உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஆகஸ்ட் பக். 20-25
  • கெட்ட ஆசைகளை உங்களால் ஜெயிக்க முடியும்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கெட்ட ஆசைகளை உங்களால் ஜெயிக்க முடியும்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நாம் எப்படி உணர வேண்டும் என்று ‘பொல்லாதவன்’ நினைக்கிறான்?
  • பாவ இயல்பு நம்மை எப்படி யோசிக்க வைக்கும்?
  • கெட்ட ஆசைகளுக்கு இணங்காமல் இருப்பது எப்படி?
  • “எப்போதும் சோதித்துப் பாருங்கள்”
  • சோதனைக்கு இணங்கிவிடாதபடி ஜாக்கிரதையாக இருங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • ஞானஸ்நானத்துக்குப் பிறகும் இயேசுவைப் பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • பாவத்திலிருந்து மனிதர்களை மீட்க யெகோவா என்ன செய்திருக்கிறார்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஆகஸ்ட் பக். 20-25

படிப்புக் கட்டுரை 35

பாட்டு 121 சுயக்கட்டுப்பாடு அவசியம்

கெட்ட ஆசைகளை உங்களால் ஜெயிக்க முடியும்!

“உங்களுடைய உடலின் ஆசைகளுக்குப் பாவம் உங்களை அடிமைப்படுத்தி, சாவுக்குரிய உங்கள் உடலில் தொடர்ந்து ராஜாவாக ஆட்சி செய்ய அனுமதிக்காதீர்கள்.”—ரோ. 6:12.

என்ன கற்றுக்கொள்வோம்?

மனதில் கெட்ட ஆசைகள் வருவதை நினைத்து சோர்ந்துவிடாமல் இருப்பது எப்படி என்பதையும், அவற்றை எதிர்த்து எப்படி ஜெயிக்கலாம் என்பதையும் கற்றுக்கொள்வோம்.

1. பாவ இயல்புள்ளவர்களாக நாம் எல்லாருமே எதை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறோம்?

யெகோவாவுக்குப் பிடிக்காத விஷயத்தைச் செய்யத் தூண்டும் கெட்ட ஆசை உங்களுக்கு எப்போதாவது வந்திருக்கிறதா? அதுவும் அந்த ஆசை தீவிரமாக இருந்திருகிறதா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! ‘ச்சே, இந்த மாதிரி வேறு யாருக்குமே வராது. எனக்குத்தான் வருது’ என்று நினைக்காதீர்கள். “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 10:13) நிறைய பேர் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தில் ஜெயிக்க யெகோவா கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்வார்.

2. சில கிறிஸ்தவர்களும் பைபிள் மாணவர்களும் என்ன மாதிரி சோதனைகளோடு போராடிக்கொண்டு இருக்கலாம்? (படங்களையும் பாருங்கள்.)

2 “ஒவ்வொருவனும் தன்னுடைய ஆசையால் கவர்ந்திழுக்கப்பட்டு, சிக்க வைக்கப்பட்டு, சோதிக்கப்படுகிறான்” என்று பைபிள் சொல்கிறது. (யாக். 1:14) இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒருவரை, ஒரு விஷயம் கவர்ந்திழுக்கலாம். இன்னொருவரை, வேறொரு விஷயம் கவர்ந்திழுக்கலாம். உதாரணத்துக்கு, சில கிறிஸ்தவர்களுக்கு எதிர்பாலினத்தைச் சேர்ந்தவர்களோடு ஒழுக்கக்கேட்டில் ஈடுபடும் ஆசை வரலாம். வேறு சிலருக்கு, ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் ஆசை வரலாம். ஆபாசத்தைப் பார்க்கும் பழக்கத்தை விட்டுவிட்டு வந்த சிலருக்கு, அதை மறுபடியும் பார்க்க வேண்டும் என்ற ஆசை தீவிரமாக வரலாம். போதைப் பொருள்களுக்கும் மதுவுக்கும் ஒருகாலத்தில் அடிமையாக இருந்தவர்களுக்கும், போதைப் பொருளை எடுக்க வேண்டும் என்ற எண்ணமோ, அதிக மதுபானம் குடிக்க வேண்டும் என்ற எண்ணமோ வரலாம். இந்த மாதிரி எத்தனையோ விஷயங்களோடு சில கிறிஸ்தவர்களும் பைபிள் மாணவர்களும் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். “நல்லது செய்ய விரும்புகிற எனக்குள் கெட்டது இருக்கிறது” என்று சொன்ன அப்போஸ்தலன் பவுல் மாதிரி, ஏதாவது ஒரு கட்டத்தில் நமக்குக்கூட தோன்றலாம்.—ரோ. 7:21.

