படிப்புக் கட்டுரை 41
பாட்டு 108 தேவனின் மாறாத அன்பு
கடவுளுடைய அன்பு என்றுமே மாறாதது!
“ யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.”—சங். 136:1.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பது ஒரு அடிப்படை பைபிள் உண்மை. இந்த உண்மையை எப்போதுமே ஞாபகம் வைத்துக்கொள்வது சோதனைகளை எதிர்த்துப் போராட நமக்கு எப்படி உதவும் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. சோதனைகள் வரும்போது நிறைய கிறிஸ்தவர்கள் எப்படி யோசிக்கலாம்?
பயங்கரமான சூறாவளியில் மாட்டிக்கொண்ட ஒரு கப்பலைக் கொஞ்சம் கற்பனை செய்யுங்கள். ராட்சத அலைகள் அதை அங்கேயும் இங்கேயுமாக அலைக்கழிக்கிறது. நங்கூரம் மட்டும் இல்லையென்றால், அலைகளின் போக்கிலேயே அந்தக் கப்பல் அடித்துச்செல்லப்படும். பயங்கரமான சூறாவளி அடித்தாலும், நிலையாக இருக்க நங்கூரம்தான் அந்தக் கப்பலுக்கு உதவுகிறது.
2 நம் வாழ்க்கையிலும் சோதனைகள் சூறாவளியாக வீசும்போது, நடுக்கடலில் மாட்டிக்கொண்ட அந்தக் கப்பலைப் போல் நாம் தவிக்கலாம். உணர்ச்சிகள் நம்மை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டு அலைக்கழிக்கலாம்; ஒவ்வொரு நாளும் நம் உணர்ச்சிகள் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஒருநாள், யெகோவாவின் அன்பும் ஆதரவும் நமக்கு இருக்கிறது என்று நாம் நம்பிக்கையோடு இருப்போம்; ஆனால் அடுத்த நாளே, ‘நான் படுகிற அவஸ்தையை யெகோவா பார்க்கிறாரா?’ என்று நாம் சந்தேகப்படலாம். (சங். 10:1; 13:1) ஒருவேளை, ஒரு நண்பர் நம்மை ஆறுதல்படுத்தலாம்; அது கொஞ்ச நேரத்துக்கு நம் மனதுக்கு இதமாக இருக்கலாம். (நீதி. 17:17; 25:11) ஆனால் மறுபடியும் சந்தேகங்கள் எட்டிப்பார்க்கலாம். யெகோவா நம்மைக் கைவிட்டுவிட்டாரோ என்றுகூட நாம் யோசிக்க ஆரம்பிக்கலாம். சோதனைகள் வரும்போது நங்கூரம் போட்ட கப்பல் மாதிரி நாம் எப்படி உறுதியாக நிற்கலாம்? வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவாவின் அன்பும் ஆதரவும் நமக்கு இருக்கிறது என்பதில் நாம் எப்படி உறுதியாக இருக்கலாம்? அதுவும், தொடர்ந்து!
3. சங்கீதம் 31:7 மற்றும் 136:1-ல் சொல்லப்பட்டிருக்கிற ‘மாறாத அன்பு’ என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம், அப்படிப்பட்ட அன்பை யெகோவா மாதிரி யாருமே காட்டுவதில்லை என்று ஏன் சொல்லலாம்? (படத்தையும் பாருங்கள்.)
3 சோதனை என்ற சூறாவளியில், நங்கூரம் போட்ட மாதிரி நிலையாக நிற்க ஒரு வழி: யெகோவா காட்டும் மாறாத அன்பை என்றைக்கும் மறக்காமல் இருப்பது. (சங்கீதம் 31:7-ஐயும், 136:1-ஐயும் வாசியுங்கள்.) ‘மாறாத அன்பு’ என்பது, ஒரு நபர் இன்னொரு நபர்மேல் வைத்திருக்கும் ஆழமான அன்பு; என்றுமே நிலைத்திருக்கிற அன்பு. இப்படிப்பட்ட அன்பைக் காட்டுவதில் யெகோவாபோல் யாருமே இல்லை. அதனால்தான், அவர் “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்” என்று பைபிள் சொல்கிறது. (யாத். 34:6, 7) அதோடு, தன்னிடம் “வேண்டிக்கொள்கிறவர்களுக்கு மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிறவர்” என்றும் பைபிள் சொல்கிறது. (சங். 86:5) அப்படியென்றால், தனக்கு உண்மையாகச் சேவை செய்கிறவர்களை யெகோவா ஒருபோதும் கைவிட மாட்டார் என்று தெரிகிறது. யெகோவா காட்டும் இந்த மாறாத அன்பை மறக்காமல் இருந்தால், சோதனைகள் சமயத்தில் நங்கூரம் போட்ட மாதிரி நிலையாக நிற்க முடியும்.—சங். 23:4.
யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கை ஒரு நங்கூரம்போல் இருக்கிறது. சோதனைப் புயலில் அடித்துக்கொண்டு போகாமல் இருக்க அது உதவுகிறது (பாரா 3)
யெகோவாவின் அன்பை ஒரு அடிப்படை பைபிள் உண்மையாகப் பாருங்கள்
4. சில அடிப்படை பைபிள் உண்மைகளைச் சொல்லுங்கள், அவற்றை நீங்கள் ஏன் உறுதியாக நம்புகிறீர்கள்?
4 சோதனைகள் வரும் சமயத்தில் நங்கூரம் போட்ட மாதிரி நிலையாக நிற்க இன்னொரு வழி: யெகோவா காட்டுகிற அன்பை, ஒரு அடிப்படை பைபிள் உண்மையாகப் பார்ப்பது. “அடிப்படை பைபிள் உண்மைகள்” என்ற வார்த்தையைக் கேட்டவுடன் உங்களுக்கு என்ன ஞாபகம் வருகிறது? பைபிள் படிப்பு படிக்க ஆரம்பித்த சமயத்தில் நீங்கள் கற்றுக்கொண்ட சத்தியங்கள் ஞாபகம் வரலாம். உதாரணத்துக்கு, கடவுளுடைய பெயர் யெகோவா, அவருடைய ஒரே மகன்தான் இயேசு கிறிஸ்து, இறந்தவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, இந்தப் பூமி சீக்கிரம் பூஞ்சோலையாக மாறும், அதில் மனிதர்கள் என்றென்றும் வாழ்வார்கள் போன்றவை ஞாபகத்துக்கு வரலாம். (சங். 83:18; பிர. 9:5; யோவா. 3:16; வெளி. 21:3, 4) இந்த உண்மைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, என்றைக்காவது உங்களுக்கு அவற்றைப் பற்றி மறுபடியும் சந்தேகம் வந்ததா? கண்டிப்பாக வந்திருக்காது. ஏனென்றால், இவையெல்லாம் ஆதாரங்களின் அடிப்படையில் இருக்கின்றன என்பதைப் புரிந்துகொண்டீர்கள். அந்த மாதிரி உண்மைகளில் ஒன்றுதான், கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்ற உண்மையும்! இதை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டால் யெகோவா நம்மேல் அக்கறை வைத்திருக்கிறாரா, நம்மைப் பார்க்கிறாரா என்ற சந்தேகம் வராது.
5. பொய்ப் போதனைகளை நீங்கள் எப்படித் தகர்த்தெறிந்தீர்கள்?
5 பைபிளைப் படிக்க ஆரம்பித்தபோது, பொய்ப் போதனைகளைப் பிடுங்கிப்போட எது உங்களுக்கு உதவியது? நீங்கள் முன்பு இருந்த மதத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை, பைபிளோடு ஒப்பிட்டுப் பார்த்தது உதவியிருக்கும். உதாரணத்துக்கு, இயேசுதான் சர்வவல்லமையுள்ள கடவுள் என்று நீங்கள் முன்பு நம்பிக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், பைபிளைப் படிக்கப் படிக்க, ‘அது உண்மைதானா?’ என்று யோசிக்க ஆரம்பித்திருப்பீர்கள். பைபிள் ஆதாரங்களை ஆராய்ச்சி செய்த பிறகு, அது உண்மையில்லை என்பதைப் புரிந்திருப்பீர்கள். அதனால், அந்தப் பொய்ப் போதனையை மனதிலிருந்து எடுத்துப்போட்டுவிட்டு, பைபிள் சொல்கிற உண்மையை நம்ப ஆரம்பித்திருப்பீர்கள். அதாவது, இயேசுதான் ‘படைப்புகளிலேயே முதல் படைப்பு,’ அவர் ‘கடவுளுடைய ஒரே மகன்’ என்ற உண்மையை நம்ப ஆரம்பித்திருப்பீர்கள். (கொலோ. 1:15; யோவா. 3:18) பொய்ப் போதனைகள் மனதில் ‘ஆழமாக வேரூன்றியிருக்கலாம்’; அதை ‘தகர்த்தெறிவது’ கஷ்டமாகக்கூட இருக்கலாம். (2 கொ. 10:4, 5) ஆனால், அதை உங்களால் தகர்த்தெறிய முடிந்தது. அதைத் தகர்த்தெறிந்த பிறகு நீங்கள் மறுபடியும் அதன் பக்கம்கூட போகவில்லை.—பிலி. 3:13.
