உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 அக்டோபர் பக். 24-29
  • மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய மறந்துவிடாதீர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய மறந்துவிடாதீர்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்?
  • நம்முடைய ஜெபங்கள் அவர்களுக்குத் தேவை
  • தனிப்பட்ட நபர்களுக்காக ஜெபம் செய்யும்போது
  • எதார்த்தமாக இருங்கள்
  • உங்கள் ஜெபம் எப்படி இருக்கிறது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • சகித்திருக்க யெகோவா உதவுகிறார்​—எப்படி?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் போவது நமக்கு நல்லது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 அக்டோபர் பக். 24-29

படிப்புக் கட்டுரை 43

பாட்டு 41 நான் வேண்டும்போது கேளும் யெகோவாவே!

மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய மறந்துவிடாதீர்கள்!

“ ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள் . . . நீதிமானின் மன்றாட்டு மிகவும் வலிமையுள்ளது.”—யாக். 5:16.

என்ன கற்றுக்கொள்வோம்?

மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம் என்றும் அதை எப்படியெல்லாம் செய்யலாம் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. நாம் செய்கிற ஜெபங்களை யெகோவா முக்கியமாகப் பார்க்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

ஜெபம் என்பது அற்புதமான ஒரு பரிசு. இதைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: சில வேலைகளை யெகோவா தேவதூதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். (சங். 91:11) முக்கியமான நிறைய பொறுப்புகளை தன்னுடைய மகனுக்குக் கொடுத்திருக்கிறார். (மத். 28:18) ஆனால், ஜெபத்தைக் கேட்கும் பொறுப்பைப் பற்றி என்ன சொல்லலாம்? அதை யெகோவா தனக்கென்றே வைத்திருக்கிறார்; வேறு யாருக்கும் கொடுக்கவில்லை. நாம் ஒவ்வொருவரும் செய்கிற ஜெபங்களை, ‘ஜெபத்தைக் கேட்கிறவரான’ யெகோவா காதுகொடுத்துக் கேட்கிறார்.—சங். 65:2.

2. மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும் விஷயத்தில் அப்போஸ்தலன் பவுலிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

2 நமக்கு இருக்கிற கவலைகளைப் பற்றி நாம் யெகோவாவிடம் தாராளமாக ஜெபம் பண்ணலாம் என்பது உண்மைதான். இருந்தாலும், மற்றவர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்ய வேண்டும். அதைத்தான் அப்போஸ்தலன் பவுல் செய்தார். எபேசு சபைக்கு அவர் இப்படி எழுதினார்: “என்னுடைய ஜெபங்களில் எப்போதும் உங்களை நினைத்துக்கொள்கிறேன்.” (எபே. 1:16) தனிப்பட்ட நபர்களுக்காகவும் பவுல் ஜெபம் செய்திருக்கிறார். அவர் தீமோத்தேயுவிடம், “நான், [கடவுளுக்கு] நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் அவரிடம் இரவும் பகலும் மன்றாடியபோது உன்னை நினைக்காமல் இருந்ததே இல்லை” என்றார். (2 தீ. 1:3) ஜெபத்தில் சொல்வதற்கு பவுலுக்கே நிறைய பிரச்சினைகள் இருந்தன. (2 கொ. 11:23; 12:7, 8) இருந்தாலும், அவர் நேரம் எடுத்து மற்றவர்களுக்காக ஜெபம் செய்தார்.

3. மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய நாம் ஏன் மறந்துவிடலாம்?

3 மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய சிலசமயம் நாம் மறந்துவிடலாம். அதற்கான ஒரு காரணத்தை சபரீனாa என்ற ஒரு சகோதரி சொல்கிறார்: “மூச்சுவிடவே நேரம் இல்லாத அளவுக்கு நம் வாழ்க்கை ரொம்ப பிஸியாகப் போய்க்கொண்டு இருக்கிறது. அதனால், நமக்கு இருக்கிற பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டு, அதற்காக மட்டுமே நாம் ஜெபம் செய்துகொண்டிருக்க வாய்ப்பிருக்கிறது.” உங்களுக்கும் இந்த மாதிரி இருந்திருக்கிறதா? அப்படியென்றால், இந்தக் கட்டுரை உங்களுக்குக் கண்டிப்பாக உதவும். (1) மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது ஏன் முக்கியம் என்றும் (2) அதை எப்படிச் செய்யலாம் என்றும் இந்தக் கட்டுரையிலிருந்து கற்றுக்கொள்வோம்.

