படிப்புக் கட்டுரை 20
பாட்டு 67 சுறுசுறுப்பாக பிரசங்கி!
ஊழியம் செய்ய அன்பு உங்களைத் தூண்டட்டும்!
“எல்லா தேசத்தாருக்கும் நல்ல செய்தி முதலாவது பிரசங்கிக்கப்பட வேண்டும்.”—மாற். 13:10.
என்ன கற்றுக்கொள்வோம்?
ஊழியத்தை சுறுசுறுப்பாக, முழுமூச்சோடு செய்வதற்கு அன்பு நம்மை எப்படித் தூண்டும் என்று கற்றுக்கொள்வோம்.
1. 2023 வருடாந்தரக் கூட்டத்தில் என்ன கற்றுக்கொண்டோம்?
2023-ல் நடந்த வருடாந்தரக் கூட்டத்தில்,a நம்முடைய நம்பிக்கைகளில் செய்யப்பட்ட சில மாற்றங்களைப் பற்றித் தெரிந்துகொண்டோம். உதாரணத்துக்கு, மகா பாபிலோன் அழிந்த பிறகும் யெகோவாவின் பக்கம் வருவதற்கு மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிந்துகொண்டோம். அதோடு, நவம்பர் 2023-லிருந்து பிரஸ்தாபிகள் ஊழியத்தில் செய்யும் ஒவ்வொன்றையும் அறிக்கை செய்ய தேவையில்லை என்றும் அதில் அறிவிக்கப்பட்டது. இந்த மாதிரி மாற்றங்களால், ஊழியம் செய்வது முக்கியமில்லை என்றோ அதை அவசரமாக செய்ய தேவையில்லை என்றோ அர்த்தமாகிவிடுமா? கண்டிப்பாக இல்லை!
2. நாட்கள் கடந்து போகப் போக நாம் ஏன் இன்னும் அவசரமாக ஊழியம் செய்ய வேண்டும்? (மாற்கு 13:10)
2 ஒவ்வொரு நாளும் கடந்து போகப் போக ஊழியத்தை இன்னும் அவசரமாக செய்ய வேண்டியிருக்கிறது. ஏன்? நமக்கு இருக்கிற நேரம் குறைந்துகொண்டே வருகிறது! கடைசி நாட்களில் நடக்கப்போகிற ஊழியத்தைப் பற்றி இயேசு என்ன சொன்னார் என்று யோசித்துப் பாருங்கள். (மாற்கு 13:10-ஐ வாசியுங்கள்.) “முடிவு” வருவதற்கு முன்பு நல்ல செய்தி எல்லாருக்கும் பிரசங்கிக்கப்படும் என்று சொன்னார். (மத். 24:14) “முடிவு” என்று சொன்னபோது, சாத்தானுடைய உலகத்துக்கு வரப்போகிற முடிவைப் பற்றி இயேசு சொன்னார். முடிவைக் கொண்டுவருவதற்கான ‘நாளையும்’ ‘நேரத்தையும்’ யெகோவா ஏற்கெனவே குறித்துவிட்டார். (மத். 24:36; 25:13; அப். 1:7) ஒவ்வொரு நாளும் கடந்து போகப் போக நாம் அந்த நாளுக்குப் பக்கத்தில் போய் கொண்டிருக்கிறோம். (ரோ. 13:11) அந்த நாள் வரும்வரை நாம் சுறுசுறுப்பாக பிரசங்கிக்க வேண்டும்.
3. நாம் ஏன் ஊழியம் செய்கிறோம்?
3 நாம் ஏன் ஊழியம் செய்கிறோம்? நேரடியாக சொன்னால், அன்பு இருப்பதால்தான் செய்கிறோம்! நாம் நல்ல செய்தியை நேசிக்கிறோம், மக்களை நேசிக்கிறோம், எல்லாவற்றுக்கும் மேல் யெகோவாவையும் அவருடைய பெயரையும் நேசிக்கிறோம். இவை ஒவ்வொன்றைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
நல்ல செய்தியை நேசிக்கிறோம்
4. பொதுவாக ஒரு நல்ல செய்தியைக் கேட்கும்போது நமக்கு எப்படி இருக்கும்?
