வாழ்க்கை சரிதை
மகத்தான போதகரிடமிருந்து வாழ்நாளெல்லாம் கற்றுக்கொண்டோம்
ஆயுதம் ஏந்திய படைவீரர்கள். பற்றியெரியும் தடுப்புச் சுவர்கள். புயல்கள். உள்நாட்டுப் போர்கள். திடீர் திடீர் வெளியேற்றங்கள். இதெல்லாம் நானும் என் மனைவியும் பயனியராகவும் மிஷனரியாகவும் சேவை செய்தபோது சந்தித்த சில ஆபத்துகள். ஆனால், ஆபத்துகள் வந்தாலும் எடுத்த முடிவை நினைத்து நாங்கள் வருத்தப்படவும் இல்லை, சேவையில் பின்வாங்கவும் இல்லை. யெகோவா எப்போதுமே எங்களுக்கு உதவி செய்திருக்கிறார், ஆசீர்வதித்திருக்கிறார். நம்முடைய மகத்தான போதகர், எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல நல்ல பாடங்களைக் கற்றுக்கொடுத்திருக்கிறார்.—யோபு 36:22; ஏசா. 30:20.
அப்பா அம்மாவின் முன்மாதிரி
என்னுடைய அப்பா அம்மா, 1950-களின் முடிவில், இத்தாலியை விட்டு கனடா நாட்டில் இருக்கும் சஸ்காட்சுவானில், கிண்டர்ஸ்லி என்ற இடத்தில் குடியேறினார்கள். அங்கே, சீக்கிரத்திலேயே அவர்களுக்குச் சத்தியம் கிடைத்துவிட்டது. பிறகு, சத்தியம்தான் எங்கள் வாழ்க்கையாக ஆனது. சின்ன வயதில், குடும்பத்தோடு சேர்ந்து ரொம்ப நேரம் ஊழியம் செய்வேன். இன்னமும் எனக்கு அது ஞாபகம் இருக்கிறது. நானெல்லாம் எட்டு வயதிலேயே “துணைப் பயனியர் செய்தேன்!” என்றுகூட ஜோக் அடிப்பேன்.
என் குடும்பத்துடன், சுமார் 1966
ஏழைகளாக இருந்தாலும், யெகோவாவுக்காக தியாகங்கள் செய்வதில் அப்பா அம்மா நல்ல முன்மாதிரி வைத்தார்கள். உதாரணத்துக்கு, 1963-ல் அமெரிக்காவில் இருக்கும் கலிபோர்னியாவில், பாஸடீனா என்ற இடத்தில் சர்வதேச மாநாடு ஒன்று நடந்தது. மாநாட்டுக்குப் போக கையில் பணம் இல்லாததால், தங்களிடம் இருந்த நிறைய பொருள்களை அவர்கள் விற்றுவிட்டார்கள்! 1972-ல், இத்தாலிய மொழி பேசுகிறவர்களிடம் பிரசங்கிப்பதற்காக, சுமார் 1,000 கிலோமீட்டருக்கு அப்பால் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கிற ட்ரெயில் என்ற ஊருக்குக் குடிமாறினோம். அப்பா, ஒரு கடையில் சுத்தம் மற்றும் பராமரிப்பு வேலையை அப்பா செய்துவந்தார். கடவுளுடைய சேவையில் முழு கவனம் செலுத்துவதற்காக, கைநிறைய பணம் சம்பாதிப்பதற்குக் கிடைத்த நல்ல நல்ல வாய்ப்புகளைக்கூட அப்பா வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
எனக்கும் என் கூடப் பிறந்த மூன்று பேருக்கும் அப்பா அம்மா நல்ல முன்மாதிரி வைத்தார்கள். அதற்கு நான் நன்றிக் கடன்பட்டிருக்கிறேன். யெகோவாவுடைய சேவையில் எனக்குக் கிடைத்த நல்ல பயிற்சிக்கு அவர்களுடைய உதாரணம்தான் அஸ்திவாரமாக இருந்தது. கடவுளுடைய அரசாங்கத்தை முதலில் தேடினால், யெகோவா என்னைப் பார்த்துக்கொள்வார் என்பதை என் மனதில் பதியவைத்தார்கள். அந்தப் பாடம்தான் என் வாழ்க்கையின் ஆணிவேராக ஆனது.—மத். 6:33.
