உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w22 அக்டோபர் பக். 24-28
  • உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம் நம்பிக்கை நங்கூரம் போன்றது
  • நம் நம்பிக்கை தலைக்கவசம் போன்றது
  • உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்
  • நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்
  • நம் நம்பிக்கை நிஜமாகும்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
w22 அக்டோபர் பக். 24-28

படிப்புக் கட்டுரை 44

உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்

“யெகோவாமேல் நம்பிக்கையாக இரு.”—சங். 27:14.

பாட்டு  144 கண்முன் பரிசை வைப்போம்!

இந்தக் கட்டுரையில்...a

1. யெகோவா நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்?

என்றென்றும் வாழும் அருமையான நம்பிக்கையை யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். அழிவே இல்லாமல் என்றென்றும் பரலோகத்தில் வாழும் நம்பிக்கை சிலருக்கு இருக்கிறது. (1 கொ. 15:50, 53) ஆனால் மற்றவர்களுக்கு, இந்தப் பூமியில் எந்தவித உடல்நலப் பிரச்சினையும் இல்லாமல் என்றென்றும் சந்தோஷமாக வாழும் நம்பிக்கை இருக்கிறது. (வெளி. 21:3, 4) நாம் பரலோகத்தில் வாழப்போவதாக இருந்தாலும் சரி, பூமியில் வாழப்போவதாக இருந்தாலும் சரி, நம் நம்பிக்கை உண்மையிலேயே ஒரு பெரிய பொக்கிஷம்தான்!

2. நம் நம்பிக்கை எப்படிப்பட்டது, ஏன்?

2 பைபிளைப் பொறுத்தவரை “நம்பிக்கை” என்ற வார்த்தை, “நல்ல விஷயங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்பதை” குறிக்கிறது. ஒரு நல்ல எதிர்காலம் வரும் என்ற நம்முடைய நம்பிக்கை நிச்சயம் நிறைவேறும். ஏனென்றால், யெகோவாதான் அந்த நம்பிக்கையைத் தந்திருக்கிறார். (ரோ. 15:13) அவர் என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று நமக்குத் தெரியும். கொடுத்த வாக்கை அவர் எப்போதுமே காப்பாற்றுவார் என்றும் நமக்குத் தெரியும். (எண். 23:19) எதைச் சொன்னாலும் அதைச் செய்ய யெகோவாவுக்கு ஆசையும் இருக்கிறது, சக்தியும் இருக்கிறது என்று நாம் முழுமையாக நம்புகிறோம். அதனால், நம் நம்பிக்கை வெறும் கற்பனையோ கனவோ அல்ல. அது நிஜமானது, அதற்குப் பலமான ஆதாரம் இருக்கிறது.

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்க்கப்போகிறோம்? (சங்கீதம் 27:14)

3 யெகோவா அப்பா நம்மை ரொம்ப நேசிக்கிறார். அவரை நாம் நம்ப வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 27:14-ஐ வாசியுங்கள்.) யெகோவாமேல் பலமான நம்பிக்கை வைக்கும்போது, எப்படிப்பட்ட பிரச்சினையையும் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல, என்ன நடந்தாலும் தைரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்க முடியும். நம்முடைய நம்பிக்கை நம்மை எப்படிப் பாதுகாக்கும் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம். முதலில், நம்பிக்கை எப்படி ஒரு நங்கூரம் போலவும், ஒரு தலைக்கவசம் போலவும் இருக்கிறது என்று பார்க்கலாம். அதற்குப் பிறகு, நம் நம்பிக்கையை நாம் எப்படிப் பலப்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நம் நம்பிக்கை நங்கூரம் போன்றது

4. நம் நம்பிக்கை எப்படி ஒரு நங்கூரம்போல் இருக்கிறது? (எபிரெயர் 6:19)