4 ஏதோவொரு நல்ல செய்தியைக் கேட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் ஒருவருக்கு குழந்தை பிறந்ததைக் கேள்விப்பட்டபோது அல்லது நீங்கள் ரொம்ப ஆசைப்பட்ட ஒரு வேலை கிடைத்தபோது, உண்மையிலேயே சந்தோஷப்பட்டிருப்பீர்கள். அந்த நல்ல செய்தியை நண்பர்கள் எல்லாரிடமும் சொல்லியிருப்பீர்கள். இருப்பதிலேயே சிறந்த செய்தியை, அதாவது கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை, கேள்விப்பட்டபோதும் உங்களுக்கு அப்படித்தான் இருந்ததா?
5. பைபிளில் இருக்கும் உண்மைகளை முதல் முதலில் தெரிந்துகொண்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? (படங்களையும் பாருங்கள்.)
5 கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற உண்மைகளை முதல் தடவை கேள்விப்பட்டபோது உங்களுக்கு எப்படி இருந்தது? உங்களுடைய பரலோக அப்பா உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்... அவருடைய குடும்பத்தில் ஒருவராக நீங்களும் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்... உங்கள் வலியையும் வேதனையையும் எடுத்து போடுவதாக வாக்கு கொடுத்திருக்கிறார்... இறந்துபோன அன்பானவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவதாக சொல்லியிருக்கிறார்... இந்த மாதிரி இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருப்பீர்கள். (மாற். 10:29, 30; யோவா. 5:28, 29; ரோ. 8:38, 39; வெளி. 21:3, 4) இந்த உண்மைகள் உங்கள் இதயத்துக்கு இதமாக இருந்திருக்கும். (லூக். 24:32) அது உங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கும்; அதனால் மற்றவர்களிடம் இவற்றைப் பற்றியெல்லாம் உங்களால் சொல்லாமல் இருந்திருக்க முடியாது.—எரேமியா 20:9-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
முதல் முதலில் நல்ல செய்தியைக் கேள்விப்பட்டபோது சந்தோஷப்பட்டோம்; எல்லாரிடமும் அதைப் பற்றி சொன்னோம்! (பாரா 5)
6. எர்னஸ்ட்-ரோஸ் தம்பதியின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
6 எர்னஸ்ட் என்பவரின் அனுபவத்தைப் பார்க்கலாம்.b அவருக்குப் பத்து வயதாக இருந்தபோது அவருடைய அப்பா இறந்துவிட்டார். அதைப் பற்றி அவர் சொல்கிறார்: “‘அப்பா பரலோகத்துக்குப் போயிருப்பாரா? இனிமேல் என்னால் அவரைப் பார்க்கவே முடியாதா?’ என்றெல்லாம் யோசித்தேன். மற்ற பிள்ளைகளுக்கு அப்பா இருந்ததைப் பார்த்தபோது எனக்குப் பொறாமையாக இருந்தது.” எர்னஸ்ட அடிக்கடி தன்னுடைய அப்பாவின் கல்லறைக்குப் போய் முட்டிப்போட்டு, “என்னோட அப்பா எங்கே இருக்கிறார் என்று தெரிந்துகொள்ள தயவு செய்து உதவி செய்யுங்கள், கடவுளே!” என்று ஜெபம் செய்திருக்கிறார். அப்பா இறந்து 17 வருஷங்களுக்குப் பிறகு, யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இறந்தவர்கள் எதுவுமே தெரியாத ஒரு நிலையில், அதாவது ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போன்ற ஒரு நிலையில், இருக்கிறார்கள் என்றும் எதிர்காலத்தில் மறுபடியும் உயிரோடு வருவார்கள் என்றும் பைபிளிலிருந்து தெரிந்துகொண்டார்; அது அவருக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. (பிர. 9:5, 10; அப். 24:15) ரொம்ப நாளாக மனதைப் போட்டுக் குடைந்துகொண்டிருந்த கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடித்ததை நினைத்து சந்தோஷப்பட்டார். கற்றுக்கொண்ட உண்மைகளைத் தன்னுடைய மனைவி ரோஸிடமும் சொன்னார். இரண்டு பேரும் சேர்ந்து பைபிளைப் படித்தார்கள்; 1978-ல் ஞானஸ்நானம் எடுத்தார்கள். பைபிள் உண்மைகள் அவர்களுக்கு ரொம்ப பிடித்திருந்ததால், நண்பர்களிடமும் சொந்தக்காரர்களிடமும் அதைப் பற்றி சொன்னார்கள். 70 பேருக்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் எடுக்க அவர்கள் இரண்டு பேரும் உதவியிருக்கிறார்கள்.
