படிப்புக் கட்டுரை 41
பாட்டு 13 ஏசு நமக்கு முன்மாதிரி
பூமியில் இயேசுவின் கடைசி 40 நாட்கள்—பாடங்கள்
“[இயேசு] 40 நாட்களாக அவர்களுக்குத் தோன்றி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லிவந்தார்.”—அப். 1:3.
என்ன கற்றுக்கொள்வோம்?
பூமியிலிருந்த கடைசி 40 நாட்களில் இயேசு என்ன செய்தார் என்றும் அவரை மாதிரியே நாம் எப்படி நடந்துகொள்ளலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.
1-2. எம்மாவு ஊருக்கு இயேசுவின் இரண்டு சீஷர்கள் போய்க்கொண்டிருந்தபோது என்ன நடந்தது?
கி.பி. 33, நிசான் 16! இயேசுவின் சீஷர்கள் வேதனையில் துவண்டுபோயிருந்தார்கள்; பயத்தில் உறைந்துபோயிருந்தார்கள். அந்தச் சீஷர்களில் இரண்டு பேர் எருசலேமிலிருந்து எம்மாவு என்ற கிராமத்துக்குப் போய்கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமம் எருசலேமிலிருந்து கிட்டத்தட்ட 11 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. இந்த இரண்டு பேரும் மனதளவில் உடைந்துபோயிருந்தார்கள். ஏனென்றால், அவர்களுடைய தலைவர் இயேசு கொஞ்ச நாள் முன்புதான் கொலை செய்யப்பட்டிருந்தார். மேசியா தங்களுக்காக நிறையச் செய்வார் என்று அவர்கள் நம்பியிருந்தார்கள்; இப்போதோ அவர் இல்லை! ஆனால், அவர்களுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.
2 அவர்கள் போய்கொண்டிருந்தபோது ஒருவர் அவர்களோடு சேர்ந்துகொள்கிறார். தங்களுடைய எஜமானுக்கு நடந்த விஷயங்களைப் பற்றி அந்த இரண்டு சீஷர்கள் வேதனையோடு அவரிடம் சொல்கிறார்கள். அப்போது அந்த நபர் சில விஷயங்களைப் பேச ஆரம்பிக்கிறார். மேசியா ஏன் கஷ்டப்பட்டுச் சாக வேண்டியிருந்தது என்பதை அவர் விளக்குகிறார். “மோசேயின் புத்தகங்கள்முதல் எல்லா தீர்க்கதரிசிகளின் புத்தகங்கள்வரை” சொல்லப்பட்ட விஷயங்களிலிருந்து பேசுகிறார். அவர்கள் எம்மாவு ஊருக்கு வந்த உடனே, தான் யார் என்பதை அந்த நபர் வெளிப்படுத்துகிறார். அவர்தான் உயிர்தெழுப்பப்பட்ட இயேசு! அவர் அந்தச் சமயத்தில் சொன்ன விஷயங்களை அந்தச் சீஷர்கள் வாழ்நாள் முழுவதும் மறந்திருக்கவே மாட்டார்கள். மேசியா உயிரோடு இருக்கிறார் என்று தெரிந்தபோது அவர்கள் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்கள்!—லூக். 24:13-35.
3-4. (அ) இயேசு எப்படித் தன்னுடைய சீஷர்களுக்கு உதவினார், அதனால் என்ன பலன் கிடைத்தது? (அப்போஸ்தலர் 1:3) (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
3 இயேசு பூமியிலிருந்த கடைசி 40 நாட்களில் நிறையத் தடவை சீஷர்களுக்குத் தோன்றினார். (அப்போஸ்தலர் 1:3-ஐ வாசியுங்கள்.) வேதனையிலும் பயத்திலும் இருந்த சீஷர்களை உற்சாகப்படுத்தினார். சோகத்தில் உறைந்துபோயிருந்த சீஷர்கள், சந்தோஷமான தைரியமான ஒரு படையாக உருவெடுத்தார்கள்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பிரசங்கிக்கவும் மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் தயாரானார்கள்.a
4 இயேசுவின் வாழ்க்கையில் இந்தக் காலப்பகுதியைப் பற்றிப் படிப்பது நமக்குப் பிரயோஜனமாக இருக்கும். இயேசு அந்தக் காலப்பகுதியில் தன்னுடைய சீஷர்களை எப்படி (1) உற்சாகப்படுத்தினார், (2) வேதவசனங்களைப் புரிந்துகொள்ள உதவினார், (3) கூடுதலான பொறுப்புகளைச் செய்ய பயிற்சி கொடுத்தார் என்று பார்ப்போம். இந்த ஒவ்வொரு விஷயத்திலும் நாம் எப்படி இயேசுவை மாதிரி நடந்துகொள்ளலாம் என்றும் பார்ப்போம்.
மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள்
5. இயேசுவின் சீஷர்களுக்கு ஏன் உற்சாகம் தேவைப்பட்டது?
5 இயேசுவின் சீஷர்களுக்கு உற்சாகம் தேவைப்பட்டது. ஏன்? ஏனென்றால், அவர்களில் சிலர் வீடு, குடும்பம், தொழில் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றி வந்திருந்தார்கள். (மத். 19:27) வேறுசிலர், இயேசுவின் சீஷராக ஆன ஒரே காரணத்தினால் அவமானத்தையும் அநியாயத்தையும் சந்தித்தார்கள். (யோவா. 9:22) இயேசுதான் வாக்குப்பண்ணப்பட்ட மேசியா என்பதை நம்பியதால்தான் அவர்கள் இந்தத் தியாகங்களைச் செய்தார்கள். (மத். 16:16) ஆனால், இயேசு கொலை செய்யப்பட்டபோது அவர்களுடைய நம்பிக்கை தவிடுப்பொடியானது; அவர்கள் மனமுடைந்துபோனார்கள்.
6. உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு இயேசு என்ன செய்தார்?
6 சீஷர்கள் ஏன் சோர்ந்துப்போயிருந்தார்கள் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. அவர்களுக்கு விசுவாசம் இல்லாததால் அல்ல, ஒரு பெரிய இழப்பைச் சந்தித்ததால்தான் அவர்கள் அப்படி இருந்தார்கள் என்று இயேசு புரிந்துகொண்டார். அதனால், உயிர்த்தெழுப்பப்பட்ட அதே நாளிலிருந்து தன் சீஷர்களை உற்சாகப்படுத்தினார். உதாரணத்துக்கு, மகதலேனா மரியாள் கல்லறைக்கு வெளியே நின்று அழுதுக்கொண்டு இருந்தபோது அவளுக்கு முன்பு தோன்றினார். (யோவா. 20:11, 16) பிறகு, ஆரம்பத்தில் பார்த்த மாதிரி இரண்டு சீஷர்களுக்குத் தோன்றினார். அப்போஸ்தலன் பேதுருவுக்கும் தோன்றினார். (லூக். 24:34) இயேசுவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்? மகதலேனா மரியாளுக்கு முன் தோன்றியபோது என்ன நடந்தது என்று இப்போது பார்க்கலாம்.
7. யோவான் 20:11-16 சொல்வதுபோல், மரியாள் என்ன செய்வதை இயேசு பார்த்தார், அதனால் என்ன செய்தார்? (படத்தையும் பாருங்கள்.)
7 யோவான் 20:11-16-ஐ வாசியுங்கள். நிசான் 16 அன்று, சில பெண்கள் இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு அதிகாலையிலேயே போனார்கள். (லூக். 24:1, 10) அந்தப் பெண்களில் ஒருவர்தான் மகதலேனா மரியாள். மரியாள் அந்தக் கல்லறைக்கு வந்தபோது அது காலியாக இருந்தது. உடனே அவள் ஓடிப்போய் பேதுருவிடமும் யோவானிடமும் அதைப் பற்றிச் சொன்னாள். அதைக் கேட்டு அவர்கள் கல்லறைக்கு வேக வேகமாக ஓடிவந்தார்கள்; மரியாளும் கூடவே வந்தாள். கல்லறை காலியாக இருந்ததைப் பார்த்ததும் அந்த இரண்டு பேரும் வீட்டுக்குத் திரும்பிப் போனார்கள். ஆனால், மரியாள் போகவில்லை. அங்கே நின்று அழுதுகொண்டே இருந்தாள். இதை இயேசு பார்த்துக்கொண்டிருந்தார் என்று அவளுக்குத் தெரிந்திருக்காது. மரியாள் அழுவதைப் பார்த்தபோது இயேசுவின் மனம் உருகியது. அதனால், மரியாளுக்கு முன் தோன்றி அவளிடம் பேசினார். அது அவளை ரொம்ப உற்சாகப்படுத்தியது. அவளுக்கு ஒரு முக்கியமான பொறுப்பையும் இயேசு கொடுத்தார். தான் உயிர்த்தெழுப்பப்பட்ட செய்தியைச் சீஷர்களிடம் போய் சொல்லச் சொன்னார்.—யோவா. 20:17, 18.
