உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 ஆகஸ்ட் பக். 14-19
  • யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்பதை நம்புங்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்பதை நம்புங்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் நம்ப வேண்டும்
  • நம்புவதற்கு எது உதவும்
  • யெகோவா நினைத்துப் பார்ப்பதை மறந்துவிடாதீர்கள்
  • தொடர்ந்து உங்கள் இதயத்தை நம்ப வையுங்கள்
  • யெகோவாவின் மன்னிப்பு​—உங்களுக்கு என்ன நன்மை?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • எல்லாரும் மனம் திருந்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • யெகோவா உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 ஆகஸ்ட் பக். 14-19

படிப்புக் கட்டுரை 34

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே

யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்பதை நம்புங்கள்!

‘நீங்கள் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.’—சங். 32:5.

என்ன கற்றுக்கொள்வோம்

யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நாம் ஏன் நம்ப வேண்டும் என்று பார்ப்போம். மனம் திருந்துகிறவர்களை யெகோவா கண்டிப்பாக மன்னிக்கிறார் என்பதை பைபிள் வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன என்பதையும் பார்ப்போம்.

1-2. யெகோவா நம் பாவங்களை மன்னிக்கிறார் என்பதை நினைக்கும்போது எப்படி இருக்கிறது? (படத்தையும் பாருங்கள்.)

பாவம் செய்யும்போது, நம் மனம் நம்மைப் பாடாய்ப் படுத்தும் என்பது தாவீது ராஜாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (சங். 40:12; 51:3, மேல்குறிப்பு) ஏனென்றால், அவர் வாழ்க்கையில் சில பெரிய தவறுகளைச் செய்திருந்தார். இருந்தாலும், அவர் மனம் திருந்தினார். யெகோவாவும் அவரை மன்னித்தார். (2 சா. 12:13) யெகோவாவின் மன்னிப்பு கிடைக்கும்போது, மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கும் என்பது தாவீதுக்குத் தெரியும். அதை அவர் உணர்ந்திருக்கிறார்.—சங். 32:1.

2 யெகோவா நம் பாவங்களை மன்னிக்கும்போது, தாவீது மாதிரியே நமக்கும் மன நிம்மதி கிடைக்கும். நம் பாவங்களை—பெரிய பெரிய பாவங்களைக்கூட—யெகோவா மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்பதை நினைக்கும்போது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! உண்மையிலேயே மனம் திருந்தும்போதும், செய்த பாவங்களை ஒத்துக்கொள்ளும்போதும், அதைத் திரும்பச் செய்யாமல் இருக்க முயற்சி எடுக்கும்போதும் யெகோவா நம்மை மன்னிக்கிறார். (நீதி. 28:13; அப். 26:20; 1 யோ. 1:9) எந்தளவுக்குத் தெரியுமா? அப்படியொரு பாவத்தையே நாம் செய்யாத மாதிரி அவர் நினைக்கிறார். அந்தளவுக்கு!!—எசே. 33:16.

தாவீது ராஜா, வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்தபடி யாழை வாசித்துக்கொண்டும் பாட்டு பாடிக்கொண்டும் இருக்கிறார்.

யெகோவாவின் மன்னிப்பை வர்ணிக்கும் நிறைய பாடல்களை தாவீது ராஜா எழுதியிருக்கிறார் (பாராக்கள் 1-2)


3-4. ஒரு சகோதரி ஞானஸ்நானம் எடுத்த பிறகு எப்படி உணர்ந்தார், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்வது சிலருக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஜெனிஃபருக்கும் அப்படித்தான் இருந்தது. யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் அவர் வளர்ந்தார். ஆனால், டீனேஜ் வயதில் நிறைய தவறு செய்தார், அதை அப்பா அம்மாவிடம் மறைத்தார். பல வருஷத்துக்குப் பிறகு, அவர் யெகோவாவிடம் திரும்பி வந்தார். ஞானஸ்நானமும் எடுத்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “பணம்-பொருள்... ஒழுக்கக்கேடு... குடிவெறி... பயங்கர கோபம்... என்றுதான் என்னுடைய பழைய வாழ்க்கை இருந்தது. மனம் திருந்தி, மன்னிப்பு கேட்டபோது, கிறிஸ்துவின் பலியின் அடிப்படையில் யெகோவா என்னை மன்னித்திருப்பார் என்பது என் அறிவுக்குத் தெரிந்திருந்தது; ஆனாலும், அதை ஏற்றுக்கொள்ள என் மனம் மறுத்தது.”

