படிப்புக் கட்டுரை 22
பாட்டு 15 யெகோவாவின் முதல் மகனை புகழ்ந்து பாடுங்கள்!
யெகோவாவின் பெயர்—இயேசுவுக்கு உயிர்!
“இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன், இன்னமும் தெரியப்படுத்துவேன்.”—யோவா. 17:26.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவாவின் பெயரை இயேசு எப்படி மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தினார் என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்வோம். அதோடு, யெகோவா பரிசுத்தமானவர் என்பதை இயேசு எப்படிக் காட்டினார் என்றும் யெகோவாவின் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை எப்படித் துடைத்தார் என்றும் பார்ப்போம்.
1-2. (அ) கொலை செய்யப்படுவதற்கு முந்தின நாள் ராத்திரி இயேசு என்ன செய்தார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எந்த இரண்டு கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம்?
அது கி.பி. 33, நிசான் 14. வியாழக்கிழமை சாயங்காலம். இயேசு தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்களோடு சேர்ந்து ஒரு மாடி அறையில் இரவு விருந்தைச் சாப்பிட்டு முடித்திருக்கிறார். சீக்கிரத்தில், யூதாஸ் தன்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான் என்று இயேசுவுக்குத் தெரியும். எதிரிகள் தன்னைச் சித்திரவதை செய்து கொலை செய்வார்கள் என்றும் அவருக்குத் தெரிந்திருந்தது. சாப்பிட்டு முடித்த பிறகு, அப்போஸ்தலர்களைப் பலப்படுத்துவதற்காக அவர் நிறைய விஷயங்களைச் சொல்கிறார். இப்போது, அவர்கள் வீட்டைவிட்டு கிளம்புகிற நேரம் வந்தது. ஆனால், கிளம்புவதற்குக் கொஞ்சம் முன்பு இயேசு ஒரு ஜெபம் செய்கிறார். அது ரொம்ப முக்கியமான ஜெபம். அந்த ஜெபத்தை அப்போஸ்தலன் யோவான் பதிவு செய்திருக்கிறார். அது யோவான் 17-வது அதிகாரத்தில் இருக்கிறது.
2 இயேசு செய்த அந்த ஜெபத்திலிருந்து ஒருசில பாடங்களை இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்ளலாம். முக்கியமாக, இரண்டு கேள்விகளைப் பற்றி யோசித்துப் பார்க்கலாம். ஒன்று, இறப்பதற்கு முன்பு இயேசுவின் மனதில் என்ன முக்கியமான விஷயங்கள் ஓடிக்கொண்டிருந்தன? இரண்டு, இயேசு பூமியில் இருந்தபோது எதை ரொம்ப முக்கியமாக நினைத்தார்?
“இவர்களுக்கு உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்”
3. யெகோவாவுடைய பெயரைப் பற்றி ஜெபத்தில் இயேசு என்ன சொன்னார், அதற்கு என்ன அர்த்தம்? (யோவான் 17:6, 26)
3 இயேசு செய்த ஜெபத்தில், “இவர்களுக்கு [சீஷர்களுக்கு] உங்களுடைய பெயரைத் தெரியப்படுத்தினேன்” என்று சொன்னார். ஒருதடவை அல்ல, இரண்டு தடவை அப்படிச் சொன்னார். (யோவான் 17:6, 26-ஐ வாசியுங்கள்.) இயேசு இங்கே என்ன சொல்ல வருகிறார்? கடவுளுடைய பெயர் யெகோவா என்பதைப் புதிதாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறாரா? இல்லை. இயேசுவுடைய சீஷர்களுக்கு அது ஏற்கனவே தெரியும். ஏனென்றால், அவர்கள் யூதர்கள். எபிரெய வேதாகமத்தில் ஆயிரக்கணக்கான தடவை அந்தப் பெயர் இருக்கிறது. அதனால், இயேசு இங்கே வெறுமனே கடவுளுடைய பெயர் என்னவென்று தெரியப்படுத்தவில்லை. அந்தப் பெயருக்குச் சொந்தமான நபரைப் பற்றித் தெரியப்படுத்தினார். அதாவது, அவருடைய விருப்பங்கள் என்ன, அவர் என்னவெல்லாம் செய்கிறார், அவருடைய குணங்கள் என்ன போன்ற விஷயங்களை இயேசு தெரியப்படுத்தினார். இந்த உலகத்தில் வேறு யாரையும்விட இயேசுவுக்குத்தான் யெகோவாவைப் பற்றி நன்றாகத் தெரியும்.