7. பைபிளில் இருக்கிற உண்மைகள் நம் இதயத்தில் வேர்விடும்போது என்ன ஆகும்? (லூக்கா 6:45)
7 பைபிளில் இருக்கிற உண்மைகள் நம் இதயத்தில் வேர்விடும்போது, அதைப் பற்றி நம்மால் பேசாமல் இருக்க முடியாது. (லூக்கா 6:45-ஐ வாசியுங்கள்.) முதல் நூற்றாண்டிலிருந்த இயேசுவின் சீஷர்களைப்போல் நமக்கு இருக்கும். “‘நாங்கள் பார்த்தவற்றையும் கேட்டவற்றையும் பற்றிப் பேசுவதை எங்களால் நிறுத்த முடியாது’ என்று [அவர்கள்] சொன்னார்கள்.” (அப். 4:20) பைபிள் உண்மைகளை நாம் ரொம்ப நேசிப்பதால் அதைப் பற்றி நாம் முடிந்த அளவுக்கு எல்லாரிடமும் சொல்கிறோம்.
மக்களை நேசிக்கிறோம்
8. நல்ல செய்தியை மற்றவர்களுக்கு சொல்ல நாம் ஏன் ஆசைப்படுகிறோம்? (“அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.) (படத்தையும் பாருங்கள்.)
8 யெகோவாவும் இயேசுவும் மக்களை நேசிப்பதுபோல் நாமும் மக்களை நேசிக்கிறோம். (நீதி. 8:31; யோவா. 3:16) அவர்களுக்குக் ‘கடவுளை பற்றி தெரியாது;’ எந்த ‘நம்பிக்கையும்’ இல்லாமல் வாழ்கிறார்கள். (எபே. 2:12) அவர்களைப் பார்க்கும்போது நம் மனம் உருகுகிறது. பிரச்சினை என்ற கடலில் அவர்கள் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்றுவதற்கான லைஃப் ஜாக்கெட் (Life Jacket), அதாவது நல்ல செய்தி, நம்மிடம் இருக்கிறது. அவர்கள்மேல் அன்பும் கரிசனையும் இருப்பதால் அவர்களைக் காப்பாற்றுவதற்கு நம்மால் முடிந்த எல்லா முயற்சியையும் எடுக்கிறோம். நாம் சொல்லும் செய்தி அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கும், இப்போதே நல்லபடியாக வாழ உதவும். எதிர்காலத்திலும் “உண்மையான வாழ்வை,” அதாவது பூஞ்சோலை பூமியில் என்றென்றும் வாழும் வாழ்க்கையை, அது அவர்களுக்குக் கொடுக்கும்.—1 தீ. 6:19.