இயேசு மாதிரியே மற்றவர்களை நன்றாகக் கவனியுங்கள். சோர்ந்துப்போய் இருக்கிறவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவுங்கள் (பாரா 7)
8. நாம் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்?
8 நாம் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்? தொடர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ய நம் சகோதர சகோதரிகளை நாம் உற்சாகப்படுத்தலாம். இயேசு மாதிரியே, அவர்கள் என்ன கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்று கவனிக்கலாம். அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யலாம், ஆறுதல்படுத்தலாம். ஜோஸ்லின் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவருடைய சகோதரி ஒரு கோரமான விபத்தில் இறந்துவிட்டார். ஜோஸ்லின் சொல்கிறார்: “நிறைய மாதங்களாக, தாங்க முடியாத வேதனையில் தவித்தேன்.” ஒரு சகோதரரும் அவருடைய மனைவியும், ஜோஸ்லினைத் தங்களுடைய வீட்டுக்குக் கூப்பிட்டார்கள். அவர் மனம் திறந்து பேசுவதைக் காதுகொடுத்து கேட்டார்கள். கடவுளுக்கு அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பதையும் புரிய வைத்தார்கள். அதைப் பற்றி ஜோஸ்லின் சொல்கிறார்: “கொந்தளிக்கிற கடலில் நான் தத்தளித்துகொண்டிருந்தேன். ஆனால், அவர்களைப் பயன்படுத்தி யெகோவா என்னைக் காப்பாற்றினார். யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை மறுபடியும் வளர்த்துக்கொள்ள அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள்.” மற்றவர்கள் தங்களுடைய மனதில் இருப்பதைக் கொட்டும்போது நாமும் கவனித்துக் கேட்க வேண்டும். அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு பேச வேண்டும். இப்படிச் செய்யும்போது, யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து செய்ய அவர்களுக்குப் பலம் கிடைக்கும்.—ரோ. 12:15.
வேதவசனங்களைப் புரிந்துகொள்ள உதவுங்கள்
9. இயேசுவின் சீஷர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தது, இயேசு அவர்களுக்கு எப்படி உதவினார்?
9 இயேசுவின் சீஷர்கள் கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள், அதை வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கும் கடினமாக முயற்சி செய்தார்கள். (யோவா. 17:6) ஆனாலும், இயேசு ஒரு குற்றவாளியாகச் சித்திரவதைக் கம்பத்தில் இறந்தது அவர்களைக் குழப்பியது. விசுவாசம் குறைவாக இருந்ததால் அல்ல, வேதவசனங்களைச் சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் அவர்கள் குழம்பிப்போனார்கள் என்பதை இயேசு தெரிந்துகொண்டார். (லூக். 9:44, 45; யோவா. 20:9) அதனால், வேதவசனங்களைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவினார். எம்மாவு ஊருக்குப் போகிற வழியில் இரண்டு சீஷர்களுக்குத் தோன்றியபோது அவர் என்ன செய்தார் என்று பார்க்கலாம்.
