படிப்புக் கட்டுரை 33
பாட்டு 4 ‘யெகோவா என் மேய்ப்பர்’
யெகோவா உங்களை நேசிக்கிறார் என்பதை நம்புங்கள்!
“என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்.”—எரே. 31:3.
என்ன கற்றுக்கொள்வோம்?
யெகோவா நம்மேல் அன்பு வைத்திருப்பதை நாம் ஏன் நம்ப வேண்டும் என்பதையும், அந்த நம்பிக்கை குறைந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்ப்போம்.
1. நீங்கள் ஏன் உங்களையே யெகோவாவுக்கு அர்ப்பணித்தீர்கள்? (படத்தையும் பாருங்கள்.)
யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்த அந்தத் தருணம் ஞாபகம் இருக்கிறதா? அவரைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவரை நேசிக்க ஆரம்பித்ததால் அந்த முக்கியமான முடிவை நீங்கள் எடுத்திருப்பீர்கள். வாழ்க்கையில் அவருடைய விருப்பத்துக்கு முதலிடம் கொடுப்பதாகவும், முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு மனதோடும் முழு பலத்தோடும் அவர்மேல் அன்பு காட்டுவதாகவும் வாக்குக் கொடுத்திருப்பீர்கள். (மாற். 12:30) அந்தச் சமயத்திலிருந்து இப்போதுவரை அவர்மேல் உங்களுக்கு இருக்கிற அன்பு அதிகமதிகமாக வளர்ந்திருக்கும். அதனால், “உங்களுக்கு யெகோவாவைப் பிடிக்குமா?” என்று யாராவது கேட்டால், எந்தத் தயக்கமும் இல்லாமல் “வேறு யாரையும்விட வேறு எதையும்விட யெகோவாதான் என் உயிர்” என்று நீங்கள் சொல்வீர்கள்.
அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவாமேல் உங்களுக்கு எவ்வளவு அன்பு இருந்தது என்பது ஞாபகம் இருக்கிறதா? (பாரா 1)
2-3. நாம் எதை நம்ப வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்? (எரேமியா 31:3)
2 சரி, இப்போது “யெகோவா உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று யாராவது கேட்பதாக வைத்துக்கொள்வோம். ‘என்னைப் போய் யெகோவா நேசிப்பாரா... அதற்கெல்லாம் எனக்குத் தகுதியில்லை’ என்று யோசிக்கிறீர்களா? அதனால், பதில் சொல்லத் தயக்கமாக இருக்கிறதா? மோசமான சூழ்நிலையில் வளர்ந்த ஒரு சகோதரி இப்படிச் சொன்னார்: “யெகோவாவை நான் நேசிக்கிறேன் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. என்னையெல்லாம் அவர் நேசிப்பாரா என்பதில்தான் அடிக்கடி சந்தேகம் வரும்.” உண்மையிலேயே யெகோவா நம்மை எப்படிப் பார்க்கிறார்?
3 யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார். அதை நீங்கள் உறுதியாக நம்ப வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (எரேமியா 31:3-ஐ வாசியுங்கள்.) சொல்லப்போனால், உங்களைத் தன் பக்கம் இழுத்ததே யெகோவாதான். உங்களை நீங்கள் அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தபோது, உங்களுக்கு அருமையான ஒரு பரிசைக் கொடுத்தார். அதுதான் அவருடைய மாறாத அன்பு! அது ஏதோ மேலோட்டமான ஒரு உணர்ச்சி கிடையாது. அது ஆழமானது, என்றைக்குமே மாறாதது. இந்த அன்பு இருப்பதால்தான் தன்னுடைய எல்லா ஊழியர்களையும், உங்களையும், யெகோவா ‘விசேஷ சொத்தாக’ பார்க்கிறார். (மல். 3:17) யெகோவா தன்மேல் அளவுகடந்த அன்பு வைத்திருப்பதை அப்போஸ்தலன் பவுல் உறுதியாக நம்பினார். அதனால்தான் இப்படி எழுதினார்: “சாவோ, வாழ்வோ, தேவதூதர்களோ, அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, வலிமைமிக்க சக்திகளோ, உயர்வான காரியங்களோ, தாழ்வான காரியங்களோ, வேறெந்தப் படைப்போ நம் எஜமானாகிய கிறிஸ்து இயேசுவின் மூலம் கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று உறுதியாக நம்புகிறேன்.” (ரோ. 8:38, 39) பவுல் உணர்ந்தது போலவே நாமும் உணர வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். இந்தக் கட்டுரையில், யெகோவா நம்மை நேசிக்கிறார் என்ற நம்பிக்கையை நாம் ஏன் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பார்ப்போம். அதைச் செய்வதற்கு நமக்கு எவையெல்லாம் உதவும் என்பதையும் பார்ப்போம்.