முழுநேர சேவையைச் சுவைக்க ஆரம்பித்தேன்
1980-ல், டெபி என்ற அழகான சகோதரியை கல்யாணம் செய்தேன். யெகோவாவுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் அவளுக்கு இருந்தது. எங்கள் இருவருக்குமே முழுநேர சேவைதான் ஆசை. கல்யாணம் ஆன மூன்று மாதத்தில் டெபி பயனியர் செய்ய ஆரம்பித்தாள். ஒரு வருஷத்தில், தேவை அதிகம் இருக்கிற ஒரு சின்ன சபைக்கு நாங்கள் மாறினோம். அங்கே நானும் பயனியர் செய்ய ஆரம்பித்தேன்.
1980-ல் எங்களுடைய கல்யாண நாள் அன்று
ஆனால், போகப்போக கொஞ்சம் சோர்ந்து போய்விட்டோம். அந்தச் சபையைவிட்டு வேறு எங்கேயாவது போகலாம் என்று நினைத்தோம். ஆனால், வட்டாரக் கண்காணியிடம் முதலில் அதைப் பற்றிப் பேசினோம். அவர் ரொம்ப அன்பாக, ஆனால் வெளிப்படையாக ஒன்றைச் சொன்னார். “பிரச்சினைக்கு நீங்களும் ஒரு விதத்தில் காரணம். அங்கிருக்கிற பிரச்சினைகளைப் பற்றியே நீங்கள் யோசிக்கிறீர்கள். நல்ல விஷயங்களை தேடினால் நிச்சயம் அதைக் கண்டுபிடிப்பீர்கள்” என்றார். அந்தச் சமயத்தில் அந்த ஆலோசனை எங்களுக்கு ரொம்ப தேவைப்பட்டது. (சங். 141:5) அவர் சொன்னதை உடனே செய்தோம். பிறகுதான், நிறைய நல்ல விஷயங்கள் கண்ணுக்குத் தெரிந்தது. சபையில் நிறைய பேர் யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய ஆசைப்பட்டார்கள்; இளைஞர்களும் சத்தியத்தில் இல்லாத துணையோடு வாழும் சகோதர சகோதரிகளும் அப்படி ஆசைப்பட்டார்கள்! இதிலிருந்து நாங்கள் முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டோம். ஒரு சூழ்நிலையில் என்ன நல்லது இருக்கிறது என்றுதான் எப்போதும் பார்க்க வேண்டும்; அது எவ்வளவு கஷ்டமான சூழ்நிலையாக இருந்தாலும், யெகோவா சரிசெய்யும் வரை அவருக்காகக் காத்திருக்க வேண்டும்; இதைத்தான் கற்றுக்கொண்டோம். (மீ. 7:7) எங்களுடைய சந்தோஷம் எங்களுக்குத் திரும்பக் கிடைத்தது, நிலைமையும் நல்லபடியாக மாறியது.
முதல் தடவையாக பயனியர் ஊழியப் பள்ளியில் கலந்துகொண்டோம். அதை நடத்தின சகோதரர்கள் வெளிநாட்டில் சேவை செய்தவர்கள். அவர்கள் ஊழியத்தில் சந்தித்த சவால்களையும் அனுபவித்த ஆசீர்வாதங்களையும் சொன்னார்கள்; நிறைய புகைப்படங்களையும் காட்டினார்கள். மிஷனரி சேவை செய்வதற்கான ஆசை எங்கள் நெஞ்சிலும் குடியேறியது. மிஷனரிகளாக ஆக முடிவு செய்தோம்!