ஏன் மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்?

4-5. மற்றவர்களுக்காக நாம் செய்கிற ஜெபங்கள் “மிகவும் வலிமையுள்ளது” என்று ஏன் சொல்லலாம்? (யாக்கோபு 5:16)

4 மற்றவர்களுக்காகச் செய்கிற ஜெபம் “மிகவும் வலிமையுள்ளது.” (யாக்கோபு 5:16-ஐ வாசியுங்கள்.) மற்றவர்களுக்காக நாம் ஜெபம் செய்வதால் அவர்களுடைய சூழ்நிலை மாறுமா? மாறலாம்! பேதுருவுக்காக இயேசு செய்த ஜெபத்தைப் பற்றி யோசித்துப் பாருங்கள். தன்னை யாரென்றே தெரியாது என்று பேதுரு சொல்லிவிடுவார் என்பது இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. இருந்தாலும், “நீ விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க வேண்டுமென்று உனக்காக மன்றாடியிருக்கிறேன்” என்றார். (லூக். 22:32) அப்போஸ்தலன் பவுலுக்குக்கூட, ஜெபம் ஒருவருடைய சூழ்நிலையை மாற்றும் என்பது தெரிந்திருந்தது. அநியாயமாக ரோமில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, பிலேமோனுக்கு இப்படி எழுதினார்: “நீங்கள் எல்லாரும் செய்கிற ஜெபத்தின் காரணமாக, நான் விடுதலையாகி உங்களை வந்து பார்ப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” (பிலே. 22) அதேமாதிரி நடந்தது! சீக்கிரத்திலேயே அவர் விடுதலையாகி, திரும்பவும் ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.

5 உண்மைதான், ஜெபம் செய்வதன் மூலம் ஒரு விஷயத்தைச் செய்ய சொல்லி நாம் யெகோவாவைக் கட்டாயப்படுத்த முடியாது. ஆனால், அந்த விஷயத்தின் மேல் நமக்கு இருக்கும் ஆர்வத்தை யெகோவா பார்க்கிறார்; சிலசமயங்களில், நாம் ஆசைப்பட்ட பதிலை அவர் கொடுக்கிறார். இதைப் புரிந்துவைத்திருந்தால், யெகோவாவிடம் உருக்கமாக ஜெபம் செய்வோம், பிறகு சரியான விதத்தில் அவர் பதில் கொடுப்பார் என்று நம்பிக்கையோடு இருப்போம்.—சங். 37:5; 2 கொரிந்தியர் 1:11-ஐயும் அதன் ஆராய்ச்சி குறிப்புகளையும் பாருங்கள் (ஆங்கில ஆராய்ச்சி பைபிள்).

6. மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும்போது அவர்களைப் பற்றி நாம் யோசிக்கிற விதம் எப்படி மாறலாம்? (1 பேதுரு 3:8)

6 மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது, ‘கரிசனையை’ வளர்த்துக்கொள்ள உதவும். (1 பேதுரு 3:8-ஐ வாசியுங்கள்.) கரிசனையுள்ள நபர், மற்றவர்கள் படுகிற கஷ்டங்களைக் கவனிப்பார்; அவர்களுக்கு உதவ ஆசைப்படுவார். (மாற். 1:40, 41) மைக்கேல் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “மற்றவர்களுடைய தேவைகளுக்காக நான் ஜெபம் செய்யும்போது, அவர்கள் படுகிற கஷ்டத்தை என்னால் இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள்மேல் அன்பு அதிகமாகிறது. அவர்களிடம் நான் நெருக்கமாகவும் உணர்கிறேன். நான் இப்படி உணர்வது அவர்களுக்கே தெரியாமல்கூட இருக்கலாம்.” மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதால் வரும் இன்னொரு நன்மையைப் பற்றி ரிச்சர்ட் என்ற ஒரு மூப்பர் சொல்கிறார்: “மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும்போது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்ற ஆசை நமக்குள் அதிகமாகும். நடைமுறையான உதவிகளைச் செய்யும்போது, அவர்களுக்காக நாம் செய்த ஜெபத்துக்குப் பதில் கொடுக்க யெகோவா நம்மையே ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம்.”

7. மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது நம் பிரச்சினைகளைச் சரியான விதத்தில் பார்க்க எப்படி உதவும்? (பிலிப்பியர் 2:3, 4) (படங்களையும் பாருங்கள்.)