கெட்ட ஆசைகள் திடீரென்று வரலாம்—எந்த நேரத்தில் வேண்டுமானாலும், எந்த இடத்தில் வேண்டுமானாலும்! (பாரா 2)c


3. ஒரு நபருக்கு தொடர்ந்து கெட்ட ஆசைகள் வந்துகொண்டே இருந்தால், அவர் எப்படி யோசிக்க ஆரம்பித்துவிடலாம்?

3 ஒரு கெட்ட ஆசை தொடர்ந்து வந்துகொண்டே இருப்பதால், அதை எதிர்த்துப் போராட சக்தியில்லை என்று உங்களுக்குத் தோன்றலாம். அதோடு, கெட்ட ஆசை வருகிறது என்ற ஒரே காரணத்தால் ‘யெகோவா இனி என்னை நேசிக்க மாட்டார்’ என்று நீங்கள் நம்பிக்கை இழந்துபோகவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்த இரண்டு எண்ணங்களுமே உண்மை கிடையாது. ஏன் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம். அதற்கு, இரண்டு கேள்விகளுக்கான பதிலைப் பார்க்கலாம். முதலில், இந்த எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன? இரண்டாவது, தவறான ஆசைகளை நாம் எப்படி ஜெயிக்கலாம்?

நாம் எப்படி உணர வேண்டும் என்று ‘பொல்லாதவன்’ நினைக்கிறான்?

4. (அ) சோதனைகள் வரும்போது நாம் எப்படி நினைக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான்? (ஆ) சோதனைகளை எதிர்த்துப் போராட நம்மால் முடியும் என்று ஏன் சொல்கிறோம்?

4 சோதனைகளை ஜெயிக்கும் அளவுக்கு நமக்குச் சக்தியில்லை என்ற எண்ணத்தை சாத்தான் நம் மனதில் விதைக்கப் பார்க்கிறான். சாத்தான் சோதனைகளைக் கொடுப்பான் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அதனால்தான், “சோதனைக்கு இணங்கிவிடாமல் இருக்க எங்களுக்கு உதவி செய்யுங்கள், பொல்லாதவனிடமிருந்து எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று ஜெபம் செய்ய சொல்லிக் கொடுத்தார். (மத். 6:13) கெட்ட ஆசை வரும்போது, மக்கள் அதற்குத்தான் அடிபணிவார்களே தவிர யெகோவாவுக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள் என்று சாத்தான் சொல்கிறான். (யோபு 2:4, 5) அவன் ஏன் அப்படிச் சொல்கிறான்? ஏனென்றால், அவனே கெட்ட ஆசைகளுக்கு இணங்கிப் போய்விட்டான்; யெகோவாவுக்கு உண்மையில்லாமல் போய்விட்டான். அவனைப் போலவே எல்லாரும் இருப்பார்கள் என்று நினைக்கிறான். சோதனைகள் வரும்போது உடனடியாக மக்கள் யெகோவாவை விட்டுவிடுவார்கள் என்று அவன் நினைக்கிறான். பாவமே இல்லாத, கடவுளுடைய மகனே அப்படி விட்டுவிடுவார் என்று நினைத்தான். (மத். 4:8, 9) கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட உண்மையிலேயே நம்மால் முடியாதா? கண்டிப்பாக முடியும்! “என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது” என்று பவுல் சொன்னார்.—பிலி. 4:13.

5. கெட்ட ஆசைகளை எதிர்த்து நாம் ஜெயிப்போம் என்று யெகோவா நம்பிக்கை வைத்திருப்பது நமக்கு எப்படித் தெரியும்?