1983-ல் பிரிட்டிஷ் கொலம்பியா ராஜ்ய மன்றத்தில்
எங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க நினைத்தோம். 1984-ல் பிரெஞ்சு மொழி பேசுகிற கியூபெக் என்ற இடத்துக்கு குடிமாறினோம். இது பிரிட்டிஷ் கொலம்பியாவிலிருந்து 4,000 கிலோமீட்டர் தள்ளி இருந்தது. புது கலாச்சாரம், புது மொழி என எல்லாவற்றையும் பழக வேண்டியிருந்தது. பல சமயம், கையில் காசும் இருந்ததில்லை. ஒரு விவசாய நிலத்தில், கீழே கிடந்த உருளைக்கிழங்குகளைப் பொறுக்கிக்கொள்ள அதன் சொந்தக்காரர் ஒத்துக்கொண்டார். கொஞ்ச காலத்துக்கு வீட்டில் சமையலே அதை வைத்துத்தான். உருளைக்கிழங்கை வைத்து விதவிதமாக சமைப்பதில் என் மனைவி கில்லாடி ஆகிவிட்டாள்! சவால்கள் இருந்தாலும், சந்தோஷத்தை இழக்காமல் இருக்க எங்களால் முடிந்ததைச் செய்தோம். எல்லாவற்றுக்கும் மேல், யெகோவா எங்களை ரொம்ப நன்றாகப் பார்த்துக்கொள்வதைப் புரிந்துகொண்டோம்.—சங். 64:10.
ஒருநாள், எதிர்பார்க்காத ஒரு போன்கால் வந்தது. கனடா பெத்தேலில் சேவை செய்ய எங்களைக் கூப்பிட்டார்கள். எங்களுக்கோ ஒரே குழப்பம். ஏனென்றால், கிலியட் பள்ளிக்கு ஏற்கனவே விண்ணப்பம் போட்டிருந்தோம். இருந்தாலும், பெத்தேல் சேவையை ஏற்றுக்கொண்டோம். பெத்தேலுக்கு வந்தவுடன், கிளை அலுவலகக் குழுவில் இருந்த சகோதரர் கென்னத் லிட்டிலிடம், “எங்கள் கிலியட் அப்ளிகேஷன் என்னானது?” என்று கேட்டோம். அதற்கு அவர், “அந்தப் பாலத்துக்குப் பக்கத்தில் வரும்போது அதைக் கடக்கலாம்!” என்று சொன்னார்.
ஒரு வாரத்துக்குப் பிறகு, டெபியும் நானும் அந்தப் ‘பாலத்துக்கு’ வந்துவிட்டோம்! அதாவது, கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள எங்களைக் கூப்பிட்டார்கள். இப்போது மறுபடியும் குழம்பினோம். பெத்தேல் சேவையா, கிலியட்டுக்குப் போவதா? சகோதரர் லிட்டில் எங்களிடம் பேசினார். “யெகோவாவுடைய சேவையில் நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்து இருந்தாலும், இன்னொரு பாதையை தேர்ந்தெடுத்து இருக்கலாமோ என்ற யோசனை சிலசமயம் வரத்தான் செய்யும். இரண்டு பாதைகளையும் யெகோவாவால் ஆசீர்வதிக்க முடியும். அதனால், ஒன்றைவிட இன்னொன்று பெரிது கிடையாது” என்றார். கிலியட் அழைப்பை ஏற்றுக்கொண்டோம். சகோதரர் லிட்டில் சொன்னது எவ்வளவு உண்மை என்பது போகப்போக புரிந்தது. யெகோவாவின் சேவையில் இதுவா, அதுவா என்று குழம்புகிறவர்களிடம் அவர் சொன்னதைத்தான் அடிக்கடி சொல்வோம்.
மிஷனரிகளாக நாங்கள்
(இடது) யுலிஸிஸ் க்ளாஸ்
(வலது) ஜேக் ரெட்ஃபோர்ட்
புருக்லின், நியு யார்க். ஏப்ரல் 1987. கிலியட் பள்ளியின் 83-வது வகுப்பு அது. 24 மாணவர்களில் நாங்களும் இருந்தது மெய்சிலிர்க்க வைத்தது. சகோதரர் யுலிஸிஸ் க்ளாஸ் மற்றும் சகோதரர் ஜேக் ரெட்ஃபோர்டும்தான் பள்ளியில் முக்கிய போதனையாளர்கள். ஐந்து மாதம் பஞ்சாய்ப் பறந்துவிட்டது. செப்டம்பர் 6, 1987-ல் பட்டம் வாங்கினோம். நாங்களும், ஜான் மற்றும் மேரி குட்டும் ஹெய்டி தீவுக்கு நியமிக்கப்பட்டோம்.