4 நீங்கள் முன்பு செய்த பாவத்தை யெகோவா மன்னித்திருப்பார் என்பதை ஏற்றுக்கொள்வது, சிலசமயம் உங்களுக்கும் கஷ்டமாக இருக்கிறதா? யெகோவா தன்னை மன்னித்துவிட்டார் என்பதில் உறுதியாக இருந்ததால், தாவீது சந்தோஷமாக இருந்தார். தாவீது மாதிரியே நீங்களும் உணர வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். இந்தக் கட்டுரையில், யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நம்புவது ஏன் முக்கியம் என்றும், அதை நம்ப எவையெல்லாம் உதவும் என்றும் பார்ப்போம்.

ஏன் நம்ப வேண்டும்

5. நாம் எதை நம்ப வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான்? உதாரணம் சொல்லுங்கள்.

5 யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நம்பினால், சாத்தானின் ஒரு பொய்யை நம்பி ஏமாற மாட்டோம். அது என்ன பொய்? மன்னிக்கப்பட முடியாதளவுக்கு நம் பாவங்கள் ரொம்ப பெரியது என்பதுதான் அந்தப் பொய். அவன் அப்படிப் பொய் சொல்லக் காரணம், யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையைத் தடுக்க வேண்டும் என்பதற்குத்தான். கொரிந்து சபையில் இருந்த ஒரு சூழ்நிலையை இப்போது பார்க்கலாம். பாலியல் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக ஒரு சகோதரரை சபையிலிருந்து நீக்கியிருந்தார்கள். (1 கொ. 5:1, 5, 13) அவர் பிற்பாடு மனம் திருந்தினார். ஆனாலும், சபையில் இருந்தவர்கள் அவரை மன்னிக்கக் கூடாது... அவரை மறுபடியும் சபையில் சேர்த்துக்கொள்ளக் கூடாது... என்று சாத்தான் விரும்பினான். அந்தளவுக்கு அவர்கள் அந்தச் சகோதரரிடம் கடுமையாக நடந்துகொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். அதேபோல், மனம் திருந்திய அந்த நபரும், ‘தனக்கெல்லாம் மன்னிப்பே கிடைக்காது’ என்று யோசித்து, “ஒரேயடியாகச் சோகத்தில் மூழ்கி,” யெகோவாவுக்குச் சேவை செய்வதையே நிறுத்திவிட வேண்டும் என்றும் சாத்தான் நினைத்தான். அவனுடைய குறிக்கோளும் தந்திரமும் இன்றும் மாறவில்லை. ‘அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவைதான்!’—2 கொ. 2:5-11.

6. குற்ற உணர்ச்சியிலேயே மூழ்கிவிடாமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

6 யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நம்பினால், குற்ற உணர்ச்சியில் மூழ்கிவிட மாட்டோம். தப்பு செய்யும்போது குற்ற உணர்ச்சி வருவது இயல்புதான். (சங். 51:17) அது ஒருவிதத்தில் நல்லது. ஏனென்றால், அப்போதுதான் நம்மைத் திருத்திக்கொள்ள மனசாட்சி நம்மைத் தூண்டும். (2 கொ. 7:10, 11) ஆனால், மனம் திருந்திய பிறகும் நாம் குற்ற உணர்ச்சியிலேயே இருந்தால், யெகோவாவுக்குச் சேவை செய்வதையே நிறுத்திவிட வாய்ப்பு இருக்கிறது. யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நம்பினால், குற்ற உணர்ச்சியை முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்துவிடுவோம். அதற்குப் பிறகு, யெகோவா எதிர்பார்க்கிற மாதிரி நாம் அவருக்குச் சேவை செய்ய முடியும். அதாவது, சுத்தமான மனசாட்சியோடும், சந்தோஷம் நிறைந்த இதயத்தோடும் சேவை செய்ய முடியும். (கொலோ. 1:10, 11; 2 தீ. 1:3) சரி, அப்படியென்றால், யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நம்ப எது உதவும்?