5 நாம் வீழ்ந்துவிடுவோம் என்று சாத்தான் நினைக்கிறான். ஆனால், கெட்ட ஆசைகளை எதிர்த்து நாம் ஜெயித்து விடுவோம் என்று யெகோவா நம்புகிறார். எப்படிச் சொல்கிறோம்? ஒரு திரள் கூட்டமான மக்கள் தனக்கு உண்மையாக இருப்பார்கள், மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைப்பார்கள் என்று யெகோவா முன்னாடியே சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், வெறும் கொஞ்சம் பேர் மட்டுமல்ல, எக்கச்சக்கமான பேர் “தங்களுடைய உடைகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தத்தில் துவைத்து வெண்மையாக்கி” புதிய உலகத்துக்குள் போவார்கள், அதுவும் சுத்தமானவர்களாகப் போவார்கள் என்று தெரிகிறது. (வெளி. 7:9, 13, 14) பொய்யே சொல்ல முடியாத யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்! அப்படியென்றால், கெட்ட ஆசைகளை எதிர்த்து ஜெயிக்க சக்தியில்லாத மக்களாக யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

6-7. கெட்ட ஆசையை எதிர்த்துப் போராடும்போது, நாம் நம்பிக்கை இழந்துபோக வேண்டும் என்று சாத்தான் ஏன் நினைக்கிறான்?

6 அடுத்ததாக, கெட்ட ஆசைகள் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக, யெகோவா நம்மை வெறுத்துவிடுவார் என்று நாம் நினைக்க வேண்டும்... நம்பிக்கை இழந்துபோக வேண்டும்... என்று சாத்தான் விரும்புகிறான். ஆனால், இதுவும் உண்மை இல்லை. சாத்தானுக்குத்தான் எந்த நம்பிக்கையும் இல்லை. அவன் நிரந்தரமாக அழிக்கப்படுவான் என்று யெகோவா முன்பே முடிவு செய்துவிட்டார். (ஆதி. 3:15; வெளி. 20:10) அவனுக்குக் கிடைக்காத ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கப்போவதால் அவன் ரொம்ப கோபமாக இருக்கிறான். அதனால், நாமும் நம்பிக்கை இழந்துபோக வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால், நாம் அப்படி இருக்க வேண்டியதில்லை. யெகோவா நமக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். “ஒருவரும் அழிந்துபோகாமல் எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.”—2 பே. 3:9.

7 ‘கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட எனக்குச் சக்தியில்லை... யெகோவா என்னை வெறுத்துவிடுவார்... எனக்கு எந்த நம்பிக்கையும் இல்லாமல் போய்விடும்...’ என்றெல்லாம் நாம் யோசித்தால், தான் நினைத்ததை சாத்தான் சாதித்துவிட்டான் என்று அர்த்தமாகிவிடும். ஏனென்றால், அப்படியெல்லாம் நாம் யோசித்து சோர்ந்துபோக வேண்டும் என்பதுதான் அவன் ஆசை. இந்த உண்மையை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டால், சாத்தானை எதிர்த்து நிற்பதற்கு நமக்குத் தேவையான பலம் கிடைக்கும்.—1 பே. 5:8, 9.

பாவ இயல்பு நம்மை எப்படி யோசிக்க வைக்கும்?

8. நாம் செய்கிற தவறுகளைத் தவிர, பாவம் என்ற வார்த்தை வேறு எதையும் குறிக்கிறது? (சங்கீதம் 51:5) (“வார்த்தையின் விளக்கம்” பகுதியையும் பாருங்கள்.)

8 கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்குச் சக்தியில்லை என்று நினைக்க வேண்டும்... நாம் நம்பிக்கை இழந்துபோக வேண்டும்... போன்ற எண்ணங்களை சாத்தான் விதைக்கிறான் என்று இவ்வளவு நேரம் பார்த்தோம். ஆனால், இந்த எண்ணத்தை வேறு ஒன்றும் நமக்குக் கொடுக்கும். அது என்ன? நம்முடைய முதல் பெற்றோரிடமிருந்து நமக்குள் வந்திருக்கும் பாவ இயல்பு.a—யோபு 14:4; சங்கீதம் 51:5-ஐ வாசியுங்கள்.

9-10. (அ) பாவம் செய்ததால் ஆதாமும் ஏவாளும் எப்படிப் பாதிக்கப்பட்டார்கள்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) பாவம் நம்மை எப்படிப் பாதிக்கிறது?