7 மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது, நம் பிரச்சினைகளைச் சரியான விதத்தில் பார்க்க உதவும். (பிலிப்பியர் 2:3, 4-ஐ வாசியுங்கள்.) இந்த உலகம் பொல்லாதவனுடைய கட்டுப்பாட்டில் இருப்பதால், நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. (1 யோ. 5:19; வெளி. 12:12) மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதை நாம் பழக்கமாக்கிக்கொண்டால், ‘உலகத்தில் இருக்கிற நம் சகோதரர்கள் எல்லாரும் நாம் அனுபவிப்பது போன்ற துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்’ என்பதை ஞாபகம் வைத்துக்கொள்வோம். (1 பே. 5:9) காத்ரின் என்ற பயனியர் சகோதரி சொல்கிறார்: “மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதால், அவர்களுக்கும் சவால்கள் இருக்கின்றன என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இது, என்னுடைய பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டு இல்லாமல் இருக்க உதவுகிறது.”

படத்தொகுப்பு: சகோதர சகோதரிகள் பிரச்சினையைச் சந்தித்துக்கொண்டு இருந்தாலும் அவர்கள் மற்றவர்களுக்காக ஜெபம் செய்வது காட்டப்பட்டிருக்கிறது. 1. ஒரு சின்ன பெண் தன்னுடைய படுக்கையில் உட்கார்ந்து ஜெபம் செய்கிறாள்; உள்ளே இருக்கும் படத்தில், ஒரு குடும்பம் படகில் ஏறி போவது காட்டப்பட்டிருக்கிறது. அவர்களுடைய வீட்டைச் சுற்றி வெள்ளக்காடாக இருக்கிறது. 2. முந்தின படத்தில் காட்டப்பட்ட குடும்பத்தார், ஒன்றாகச் சேர்ந்து ஜெபம் செய்கிறார்கள்; உள்ளே இருக்கும் படத்தில், சிறையில் இருக்கும் ஒரு சகோதரர் காட்டப்பட்டிருக்கிறார். 3. முந்தின படத்தில் இருக்கும் சிறையிலுள்ள சகோதரர் ஜெபம் செய்கிறார்; உள்ளே இருக்கும் படத்தில், வயதான ஒரு சகோதரி உடம்பு முடியாமல் மருத்துவமனையில் இருப்பது காட்டப்பட்டிருக்கிறது. 4. முந்தின படத்தில் இருக்கும் வயதான சகோதரி ஜெபம் செய்கிறார்; உள்ளே இருக்கும் படத்தில், முதல் படத்தில் காட்டப்பட்ட சின்னப் பெண் இருக்கிறாள். அவளுடைய வகுப்பில் இருக்கும் எல்லாரும் பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறார்கள். இவள் மட்டும் தனியாக உட்கார்ந்திருக்கிறாள்.

மற்றவர்களுக்காக ஜெபம் செய்யும்போது, நம்முடைய சொந்த பிரச்சினைகளைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்க மாட்டோம் (பாரா 7)d


நம்முடைய ஜெபங்கள் அவர்களுக்குத் தேவை

8. யாருக்காக எல்லாம் நாம் ஜெபம் செய்யலாம் என்பதற்கு உதாரணம் சொல்லுங்கள்.

8 யாருக்காக எல்லாம் நாம் ஜெபம் செய்யலாம்? நம் சகோதர சகோதரிகளுக்காக பொதுப்படையாக ஜெபம் செய்யலாம். உதாரணத்துக்கு, உடம்பு முடியாதவர்களுக்காக... ஸ்கூலில் கேலி-கிண்டலையோ நண்பர்களின் தொல்லைகளையோ சமாளித்துக்கொண்டு இருக்கிற பிள்ளைகளுக்காக... வயதானதால் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறவர்களுக்காக... நாம் ஜெபம் பண்ணலாம். சகோதர சகோதரிகள் நிறைய பேர் குடும்பத்திலிருந்தும், அரசாங்கத்திலிருந்தும் வரும் எதிர்ப்புகளைச் சகித்துக்கொண்டு இருக்கிறார்கள். (மத். 10:18, 36; அப். 12:5) சிலர் வாழ்கிற இடத்தில் கலவரங்கள் ஏற்படுவதால், தங்கள் வீட்டைவிட்டு போக வேண்டிய நிலைமை வந்திருக்கிறது. இன்னும் சிலர், பேரழிவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். இந்தச் சகோதர சகோதரிகளைத் தனிப்பட்ட விதமாக நமக்குத் தெரியாமல் இருக்கலாம், ஆனாலும் இவர்களுக்காக நாம் பொதுப்படையாக ஜெபம் செய்யும்போது, “ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள்” என்று இயேசு கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம்.—யோவா. 13:34.

