உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w24 அக்டோபர் பக். 6-11
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா நம்மைத் தங்கமாகப் பார்க்கிறார்
  • யெகோவா நம்மை மன்னிக்கிறார்
  • யெகோவா தன்னுடைய சக்தியின் மூலம் ஆறுதல் தருகிறார்
  • யெகோவா சகோதர சகோதரிகள் மூலம் ஆறுதல் தருகிறார்
  • யெகோவா தன்னுடைய வாக்குறுதிகள் மூலம் ஆறுதல் தருகிறார்
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • நாம் ஒருநாளும் தனியாக இல்லை!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • சகித்திருக்க யெகோவா உதவுகிறார்​—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
w24 அக்டோபர் பக். 6-11

படிப்புக் கட்டுரை 40

பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!

உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்

“உள்ளம் உடைந்தவர்களை அவர் குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.”—சங். 147:3.

என்ன கற்றுக்கொள்வோம்?

நம் மனதில் ஏற்பட்ட ஆறாத காயங்கள் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். அந்தக் காயங்களுக்கு அவர் எப்படி மருந்து போடுகிறார் என்றும் நாம் எப்படி மற்றவர்களை ஆறுதல்படுத்தலாம் என்றும் இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்வோம்.

1. தன்னுடைய ஊழியர்களைப் பார்க்கும்போது யெகோவா எப்படி உணர்கிறார்?

யெகோவா பூமியில் இருக்கிற தன்னுடைய ஊழியர்களைப் பார்க்கும்போது எதையெல்லாம் கவனிக்கிறார்? அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கிற இன்ப துன்பங்களை அவர் கவனிக்கிறார். (சங். 37:18) நாம் மனதில் எவ்வளவு வலியைச் சுமந்து கொண்டிருந்தாலும் அவருக்குச் சேவை செய்வதற்காக முடிந்த எல்லாவற்றையும் செய்கிறோம்; இதைப் பார்க்கும்போது அவருடைய மனசு எவ்வளவு உருகும்! நமக்கு உதவி செய்வதற்கும் நம்மை ஆறுதல்படுத்துவதற்கும் யெகோவா ஆசையாக இருக்கிறார்.

2. உள்ளம் உடைந்தவர்களுக்காக யெகோவா என்ன செய்கிறார், அவருடைய கவனிப்பிலிருந்து முழுமையாக நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்?

2 உள்ளம் உடைந்தவர்களுடைய “காயங்களுக்கு [யெகோவா] கட்டுப் போடுகிறார்” என்று சங்கீதம் 147:3 சொல்கிறது. மனதளவில் காயப்பட்டவர்களை யெகோவா எவ்வளவு மென்மையாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதை இந்த வசனம் அழகாகக் காட்டுகிறது. ஆனால், யெகோவாவுடைய கவனிப்பிலிருந்து முழுமையாக நன்மையடைய நாம் என்ன செய்ய வேண்டும்? காயப்பட்ட ஒரு நபர் குணமாவதற்கு ஒரு நல்ல டாக்டரால் உதவ முடியும். ஆனால், காயப்பட்டவர் டாக்டர் சொல்கிற எல்லாவற்றையும் கவனமாகக் கடைப்பிடித்தால்தான் குணமாவார். இந்தக் கட்டுரையில், உள்ளம் உடைந்துபோனவர்களுக்காக யெகோவா தன்னுடைய வார்த்தையில் என்ன சொல்லியிருக்கிறார் என்றும் அவருடைய ஆலோசனையை நாம் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் பார்ப்போம்.

யெகோவா நம்மைத் தங்கமாகப் பார்க்கிறார்

3. சிலர் ஏன் ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்று நினைக்கிறார்கள்?

