படிப்புக் கட்டுரை 40
பாட்டு 111 நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
யெகோவாவே ‘என் அளவில்லாத ஆனந்தம்’!
“ எனக்கு அளவில்லாத ஆனந்தத்தைத் தருகிற என் கடவுளிடம் வருவேன்.”—சங். 43:4.
என்ன கற்றுக்கொள்வோம்?
எவையெல்லாம் நம்முடைய சந்தோஷத்தைத் திருடிவிடலாம் என்றும், இழந்த சந்தோஷத்தை எப்படித் திரும்பக் கண்டுபிடிக்கலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) இன்று மக்கள் எப்படிப்பட்ட நிலைமையில் இருக்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
இன்று மக்கள் சந்தோஷத்தைத் தேடி எங்கெங்கோ அலைகிறார்கள். ஆனால், நிலையான சந்தோஷம் அவர்களுக்குக் கானல்நீர் போல் இருக்கிறது. நிறைய பேர் சோகத்தில் மூழ்கியிருக்கிறார்கள். அல்லது, விரக்தியிலும் வெறுமையிலும் தவிக்கிறார்கள். யெகோவாவின் மக்களும் இதற்கு விதிவிலக்கல்ல. “கடைசி நாட்களில்” வாழ்வதால், “சமாளிக்க முடியாத அளவுக்கு” மோசமான சூழ்நிலைகளையும் உணர்ச்சிகளையும் எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கிறது.—2 தீ. 3:1.
2 இந்தக் கட்டுரையில், நம் சந்தோஷத்தைத் எவையெல்லாம் திருடிவிடலாம் என்றும், இழந்த சந்தோஷத்தை எப்படித் திரும்பவும் கண்டுபிடிக்கலாம் என்றும் பார்ப்போம். முதலில், உண்மையான சந்தோஷம் எங்கிருந்து கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
உண்மையான சந்தோஷம் எங்கிருந்து வருகிறது
3. படைப்புகள் நமக்கு யெகோவாவைப் பற்றி என்ன சொல்லித்தருகின்றன? (படங்களையும் பாருங்கள்.)
3 யெகோவா எப்போதுமே சந்தோஷமாக இருக்கிறார். நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இந்த அழகான பூமி... நம்மைச் சுற்றியிருக்கும் ஆயிரம் ஆயிரம் வண்ணங்கள்... மிருகங்களின் சுட்டித்தனம்... ஏராளமான ருசியான உணவு... என இவையெல்லாம் யெகோவா சந்தோஷமான கடவுள் என்பதை நிரூபிக்கின்றன. யெகோவா நம்மை நேசிக்கிறார், நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பதை இவை காட்டுகின்றன.
Baby elephant: Image © Romi Gamit/Shutterstock; penguin chicks: Vladimir Seliverstov/500px via Getty Images; baby goats: Rita Kochmarjova/stock.adobe.com; two dolphins: georgeclerk/E+ via Getty Images
மிருகங்களின் சுட்டித்தனம், யெகோவா சந்தோஷமானவர் என்பதைக் காட்டுகிறது (பாரா 3)
4. (அ) இந்த உலகத்தில் இவ்வளவு வேதனைகள் இருந்தாலும் யெகோவா ஏன் தன்னுடைய சந்தோஷத்தை இழப்பதில்லை? (ஆ) யெகோவா நமக்கு என்ன பரிசைக் கொடுக்கிறார்? (சங்கீதம் 16:11)
4 இன்று மக்கள் படுகிற வலி, வேதனையை யெகோவா கண்டுகொள்ளாமல் இல்லை. அது அவருக்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது. இருந்தாலும், பைபிள் அவரை “சந்தோஷமுள்ள கடவுள்” என்று சொல்கிறது. (1 தீ. 1:11) அவரால் எப்படிச் சந்தோஷத்தை இழக்காமல் இருக்க முடிகிறது? உலகின் இந்த நிலைமை கொஞ்ச நாளுக்குத்தான் என்பது அவருக்குத் தெரியும். சொல்லப்போனால், எல்லா கஷ்டங்களையும் ஒழித்துக்கட்டுவதற்கான நாளைக் குறித்ததே அவர்தான்! அந்த நாளுக்காக அவர் பொறுமையாகக் காத்திருக்கிறார். இதற்கிடையில், அவர் நம் வேதனைகளைப் புரிந்துகொண்டு நமக்கு உதவி செய்யவும் ஆசைப்படுகிறார். அவர் எப்படி உதவி செய்கிறார்? சந்தோஷம் என்ற பரிசைக் கொடுப்பதன் மூலம்! (சங்கீதம் 16:11-ஐ வாசியுங்கள்.) தன்னுடைய மகன் இயேசுவுக்கு அந்தப் பரிசை அவர் எப்படிக் கொடுத்தார் என்று இப்போது பார்க்கலாம்.