6. ‘யெகோவா என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்’ என்பதில் நீங்கள் ஏன் உறுதியாக இருக்கலாம்?
6 யெகோவாவின் அன்பைப் பற்றிச் சந்தேகம் வரும்போதும் நீங்கள் அதேமாதிரி செய்யலாம். ஒரு சோதனை வரும்போது, யெகோவாவின் அன்பில் உங்களுக்குச் சந்தேகம் வந்தால், ‘நான் அப்படி யோசிப்பது சரியா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் சந்தேகங்களை, சங்கீதம் 136:1-ல் இருக்கும் வார்த்தைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த வசனம்தான் இந்தக் கட்டுரையின் முக்கிய வசனம். அதில் யெகோவா ஏன் தன்னுடைய அன்பை, “மாறாத” அன்பு என்று சொல்கிறார்? “அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்ற வார்த்தைகள் அந்த சங்கீதத்தில் ஏன் 26 தடவை வருகின்றன? ஏனென்றால், யெகோவா தன்னுடைய மக்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுகிறார் என்பது ஒரு அடிப்படை பைபிள் உண்மை! பைபிளிலிருந்து உங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்த மற்ற உண்மைகளை மாதிரியே, இதுவும் ஒரு முக்கியமான அடிப்படை உண்மை. ‘யெகோவா என்னை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை’, ‘அவருக்கு என்மேல் அன்பே இல்லை’ என்பதெல்லாம் பொய்ப் போதனைகள். அதனால் மற்ற பொய்ப் போதனைகளை நாம் எப்படித் தகர்த்தெறிவோமோ அதேமாதிரி இந்த எண்ணத்தையும் நாம் தகர்த்தெறிய வேண்டும்.
7. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நிரூபிக்கிற சில வசனங்களைச் சொல்லுங்கள்.
7 யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதைக் காட்டுகிற நிறைய பைபிள் வசனங்கள் இருக்கின்றன. சில உதாரணங்களைப் பார்க்கலாம். இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “சிட்டுக்குருவிகளைவிட நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என்று சொன்னார். (மத். 10:31) யெகோவாவே தன்னுடைய மக்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் உன்னைப் பலப்படுத்துவேன், உனக்கு உதவி செய்வேன். என்னுடைய நீதியான வலது கையால் உன்னைத் தாங்குவேன்.” (ஏசா. 41:10) எவ்வளவு உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள் என்று கவனித்தீர்களா? ‘நீங்கள் மதிப்புள்ளவர்களாக இருக்கலாம்’ என்று இயேசு சொல்லவில்லை. அதேமாதிரி யெகோவாவும், ‘என்னால் முடிந்தால் உனக்கு உதவி செய்வேன்’ என்று சொல்லவில்லை. அதற்குப் பதிலாக, “நீங்கள் மதிப்புள்ளவர்கள்” என்று இயேசு சொல்கிறார்; ‘நான் உனக்கு உதவி செய்வேன்’ என்று யெகோவா சொல்கிறார். அதனால் எப்போதாவது யெகோவாவுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தால், இந்த வசனங்களையெல்லாம் படித்துப் பாருங்கள். அது வெறுமனே உங்களுக்கு ஒரு நல்ல உணர்வை மட்டும் கொடுக்காது. யெகோவாவைப் பற்றி இன்னும் நன்றாக தெரிந்துகொள்ள அது உங்களுக்கு உதவும். ஏனென்றால், இந்த வசனங்களில் இருப்பது உண்மை! இந்த வசனங்களையெல்லாம் நீங்கள் நன்றாக, ஆழமாக யோசித்துப் பார்த்தால், 1 யோவான் 4:16-ல் இருக்கிற வார்த்தைகளை உங்களாலும் சொல்ல முடியும்: “கடவுள் எங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நாங்கள் தெரிந்துகொண்டோம், அதை நம்பவும் செய்கிறோம்.”a
8. யெகோவா உங்களை நேசிக்கிறாரா என்ற சந்தேகம் வரும்போது நீங்கள் என்ன செய்யலாம்?