4-5. (அ) ஒருவருடைய பெயர் நமக்கு எப்போது இன்னும் முக்கியமானதாக மாறுகிறது? (ஆ) யெகோவாவுடைய பெயரை இயேசுவுடைய சீஷர்கள் எப்படி நன்றாகப் புரிந்துகொள்ள ஆரம்பித்தார்கள்?
4 உங்கள் சபையில் டேவிட் என்ற ஒரு மூப்பர் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அவர் ஒரு டாக்டர். அவரை உங்களுக்குப் பல வருஷமாகத் தெரியும். திடீரென்று ஒருநாள் உங்களுக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது. அவசர சிகிச்சை எடுக்க வேண்டிய நிலைமை வருகிறது. டேவிட் வேலை செய்கிற ஆஸ்பத்திரிக்கு உங்களை அவசர அவசரமாகக் கூட்டிக்கொண்டு போகிறார்கள். ஒரு டாக்டராக, அங்கே அவர் உங்கள் உயிரைக் காப்பாற்றுகிறார். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, டேவிட் என்ற பெயரைக் கேட்கும்போதெல்லாம் உங்களுக்கு என்ன ஞாபகத்துக்கு வரும்? ரொம்ப நாளாக உங்களுக்குத் தெரிந்த ஒரு மூப்பர் என்பது மட்டும்தான் ஞாபகத்துக்கு வருமா? கண்டிப்பாக இல்லை! உங்கள் உயிரைக் காப்பாற்றிய டாக்டராகவும் நீங்கள் அவரைப் பார்ப்பீர்கள், இல்லையா?
5 இயேசுவுடைய சீஷர்களும் அந்த மாதிரிதான். யெகோவா என்ற பெயர் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தது. ஆனால், இயேசுவுடைய வாழ்க்கையைப் பார்த்த பிறகு, அந்தப் பெயரை வேறு ஒரு கோணத்தில் அவர்கள் பார்க்க ஆரம்பித்தார்கள். அதாவது, அந்தப் பெயரைத் தாங்கிய நபரை இன்னும் உயர்வாக மதிக்க ஆரம்பித்தார்கள். ஏன் அப்படிச் சொல்கிறோம்? இயேசு சொன்ன, செய்த ஒவ்வொரு விஷயத்திலும் அவருடைய அப்பாவுடைய குணங்கள் அப்படியே தெரிந்தது. அதனால், இயேசு சொல்லிக்கொடுத்த விதத்தில் இருந்தும், அவர் மக்களிடம் பழகிய விதத்தில் இருந்தும் யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய சீஷர்கள் நன்றாகத் ‘தெரிந்துகொண்டார்கள்.’—யோவா. 14:9; 17:3.