1988-ல் ஹெய்டியில்
பல வருஷங்களாக ஹெய்டிக்கு மிஷனரிகள் அனுப்பப்படவில்லை. ஹெய்டியில் கடைசியாக சேவை செய்த மிஷனரிகளும், 1962-ல் அந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். பட்டம் வாங்கிய மூன்று வாரத்தில் நாங்கள் அங்கே போய்விட்டோம். 35 பிரஸ்தாபிகள் இருக்கிற ஒரு சின்ன சபையில் சேவை செய்தோம். அது மலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்தது. எங்களுக்கோ சின்ன வயது; அனுபவமும் இல்லை. நாங்கள் குடியிருந்த மிஷனரி இல்லத்திலும் நாங்களே எங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. அந்த ஊர் மக்கள் பரம ஏழைகள். நிறைய பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. நாங்கள் மிஷனரி சேவை செய்த ஆரம்ப காலத்தில், அங்கே அரசியல் குழப்பங்கள் நடந்தது, கலவரங்கள் வெடித்தது, ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு சதி நடந்தது. போராட்டக்காரர்கள் தடுப்புச் சுவர்களை தீ வைத்துக் கொளுத்தினார்கள். இதைத் தவிர, அந்தத் தீவில் புயல்களையும் சந்தித்தோம்.
பிரச்சினைகள் மத்தியிலும், ஹெய்டியில் இருந்த சகோதர சகோதரிகள் சந்தோஷமானவர்களாக, மனஉறுதி உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம். வாழ்க்கை கஷ்டமாக இருந்தாலும், யெகோவாவையும் ஊழியத்தையும் அவர்கள் நேசித்தார்கள். வயதான ஒரு சகோதரிக்கு வாசிக்கவே தெரியாது. ஆனால், கிட்டத்தட்ட 150 வசனங்களை மனப்பாடம் செய்து வைத்திருந்தார்! அந்த ஊரில் இருந்த பிரச்சினைகளைப் பார்த்தபோது, ஊழியத்தை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்ற ஆசைதான் அதிகமானது. ஏனென்றால், எல்லா பிரச்சினைக்கும் கடவுளுடைய அரசாங்கம்தான் ஒரே தீர்வு என்று மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று நினைத்தோம். ஆரம்பத்தில் நாங்கள் பைபிள் படிப்பு நடத்தின கொஞ்சம் பேர் ஒழுங்கான பயனியர்களாக, விசேஷப் பயனியர்களாக, மூப்பர்களாக ஆனதைப் பார்த்தது சந்தோஷமாக இருந்தது.
ஹெய்டியில், ட்ரெவர் என்ற இளைஞரைச் சந்தித்தேன். அவர் மார்மன் சர்ச் மிஷனரி. பைபிளைப் பற்றிச் சிலசமயம் அவரிடம் பேசியிருக்கிறேன். பல வருஷத்துக்குப் பிறகு, எதிர்பார்க்காத ஒரு கடிதம் எனக்குக் கிடைத்தது. அதை எழுதியது ட்ரெவர்தான். “வரப்போகிற மாநாட்டில் நான் ஞானஸ்நானம் எடுக்கப் போகிறேன். திரும்பவும் ஹெய்டிக்குப் போகப் போகிறேன். எங்கே மார்மன் சர்ச் மிஷனரியாக இருந்தேனோ, அதே இடத்தில் ஒரு விசேஷ பயனியராக சேவை செய்ய ஆசைப்படுகிறேன்,” என்று எழுதியிருந்தார். சொன்ன மாதிரியே, அங்கே தன்னுடைய மனைவியோடு பல வருஷம் சேவை செய்தார் ட்ரெவர்.