மக்கள்மேல் அன்பும் கரிசனையும் இருப்பதால் நல்ல செய்தியை அவர்களிடம் சொல்ல நம்மால் முடிந்த எல்லா முயற்சியும் எடுக்கிறோம் (பாரா 8)
9. எதிர்காலத்தைப் பற்றி நாம் என்ன எச்சரிப்பு கொடுக்கிறோம்? ஏன்? (எசேக்கியேல் 33:7, 8)
9 மக்கள்மேல் அன்பு இருப்பதால்தான் இந்த உலகத்துக்கு வரப்போகிற முடிவைப் பற்றியும் எச்சரிக்கிறோம். (எசேக்கியேல் 33:7, 8-ஐ வாசியுங்கள்.) நம்மை சுற்றி இருக்கிறவர்களையும் சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்களையும் பார்க்கும்போது நமக்கு வேதனையாக இருக்கிறது. ஏனென்றால், பயங்கர கஷ்டமான ஒரு காலப்பகுதி, அதாவது மிகுந்த உபத்திரவம், வரப்போகிறது என்பதே தெரியாமல் அவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். “அப்படிப்பட்ட உபத்திரவம் உலகத்தின் ஆரம்பம்முதல் இதுவரை வந்ததில்லை, அதற்குப் பிறகும் வரப்போவதில்லை” என்று இயேசு சொன்னார். (மத். 24:21) யெகோவா இந்த உலகத்தை நியாயந்தீர்க்கப்போகிறார் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். முதலில் பொய்மதம் அழியும், பிறகு சாத்தானின் மொத்த உலகமும் அழியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். (வெளி. 16:14, 16; 17:16, 17; 19:11, 19, 20) நாம் கொடுக்கும் எச்சரிப்பை இப்போதே நிறைய பேர் கேட்டு யெகோவாவை வணங்க ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்; அதற்காக ஜெபமும் செய்கிறோம். ஆனால், நாம் சொல்லும் செய்தியைக் கேட்காதவர்களுக்கு என்ன ஆகும்? நம் சொந்தக்காரர்களுக்கு என்ன ஆகும்?
10. எதிர்காலத்தில் நடக்கப்போகிற விஷயங்களைப் பற்றி மக்களை எச்சரிப்பது ஏன் இப்போது அவசரம்?
10 மகா பாபிலோன் அழியும் சமயத்தில் சிலர் மனசு மாறி யெகோவாவின் பக்கம் வரலாம் என்றும், அவர் அவர்களைக் காப்பாற்றலாம் என்றும் போன கட்டுரையில் பார்த்தோம். அப்படியென்றால், இப்போதே நாம் மக்களை எச்சரிப்பது எவ்வளவு முக்கியம்! இப்போது நாம் சொன்னால்தான், அந்த சமயத்தில் அது அவர்களுடைய ஞாபகத்துக்கு வரலாம். (எசேக்கியேல் 33:33-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) அதை யோசித்துப் பார்த்து உண்மை வணக்கத்தின் பக்கம் அவர்கள் வரலாம். பிலிப்பியில் இருந்த சிறை காவலனுக்கு அதுதான் நடந்தது. “பயங்கர நிலநடுக்கம்” வந்தப் பிறகு, அவனுடைய மனசு மாறியது. அதேபோல், பொய் மதங்களின் அழிவைப் பார்த்த பிறகு, சிலர் மனசு மாறலாம்.—அப். 16:25-34.
யெகோவாவையும் அவருடைய பெயரையும் நேசிக்கிறோம்
11. நாம் எப்படி யெகோவாவுக்கு மகிமையையும் மாண்பையும் வல்லமையையும் கொடுக்கிறோம்? (வெளிப்படுத்துதல் 4:11) (படங்களையும் பாருங்கள்.)
11 யெகோவாவையும் அவருடைய பெயரையும் நாம் நேசிக்கிறோம்; நல்ல செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதற்கான முக்கியமான காரணம் இதுதான். ஊழியம் செய்வதன்மூலம் நாம் யெகோவாவைப் புகழ்கிறோம். (வெளிப்படுத்துதல் 4:11-ஐ வாசியுங்கள்.) யெகோவா, மகிமையும் மாண்பும் வல்லமையும் பெற்றுக்கொள்ள தகுதியானவர் என்று மனசார ஒத்துக்கொள்கிறோம். யெகோவாதான் ‘எல்லாவற்றையும் படைத்தார்’ என்பதற்கும் நாம் உயிர்வாழ்வதற்கு அவர்தான் காரணம் என்பதற்கும் உறுதியான ஆதாரங்களை மற்றவர்களுக்குக் காட்டுகிறோம். இப்படி, அவருக்கு மகிமையையும் மாண்பையும் கொடுக்கிறோம். அதோடு, நல்ல செய்தியை மற்றவர்களுக்கு சொல்வதற்காக நம்முடைய நேரம், சக்தி, பொருள்வளங்கள் ஆகியவற்றை பயன்படுத்துகிறோம். இப்படி நம்முடைய வல்லமையை அவருக்குக் கொடுக்கிறோம். (மத். 6:33; லூக். 13:24; கொலோ. 3:23) சுருக்கமாக சொன்னால், நாம் உயிரையே வைத்திருக்கும் நம் கடவுளைப் பற்றி பேசுவது நமக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய பெயரைப் பற்றியும் அதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பற்றியும் எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று நாம் துடிக்கிறோம்.