‘நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயர்’
6. யெகோவா தன்னுடைய பெயரை இயேசுவுக்குக் கொடுத்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? (யோவான் 17:11, 12)
6 “நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிற உங்கள் பெயரை முன்னிட்டு இவர்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்காக ஜெபம் செய்தார். (யோவான் 17:11, 12-ஐ வாசியுங்கள்.) அந்த ஜெபத்தில் ‘எனக்கு உங்கள் பெயரை நீங்கள் கொடுத்திருக்கிறீர்கள்’ என்று இயேசு சொல்கிறார். அப்படியென்றால் இயேசுவை இனிமேல் நாம் யெகோவா என்று சொல்ல வேண்டுமா? இல்லை, அதற்கு அர்த்தம் அது கிடையாது. யெகோவாவுடைய பெயரைப் பற்றிச் சொல்லும்போது, அது ‘உங்கள் பெயர்’ என்றுதான் இயேசு சொன்னார். யெகோவாவின் பெயரை இயேசு எடுத்துக்கொள்ளவில்லை. அது யெகோவாவுடைய சொந்தப் பெயர். அப்படியென்றால், இயேசு சொன்னது எதைக் குறிக்கிறது? இயேசு, யெகோவாவுடைய பிரதிநிதியாக அவருடைய பெயரில் வந்தார். யெகோவாவுடைய பெயரில் பெரிய பெரிய அற்புதங்களைச் செய்தார். அவர் சார்பாக பேசுகிறவராகவும் இருந்தார். அதைத்தான் இது குறிக்கிறது. (யோவா. 5:43; 10:25) அதுமட்டுமல்ல, இயேசு என்ற பெயரின் அர்த்தமே “யெகோவாவே மீட்பு” என்பதுதான். இயேசுவுடைய பெயரின் அர்த்தத்திலேயே யெகோவாவின் பெயரும் இருக்கிறது, கவனித்தீர்களா?
7. யெகோவா சார்பாக இயேசு பேசினார் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு உதாரணம் கொடுங்கள்.
7 இதை யோசித்துப் பாருங்கள்: ஒரு ராஜா, தன்னுடைய சார்பாகப் பேசுவதற்கு ஒருவரை வேறொரு நாட்டுக்கு அனுப்புகிறார். அதாவது, ஒரு தூதரை அனுப்புகிறார். இந்தத் தூதர் பேசுகிற வார்த்தைகள் அந்த ராஜாவுடைய வார்த்தைகள். ராஜாவின் வார்த்தைகளுக்கு இருக்கிற அதே அதிகாரம் அந்தத் தூதரின் வார்த்தைகளுக்கும் இருக்கும். அதேபோல்தான் இயேசுவும் யெகோவாவுடைய பிரதிநிதியாக வந்தார்; யெகோவாவின் பெயரில் மக்களிடம் பேசினார்.—மத். 21:9; லூக். 13:35.
8. பூமிக்கு வருவதற்கு முன்பே இயேசு எப்படி யெகோவாவின் பெயரில் செயல்பட்டார்? (யாத்திராகமம் 23:20, 21)
8 பூமிக்கு வருவதற்கு முன்பு இயேசு பரலோகத்தில் வார்த்தையாகச் செயல்பட்டார். அதாவது, தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் சில தகவல்களையும் அறிவுரைகளையும் கொடுப்பதற்கு யெகோவா இயேசுவைப் பயன்படுத்தினார். (யோவா. 1:1-3) உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் இருந்த சமயத்தில் அவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு யெகோவா ஒரு தூதரை அனுப்பினார். அது இயேசுவாக இருந்திருக்கலாம். அந்தத் தூதருக்குக் கீழ்ப்படியும்படி யெகோவா இஸ்ரவேலர்களிடம் சொன்னபோது, “அவர் என்னுடைய பெயரில் வருகிறார்” என்று சொன்னார்.a (யாத்திராகமம் 23:20, 21-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், இயேசு யெகோவாவின் பிரதிநிதியாக செயல்பட்டார் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. அதோடு, யெகோவா செய்வது எல்லாமே சரியானதுதான் என்பதை நிரூபிப்பதிலும் யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதிலும் இயேசுதான் முக்கியமானவராக இருக்கிறார் என்பதையும் இந்த வார்த்தைகள் காட்டுகின்றன.
“தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்”
9. யெகோவாவுடைய பெயர் இயேசுவுக்கு எந்தளவு முக்கியமாக இருந்தது? விளக்குங்கள்.