8 இவ்வளவு யோசித்துப் பார்த்த பிறகும் யெகோவாவின் அன்பில் உங்களுக்குச் சந்தேகம் வந்தால் என்ன செய்வது? உங்களுடைய உணர்வுகளை, உண்மைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். அதாவது, யெகோவாவைப் பற்றி நீங்கள் தெரிந்துவைத்திருக்கிற உண்மைகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஏனென்றால், உணர்வுகள் நிலையானது கிடையாது; அது மாறும். ஆனால் உண்மைகள் மாறாது! யெகோவாவின் அன்பைப் பற்றி பைபிள் சொல்வது ஒரு அடிப்படை உண்மை. அது மாறவே மாறாது! அதனால் யெகோவாவின் அன்பைத் தொடர்ந்து சந்தேகப்பட்டால், அவருடைய சுபாவத்தின் முக்கியமான ஒரு குணத்தை நாம் கண்டுகொள்ளாமல் ஒதுக்கித்தள்ளுவதுபோல் ஆகிவிடும்!—1 யோ. 4:8.
யெகோவா ‘உங்கள்மேல் வைத்திருக்கும் பாசத்தை’ யோசியுங்கள்
9-10. “தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்” என்ற வார்த்தைகளை இயேசு எந்தச் சூழ்நிலையில் சொன்னார்? (யோவான் 16:26, 27) (படத்தையும் பாருங்கள்.)
9 இயேசு தன்னுடைய சீஷர்களிடம், “தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்” என்று சொன்னார். (யோவான் 16:26, 27-ஐ வாசியுங்கள்.) இந்த வார்த்தைகளை யோசித்துப் பார்க்கும்போது, யெகோவாவின் அன்பை நம்மால் நன்றாகப் புரிந்துகொள்ள முடியும். வெறுமனே தன்னுடைய சீஷர்களை நல்லபடியாக உணர வைக்கவோ அல்லது அவர்களைச் சந்தோஷப்படுத்தவோ இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லவில்லை. இந்த அதிகாரத்தில் இருக்கிற மற்ற வசனங்களைப் பார்க்கும்போது, இயேசு இங்கே வேறொரு விஷயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது—அவர் ஜெபத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்!
10 இயேசு அப்போதுதான் தன் சீஷர்களிடம், தன்னிடம் அல்ல, தன் மூலமாக யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தார். (யோவா. 16:23, 24) இதைச் சீஷர்கள் புரிந்துகொள்வது முக்கியமாக இருந்தது. ஏனென்றால், இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவரிடம் ஜெபம் பண்ண வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வர வாய்ப்பிருந்தது. சொல்லப்போனால், அவர்களுக்கு இயேசு ஒரு நல்ல நண்பராக இருந்தார்; அவர்கள்மேல் பாசம் வைத்திருந்தார். அதனால் இயேசுவிடம் கேட்டால், தங்கள் சார்பாக அவர் அப்பாவிடம் பேசுவார் என்று சீஷர்கள் நினைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவர்கள் அப்படி நினைக்கக் கூடாது என்று இயேசு சொன்னார். ஏன்? “தகப்பனே உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்” என்று அவர் சொன்னார். அப்படியென்றால், அவர்களுடைய ஜெபங்களை யெகோவாவே கேட்க விரும்புகிறார் என்பதை இயேசு இங்கே காட்டுகிறார். இந்த விஷயம், ஜெபத்தைப் பற்றி பைபிள் சொல்லும் அடிப்படை உண்மைகளில் ஒன்று. அன்றிருந்த சீஷர்கள் மாதிரியே, நீங்களும் இயேசுவைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டதால், அவர்மேல் உங்களுக்கு அன்பு அதிகமாகியிருக்கும். (யோவா. 14:21) இருந்தாலும், அந்தச் சீஷர்களை மாதிரியே நீங்களும் “[யெகோவாவே] உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்” என்ற முழு நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஜெபம் செய்யலாம். இப்படி, ஒவ்வொரு தடவை ஜெபம் செய்யும்போதும் யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதில் உங்களுக்கு விசுவாசம் இருப்பதைக் காட்டுகிறீர்கள்.—1 யோ. 5:14.
யெகோவாவே “உங்கள்மேல் பாசம் வைத்திருக்கிறார்” என்ற நம்பிக்கையோடு நீங்கள் ஜெபம் செய்யலாம் (பாராக்கள் 9-10)b
சந்தேகங்கள் ஏன் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்
11. யெகோவாவின் அன்பை நாம் சந்தேகப்பட்டால் சாத்தான் ஏன் சந்தோஷப்படுவான்?