5-6. இயேசு ஏன் சந்தோஷமாக இருக்கிறார்?
5 யெகோவா படைத்ததிலேயே ரொம்ப சந்தோஷமாக இருப்பது இயேசுதான். ஏன் அப்படிச் சொல்கிறோம்? (1) ‘அவர் பார்க்க முடியாத கடவுளுடைய சாயலில்’ படைக்கப்பட்டிருக்கிறார்; கடவுளிடம் இருக்கிற குணங்களை அப்படியே வெளிக்காட்டுகிறார். (கொலோ. 1:15) (2) சந்தோஷத்தின் ஊற்றாக இருக்கும் தன்னுடைய அப்பாவோடுதான் அவர் நிறைய காலம் செலவு செய்திருக்கிறார்.
6 தன்னிடம் யெகோவா என்ன எதிர்பார்த்தாரோ அதைத்தான் இயேசு எப்போதும் செய்திருக்கிறார். அதனாலும் சந்தோஷமாக இருக்கிறார். (நீதி. 8:30, 31; யோவா. 8:29) அவர் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதால், யெகோவாவின் அங்கீகாரம் அவருக்கு இருக்கிறது.—மத். 3:17.
7. நமக்கு உண்மையான சந்தோஷம் எப்படிக் கிடைக்கும்?
7 சந்தோஷத்தின் ஊற்றாக இருக்கிற யெகோவாவிடம் நெருங்கிப் போனால் நம்மாலும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும். அவரைப் பற்றித் தெரிந்துகொள்ள எந்தளவுக்கு நேரம் செலவு செய்கிறோமோ, அவரை மாதிரியே நடந்துகொள்ள எந்தளவுக்கு முயற்சி செய்கிறோமோ, அந்தளவுக்குச் சந்தோஷமாக இருப்போம். அதோடு, யெகோவாவின் விருப்பத்தைச் செய்யும்போதும், அவருடைய அங்கீகாரம் நமக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளும்போதும் நமக்குச் சந்தோஷம் கிடைக்கும்.a (சங். 33:12) ஆனால், ஒன்றிரண்டு நாட்களுக்கோ பல நாட்களுக்கோ நம் சந்தோஷத்தை நாம் தொலைத்துவிடலாம். கடவுளுடைய அங்கீகாரம் நமக்கு இல்லாததால்தான் அப்படி நடக்கிறது என்று அர்த்தமா? அப்படிச் சொல்ல முடியாது. ஏனென்றால், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் வலி, வேதனை, மனச்சோர்வு போன்றவற்றால் நம் சந்தோஷம் போய்விடலாம். இது யெகோவாவுக்கும் தெரியும். (சங். 103:14) சரி, நம் சந்தோஷத்தைத் திருடும் சில திருடன்களைப் பற்றியும் அதைத் திரும்பக் கண்டுபிடிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.
சந்தோஷத்தைத் திருட எதையும் அனுமதிக்காதீர்கள்!
8. வாழ்க்கையில் வரும் பிரச்சினைகள் நம்மை என்ன செய்துவிடலாம்?
8 முதல் திருடன்: வாழ்க்கையில் வரும் பிரச்சினைகள். துன்புறுத்தலால், இயற்கை பேரழிவால், வறுமையால், வியாதியால் அல்லது வயதாவதால் நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறீர்களா? இதுபோன்ற விஷயங்கள், நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் இருக்கலாம். இவை நம் சந்தோஷத்தைத் திருடிவிடலாம். “உள்ளத்தின் வேதனையால் மனம் நொந்துபோகும்” என்று பைபிள்கூட சொல்கிறது. (நீதி. 15:13) பாபிஸ் என்ற மூப்பர் தன்னுடைய அண்ணனையும் அப்பா-அம்மாவையும் பறிகொடுத்துவிட்டார், அதுவும் நான்கு வருஷத்துக்குள்! அவர் சொல்கிறார்: “என் நாட்கள் வேதனையில்தான் நகர்ந்தன. எனக்கென்று யாருமே இல்லாத மாதிரி இருந்தது. என் அப்பா-அம்மாவும் அண்ணாவும் உயிரோடு இருந்தபோது அவர்களோடு நிறைய நேரம் செலவு செய்ய முடியவில்லை; அந்தளவுக்கு பிஸியாக இருந்துவிட்டேன். அதை நினைத்து உடைந்துபோய்விட்டேன்.” இப்படி, வாழ்க்கையில் வரும் பிரச்சினைகள் நம்முடைய எல்லா பலத்தையும் உறிஞ்சிவிடலாம், இடிந்துபோய் நம்மை உட்கார வைத்துவிடலாம்.