நம்புவதற்கு எது உதவும்

7-8. யெகோவா தன்னைப் பற்றி என்ன சொன்னார், அது நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது? (யாத்திராகமம் 34:6, 7)

7 தன்னைப் பற்றி யெகோவா சொல்லியிருப்பதை யோசித்துப் பாருங்கள். சீனாய் மலையில் மோசேயிடம் யெகோவா என்ன சொன்னார் என்று பாருங்கள்.a (யாத்திராகமம் 34:6, 7-ஐ வாசியுங்கள்.) தன்னிடம் நிறைய நல்ல நல்ல குணங்கள் இருந்தாலும், தன்னை “இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள்” என்று மோசேயிடம் யெகோவா சொன்னார். அப்படிப்பட்ட ஒரு கடவுள், உண்மையிலேயே மனம் திருந்தும் தன்னுடைய ஊழியரின் பாவத்தை மன்னிக்காமல் இருப்பாரா? வாய்ப்பே இல்லை! அவர் அப்படிச் செய்தால், இரக்கமில்லாத, கல்நெஞ்சக்காரராக ஆகிவிடுவாரே! யெகோவாவால் அப்படி நடந்துகொள்ள முடியவே முடியாது!!!

8 யெகோவா தன்னை இரக்கமுள்ள கடவுள் என்று சொல்கிறார் என்றால், அவர் கண்டிப்பாக இரக்கம் காட்டுவார். ஏனென்றால், அவர் பொய் சொல்ல மாட்டார். (சங். 31:5) அவரை நாம் முழுமையாக நம்பலாம். குற்ற உணர்ச்சியைத் தூக்கி எறிய முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியென்றால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா உண்மையிலேயே இரக்கமுள்ளவர், கரிசனையுள்ளவர் என்பதை நான் நம்புகிறேனா? மனம் திருந்துகிற எந்தவொரு பாவியையும் அவர் மன்னிப்பார் என்பதை நம்புகிறேனா? எந்தவொரு பாவியையும் மன்னிப்பார் என்றால், என்னை மட்டும் மன்னிக்காமல் இருப்பாரா? அதை நான் நம்பாமல் இருக்கலாமா?’

9. யெகோவா மன்னிக்கிறார் என்பதற்கு என்ன அர்த்தம்? (சங்கீதம் 32:5)

9 யெகோவா தன்னுடைய மன்னிப்பைப் பற்றி பைபிளில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை ஆழமாக யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, பைபிள் எழுத்தாளரான தாவீது யெகோவாவின் மன்னிப்பைப் பற்றி என்ன சொன்னார் என்று பாருங்கள். (சங்கீதம் 32:5-ஐ வாசியுங்கள்.) ‘நீங்கள் என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்’ என்று அவர் எழுதினார். ‘மன்னித்தீர்கள்’ என்ற வார்த்தைக்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம் இது: “தூக்கி எடு” அல்லது “சுமந்து செல்.” தாவீதின் பாவங்களை யெகோவா மன்னித்தபோது தாவீது சுமந்துகொண்டிருந்த பாரத்தை, ஒருவிதத்தில், யெகோவா தூக்கிக்கொண்டார், அதைச் சுமந்துகொண்டு போய்விட்டார் என்று சொல்லலாம். தாவீதுக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்! (சங். 32:2-4) அதே நிம்மதி நமக்கும் கிடைக்கும். பாவங்களைவிட்டு நாம் மனம் திருந்தும்போது, யெகோவா நம்மை மன்னிக்கிறார். அதாவது, நம் பாவங்களை தூக்கி எடுத்துக்கொண்டு, சுமந்துகொண்டு போய்விடுகிறார். அதனால், நாம் தொடர்ந்து குற்ற உணர்ச்சியை நம்முடைய மனதில் சுமக்கத் தேவையில்லை.

10-11. “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்ற வார்த்தைகளில் இருந்து யெகோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? (சங்கீதம் 86:5)