4 நம் நம்பிக்கை ஒரு நங்கூரம் போல இருப்பதாக எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (எபிரெயர் 6:19-ஐ வாசியுங்கள்.) பவுல் அடிக்கடி கடலில் பயணம் செய்தார். அதனால், கப்பல் காற்றில் அடித்துக்கொண்டு போகாமல் இருக்க நங்கூரம் தேவை என்று அவருக்குத் தெரியும். ஒரு தடவை அவர் கப்பலில் போய்க்கொண்டிருந்தபோது ஒரு பெரிய சூறாவளி வீசியது. அந்தக் கப்பல் பாறைகளில் மோதி மூழ்கிவிடாமல் இருப்பதற்காக, கப்பலை ஓட்டியவர்கள் நங்கூரங்களை இறக்கியதை பவுல் பார்த்தார். (அப். 27:29, 39-41) கப்பல் உறுதியாக நிற்க நங்கூரம் எப்படி உதவுமோ அதேமாதிரி நாம் உறுதியாக நிற்க நம் நம்பிக்கை உதவும். அதனால், பிரச்சினைகள் புயல் மாதிரி தாக்கினாலும் யெகோவாவைவிட்டு நாம் விலகிப்போகாமல் இருப்போம். நமக்கு உறுதியான நம்பிக்கை இருக்கும்போது, என்ன பிரச்சினைகள் வந்தாலும் பதட்டப்படாமல் இருப்போம். புயலுக்குப் பின் அமைதி வரும் என்று நம்பிக்கையாகக் காத்திருப்போம். நமக்குத் துன்புறுத்தல் வரும் என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருக்கிறார். (யோவா. 15:20) அதனால், நம் எதிர்கால நம்பிக்கையைப் பற்றி நாம் ஆழமாக யோசித்துப் பார்த்தால் நம் கிறிஸ்தவப் பாதையில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் நேராகப் போய்க்கொண்டே இருப்போம்.

5. சாகப்போவது தெரிந்திருந்தும் தைரியமாக இருக்க நம்பிக்கை எப்படி இயேசுவுக்கு உதவி செய்தது?

5 ஒரு கொடூரமான சாவு தனக்கு வரப்போகிறது என்று இயேசுவுக்குத் தெரியும். ஆனால், யெகோவாமேல் இருந்த நம்பிக்கைதான் கடைசிவரை உண்மையாக இருக்க அவருக்கு உதவி செய்தது. சொல்லப்போனால், இயேசு பதட்டப்படாமல் தைரியமாக இருப்பார் என்று சங்கீதப் புத்தகத்தில் ஒரு தீர்க்கதரிசனம் சொல்லப்பட்டிருந்தது. அதைத்தான் கி.பி. 33 பெந்தெகொஸ்தே நாளன்று அப்போஸ்தலன் பேதுரு இப்படி மேற்கோள் காட்டினார்: “நான் நம்பிக்கையோடு வாழ்வேன்; ஏனென்றால், நீங்கள் என்னைக் கல்லறையில் விட்டுவிட மாட்டீர்கள்; உங்களுக்கு உண்மையாக இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள். . . . உங்களுடைய சன்னிதியில் என்னை மிகுந்த சந்தோஷத்தால் நிரப்புவீர்கள்.” (அப். 2:25-28; சங். 16:8-11) தான் சாகப்போவது இயேசுவுக்குத் தெரியும். ஆனாலும், கடவுள் மறுபடியும் தன்னை உயிரோடு எழுப்புவார் என்பதில் அவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. மறுபடியும் பரலோகத்தில் தன்னுடைய அப்பாவோடு சேர்ந்து சந்தோஷமாக வாழப்போவதை அவர் உறுதியாக நம்பினார்.—எபி. 12:2, 3.

6. நம்பிக்கையைப் பற்றி ஒரு சகோதரர் என்ன சொன்னார்?

6 துன்புறுத்தலைச் சகிப்பதற்கு நம்பிக்கைதான் நிறைய சகோதர சகோதரிகளுக்கு உதவியிருக்கிறது. இங்கிலாந்தில் இருக்கிற லெனேர்ட் சின் என்ற சகோதரருடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். முதல் உலகப் போர் சமயத்தில் ராணுவத்தில் சேர மறுத்ததால் அவரைச் சிறையில் போட்டுவிட்டார்கள். இரண்டு மாதங்களுக்கு அவரைத் தனிச்சிறையில் அடைத்து வைத்தார்கள். அதன்பின், ரொம்பக் கஷ்டமான வேலைகளைச் செய்ய வைத்தார்கள். இதைப் பற்றியெல்லாம் பிற்பாடு அவர் இப்படி எழுதினார்: “சகித்திருப்பதற்கு நம்பிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து நான் கற்றுக்கொண்டேன். இயேசு... அப்போஸ்தலர்கள்... தீர்க்கதரிசிகள்... இவர்களுடைய உதாரணமெல்லாம் நமக்கு இருக்கிறது. பைபிளில் அருமையான வாக்குறுதிகளும் இருக்கின்றன. இதெல்லாமே நமக்கு ஒரு நல்ல எதிர்கால நம்பிக்கையைக் கொடுக்கின்றன. சகித்திருப்பதற்குத் தேவையான பலத்தையும் கொடுக்கின்றன.” லெனேர்ட்டுக்கு நம்பிக்கை ஒரு நங்கூரம் போல இருந்தது. நமக்கும் அது நிச்சயமாகவே ஒரு நங்கூரம்தான்!