9. இழந்த சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க எது உதவும்? (எரேமியா 29:4-7, 10)
9 சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க எது உதவும்? வாழ்க்கையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்வதும், நன்றியோடு இருப்பதும் உதவும்! நமக்குப் பிடித்த எல்லாமே கிடைத்தால்தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்று இந்த உலகம் சொல்கிறது. ஆனால், அது உண்மையில்லை. பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்ட யூதர்களிடம் யெகோவா என்ன சொன்னார் என்று யோசித்துப் பாருங்கள். அவர்கள் ஒரு அந்நிய தேசத்தில் கைதிகளாக இருந்தார்கள். அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ள சொல்லி யெகோவா சொன்னார். அந்தச் சூழ்நிலையில் சந்தோஷமாக இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய சொன்னார். (எரேமியா 29:4-7, 10-ஐ வாசியுங்கள்.) நமக்கு என்ன பாடம்? நம்முடைய சூழ்நிலையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கிற நல்ல விஷயங்களுக்கு நன்றியோடு இருக்க வேண்டும். அதோடு, என்ன ஆனாலும் யெகோவா நமக்கு உதவி செய்வார் என்பதை மறந்துவிடக் கூடாது. (சங். 63:7; 146:5) எஃபி என்ற ஒரு சகோதரிக்கு விபத்து ஏற்பட்டதால், நடக்க முடியாமல் போய்விட்டது. அவர் சொல்கிறார்: “யெகோவாவும், என் குடும்பத்தாரும், என் சபையில் இருந்தவர்களும் எனக்கு ஏகப்பட்ட உதவிகளைச் செய்தார்கள். நான் மட்டும் சோர்ந்துபோய்விட்டால் அவர்கள் செய்த உதவிக்கு நன்றிக் காட்டாத மாதிரி ஆகிவிடும். என்னால் முடிந்தளவுக்குச் சந்தோஷமாக இருப்பதன் மூலம், யெகோவாவுக்கும் நண்பர்களுக்கும் நன்றிக் காட்ட ஆசைப்படுகிறேன்.”
10. பிரச்சினைகள் இருந்தாலும் நம்மால் ஏன் சந்தோஷமாக இருக்க முடியும்?
10 நம்முடைய வாழ்க்கை ஒரு ரோஜா படுக்கையாக இல்லாமல் போகலாம்; நமக்கோ நம் குடும்பத்தில் இருக்கிறவர்களுக்கோ ஏதாவது மோசமான விஷயம் நடந்துவிடலாம்.b இருந்தாலும், நம்மால் சந்தோஷத்தைத் தொலைக்காமல் இருக்க முடியும். (சங். 126:5) ஏனென்றால், நம் சந்தோஷம் நம் சூழ்நிலையைப் பொறுத்து இல்லை. மரியா என்ற பயனியர் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நமக்குப் பிரச்சினைகள் வந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். ஏனென்றால், யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதிகள் நமக்கு இருக்கின்றன. ஆனால் அதற்காக, நாம் அழவே கூடாது... நமக்குள் ஓடிக்கொண்டிருப்பதை வெளிக்காட்டவே கூடாது... என்று அர்த்தம் கிடையாது. நமக்கு என்ன ஆனாலும், சந்தோஷமாக இருப்பதற்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார்.” நமக்கு வருகிற எல்லா பிரச்சினைகளுமே தற்காலிகமானது, கடற்கரை மணலில் பதிந்த கால் தடங்களைப் போன்றது. சீக்கிரத்தில் சுவடே தெரியாமல் மறைந்துவிடும்!