ஐரோப்பா, பிறகு ஆப்பிரிக்கா
1994-ல் ஸ்லோவீனியாவில் சேவை செய்தபோது
ஐரோப்பாவின் ஒரு பகுதியில், நம்முடைய வேலைக்குப் போடப்பட்டிருந்த தடைகள் ஒருசமயம் குறைய ஆரம்பித்தது. அப்போது, நாங்கள் அங்கே நியமிக்கப்பட்டோம். 1992-ல் ஸ்லோவீனியாவில் இருக்கிற லுஜுபுல்ஜானாவுக்கு வந்தோம். இதற்குப் பக்கத்தில்தான், இத்தாலிக்குப் போவதற்கு முன்பு, சின்ன வயதில் என்னுடைய அப்பா அம்மா வாழ்ந்தார்கள். முன்பு யுகோஸ்லாவியாவின் பகுதிகளாக இருந்த இடங்களில் இப்போது போர் நடந்துகொண்டு இருந்தது. வியன்னாவில் இருந்த ஆஸ்திரிய நாட்டுக் கிளை அலுவலகம்தான் இந்தப் பகுதிகளில் ஊழிய வேலைகளைக் கவனித்துக்கொண்டது. குரோஷியாவில் இருந்த ஜாக்ரெப்பிலும், செர்பியாவில் இருந்த பெல்கிரேட்டிலும் அமைப்பின் சில அலுவலகங்கள் இருந்தன. இவையும் ஆஸ்திரிய கிளை அலுவலகம் அந்த சமயத்தில் சேர்ந்து செயல்பட்டது. இப்போது குரோஷியாவிலும் செர்பியாவிலும் தனியாக கிளை அலுவலகங்களே இருக்கின்றன.
இந்த இடத்தில், மறுபடியும் நாங்கள் புது மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. புது கலாச்சாரத்துக்கு ஏற்ற மாதிரி வாழ்வதற்கு, பழக வேண்டியிருந்தது. தங்கள் மொழியைப் பற்றி உள்ளூர்க்காரர்கள் இப்படிச் சொல்வார்கள்: “யெஸிக் யே டெஸிக்.” அதற்கு, “இந்த மொழி ரொம்ப கஷ்டம்” என்று அர்த்தம். உண்மைதான் அது ரொம்ப ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. சகோதர சகோதரிகள் யெகோவாவுக்கு எவ்வளவு உண்மையாக இருக்கிறார்கள் என்பதை அங்கே கவனித்தோம். அது எங்கள் மனதைத் தொட்டது. அமைப்பு கொண்டுவந்த மாற்றங்களை அவர்கள் உடனடியாக ஏற்றுக்கொண்டார்கள். அமைப்புக்கு அவர்கள் உண்மையாக இருந்தபோது, யெகோவா அவர்களை எப்படி ஆசீர்வதித்தார் என்பதையும் நாங்கள் பார்த்தோம். யெகோவா எப்போதுமே அன்பாக, சரியான நேரத்தில் விஷயங்களைச் சரிசெய்வார் என்பதை மறுபடியும் கவனித்தோம். ஸ்லோவீனியாவில் இருந்த சமயத்தில், நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டோம். அங்கே வந்த பிரச்சினைகளைச் சமாளித்து சகித்திருக்க நாங்கள் ஏற்கனவே கற்றுக்கொண்ட பாடங்களும் உதவியது.
வாழ்க்கையில் இன்னும் பல மாற்றங்கள் வந்தன. 2000-ல் மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற கோட் டீவாருக்கு நியமிக்கப்பட்டோம். உள்நாட்டுப் போர் காரணமாக, 2002-ல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். பிறகு, சியர்ரா லியோனுக்கு வந்தோம். இந்த ஊரில் 11 வருஷமாக நடந்துகொண்டிருந்த உள்நாட்டுப் போர் அப்போதுதான் முடிந்திருந்தது. கோட் டீவாரை திடீரென்று விட்டு வந்தது கஷ்டமாகத்தான் இருந்தது. இருந்தாலும், சந்தோஷத்தை இழக்காமல் தொடர்ந்து சேவை செய்ய வாழ்க்கையில் கற்றுக்கொண்ட பாடங்கள் உதவியது.