11 யெகோவா நம்மை நேசிக்கிறாரா என்ற சந்தேகம் ஏன் வருகிறது? சாத்தான்தான் அதைக் கிளப்பிவிடுகிறான் என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். அது ஒருவிதத்தில் உண்மைதான். ஏனென்றால், அவன்தான் “யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.” (1 பே. 5:8) யெகோவா நம்மேல் காட்டுகிற அன்பை நாம் சந்தேகப்பட வேண்டும் என்று அவன் நினைக்கிறான். ஆனால், யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருப்பதால்தான் மீட்புவிலையைக் கொடுத்தார். (எபி. 2:9) அந்த மீட்புவிலையைப் பெறுவதற்கு நமக்குத் தகுதியில்லை என்று சாத்தான் நம்மை உணர வைக்கிறான். அப்படியிருக்கும்போது, யெகோவாவின் அன்பை நாம் சந்தேகப்பட்டால் உண்மையில் சந்தோஷப்படுவது யார்? சாத்தான்! சோர்ந்துபோய் யெகோவாவுக்குச் சேவை செய்வதை நாம் நிறுத்திவிட்டால் சந்தோஷப்படுவது யார்? சாத்தான்! யெகோவாவின் அன்பை உண்மையில் இழந்தது சாத்தான்தான். ஆனால் வேடிக்கை என்னவென்றால், அந்த அன்பை நாம் இழந்துவிட்டோம் என்று அவன் நினைக்க வைக்கிறான். யெகோவா நம்மை வெறுக்கிறார் என்றும் நம்மை ஒதுக்கித்தள்ளுகிறார் என்றும் நம்மை உணர வைப்பது, சாத்தான் பயன்படுத்தும் ஒரு பயங்கரமான “சூழ்ச்சி.” (எபே. 6:11) நம்மை சோர்ந்துபோக வைக்க நம் எதிரி என்னவெல்லாம் செய்கிறான் என்பதைப் புரிந்துகொண்டால் அவனை ‘எதிர்த்து நிற்க வேண்டும்’ என்பதில் நாம் உறுதியாக இருப்போம்.—யாக். 4:7.
12-13. நமக்குள் பாவ இயல்பு இருப்பதால் என்ன நடக்கிறது?
12 சந்தேகம் வருவதற்கு இன்னொரு காரணம் எதுவாக இருக்கலாம்? ஆதாமிடமிருந்து நமக்கு வந்திருக்கும் பாவ இயல்பு! (சங். 51:5; ரோ. 5:12) இந்தப் பாவம், மனிதனை தன்னுடைய படைப்பாளரிடமிருந்து பிரித்திருக்கிறது. அது அவனுடைய மனதை, இதயத்தை, உடலைப் பாதித்திருக்கிறது.
13 நமக்குள் இருக்கும் பாவம், நம் உணர்ச்சிகளைப் பாதிக்கிறது. குற்ற உணர்வு, பயம், நம்பிக்கையின்மை, அவமானம் போன்ற உணர்வுகளை நமக்குள் ஏற்படுத்துகிறது. மோசமான ஒரு தவறை, அதாவது பாவத்தை, செய்துவிட்டால் இந்த உணர்ச்சிகள் நம்மைப் போட்டு வாட்டியெடுக்கின்றன. மற்ற சமயங்களிலும் அந்த உணர்ச்சிகள் நமக்குள் வரலாம். ஏனென்றால், நாம் பாவத்தோடுதான் பிறந்திருக்கிறோம். ஆனால் மனிதனை கடவுள் படைத்தபோது அவனை அப்படிப் படைக்கவில்லை. (ரோ. 8:20, 21) டயர் பஞ்சரான ஒரு வண்டியைப் போல் மனிதர்கள் ஆகிவிட்டார்கள். பஞ்சரான வண்டியால் எப்படி முழு திறனோடு செயல்பட முடியாதோ, அதேமாதிரி பாவ இயல்பு இருப்பதால், படைக்கப்பட்டபோது மனிதர்கள் எப்படி இருந்தார்களோ அந்த மாதிரி இப்போது செயல்பட முடிவதில்லை. இந்தக் காரணத்தால்தான், யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் அவ்வப்போது எட்டிப்பார்க்கிறது. அதனால், அடுத்த முறை அப்படிச் சந்தேகம் வந்தால், ‘அதிசயமும் அற்புதமுமான [யெகோவா], அவர்மேல் அன்புவைத்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் மாறாத அன்பைக் காட்டுகிறவர்’ என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.—நெ. 1:5.