3 அன்பே இல்லாத ஒரு உலகத்தில் நாம் வாழ்கிறோம். நிறையப் பேர் மற்றவர்களை மோசமாக நடத்துகிறார்கள். அதனால், பாதிக்கப்பட்டவர்கள் தங்களையே தாழ்வாக நினைக்கிறார்கள். ஹெலன்a என்ற சகோதரிக்கும் அதுதான் நடந்தது. அதைப் பற்றி அவர் சொல்கிறார்: “எங்கள் வீட்டில் இருந்தவர்களுக்குப் பாசம் காட்டுவது என்றால் என்னவென்றே தெரியாது. அப்பா ரொம்பக் கொடூரமாக நடந்துகொண்டார். நாங்கள் எதற்குமே லாயக்கில்லை என்று எங்களைத் தினமும் மட்டம்தட்டிக்கொண்டே இருப்பார்.” நீங்களும் ஹெலனை மாதிரியே தவறாக நடத்தப்பட்டிருக்கலாம்... நிறையத் தடவை அவமானப்படுத்தப்பட்டிருக்கலாம்... எதற்குமே லாயக்கில்லாத மாதிரி யாராவது உங்களை உணர வைத்திருக்கலாம். இப்படி நடந்திருந்தால், மற்றவர்களுக்கு உங்கள்மேல் உண்மையிலேயே அக்கறை இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்வது கஷ்டமாக இருக்கலாம்.

4. சங்கீதம் 34:18-ல் யெகோவா நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறார்?

4 உங்களை யாராவது தவறாக நடத்தியிருந்தாலும் யெகோவாவுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறது, அவர் உங்களை உயர்வாக நினைக்கிறார். “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.” (சங்கீதம் 34:18-ஐ வாசியுங்கள்.) உங்கள் ‘மனம் நொந்துபோயிருந்தால்’ இந்த விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: உங்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களைப் பார்த்துதான் யெகோவா உங்களைத் தன் பக்கமாக ஈர்த்திருக்கிறார். (யோவா. 6:44) உங்களுக்கு உதவ அவர் எப்போதுமே தயாராக இருக்கிறார். ஏனென்றால், நீங்கள் அவருக்குத் தங்கமானவர்!

5. மற்றவர்களால் தாழ்வாக நடத்தப்பட்ட மக்களை இயேசு நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

5 இயேசுவைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது நம்மால் யெகோவாவுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முடியும். மற்றவர்களால் தாழ்வாக நடத்தப்பட்ட மக்களை இயேசு கவனித்தார், அவர்களை அன்பாக நடத்தினார். (மத். 9:9-12) மோசமான ஒரு வியாதியிலிருந்து குணமாகும் நம்பிக்கையில், ஒரு பெண் இயேசுவின் அங்கியைத் தொட்டபோது அவர் அவளை ஆறுதல்படுத்தினார். அவள் காட்டிய விசுவாசத்துக்காகப் பாராட்டினார். (மாற். 5:25-34) இயேசு தன்னுடைய அப்பாவின் குணங்களை அப்படியே காட்டினார். (யோவா. 14:9) அப்படியென்றால், யெகோவா உங்களை உயர்வாகப் பார்க்கிறார், உங்களுடைய நல்ல குணங்களைக் கவனிக்கிறார் என்பதில் உங்களுக்குச் சந்தேகமே வேண்டாம். உங்களுடைய விசுவாசத்தையும் நீங்கள் அவர்மேல் வைத்திருக்கிற அன்பையும் அவர் பார்க்கிறார்.

6. எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

6 ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்ற எண்ணம் உங்களுக்கு அடிக்கடி வந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? யெகோவா உங்களை உயர்வாகப் பார்க்கிறார் என்பதைக் காட்டுகிற பைபிள் வசனங்களைப் படியுங்கள். அதைப் பற்றி ஆழமாக யோசியுங்கள்.b (சங். 94:19) உங்களால் ஒரு குறிக்கோளை அடைய முடியவில்லை என்றாலோ மற்றவர்களை மாதிரி சேவை செய்ய முடியவில்லை என்றாலோ சோர்ந்துவிடாதீர்கள். உங்களை மற்றவர்களோடு ஒப்பிடாதீர்கள். உங்களையே குறைத்து எடைபோடாதீர்கள். உங்களால் முடியாததை யெகோவா எதிர்பார்க்கவே மாட்டார். (சங். 103:13, 14) யாராவது உங்களை மனதளவிலோ உடலளவிலோ காயப்படுத்தியிருந்தால், அவர்கள் செய்த காரியத்துக்கு உங்கள்மேல் பழிப்போட்டுக்கொள்ளாதீர்கள். நீங்கள் ஏதோ தவறு செய்ததால்தான் அவர்கள் அப்படி நடந்துகொண்டார்கள் என்றும் நினைக்காதீர்கள். யெகோவா தவறு செய்தவர்களைத்தான் கணக்குக் கேட்பார், பாதிக்கப்பட்டவர்களை அல்ல. (1 பே. 3:12) சின்ன வயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்ட சான்ட்ரா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “யெகோவா பார்க்கிற மாதிரியே நான் என்னைப் பார்ப்பதற்கும் என்னிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்ப்பதற்கும் உதவ சொல்லி நான் எப்போதும் ஜெபம் செய்கிறேன்.”

ஒரு இஸ்ரவேலர் ஒரு சிட்டுக்குருவியைத் தன் கையில் வைத்திருக்கிறார்.

யெகோவா உங்களைத் தங்கமாகப் பார்க்கிறார்

யெகோவா உங்களை உயர்வாகப் பார்க்கிறார் என்பதை இந்த வசனங்கள் உங்களுக்குப் புரிய வைக்கும்:

  • சங்கீதம் 56:8. நீங்கள் சோகத்தில் இருக்கும்போது யெகோவா உங்களுடைய கண்ணீரைப் பார்க்கிறார். நீங்கள் வேதனைப்படும்போது அவரும் வேதனைப்படுகிறார்.

  • லூக்கா 12:6, 7. ஒரு சிட்டுக்குருவியையே யெகோவா உயர்வாகப் பார்க்கிறார் என்றால், உங்களை அவர் எவ்வளவு உயர்வாகப் பார்ப்பார்! அவர் உங்கள்மேல் அக்கறை வைத்திருக்கிறார், உங்களைப் பற்றி எல்லாமே அவருக்குத் தெரியும். ஏனென்றால், அவர் உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்.

  • 1 யோவான் 3:19, 20. உங்கள் இதயம் உங்களைத் தாழ்வாக நினைக்க வைத்தாலும் யெகோவா ‘உங்கள் இதயத்தைவிட உயர்ந்தவர்’ என்பதையும், அவர் உங்களைத் தங்கமாகப் பார்க்கிறார் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

7. வாழ்க்கையில் நமக்குக் கிடைத்த அனுபவங்களை வைத்து நாம் எப்படி யெகோவாவுடைய சேவையில் நிறையச் செய்யலாம்?

7 மற்றவர்களுக்கு உதவி செய்ய யெகோவாவால் உங்களைப் பயன்படுத்த முடியும்; அதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம். ஊழியத்தில் தன்னோடு சேர்ந்து வேலை செய்கிற பாக்கியத்தை அவர் உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். (1 கொ. 3:9) வாழ்க்கையில் சில கஷ்டங்களை நீங்கள் அனுபவித்திருப்பதால், மற்றவர்களுடைய இடத்தில் உங்களையே வைத்து பார்க்க முடியும்; அவர்கள் அனுபவிக்கிற வேதனைகளைப் புரிந்துகொள்ள முடியும். அவர்களுக்கு உதவவும் முடியும். முன்பு பார்த்த ஹெலனுக்கு உதவி கிடைத்தது. இப்போது அவர் மற்றவர்களுக்கு உதவுகிறார். அதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நான் எதற்குமே உதவாதவள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், மற்றவர்களுக்கு உதவ யெகோவா என்னைப் பயன்படுத்திக்கொண்டு இருக்கிறார். மற்றவர்களுடைய அன்பை இப்போது என்னால் ருசிக்க முடிகிறது.” ஹெலன் இப்போது ஒரு ஒழுங்கான பயனியராகச் சந்தோஷமாகச் சேவை செய்கிறார்.