9 ஆதாம் ஏவாளை பாவம் எப்படிப் பாதித்தது என்று யோசித்துப் பாருங்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போன பிறகு, அவர்கள் ஒளிந்துகொண்டார்கள், தங்கள் உடலை மறைத்துக்கொண்டார்கள். அவர்கள் இப்படிச் செய்ததைப் பற்றி வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) இப்படிச் சொல்கிறது: “பாவத்தினால் ஆதாம் ஏவாளுக்கு குற்ற உணர்வு, பயம், பாதுகாப்பு இல்லாத உணர்வு, அவமானம் வந்தது.” இந்த நான்கு விஷயங்களையும், ஒரு வீட்டில் இருக்கிற நான்கு அறைகளாக கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்த நான்கு அறைகள் மட்டுமே இருக்கிற ஒரு வீட்டுக்குள் ஆதாமும் ஏவாளும் பூட்டப்பட்ட மாதிரி ஆகிவிட்டார்கள். அவர்களால் ஒரு அறையில் இருந்து இன்னொரு அறைக்குத்தான் போக முடிந்ததே தவிர, அந்த வீட்டைவிட்டு வெளியே வர முடியவில்லை. அதாவது, பாவ இயல்பைவிட்டு அவர்களால் தப்பிக்க முடியவில்லை.

10 ஆதாம் ஏவாள் இருந்த நிலைமையில் இன்று நாம் இல்லை. ஏனென்றால், நமக்கு மீட்புவிலை கிடைத்திருக்கிறது. அதன் பலன்கள் அவர்களுக்குப் பொருந்தாது. மீட்புவிலையின் அடிப்படையில் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, நமக்குச் சுத்தமான மனசாட்சி கிடைக்கிறது. (1 கொ. 6:11) இருந்தாலும், அவர்களிடம் இருந்து நமக்குப் பாவ இயல்பு வந்திருக்கிறது. அதனால்தான் குற்ற உணர்வு, பயம், பாதுகாப்பு இல்லாத உணர்வு, அவமானம் நமக்கும் வருகிறது. சொல்லப்போனால், மனிதர்கள் எல்லாரையுமே பாவம் அதன் பிடியில் வைத்திருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. “ஆதாம் செய்ததுபோல் கடவுளுடைய கட்டளையை மீறி பாவம் செய்யாத” ஆட்களும் அதன் பிடியில்தான் இருக்கிறார்கள். (ரோ. 5:14) இதைக் கேட்கவே கஷ்டமாக இருந்தாலும், நாம் நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. கெட்ட ஆசையை எதிர்த்துப் போராட நமக்குச் சக்தியே இல்லை என்று நினைக்க வேண்டிய அவசியம் இல்லை. நம்மால் அதை நிச்சயம் ஜெயிக்க முடியும். எப்படி?

ஆதாம் ஏவாள் அவமானத்தில் கூனிக்குறுகியபடி ஏதேன் தோட்டத்தைவிட்டு வெளியே வருகிறார்கள், அவர்கள் தோல் உடைகளைப் போட்டிருக்கிறார்கள்.

பாவத்தினால் ஆதாம் ஏவாளுக்கு குற்ற உணர்வு, பயம், பாதுகாப்பு இல்லாத உணர்வு, அவமானம் வந்தது (பாரா 9)


11. நமக்குச் சக்தியே இல்லை என்று தோன்றினால் நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்? (ரோமர் 6:12)

11 ‘கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட எனக்குச் சக்தியே இல்லை’ என்று தோன்றினால், உங்களுக்குள் இருக்கிற பாவ இயல்புதான் உங்களிடம் அப்படிச் சொல்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். அதன் பேச்சை நீங்கள் கேட்கவே கூடாது. ஏனென்றால் அது உண்மை இல்லை. பாவம் “ராஜாவாக ஆட்சி செய்ய” அனுமதிக்கக் கூடாது என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 6:12-ஐ வாசியுங்கள்.) நாம் நினைத்தால், கெட்ட ஆசைகளுக்கு இணங்காமல் இருக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. (கலா. 5:16) நம்மால் அப்படி இருக்க முடியும் என்று யெகோவாவும் நம்பிக்கை வைத்திருக்கிறார். ஒருவேளை, நம்மால் முடியாது என்றால் யெகோவா நம்மிடம் இருந்து அதை எதிர்பார்க்க மாட்டார், இல்லையா? (உபா. 30:11-14; ரோ. 6:6; 1 தெ. 4:3) அப்படியென்றால், கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடும் சக்தி கண்டிப்பாக நமக்கு இருக்கிறது!