ஏன் நம்ப வேண்டும்
4. சாத்தானுடைய ஒரு சூழ்ச்சி என்ன, அதை நம்பி ஏமாந்துவிடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
4 யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்பினால், பிசாசின் ஒரு ‘சூழ்ச்சியை’ நம்பி ஏமாந்துவிட மாட்டோம். (எபே. 6:11) அது என்ன சூழ்ச்சி? யெகோவாவுக்கு நம்மேல் அன்பே இல்லை என்ற பொய்களைப் பரப்பி, நமக்கு எதிராக பிசாசு சூழ்ச்சி செய்கிறான். யெகோவாவுக்கு நாம் செய்யும் சேவையைத் தடுத்து நிறுத்த பிசாசு என்ன வேண்டுமானாலும் செய்வான். அவன் ஒரு சந்தர்ப்பவாதி. கடந்த காலத்தைப் பற்றியோ, இப்போது இருக்கிற சவால்களைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ நினைத்து நாம் சோர்ந்துபோயிருக்கும் சந்தர்ப்பம் பார்த்து அவன் நம்மைத் தாக்குவான். (நீதி. 24:10) தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியாத ஒரு இரையைத் தாக்கும் சிங்கம் போல சாத்தான் இருக்கிறான். நாம் பலவீனமாக இருக்கிற சந்தர்ப்பம் பார்த்து, அவன் நம்மைத் தாக்குகிறான். ஆனால், யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் பலப்படுத்திக்கொண்டே இருந்தால் சாத்தானையும் அவனுடைய சூழ்ச்சிகளையும் ‘எதிர்த்து நிற்க’ எப்போதுமே நாம் தயாராக இருப்போம்.—1 பே. 5:8, 9; யாக். 4:7.
5. யெகோவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்பதை உணர்வது ஏன் ரொம்ப முக்கியம்?
5 யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்பினால், அவரிடம் நாம் இன்னும் நெருங்கிப் போவோம். யெகோவா நம்மைப் படைத்திருக்கிற விதத்தைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். மற்றவர்கள்மேல் அன்பு காட்டுகிற மாதிரியும் மற்றவர்களுடைய அன்பை ருசிக்கிற மாதிரியும் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். பொதுவாகவே, யாராவது நம்மேல் அன்பு காட்டினால் பதிலுக்கு நாமும் அன்பு காட்டுவோம்—அதுதான் இயல்பு. அதனால், யெகோவா நம்மேல் அன்பு காட்டுவதை எந்தளவுக்கு உணருகிறோமோ, அந்தளவுக்கு அவர்மேல் நாமும் அன்பு காட்டுவோம். (1 யோ. 4:19) அவர்மேல் நமக்கு இருக்கிற அன்பு வளர வளர, அவரும் நம்மேல் இன்னும் அதிகமாக அன்பு காட்டுவார். அதனால்தான் பைபிள் இப்படிச் சொல்கிறது: “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.” (யாக். 4:8) சரி, அப்படியென்றால் கடவுள் நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கையை எப்படிப் பலப்படுத்துவது?
நம்புவதற்கு எது உதவும்
6. யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்புவதற்கு என்ன செய்யலாம்?