யெகோவா நம்மை மன்னிக்கிறார்

8. ஏசாயா 1:18-ல் யெகோவா என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறார்?

8 முன்பு செய்த தவறுகளை நினைத்து நாம் சிலசமயங்களில் வேதனைப்படலாம். அது ஞானஸ்நானத்துக்கு முன்பு அல்லது அதற்குப் பிறகு செய்த தவறுகளாக இருக்கலாம். ஆனால், நம்மேல் இருக்கிற அன்பால்தான் யெகோவா மீட்புவிலை என்ற பரிசைக் கொடுத்திருக்கிறார் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது. அந்தப் பரிசை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். யெகோவா நம்மிடம் “வாருங்கள், நம்மிடையே இருக்கிற பிரச்சினையைச் சரிசெய்யலாம்”c என்று கூப்பிடுகிறார். அப்படிச் சரி செய்த பிறகு யெகோவா நம்முடைய பாவங்களை மனதிலேயே வைத்துக்கொண்டிருப்பது இல்லை. (ஏசாயா 1:18-ஐ வாசியுங்கள்.) நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையுமே அவர் மறந்துவிடுகிறார். அதேசமயத்தில், நாம் செய்த நல்ல விஷயங்களை அவர் மறப்பதே கிடையாது. யெகோவாவுக்கு நம்மேல் எவ்வளவு அன்பு!—சங். 103:9, 12; எபி. 6:10.

9. நடந்ததைப் பற்றியே யோசித்துக்கொண்டில்லாமல் இப்போது வாழ்கிற வாழ்க்கையைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் யோசிப்பது ஏன் நல்லது?

9 கடந்த காலத்தில் நீங்கள் செய்த தவறை நினைத்து தவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், இப்போது வாழ்கிற வாழ்க்கையைப் பற்றியும் எதிர்காலத்தைப் பற்றியும் யோசியுங்கள். அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஒருகாலத்தில் அவர் கிறிஸ்தவர்களைப் பயங்கரமாகத் துன்புறுத்தினார். அதை நினைத்து அவர் வேதனைப்பட்டார்தான்; இருந்தாலும், யெகோவா அவரை மன்னித்துவிட்டார் என்று அவருக்குத் தெரியும். (1 தீ. 1:12-15) அதனால், முன்பு செய்த தவறுகளைப் பற்றியே அவர் யோசித்துக்கொண்டு இருக்கவில்லை. யூத மதத்தில் இருந்தபோது தான் சாதித்த விஷயங்களைப் பற்றி அவர் எப்படி யோசிக்கவில்லையோ அதேமாதிரி கடந்த கால தவறுகளைப் பற்றியும் அவர் யோசிக்கவில்லை. (பிலி. 3:4-8, 13-15) அவர் ஊழியத்தைச் சுறுசுறுப்பாக செய்தார். எதிர்காலத்துக்காகச் சந்தோஷமாகக் காத்திருந்தார். பவுல் மாதிரியே உங்களாலும் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால், இப்போது இருக்கிற சூழ்நிலையில் உங்களால் யெகோவாவை மகிமைப்படுத்த முடியும். அவர் வாக்கு கொடுத்திருக்கிற எதிர்காலத்துக்காக காத்திருக்கவும் முடியும்.

10. நாம் முன்பு செய்த ஏதோவொரு விஷயம் மற்றவர்களைக் காயப்படுத்தியிருந்தால் என்ன செய்யலாம்?