7. சோதனைகள் எப்படி நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும்? (ரோமர் 5:3-5; யாக்கோபு 1:12)

7 சோதனைகளை நாம் சகிக்கும்போது யெகோவா நமக்கு எப்படி உதவி செய்கிறார் என்பதை நாம் பார்ப்போம். அவருடைய அங்கீகாரம் நமக்கு இருக்கிறது என்பதையும் அப்போது நாம் புரிந்துகொள்வோம். அதனால், நம்முடைய நம்பிக்கை இன்னும் பலமாகும். (ரோமர் 5:3-5-ஐயும் யாக்கோபு 1:12-ஐயும் வாசியுங்கள்.) நல்ல செய்தியை நாம் ஏற்றுக்கொண்டபோது இருந்ததைவிட அது இன்னும் பலமாகும். சோதனைகளைக் கொடுத்து நம்மைத் திணறடிக்க சாத்தான் நினைக்கிறான். ஆனால், யெகோவாவுடைய உதவியோடு நம்மால் அந்த ஒவ்வொரு சோதனையையும் ஜெயிக்க முடியும்.

நம் நம்பிக்கை தலைக்கவசம் போன்றது

8. நம்பிக்கை எப்படித் தலைக்கவசம் போல இருக்கிறது? (1 தெசலோனிக்கேயர் 5:8)

8 நம் நம்பிக்கை தலைக்கவசம் போல இருக்கிறது என்றுகூட பைபிள் சொல்கிறது. (1 தெசலோனிக்கேயர் 5:8-ஐ வாசியுங்கள்.) எதிரிகளுடைய அம்புகளோ ஆயுதங்களோ தன் தலையைத் தாக்காமல் இருப்பதற்காக ஒரு போர்வீரர் தலைக்கவசத்தைப் போட்டிருப்பார். அதேபோல், சாத்தானுடைய தாக்குதலிலிருந்து நம் மனதைப் பாதுகாப்பதற்காக நம்பிக்கை என்ற தலைக்கவசத்தை நாம் போட்டிருக்க வேண்டும். நம் மனதைக் கலைப்பதற்காக சாத்தான் நம்மை சரமாரியாகத் தாக்குகிறான். கெட்ட ஆசைகளையும் தவறான எண்ணங்களையும் அதற்கு ஆயுதங்களாகப் பயன்படுத்துகிறான். தலைக்கவசம் ஒரு போர்வீரருடைய தலையைப் பாதுகாப்பதுபோல் நம்பிக்கை நம்முடைய யோசனையைப் பாதுகாக்கிறது. அதனால், யெகோவாவுக்கு நம்மால் கடைசிவரை உண்மையாக இருக்க முடியும்.

9. எதிர்கால நம்பிக்கை இல்லாத ஜனங்கள் எப்படி வாழ்கிறார்கள்?

9 என்றென்றும் வாழும் நம்பிக்கை நமக்கு இருப்பதால் நம்மால் ஞானமாக நடந்துகொள்ள முடிகிறது, நல்ல தீர்மானங்களையும் எடுக்க முடிகிறது. ஆனால், நம் நம்பிக்கை குறைந்துவிட்டால் உலக ஜனங்கள் மாதிரியே யோசிக்க ஆரம்பித்துவிடுவோம். முடிவில்லாத வாழ்வு என்ற லட்சியத்தை அடைய வேண்டும் என்பதையே மறந்துவிடுவோம். அன்று கொரிந்துவிலிருந்த சில கிறிஸ்தவர்களின் விஷயத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். கடவுள் கொடுத்திருந்த முக்கியமான வாக்குறுதியில், அதாவது உயிர்த்தெழுதல் நடக்கும் என்ற வாக்குறுதியில், அவர்களுக்கு இருந்த நம்பிக்கை போய்விட்டது. (1 கொ. 15:12) எதிர்கால நம்பிக்கை இல்லாத ஜனங்கள், ‘இருக்குற வரைக்கும் சந்தோஷமா இருந்துட்டு போயிடலாம்’ என்று நினைப்பதாக பவுல் சொன்னார். (1 கொ. 15:32) இன்றுகூட, கடவுளுடைய வாக்குறுதியில் நம்பிக்கை வைக்காத நிறைய பேர், ‘இந்த நிமிஷம் சந்தோஷமா இருந்தா போதும். அதுக்காக என்ன வேணாலும் செய்யலாம்’ என்று யோசிக்கிறார்கள். ஆனால், நல்ல எதிர்காலம் வரும் என்று கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதியில் நாம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். அந்த நம்பிக்கை ஒரு தலைக்கவசம் போல நம் யோசனையைப் பாதுகாக்கிறது. நம்மைப் பற்றியே யோசிக்காமல் இருப்பதற்கும் யெகோவாவோடு இருக்கிற நட்பைக் கெடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் அது உதவி செய்கிறது.—1 கொ. 15:33, 34.