6 குறிப்பாக ஜெபம் செய்யுங்கள், விடாமல் ஜெபம் செய்யுங்கள். (லூக். 18:1; ரோ. 12:12) யெகோவா உங்களைப் பற்றி என்ன நினைக்கிறாரோ அதைப் புரிந்துகொள்ள அவரிடமே உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள்—தேவைப்பட்டால், ஒரு நாளில் அடிக்கடி செய்யுங்கள். யெகோவா உங்களை நேசிக்கிறார் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள உங்கள் இதயம் ஒருவேளை மறுக்கலாம். உங்களுக்கு அதற்கெல்லாம் தகுதியில்லை என்று அது சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஆனால், உங்கள் இதயத்தைவிட யெகோவா உயர்ந்தவர் என்பதை மறந்துவிடாதீர்கள். (1 யோ. 3:19, 20) உங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்ததைவிட யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். உங்களிடம் உங்களால் பார்க்க முடியாத விஷயங்களைக்கூட அவரால் பார்க்க முடியும். (1 சா. 16:7; 2 நா. 6:30) அதனால், மனதில் இருப்பதை அவரிடம் ‘ஊற்றிவிட’ தயங்காதீர்கள்; அவருடைய அன்பைப் புரிந்துகொள்ள அவரிடம் உதவி கேளுங்கள். (சங். 62:8) ஜெபம் செய்தப் பிறகு, பின்வரும் ஆலோசனைகள்படி செய்து பாருங்கள்.
7-8. யெகோவா நம்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதை நம்ப சங்கீத புத்தகம் எப்படி உதவுகிறது?
7 தன்னைப் பற்றி யெகோவா சொல்லியிருப்பதை நம்புங்கள். தான் உண்மையிலேயே எப்படிப்பட்டவர் என்பதை பைபிள் எழுத்தாளர்கள் மூலம் யெகோவா தெரியப்படுத்தியிருக்கிறார். யெகோவாவுக்கு எவ்வளவு இளகிய மனசு என்பதை தாவீது அழகாக வர்ணித்தார். அவர் சொன்னார்: “உள்ளம் உடைந்துபோனவர்களின் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார். சோர்ந்துபோனவர்களை அவர் காப்பாற்றுகிறார்.” (சங். 34:18, அடிக்குறிப்பு) சோர்ந்துபோயிருக்கும்போது, ‘எனக்கு யாருமே இல்லை’ என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அந்த மாதிரி சமயங்களில், யெகோவா உங்கள் பக்கத்திலேயே இருப்பதாக வாக்குக் கொடுத்திருக்கிறார். ஏனென்றால், எப்போதையும்விட அந்தச் சமயத்தில்தான், உங்களுக்கு அவர் தேவை என்பது அவருக்குத் தெரியும். இன்னொரு சங்கீதத்தில் தாவீது இப்படி எழுதினார்: “என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள்.” (சங். 56:8) இந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? பாலைவனத்தில் பயணம் செய்கிறவர்கள், தோல் பையில் இருக்கிற ஒவ்வொரு சொட்டு நீரையும் ரொம்ப முக்கியமாக நினைப்பார்கள்; அதை வீணடிக்கவே மாட்டார்கள். வேதனையில் நீங்கள் சிந்தும் கண்ணீரையும் யெகோவா அப்படித்தான் பார்க்கிறார். ஒரு சொட்டு கண்ணீரைக்கூட அவர் மறப்பதில்லை. யெகோவாவுக்கு உங்கள்மேல் எவ்வளவு அக்கறை என்று பார்த்தீர்களா? அடுத்து, சங்கீதம் 139:3 என்ன சொல்கிறது என்று பாருங்கள்: “என் வழிகளையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்.” நீங்கள் செய்கிற எல்லாவற்றையுமே யெகோவா பார்க்கிறார்; ஆனால், நீங்கள் செய்கிற நல்ல விஷயங்கள்மீதுதான் அவர் முக்கியமாக கவனம் செலுத்துகிறார். (எபி. 6:10) ஏன் தெரியுமா? அவரைப் பிரியப்படுத்த நீங்கள் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியையும் அவர் உயர்வாக மதிக்கிறார்.a
8 இந்த மாதிரியான ஆறுதலான வசனங்களை பைபிளில் பதிவு செய்திருப்பதன் மூலம் யெகோவா நம்மிடம் என்ன சொல்ல வருகிறார்? “நான் உன்மேல் உயிரையே வைத்திருக்கிறேன் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று சொல்ல வருகிறார். ஆனால், நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இல்லை என்ற பொய்யை சாத்தான் பரப்பிக்கொண்டு இருக்கிறான். அதனால், ‘யெகோவாவுக்கு என்மேல் அன்பு இருக்கிறதா?’ என்ற சந்தேகம் வரும்போது கொஞ்சம் நிறுத்தி, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “‘பொய்க்குத் தகப்பனாக’ இருக்கிற சாத்தான் சொல்வதை நான் நம்புவேனா அல்லது ‘சத்தியத்தின் கடவுளாக’ இருக்கிற யெகோவா சொல்வதை நம்புவேனா?”—யோவா. 8:44; சங். 31:5.