10 நீங்கள் முன்பு செய்த ஒரு விஷயம் மற்றவர்களைக் காயப்படுத்தியிருக்கலாம். அது உங்கள் மனதை உறுத்திக்கொண்டே இருந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? அந்தக் காயத்தைச் சரி செய்வதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள். பாதிக்கப்பட்டவரிடம் மனதார மன்னிப்பு கேளுங்கள். (2 கொ. 7:11) அவருக்கு உதவ சொல்லி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். அந்தக் காயம் குணமாவதற்கும் மறுபடியும் சமாதானமாக இருப்பதற்கும் யெகோவாவால் அவருக்கும் உதவ முடியும், உங்களுக்கும் உதவ முடியும்.

11. யோனா தீர்க்கதரிசியிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (படத்தைப் பாருங்கள்.)

11 கடந்த காலத்தில் செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். யெகோவா உங்களை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாரோ, அப்படியெல்லாம் பயன்படுத்துவதற்கு அவருக்கு இடங்கொடுங்கள். யோனா தீர்க்கதரிசியின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நினிவேக்குப் போவதற்குப் பதிலாக, அவர் எதிர் திசையில் ஓடிப்போனார். அப்போது யெகோவா அவரைக் கண்டித்துத் திருத்தினார். யோனாவும் அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். (யோனா 1:1-4, 15-17; 2:7-10) யோனா தவறு செய்ததால் யெகோவா அவர்மேல் இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டாரா? இல்லை. நினிவேக்குப் போவதற்கு யெகோவா மறுபடியும் ஒரு வாய்ப்பு கொடுத்தார். இந்தத் தடவை யோனா உடனடியாகக் கீழ்ப்படிந்தார். கடந்த காலத்தில் செய்த தவறைப் பற்றியே யோசித்துக்கொண்டு யெகோவா கொடுத்த நியமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளாமல் போய்விடவில்லை.—யோனா 3:1-3.

யோனா தீர்க்கதரிசி கடற்கரையில் நின்று வானத்தைப் பார்க்கிறார். அவர் தொப்பலாக நனைந்திருக்கிறார்.

ஒரு பெரிய மீனின் வயிற்றிலிருந்து யோனாவைக் காப்பாற்றிய பிறகு, தன்னுடைய செய்தியைச் சொல்வதற்காக யெகோவா அவரை மறுபடியும் நினிவேக்கு அனுப்பினார் (பாரா 11)


யெகோவா தன்னுடைய சக்தியின் மூலம் ஆறுதல் தருகிறார்

12. வேதனையில் தவிக்கும்போது யெகோவா நமக்கு எப்படிச் சமாதானத்தைக் கொடுக்கிறார்? (பிலிப்பியர் 4:6, 7)

12 மோசமான சம்பவத்தால் நாம் பாதிக்கப்பட்டிருந்தாலோ ஒரு பெரிய இழப்பைச் சந்தித்திருந்தாலோ, யெகோவா தன்னுடைய சக்தியைக் கொடுத்து நம்மை ஆறுதல்படுத்துவார். ரான் மற்றும் கேரல் தம்பதியின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்று பாருங்கள். அவர்களுடைய மகன் தற்கொலை செய்துகொண்டான். அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “இதற்கு முன்பு நாங்கள் நிறையக் கஷ்டங்களைச் சமாளித்திருக்கிறோம். ஆனால் இதுதான் ரொம்பக் கொடுமையாக இருந்தது. தூக்கம் இல்லாமல் தவித்த ராத்திரிகள் எத்தனையோ இருந்தன. அப்போதெல்லாம் நாங்கள் ஜெபம் பண்ணினோம். பிலிப்பியர் 4:6, 7-ல் சொல்லப்பட்டிருக்கிற சமாதானத்தை நாங்கள் உண்மையிலேயே உணர்ந்தோம்.” (வாசியுங்கள்.) நீங்களும் தாங்க முடியாத ஒரு வேதனையால் தவித்துக்கொண்டிருந்தால், உங்கள் மனதில் இருக்கிற எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டிவிடுங்கள். அடிக்கடி ஜெபம் பண்ணுங்கள். யெகோவாவிடம் எவ்வளவு நேரம் பேச தோன்றுகிறதோ, அவ்வளவு நேரம் பேசுங்கள். (சங். 86:3; 88:1) திரும்பத் திரும்ப அவருடைய சக்தியைக் கேளுங்கள். நீங்கள் அப்படிக் கேட்கும்போது அவர் தட்டிக்கழிக்க மாட்டார்.—லூக். 11:9-13.