10. தான்தான் உண்மையிலேயே மேசியா என்பதைச் சீஷர்களுக்கு இயேசு எப்படிப் புரியவைத்தார்? (லூக்கா 24:18-27)
10 லூக்கா 24:18-27-ஐ வாசியுங்கள். தான் யார் என்பதை இயேசு உடனடியாகச் சொல்லிவிடவில்லை. அதற்குப் பதிலாக, கேள்விகள் கேட்டார். ஏன்? அந்த இரண்டு பேரும் தங்கள் மனதில் இருந்ததைச் சொல்ல வேண்டும் என்று இயேசு நினைத்தார். அவர்களும் அதைச் சொன்னார்கள். அதாவது, ரோமர்களுடைய கட்டுப்பாட்டிலிருந்து இயேசு இஸ்ரவேலைக் காப்பாற்றுவார் என்று நம்பியதைச் சொன்னார்கள். மனதில் இருந்ததை அவர்கள் சொன்ன பிறகு, இயேசு வேதவசனங்களைப் பயன்படுத்தி, நடந்த எல்லா சம்பவங்களுமே தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் என்பதைப் புரியவைத்தார்.b அன்று சாயங்காலம், மற்ற சீஷர்களுக்கும் இந்த உண்மைகளைப் புரியவைத்தார். (லூக். 24:33-48) இந்தப் பதிவிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்?
11-12. (அ) பைபிள் உண்மைகளை இயேசு சொல்லிக்கொடுத்த விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படங்களையும் பாருங்கள்.) (ஆ) நார்டேக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரர் அவருக்கு எப்படி உதவினார்?
11 நாம் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்? பைபிள் படிப்பு நடத்தும்போது, மாணவருடைய மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்வதற்குக் கேள்விகள் கேளுங்கள். (நீதி. 20:5) அவருடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொண்ட பிறகு, அவருடைய சூழ்நிலைக்குப் பொருந்தும் பைபிள் வசனங்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று காட்டுங்கள். அவர் என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே சொல்லிவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, பைபிள் வசனங்களைப் புரிந்துகொள்வதற்கும், அதில் இருக்கிற நியமங்களை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசிப்பதற்கும் உதவுங்கள். கானாவில் இருக்கிற நார்டே என்ற சகோதரரின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம்.
12 அவர் 16 வயதில் பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்தார். ஆனால், அவருடைய குடும்பத்தில் இருந்தவர்கள் அவரை எதிர்த்தார்கள். உறுதியாக இருக்க நார்டேக்கு எது உதவியது? அவருக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரர், மத்தேயு 10-வது அதிகாரத்தைப் பயன்படுத்தி உண்மை கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்படுவார்கள் என்பதை அவருக்கு விளக்கியிருந்தார். நார்டே சொல்கிறார்: “எனக்குத் துன்புறுத்தல் வந்தபோது, இதுதான் சத்தியம் என்பது உறுதியானது.” மத்தேயு 10:16-ஐப் புரிந்துகொள்ளவும் பைபிள் படிப்பு நடத்திய சகோதரர் நார்டேவுக்கு உதவினார். வீட்டில் தன்னுடைய நம்பிக்கைகளைப் பற்றிச் சொல்லும்போது ஜாக்கிரதையாகவும், அதேசமயத்தில் மரியாதையாகவும் பேசுவதற்கு அந்த வசனம் அவருக்கு உதவியது. ஞானஸ்நானம் எடுத்த பிறகு, நார்டே பயனியர் ஊழியம் செய்ய ஆசைப்பட்டார். ஆனால், நார்டே கல்லூரிக்குப் போக வேண்டும் என்று அவருடைய அப்பா எதிர்பார்த்தார். பைபிள் படிப்பு நடத்திய சகோதரர், அந்தச் சூழ்நிலையில் நார்டே என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாக, கேள்விகள் கேட்டார், பைபிள் நியமங்களைப் பயன்படுத்தி யோசிக்க உதவினார். நார்டே என்ன முடிவு எடுத்தார்? அவர் முழுநேர சேவையை ஆரம்பித்தார். அதனால் அவருடைய அப்பா அவரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். நடந்த விஷயத்தைப் பற்றி நார்டே என்ன நினைக்கிறார்? “நான் சரியான முடிவுதான் எடுத்திருக்கிறேன் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை” என்கிறார். பைபிள் வசனங்களை வைத்து முடிவுகள் எடுக்க நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யும்போது, அவர்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆவார்கள்.—எபே. 3:16-19.