சத்தியத்தைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருந்த மக்கள்மேல் நாங்கள் கவனம் செலுத்தினோம். அப்படிப்பட்டவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். சகோதர சகோதரிகளுடைய சகிப்புத்தன்மையும் எங்களைக் கவர்ந்தது. பல வருஷங்களாக போர் நடந்துவந்தாலும், அவர்கள் தொடர்ந்து கடவுளுக்குச் சேவை செய்துவந்தார்கள். அவர்களிடம் காசு பணம் நிறைய இல்லை. ஆனால், இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஒரு சகோதரி, என் மனைவிக்கு துணிமணிகளைக் கொடுத்தார். ஆனால், அதை வாங்குவதற்கு அவள் தயங்கினாள். அப்போது அந்த சகோதரி, “போர் சமயத்தில் மற்ற நாட்டு சகோதரர்கள் எங்களுக்கு உதவினார்கள். இப்போது உங்களுக்கு உதவும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்திருக்கிறது” என்று சொன்னார். நாங்களும் இவர்களைப் போல நடந்துகொள்ள ஆசைப்பட்டோம்.
பிறகு, நாங்கள் கோட் டீவாருக்கே திரும்பிப்போனோம். ஏற்கனவே அங்கே புகைந்து கொண்டிருந்த அரசியல் குழப்பங்கள் மறுபடியும் எரிமலையாக வெடித்தது. நவம்பர் 2004-ல், ஹெலிகாப்டர் மூலமாக நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். வெறும் 10 கிலோ எடைகொண்ட பையை ஆளுக்கு ஒன்று தூக்கிக்கொண்டு தப்பித்துப்போனோம். பிரெஞ்சு ராணுவத் தளவாடம் இருந்த இடத்தில் தரையில் படுத்து இரவைக் கழித்தோம். அடுத்த நாள், சுவிட்சர்லாந்தில் தரை இறங்கினோம். அங்கே கிளை அலுவலகத்துக்குப் போய்ச் சேருவதற்குள் நடுராத்திரி ஆகிவிட்டது. கிளை அலுவலகக் குழுவில் இருந்தவர்களும் ஊழியப் பயிற்சிப் பள்ளி போதனையாளர்களும், அவர்கள் எல்லாருடைய மனைவிகளும் அன்பாக எங்களை வரவேற்றார்கள். கட்டி அணைத்துக்கொண்டார்கள். சுடச்சுட சாப்பாடு கொடுத்தார்கள். சுவிஸ் சாக்லட்டும் கொடுத்தார்கள்! அந்த அன்பில் நெகிழ்ந்து போனோம்!
2005-ல் அகதிகளான சகோதர சகோதரிகளுக்குப் பேச்சு கொடுத்தபோது
கொஞ்ச நாளைக்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற கானாவுக்கு நாங்கள் நியமிக்கப்பட்டோம். கோட் டீவாரில் நிலைமைகள் சரியான பிறகு, மறுபடியும் அங்கே நியமிக்கப்பட்டோம். கஷ்டமான காலங்களையும் இதுபோன்ற தற்காலிக மாற்றங்களையும் சகித்திருப்பதற்கு சகோதர சகோதரிகளுடைய அன்புதான் உதவியது. எங்கே போனாலும் யெகோவாவுடைய மக்கள் மத்தியில் அன்புக்குப் பஞ்சமில்லை. ஆனால், அதை லேசாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதில் நானும் டெபியும் உறுதியாக இருந்தோம். வாழ்க்கையில் சந்தித்த கஷ்டமான சூழ்நிலைகள்கூட எங்களுக்கு நல்ல பயிற்சியைக் கொடுத்திருக்கிறது என்பதைப் பின்பு புரிந்துகொண்டோம்.
மத்திய கிழக்கில்
2007-ல் மத்திய கிழக்கில்
2006-ல் உலகத் தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. மத்திய கிழக்கில், அரசியல் மற்றும் மதப் பிரச்சினைகள் நிறைந்த நாடு ஒன்றில் சேவை செய்ய புது நியமிப்பு கிடைத்தது. அங்கே புது சவால்கள், புது மொழிகள், புது கலாச்சாரம் என மறுபடியும் நாங்கள் எல்லாவற்றையும் புதிதாக ஆரம்பிக்க வேண்டியிருந்தது. ஒரு சாகசப் பயணம்போல் அது இருந்தது. இங்கேயும், கற்றுக்கொள்ள நிறைய இருந்தது. பல மொழிகளைப் பேசுகிறவர்களும் பல கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களும் சபைகளில் இருந்தார்கள். பார்ப்பதற்கே அது சந்தோஷமாக இருக்கும்! அதுமட்டுமல்ல, யெகோவாவுடைய அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதலைப் பின்பற்றி நடப்பதால் அங்கே இருக்கும்ஒற்றுமையையும் பார்க்க முடிந்தது. அந்தச் சகோதர சகோதரிகளை எங்களுக்கு ரொம்ப பிடித்திருந்தது. குடும்பத்தில், படிக்கிற இடத்தில், வேலை செய்கிற இடத்தில், அக்கம்பக்கத்தில் என எல்லா பக்கத்திலிருந்தும் எதிர்ப்பு வந்தாலும், அவர்கள் தைரியமாகச் சகித்திருந்தார்கள், யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்.
2012-ல் இஸ்ரேலில், டெல் அவீவில் நடந்த விசேஷ மாநாட்டில் கலந்துகொண்டோம். இதில் ஒரு விசேஷம் இருக்கிறது. கி.பி. 33 பெந்தெகொஸ்தேக்குப் பிறகு, இப்போதுதான் முதல் தடவையாக, கடவுளுடைய மக்கள் இவ்வளவு பெரிய கூட்டமாக இந்த இடத்தில் ஒன்றுகூடி வந்திருந்தார்கள். எவ்வளவு பெரிய அற்புதம்!
ஒருமுறை, நம்முடைய வேலை தடை செய்யப்பட்டிருந்த ஒரு நாட்டுக்கு எங்களைப் போகச் சொன்னார்கள். அங்கே போகும்போது, கொஞ்சம் பிரசுரங்களையும் கொண்டுபோனோம். ஊழியத்திலும் சின்னச் சின்னதாக நடத்தப்பட்ட மாநாடுகளிலும் கலந்துகொண்டோம். ஊரில் எங்கே பார்த்தாலும் செக்போஸ்டுகளும், ஆயுதம் ஏந்திய ராணுவ வீரர்களும் தென்பட்டார்கள். அதனால், ரொம்ப கவனமாக இருந்தோம். சகோதரர்கள் சிலர் எங்களோடு இருந்ததால் பாதுகாப்பாக உணர்ந்தோம்.
மீண்டும் ஆப்பிரிக்கா
2014-ல் காங்கோவில், பேச்சை தயார் செய்துகொண்டிருக்கும்போது
2013-ல் எங்களுக்கு வித்தியாசமான ஒரு நியமிப்பு கிடைத்தது. அதாவது, காங்கோவில் இருக்கிற கின்ஷாசா கிளை அலுவலகத்தில் சேவை. காங்கோ, இயற்கை அழகு நிறைந்த பெரிய நாடு. ஆனால், வறுமை தலைவிரித்து ஆடியது, போர்களுக்குப் பஞ்சம் இல்லை. ஆரம்பத்தில், “ஆப்பிரிக்கா எங்களுக்கு நன்றாகத் தெரியும். அங்கே வாழ்ந்திருக்கிறோம். அதனால், பெரிய பிரச்சினை ஒன்றும் இல்லை” என்று சொன்னோம். ஆனால், புதிதாக இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது அப்போது தெரியவில்லை. ரோடு வசதி இல்லாத, பாலங்கள் இல்லாத பல இடங்களில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இருந்தாலும், நல்ல விஷயங்கள்மேல் கவனம் வைத்தோம். சகோதர சகோதரிகளுடைய விடாமுயற்சி எங்களுக்குப் பிடித்திருந்தது. பணப்பிரச்சினைகள் இருந்தாலும் அவர்கள் சந்தோஷமாக இருந்தது மனதைத் தொட்டது. ஊழியத்தை அவர்கள் நேசித்தார்கள். கூட்டங்களுக்கும், மாநாடுகளுக்கும் போக அவர்கள் போட்ட முயற்சியைப் பார்த்தது சந்தோஷமாக இருந்தது. கடவுளுடைய வேலை அங்கே எவ்வளவு முன்னேறிப் போகிறது என்பதையும் பார்க்க முடிந்தது. யெகோவாவுடைய ஆதரவும், ஆசீர்வாதமும் இருப்பதால் மட்டும்தான் அது சாத்தியம் என்பதைப் புரிந்துகொண்டோம். காங்கோவில், நெஞ்சை விட்டு நீங்காத நினைவுகள் எக்கச்சக்கம். எங்களுக்குக் கிடைத்த நண்பர்கள் குடும்பம் போல ஆனதால், குடும்பம் பெரிதாகிவிட்டது என்றே சொல்லலாம்!