10. நம்பிக்கை எப்படித் தவறான யோசனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்?

10 நம்பிக்கை என்ற தலைக்கவசத்தை நாம் போட்டிருந்தால், யெகோவாவை சந்தோஷப்படுத்தவே முடியாது என்று நினைக்க மாட்டோம். ‘நானெல்லாம் பூஞ்சோலை பூமிக்கு போறது கஷ்டம். எனக்கு அதுக்கெல்லாம் தகுதியே இல்ல. கடவுள் எதிர்பார்க்கற மாதிரியெல்லாம் என்னால வாழ முடியாது’ என்று சிலர் சொல்லலாம். யோபுவின் போலி நண்பரான எலிப்பாசும், ஆறுதல் சொல்கிற பெயரில் இதுபோன்ற விஷயத்தைத்தான் யோபுவிடம் சொன்னார். “அற்ப மனுஷன் பரிசுத்தமாக இருக்க முடியுமா?” என்று கேட்டார். அதோடு, “பரிசுத்த தூதர்களையே கடவுள் நம்புவது கிடையாது. பரலோகம்கூட அவர் பார்வையில் பரிசுத்தமாக இல்லை” என்று சொன்னார். (யோபு 15:14, 15) இதெல்லாம் அப்பட்டமான பொய்! நாம் இப்படியெல்லாம் யோசிக்க வேண்டுமென்று நினைப்பது சாத்தான்தான்! நீங்கள் இப்படி யோசித்துக்கொண்டே இருந்தால் உங்கள் நம்பிக்கை குறைந்துவிடும் என்று அவனுக்குத் தெரியும். அதனால், இப்படிப்பட்ட பொய்களை நம்பாமல், யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதிகளைப் பற்றியே யோசியுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார், அந்த லட்சியத்தை அடைய அவர் உங்களுக்கு உதவுவார். இதில் உங்களுக்கு சந்தேகமே வராதபடி பார்த்துக்கொள்ளுங்கள்!—1 தீ. 2:3, 4.

உங்கள் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ளுங்கள்

11. நம் நம்பிக்கை நிறைவேறுவதற்காக நாம் ஏன் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும்?

11 நம் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்வது எப்போதுமே சுலபம் கிடையாது. கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறுவதற்கு ரொம்பக் காலம் ஆவதுபோல் தெரிவதால் சிலசமயம் நாம் பொறுமையை இழந்துவிடலாம். ஆனால், யெகோவாவைப் பொறுத்தவரை அது ரொம்பப் பெரிய காலம் இல்லை. ஏனென்றால், அவர் என்றென்றும் வாழ்ந்துவருகிறார். (2 பே. 3:8, 9) அவர் நினைத்ததைச் சிறந்த விதத்தில் செய்து முடிப்பார், ஆனால் நாம் நினைக்கும் நேரத்தில் அதைச் செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றும்வரை நாம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அதுவரை நம் நம்பிக்கையை எப்படிப் பலமாக வைத்துக்கொள்ளலாம்?—யாக். 5:7, 8.

12. எபிரெயர் 11:1, 6-ன்படி, நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

12 நாம் யெகோவாவோடு நெருக்கமாக இருக்கும்போது நம் நம்பிக்கை பலமாக இருக்கும். ஏனென்றால், நம் நம்பிக்கையை நிஜமாக்கப்போவதே அவர்தான்! நாம் நம்பிக்கையோடு இருக்க வேண்டுமென்றால், யெகோவா இருக்கிறார் என்றும், “அவரை ஊக்கமாகத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறார்” என்றும் விசுவாசம் வைக்க வேண்டும். (எபிரெயர் 11:1, 6-ஐ வாசியுங்கள்.) யெகோவா நிஜமானவர் என்று நாம் எந்தளவுக்கு நம்புகிறோமோ, அந்தளவுக்கு அவருடைய வாக்குறுதிகளையெல்லாம் அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்புவோம். அவரோடு நமக்கு இருக்கும் நட்பைப் பலப்படுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம். ஏனென்றால், நம் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ள அது உதவும்.

