உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 அக்டோபர் பக். 2-5
  • 1925​—நூறு வருஷங்களுக்கு முன்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 1925​—நூறு வருஷங்களுக்கு முன்பு
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமானது
  • பெரிய அளவில் ரேடியோ ஒலிபரப்பு!
  • நம் நம்பிக்கைகளில் வந்த மாற்றம்
  • யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுப்பது
  • ஆர்வம் உள்ளவர்களை மீண்டும் சந்தித்தார்கள்
  • எதிர்காலத்தை எதிர்நோக்கி
  • 1924—நூறு வருஷங்களுக்கு முன்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • 1922—நூறு வருஷங்களுக்கு முன்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2022
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 அக்டோபர் பக். 2-5
1925-ல் இண்டியானாவில் இருக்கும் இண்டியானாபோலிஸில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட எக்கச்சக்கமான சகோதர சகோதரிகள் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார்கள்.

1925-ல் இண்டியானாவில் இருக்கும் இண்டியானாபோலிஸில் நடந்த மாநாடு

1925​—நூறு வருஷங்களுக்கு முன்பு

“கிறிஸ்தவர்கள் எல்லாரும் இந்த வருஷத்துக்காக ரொம்ப ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள்” என்று ஜனவரி 1, 1925-ல் வந்த காவற்கோபுரம் சொன்னது. அந்தக் கட்டுரை தொடர்ந்து இப்படிச் சொன்னது: “ஆனாலும், இந்த வருஷத்தில் என்ன நடக்கப்போகிறது என்று மட்டுமே நாம் யோசித்துக்கொண்டு இருக்கக் கூடாது. அப்படி யோசித்துக்கொண்டு இருந்தால், நம் எஜமானுடைய வேலையைச் சந்தோஷமாகச் செய்ய முடியாமல் போய்விடலாம்.” 1925-ல் என்ன நடக்கும் என்று பைபிள் மாணாக்கர்கள் எதிர்பார்த்தார்கள்? ஏமாற்றங்கள் இருந்தாலும் எஜமானுடைய வேலையை அவர்கள் எப்படிச் சுறுசுறுப்பாகச் செய்தார்கள்? வாருங்கள், பார்க்கலாம்!

எதிர்பார்ப்பு நிறைவேற தாமதமானது

1925-ல் இந்தப் பூமி ஒரு பூஞ்சோலையாக மாறும் என்று நிறைய பைபிள் மாணாக்கர்கள் நம்பிக்கொண்டு இருந்தார்கள். ஏன்? ஆளும் குழுவில் பிற்பாடு சேவை செய்த சகோதரர் ஆல்பர்ட் ஷ்ரோடர் இப்படிச் சொல்கிறார்: “இந்தப் பூமியில் மீதியாக இருக்கும் பரலோக நம்பிக்கையுள்ளவர்கள், அந்த வருஷத்தில் பரலோகத்துக்குப் போய் ஆட்சி செய்வார்கள் என்றும்... பைபிள் காலத்தில் வாழ்ந்த ஆபிரகாம், தாவீது மற்றும் இன்னும் சிலர் உயிர்த்தெழுந்து அதிபதிகளாக இருப்பார்கள் என்றும்... இந்தப் பூமியில் இருக்கிறவர்களை வழிநடத்துவார்கள் என்றும்... நம்பப்பட்டது.” ஆனால், அந்த வருஷம் போகப் போக அவர்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. அதனால், சிலர் சோர்ந்துபோய்விட்டார்கள்.—நீதி. 13:12.

இந்த மாதிரி ஏமாற்றங்கள் இருந்தாலும், பெரும்பாலான பைபிள் மாணாக்கர்கள் பிரசங்க வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்தார்கள். யெகோவாவுக்கு ஒரு சாட்சியாக இருப்பது எவ்வளவு பெரிய பொறுப்பு என்பதைப் புரிந்துகொண்டார்கள். நல்ல செய்தியை பிரமாண்டமான விதத்தில் பரப்ப அவர்கள் எந்தளவு முயற்சி எடுத்தார்கள் என்று இப்போது பார்க்கலாம்.

பெரிய அளவில் ரேடியோ ஒலிபரப்பு!