11. அப்போஸ்தலன் பவுலின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவுகிறது?
11 யெகோவாவின் அங்கீகாரம் இல்லாததால்தான் கஷ்டங்கள் வருகின்றன என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். அந்த மாதிரி சமயங்களில், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ஊழியர்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கும் நிறைய கஷ்டங்கள் வந்திருக்கின்றன. அப்போஸ்தலன் பவுலை எடுத்துக்கொள்ளுங்கள். “மற்ற தேசத்து மக்களுக்கும் ராஜாக்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்கும்” பிரசங்கிப்பதற்கு இயேசுவே அவரைத் தேர்ந்தெடுத்தார். (அப். 9:15) எவ்வளவு பெரிய பாக்கியம்! ஆனால், பவுலின் வாழ்க்கையிலும் நிறைய பிரச்சினைகள் வந்தன. (2 கொ. 11:23-27) பிரச்சினைகள் வந்ததால் அவர் யெகோவாவின் அங்கீகாரத்தை இழந்துவிட்டார் என்று அர்த்தமா? இல்லை! அவர் சகித்திருந்ததே யெகோவாவின் ஆசீர்வாதம் அவருக்கு இருந்தது என்பதற்கு ஆதாரம். (ரோ. 5:3-5) இப்போது, உங்களுடைய சூழ்நிலையைப் பற்றி யோசித்துப் பாருங்கள். எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் நீங்களும் சகித்திருக்கிறீர்கள். அப்படியென்றால், உங்களுக்கும் யெகோவாவின் அங்கீகாரம் இருக்கிறது என்றுதானே அர்த்தம்? அதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்!
12. நிறைவேறாத எதிர்பார்ப்புகள் நம் சந்தோஷத்தை எப்படித் திருடிவிடலாம்?
12 இரண்டாவது திருடன்: நிறைவேறாத எதிர்பார்ப்புகள். (நீதி. 13:12) யெகோவாமேல் அன்பு இருப்பதாலும், அவருக்கு நன்றியோடு இருக்க ஆசைப்படுவதாலும் நாம் சில குறிக்கோள்களை வைக்கிறோம். ஆனால், நம் சூழ்நிலைக்கு ஏற்ற மாதிரி அந்தக் குறிக்கோள்கள் யதார்த்தமாக இல்லையென்றால், நாம் மனமுடைந்து போய்விடலாம். (நீதி. 17:22) ஹாலி என்ற பயனியர் சகோதரி சொல்வதைப் பார்க்கலாம்: “எனக்கு ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொள்ள வேண்டும், வெளிநாட்டில் சேவை செய்ய வேண்டும் அல்லது ராமபோ கட்டுமான பிராஜக்ட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் ஆசை இருந்தது. ஆனால், என்னுடைய சூழ்நிலை மாறிவிட்டது. நான் வைத்த குறிக்கோள்களை அடைய முடியாமல் போனது. அதனால், மனமுடைந்து போய்விட்டேன். சிலவற்றை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டு, பிறகு அவற்றை செய்ய முடியாமல் போனால் நாம் உண்மையிலேயே நொந்துபோய்விடுவோம்” என்று சொல்கிறார். இந்தச் சகோதரி மாதிரிதான் நிறைய பேர் யோசிக்கிறார்கள்.
13. சூழ்நிலையின் காரணமாக நிறைய செய்ய முடியவில்லை என்றால், என்ன யதார்த்தமான குறிக்கோள்களை நீங்கள் வைக்கலாம்?