10 சங்கீதம் 86:5-ஐ வாசியுங்கள். “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்று தாவீது யெகோவாவைப் பற்றிச் சொல்கிறார். இந்த வார்த்தைகளை விளக்கும்போது, யெகோவாவைப் பற்றி ஒரு பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “[அவர்] மன்னிக்கிறவர்—அது அவருடைய சுபாவம்.” மன்னிப்பது ஏன் யெகோவாவின் சுபாவமாக இருக்கிறது? அந்த வசனத்தின் அடுத்தப் பகுதி அதற்குப் பதில் சொல்கிறது: “உங்களிடம் வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்.” போன கட்டுரையில் பார்த்த மாதிரி, மாறாத அன்பு என்பது ஆழமானது, என்றைக்குமே நிலைத்திருக்கும். யெகோவா தன்னை உண்மையாக வணங்குகிறவர்களிடம் இப்படிப்பட்ட மாறாத, நிலையான பந்தத்தை வைத்துக்கொள்கிறார். மாறாத அன்பு இருப்பதால், மனம் திருந்துகிற எல்லா பாவிகளையும் அவர் “தாராளமாக மன்னிப்பார்.” (ஏசா. 55:7) ஒருவேளை யெகோவா உங்களை மன்னித்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘யெகோவா மன்னிக்கிறவர் என்பதை நான் நம்புகிறேனோ? அதாவது, மனம் திருந்தி யெகோவாவுடைய இரக்கத்துக்காக கெஞ்சுகிற எல்லாரையும் மன்னிக்கிறவர் என்பதை நம்புகிறேனா? எல்லாரையும் அவர் மன்னிக்கிறார் என்றால், நான் அவருடைய இரக்கத்துக்காக கெஞ்சும்போது என்னை மட்டும் மன்னிக்காமல் இருப்பாரா? அதை நான் நம்பாமல் இருக்கலாமா?’

11 நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை யெகோவா முழுமையாகப் புரிந்துவைத்திருப்பது நமக்குப் பெரிய ஆறுதலாக இருக்கிறது. (சங். 139:1, 2) தாவீது எழுதின இன்னொரு சங்கீதத்தில் இதைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும். யெகோவா நம்மை மன்னித்துவிட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள அதுவும் உதவும்.

யெகோவா நினைத்துப் பார்ப்பதை மறந்துவிடாதீர்கள்

12-13. சங்கீதம் 103:14 சொல்வதுபோல், யெகோவா நம்மைப் பற்றி எதை ஞாபகம் வைத்துக்கொள்கிறார், அது என்ன செய்ய அவரைத் தூண்டுகிறது?

12 சங்கீதம் 103:14-ஐ வாசியுங்கள். “நாம் மண் என்பதை அவர் நினைத்துப் பார்க்கிறார்” என்று யெகோவாவைப் பற்றி தாவீது சொல்கிறார். தன்னை வணங்குகிறவர்களை யெகோவா ஏன் மன்னிக்கத் தயாராக இருக்கிறார் என்பதற்கான ஒரு காரணத்தை தாவீது இங்கே சொல்ல வருகிறார். அதாவது, நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பதை யெகோவா மனதில் வைத்திருக்கிறார் என்பதைச் சொல்ல வருகிறார். இதை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள தாவீதின் வார்த்தைகளை கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்.

13 “நாம் எப்படி உருவாக்கப்பட்டோம் என்பதை [யெகோவா] நன்றாக அறிந்திருக்கிறார்” என்று தாவீது சொல்கிறார். யெகோவா ஆதாமை ‘மண்ணில்’ இருந்து உருவாக்கினார். பரிபூரணமாகப் படைக்கப்பட்ட மனிதனுக்கு இயல்பாகவே சில வரம்புகள் இருந்தன என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். உதாரணத்துக்கு, சாப்பிடுவது, தூங்குவது, சுவாசிப்பது போன்றவற்றை அவன் கண்டிப்பாகச் செய்ய வேண்டியிருந்தது. (ஆதி. 2:7) ஆனால், ஆதாம்-ஏவாள் பாவம் செய்த பிறகு, நாம் மண்ணாக இருக்கிறோம் என்பதற்கு இன்னொரு அர்த்தமும் வந்துவிட்டது. அதாவது, அவர்களுடைய வம்சத்தில் வந்த நமக்கு பாவ இயல்பு வந்துவிட்டது. அதனால், தவறு செய்கிற எண்ணம் நமக்கு வருகிறது. இந்த பாவ இயல்பைப் பற்றி யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். வெறுமனே அதைத் தெரிந்து வைத்திருப்பது மட்டுமல்ல, அதை அவர் “நினைத்துப் பார்க்கிறார்” என்று தாவீது சொல்கிறார். எபிரெய மொழியில், “நினைத்துப் பார்க்கிறார்” என்ற வார்த்தைக்கான அர்த்தம், ஏதோ ஒரு நல்லதைச் செய்ய நடவடிக்கை எடுப்பதைக் குறிக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தாவீதின் வார்த்தைகளுக்கு இதுதான் அர்த்தம்: ‘சிலசமயம் நாம் தவறு செய்து தடுக்கி விழுவோம் என்பதை யெகோவா புரிந்து வைத்திருக்கிறார். அதனால், செய்த தவறை நினைத்து யெகோவாவிடம் மன்னிப்பு கேட்கும்போது, நமக்கு இரக்கம் காட்டவும், நம்மை மன்னிக்கவும் அவர் தூண்டப்படுகிறார்.’—சங். 78:38, 39.

14. (அ) யெகோவா நம் பாவங்களை எந்தளவுக்கு மன்னிக்கிறார் என்று தாவீது சொன்னார்? (சங்கீதம் 103:12) (ஆ) யெகோவா முழுமையாக மன்னிக்கிறார் என்பதை தாவீதின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது? (“யெகோவா மன்னிக்கிறார், மறக்கிறார்—எப்படி?” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

14 யெகோவா நம் பாவங்களை எந்தளவுக்கு மன்னிக்கிறார்? (சங்கீதம் 103:12-ஐ வாசியுங்கள்.) அதைப் பற்றி தாவீது இப்படிச் சொல்கிறார்: “கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு” யெகோவா நம் குற்றங்களைத் தூக்கிப்போடுகிறார். கிழக்குக்கும் மேற்குக்கும் இடையில் இருக்கிற தூரத்தை கணக்கிடவே முடியாது. அவை இரண்டும் சந்திக்கவே சந்திக்காது. இங்கே யெகோவா நமக்கு என்ன சொல்ல வருகிறார்? ஒரு ஆராய்ச்சிப் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “அவ்வளவு தூரத்துக்குப் பாவம் தூக்கிப் போடப்படுகிறது என்றால், அதன் வாசனையோ, சுவடோ, நினைவோ துளிகூட இல்லாமல் முழுமையாகப் போய்விடும்.” இதை யோசித்துப் பாருங்கள்: சில வாசனைகள் நமக்குச் சில விஷயங்களை ஞாபகப்படுத்தலாம். அந்த மாதிரிகூட எதுவுமே யெகோவாவுக்கு நம் பாவங்களை ஞாபகப்படுத்தாது. அந்தப் பாவங்களுக்காக அவர் நம்மைக் கணக்குக் கேட்கவும் மாட்டார், தண்டிக்கவும் மாட்டார்.—எசே. 18:21, 22; அப். 3:19.

படத்தொகுப்பு: 1. பத்சேபாள் குளிப்பதை தாவீது மொட்டை மாடியிலிருந்து பார்க்கிறார். 2. அவர் உருக்கமாக ஜெபம் செய்கிறார். 3. அவர் எழுதும்போது சற்று நிறுத்தி யோசிக்கிறார்.

யெகோவா மன்னிக்கிறார், மறக்கிறார்—எப்படி?

யெகோவா நம்மை மன்னிக்கும்போது, நம் பாவங்களை மறந்துவிடுகிறார். (ஏசா. 43:25) எந்த அர்த்தத்தில்? எதிர்காலத்தில் அந்தப் பாவங்களுக்காக நம்மிடம் கணக்குக் கேட்க மாட்டார். இதைப் புரிந்துகொள்ள தாவீது ராஜாவின் வாழ்க்கை உதவும். அவருடைய வாழ்க்கை காட்டுவதுபோல், நாம் பெரிய பாவங்களைச் செய்திருந்தாலும், நம் வாழ்க்கை மறுபடியும் நல்லபடியாக மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

பாலியல் முறைகேடு, கொலை போன்ற பெரிய பெரிய தவறுகளை தாவீது செய்தார். இருந்தாலும், அவர் மனதார மனம் திருந்தியபோது, யெகோவா அவரை மன்னித்தார். யெகோவா கொடுத்த கண்டிப்பை அவர் ஏற்றுக்கொண்டார், தன்னைத் திருத்திக்கொண்டார். அதற்குப் பிறகு, அவர் ஒருபோதும் வழிதவறிப் போகவே இல்லை. தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்தார்.—2 சா. 11:1-27; 12:13.

தாவீதின் வாழ்க்கையைப் பற்றி, சாலொமோனிடம் யெகோவா இப்படிச் சொன்னார்: “உன் அப்பா தாவீது உத்தம இதயத்தோடு, நேர்மையாக நடந்ததுபோல் நீயும் நட.” (1 ரா. 9:4, 5) தாவீது செய்த பாவங்களைப் பற்றி யெகோவா ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. உத்தம இதயத்தோடு, நேர்மையாக நடந்திருக்கிறார் என்றுதான் அவருடைய மொத்த வாழ்க்கையைப் பற்றிச் சொன்னார். அவர் உண்மையாக வாழ்ந்ததற்காக, யெகோவா அவரை ‘அளவில்லாமல் ஆசீர்வதித்தார்.’—சங். 13:6.

நமக்கு என்ன பாடம்? யெகோவா நம்மை மன்னித்துவிட்டார் என்றால், அந்த விஷயம் அதோடு முடிந்துவிட்டது என்று அர்த்தம். நாம் செய்த தவறைப் பற்றி யோசிப்பதற்குப் பதிலாக, நாம் செய்யும் நல்ல விஷயங்களுக்கு என்ன பலன் கொடுக்கலாம் என்றுதான் அவர் பார்க்கிறார். (எபி. 11:6) யெகோவாவே மறக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, அந்தப் பாவங்களை நாம் ஏன் நினைத்துக்கொண்டிருக்க வேண்டும்!

15. முன்பு செய்த பாவத்தை நினைத்து நாம் ரொம்ப நாள் குற்ற உணர்ச்சியில் தவித்துக்கொண்டு இருந்தால் என்ன செய்யலாம்?

15 யெகோவா கொடுக்கிற மன்னிப்பை ஏற்றுக்கொள்வதற்கு, சங்கீதம் 103-ல் இருக்கிற தாவீதின் வார்த்தைகள் நமக்கு எப்படி உதவும்? முன்பு செய்த பாவத்தால், நாம் இன்னமும் குற்ற உணர்ச்சியில் தவித்துக்கொண்டிருந்தால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவா நினைத்துப் பார்ப்பதை, அதாவது நான் பாவ இயல்புள்ளவன் என்று அவர் நினைத்துப் பார்ப்பதை, நான் மறந்துவிடுகிறேனா? என்னைப் போல் பாவம் செய்தவர்கள் மனம் திருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்கும்போது, அவர் அதை மன்னிப்பார் என்பதை மறந்துவிடுகிறேனா?’ இன்னொரு கேள்வியைக்கூட யோசித்துப் பார்க்கலாம்: ‘யெகோவா மறந்துவிடுவதை நான் ஞாபகம் வைக்க வேண்டும் என்று நினைக்கிறேனா? அதாவது, யெகோவா ஏற்கனவே மன்னித்து மறந்த ஒரு பாவத்தை நான் ஞாபகம் வைத்துக்கொண்டு இருக்கிறேனா?’ முன்பு நாம் செய்த பாவங்களை யெகோவா ஞாபகத்தில் வைத்துக்கொண்டே இருப்பது இல்லை. நாமும் அப்படிச் செய்யக் கூடாது. (சங். 130:3) யெகோவா நம்மை மன்னிக்கிறார் என்பதை நம்பும்போது, நம்மை நாமே மன்னிக்க முடியும். குற்ற உணர்ச்சி இல்லாமல் தொடர்ந்து யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்ய முடியும்.

16. ஏற்கனவே செய்த பாவங்களை நினைத்துக்கொண்டே இருப்பது எவ்வளவு ஆபத்து என்பதைக் காட்டுகிற ஒரு உதாரணத்தைச் சொல்லுங்கள். (படத்தையும் பாருங்கள்.)

16 இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். குற்ற உணர்ச்சியை சுமந்துகொண்டே இருப்பது எப்படி இருக்கும் என்றால், வண்டி ஓட்டும்போது பின்னாடி என்ன வருகிறது என்பதை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே ஓட்டுகிற மாதிரி இருக்கும். பின்னாடி என்ன வருகிறது என்று அவ்வப்போது கண்ணாடியில் பார்ப்பது நல்லதுதான். ஆபத்தைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், போக வேண்டிய இடத்துக்குப் பத்திரமாகப் போய்ச் சேர வேண்டும் என்றால், முன்னாடி என்ன இருக்கிறது என்பதில்தான் நம் கவனம் இருக்க வேண்டும். அதே மாதிரி, நாம் ஏற்கனவே செய்த பாவங்களை சிலசமயம் நினைத்து பார்ப்பது, ஒரு விதத்தில் நல்லதுதான். அதிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ள முடியும். திரும்பவும் அதை செய்துவிடவே கூடாது என்ற மனஉறுதி நமக்குக் கிடைக்கும். அதற்காக, அந்தப் பாவத்தைப் பற்றியே நினைத்துக்கொண்டு இருந்தால், இன்று யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய முடியாமல் போய்விடும். பூஞ்சோலை பூமிக்குப் போகும் பாதையில் இருக்கிற நாம், பின்னாடி அல்ல, நமக்கு முன்னாடி இருக்கும் பூஞ்சோலைமீதுதான் கவனம் செலுத்த வேண்டும். அங்கே, முன்பு பட்ட கஷ்டங்கள் “யாருடைய மனதுக்கும் வராது.”—ஏசா. 65:17; நீதி. 4:25.