இயேசு மாதிரியே பைபிள் வசனங்களைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவுங்கள் (பாரா 11)e
‘மனிதர்களில் பரிசுகளாக’ ஆக சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுங்கள்
13. பிரசங்க வேலை தொடர்ந்து நடப்பதற்கு இயேசு என்ன செய்தார்? (எபேசியர் 4:8)
13 இயேசு பூமியில் இருந்தபோது தன்னுடைய அப்பா கொடுத்த வேலையைப் பொறுப்பாகச் செய்தார். (யோவா. 17:4) ‘என்னால் மட்டும்தான் யெகோவா கொடுத்த வேலையைச் சரியாகச் செய்ய முடியும்’ என்று அவர் நினைக்கவில்லை. அவர் ஊழியம் செய்த மூன்றரை வருஷத்தில், பிரசங்க வேலையைச் செய்வதற்கு மற்றவர்களுக்கும் பயிற்சி கொடுத்தார். பரலோகத்துக்குப் போவதற்கு முன்பு, யெகோவாவுடைய ஆடுகளைக் கவனிப்பதற்கும், பிரசங்கித்து சீஷராக்குகிற வேலையை வழிநடத்துவதற்கும் தன்னுடைய சீஷர்களுக்குப் பொறுப்பு கொடுத்தார். அந்தச் சீஷர்களில் சிலர், 20-லிருந்து 30 வயதுக்குள் இருந்திருக்கலாம். (எபேசியர் 4:8-ஐ வாசியுங்கள்.) பூமியில் இருந்த கடைசி 40 நாட்களில், இந்த உண்மையுள்ள ஆண்கள் ‘மனிதர்களில் பரிசுகளாக’ ஆவதற்கு இயேசு எப்படிப் பயிற்சி கொடுத்தார்?—எபேசியர் 4:8-ன் ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள் (ஆங்கில ஆராய்ச்சி பைபிள்).
14. சீஷர்கள் முதிர்ச்சியுள்ளவர்களாக ஆவதற்கு இயேசு எப்படி உதவினார்? (படத்தையும் பாருங்கள்.)
14 இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு வெளிப்படையாக ஆலோசனை கொடுத்தார்; அதேசமயத்தில், அதை அன்பாகக் கொடுத்தார். உதாரணத்துக்கு, சீஷர்களில் சிலர் சந்தேகப்படுவதைக் கவனித்து அவர்களுக்கு ஆலோசனை கொடுத்தார். (லூக். 24:25-27; யோவா. 20:27) சொந்த தொழிலில் கவனம் செலுத்துவதைவிட ஆடுகளைப் பார்த்துக்கொள்வதற்கு அதிக கவனம் செலுத்துவது முக்கியம் என்பதைப் புரியவைத்தார். (யோவா. 21:15) யெகோவாவின் சேவையில், மற்றவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்பட தேவையில்லை என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். (யோவா. 21:20-22) அதோடு, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த சில தவறான எண்ணங்களைச் சரிசெய்தார். பிரசங்கிக்கும் வேலையை முழு மூச்சோடு செய்ய அவர்களை உற்சாகப்படுத்தினார். (அப். 1:6-8) இயேசுவிடமிருந்து மூப்பர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
இயேசு மாதிரியே பொறுப்புகளை எடுத்துச் செய்ய சகோதரர்களுக்கு உதவுங்கள் (பாரா 14)
15-16. (அ) மூப்பர்கள் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்? (ஆ) ஆலோசனை கிடைத்ததால் சகோதரர் பேட்ரிக் எப்படி நன்மையடைந்தார்?
15 மூப்பர்கள் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்? மூப்பர்கள் மற்ற சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுக்க வேண்டும்; அவர்களுக்கு உதவ வேண்டும். வயதில் சிறியவர்களாக இருக்கிற சகோதரர்களுக்குக்கூட, பெரிய பொறுப்புகளை எடுத்துச் செய்ய பயிற்சி கொடுக்கலாம்.c பயிற்சி பெறுகிற சகோதரர்கள் எல்லாவற்றையும் நூறு சதவீதம் சரியாகச் செய்ய வேண்டும் என்று மூப்பர்கள் எதிர்பார்ப்பதில்லை. இளம் சகோதரர்களுக்கு மூப்பர்கள் அன்பாக ஆலோசனை கொடுக்கும்போது அவர்கள் மனத்தாழ்மையாகவும் உண்மையாகவும் இருக்க கற்றுக்கொள்வார்கள்; மற்றவர்களுக்கு உதவி செய்யவும் தயாராக இருப்பார்கள்.—1 தீ. 3:1; 2 தீ. 2:2; 1 பே. 5:5.