9. தன்னை நேசிக்கிறவர்களுக்கு யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்? (யாத்திராகமம் 20:5, 6)
9 தன்மேல் அன்பு காட்டுகிறவர்களிடம் யெகோவா எப்படி நடந்துகொள்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். அவர் மோசேயிடமும் இஸ்ரவேலர்களிடமும் என்ன சொன்னார் என்பதைப் பாருங்கள். (யாத்திராகமம் 20:5, 6-ஐ வாசியுங்கள்.) யாரெல்லாம் அவரை நேசிக்கிறார்களோ அவர்களுக்குத் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டுவதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். அப்படியென்றால், தன்னை வணங்குகிறவர்களிடமிருந்து அன்பை வாங்கிக்கொண்டு, பதிலுக்கு அவர்கள்மேல் அன்பு காட்டாமல் யெகோவா ஒருபோதும் இருக்க மாட்டார். (நெ. 1:5) அதனால், யெகோவாவுக்கு உங்கள்மேல் அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் வரும்போது, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “நான் யெகோவாமேல் அன்பு வைத்திருக்கிறேனா?” அதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்காது. பிறகு இப்படி யோசித்துப் பாருங்கள்: ‘அவர்மேல் நான் அன்பு வைத்து, அவருக்குப் பிடித்த மாதிரி வாழ ஆசைப்படுகிறேன் என்றால், அவர் என்மேல் அன்பு வைக்காமல் இருப்பாரா?’ (தானி. 9:4; 1 கொ. 8:3) வேறு வார்த்தைகளில் சொன்னால், உங்களுக்கு யெகோவாமேல் இருக்கும் அன்பில் சந்தேகம் இல்லை என்றால், அவருக்கு உங்கள்மேல் இருக்கும் அன்பை மட்டும் ஏன் சந்தேகப்பட வேண்டும்?! யெகோவா என்றுமே மாறாதவர், அவருடைய அன்பும் மாறாதது!
10-11. மீட்புவிலையை நீங்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யெகோவா நினைக்கிறார்? (கலாத்தியர் 2:20)
10 மீட்புவிலையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பாருங்கள். மனிதர்களுக்கு யெகோவா கொடுத்த ரொம்ப அருமையான பரிசு, மீட்புவிலை. (யோவா. 3:16) ஆனால், அது யெகோவா உங்களுக்காகத் தனிப்பட்ட விதத்தில் கொடுத்த பரிசு என்று நினைக்கிறீர்களா? மீட்புவிலையை பவுல் எப்படிப் பார்த்தார் என்று யோசியுங்கள். கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு அவர் பெரிய பெரிய பாவங்களைச் செய்திருக்கிறார். கிறிஸ்தவராக ஆன பிறகும் பலவீனங்களோடு போராடினார். (ரோ. 7:24, 25; 1 தீ. 1:12-14) இந்தச் சூழ்நிலையில், அவர் மீட்புவிலையை எப்படிப் பார்த்தார்? அதை, தனக்காகக் கொடுக்கப்பட்ட பரிசாகப் பார்த்தார். (கலாத்தியர் 2:20-ஐ வாசியுங்கள்.) பைபிளில் இருக்கிற எல்லா விஷயங்களையும் நம்முடைய அறிவுரைக்காக யெகோவா எழுதி வைத்த மாதிரியே, பவுலுடைய இந்த வார்த்தைகளையும் நம்முடைய நன்மைக்காக யெகோவா எழுதி வைத்தார். (ரோ. 15:4) மீட்புவிலையை நீங்கள் எப்படிப் பார்க்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. அதை, உங்களுக்குக் கொடுத்த பரிசாக நீங்கள் பார்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார். அப்படி நீங்கள் பார்த்தால், உங்கள்மேல் யெகோவா தனிப்பட்ட விதத்தில் அன்பு வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கை இன்னும் அதிகமாகும்.