வளைந்து நெளிந்து இருக்கும் ஒரு சாலையில் கார் ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் கண்ணாடி வழியாக பின்னாடி பார்க்கிறார்.

வண்டி ஓட்டும்போது பின்னாடியே பார்த்துக்கொண்டு இருக்காமல், முன்னாடி இருக்கும் பாதையில் கவனம் இருக்க வேண்டும். அதேபோல், செய்த தவறுகளையே யோசித்துக்கொண்டிருக்காமல், கண்முன் இருக்கும் ஆசீர்வாதங்கள்மேல் கவனம் இருக்க வேண்டும் (பாரா 16)


தொடர்ந்து உங்கள் இதயத்தை நம்ப வையுங்கள்

17. நம் இதயம் எதை நம்பும்படி நாம் செய்ய வேண்டும், ஏன்?

17 யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்றும், அவர் நம்மை மன்னிக்கிறார் என்றும், நம் இதயத்தை நாம் நம்ப வைக்க வேண்டும். (1 யோ. 3:20, அடிக்குறிப்பு) ஏன்? யெகோவாவுக்கு நம்மேல் அன்பில்லை, அவர் நம்மை மன்னிக்கவே மாட்டார் என்று நம் இதயத்தை நம்ப வைக்க சாத்தான் முயற்சி செய்துகொண்டே இருக்கிறான். யெகோவாவுக்கு நாம் சேவை செய்வதை நிறுத்திவிட வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். காலங்கள் போகப் போக அவன் இன்னும் வெறித்தனமாக முயற்சி எடுப்பான். ஏனென்றால், அவனுக்கு இருக்கும் காலம் ரொம்ப கம்மி. (வெளி. 12:12) என்ன ஆனாலும் சரி, அவனை நாம் ஜெயிக்க விடவே கூடாது!

18. யெகோவா உங்களை நேசிக்கிறார், மன்னிக்கிறார் என்று உங்கள் இதயத்தை நம்ப வைக்க நீங்கள் என்ன செய்யலாம்?

18 யெகோவாவுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை அதிகமாக்க, போன கட்டுரையில் பார்த்த ஆலோசனைகளைக் கடைப்பிடியுங்கள். யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்று உங்கள் இதயத்தை நம்ப வைக்க, யெகோவா தன்னைப் பற்றி என்னவெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பதை யோசித்துப் பாருங்கள். அவர் மன்னிக்கும் விதத்தைப் பற்றி பைபிள் எழுத்தாளர்கள் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்பதையும் யோசித்துப் பாருங்கள். நாம் பாவ இயல்புள்ளவர்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும் என்பதையும், நமக்கு இரக்கம் காட்ட அவர் ஆசையாக இருக்கிறார் என்பதையும் மறந்துவிடாதீர்கள். அதே சமயத்தில், அவர் நம்மை மன்னிக்கும்போது, முழுமையாக மன்னிக்கிறார் என்பதையும் மறந்துவிடாதீர்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, தாவீது யெகோவாவைப் பற்றிச் சொன்ன மாதிரியே உங்களுக்கும் சொல்லத் தோன்றும்: “நீங்கள் ‘என்னுடைய பாவங்களையெல்லாம் மன்னித்தீர்கள்.’ ரொம்ப நன்றி, யெகோவா அப்பா.”—சங். 32:5.

யெகோவா உங்களை மன்னிக்கிறார் என்று...

  • ஏன் நம்ப வேண்டும்?

  • நம்புவதற்கு எது உதவும்?

  • ஏன் தொடர்ந்து உங்கள் இதயத்தை நம்ப வைக்க வேண்டும்?

பாட்டு 1 யெகோவாவின் குணங்கள்

a அக்டோபர் 1, 2009, காவற்கோபுரத்தில் வந்த “கடவுளிடம் நெருங்கி வாருங்கள்—யெகோவா தம்மைப் பற்றி வர்ணித்தபோது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்