1924-ல், WBBR ரேடியோ ஸ்டேஷனில் ஒலிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளை நிறைய மக்கள் கேட்டார்கள். அதனால் அடுத்த வருஷமே, அதாவது 1925-ல், இன்னொரு திறம்பட்ட ரேடியோ ஸ்டேஷனை பைபிள் மாணாக்கர்கள் கட்டினார்கள். இந்தமுறை இல்லினாய்ஸில் இருக்கிற சிகாகோவுக்குப் பக்கத்தில் கட்டினார்கள். அதன் பெயர் வெர்ட் (WORD). அந்த ரேடியோ ஸ்டேஷனைக் கட்ட உதவியவர்களில் ரால்ஃப் லெஃப்லர் என்ற ரேடியோ இன்ஜினியரும் ஒருவர். அவர் சொல்கிறார்: “குளிர்காலத்தில், நிறைய இடங்களில் வாழ்ந்த மக்கள், அதுவும் ரொம்ப தூரத்தில் இருந்தவர்கள்கூட, இந்த ஸ்டேஷனிலிருந்து வந்த நிகழ்ச்சிகளைச் சாயங்காலத்தில் கேட்டார்கள்.” சொல்லப்போனால், கிட்டத்தட்ட 5,000 கிலோமீட்டர் (3,000 மைல்) தூரத்தில் அலாஸ்காவில் இருக்கிற பைலட் ஸ்டேஷனில் வாழ்ந்த ஒரு குடும்பம்கூட அந்த ஸ்டேஷனின் முதல் ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றைக் கேட்டார்கள். அதைக் கேட்ட பிறகு, பைபிளிலிருந்து சொல்லப்பட்ட உற்சாகமான விஷயங்களுக்கு நன்றி சொல்லி, அந்த ஸ்டேஷனில் வேலை செய்தவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

இடது: இல்லினாய்ஸில் இருக்கும் படாவியாவில் இருந்த ‘வெர்ட்’-ன் ஒலிபரப்பு டவர்கள்

வலது: ரால்ஃப் லெஃப்லர் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்கிறார்

இந்த ரேடியோ ஸ்டேஷனில் இருந்து வந்த ஒலிபரப்பை எத்தனை பேரால் கேட்க முடிந்தது என்பதைப் பற்றி டிசம்பர் 1, 1925-ல் வந்த காவற்கோபுரம் இப்படிச் சொன்னது: “அமெரிக்காவின் மிக சிறந்த ரேடியோ ஸ்டேஷன்களில் ‘வெர்ட்’-ம் ஒன்று. ஏனென்றால், அது 5,000 வாட்ஸ் செயல்திறனுடன் இருந்தது. அதன் ஒலிபரப்பு அமெரிக்கா முழுவதும் ஒலித்தது. சொல்லப்போனால், கியூபாவிலும் அலாஸ்காவின் வடக்கு எல்லைவரையிலும்கூட கேட்டது. சத்தியத்தைப் பற்றி அதுவரை கேள்விப்படாதவர்கள், இந்த ஒலிபரப்பைக் கேட்டப் பிறகு சத்தியத்தைத் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டார்கள்.”

ஜார்ஜ் நேஷ்

அதேசமயத்தில், கனடாவில் ரேடியோ மூலமாக நல்ல செய்தியைச் சொல்வதற்கு பைபிள் மாணாக்கர்கள் கடினமாக முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். 1924-ல் சஸ்காட்சுவானில் இருந்த சஸ்கடூனில், சக் (CHUC) என்ற ரேடியோ ஸ்டேஷனைக் கட்டினார்கள். கனடாவில் மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை முதல்முதலில் ஒலிபரப்பிய ஸ்டேஷன்களில் இதுவும் ஒன்று. 1925-ல் அந்தக் குட்டி ஸ்டேஷனை வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டியிருந்தது. அதனால் சஸ்கடூனில் இருந்த ரீஜன்ட் பில்டிங் என்ற ஒரு பழைய தியேட்டரை நம் அமைப்பு வாங்கி, புதுப்பித்தது. அங்கே இந்த ரேடியோ ஸ்டேஷனை மாற்றினார்கள்.

இந்த ஸ்டேஷன் வந்ததால் சஸ்காட்சுவானின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் இருந்த நிறைய பேரால் நல்ல செய்தியை முதல் தடவையாகக் கேட்க முடிந்தது. உதாரணத்துக்கு, ஒதுக்குப்புறமான ஒரு ஊரில் இருந்த ஒரு பெண், இந்த ஒலிபரப்பைக் கேட்ட பிறகு பைபிள் பிரசுரங்கள் வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதைப் பற்றி சகோதரர் ஜார்ஜ் நேஷ் இப்படிச் சொல்கிறார்: “பைபிள் பிரசுரங்கள் உடனடியாக வேண்டும் என்று அந்தப் பெண் ஆசைப்பட்டதைப் புரிந்துகொண்டோம். அந்தளவுக்கு அவருடைய கூக்குரல் இருந்தது. அதனால் வேதாகமத்தில் படிப்புகள் (ஆங்கிலம்) புத்தகத்தின் மொத்த தொகுதியையும் நாங்கள் அனுப்பி வைத்தோம்.” சீக்கிரத்திலேயே, கற்றுக்கொண்ட விஷயங்களை அந்தப் பெண் தொலைதூரத்தில் இருந்தவர்களுக்குக்கூட சொல்ல ஆரம்பித்தார்.