11 நமக்காக உயிரைக் கொடுப்பதற்காக இயேசுவை யெகோவா பூமிக்கு அனுப்பினார். அதற்கு நாம் நன்றியோடு இருக்கிறோம். இன்னொரு காரணத்துக்காகவும் இயேசுவை யெகோவா அனுப்பினார். அதாவது, தன்னைப் பற்றிய உண்மைகளைச் சொல்லிக்கொடுப்பதற்காக அனுப்பினார். (யோவா. 18:37) தன்னுடைய பிள்ளைகள்மேல் யெகோவா எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பது அவர் சொல்லிக்கொடுத்த உண்மைகளில் ஒன்று.
இயேசு எப்படி உதவுகிறார்
12. யெகோவாவைப் பற்றி இயேசு சொன்னதை நாம் ஏன் முழுமையாக நம்பலாம்?
12 இயேசு பூமியில் இருந்தபோது, யெகோவா எப்படிப்பட்டவர் என்பதை மக்களுக்குச் சொல்லிக் கொடுத்தார். (லூக். 10:22) அவர் சொன்னதை நாம் முழுமையாக நம்பலாம். ஏனென்றால், பூமிக்கு வருவதற்கு முன்பு கோடிக்கணக்கான வருஷங்களாக இயேசு யெகோவாவோடு இருந்திருக்கிறார். (கொலோ. 1:15) யெகோவாவின் பக்கத்திலேயே இருந்து, அவர் தன்னுடைய உண்மையுள்ள பிள்ளைகள்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இயேசு நேரடியாகவே பார்த்திருக்கிறார். யெகோவாவின் அந்த அன்பை நாம் புரிந்துகொள்ள இயேசு உதவுகிறார். எப்படி என்று இப்போது பார்க்கலாம்.
13. நாம் யெகோவாவை எப்படிப் பார்க்க வேண்டும் என்று இயேசு ஆசைப்படுகிறார்?
13 யெகோவாவை இயேசு எப்படிப் பார்த்தாரோ அதேமாதிரி நாமும் பார்க்க வேண்டும் என்பதுதான் இயேசுவின் ஆசை. சுவிசேஷ புத்தகங்களில், யெகோவாவை “தகப்பன்” என்று 160-க்கும் அதிகமான தடவை இயேசு சொல்லியிருக்கிறார். சீஷர்களிடம் பேசும்போது, ‘உங்கள் தகப்பன்,’ “உங்கள் பரலோகத் தகப்பன்” என்ற வார்த்தைகளை இயேசு பயன்படுத்தினார். (மத். 5:16; 6:26) மத்தேயு 5:16-க்கான ஆராய்ச்சிக் குறிப்பு இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் பழங்கால ஊழியர்கள் சிறப்பான பல பட்டப்பெயர்களைப் பயன்படுத்தி [யெகோவாவை] விவரித்தார்கள் அல்லது அழைத்தார்கள். உதாரணத்துக்கு, ‘சர்வவல்லமையுள்ள கடவுள்,’ ‘உன்னதமான கடவுள்,’ ‘மகத்தான படைப்பாளர்’ போன்ற பட்டப்பெயர்களைப் பயன்படுத்தினார்கள். ஆனால் இயேசு, எல்லாரும் சகஜமாகப் பயன்படுத்திய எளிமையான வார்த்தையைத்தான், அதாவது ‘தகப்பன்’ என்ற வார்த்தையைத்தான், அடிக்கடி பயன்படுத்தினார். கடவுளுக்குத் தன் வணக்கத்தாரோடு இருக்கும் நெருங்கிய பந்தத்தை இது சிறப்பித்துக் காட்டுகிறது.” இதிலிருந்து என்ன தெரிகிறது? யெகோவாவை ஒரு அன்பான அப்பாவாக... தன் பிள்ளைகள்மேல் உயிரையே வைத்திருக்கும் ஒரு தகப்பனாக... நாம் பார்க்க வேண்டும் என்று இயேசு ஆசைப்படுவது தெரிகிறது. யெகோவாவை இயேசு, “தகப்பன்” என்று சொன்ன இரண்டு சந்தர்ப்பங்களைப் பற்றி இப்போது அலசிப் பார்க்கலாம்.