9. அமைப்பை முன்நின்று வழிநடத்துகிற சகோதரர்களுக்காகவும் அவர்களுடைய மனைவிகளுக்காகவும் நாம் ஏன் ஜெபம் செய்ய வேண்டும்?

9 அமைப்பை முன்நின்று வழிநடத்துகிறவர்களுக்காகவும் நாம் ஜெபம் செய்யலாம். அதாவது, ஆளும் குழுவில் இருக்கிற சகோதரர்களுக்காக... அவர்களுடைய உதவியாளர்களுக்காக... கிளை அலுவலகக் குழுக்களில் இருக்கிறவர்களுக்காக... கிளை அலுவலகத்தில் சேவை செய்கிற மற்ற கண்காணிகளுக்காக... வட்டாரக் கண்காணிகளுக்காக... சபை மூப்பர்களுக்காக... உதவி ஊழியர்களுக்காக... ஜெபம் செய்யலாம். இந்தச் சகோதரர்களில் நிறைய பேருக்குக் கஷ்டங்கள் இருக்கின்றன; இருந்தாலும், அவர்கள் நமக்காகக் கடினமாக உழைக்கிறார்கள். (2 கொ. 12:15) உதாரணத்துக்கு, மார்க் என்ற வட்டாரக் கண்காணி இப்படிச் சொல்கிறார்: “எனக்கு இருக்கிற ஒரு பெரிய சவால் என்னவென்றால், வயதான என்னுடைய அப்பா-அம்மாவை விட்டு தூரமாக இருப்பதுதான். அவர்கள் இரண்டு பேருக்குமே உடம்பு சரியில்லை. என் அப்பா-அம்மாவை, என் அக்காவும் அவளுடைய கணவரும் பார்த்துக்கொள்கிறார்கள். இருந்தாலும், என்னால் அவர்கள் பக்கத்திலிருந்து பார்த்துக்கொள்ள முடியாதது எனக்குக் கஷ்டமாக இருக்கிறது.” பொறுப்பிலுள்ள சகோதரர்களுக்கு இருக்கிற பிரச்சினைகளைப் பற்றி நமக்குத் தெரிகிறதோ இல்லையோ, அவர்களுக்காக எப்போதும் நாம் ஜெபம் செய்யலாம். (1 தெ. 5:12, 13) அதோடு, அவர்களுடைய மனைவிகளுக்காகவும் ஜெபம் பண்ணலாம். ஏனென்றால், மனைவிகள் ஒத்துழைப்பதால்தான் அந்தச் சகோதரர்களால் தங்கள் பொறுப்பை நன்றாகச் செய்ய முடிகிறது.

10-11. பொதுப்படையாக நாம் செய்கிற ஜெபத்தைக் கேட்டு யெகோவா சந்தோஷப்படுகிறாரா? விளக்குங்கள்.

10 நாம் ஏற்கனவே பார்த்த மாதிரி, சகோதர சகோதரிகளுக்காக நாம் அடிக்கடி பொதுப்படையாக ஜெபம் செய்யலாம். எந்தவொரு குறிப்பிட்ட நபரையும் மனதில் வைக்காமல், சிறையிலிருக்கிற சகோதர சகோதரிகளுக்கு உதவ சொல்லி, அல்லது அன்பானவர்களை பறிகொடுத்தவர்களுக்கு உதவ சொல்லி நாம் ஜெபம் செய்யலாம். டானல்ட் என்ற மூப்பர் இப்படிச் சொல்கிறார்: “நிறைய சகோதர சகோதரிகள் கஷ்டங்களோடு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால், நாம் ‘பொதுப்படையாக’ ஜெபம் பண்ணும்போது அவர்கள் எல்லாரையுமே நம்முடைய ஜெபத்தில் சேர்த்துக்கொள்ள முடியும்.”

11 இந்த மாதிரி ஜெபங்களைக் கேட்டு யெகோவா சந்தோஷப்படுவாரா? கண்டிப்பாக! சொல்லப்போனால், சகோதர சகோதரிகள் எல்லாருக்கும் குறிப்பாக என்ன தேவைகள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரியாது. அதனால், பொதுவாக எல்லாருக்காகவும் நாம் ஜெபம் செய்வது பொருத்தமாக இருக்கும். (யோவா. 17:20; எபே. 6:18) இந்த ஜெபங்கள், ‘சகோதரர்கள் எல்லாரிடமும் நாம் அன்பு வைத்திருக்கிறோம்’ என்பதற்கு அத்தாட்சிகளாக இருக்கின்றன.—1 பே. 2:17.

தனிப்பட்ட நபர்களுக்காக ஜெபம் செய்யும்போது

12. நன்றாகக் கவனிப்பது, குறிப்பிட்ட சிலருக்காக ஜெபம் செய்ய எப்படி உதவும்?

12 நன்றாகக் கவனியுங்கள். பொதுப்படையாக ஜெபம் செய்வதோடு சேர்த்து, தனிப்பட்ட விதமாக சிலருடைய பெயரைச் சொல்லியும் ஜெபம் செய்வது சரியாக இருக்கும். உங்கள் சபையில் ஒருவர் தீராத வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறாரா? இளம் பிள்ளை ஒன்று, ஸ்கூலில் தன்னோடு படிக்கிறவர்கள் கொடுக்கிற தொல்லைகளைச் சமாளிக்க போராடிக்கொண்டிருக்கிறதா? பிள்ளையைச் சத்தியத்தில் தனியாக வளர்க்கிற ஒரு அம்மா அல்லது அப்பா, “யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி” வளர்க்க போராடிக்கொண்டு இருக்கிறாரா? (எபே. 6:4) நன்றாகக் கவனிப்பது மூலம், சகோதர சகோதரிகள்மேல் நமக்கு இருக்கிற அனுதாபமும் அன்பும் இன்னும் அதிகமாகும்; அவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்ற ஆசை வரும்.b—ரோ. 12:15.

13. நமக்குப் பழக்கமில்லாத சகோதர சகோதரிகளுக்காக நாம் எப்படி ஜெபம் செய்யலாம்?

13 அவர்களுடைய பெயரைச் சொல்லி ஜெபம் பண்ணுங்கள். நாம் இதுவரை சந்திக்காத சகோதர சகோதரிகளின் பெயரைச் சொல்லிக்கூட நாம் ஜெபம் செய்யலாம். உதாரணத்துக்கு, கிரிமியா, எரிட்ரியா, ரஷ்யா, சிங்கப்பூர் மாதிரியான நாடுகளில் நம்முடைய சகோதர சகோதரிகள் நிறைய பேர் சிறையில் இருக்கிறார்கள். jw.org-ல் அவர்களுடைய பெயர்களை நம்மால் பார்க்க முடியும்.c ப்ரையன் என்ற வட்டாரக் கண்காணி இப்படிச் சொல்கிறார்: “சிறையில் இருக்கிற ஒரு சகோதரருடைய பெயரை எழுதி வைத்து, அதைச் சத்தமாகச் சொல்லிப் பார்ப்பேன். இப்படிச் செய்வதால், அவருடைய பெயரை ஞாபகம் வைத்துக்கொண்டு அவருக்காக ஜெபம் செய்ய முடிகிறது.”

14-15. நாம் எப்படிக் குறிப்பாக ஜெபம் செய்யலாம்?

14 குறிப்பாக சில விஷயங்களைச் சொல்லி ஜெபம் செய்யுங்கள். நாம் ஏற்கனவே பார்த்த மைக்கேல் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “சிறையில் இருக்கிற சகோதரர்களைப் பற்றி jw.org-ல் படிக்கும்போது, அவர்களுடைய சூழ்நிலையில் நான் இருந்தால் எனக்கு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்வேன். நான் சிறையில் இருந்தால், என் மனைவியைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பேன்; அவளுக்குத் தேவையானதெல்லாம் கிடைக்க ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா என்று யோசிப்பேன். இப்படிக் கற்பனை செய்வதால், சிறையில் இருக்கிற கல்யாணமான சகோதரர்களுக்கு எப்படி இருக்கும் என்று என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களுக்காகக் குறிப்பாக ஜெபம் பண்ண முடிகிறது.”—எபி. 13:3, அடிக்குறிப்பு.