12. நம்பிக்கை இழந்ததுபோல் தோன்றினால் என்ன செய்ய வேண்டும், ஏன்?

12 தவறான ஆசைகள் மனதில் வருகிறது என்ற ஒரே காரணத்துக்காக ‘யெகோவா என்னை வெறுத்துவிடுவார்... எனக்கு எந்த நம்பிக்கையுமே இல்லை...’ என்று தோன்றுகிறதா? உங்களுக்குள் இருக்கிற பாவ இயல்புதான் உங்களிடம் அப்படிச் சொல்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள். அதன் பேச்சை நீங்கள் கேட்கவே கூடாது. ஏன்? நாம் பிறக்கும்போதே பாவிகள் என்பது யெகோவாவுக்குத் தெரியும் என்று பைபிள் சொல்கிறது. (சங். 103:13, 14) நம்மைப் பற்றி அவர் ‘எல்லாவற்றையும் தெரிந்து’ வைத்திருக்கிறார்; பாவ இயல்பு எப்படி ஒவ்வொருவருக்குள்ளும் கெட்ட ஆசைகளைக் கொண்டு வருகிறது என்றுகூட அவருக்குத் தெரியும். (1 யோ. 3:19, 20) அந்தக் கெட்ட ஆசைகளுக்கு நாம் இணங்கிவிடாதவரை நம்மால் யெகோவாவுக்கு முன் சுத்தமாக இருக்க முடியும். இதை எப்படி உறுதியாக சொல்கிறோம் என்பதை அடுத்து பார்க்கலாம்.

13-14. கெட்ட ஆசைகள் நமக்குள் வருகிறது என்பதற்காக யெகோவா நம்மை ஏற்றுக்கொள்ளாமல் போய்விடுவாரா? விளக்குங்கள்.

13 கெட்ட ஆசைகளின்படி செய்வதற்கும், அந்த ஆசைகள் நமக்குள் வருவதற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், கெட்ட ஆசைகளின்படி செய்வது என்பது நம் கட்டுப்பாட்டில் இருக்கிற விஷயம். ஆனால், கெட்ட ஆசைகள் மனதில் வருவது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமலேயே திடீரென்று நடந்துவிடலாம். உதாரணத்துக்கு, கொரிந்து சபையில் இருந்த சிலர், முன்பு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தார்கள். பவுல் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாகத்தான் இருந்தீர்கள்” என்று சொன்னார். அவர்களுக்கு மறுபடியும் அந்தக் கெட்ட ஆசைகள் வந்திருக்கவே வந்திருக்காதா? எதார்த்தமாக யோசித்தால், ஒருவேளை வந்திருக்கலாம். ஏனென்றால், இப்படிப்பட்ட ஆசைகள் ஆழமாக வேர்விட்டு இருக்கும். ஆனால், சுயக்கட்டுப்பாடு காட்டி அந்த ஆசைகளின்படி செய்யாத கிறிஸ்தவர்களை யெகோவா ஏற்றுக்கொண்டார். ‘சுத்தமாக கழுவப்பட்டவர்களாக’ யெகோவா அவர்களைப் பார்த்தார். (1 கொ. 6:9-11) நம்முடைய விஷயத்திலும் அதுதான் உண்மை. நம்மையும் யெகோவா அப்படிப் பார்ப்பார்.

14 எப்படிப்பட்ட கெட்ட ஆசைகளுடன் நாம் போராடிக்கொண்டு இருந்தாலும் சரி, நம்மால் கண்டிப்பாக அதற்கு இணங்காமல் இருக்க முடியும். ஒருவேளை அப்படிப்பட்ட எண்ணங்கள் வருவது நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம்; ஆனாலும், சுயக்கட்டுப்பாட்டைக் காட்டி, “நம்முடைய உடலும் உள்ளமும் ஆசைப்பட்டதையெல்லாம்” செய்யாமல் இருக்க முடியும். (எபே. 2:3) அதற்கு உதவும் சில விஷயங்களைப் பார்க்கலாம்.

கெட்ட ஆசைகளுக்கு இணங்காமல் இருப்பது எப்படி?

15. கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட, நாம் ஏன் நம்மிடமே நேர்மையாக இருக்க வேண்டும்?

15 கெட்ட ஆசைகளுக்கு எதிரான போராட்டத்தில் நாம் ஜெயிக்க வேண்டுமென்றால், நம்முடைய பலவீனங்கள் என்னென்ன என்பதை நேர்மையாக எடைபோட்டுப் பார்க்க வேண்டும். சாக்குப்போக்கு சொல்லி நம்மை நாமே ‘ஏமாற்றிக்கொள்ள’ கூடாது. (யாக். 1:22) சிலசமயத்தில், நாம் செய்கிற தவறு அவ்வளவு பெரிய தவறு ஒன்றும் இல்லை என்று நாம் சாக்குப்போக்கு சொல்லலாம். உதாரணம்: ‘என்னை விட மற்றவர்கள் நிறைய குடிக்கிறார்கள்’ என்று யோசிக்கலாம். வேறுசில சமயங்களில், நாம் செய்கிற தவறுக்கு மற்றவர்களைக் காரணம் காட்டலாம். உதாரணம்: ‘என்னுடைய மனைவி என்னிடம் அன்பாக, பாசமாக நடந்திருந்தால் நான் ஏன் ஆபாசத்தைப் பார்க்கப் போகிறேன்?’ என்று சொல்லலாம். உண்மை என்னவென்றால், இப்படியெல்லாம் சாக்குப்போக்கு சொன்னால், கெட்ட ஆசைக்கு சுலபமாக இணங்கிவிடுவோம். அதனால், தவறான செயல்களை நியாயப்படுத்தாதீர்கள்; மனதில்கூட அப்படிச் செய்யாதீர்கள். உங்களுடைய செயல்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு. அதை மறந்துவிடாதீர்கள்.—கலா. 6:7.

16. கெட்ட ஆசைகள் வரும்போது வழுக்கி விழுந்துவிடாமல் இருக்க எது உதவும்?

16 உங்களுக்கு என்ன மாதிரியான பலவீனங்கள் இருக்கிறது என்பதை நேர்மையாக யோசித்துப் பார்ப்பது மட்டும் போதாது. அவற்றில், வழுக்கி விழுந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். (1 கொ. 9:26, 27; 1 தெ. 4:4; 1 பே. 1:15, 16) எந்த மாதிரி விஷயங்கள் உங்களுக்கு சோதனையாக இருக்கிறது என்பதையும், எந்த மாதிரி சமயத்தில் அப்படிப்பட்ட எண்ணங்கள் வருகிறது என்பதையும் முன்பே யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, ஒரு குறிப்பிட்ட விஷயம் உங்களுக்குச் சோதனையாக இருக்கலாம். அல்லது, ஏதோவொரு குறிப்பிட்ட சமயத்தில் சோதனைகள் வரலாம். உதாரணத்துக்கு, நீங்கள் உடல் அளவில் சோர்ந்து போயிருக்கும்போது அல்லது நடுராத்திரியில், தவறான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு வருகிறதா? என்ன மாதிரி சோதனை வரும் என்பதையும், அது வரும்போது என்ன செய்ய வேண்டும் என்பதையும் முன்பே முடிவு செய்து வையுங்கள். மறந்துவிடாதீர்கள், இவை எல்லாவற்றையுமே செய்வதற்குச் சரியான நேரம்—கெட்ட ஆசைகள் வருவதற்கு முன்பு, அதற்குப் பின்பு கிடையாது.—நீதி. 22:3.

17. யோசேப்பின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆதியாகமம் 39:7-9) (படங்களையும் பாருங்கள்.)

17 போத்திபாரின் மனைவி, யோசேப்பை அவளுடைய வலையில் விழவைக்க முயற்சி செய்தபோது யோசேப்பு என்ன செய்தார் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர் முடியாது என்று உடனடியாகச் சொன்னார், உறுதியாகச் சொன்னார். (ஆதியாகமம் 39:7-9-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து என்ன தெரிகிறது? சோதனை வருவதற்கு முன்பே, இன்னொருவருடைய மனைவிமேல் ஆசைப்படக் கூடாது என்பதை யோசேப்பு தெளிவாகத் தெரிந்துவைத்திருந்தார். சரியானதைச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவரைப் போலவே நீங்களும் சோதனை வருவதற்கு முன்பே சரியானதைத்தான் செய்ய வேண்டும் என்ற உறுதியான முடிவை எடுங்கள். இப்படிச் செய்தால், சோதனை வரும்போது, ஏற்கனவே நீங்கள் எடுத்த முடிவுக்கு ஏற்ற மாதிரி செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பீர்கள்.

படத்தொகுப்பு: 1. போத்திபாரின் மனைவி யோசேப்பின் உடையைப் பிடிக்கிறாள், யோசேப்பு அந்த இடத்தைவிட்டு ஓடுகிறார். 2. பள்ளியில், ஒரு பெண் ஒரு டீனேஜ் சகோதரரிடம் தப்பான எண்ணத்தோடு பேச வருகிறாள், அந்த சகோதரர் மறுத்துவிடுகிறார்.

சோதனைகள் வரும்போது, யோசேப்பு மாதிரி உடனடியாக நடவடிக்கை எடுங்கள்! (பாரா 17)


“எப்போதும் சோதித்துப் பாருங்கள்”

18. கெட்ட ஆசைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஜெயிப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? (2 கொரிந்தியர் 13:5)

18 கெட்ட ஆசைகளுக்கு எதிரான போராட்டத்தில் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்றால், உங்களையே நீங்கள் ‘சோதித்துப் பார்ப்பது’ முக்கியம். அதாவது, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதை அடிக்கடி யோசித்துப் பார்ப்பது முக்கியம். (2 கொரிந்தியர் 13:5-ஐ வாசியுங்கள்.) அவ்வப்போது உங்களுடைய யோசனைகளும் செயல்களும் எப்படி இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்த்து, தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்யுங்கள். உதாரணத்துக்கு, ஒரு கெட்ட ஆசையில் வழுக்கி விழுந்துவிடாமல் நீங்கள் ஜெயித்திருந்தாலும் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வேண்டாம் என்று சொல்வதற்கு எனக்கு எவ்வளவு நேரம் எடுத்தது?’ ஒருவேளை, உடனே நீங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை என்றாலும் சோர்ந்துவிடாதீர்கள். அடுத்த முறை இன்னும் நன்றாக முன்னேறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை யோசித்துப் பாருங்கள். உங்களையே இந்த மாதிரி கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்குள் கெட்ட ஆசைகள் வரும்போது அதை இன்னும் வேகமாக எடுத்துப்போடுவதற்கு நான் என்ன செய்யலாம்? கெட்ட ஆசைகளை உடனே எடுத்துப்போட முடியாமல் இருப்பதற்கு காரணம் என்னுடைய பொழுதுபோக்கா? ஒழுக்கக்கேடான காட்சிகள் வரும்போது அதைப் பார்க்காத மாதிரி உடனே என்னுடைய முகத்தை திருப்பிக்கொள்கிறேனா? யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்காக நான் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள கடினமாக உழைக்கிறேனா? அப்படிச் செய்வது என்னுடைய நல்லதுக்குத்தான் என்பதைப் புரிந்து வைத்திருக்கிறேனா?’—சங். 101:3.

19. தவறு செய்யத் தூண்டும் சின்னச் சின்ன விஷயங்களைக்கூட நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?

19 உங்களையே நீங்கள் சோதித்துப் பார்க்கும்போது, உங்களுடைய கெட்ட செயல்களுக்குச் சாக்குப்போக்கு சொல்லாதீர்கள். ஏனென்றால், “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும்” என்று பைபிள் சொல்கிறது. (எரே. 17:9) இதயத்திலிருந்து “பொல்லாத யோசனைகள்” வரும் என்று இயேசுவும் சொன்னார். (மத். 15:19) ஆபாசத்தைப் பார்க்கிற பழக்கத்தை நிறுத்திய ஒருவர் கொஞ்ச காலத்துக்குப் பிறகு, ‘நிர்வாண காட்சிகள் வராதவரைக்கும் செக்ஸ் ஆசைகளைத் தூண்டும் ஃபோட்டோக்களை பார்ப்பதில் தவறு இல்லை’ என்று சாக்குப்போக்கு சொல்ல ஆரம்பிக்கலாம். அல்லது, ‘கெட்ட விஷயங்களைச் செய்தால்தானே தவறு, அவற்றைக் கற்பனை செய்வதில் தவறில்லை’ என்று அவர் யோசிக்கலாம். இப்படியெல்லாம் அவர் யோசிக்கிறார் என்றால், அவருடைய நயவஞ்சகமான இதயம் “பாவ ஆசைகளின்படி நடக்க முன்கூட்டியே திட்டம்” போடுகிறது என்று அர்த்தம். (ரோ. 13:14) இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி ஜாக்கிரதையாக இருக்கலாம்? எந்தெந்த விஷயங்கள் உங்களைப் பெரிய தவறு செய்ய வைக்கும் என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு, அது சின்ன விஷயமாக இருந்தாலும் அதைத் தவிர்த்துவிடுங்கள்.b தவறான விஷயங்களைச் செய்வதற்கு சாக்குப்போக்காக அமைகிற எல்லா எண்ணங்களையும், அதாவது, ‘பொல்லாத யோசனைகளையும்’ தவிர்த்துவிடுங்கள்.