ஜெபம் செய்வதும் ஆழமாக யோசிப்பதும், நம் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ள உதவும் (பாராக்கள் 13-15)b

13. நாம் எப்படிக் கடவுளிடம் நெருங்கிப்போகலாம்?

13 யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள், பைபிளைப் படியுங்கள். யெகோவாவை நம்மால் பார்க்க முடியாது என்றாலும் அவரிடம் நெருங்கிப்போக முடியும். நாம் அவரிடம் ஜெபம் செய்யலாம். நாம் பேசுவதை அவர் கண்டிப்பாகக் கேட்பார் என்று நம்பிக்கையாக இருக்கலாம். (எரே. 29:11, 12) அவருடைய வார்த்தையைப் படிக்கும்போதும், அதைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போதும் அவர் பேசுவதை நாம் கேட்கலாம். தனக்கு உண்மையாக இருந்தவர்களை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொண்டார் என்பதைப் பற்றிப் படிக்கப் படிக்க, நம் நம்பிக்கை பலமாகிக்கொண்டே போகும். கடவுளுடைய வார்த்தையிலுள்ள எல்லாமே “நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. ஏனென்றால், அவை நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.”—ரோ. 15:4.

14. யெகோவா மற்றவர்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?

14 கொடுத்த வாக்கை யெகோவா எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். ஆபிரகாம், சாராளின் விஷயத்தில் கடவுள் என்ன செய்தார் என்று பார்க்கலாம். அவர்களுக்கு ரொம்ப வயதாகிவிட்டது. அந்த வயதில் அவர்களுக்குக் குழந்தை பிறப்பது முடியாத விஷயமாக இருந்தது. ஆனாலும், அவர்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று கடவுள் வாக்குக் கொடுத்தார். (ஆதி. 18:10) ஆபிரகாம் அதை நம்பினாரா? ‘நிறைய தேசங்களுக்கு அவர் தகப்பன் ஆவார் என்பதில் . . . [அவர்] நம்பிக்கை வைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (ரோ. 4:18) மனிதர்களின் கண்ணோட்டத்தில் அது நடப்பதற்கு வாய்ப்பே இல்லையென்றாலும், கொடுத்த வாக்கை யெகோவா காப்பாற்றுவார் என்று ஆபிரகாம் நம்பினார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. (ரோ. 4:19-21) இப்படிப்பட்ட பதிவுகள் எதைக் காட்டுகின்றன? யெகோவா எப்போதுமே தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்பதில் நாம் நம்பிக்கையாக இருக்கலாம். நடக்க வாய்ப்பே இல்லை என்று நாம் நினைக்கும் விஷயத்தைக்கூட யெகோவா நடத்திக் காட்டுவார்!

15. யெகோவா நமக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?

15 யெகோவா உங்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள வாக்குறுதிகள் உங்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் நிறைவேறியிருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, உங்களுக்குத் தேவையானதையெல்லாம் யெகோவா கொடுப்பார் என்று இயேசு வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 6:32, 33) யெகோவாவின் சக்திக்காக நீங்கள் கேட்கும்போது அதையும் அவர் தருவார் என்று இயேசு சொல்லியிருக்கிறார். (லூக். 11:13) இந்த வாக்குறுதிகளை யெகோவா நிறைவேற்றாமல் போனதே இல்லை. இதுபோல் வேறு என்ன வாக்குறுதிகளை உங்கள் வாழ்க்கையில் அவர் நிறைவேற்றியிருக்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, உங்களை மன்னிப்பதாகவும், உங்களுக்கு ஆன்மீக உணவு தருவதாகவும், ஆறுதல் தருவதாகவும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 6:14; 24:45; 2 கொ. 1:3) இதுபோல் உங்களுக்கு யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்று யோசித்துப் பார்க்கும்போது, எதிர்காலத்திலும் உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை அதிகமாகும்.

நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்

16. நம்பிக்கை ஒரு அருமையான பரிசு என்று ஏன் சொல்லலாம்?