13 சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க எது உதவும்? யெகோவா கறாரான கடவுள் கிடையாது. நம்மால் செய்ய முடியாததை அவர் எதிர்பார்ப்பதில்லை. அவருடைய சேவையில் நாம் எவ்வளவு செய்கிறோம் என்பதை வைத்து, நம் மதிப்பை அவர் எடைபோடுவதில்லை. நாம் அடக்கமாகவும் உண்மையாகவும் இருக்க வேண்டும் என்றுதான் அவர் ஆசைப்படுகிறார். (மீ. 6:8; 1 கொ. 4:2) நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட, உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறோம் என்பதைத்தான் அவர் முக்கியமாக நினைக்கிறார். யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பதைவிட நாம் நம்மிடம் அதிகமாக எதிர்பார்ப்பது நியாயமாக இருக்குமா?c நிச்சயம் இருக்காது! அதனால், யெகோவாவுடைய சேவையில் உங்களால் நிறைய செய்ய முடியவில்லை என்றாலும், உங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் கவனம் செலுத்துங்கள். ‘சபையில் இருக்கிற இளைஞர்களுக்கு உங்களால் பயிற்சி கொடுக்க முடியுமா? வயதானவர்களுக்கு உதவ முடியுமா? ஃபோன் செய்தோ, மெசேஜ் செய்தோ ஒருவரை உற்சாகப்படுத்த முடியுமா?’ என்றெல்லாம் யோசித்துப் பாருங்கள். இந்த மாதிரி யதார்த்தமான குறிக்கோள்களை வைத்து அதற்காக உழைக்கும்போது, யெகோவா உங்கள் மனதை ஆனந்தத்தால் நிரப்புவார். இன்னொரு விஷயத்தையும் மறந்துவிடாதீர்கள்: புதிய உலகத்தில் யெகோவாவுக்குச் சேவை செய்ய ஏகப்பட்ட வாய்ப்புகள் இருக்கும். நாம் ஏற்கனவே பார்த்த ஹாலி இப்படிச் சொல்கிறார்: “நான் எப்போதெல்லாம் சோர்வாக இருக்கிறேனோ, அப்போதெல்லாம் ஒரு நிமிஷம் நிறுத்தி, ‘புதிய உலகத்தில் நான் யுகம் யுகமாக வாழப்போகிறேன்’ என்பதை யோசித்துப் பார்ப்பேன். அந்தச் சமயத்தில், யெகோவாவின் உதவியோடு என்னுடைய குறிக்கோள்கள் சிலவற்றை என்னால் எட்டிப்பிடிக்க முடியும்.”
14. நம்முடைய சந்தோஷத்தை வேறு எதுவும் திருடிவிடலாம்?
14 மூன்றாவது திருடன்: ஜாலியாக வாழ்வதே முக்கியம் என்ற எண்ணம். ‘நமக்குப் பிடித்ததைச் செய்து, எப்போதுமே ஜாலியாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் தரும்’ என்று சிலர் சோஷியல் மீடியாவில் பரப்புகிறார்கள். நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வது... ஆசைப்பட்ட பொருள்களையெல்லாம் வாங்குவது... புதுப்புது இடங்களுக்குப் பயணம் செய்வது... இவற்றையே வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ள சொல்லி நிறைய பேர் மக்களை உற்சாகப்படுத்துகிறார்கள். நமக்குப் பிடித்த விஷயங்களைச் செய்வதில் தவறு இல்லைதான். நம்மைச் சுற்றியிருக்கிற அழகை ரசிக்கும் விதத்தில்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். இருந்தாலும், சந்தோஷத்தைத் தரும் என்று நினைத்த சில விஷயங்கள், உண்மையில் சந்தோஷத்தைப் பறித்திருப்பதாக நிறைய பேர் உணர்ந்திருக்கிறார்கள். ஈவா என்ற பயனியர் சகோதரி சொல்கிறார்: “உங்கள் சந்தோஷம்தான் முக்கியம் என்று நீங்கள் வாழ்ந்துகொண்டு இருந்தால், நீங்கள் எதிலுமே திருப்தியடைய மாட்டீர்கள்.” இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜாலியாக வாழ்வது மட்டுமே முக்கியம் என்று நினைத்தால், வெறுமையும் விரக்தியும்தான் மிஞ்சும்.
15. சாலொமோன் ராஜாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
15 சாலொமோன் ராஜாவைப் பற்றி யோசியுங்கள். அவர் ஆசைப்பட்ட எல்லாவற்றையுமே அடைய முயற்சி செய்தார். ‘ஜாம் ஜாம்’ என வாழ்ந்தார். வகை வகையாகச் சாப்பிட்டார், இசை மழையில் நனைந்தார். பணத்தால் எவற்றையெல்லாம் வாங்க முடிந்ததோ, அவற்றையெல்லாம் அனுபவித்தார். இருந்தாலும், அவர் வெறுமையாகத்தான் உணர்ந்தார். அவர் சொல்கிறார்: “எவ்வளவுதான் பார்த்தாலும் கண்கள் திருப்தி அடைவதில்லை. எவ்வளவுதான் கேட்டாலும் காதுகள் திருப்தி அடைவதில்லை.” (பிர. 1:8; 2:1-11) எவையெல்லாம் சந்தோஷம் என்று உலகம் சொல்கிறதோ, அவை கள்ள நோட்டு மாதிரி இருக்கிறது. பார்ப்பதற்கு மதிப்புள்ளதாகத் தெரியும். ஆனால் உண்மையில் அது வெத்து பேப்பர்தான், எதற்குமே பிரயோஜனம் இல்லாதது.