9 இப்போது பார்த்த மாதிரி, பூமிக்கு வருவதற்கு முன்பே யெகோவாவின் பெயர் இயேசுவுக்கு முக்கியமானதாக இருந்தது. அவர் பூமிக்கு வந்த பிறகும்கூட, யெகோவாவின் பெயர் அவருக்கு முக்கியமானதாக இருந்தது என்பது அவர் சொன்ன, செய்த எல்லாவற்றிலும் பளிச்சென்று தெரிந்தது. இயேசு தன்னுடைய ஊழியத்தின் முடிவில் யெகோவாவிடம், “தகப்பனே, உங்களுடைய பெயரை மகிமைப்படுத்துங்கள்” என்று கேட்டார். உடனே வானத்தைக் கிழித்துக்கொண்டு இடிமுழக்க குரல் ஒன்று கேட்டது. “நான் அதை மகிமைப்படுத்தினேன், மறுபடியும் மகிமைப்படுத்துவேன்” என்று யெகோவா சொன்னார்.—யோவா. 12:28.
10-11. (அ) இயேசு எப்படி யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தினார்? (படத்தையும் பாருங்கள்.) (ஆ) யெகோவாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டிய அவசியமும் அந்தப் பெயருக்கு வந்த களங்கத்தை நீக்க வேண்டிய அவசியமும் ஏன் வந்தது?
10 இயேசுவும்கூட தன்னுடைய அப்பாவின் பெயரை மகிமைப்படுத்தினார். எப்படி? அவருடைய அப்பாவின் அருமையான குணங்களையும் அவர் செய்த அற்புதமான விஷயங்களையும் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொன்னார். ஆனாலும், கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்துவதில் இன்னும் சில விஷயங்களும் அடங்கியிருக்கிறது. அதாவது, அவருடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும். அதோடு, அவருடைய பெயரின் மேல் சுமத்தப்பட்ட களங்கம் நீக்கப்பட வேண்டும்.b இவை ரொம்ப முக்கியம் என்பதை இயேசு காட்டினார். சீஷர்களுக்குச் சொல்லிக் கொடுத்த ஜெபத்தில் என்ன சொன்னார் என்று கவனியுங்கள்: “பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே, உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்.”—மத். 6:9.
11 யெகோவாவுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்த வேண்டிய அவசியமும் அந்தப் பெயருக்கு வந்த களங்கத்தை நீக்க வேண்டிய அவசியமும் ஏன் வந்தது? சாத்தான் ஏதேன் தோட்டத்தில் யெகோவாவை அவமதித்தான். அவருடைய பெயரைக் களங்கப்படுத்தினான். எப்படி? யெகோவா பொய் சொல்கிறவர் என்று சொன்னான். ஆதாம்-ஏவாளுக்குக் கொடுக்க வேண்டிய ஏதோவொரு நல்லதை அவர் கொடுக்காமல் இருக்கிறார் என்று சொன்னான். (ஆதி. 3:1-5) அதுமட்டுமல்ல, யெகோவா ஆட்சி செய்யும் விதம் சரியில்லை என்று சாத்தான் மறைமுகமாகச் சொன்னான். சாத்தான் சொன்ன இந்தப் பொய்யான குற்றச்சாட்டுகள் யெகோவாவின் பெயரைக் களங்கப்படுத்தியது. அதாவது, அவருடைய நல்ல பெயரைக் கெடுத்தது. அதற்குப் பிறகு யோபுவின் நாட்களில், சாத்தான் வேறொரு பிரச்சினையைக் கொண்டுவந்தான். யெகோவாவிடமிருந்து ஏதாவது லாபம் கிடைக்கும் என்ற எண்ணத்தோடுதான் அவருக்கு எல்லாரும் சேவை செய்கிறார்கள் என்று சொன்னான். ஒருபடி மேலே போய் அவன் இப்படியும் சொன்னான்: எந்த மனிதனும் உண்மையான அன்போடு யெகோவாவுக்குச் சேவை செய்வதில்லை என்றும் கஷ்டங்கள் வந்தால் அவர்கள் அவரைவிட்டுப் போய்விடுவார்கள் என்றும் சொன்னான். (யோபு 1:9-11; 2:4) இப்போது உண்மையிலேயே பொய் சொல்வது யார்? யெகோவாவா, சாத்தானா? இதை நிரூபிக்க காலம் தேவைப்பட்டது.
கடவுளுடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை இயேசு தன்னுடைய சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார் (பாரா 10)
“என் உயிரையே கொடுக்கிறேன்”
12. யெகோவாவுடைய பெயரின் மேல் இருந்த அன்புக்காக என்ன செய்யக்கூட இயேசு தயாராக இருந்தார்?
12 இயேசு, யெகோவாமேல் நிறைய அன்பு வைத்திருந்தார். அதனால், அவருடைய பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்கும் அவருடைய பெயருக்கு வந்த களங்கத்தை நீக்குவதற்கும் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். ‘என் உயிரையே கொடுக்கிறேன்’ என்று சொன்னார். (யோவா. 10:17, 18) ஆம், யெகோவாவுடைய பெயருக்காக உயிரைக் கொடுக்கக்கூட இயேசு தயாராக இருந்தார்.c முதல்முதலில் பரிபூரணமாக இருந்த இரண்டு பேர், அதாவது ஆதாமும் ஏவாளும், யெகோவாவுடைய முதுகில் குத்திவிட்டு சாத்தான் பக்கம் சேர்ந்துவிட்டார்கள். ஆனால் இயேசு அப்படி இல்லை. அவர் பூமிக்கு வந்து யெகோவாமேல் வைத்திருந்த அன்பை நிரூபிப்பதற்குத் தயாராக இருந்தார். கடைசி வரைக்கும் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதன் மூலம் அந்த அன்பை நிரூபித்துக் காட்டினார். (எபி. 4:15; 5:7-10) சித்திரவதையை அனுபவித்து சாக வேண்டிய நிலைமையிலும் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்.—எபி. 12:2.
13. சாத்தான்தான் பொய் பேசுகிறவன் என்பதை நிரூபிப்பதற்கு இயேசுதான் சரியான நபர் என்று எப்படிச் சொல்லலாம்? (படத்தையும் பாருங்கள்.)
13 இந்தப் பிரபஞ்சத்திலேயே யெகோவாவைப் பற்றி இயேசுவுக்குத் தெரிந்த அளவுக்கு வேறு யாருக்குமே தெரிந்திருக்காது. அதனால், சாத்தான் சொன்ன பொய் குற்றச்சாட்டுகளில் கடுகளவு உண்மை இருந்திருந்தாலும் அது கண்டிப்பாக இயேசுவுக்குத் தெரிந்திருக்கும். அப்படி எதுவுமே இல்லாததால்தான் கடைசி வரைக்கும் யெகோவாவுடைய பெயருக்கு வந்த களங்கத்தை நீக்க இயேசு உறுதியாக இருந்தார். யெகோவா தன்னை கைவிட்ட மாதிரி இயேசுவுக்குத் தெரிந்த சமயத்தில்கூட, யெகோவாவுக்காகச் சாகவும் தயாராக இருந்தார்.d (மத். 27:46) தன்னுடைய அன்பான அப்பாவுடைய முதுகில் அவர் குத்த நினைக்கவில்லை. சாத்தான்தான் பொய் பேசுகிறவன், யெகோவா கிடையாது என்பதை இயேசுவின் வாழ்க்கை நிரூபித்துக் காட்டியது.—யோவா. 8:44.
சாத்தான்தான் பொய் பேசுகிறவன், யெகோவா கிடையாது என்பதை இயேசு செய்த எல்லாமே தெள்ளத்தெளிவாகக் காட்டியது (பாரா 13)
‘நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்துவிட்டேன்’
14. இயேசு உண்மையாக இருந்ததால் யெகோவா என்ன பலன் கொடுத்தார்?