நம்முடைய நேரம், சக்தி, பொருள்வளங்கள் ஆகியவற்றை ஊழியத்தில் பயன்படுத்துவதன்மூலம் நம் வல்லமையை யெகோவாவுக்குக் கொடுக்கிறோம் (பாரா 11)
12. ஊழியம் செய்யும்போது நாம் எப்படி யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துகிறோம்?
12 யெகோவாமேல் அன்பு இருப்பதால், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த நாம் ஆசைப்படுகிறோம். (மத். 6:9) அவரைப் பற்றி சாத்தான் சொல்லியிருப்பது எல்லாமே பொய்தான் என்பதை எடுத்து சொல்ல விரும்புகிறோம். (ஆதி. 3:1-5; யோபு 2:4; யோவா. 8:44) அதனால் ஊழியம் செய்யும்போது, யெகோவாவைப் பற்றிய உண்மைகளை சொல்கிறோம். அதாவது, யெகோவாவிடம் இருக்கும் முக்கியமான குணம் அன்புதான்... அவர் நியாயமாகவும் நீதியாகவும் ஆட்சி செய்கிறார்... அவருடைய அரசாங்கம் நம்முடைய எல்லா கஷ்டங்களுக்கும் முடிவுகட்டி, சீக்கிரத்தில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் கொண்டுவரும்... என்று எல்லாருக்கும் சொல்கிறோம். (சங். 37:10, 11, 29; 1 யோ. 4:8) ஊழியத்தில் இதையெல்லாம் சொல்லும்போது நாம் யெகோவாவுடைய பெயரை பரிசுத்தப்படுத்துகிறோம். அதுமட்டுமல்ல, யெகோவாவின் சாட்சிகளாக அந்தப் பெயருக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறோம் என்ற சந்தோஷமும் நமக்குக் கிடைக்கிறது. எப்படி?
13. யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுவதை நாம் ஏன் ஒரு கவுரவமாக நினைக்கிறோம்? (ஏசாயா 43:10-12)
13 யெகோவா நம்மைத் தன்னுடைய ‘சாட்சிகள்’ என்று அழைக்கிறார். (ஏசாயா 43:10-12-ஐ வாசியுங்கள்.) சில வருஷங்களுக்கு முன்பு, ஆளும் குழுவிடமிருந்து வந்த ஒரு கடிதம் இப்படி சொன்னது: “யெகோவாவின் சாட்சிகள் என அழைக்கப்படுவதைவிடவும் பெருமைப்படத்தக்க விஷயம் வேறு எதுவுமே இல்லை.”c ஏன் அப்படி சொல்கிறோம்? இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: உங்கள்மேல் ஒரு வழக்கு போடப்பட்டிருக்கிறது. உங்களைப் பற்றி... நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றி... சாட்சி சொல்ல நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுக்கு நன்றாக தெரிந்த, நீங்கள் நம்புகிற ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். அதுமட்டுமல்ல, எல்லாரிடமும் நல்ல பெயர் எடுத்திருக்கும் ஒருவரைத்தான் தேர்ந்தெடுப்பீர்கள். தன்னைப் பற்றி சாட்சி கொடுக்க யெகோவா நம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்! அப்படியென்றால், அவர் நம்மை எந்தளவுக்குத் தெரிந்துவைத்திருக்கிறார், நம்மை எந்தளவுக்கு நம்புகிறார்! அவருக்கு சாட்சிகளாக இருப்பதை நாம் ஒரு கவுரவமாக நினைக்கிறோம். அதனால், நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி அவருடைய பெயரை நாம் பரிசுத்தப்படுத்துகிறோம். அவரைப் பற்றி சொல்லப்பட்ட பொய்களையெல்லாம் வெட்டவெளிச்சமாக்குகிறோம். இப்படி, யெகோவாவின் சாட்சிகளாக நம்முடைய பெயருக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறோம்!—சங். 83:18; ரோ. 10:13-15.