16 என்றென்றும் வாழப்போகிறோம் என்ற நம்பிக்கை கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் அருமையான பரிசு. அந்த வாழ்க்கைக்காகத்தான் நாம் ஆசையோடு காத்திருக்கிறோம். அந்த நாள் நிச்சயம் வரும்! இந்த நம்பிக்கை நங்கூரம் போல இருக்கிறது. சோதனைகள் வந்தாலும், துன்புறுத்தல் வந்தாலும், சாவே வந்தாலும்கூட உறுதியாக இருக்க அது நமக்கு உதவுகிறது. நம்முடைய நம்பிக்கை ஒரு தலைக்கவசம் போலவும் இருக்கிறது. அது நம் யோசனைகளைப் பாதுகாக்கிறது. அதனால், கெட்டதை வெறுக்கவும் நல்லதைச் செய்யவும் நம்மால் முடிகிறது. பைபிள் தரும் நம்பிக்கை, கடவுளிடம் நெருங்கிப்போக நமக்கு உதவுகிறது. நம்மேல் அவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்று புரிந்துகொள்ளவும் உதவுகிறது. நம் நம்பிக்கையை எப்போதும் பிரகாசமாக வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கையும் ரொம்பப் பிரகாசமாக இருக்கும்.

17. நம்பிக்கை சந்தோஷம் தரும் என்று ஏன் சொல்லலாம்?

17 ரோமர்களுக்குக் கடிதம் எழுதியபோது, “நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (ரோ. 12:12) கடவுளுக்கு உண்மையாக இருந்தால் பரலோகத்தில் என்றென்றும் வாழ முடியும் என்று பவுல் உறுதியாக நம்பினார். அதை நினைத்து அவர் சந்தோஷப்பட்டார். நாமும் நம் நம்பிக்கையை நினைத்து சந்தோஷப்படலாம். ஏனென்றால், யெகோவா தன் வாக்கைக் காப்பாற்றுவார் என்று நமக்குத் தெரியும். சங்கீதக்காரன் எழுதியதுபோல், ‘எப்போதுமே உண்மையோடு நடந்துகொள்கிற’ “யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவன் சந்தோஷமானவன்.”—சங். 146:5, 6.

உங்கள் பதில் என்ன?

  • நம் நம்பிக்கை நிறைவேறும் என்பதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

  • நம் நம்பிக்கை எப்படி நங்கூரம் போலவும் தலைக்கவசம் போலவும் இருக்கிறது?

  • நம் நம்பிக்கையைப் பலமாக வைத்துக்கொள்ள நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும்?

பாட்டு 139 பூஞ்சோலையில் வாழ்க்கை

a யெகோவா நமக்கு அருமையான எதிர்கால நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார். இந்த நம்பிக்கை நம் வாழ்க்கையைப் பிரகாசமாக்குகிறது! இப்போது இருக்கும் பிரச்சினைகளையே யோசித்து யோசித்து நொந்துபோகாமல் இருக்க அது உதவி செய்கிறது. எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் சரி, தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்குத் தேவையான பலத்தை அது நமக்குக் கொடுக்கிறது. நம் யோசனைகள் தாறுமாறாகப் போய்விடாதபடி அது நம் மனதைப் பாதுகாக்கிறது. இந்தக் காரணங்களுக்காகத்தான் நம் நம்பிக்கையை நாம் பலமாக வைத்துக்கொள்வது அவசியமாக இருக்கிறது. இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.

b பட விளக்கம்: தலைக்கவசம் எப்படிப் போர்வீரரின் தலையைப் பாதுகாக்கிறதோ அப்படித்தான் நம் நம்பிக்கை நம் யோசனையைப் பாதுகாக்கிறது. புயலைத் தாக்குப்பிடிக்க நங்கூரம் எப்படிக் கப்பலுக்கு உதவுகிறதோ அப்படித்தான் பிரச்சினைகளைத் தாக்குப்பிடிக்க நம் நம்பிக்கை நமக்கு உதவுகிறது. ஒரு சகோதரி நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஜெபம் செய்கிறார். ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்கை யெகோவா எப்படிக் காப்பாற்றினார் என்று ஒரு சகோதரர் யோசித்துப் பார்க்கிறார். யெகோவா தன்னை எப்படியெல்லாம் ஆசீர்வதித்திருக்கிறார் என்று இன்னொரு சகோதரர் யோசித்துப் பார்க்கிறார்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்