14 இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி இயேசு செய்த ஜெபத்தில், ‘நீங்கள் எனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடித்துவிட்டேன்’ என்று சொன்னார். யெகோவாவுக்கு உண்மையாக இருந்ததால் அவர் தனக்குப் பலன் கொடுப்பார் என்று இயேசு முழுமையாக நம்பினார். (யோவா. 17:4, 5) அந்த நம்பிக்கை வீண்போகவில்லை. யெகோவா அவரைக் கல்லறையிலேயே விட்டுவிடாமல் அவரை உயிர்த்தெழுப்பினார். (அப். 2:23, 24) பரலோகத்தில், அவரை மேலான நிலைக்கு உயர்த்தினார். (பிலி. 2:8, 9) பிறகு, கடவுளுடைய அரசாங்கத்துக்கு ராஜாவாக ஆக்கினார். அந்த அரசாங்கம் என்ன செய்யும்? இயேசு சொல்லிக்கொடுத்த ஜெபத்தில் அதற்கான பதில் இருக்கிறது. “உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்” என்று சொன்ன பிறகு “உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்” என்றார்.—மத். 6:10.
15. இயேசு என்னவெல்லாம் செய்யப்போகிறார்?
15 சீக்கிரத்தில் இயேசு, கடவுளுடைய எதிரிகளுக்கு எதிராகப் போர் செய்வார். அவர்களை அர்மகெதோன் போரில் அழித்துவிடுவார். (வெளி. 16:14, 16; 19:11-16) அதற்குப் பிறகு, சாத்தானை “அதலபாதாளத்துக்குள்” தள்ளிவிடுவார். அதாவது, செயல்பட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளிவிடுவார். (வெளி. 20:1-3) இயேசு ஆயிர வருஷத்துக்கு இந்தப் பூமியை ஆட்சி செய்வார். பூமியில் சமாதானத்தைக் கொண்டுவருவார். மனிதர்கள் பரிபூரணம் ஆவதற்கு உதவுவார். இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார். பூமியைப் பூஞ்சோலையாக மாற்றுவார். இந்தப் பூமியில் யெகோவாவுடைய விருப்பம் முழுமையாக நிறைவேறியிருக்கும்!—வெளி. 21:1-4.
16. ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
16 இயேசு ஆயிர வருஷம் ஆட்சி செய்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கும்? மனிதர்களுடைய பாவ இயல்பு போயிருக்கும். அப்போது மீட்புவிலையின் அடிப்படையில் பாவங்களுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டிய அவசியம் இருக்காது. யெகோவாவிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள நமக்கு ஒரு மத்தியஸ்தரோ குருமார் ஏற்பாடோ தேவைப்படாது. ‘கடைசி எதிரியான மரணம்,’ அதாவது ஆதாமால் வந்த மரணம், ‘ஒழிக்கப்பட்டிருக்கும்.’ கல்லறைகள் காலியாக இருக்கும். ஏனென்றால், இறந்தவர்கள் எல்லாரும் ஏற்கனவே உயிரோடு வந்திருப்பார்கள். எல்லாருமே குறையில்லாமல் பரிபூரணமாக இருப்பார்கள்.—1 கொ. 15:25, 26.
17-18. (அ) ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் என்ன நடக்கும்? (ஆ) தன்னுடைய ஆட்சிக் காலம் முடிவுக்கு வரும்போது இயேசு என்ன செய்வார்? (1 கொரிந்தியர் 15:24, 28) (படத்தையும் பாருங்கள்.)
17 ஆயிர வருஷத்தின் முடிவில் இன்னொரு முக்கியமான விஷயம் நடந்திருக்கும். அதாவது, யெகோவாவின் பெயரோடு சம்பந்தப்பட்டிருக்கும் விவாதத்துக்கு முடிவு வந்திருக்கும். ஏதேன் தோட்டத்தில் இந்தப் பிரச்சினையைத்தானே சாத்தான் கிளப்பினான்! யெகோவா பொய் சொல்கிறவர் என்றும் மனிதர்களை அன்பினால் ஆட்சி செய்வதில்லை என்றும் சொன்னான். ஆனாலும், அந்தச் சமயத்திலிருந்து யெகோவாவை வணங்கியவர்கள் அவருடைய பெயரை மறுபடியும் மறுபடியும் பரிசுத்தப்படுத்தி இருக்கிறார்கள். ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் முழுமையாக நீக்கப்பட்டிருக்கும். எந்தவித சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல், யெகோவா உண்மையிலேயே அன்பான ஒரு அப்பா என்பது அப்போது நிரூபிக்கப்பட்டிருக்கும்!