14. மீட்புவிலையைப் பற்றி யோசித்துப் பார்ப்பது யெகோவாவின் அன்பைச் சந்தேகப்படாமல் இருக்க எப்படி உதவும்? (ரோமர் 5:8) (“‘பாவத்தின் வஞ்சக சக்தி’—ஜாக்கிரதை!” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
14 என்னதான் இருந்தாலும், யெகோவாவின் அன்பைப் பெற தகுதியில்லை என்ற எண்ணம் நமக்கு அவ்வப்போது வரலாம். உண்மைதான், யெகோவாவின் அன்பைப் பெறுவதற்கு நமக்குத் தகுதியில்லைதான்; அதனால்தான், அந்த அன்பு விசேஷமானது, விலைமதிப்புள்ளது! நம்முடைய சொந்த சக்தியால் யெகோவாவின் அன்பை சம்பாதிக்க முடியாது. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருப்பதால் மீட்புவிலைக்கு ஏற்பாடு செய்து நம் பாவங்களை மன்னிக்கிறார். (1 யோ. 4:10) இயேசுகூட, பாவிகளைக் காப்பாற்றுவதற்குத்தான் பூமிக்கு வந்தார், பரிபூரண மக்களை அல்ல. (ரோமர் 5:8-ஐ வாசியுங்கள்.) யாருமே எல்லா விஷயத்தையும் 100 சதவீதம் சரியாகச் செய்துவிட முடியாது. அப்படிச் செய்ய வேண்டும் என்று யெகோவாவும் நம்மிடம் எதிர்பார்ப்பது இல்லை. நமக்குள் இருக்கிற பாவ இயல்புதான் யெகோவா காட்டும் அன்பைச் சந்தேகப்பட வைக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், அந்த எண்ணங்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் தீர்மானமாக இருப்போம்.—ரோ. 7:24, 25.
யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள்
15-16. யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருந்தால் எதைச் சந்தேகப்பட வேண்டிய அவசியமில்லை, ஏன்? (2 சாமுவேல் 22:26)
15 வாழ்க்கையில் சரியான தீர்மானங்களை எடுத்து, நாம் யெகோவாவுக்கு “உண்மையாக” இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (உபா. 30:19, 20) அப்படி உண்மையாக இருந்தால், அவரும் நமக்கு உண்மையாக இருப்பார். (2 சாமுவேல் 22:26-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருக்கும்வரை, எப்படிப்பட்ட சூழ்நிலைகள் நம் வாழ்க்கையில் வந்தாலும் அவர் நமக்கு உதவி செய்வார்.
16 நாம் இவ்வளவு நேரம் பார்த்த மாதிரி, சோதனைகள் வரும்போது நம்மால் நங்கூரம் போட்ட மாதிரி நிலையாக நிற்க முடியும். ஏனென்றால், யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்றும் அவர் கண்டிப்பாக உதவி செய்வார் என்றும் நமக்குத் தெரியும். அதைத்தான் பைபிளும் சொல்கிறது. யெகோவாவின் அன்பில் எப்போதாவது உங்களுக்குச் சந்தேகம் வந்தால் உங்களுடைய உணர்ச்சிகளை ஓரம்கட்டி வைத்துவிட்டு யெகோவாவைப் பற்றி நீங்கள் தெரிந்துவைத்திருக்கிற உண்மைகளை யோசித்துப் பாருங்கள். யெகோவாவே என்றென்றைக்கும் மாறாத அன்பைக் காட்டுகிறவர் என்ற அடிப்படை பைபிள் உண்மையை நாம் என்றுமே மறந்துவிட வேண்டாம்!
பாட்டு 159 யெகோவாவுக்கு மகிமை கொடுங்கள்
a மற்ற உதாரணங்கள் உபாகமம் 31:8, சங்கீதம் 94:14 மற்றும் ஏசாயா 49:15-ல் இருக்கின்றன.
b படவிளக்கம்: உடம்பு முடியாமல் இருக்கும் தன் மனைவியைக் கவனித்துக்கொள்ளவும், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளை ஞானமாக எடுக்கவும், யெகோவாவை நேசிக்க தன் மகளுக்குக் கற்றுக்கொடுக்கவும் உதவச் சொல்லி ஒரு சகோதரர் ஜெபம் செய்கிறார்.