20. நமக்கு என்ன எதிர்கால நம்பிக்கை இருக்கிறது, இப்போதே நமக்கு என்ன உதவி இருக்கிறது?

20 யெகோவாவின் உதவியோடு கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கு நமக்குச் சக்தி கிடைக்கும் என்று இதுவரை பார்த்தோம். அதுமட்டுமல்ல, யெகோவா இரக்கம் உள்ளவராக இருப்பதால் புதிய உலகத்தில் என்றென்றும் வாழ்கிற நம்பிக்கையும் நமக்கு இருக்கிறது. அந்தச் சமயத்தில், சுத்தமான இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்வோம். அது நமக்கு எவ்வளவு நிம்மதியாக இருக்கும்! அந்த நாள் வரும் வரைக்கும் கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட நமக்குச் சக்தி இல்லை என்று நினைக்க வேண்டாம். நம்பிக்கை இழந்துவிடவும் வேண்டாம். நாம் எடுக்கிற முயற்சிகளை யெகோவா கண்டிப்பாக ஆசீர்வதிப்பார். நம்மால் கண்டிப்பாக ஜெயிக்க முடியும்!

உங்கள் பதில் என்ன?

  • கெட்ட ஆசைகளை எதிர்த்துப் போராட சக்தியில்லாதது போலவும், நம்பிக்கை இழந்தது போலவும் தோன்றினால், அந்த எண்ணங்களை ஜெயிக்க எது உதவும்?

  • பாவம் நம்மை “ராஜாவாக ஆட்சி செய்ய” விடாமல் இருக்க என்ன செய்யலாம்?

  • எப்படி நம்மையே ‘சோதித்துப் பார்க்கலாம்’?

பாட்டு 122 வேரூன்றி நிற்போம்!

a வார்த்தையின் விளக்கம்: பைபிளில் “பாவம்” என்று சொல்லியிருக்கிற வார்த்தை, பெரும்பாலும் நாம் செய்கிற ஒரு செயலைக் குறிக்கலாம். உதாரணத்துக்கு, திருடுவது, பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவது, கொலை செய்வது போன்ற செயல்களைக் குறிக்கலாம். (யாத். 20:13-15; 1 கொ. 6:18) வேறு சில வசனங்களில் சொல்லியிருக்கிற “பாவம்” என்ற வார்த்தை, நமக்குள் இருக்கிற பாவ இயல்பைக் குறிக்கிறது. பிறக்கும்போதே இது நமக்குள் வந்துவிடுகிறது. பாவத்தோடு சம்பந்தப்பட்ட எந்தவொரு செயலையும் செய்யவில்லை என்றாலும் நமக்குள் இந்தப் பாவ இயல்பு இருக்கிறது.

b நீதிமொழிகள் 7:7-23-ல் வரும் இளம் வாலிபன் பாலியல் முறைகேடு என்ற பெரிய பாவத்தைச் செய்வதற்கு முன்பு, ஞானம் இல்லாத சின்னச் சின்ன தவறான முடிவுகளை எடுத்தான்.

c பட விளக்கங்கள்: இடது: காபி கடையில் உட்கார்ந்திருக்கும் ஒரு இளம் சகோதரர், காதலிக்கிற இரண்டு ஆண்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகுவதைப் பார்க்கிறார். வலது: புகைப் பிடித்துக்கொண்டிருக்கும் இரண்டு பேரை ஒரு சகோதரி கவனிக்கிறார்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்