸை தவறாமல் ஊழியத்துக்குக் கூட்டிக்கொண்டு போவார். அவர் பேச முடியாமல் கஷ்டப்படுவதை, அல்லது, அவருடைய அசைவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதைப் பார்த்து பாபி சங்கடப்படவே மாட்டார். பாபி எங்களுக்கு எப்போதுமே துணையாக இருந்தார். நான் ஹைன்ட்ஸுக்கு உதவ முடியாத சமயத்தில், பாபி அவருக்கு உதவினார். எங்களுக்குக் குழந்தைகள் இல்லாததால், பாபியை யெகோவா எங்களுக்குக் கொடுத்த மாதிரி இருந்தது.—மாற். 10:29, 30.
பிறகு, ஹைன்ட்ஸுக்குக் கேன்சர் வந்துவிட்டது. 2015-ல் அவர் இறந்துவிட்டார். அவர் இல்லாமல் நான் தவித்தேன். அவர் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என் ஞாபகத்தில் அவர் உயிரோடு இருந்தார். (லூக். 20:38) அவர் சொன்ன அன்பான வார்த்தைகளும், நல்ல ஆலோசனைகளும் என் மனதில் பசுமையாக இருக்கிறது. அதனால்தான், என்னால் ஒவ்வொரு நாளையும் ஓட்ட முடிகிறது. நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ததை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன்.
யெகோவா தந்த உதவிக்கு நன்றியோடு இருக்கிறேன்
என்னுடைய எல்லா கஷ்டங்களிலும் யெகோவா எனக்குத் துணையாக இருந்திருக்கிறார். கூச்சம் என்ற கூட்டில் இருந்து வெளியே வர அவர் எனக்கு உதவி இருக்கிறார். மக்களை நேசிக்கிற ஒரு மிஷனரியாக ஆவதற்கும் உதவி இருக்கிறார். (2 தீ. 1:7) இன்று நானும் என் தங்கையும் முழுநேர சேவையில் இருக்கிறோம். அதற்கு நாங்கள் யெகோவாவுக்குத்தான் நன்றி சொல்கிறோம். அவளும் அவளுடைய கணவரும் செர்பிய மொழி பேசும் பகுதியில் வட்டார சேவையில் இருக்கிறார்கள். பல வருஷங்களுக்கு முன்பு எங்கள் அப்பா செய்த ஜெபத்துக்குப் பதில் கிடைத்திருக்கிறது.
நான் ஒவ்வொரு தடவை பைபிள் படிக்கும்போதும் என் மனதுக்கு அமைதி கிடைக்கிறது. கஷ்டமான சமயங்களில் நான் இயேசு மாதிரியே, இன்னும் “அதிக உருக்கமாக” ஜெபம் செய்யக் கற்றுக்கொண்டேன். (லூக். 22:44) என்னுடைய ஜெபங்களுக்கு யெகோவா பதில் கொடுக்கிற ஒரு வழி என்ன தெரியுமா? சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் காட்டுகிற அன்பு, அக்கறை மூலமாகத்தான். நான் இப்போது சோஃபியா நகரத்தில் இருக்கிற நடேஷ்டா என்ற சபையில் இருக்கிறேன். தங்களோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய சகோதர சகோதரிகள் என்னை அடிக்கடி கூப்பிடுவார்கள். என்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் எப்போதுமே சொல்வார்கள். இதெல்லாம் என்னுடைய மனதை சந்தோஷத்தால் நிரப்புகிறது.
நான் அடிக்கடி உயிர்த்தெழுதலைப் பற்றி ஆழமாக யோசிப்பேன். கற்பனையில் இப்படி ஓடும்: ‘என் வீட்டுக்கு முன்பு அப்பா அம்மா நிற்கிறார்கள். கல்யாணம் ஆன அன்று எத்தனை அழகாக இருந்தார்களோ, அப்படியே இருக்கிறார்கள். தங்கை விருந்து செய்கிறாள். என் கணவர் ஹைன்ட்ஸ், தன்னுடைய குதிரைக்குப் பக்கத்தில் நிற்கிறார்!’ மனதில் ஓடும் இந்தக் காட்சிகள்தான் சோகத்தை மறந்து, யெகோவாவுக்கு நன்றியோடு இருக்க உதவுகிறது.
நான் பயணம் செய்த பாதையை திரும்பிப் பார்க்கும்போதும், எதிர்காலத்தைப் பற்றி நினைக்கும்போதும், சங்கீதம் 27:13, 14-ல் தாவீது சொன்னதைப் போலத்தான் எனக்கும் தோன்றுகிறது: “என் வாழ்நாளெல்லாம் யெகோவா எனக்கு நல்லது செய்வார் என்ற விசுவாசம் மட்டும் இல்லையென்றால், என் கதி என்ன ஆகியிருக்குமோ? யெகோவாமேல் நம்பிக்கையாக இரு. தைரியமாக இரு, நெஞ்சத்தில் உறுதியோடு இரு. எப்போதும் யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.”
a டாட்டியானா விலேஸ்காவின் வாழ்க்கை சரிதையை, ஜனவரி 8, 2001, விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 20-24-ல் பாருங்கள்.