நம் நம்பிக்கைகளில் வந்த மாற்றம்

மார்ச் 1, 1925 காவற்கோபுரத்தில் ஒரு மைல்கல் கட்டுரை வந்தது. அதன் தலைப்பு, “ஒரு தேசத்தின் பிறப்பு.” (ஆங்கிலம்) இந்தக் கட்டுரை ஏன் ரொம்ப முக்கியமானதாக இருந்தது? சாத்தானுக்கென்று ஒரு அமைப்பு இருப்பது கொஞ்ச நாளாகவே பைபிள் மாணாக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. பரலோகத்தில் இருக்கிற பேய்களும், பூமியில் இருக்கிற மத, வர்த்தக மற்றும் அரசியல் அமைப்புகளும் அதன் பாகமாக இருக்கின்றன என்பதும் தெரியும். ஆனால், இந்தக் கட்டுரை மூலமாக சகோதர சகோதரிகளுக்கு “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” ஒரு விஷயத்தைப் புரிய வைத்தது. (மத். 24:45) யெகோவாவுக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது என்றும், அந்த அமைப்புக்கும் சாத்தானுடைய அமைப்புக்கும் எந்த ஒட்டுறவும் இல்லை என்றும், சொல்லப்போனால், அதற்கு நேர் எதிராக இருக்கிறது என்றும் அந்தக் கட்டுரை சொன்னது. அதுமட்டுமல்ல, 1914-ல் கடவுளுடைய அரசாங்கம் ஆட்சி செய்ய ஆரம்பித்தது என்றும், “பரலோகத்தில் போர்” நடந்ததால் அந்த வருஷத்தில், சாத்தானும் அவனுடைய பேய்களும் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்றும், பூமியைத் தவிர அவர்களால் வேறு எங்கேயும் போக முடியாது என்றும் உண்மையும் விவேகமும் உள்ள அடிமை சொன்னது.—வெளி. 12:7-9.

இந்தப் புதிய விளக்கத்தை ஏற்றுக்கொள்வது சிலருக்குக் கஷ்டமாக இருந்தது. அதனால், அந்த காவற்கோபுரத்தில் இப்படிச் சொல்லப்பட்டிருந்தது: “இந்த காவற்கோபுரத்தைப் படிக்கிற சிலரால், இதில் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர்கள் நம் எஜமானுக்காகப் பொறுமையோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கட்டும். சுத்தமான இதயத்தோடு அவருக்குத் தொடர்ந்து சேவை செய்துகொண்டே இருக்கட்டும்.”

இந்தக் கட்டுரையைப் படித்தபோது நிறைய பைபிள் மாணாக்கர்களுக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி பிரிட்டனைச் சேர்ந்த டாம் ஈர் என்ற கால்பார்ட்டர் (இப்போது பயனியர் என்று சொல்கிறோம்) இப்படிச் சொன்னார்: “வெளிப்படுத்துதல் 12-வது அதிகாரத்தின் விளக்கத்தைக் கேட்டபோது சகோதரர்களுக்குப் பயங்கர சுவாரஸ்யமாக இருந்தது. கடவுளுடைய அரசாங்கம் ஏற்கனவே பரலோகத்தில் அதன் ஆட்சியை ஆரம்பித்துவிட்டது என்பதைப் புரிந்துகொண்டபோது, இந்த நல்ல செய்தியை எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டோம். நிறைய ஊழியம் செய்ய வேண்டும் என்று தோன்றியது. பெரிய பெரிய விஷயங்களைச் செய்ய யெகோவா எப்படி அவருடைய மக்களைப் படிப்படியாக வழிநடத்திக்கொண்டு இருக்கிறார் என்பதை எங்களால் பார்க்க முடிந்தது.”