18 ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில் சாத்தான் சொன்னது எல்லாமே பொய் என்று முழுமையாக நிரூபிக்கப்பட்டிருக்கும். இயேசுவின் ஆட்சிக் காலம் அந்தச் சமயத்தில் முடிவுக்கு வரும். அப்போது இயேசு என்ன செய்வார்? சாத்தான் மாதிரி யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்வாரா? இல்லவே இல்லை! (1 கொரிந்தியர் 15:24, 28-ஐ வாசியுங்கள்.) அரசாங்கத்தைத் தன்னுடைய அப்பாவிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். தொடர்ந்து யெகோவாவின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு இருப்பார். யெகோவாவை ரொம்ப நேசிப்பதால் அவர் தன்னுடைய அதிகாரத்தையெல்லாம் மனசார திருப்பிக் கொடுக்கிறார்.
தன்னுடைய ஆயிர வருஷ ஆட்சியின் முடிவில், யெகோவாவின் கையில் இயேசு அரசாங்கத்தை மனசார கொடுக்கிறார் (பாரா 18)
19. யெகோவாவுடைய பெயர் இயேசுவுக்கு எந்தளவு முக்கியம்?
19 யெகோவா தன்னுடைய பெயரை இயேசுவுக்கு ஏன் கொடுத்தார் என்பதை இப்போது நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது, இல்லையா? யெகோவாவுடைய பெயர்தான் இயேசுவுக்கு உயிர். அந்தப் பெயருக்காக அவர் சாகக்கூடத் தயாராக இருந்தார். யெகோவாவின் பிரதிநிதியாக அச்சுப்பிசகாமல் அவரைப் போலவே இயேசு நடந்துகொண்டார். எதிர்காலத்தில் ஆயிர வருஷ ஆட்சி முடிந்த பிறகு அவரிடம் இருக்கிற எல்லாவற்றையுமே யெகோவாவிடம் திருப்பிக் கொடுக்க அவர் தயாராக இருப்பார். நாம் எப்படி இயேசு மாதிரி நடந்துகொள்ளலாம்? அடுத்தக் கட்டுரையில் பதில் பார்க்கலாம்.
பாட்டு 16 ராஜாவை தந்தார், யெகோவாவை புகழுங்கள்!
a சிலசமயத்தில் தேவதூதர்களும் யெகோவாவின் பிரதிநிதிகளாக, அவருடைய பெயரில் செய்திகளைச் சொல்லி இருக்கிறார்கள். அதனால்தான், பைபிளில் சில இடங்களில் தேவதூதர்களிடம் பேசுவதை நேரடியாக யெகோவாவிடம் பேசுவதுபோல் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதி. 18:1-33) மோசேக்குத் திருச்சட்டத்தை யெகோவாதான் கொடுத்தார் என்று பைபிளில் சொல்லப்பட்டிருந்தாலும் மற்ற வசனங்களை வைத்துப் பார்க்கும்போது தேவதூதர்களைப் பயன்படுத்தி யெகோவா தன்னுடைய பெயரில் அதைக் கொடுத்தது தெரியவருகிறது.—லேவி. 27:34; அப். 7:38, 53; கலா. 3:19; எபி. 2:2-4.
b வார்த்தைகளின் விளக்கம்: “பரிசுத்தப்படுத்துவது” என்பது மரியாதை கொடுப்பதை, புனிதமாகக் கருதுவதை, அல்லது பயபக்தி காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. “களங்கத்தை நீக்குவது” என்பது ஒருவருடைய பெயரின் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையோ பழிகளையோ பொய் என்று நிரூபிப்பதை அல்லது, அந்த நபரை நிரபராதி என்று நிரூபிப்பதைக் காட்டுகிறது.
c மனிதர்கள் முடிவில்லாத வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் இயேசுவின் மரணம் திறந்த வைத்திருக்கிறது.
d காவற்கோபுரம் ஏப்ரல் 2021-ல் பக். 30-31-ல் இருக்கும் “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.