2023-ல் தென் ஆப்பிரிக்காவில் ஊழியம் செய்யும்போது
2017-ன் கடைசியில் தென் ஆப்பிரிக்க கிளை அலுவலகத்தில் சேவை செய்ய அழைப்பு வந்தது. இதுவரைக்கும் நாங்கள் சேவை செய்த கிளை அலுவலகங்களிலேயே இதுதான் பெரியது. அதோடு, இங்கே எங்களுக்குக் கிடைத்த பெத்தேல் நியமிப்புகளை இதற்கு முன் நாங்கள் செய்ததே இல்லை. இப்போதும் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருந்தது. முன்பு நாங்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் இப்போது கைகொடுத்தது. காலம் காலமாக சகித்திருந்து சேவை செய்கிற நிறைய சகோதர சகோதரிகளை இங்கே சந்தித்தோம். அவர்களை நேசிக்க ஆரம்பித்துவிட்டோம். வித்தியாச வித்தியாசமான இனங்களையும் கலாச்சாரங்களையும் சேர்ந்த சகோதர சகோதரிகள், பெத்தேலில் சேவை செய்ததைப் பார்த்தது பிரமிப்பைக் கொடுத்தது. அவர்களுக்குள் அவ்வளவு ஒற்றுமை! புதிய சுபாவத்தைப் போட்டுக்கொள்ளவும் பைபிள் நியமங்கள்படி வாழவும் தன் மக்கள் முயற்சி எடுக்கும்போது, யெகோவா அவர்களை ஆசீர்வதிக்கிறார், சமாதானத்தைத் தருகிறார் என்பது நன்றாகவே புரிகிறது.
எங்கள் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது, டெபிக்கும் எனக்கும் சுவாரஸ்யமான பல நியமிப்புகள் கிடைத்திருக்கின்றன. புதுப் புது கலாச்சாரங்களுக்கு ஏற்ற மாதிரி நாங்கள் வாழ்ந்திருக்கிறோம். புதுப் புது மொழிகளையும் கற்றுக்கொண்டோம். அது எப்போதுமே அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. ஆனால், யெகோவா தன்னுடைய அமைப்பு மூலமாகவும் சகோதர சகோதரிகள் மூலமாகவும் மாறாத அன்பை எங்கள்மேல் காட்டியிருக்கிறார்; அதை நாங்கள் எப்போதுமே உணர்ந்திருக்கிறோம். (சங். 144:2) முழுநேர சேவையில் எங்களுக்குக் கிடைத்த இந்தப் பயிற்சி, யெகோவாவுக்கு இன்னும் நன்றாகச் சேவை செய்யும் ஊழியர்களாக எங்களை மாற்றியிருக்கிறது என்று நம்புகிறோம்.
அப்பா அம்மா வைத்த நல்ல முன்மாதிரிக்காகவும், எனக்குப் பக்கபலமாக என் மனைவி டெபி இருந்ததற்காகவும், நான் என்றும் நன்றியோடு இருக்கிறேன். அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளுடைய முன்மாதிரியும் எனக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கிறது. அவர்களுக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன். அடுத்து எங்களுடைய வாழ்க்கையில், மகத்தான போதகரான யெகோவாவிடம் இருந்து இன்னும் என்னவெல்லாம் கற்றுக்கொள்ளப் போகிறோம் என்பதைத்தான் எதிர்பார்த்திருக்கிறோம்!