13. யெகோவாவைத் தொடர்ந்து உண்மையாக வணங்குவதற்கு அவருடைய சக்தி எப்படி நமக்கு உதவும்? (எபேசியர் 3:16)

13 வேதனையில் துவண்டுபோய் இருக்கும்போது, யெகோவாவைத் தொடர்ந்து வணங்குவதற்கு அவருடைய சக்தி உங்களுக்குப் பலம் தரும். (எபேசியர் 3:16-ஐ வாசியுங்கள்.) ஃப்ளோரா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவரும் அவருடைய கணவரும் மிஷனரிகளாக சேவை செய்துகொண்டு இருந்தார்கள். ஆனால், ஃப்ளோராவின் கணவர் துரோகம் செய்துவிட்டார். பிறகு அவர்கள் விவாகரத்து செய்துகொண்டார்கள். ஃப்ளோரா சொல்கிறார்: “அவர் எனக்குத் துரோகம் செய்துவிட்டதை நினைத்து நான் உள்ளுக்குள்ளேயே குமுறினேன். அந்த வேதனையை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. தொடர்ந்து சகித்திருக்க உங்களுடைய சக்தியைத் தாருங்கள் என்று யெகோவாவிடம் கேட்டேன். இதிலிருந்து மீண்டுவரவே முடியாது என்று ஆரம்பத்தில் நினைத்தேன். ஆனால், காயம் குணமாவதற்கு என்ன தேவையோ அதை யெகோவா கொடுத்தார்.” யெகோவாவின் உதவியை ஃப்ளோராவால் உணர முடிந்தது. அவர்மேல் இருந்த நம்பிக்கையை அதிகமாக்குவதற்கும் கஷ்டத்திலிருந்து மீண்டுவருவதற்கும் அவர் உதவியதை ஃப்ளோரா உணர்ந்தார். அவர் சொல்கிறார்: “யெகோவா எனக்கு எப்படி உதவினார் என்பதை சங்கீதம் 119:32-ல் இருக்கிற வார்த்தைகள் அழகாக விவரிக்கிறது. அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: ‘நான் உங்களுடைய கட்டளைகளுக்கு ஆர்வத்தோடு கீழ்ப்படிவேன். ஏனென்றால், அவற்றை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு என் இதயத்தைத் திறக்கிறீர்கள்.’”

14. கடவுளுடைய சக்தி நமக்குக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்?

14 யெகோவாவிடம் சக்திக்காக ஜெபம் செய்த பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்ளுங்கள். தினமும் பைபிளைப் படிப்பதன் மூலம் யெகோவாவுடைய யோசனைகளால் உங்கள் மனதை நிரப்புங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, அந்தச் சக்தி உங்கள்மேல் செயல்படும். (பிலி. 4:8, 9) அதோடு, கஷ்டமான சோதனைகளைச் சந்தித்தவர்களைப் பற்றி பைபிளிலிருந்து படியுங்கள். தொடர்ந்து சகித்திருப்பதற்கு யெகோவா அவர்களுக்கு எப்படி உதவினார் என்று யோசியுங்கள். நாம் முன்பு பார்த்த சான்ட்ரா, அடுத்தடுத்து நிறையக் கஷ்டங்களை அனுபவித்தார். அவருக்கு எது உதவியது என்பதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “யோசேப்பைப் பற்றிய பதிவு என் மனதில் ஆழமாகப் பதிந்தது. அவர் நிறையக் கஷ்டங்களையும் அநியாயங்களையும் சகித்தார். ஆனால் யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை முறித்துப்போடுவதற்கு எதையும் அவர் அனுமதிக்கவில்லை.”—ஆதி. 39:21-23.