16 ஆலோசனை கிடைத்ததால் பேட்ரிக் என்ற சகோதரர் ரொம்ப நன்மையடைந்தார். இளம் வயதில் அவர் மற்றவர்களிடம் நொகடிக்கிற மாதிரி பேசுவார், கடுமையாக நடந்துகொள்வார்; சகோதரிகளிடம்கூட அப்படி நடந்துகொள்வார். இதை ஒரு முதிர்ச்சியுள்ள மூப்பர் கவனித்தார். பேட்ரிக்குக்கு அன்பாகவும், அதேசமயத்தில் நேரடியாகவும் ஆலோசனை கொடுத்தார். “நல்லவேளை, அந்த மூப்பர் எனக்கு ஆலோசனை கொடுத்தார்!” என்கிறார் பேட்ரிக். “நான் ஆசைப்பட்ட பொறுப்புகள் மற்ற சகோதரர்களுக்குக் கிடைத்தபோது எனக்குக் கஷ்டமாக இருந்தது. ஆனால், பொறுப்புகளுக்குப் பின்னால் ஓடுவதற்குப் பதிலாக சகோதர சகோதரிகளுக்கு மனத்தாழ்மையாக உதவி செய்வதுதான் முக்கியம் என்பதை அவர் கொடுத்த ஆலோசனை எனக்குப் புரிய வைத்தது.” இந்த ஆலோசனையைக் கடைப்பிடித்ததால், பேட்ரிக் 23 வயதில் மூப்பராக நியமிக்கப்பட்டார்.—நீதி. 27:9.
17. சீஷர்கள்மேல் நம்பிக்கை இருந்ததை இயேசு எப்படிக் காட்டினார்?
17 சீஷர்களுக்குப் பிரசங்கிக்கும் பொறுப்பை மட்டுமல்ல, கற்றுக்கொடுக்கும் பொறுப்பையும் இயேசு கொடுத்தார். (மத்தேயு 28:20-ன் “அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்ற ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.) இந்தப் பொறுப்பைச் செய்வதற்குத் தகுதி இல்லாததுபோல் சீஷர்கள் உணர்ந்திருக்கலாம். ஆனால், அதை அவர்களால் செய்ய முடியும் என்பதில் இயேசுவுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அவர்களிடம் முழு நம்பிக்கையோடு இப்படிச் சொன்னார்: “தகப்பன் என்னை அனுப்பியதுபோல் நானும் உங்களை அனுப்புகிறேன்.”—யோவா. 20:21.
18. மூப்பர்கள் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்?
18 மூப்பர்கள் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்? அனுபவமுள்ள மூப்பர்கள் மற்றவர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுக்கிறார்கள். (பிலி. 2:19-22) உதாரணத்துக்கு, ராஜ்ய மன்றத்தைச் சுத்தப்படுத்துகிற பராமரிக்கிற வேலைகளைச் செய்யும்போது மூப்பர்கள் இளம் சகோதரர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். மூப்பர்கள் சகோதரர்களுக்கு வேலைகளைக் கொடுக்கலாம், அதைச் செய்வதற்குப் பயிற்சி கொடுக்கலாம், அதைச் சரியாகச் செய்து முடிப்பார்கள் என்று நம்பலாம். புதிதாக மூப்பராக நியமிக்கப்பட்ட மேத்யூ என்ற சகோதரருடைய அனுபவத்தைப் பார்ப்போம். ஒரு நியமிப்பைச் செய்வதற்கு அனுபவமுள்ள மூப்பர்கள் மேத்யூவுக்கு நன்றாகப் பயிற்சி கொடுத்தார்கள். அந்த வேலையை அவர் சரியாகச் செய்து முடிப்பார் என்று நம்பினார்கள். அதற்கு மேத்யூ ரொம்ப நன்றியோடு இருக்கிறார். “நான் ஏதாவது தப்பு செய்துவிட்டால்கூட அதிலிருந்து கற்றுக்கொள்வதற்கும் அந்த வேலையை இன்னும் நன்றாகச் செய்வதற்கும் மூப்பர்கள் எனக்கு உதவி செய்தார்கள். அது எனக்கு ரொம்பப் பிரயோஜனமாக இருந்தது” என்று அவர் சொல்கிறார்.d
19. நாம் என்ன செய்ய வேண்டும்?