யெகோவாவைப் பற்றி சாட்சி கொடுப்பது

ஏசாயா 43:10, இன்று நமக்கு நன்றாகத் தெரிந்த ஒரு வசனம். அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: “யெகோவா சொல்வது இதுதான்: . . . ‘நான் தேர்ந்தெடுத்திருக்கிற என் ஊழியனே, நீ என்னுடைய சாட்சியாக இருக்கிறாய்.’” 1925-க்கு முன்பு இந்த வசனம் நம் பிரசுரங்களில் அவ்வளவாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆனால் அந்த வருஷம், நிலைமை மாறியது. 1925-ல் மட்டும், ஏசாயா 43:10 மற்றும் 12 வசனங்கள், காவற்கோபுர பத்திரிகையின் 11 இதழ்களில் விளக்கப்பட்டிருந்தன!

ஆகஸ்ட் 1925-ன் முடிவில், இண்டியானாவில் இருக்கிற இண்டியானாபோலிஸ் என்ற இடத்தில் பைபிள் மாணாக்கர்கள் மாநாட்டுக்காகக் கூடிவந்தார்கள். நிகழ்ச்சிநிரலின் வரவேற்பு குறிப்பில், ஜோஸஃப் எஃப். ரதர்ஃபர்ட் இப்படிச் சொல்லியிருந்தார்: “எஜமானிடமிருந்து பலம் கிடைப்பதற்காக நாம் எல்லாரும் இந்த மாநாட்டுக்கு வந்திருக்கிறோம். அவருடைய சாட்சிகளாக இருப்பதற்கான புது பலத்தோடு நாம் திரும்பிப்போய் ஊழியம் செய்யலாம்.” யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுப்பதற்குக் கிடைக்கிற ஒவ்வொரு வாய்ப்பையும் நன்றாகப் பயன்படுத்தச் சொல்லி, வந்திருந்தவர்களை அந்த எட்டு நாள் மாநாடு முழுவதும் உற்சாகப்படுத்தினார்கள்.

ஆகஸ்ட் 29, சனிக்கிழமை அன்று சகோதரர் ரதர்ஃபர்ட், “செயல்பட ஓர் அழைப்பு” என்ற தலைப்பில் ஒரு பேச்சுக் கொடுத்தார். அவருடைய பேச்சில், சாட்சி கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்தினார். அவர் இப்படிச் சொன்னார்: “யெகோவா தன்னுடைய மக்களிடம், ‘நான்தான் கடவுள் என்பதற்கு நீங்கள் எனக்குச் சாட்சிகளாக இருக்கிறீர்கள்’ என்று சொல்கிறார். இந்தத் தெளிவான கட்டளையையும் அவர் கொடுக்கிறார்: ‘ஜனங்களுக்காகக் கொடியை ஏற்றுங்கள்.’ ஜனங்களுக்காக வழியைத் தயார்படுத்த இந்தப் பூமியில் [எஜமானுடைய மக்களை] தவிர வேறு யாருமில்லை. ஏனென்றால், அவர்களுக்குத்தான் எஜமானின் சக்தி இருக்கிறது. அவர்கள்தான் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறார்கள்.”—ஏசா. 43:12; 62:10.

“நம்பிக்கையளிக்கும் செய்தி” என்ற உறுதிமொழி இருக்கும் துண்டுப்பிரதி.

நம்பிக்கையளிக்கும் செய்தி துண்டுப்பிரதி

சகோதரர் ரதர்ஃபர்ட் பேச்சு கொடுத்தப் பிறகு, ஒரு ஆவணத்தில் இருந்து வாசித்தார். அதன் தலைப்பு “நம்பிக்கையளிக்கும் செய்தி.” அதில், கடவுளுடைய அரசாங்கம் மட்டும்தான் “உண்மையான சமாதானத்தையும், செழிப்பையும், ஆரோக்கியத்தையும், வாழ்க்கையையும், சுதந்திரத்தையும், நிரந்தர சந்தோஷத்தையும்” தரும் என்று சொல்லப்பட்டிருந்தது. அந்தச் செய்தியை, வந்திருந்த எல்லாரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள். பிறகு, அந்தச் செய்தி நிறைய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது, துண்டுப்பிரதியாகவும் அச்சடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட நான்கு கோடி பிரதிகள் விநியோகிக்கப்பட்டன.

பைபிள் மாணாக்கர்களுக்கு இன்னும் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயர் வைக்கப்படவில்லை. கொஞ்ச வருஷங்கள் கழித்துதான் அவர்களுக்கு அந்த பெயர் வந்தது. ஆனால் யெகோவாவைப் பற்றிச் சாட்சி கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்துகொண்டே வந்தார்கள்.