முடிவு வரும்வரை தொடர்ந்து பிரசங்கிப்போம்
14. என்ன சுவாரஸ்யமான சம்பவங்கள் நடக்கலாம் என்று நாம் எதிர்பார்க்கிறோம்?
14 எதிர்காலத்தில் நடக்கப்போகிற சுவாரஸ்யமான சம்பவங்களைப் பார்ப்பதற்கு நாம் ரொம்ப ஆசையாக காத்திருக்கிறோம். மிகுந்த உபத்திரவம் ஆரம்பிக்கும் முன்பே நிறைய பேர் சத்தியத்தை ஏற்றுக்கொள்வார்கள் என்று நாம் நம்புகிறோம். அதோடு, மனித சரித்திரத்திலேயே இருண்ட ஒரு காலப்பகுதியிலும், அதாவது மிகுந்த உபத்திரவம் சமயத்திலும், நிறைய பேர் சாத்தானுடைய உலகத்தை விட்டு வெளியே வந்து யெகோவாவைப் புகழ்வார்கள் என்றும் நம்புகிறோம். —அப். 13:48.
15-16. நாம் எதை செய்துகொண்டே இருப்போம்? எதுவரை செய்வோம்?
15 அதுவரை நாம் செய்வதற்கு முக்கியமான வேலை இருக்கிறது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி நாம் எல்லாரிடமும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்த வேலையை செய்வதற்கு நமக்கு மறுபடியும் வாய்ப்பு கிடைக்காது. நல்ல செய்தியை சொல்கிற அதேசமயத்தில், நாம் மக்களை எச்சரிக்கவும் வேண்டும். இந்த உலகத்துக்கு சீக்கிரத்தில் முடிவு வரப்போகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் யெகோவா நியாயந்தீர்க்கிற சமயம் வரும்போது, நாம் சொன்ன செய்தி அவரிடமிருந்துதான் வந்தது என்பதை எல்லாரும் புரிந்துகொள்வார்கள்.—எசே. 38:23.
16 அப்படியென்றால், நாம் என்ன செய்யலாம்? அன்பால் தூண்டப்பட்டு நல்ல செய்தியைப் பிரசங்கிக்கலாம். அந்த செய்தியை நாம் நேசிக்கிறோம், மக்களை நேசிக்கிறோம், யெகோவாவையும் அவருடைய பெயரையும் நேசிக்கிறோம்; அதனால் தொடர்ந்து அந்த வேலையை செய்வோம். சுறுசுறுப்போடும், ஆர்வத்துடிப்போடும், அவசர உணர்வோடும் செய்வோம். யெகோவா, “போதும்!” என்று சொல்லும்வரை செய்வோம்!
பாட்டு 54 ‘இதுதான் வழி’
a அக்டோபர் 7, 2023 அன்று நியு யார்க்கில் இருக்கிற யெகோவாவின் சாட்சிகளுடைய நியூபர்க் மாநாட்டு மன்றத்தில் வருடாந்தர கூட்டம் நடந்தது. இந்த முழு நிகழ்ச்சியும் 2 பாகமாக நவம்பர் 2023-லும் ஜனவரி 2024-லும் JW பிராட்காஸ்டிங்கில் வந்தது.
b “பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது—தெளிவான நியாயமான பதில்களை பைபிளில் பார்த்தபோது ஆச்சரியப்பட்டேன்” என்ற ஆன்லைன் கட்டுரையைப் பாருங்கள்.
c யெகோவாவின் சாட்சிகளுடைய இயர்புக் 2007-ல் பக்கம் 3-ஐப் பாருங்கள்.