14. யெகோவாவுக்கு நாம் ஒவ்வொருவருமே கண்மணிபோல் இருக்கிறோம் என்பதை இயேசு எப்படிக் காட்டினார்? (மத்தேயு 10:29-31) (படத்தையும் பாருங்கள்.)
14 முதலில், மத்தேயு 10:29-31-ல் இருக்கும் இயேசுவின் வார்த்தைகளைப் பார்க்கலாம். (வாசியுங்கள்.) இயேசு இங்கே சிட்டுக்குருவிகளைப் பற்றிப் பேசுகிறார். சிட்டுக்குருவிகள் ரொம்ப சின்னப் பறவைகள். அவற்றால் யெகோவாவை நேசிக்கவும் முடியாது, வணங்கவும் முடியாது. இருந்தாலும், அவை ஒவ்வொன்றும் எங்கே இருக்கிறது என்பதுகூட யெகோவாவுக்குத் தெரியும் என்று இயேசு இங்கே சொல்ல வருகிறார். சின்னஞ்சிறு சிட்டுக்குருவிகளின் மேலேயே யெகோவாவுக்கு இவ்வளவு அக்கறை இருக்கிறது என்றால், அவர்மேல் அன்பு வைத்து அவரை உண்மையாக வணங்குகிற ஒவ்வொருவர்மீதும் அவருக்கு எவ்வளவு அக்கறை இருக்கும்! அவர்களை எவ்வளவு உயர்வாகப் பார்ப்பார்! 30-வது வசனத்தில், “உங்கள் தலையிலுள்ள முடியெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது” என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த வசனத்துக்கான ஆராய்ச்சிக் குறிப்பு இப்படிச் சொல்கிறது: “இப்படிப்பட்ட நுணுக்கமான விவரங்களைக்கூட யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருப்பது, கிறிஸ்துவைப் பின்பற்றுகிற ஒவ்வொருவர்மீதும் அவர் காட்டுகிற அளவுகடந்த அக்கறைக்கு உத்தரவாதம் அளிக்கிறது.” இது எதைக் காட்டுகிறது? யெகோவா நம் ஒவ்வொருவரையும் கண்மணிபோல் பார்க்கிறார் என்பதை நாம் நம்ப வேண்டும் என்று இயேசு ஆசைப்படுவதைக் காட்டுகிறது.
ஒரு சிட்டுக்குருவி எங்கே இருக்கிறது என்பதுகூட யெகோவாவுக்குத் தெரியும். அதையே அவர் கவனிக்கிறார் என்றால், அவர்மேல் அன்பு வைத்து அவரை உண்மையோடு வணங்கும் உங்களைக் கவனிக்காமல் இருப்பாரா, உயர்வாகப் பார்க்காமல் இருப்பாரா? (பாரா 14)
15. யோவான் 6:44-ல் இயேசு சொன்ன வார்த்தைகள் உங்கள் பரலோக அப்பாவைப் பற்றி என்ன சொல்கிறது?
15 அடுத்ததாக, இயேசு யெகோவாவை “தகப்பன்” என்று சொன்ன இன்னொரு சந்தர்ப்பத்தைப் பார்க்கலாம். (யோவான் 6:44-ஐ வாசியுங்கள்.) உங்களுடைய பரலோகத் தகப்பன்தான் உங்களை அன்பாக, படிப்படியாக, அவர் பக்கம் ஈர்த்திருக்கிறார். உங்களுடைய நல்ல மனதைப் பார்த்ததால்தான் அப்படிச் செய்திருக்கிறார். (அப். 13:48) யோவான் 6:44-ல் இருக்கிற வார்த்தைகளை இயேசு சொன்னபோது, எரேமியா 31:3-ல் யெகோவா சொன்ன வார்த்தைகளை மனதில் வைத்து சொல்லியிருக்கலாம். அங்கே, யெகோவா இப்படிச் சொல்லியிருக்கிறார்: “என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்.” (எரே. 31:3; ஓசியா 11:4-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.) இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? நம்மிடம் இருக்கிற நல்ல விஷயங்களை நம்மால் பார்க்க முடியாமல் போனாலும், நம் பரலோக அப்பா அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன.
16. (அ) இயேசு நம்மிடம் என்ன சொல்ல வருகிறார், அவர் சொல்வதை நாம் ஏன் நம்ப வேண்டும்? (ஆ) யெகோவாதான் உங்களுக்கு மிகச் சிறந்த தகப்பன் என்ற நம்பிக்கையை எது பலப்படுத்தும்? (“நம் அனைவருக்கும் தேவையான தகப்பன்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
16 யெகோவாவை நம் தகப்பன் என்று சொல்வதன் மூலம் இயேசு என்ன சொல்ல வருகிறார்? “யெகோவா என்னுடைய அப்பா மட்டுமல்ல, உங்களுக்கும் அப்பா. அவர் உங்கள்மேல் அன்பும், அக்கறையும் வைத்திருக்கிறார் என்பதை என்னால் அடித்துச் சொல்ல முடியும்” என்று சொல்ல வருகிறார். அதனால், யெகோவாவுக்கு உண்மையிலேயே உங்கள்மீது அன்பு இருக்கிறதா என்ற சந்தேகம் வரும்போது, ஒரு நிமிஷம் நிறுத்தி, இப்படி யோசியுங்கள்: ‘தன்னுடைய அப்பாவைப் பற்றி நன்றாகத் தெரிந்த இயேசுவுடைய வார்த்தைகளை—அதுவும், எப்போதும் உண்மையைப் பேசுகிற அவருடைய வார்த்தைகளை—நம்பாமல், வேறு யார் சொல்வதை நான் நம்பப் போகிறேன்?!’—1 பே. 2:22.
உங்கள் நம்பிக்கையைத் தொடர்ந்து பலப்படுத்துங்கள்
17. யெகோவாவுக்கு நம்மீது அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் ஏன் பலப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்?
17 யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை நாம் அதிகமாக்கிக்கொண்டே இருக்க வேண்டும். முன்பு பார்த்த மாதிரி, நம்முடைய எதிரியும் சூழ்ச்சிக்காரனுமான சாத்தான், யெகோவாவுக்கு நாம் சேவை செய்வதைத் தடுக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். யெகோவாவுக்கு நம்மேல் அன்பே இல்லை என்ற எண்ணத்தை நம் மனதில் விதைக்க முயற்சி எடுத்துக்கொண்டே இருப்பான். அவனை ஜெயிக்க விடவே கூடாது!—யோபு 27:5.
18. யெகோவா உங்கள்மேல் அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள நீங்கள் என்ன செய்யலாம்?
18 யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை அதிகமாக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இவ்வளவு நேரம் பார்த்தோம். யெகோவா நம்மேல் வைத்திருக்கும் அன்பைப் புரிந்துகொள்ள உதவ சொல்லி தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். யெகோவா நம்மேல் வைத்திருக்கும் பாசத்தை வர்ணிக்கிற பைபிள் வசனங்களைப் படித்து அவற்றை யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் அன்பு காட்டும்போது, அவர் பதிலுக்கு எப்படி அன்பு காட்டுகிறார் என்பதை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய அன்பை வாங்கிக்கொண்டு, பதிலுக்கு அவர் அன்பு காட்டாமல் கண்டிப்பாக இருக்க மாட்டார்! மீட்புவிலை என்பது நமக்கு யெகோவா கொடுத்த தனிப்பட்ட பரிசு என்பதையும் யோசித்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்கு அப்பாவாக இருக்கிறார் என்று இயேசு கொடுத்த நம்பிக்கையை மறந்துவிடக் கூடாது. இதையெல்லாம் செய்ததற்குப் பிறகு, யாராவது உங்களிடம் வந்து, “யெகோவா உங்களை நேசிக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?” என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? “கண்டிப்பாக, அதில் எனக்குத் துளிகூட சந்தேகம் இல்லை! நானும் அவர்மேல் வைத்திருக்கிற அன்பைத் தினமும் காட்டுவேன்” என்றுதானே சொல்வீர்கள்!
பாட்டு 154 உண்மை அன்பு