ஆர்வம் உள்ளவர்களை மீண்டும் சந்தித்தார்கள்

பைபிள் மாணாக்கர்களுடைய எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகமாகிக்கொண்டே போனதால், நல்ல செய்தியில் ஆர்வம் காட்டியவர்களை மறுபடியும் போய்ப் பார்க்கச் சொல்லி அவர்களுக்கு வழிநடத்துதல் கிடைத்தது. நம்பிக்கையளிக்கும் செய்தி என்ற துண்டுப்பிரதியை விநியோகிக்கும் ஏற்பாடு முடிந்தவுடனே, புலட்டின்a பத்திரிகை இப்படிச் சொன்னது: “எந்தெந்த வீட்டில் எல்லாம் நம்பிக்கையளிக்கும் செய்தி துண்டுப்பிரதியைக் கொடுத்தீர்களோ, அவர்கள் எல்லாரையும் மறுபடியும் போய்ப் பாருங்கள்.”

டெக்ஸஸில் இருந்த ப்ளானோ என்ற ஊரிலிருந்த ஒரு பைபிள் மாணாக்கர் சொன்னதை, ஜனவரி 1925 புலட்டின் பத்திரிகையில் வெளியிட்டிருந்தார்கள்: “புதிய இடங்களைவிட, ஏற்கனவே பிரசங்கித்த இடங்களில் நல்ல பலன்கள் கிடைப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. எங்கள் பிராந்தியத்தில் இருக்கிற ஒரு சின்ன ஊரில், கடந்த பத்து வருஷத்தில் ஐந்து தடவை திரும்பத் திரும்ப பிரசங்கித்திருக்கிறோம். . . . சமீபத்தில் என் அம்மாவும், சகோதரி ஹென்ரிக்ஸும் அங்கே போய்ப் பிரசங்கித்தபோது, [எப்போதும் இல்லாத அளவுக்கு] நிறைய புத்தகங்களைக் கொடுத்தார்கள்.”

பனாமாவில் இருக்கிற ஒரு கால்பார்ட்டர் இப்படி எழுதினார்: “முதல் தடவை பிரசங்கித்தபோது நல்ல செய்தியைக் கேட்காமல் என்னை விரட்டிவிட்ட நிறைய பேர், இரண்டாவது தடவை அல்லது மூன்றாவது தடவை நான் போய்ப் பார்த்தபோது ஆர்வம் காட்டினார்கள். ஊழியத்தில் ஏற்கனவே பார்த்தவர்களைத்தான் நான் பெரும்பாலும் இந்த வருஷம் மறுபடியும் போய்ப் பார்த்திருக்கிறேன். சில நல்ல அனுபவங்களும் கிடைத்திருக்கின்றன.”

எதிர்காலத்தை எதிர்நோக்கி

கால்பார்ட்டர்களுக்கு சகோதரர் ரதர்ஃபர்ட் எழுதிய வருடாந்தர கடிதத்தில், அந்த வருஷத்தில் அவர்கள் என்னவெல்லாம் சாதித்திருந்தார்கள் என்றும், வரப்போகிற வருஷத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் எழுதினார். அதில் அவர் இப்படிச் சொல்லியிருந்தார்: “கடந்த வருஷத்தில் ஆறுதல் தேவைப்பட்ட நிறைய பேருக்கு நீங்கள் ஆறுதல் கொடுத்திருப்பீர்கள். இந்த வேலையைச் செய்தது உங்கள் இதயத்துக்குச் சந்தோஷத்தைக் கொடுத்திருக்கும். . . . வரப்போகிற வருஷத்திலும், கடவுளைப் பற்றியும் அவருடைய அரசாங்கத்தைப் பற்றியும் சாட்சி கொடுக்கவும்... அவரை உண்மையிலேயே வணங்குவது யார் என்பதைக் காட்டவும்... உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. . . . நாம் எல்லாரும் சேர்ந்து நம் கடவுளையும் நம் ராஜாவையும் தொடர்ந்து புகழலாம்.”

1925-ன் முடிவில் புருக்லின் பெத்தேலை இன்னும் விரிவாக்குவதற்கு சகோதரர்கள் திட்டம் போட்டார்கள். 1926-ல், அமைப்பு அதுவரைக்கும் செய்ததிலேயே ரொம்ப பிரமாண்டமான ஒரு கட்டுமான வேலையை ஆரம்பிக்கவிருந்தார்கள்!

ஒரு புதிய கட்டடத்தின் ஆரம்பக்கட்ட வேலைகளை சகோதரர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.

1926-ல், நியு யார்க், புருக்லினில் இருக்கும் ஆடம்ஸ் தெருவில் நடக்கும் கட்டுமான வேலை

a இப்போது, நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சிப் புத்தகம்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்