16. மற்றவர்களுக்குக் கொடுப்பதால் நமக்கு எப்படிச் சந்தோஷம் கிடைக்கும்? (படங்களையும் பாருங்கள்.)
16 சந்தோஷத்தைக் கண்டுபிடிக்க எது உதவும்? “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம்” என்று இயேசு கற்றுக்கொடுத்தார். (அப். 20:35) அலெகோஸ் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “என்னால் முடிந்த சின்னச் சின்ன உதவிகளை மற்றவர்களுக்குச் செய்வேன். இப்படிச் செய்யும்போது, எனக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றியே யோசிக்காமல் இருக்க முடிகிறது. அதனால் சந்தோஷமாக இருக்கிறேன்.” நீங்கள் மற்றவர்களுக்காக என்ன செய்யலாம்? சோகத்தில் இருக்கிறவர்களைப் பலப்படுத்தலாம். அவர்களுடைய பிரச்சினைகளை உங்களால் சரிசெய்ய முடியாதுதான், ஆனால் அவர்கள் சொல்வதை அனுதாபத்தோடு கேட்க முடியும்; கரிசனை காட்ட முடியும். அவர்களுடைய பாரத்தை யெகோவாமேல் தூக்கிப்போட உதவ முடியும். (சங். 55:22; 68:19) யெகோவா அவர்களைக் கைவிடவில்லை என்பதையும் ஞாபகப்படுத்த முடியும். (சங். 37:28; ஏசா. 59:1) சில நடைமுறையான உதவிகளைக்கூட நீங்கள் செய்யலாம். சமைத்துக் கொடுக்கலாம், அவர்களோடு சேர்ந்து கொஞ்ச தூரம் நடக்கலாம். உங்களோடு ஊழியம் செய்ய அவர்களை அழைக்கலாம்; அது அவர்களைப் பலப்படுத்தும். யெகோவா உங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதற்கு நீங்கள் இடம் கொடுங்கள். உங்களைப் பற்றியே யோசிக்காமல் மற்றவர்களைப் பற்றி யோசிக்கும்போது உங்களால் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும்.—நீதி. 11:25.
உங்களுக்கு என்ன வேண்டும் என்று மட்டுமே யோசிக்காமல், மற்றவர்களுக்கு என்ன வேண்டும் என்று யோசியுங்கள் (பாரா 16)d
17. நாம் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 43:4)
17 நம் பரலோக அப்பாவிடம் நெருங்கிப் போனால், உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும். ஏனென்றால், அவர்தான் ‘அளவில்லாத ஆனந்தத்தைத் தருகிறவர்.’ (சங்கீதம் 43:4-ஐ வாசியுங்கள்.) அதனால், வாழ்க்கையில் நீங்கள் எப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்துக்கொண்டு இருந்தாலும் சரி, நீங்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. சந்தோஷத்தின் ஊற்றாக இருக்கிற யெகோவாமேல் உங்கள் கண்களைப் பதிய வையுங்கள்.—சங். 144:15.
பாட்டு 155 எங்கள் சந்தோஷம் நீரே
a “சந்தோஷத்துக்காக யெகோவாவிடம் போங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
b உதாரணத்துக்கு, jw.org-ல் 2023 ஆளும் குழுவின் அறிக்கை #5-ல் டென்னிஸ் மற்றும் இரினா கிறிஸ்டென்சனின் பேட்டியைப் பாருங்கள்.
c கூடுதலான தகவல்களுக்கு, “நியாயமான எதிர்பார்ப்புகளால் மகிழ்ச்சி காண . . .” என்ற கட்டுரையை ஜூலை 15, 2008 காவற்கோபுரத்தில் பாருங்கள்.
d படவிளக்கம்: ஒரு சகோதரி தனக்கென்று நிறைய பொருள்களை வாங்கியிருந்தாலும், வயதான ஒரு சகோதரியை உற்சாகப்படுத்துவதற்காக பூங்கொத்தை வாங்கிக் கொடுக்கும்போது அவருக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது.