உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 அக்டோபர் பக். 18-23
  • உங்கள் ஜெபம் எப்படி இருக்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் ஜெபம் எப்படி இருக்கிறது?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுங்கள்
  • யெகோவாவிடம் நெருங்கிப்போகும் விதத்தில் ஜெபம் செய்யுங்கள்
  • பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஜெபங்களை யோசித்துப் பாருங்கள்
  • ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவிடம் நெருங்கிப் போய்க்கொண்டே இருங்கள்
  • மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • ‘உள்ளம் உடைந்தவர்களை யெகோவா குணமாக்குகிறார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • இன்னும் நன்றாக ஜெபம் செய்ய...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • சகித்திருக்க யெகோவா உதவுகிறார்​—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 அக்டோபர் பக். 18-23

படிப்புக் கட்டுரை 42

பாட்டு 44 சோகத்தில் தவிப்பவரின் ஜெபம்

உங்கள் ஜெபம் எப்படி இருக்கிறது?

“ முழு இதயத்தோடு உங்களிடம் வேண்டுகிறேன். யெகோவாவே, எனக்குப் பதில் கொடுங்கள்.” —சங். 119:145.

என்ன கற்றுக்கொள்வோம்?

பைபிளில் இருக்கும் ஜெபங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளும்போது நம்மால் இன்னும் நன்றாக ஜெபம் செய்ய முடியும்.

1-2. (அ) யெகோவாவிடம் மனம்விட்டுப் பேச எது தடையாக இருக்கலாம்? (ஆ) நம் ஜெபத்தை யெகோவா கண்டிப்பாகக் கேட்பார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

நீங்கள் எப்படி ஜெபம் செய்கிறீர்கள்? சிலசமயங்களில், சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்கிறீர்களா? மனம்விட்டு ஜெபம் செய்யாத மாதிரி தோன்றுகிறதா? கடமைக்காக ஜெபம் செய்கிற மாதிரி இருக்கிறதா? நிறைய பேர் இப்படித்தான் உணர்கிறார்கள். நிறைய வேலைகளில் நாம் ஓடிக்கொண்டே இருப்பதால் அவசர அவசரமாக ஜெபம் செய்கிற மாதிரி ஆகிவிடலாம். அல்லது, யெகோவாவிடம் பேச எனக்குத் தகுதியில்லை என்று நினைத்து மனதில் இருப்பதையெல்லாம் அவரிடம் சொல்லாமல் போய்விடலாம்.

2 நாம் விலாவாரியாக ஜெபம் செய்கிறோமா என்பதைவிட, மனத்தாழ்மையாக ஜெபம் செய்கிறோமா என்பதைத்தான் யெகோவா முக்கியமாகப் பார்க்கிறார். “தாழ்மையானவர்களின் வேண்டுதலை” அவர் கேட்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (சங். 10:17) நாம் சொல்கிற ஒவ்வொரு வார்த்தையையும் அவர் பொறுமையாகக் காதுகொடுத்துக் கேட்கிறார். ஏனென்றால், அவருக்கு நம்மேல் ரொம்ப அக்கறை இருக்கிறது.—சங். 139:1-3.

3. இந்தக் கட்டுரையில் நாம் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் பார்ப்போம்?

3 இந்தக் கேள்விகளை யோசித்துப் பாருங்கள்: நாம் ஏன் யெகோவாவிடம் நம்பிக்கையோடு ஜெபம் பண்ணலாம்? யெகோவாவிடம் நெருங்கிப்போகும் விதத்தில் ஜெபம் செய்ய என்ன செய்வது? பைபிளில் இருக்கிற ஜெபங்களை யோசித்துப் பார்ப்பது, இன்னும் நன்றாக ஜெபம் செய்ய நமக்கு எப்படி உதவும்? மனதில் இருப்பதையெல்லாம் வார்த்தைகளாக சொல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது? இந்தக் கேள்விகளுக்குப் பதில்களைப் பார்க்கலாம்.

நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுங்கள்

4. நம்பிக்கையோடு யெகோவாவிடம் ஜெபம் செய்ய எது உதவும்? (சங்கீதம் 119:145)

4 வாழ்க்கையில் நாம் வெற்றி பெற வேண்டும் என்று நம் உயிர் நண்பர்கள் நினைப்பார்கள். யெகோவாவும் அந்த மாதிரி ஒரு நண்பர்தான். இதைப் புரிந்து வைத்திருந்தால் தயங்காமல் அவரிடம் நம்பிக்கையோடு ஜெபம் பண்ணுவோம். 119-வது சங்கீதத்தை எழுதியவரும் யெகோவாவோடு அப்படிப்பட்ட நெருக்கமான நட்பு இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவருடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் இருந்தன; ஏமாற்றுப்பேர்வழிகள் அவரைப் பற்றிப் பொய்யான விஷயங்களைப் பரப்பினார்கள். (சங். 119:23, 69, 78) அவர் செய்த சில தவறுகளை நினைத்தும் அவர் சோர்ந்துபோனார். (சங். 119:5) இருந்தாலும், அவர் தயங்காமல் யெகோவாவிடம் மனம்விட்டு ஜெபம் பண்ணினார்.—சங்கீதம் 119:145-ஐ வாசியுங்கள்.

5. நம்முடைய மனம் குறுகுறுத்தாலும் நாம் ஏன் யெகோவாவிடம் ஜெபம் பண்ண வேண்டும்? உதாரணத்துடன் விளக்குங்கள்.

5 மோசமான பாவங்களைச் செய்தவர்கள்கூட தன்னிடம் ஜெபம் செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். (ஏசா. 55:6, 7) அதனால், நம் மனம் குறுகுறுத்தாலும் அவரிடம் ஜெபம் செய்ய நாம் தயங்கக் கூடாது. இந்த உதாரணத்தைக் கவனியுங்கள்: விமானத்தை ஓட்டும் விமானிக்கு உதவி தேவைப்பட்டால், தரையில் இருக்கிற விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம். ஒருவேளை, அவர் எதையாவது தவறாகச் செய்துவிட்டார் அல்லது வழிதவறிவிட்டார் என்று வைத்துக்கொள்வோம். தரையில் இருக்கிற அதிகாரிகளிடம் உதவி கேட்க அவர் தயங்கினால் அது சரியாக இருக்குமா? இருக்காது! அதேமாதிரி நாமும் ஏதாவது தவறு செய்துவிட்டால் அல்லது வாழ்க்கையில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தால், யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்ய தயங்கக் கூடாது. அவரிடம் நம்பிக்கையோடு ஜெபம் செய்யலாம்.—சங். 119:25, 176.

யெகோவாவிடம் நெருங்கிப்போகும் விதத்தில் ஜெபம் செய்யுங்கள்

6-7. மனதில் இருக்கிற எல்லாவற்றையும் யெகோவாவிடம் ஜெபத்தில் தயங்காமல் சொல்ல எது நமக்கு உதவும்? உதாரணம் சொல்லுங்கள். (அடிக்குறிப்பையும் பாருங்கள்.)

6 நம் மனதின் ஆழத்தில் இருக்கிற எண்ணங்களையும் யோசனைகளையும் யெகோவாவிடம் மனம்விட்டு சொல்லும்போது, நாம் அவரிடம் இன்னும் நெருங்கிப்போவோம். அப்படி ஜெபம் செய்ய எவையெல்லாம் உதவும்?

7 யெகோவாவுடைய குணங்களை யோசித்துப் பாருங்கள்.a அவருடைய குணங்களைப் பற்றி எந்தளவுக்கு யோசிக்கிறோமோ, அந்தளவுக்கு நம் மனதில் இருப்பதைச் சுலபமாக அவரிடம் சொல்ல முடியும். (சங். 145:8, 9, 18) கிறிஸ்டீன் என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். அவருடைய அப்பா ரொம்ப கொடூரமானவராக இருந்தார். கிறிஸ்டீன் சொல்கிறார்: “யெகோவாவை ஒரு அப்பாவாக பார்ப்பதும் அவரிடம் பேசுவதும் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. என்னுடைய தவறுகளெல்லாம் அவருக்குத் தெரியும் என்பதால் அவர் என்னைக் கைவிட்டுவிடுவாரோ என்று நான் யோசித்தேன்.” யெகோவாவுடைய எந்தக் குணத்தை யோசித்துப் பார்த்தது கிறிஸ்டீனுக்கு உதவியது? அவர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவுடைய மாறாத அன்பைப் பற்றி யோசித்துப் பார்த்தபோது, அவர் என்மேல் பாசம் வைத்திருக்கிறார் என்ற நம்பிக்கை எனக்குக் கிடைத்தது. அவர் என்னைக் கைவிடவே மாட்டார் என்பதைப் புரிந்துகொண்டேன். ஒருவேளை நான் கீழே விழுந்தாலும், அவர் என்னை அன்பாகத் தூக்கிவிடுவார். இதையெல்லாம் யோசித்துப் பார்ப்பதால், என் வாழ்க்கையில் இருக்கிற சந்தோஷம்-துக்கம் என எல்லாவற்றையும் அவரிடம் மனம்விட்டு சொல்ல முடிகிறது.”

8-9. ஜெபத்தில் என்ன சொல்வது என்று முன்பே யோசிப்பதால் என்ன நன்மை? உதாரணம் சொல்லுங்கள்.

8 என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதை முன்பே யோசியுங்கள். ஜெபம் செய்வதற்கு முன்பு சில கேள்விகளை நீங்கள் கேட்டுக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, ‘இப்போது நான் என்ன பிரச்சினையோடு போராடிக்கொண்டிருக்கிறேன்? யாரையாவது நான் மன்னிக்க வேண்டியிருக்கிறதா? சமீபத்தில் வந்த ஒரு சவாலைச் சமாளிக்க யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டுமா?’ என்றெல்லாம் கேட்டுக்கொள்ளலாம். (2 ரா. 19:15-19) மாதிரி ஜெபத்தில் இயேசு சொல்லிக்கொடுத்ததையும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். யெகோவாவுடைய பெயரைப் பற்றி... அவருடைய அரசாங்கத்தைப் பற்றி... அவருடைய விருப்பத்தைப் பற்றி... என்னவெல்லாம் சொல்லலாம் என்று யோசியுங்கள்.—மத். 6:9, 10.

9 அலிஸ்கா என்ற சகோதரியின் கணவருக்கு மூளையில் புற்றுநோய் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். அவர் ரொம்ப நாள் வாழ மாட்டார் என்று தெரியவந்தது. அந்தச் சமயத்தில், ஜெபம் செய்வது அலிஸ்காவுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் சொல்கிறார்: “நான் ஜெபம் செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஆனால், என்ன சொல்வது என்றே தெரியாது. அந்தளவுக்கு நான் உடைந்துபோய் இருந்தேன்.” அவருக்கு எது உதவியது? “ஜெபம் செய்வதற்கு முன்பு கொஞ்ச நேரம் எடுத்து, என்ன சொல்லப்போகிறேன் என்பதை யோசித்துப் பார்ப்பேன். இப்படிச் செய்ததால் எனக்கு இருந்த பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே ஜெபம் செய்யாமல், மற்ற விஷயங்களுக்காகவும் ஜெபம் செய்ய முடிந்தது. இது எனக்கு மனஅமைதியைக் கொடுத்தது” என்கிறார் அலிஸ்கா.

10. நாம் ஏன் நேரமெடுத்து ஜெபம் பண்ண வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)

10 நேரமெடுத்து ஜெபம் பண்ணுங்கள். சின்னதாக செய்யும் ஜெபங்கள்கூட யெகோவாவிடம் நெருங்கிப்போக உதவும்தான்; இருந்தாலும், நேரமெடுத்து நிதானமாக ஜெபம் பண்ணும்போது மனதின் ஆழத்தில் இருக்கிற உணர்ச்சிகளை யெகோவாவிடம் சொல்ல முடியும்.b அலிஸ்காவின் கணவர் இலைஜா இப்படிச் சொல்கிறார்: “ஒருநாளில் நிறைய தடவை நான் யெகோவாவிடம் பேசுவேன். நேரமெடுத்து ஜெபம் செய்வதால் அவரிடம் இன்னும் நெருங்கிப்போக முடிந்திருக்கிறது. எப்போதுதான் நான் ஜெபம் பண்ணி முடிப்பேனோ என்று யெகோவா பார்த்துக்கொண்டில்லை. அதனால், நிறைய நேரம் அவரிடம் பேசலாம்.” நீங்கள் இதைக்கூட செய்து பார்க்கலாம்: கவனச்சிதறல் இல்லாமலும், தேவைப்பட்டால் சத்தமாகவும் ஜெபம் செய்வதற்கு ஏற்ற மாதிரி ஒரு நேரத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுங்கள். நேரமெடுத்து ஜெபம் செய்வதை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

படத்தொகுப்பு: 1. சூரிய உதயத்துக்கு முன்பு, ஒரு சகோதரர் பைபிளைப் படித்து அதை ஆழமாக யோசிக்கிறார். அவர்முன் பைபிள் திறந்திருக்கிறது. கையில் காஃபி கப்பை வைத்திருக்கிறார். 2. சூரிய உதயத்துக்குப் பிறகும், அவர் அங்கேயே உட்கார்ந்து உருக்கமாக ஜெபம் செய்துகொண்டு இருக்கிறார்.

நேரமெடுத்து ஜெபம் செய்வதற்கு ஏற்ற மாதிரி ஒரு சமயத்தையும் இடத்தையும் தேர்ந்தெடுங்கள் (பாரா 10)


பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஜெபங்களை யோசித்துப் பாருங்கள்

11. பைபிளில் இருக்கிற ஜெபங்களை யோசித்துப் பார்ப்பது எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்? (“நீங்களும் இவர்களைப் போல் உணர்கிறீர்களா?” என்ற பெட்டியையும் பாருங்கள்.)

11 கடவுளுடைய ஊழியர்கள் மனதார செய்த ஜெபங்களும் கடவுளைப் புகழ்ந்து பாடிய பாடல்களும், அதாவது சங்கீதங்களும், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றைப் படிக்கும்போது, அவர்கள் எப்படித் தங்களுடைய மனதின் ஆழத்தில் இருந்த உணர்ச்சிகளை வெளிப்படையாகச் சொன்னார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது, உங்களுக்கும் அவர்களை மாதிரியே ஜெபம் செய்ய வேண்டும் என்ற ஆசை வரும். யெகோவாவைப் புகழ்வதற்கு புது வார்த்தைகளைக்கூட அவற்றிலிருந்து கண்டுபிடித்து உங்கள் ஜெபத்தில் பயன்படுத்த முடியும். அதோடு, உங்களுக்கு இருக்கும் அதேமாதிரியான சூழ்நிலையில் இருந்த சிலர் செய்த ஜெபங்களைக்கூட கண்டுபிடிக்க வாய்ப்பிருக்கிறது.

நீங்களும் இவர்களைப் போல் உணர்கிறீர்களா?

வித்தியாசமான சூழ்நிலைகளில் யெகோவாவின் ஊழியர்கள் தங்கள் மனதில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டியிருக்கிறார்கள். அவர்களைப் போல் உங்களுக்கும் இருந்திருக்கிறதா?

  • யாக்கோபு கவலையில் ஜெபம் செய்தபோது, தன்னுடைய பயங்களை மட்டும் சொல்லவில்லை. யெகோவாவுக்கு நன்றியும் சொன்னார், தன்னுடைய விசுவாசத்தையும் காட்டினார்.—ஆதி. 32:9-12.

  • கடவுள் கொடுத்த நியமிப்பைச் செய்ய தனக்கு அனுபவமோ வயதோ இல்லை என்று நினைத்தபோது சாலொமோன் யெகோவாவிடம் உதவி கேட்டு உருக்கமாக ஜெபம் செய்தார்.—1 ரா. 3:7-9.

  • பத்சேபாளோடு பாவம் செய்த பிறகு, தனக்கு “சுத்தமான இதயத்தை” தரச் சொல்லி தாவீது யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டார்.—சங். 51:9-12.

  • ஒரு புது நியமிப்பு கிடைத்தபோது மரியாள் யெகோவாவைப் புகழ்ந்தாள்.—லூக். 1:46-49.

படிப்பு ப்ராஜெக்ட்: பைபிளில் இருக்கும் ஒரு ஜெபத்தை அலசிப் பாருங்கள். அந்த ஜெபத்தைச் செய்தவருக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார் என்று கவனியுங்கள். கற்றுக்கொண்ட பாடத்தை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று யோசியுங்கள்.

12. பைபிளில் இருக்கும் ஒரு ஜெபத்தைப் படிக்கும்போது நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?

12 பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு ஜெபத்தைப் படிக்கும்போது, இந்தக் கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த ஜெபத்தைச் செய்தது யார்? எந்தச் சூழ்நிலையில் அதைச் சொன்னார்? இதில் இருக்கிற விஷயங்கள் என்னுடைய சூழ்நிலைக்குப் பொருந்துமா? இதிலிருந்து நான் என்ன கற்றுக்கொள்ளலாம்?’ இந்தக் கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க சிலசமயம் நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். நீங்கள் எடுக்கும் முயற்சி வீண்போகாது. பைபிளில் இருக்கும் சில ஜெபங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

13. ஜெபத்தைப் பற்றி அன்னாளிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் ஒரு பாடம் என்ன? (1 சாமுவேல் 1:10, 11) ( படத்தையும் பாருங்கள்.)

13 1 சாமுவேல் 1:10, 11-ஐ வாசியுங்கள். அன்னாள் இந்த ஜெபத்தைச் செய்தபோது அவளுக்கு இரண்டு பெரிய பிரச்சினைகள் இருந்தன. ஒன்று, அவளால் குழந்தை பெற்றெடுக்க முடியவில்லை. இரண்டு, அவளுடைய கணவரின் இன்னொரு மனைவி, அவளைப் பாடாய்ப்படுத்தினாள். (1 சா. 1:4-7) உங்களுக்கும் தீராத பிரச்சினை இருந்தால், அன்னாளின் ஜெபத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? நேரமெடுத்து ஜெபம் செய்ததாலும், மனதிலிருந்த எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டியதாலும் அன்னாளுக்கு ஆறுதல் கிடைத்தது. (1 சா. 1:12, 18) நாமும் ‘யெகோவாமேல் நம் பாரத்தைப் போட்டுவிட்டால்,’ அதாவது, நம் பிரச்சினைகளைப் பற்றியும் அந்தப் பிரச்சினையால் நமக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கிறது என்பதைப் பற்றியும் யெகோவாவிடம் சொல்லிவிட்டால் நமக்கு ஆறுதல் கிடைக்கும்.—சங். 55:22.

படத்தொகுப்பு: 1. எல்க்கானா தன்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டு இருக்கிறார். அன்னாள், வேதனையோடு வேறு பக்கம் திரும்பி நிற்கிறாள். 2. பெனின்னாள் சிரித்துக்கொண்டே தனக்கு புதிதாக பிறந்த குழந்தையை கையில் எடுத்துக் கொஞ்சுகிறாள். 3. அன்னாள் அழுதுகொண்டே உருக்கமாக ஜெபம் செய்கிறாள். 4. தலைமைக் குரு ஏலி கைகளைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார். அன்னாளை முறைத்துப் பார்க்கிறார்.

குழந்தை பெற்றெடுக்க முடியாததாலும் தன் கணவரின் இன்னொரு மனைவி பாடாய்ப்படுத்தியதாலும் நொந்துபோயிருந்த அன்னாள், தன் மனதில் இருந்த பாரத்தை யெகோவாவிடம் இறக்கி வைத்தாள் (பாரா 13)


14. (அ) அன்னாளிடமிருந்து நாம் வேறென்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) இன்னும் நன்றாக ஜெபம் செய்ய, பைபிளில் இருக்கிற விஷயங்களை யோசித்துப் பார்ப்பது எப்படி உதவும்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

14 சாமுவேல் பிறந்த கொஞ்ச வருஷத்தில், அன்னாள் அவனை தலைமை குரு ஏலியிடம் கொண்டுவந்தாள். (1 சா. 1:24-28) அன்னாள் மனசார செய்த ஒரு ஜெபத்தில், யெகோவா தனக்கு உண்மையாக இருக்கிற ஊழியர்களைப் பாதுகாக்கிறார் என்றும் அவர்களைக் கவனித்துக்கொள்கிறார் என்றும் உறுதியாக நம்புவதைச் சொன்னாள்.c (1 சா. 2:1, 8, 9) ஒருவேளை, அன்னாளின் வீட்டில் இருந்த பிரச்சினைகள் முழுமையாகச் சரியாகாமல் இருந்திருக்கலாம். இருந்தாலும், யெகோவா கொடுத்த ஆசீர்வாதங்களைப் பற்றி அன்னாள் யோசித்துப் பார்த்தாள். இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யெகோவா இதுவரைக்கும் நம்மை எப்படிக் கவனித்துக்கொண்டார் என்பதை யோசித்துப் பார்த்தால், நமக்கு இருக்கும் தீராத பிரச்சினைகளைக்கூட சமாளிக்க முடியும்.

15. நமக்கு ஏதாவது அநியாயம் நடக்கும்போது, எரேமியா செய்த ஜெபத்தை யோசித்துப் பார்ப்பது எப்படி உதவும்? (எரேமியா 12:1)

15 எரேமியா 12:1-ஐ வாசியுங்கள். கெட்டவர்கள் ஓகோவென்று வாழ்வதைப் பார்த்து எரேமியா ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய்விட்டார். மற்ற இஸ்ரவேலர்கள் அவரை மோசமாக நடத்தியதாலும் அவர் கஷ்டப்பட்டார். (எரே. 20:7, 8) எரேமியா மாதிரியே நமக்கும் சிலசமயங்களில் இருக்கலாம். நேர்மையில்லாதவர்கள் கொடிகட்டிப் பறப்பதைப் பார்க்கும்போதும், மற்றவர்கள் நம்மைக் கிண்டல் செய்யும்போதும் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். எரேமியா, தனக்கு எவ்வளவு வேதனையாக இருந்தது என்று யெகோவாவிடம் சொல்லி புலம்பினாலும், நடந்த அநியாயத்துக்கு யெகோவாதான் காரணம் என்று சொல்லவில்லை. கலகம் செய்த அந்த மக்களை யெகோவா கண்டித்ததைப் பார்த்தபோது, யெகோவா எப்போதும் நீதியாக நடப்பவர் என்ற நம்பிக்கை அவருக்கு அதிகமாகியிருக்கும். (எரே. 32:19) நமக்கும் ஏதாவது ஒரு விஷயம் எரிச்சலாக இருந்தால், எரேமியாவைப் போல அதைப் பற்றி யெகோவாவிடம் வெளிப்படையாக ஜெபம் செய்யலாம். அநியாயங்களை யெகோவா சரியான சமயத்தில் சரிசெய்வார் என்று முழுமையாக நம்பலாம்.

16. ஒரு லேவியர் செய்த ஜெபத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (சங்கீதம் 42:1-4) (படங்களையும் பாருங்கள்.)

16 சங்கீதம் 42:1-4-ஐ வாசியுங்கள். நாடுகடத்தப்பட்ட ஒரு லேவியர் இந்தச் சங்கீதத்தை எழுதினார். மற்ற இஸ்ரவேலர்களோடு சேர்ந்து கடவுளை வணங்க முடியாததால் தனக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்தது என்பதை இந்தச் சங்கீதத்தில் சொல்லியிருக்கிறார். நாமும் வீட்டில் முடங்கியிருந்தாலோ விசுவாசத்துக்காகச் சிறையில் இருந்தாலோ அந்த லேவியரைப் போல் உணரலாம். நம் உணர்ச்சிகள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி இருக்கலாம். ஆனால், அவற்றை யெகோவாவிடம் ஜெபத்தில் சொல்வது நல்லது. அப்படிச் செய்யும்போது, நம் யோசனைகள் சரிதானா என்று எடைபோட்டுப் பார்க்க முடியும், நம் சூழ்நிலையைச் சரியான விதத்தில் பார்க்க முடியும். அந்த லேவியரும் அதைத்தான் செய்தார். அதனால், யெகோவாவைப் புகழ வேறு வாய்ப்புகள் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொண்டார். (சங். 42:5) யெகோவா தன்னை எவ்வளவு நன்றாகக் கவனித்துக்கொள்கிறார் என்பதையும் அவர் யோசித்துப் பார்த்தார். (சங். 42:8) நாமும் யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்யும்போது நம் யோசனைகளை எடைபோட்டுப் பார்க்க முடியும், சரியான மனநிலையோடு இருக்க முடியும், சகித்திருப்பதற்கான பலமும் கிடைக்கும்.

படத்தொகுப்பு: 1. வனாந்தரத்தில் இருக்கும் ஒரு லேவியர் உருக்கமாக ஜெபம் செய்கிறார். 2. மருத்துவமனையில் படுக்கையில் இருக்கும் ஒரு சகோதரர் உட்கார்ந்து ஜெபம் செய்கிறார், அவர் மடியில் பைபிள் திறந்திருக்கிறது.

சங்கீதம் 42-ஐ எழுதிய லேவியர் தன் மனதில் இருந்ததை யெகோவாவிடம் கொட்டினார். நாமும் அப்படிச் செய்தால் நம் சூழ்நிலையைச் சரியான விதத்தில் பார்க்க முடியும் (பாரா 16)


17. (அ) யோனா தீர்க்கதரிசி செய்த ஜெபத்தில் இருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (யோனா 2:1, 2) (ஆ) கஷ்டமான சமயங்களில், சங்கீதங்களில் இருக்கிற வார்த்தைகள் நமக்கு எப்படி உதவி செய்யலாம்? (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

17 யோனா 2:1, 2-ஐ வாசியுங்கள். ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தபோது யோனா இந்த ஜெபத்தைச் செய்தார். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போயிருந்தாலும் தன்னுடைய ஜெபத்தை யெகோவா கேட்பார் என்பதில் அவர் நம்பிக்கையோடு இருந்தார். தான் செய்த ஜெபத்தில், சங்கீதங்களில் இருக்கிற நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்தினார்.d ஒருவேளை, அந்தச் சங்கீதங்களை அவர் நன்றாகத் தெரிந்துவைத்திருக்கலாம். அவற்றை யோசித்துப் பார்த்ததால், யெகோவா கண்டிப்பாக உதவி செய்வார் என்ற நம்பிக்கை அவருக்குக் கிடைத்தது. யோனா மாதிரியே நாமும் சில பைபிள் வசனங்களை மனப்பாடம் பண்ண முயற்சி செய்யலாம். அப்படிச் செய்தால், கஷ்ட காலத்தில் ஜெபம் செய்யும்போது அந்த வசனங்கள் நம் ஞாபகத்துக்கு வரும், நமக்கு ஆறுதல் தரும்.

ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவிடம் நெருங்கிப் போய்க்கொண்டே இருங்கள்

18-19. நம் மனதில் இருக்கிற கஷ்டங்களை வார்த்தைகளாக வடிக்க முடியாத சூழ்நிலைகளில், ரோமர் 8:26, 27 நமக்கு என்ன நம்பிக்கையைக் கொடுக்கிறது? உதாரணம் சொல்லுங்கள்.

18 ரோமர் 8:26, 27-ஐ வாசியுங்கள். சிலசமயத்தில் நாம் பயங்கரமான கவலையில் இருக்கலாம்; நம் மனதில் இருப்பதை வார்த்தைகளாகச் சொல்ல முடியாத அளவுக்கு, துக்கம் தொண்டையை அடைக்கலாம். அந்த மாதிரி சமயங்களில்கூட நமக்கு உதவி கிடைக்கும். கடவுளுடைய சக்தி நமக்காக “பரிந்து பேசுகிறது” என்று பைபிள் சொல்கிறது. எப்படி? கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் நிறைய ஜெபங்களை பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். மனதில் இருப்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாத சூழ்நிலைகளில், அந்த ஜெபங்களை நம்முடைய ஜெபங்களாகவே யெகோவா ஏற்றுக்கொண்டு அவற்றுக்குப் பதில் கொடுக்கலாம்.

19 ரஷ்யாவில் இருக்கிற எலனா என்ற சகோதரிக்கு இந்த விஷயம் ரொம்ப உதவியாக இருந்தது. ஜெபம் செய்ததற்காகவும் பைபிளைப் படித்ததற்காகவும் அவரைக் கைது செய்தார்கள். அப்போது பயங்கரமான மனவேதனையில் இருந்ததால், ஜெபம் செய்வதே அவருக்குக் கஷ்டமாக இருந்தது. அதைப் பற்றி அவர் சொல்கிறார்: ‘என்ன சொல்லி ஜெபம் பண்ணுவது என்றே தெரியாத சூழ்நிலைகளில், பைபிளில் பதிவு செய்யப்பட்டிருக்கும் கடவுளுடைய ஊழியர்களின் ஜெபங்களை என்னுடைய ஜெபங்களாகவே யெகோவா ஏற்றுக்கொள்வார் என்பது எனக்கு ஞாபகம் வந்தது. இக்கட்டான நிலைமையில் இது எனக்கு ரொம்ப ஆறுதலாக இருந்தது.’

20. பயங்கரமான கஷ்டத்தில் இருக்கும்போது ஜெபம் செய்ய மனதை எப்படித் தயார்படுத்தலாம்?

20 பயங்கரமான மனவேதனையில் ஜெபம் செய்யும்போது, நம் மனம் அலைபாயலாம். அதனால், ஜெபம் செய்யும் முன்பு நம் மனதைத் தயார்படுத்தலாம். அதற்கு, சங்கீத புத்தகத்தின் ஆடியோ பதிவைக் கேட்கலாம். தாவீது ராஜாவைப் போல் நம் மனதில் இருக்கும் உணர்ச்சிகளை வார்த்தைகளாக எழுதலாம். (சங். 18, 34, 142; மேல்குறிப்புகள்.) ஜெபம் செய்வதற்கு முன்பு நம் மனதை இப்படித்தான் தயார்படுத்த வேண்டும் என்று சட்டங்கள் எதுவும் இல்லை. (சங். 141:2) உங்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதைச் செய்யுங்கள்.

21. நாம் ஏன் முழு மனதோடு ஜெபம் பண்ண வேண்டும்?

21 மனதில் இருப்பதை வார்த்தையாகச் சொல்வதற்கு முன்பே யெகோவா நம்மைப் புரிந்துகொள்கிறார் என்பது நம் இதயத்துக்கு இதமாக இருக்கிறது. (சங். 139:4) ஆனாலும், நாம் நம்பிக்கையோடு அவரிடம் ஜெபம் செய்யும்போது, அதைக் கேட்டு அவர் சந்தோஷப்படுகிறார். அதனால், உங்கள் பரலோக அப்பாவான யெகோவாவிடம் பேசத் தயங்காதீர்கள். முழு மனதோடு அவரிடம் ஜெபம் செய்யுங்கள். உருக்கமாக ஜெபம் செய்ய பைபிளில் இருக்கும் ஜெபங்கள் உங்களைத் தூண்டட்டும். உங்கள் சந்தோஷம்-துக்கம் என எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். ஒரு உண்மையான நண்பராக யெகோவா எப்போதும் உங்கள் கூடவே இருப்பார்!

உங்கள் பதில் என்ன?

  • யெகோவாவிடம் மனம்விட்டு ஜெபம் செய்ய எது உதவும்?

  • யெகோவாவிடம் நெருங்கிப் போகிற மாதிரி ஜெபங்களைச் செய்ய நீங்கள் என்னவெல்லாம் செய்யலாம்?

  • கடவுளுடைய ஊழியர்கள் மனதார செய்த ஜெபங்களைப் படிப்பது உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

பாட்டு 45 என் இதயத்தின் தியானம்

a வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் புத்தகத்தில், “யெகோவா” என்ற தலைப்பில் “யெகோவாவின் தலைசிறந்த குணங்கள்” என்ற பகுதியைப் பாருங்கள்.

b சபையில் செய்யப்படும் ஜெபங்கள் பொதுவாக சுருக்கமாக இருக்கும்.

c அன்னாள், தன்னுடைய ஜெபத்தில் மோசே எழுதியதைப் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினாள். அப்படியென்றால், கடவுளுடைய வார்த்தையைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்க அவள் நிச்சயம் நேரம் ஒதுக்கியிருப்பாள். (உபா. 4:35; 8:18; 32:4, 39; 1 சா. 2:2, 6, 7) அன்னாள் பயன்படுத்தின அதேமாதிரியான வார்த்தைகளை, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இயேசுவின் அம்மா மரியாள் யெகோவாவைப் புகழ பயன்படுத்தினாள்.—லூக். 1:46-55.

d உதாரணத்துக்கு, யோனா 2:3-9-ல் இருக்கும் பதிவை, சங்கீதம் 69:1; 16:10; 30:3; 142:2, 3; 143:4, 5; 18:6; 3:8 ஆகிய வசனங்களோடு ஒப்பிட்டுப் பாருங்கள். ஜெபத்தில், யோனா சொன்ன விஷயங்களின் வரிசையின்படி இந்த வசனங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்