யெகோவா சகோதர சகோதரிகள் மூலம் ஆறுதல் தருகிறார்

15. சகோதர சகோதரிகள் எப்படி நமக்கு ஆறுதல் தருகிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)

15 நாம் கஷ்டங்களை அனுபவிக்கும்போது சகோதர சகோதரிகள் நமக்கு “மிகவும் ஆறுதலாக” இருக்கிறார்கள். (கொலோ. 4:11) நம்மேல் வைத்திருக்கிற அன்பை யெகோவா அவர்கள் மூலமாகக் காட்டுகிறார். நாம் சொல்வதை அவர்கள் காதுகொடுத்துக் கேட்கலாம். அவர்கள் நம்மோடு இருப்பதே நமக்குப் பெரிய ஆறுதலாக இருக்கலாம். உற்சாகப்படுத்துகிற பைபிள் வசனங்களை அவர்கள் காட்டலாம், அல்லது நம்மோடு சேர்ந்து ஜெபம் செய்யலாம்.d (ரோ. 15:4) சிலசமயங்களில், யெகோவா யோசிக்கிற மாதிரி யோசிப்பதற்கும் அவர்கள் நமக்கு உதவலாம்; அப்படி யோசிப்பது தொடர்ந்து சகித்திருக்க உதவும். சகோதர சகோதரிகள் மற்ற உதவிகளைக்கூட செய்யலாம். உதாரணத்துக்கு, வேதனையில் துவண்டு போயிருக்கும்போது நம் மனதை இதமாக்குவதற்கு சாப்பாடு கொடுக்கலாம்.

இரண்டு மூப்பர்கள் ஒரு சகோதரியை மருத்துவமனையில் போய் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய பைபிள்கள் திறந்திருக்கிறது.

முதிர்ச்சியுள்ள நம்பகமான நண்பர்கள் நமக்கு ஆறுதலாகவும் உதவியாகவும் இருப்பார்கள் (பாரா 15)


16. மற்றவர்களிடமிருந்து உதவி கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்?

16 மற்றவர்களுடைய உதவி நமக்கு வேண்டுமென்றால், நாம் அவர்களிடம் உதவி கேட்க வேண்டியிருக்கலாம். சகோதர சகோதரிகள் நம்மேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறார்கள்; நமக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறார்கள். (நீதி. 17:17) ஆனால், நாம் எப்படி உணர்கிறோம், நமக்கு என்ன தேவை என்றெல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். (நீதி. 14:10) அதனால், உங்கள் இதயம் பாரமாக இருந்தால் உங்களுடைய உணர்ச்சிகளை முதிர்ச்சியுள்ள நண்பர்களிடம் சொல்லுங்கள். உங்களுக்கு என்ன மாதிரி உதவி தேவை என்றும் சொல்லுங்கள். உங்களுக்கு நெருக்கமாக இருக்கிற ஒன்று அல்லது இரண்டு மூப்பர்களிடம்கூட நீங்கள் பேசலாம். சில சகோதரிகளுக்கு, முதிர்ச்சியுள்ள ஒரு சகோதரியிடம் பேசியது ஆறுதலாக இருந்திருக்கிறது.

17. மற்றவர்களிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதற்கு எது தடையாக இருக்கலாம், அதை எப்படித் தாண்டி வரலாம்?