19 இயேசு பூமியிலிருந்த கடைசி 40 நாட்களில் சீஷர்களை உற்சாகப்படுத்தினார், அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார், பயிற்சி கொடுத்தார். நாமும் இயேசு மாதிரியே நடந்துகொள்ள கடினமாக முயற்சி செய்யலாம். (1 பே. 2:21) அப்படிச் செய்ய அவரும் நமக்கு உதவி செய்வார். சொல்லப்போனால், அவர் இப்படி வாக்குக் கொடுத்திருக்கிறார்: “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும் நான் உங்கள் கூடவே இருக்கிறேன்.”—மத். 28:20.
பாட்டு 15 யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்!
a உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு சீஷர்களுக்குத் தோன்றிய நிறையப் பதிவுகள், சுவிசேஷ புத்தகங்களிலும் மற்ற பைபிள் புத்தகங்களிலும் இருக்கின்றன. உதாரணத்துக்கு: மகதலேனா மரியாள் (யோவா. 20:11-18); மற்ற பெண்கள் (மத். 28:8-10; லூக். 24:8-11); இரண்டு சீஷர்கள் (லூக். 24:13-15); பேதுரு (லூக். 24:34); தோமாவைத் தவிர மற்ற அப்போஸ்தலர்கள் (யோவா. 20:19-24); தோமா உட்பட அப்போஸ்தலர்கள் (யோவா. 20:26); ஏழு சீஷர்கள் (யோவா. 21:1, 2); 500-க்கும் அதிகமான சீஷர்கள் (மத். 28:16; 1 கொ. 15:6); தன்னுடைய தம்பி யாக்கோபு (1 கொ. 15:7); எல்லா அப்போஸ்தலர்கள் (அப். 1:4); பெத்தானியாவுக்குப் பக்கத்தில் அப்போஸ்தலர்கள் (லூக். 24:50-52) போன்றவர்களுக்குத் தோன்றினார். இயேசு தோன்றிய மற்ற சமயங்கள் பதிவு செய்யப்படாமல் போயிருக்கலாம்.—யோவா. 21:25.
b மேசியானிய தீர்க்கதரிசனங்களின் பட்டியலை, jw.org வெப்சைட்டில், “மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்கள் இயேசுதான் மேசியா என்பதை நிரூபிக்கின்றனவா?” என்ற கட்டுரையில் பாருங்கள்.
c 25-லிருந்து 30 வயது இருக்கிற தகுதியுள்ள சகோதரர்கள்கூட வட்டாரக் கண்காணிகளாக நியமிக்கப்படலாம். ஆனால், அதற்கு முன்பு அவர்கள் கொஞ்ச காலத்துக்கு மூப்பர்களாகச் சேவை செய்திருக்க வேண்டும்.
d பொறுப்புகளை எடுத்துச் செய்ய இளம் சகோதரர்களுக்கு உதவுவதைப் பற்றிய கூடுதலான ஆலோசனைகள் இந்தக் கட்டுரைகளில் இருக்கின்றன: காவற்கோபுரம் ஆகஸ்ட் 2018, பக். 11-12, பாரா. 15-17 மற்றும் காவற்கோபுரம் ஏப்ரல் 15, 2015 பக். 3-13.
e பட விளக்கம்: பைபிள் வசனங்களைப் பயன்படுத்தி யோசித்துப் பார்ப்பதற்கு, ஒரு சகோதரர் தன்னுடைய பைபிள் மாணவருக்கு உதவுகிறார். அந்த பைபிள் மாணவர் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக வைத்திருந்த அலங்காரப் பொருள்களைத் தூக்கிப்போடுகிறார்.