17 உங்களையே தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். சிலசமயத்தில், சகோதர சகோதரிகள் உங்களைத் தவறாகப் புரிந்திருக்கலாம். அல்லது, உங்களைக் காயப்படுத்துகிற மாதிரி எதையாவது சொல்லியிருக்கலாம். (யாக். 3:2) மனதில் ஏற்பட்ட காயங்களால், மற்றவர்களிடம் பேச உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், சகோதர சகோதரிகளை விட்டு ஒதுங்கிவிடாதீர்கள்; யெகோவா அவர்களைப் பயன்படுத்தி உங்களை உற்சாகப்படுத்தலாம். கவின் என்ற மூப்பர் மன அழுத்தத்தோடு போராடிக்கொண்டிருக்கிறார். “நிறையச் சமயங்களில், என் நண்பர்களோடு பேசவோ நேரம் செலவு செய்யவோ எனக்கு விருப்பமே இருக்காது” என்று அவர் சொல்கிறார். இருந்தாலும், கவின் தன்னுடைய உணர்ச்சிகளுக்கு இணங்கிவிடாமல் அவர்களோடு நேரம் செலவு செய்கிறார். அது அவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. ஏமி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என் வாழ்க்கையில் சில கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அதனால், மற்றவர்களை நம்புவது எனக்குக் கஷ்டம். ஆனால் யெகோவா மாதிரியே சகோதர சகோதரிகள்மேல் அன்பு காட்டுவதற்கும் அவர்களை நம்புவதற்கும் நான் கற்றுக்கொண்டு வருகிறேன். இப்படிச் செய்வதால் யெகோவா சந்தோஷப்படுகிறார் என்று எனக்குத் தெரியும். அது எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது.”

யெகோவா தன்னுடைய வாக்குறுதிகள் மூலம் ஆறுதல் தருகிறார்

18. யெகோவா எதிர்காலத்தில் என்ன செய்யப் போகிறார், இப்போது நாம் என்ன செய்யலாம்?

18 மனதளவிலும் உடலளவிலும் நமக்கு ஏற்பட்ட காயங்களை யெகோவா சீக்கிரத்தில் குணப்படுத்துவார். (வெளி. 21:3, 4) அதனால், நாம் எதிர்காலத்துக்காக நம்பிக்கையோடு காத்திருக்கலாம். அந்தச் சமயத்தில், நாம் அனுபவித்த கஷ்டங்கள் நம்முடைய ‘நெஞ்சத்தை வாட்டாது.’ (ஏசா. 65:17) அதேசமயத்தில், நாம் ஏற்கெனவே பார்த்த மாதிரி யெகோவா இப்போதேகூட நம்முடைய “காயங்களுக்குக் கட்டுப் போடுகிறார்.” அதனால், உங்களை ஆறுதல்படுத்துவதற்காக யெகோவா செய்திருக்கிற எல்லா ஏற்பாடுகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். யெகோவா “உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார்” என்பதில் உங்களுக்குத் துளிகூட சந்தேகம் வேண்டாம்.—1 பே. 5:7.

யெகோவா எப்படி . . .

  • நாம் எதற்குமே லாயக்கில்லை என்ற எண்ணத்தை மேற்கொள்ள உதவுகிறார்?

  • முன்பு செய்த தவறை நினைத்து நொந்துபோகாமல் இருக்க உதவுகிறார்?

  • சகோதர சகோதரிகள் மூலம் ஆறுதலைக் கொடுக்கிறார்?

பாட்டு 7 யெகோவாவே என் பலம்

a பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

b “யெகோவா உங்களைத் தங்கமாகப் பார்க்கிறார்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

c ‘யெகோவாவோடு இருக்கிற பிரச்சினையைச் சரி செய்வது’ என்றால், நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு, நாம் நடந்துகொள்கிற விதத்தை மாற்றிக்கொள்வதன் மூலம் மனம் திருந்தியிருப்பதைக் காட்டுவதைக் குறிக்கிறது. ஒருவேளை, ஒரு பெரிய பாவத்தை நாம் செய்திருந்தால் சபை மூப்பர்களிடமும் உதவி கேட்க வேண்டும்.—யாக். 5:14, 15.

d வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் என்ற புத்தகத்தில் “கவலை” மற்றும் “ஆறுதல்” என்ற தலைப்புகளுக்குக் கீழே இருக்கிற வசனங்களை நீங்கள் பார்க்கலாம்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்