15 சிறையில் இருக்கிற சகோதரர்களுடைய வாழ்க்கை தினம்தினம் எப்படி இருக்கும் என்று யோசித்தால், இன்னும் நிறைய விஷயங்களுக்காக நம்மால் குறிப்பாக ஜெபம் செய்ய முடியும். உதாரணத்துக்கு, அதிகாரிகள் அவர்களிடம் அன்பாக நடந்துகொள்ள வேண்டும் என்றும், நிம்மதியாக யெகோவாவை வணங்க அவர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்றும் ஜெபம் செய்ய முடியும். (1 தீ. 2:1, 2) அந்தச் சகோதரருடைய சபையில் இருக்கிறவர்கள், அவருடைய விசுவாசத்தைப் பார்த்துப் பலப்பட வேண்டும் என்று வேண்டலாம். அல்லது, சத்தியத்தில் இல்லாதவர்கள் அவருடைய நல்ல நடத்தையைப் பார்த்து நல்ல செய்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டலாம். (1 பே. 2:12) மற்ற கஷ்டங்களோடு போராடிக்கொண்டு இருக்கிறவர்களைப் பற்றியும் இதே மாதிரி யோசித்துப் பார்த்து, அவர்களுக்காகவும் ஜெபம் செய்யலாம். நன்றாகக் கவனிப்பது மூலமும், பெயரைச் சொல்லி ஜெபம் செய்வதன் மூலமும், குறிப்பாக ஜெபம் செய்வதன் மூலமும் ‘ஒருவர்மீது ஒருவர் வைத்திருக்கிற அன்பில் . . . அதிகமதிகமாக வளர’ முடியும்.—1 தெ. 3:12.

எதார்த்தமாக இருங்கள்

16. ஜெபம் செய்கிற விஷயத்தில் நாம் எப்படி எதார்த்தமாக இருக்கலாம்? (மத்தேயு 6:8)

16 ஒருவருக்காக ஜெபம் செய்வதால் அவருடைய சூழ்நிலை மாறலாம் என்று ஏற்கனவே பார்த்தோம். அதேசமயத்தில், நாம் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும். ஜெபம் செய்யும்போது, யெகோவாவுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை நாம் சொல்வது இல்லை; அதேபோல், ஒரு விஷயத்தை எப்படிச் செய்ய வேண்டும் என்று நாம் அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. தன்னுடைய ஊழியர்களுக்கு என்ன தேவை என்பது, அவர்களுக்கு அல்லது நமக்குத் தெரிவதற்கு முன்பே, யெகோவாவுக்குத் தெரியும். (மத்தேயு 6:8-ஐ வாசியுங்கள்.) அப்படியிருக்கும்போது நாம் ஏன் மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்? இதுவரை பார்த்த காரணங்கள் போக இன்னொரு காரணம் என்னவென்றால், மற்றவர்கள்மேல் அக்கறை இருக்கிறவர்கள் அதைத்தான் செய்வார்கள்! மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய அன்பு நம்மைத் தூண்டுகிறது. அவரை மாதிரியே அவருடைய பிள்ளைகளும் அன்பு காட்டுவதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு பூரித்துப்போவார்!

17-18. மற்றவர்களுக்காக நாம் செய்கிற ஜெபங்கள் எப்படி இருக்கிறது என்பதை உதாரணத்தோடு விளக்குங்கள்.

17 சிலசமயம், நாம் செய்யும் ஜெபங்களுக்குப் பலன் கிடைக்காததுபோல் தோன்றினாலும், சகோதர சகோதரிகள்மேல் நாம் வைத்திருக்கும் அன்பை அவை காட்டும். யெகோவா அந்த ஜெபங்களைக் கவனிக்கிறார். இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள்: ஒரு குடும்பத்தில் இரண்டு சின்ன பிள்ளைகள் இருக்கிறார்கள். ஒரு அண்ணனும் தங்கையும். அண்ணனுக்கு உடம்பு முடியாமல் போய்விடுகிறது. அப்போது அந்தத் தங்கை,“அப்பா! ஏதாவது செய்யுங்கள். அண்ணனுக்கு ரொம்ப முடியவில்லை!” என்று அப்பாவிடம் கெஞ்சிக் கேட்கிறாள். தன் மகனைக் குணப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ அதை ஏற்கனவே அந்த அப்பா செய்துகொண்டுதான் இருப்பார். ஏனென்றால், அவர் தன் மகன்மேல் உயிரையே வைத்திருக்கிறார்; அவனை நன்றாகக் கவனித்துக்கொள்ள நினைக்கிறார். இருந்தாலும், அண்ணன்மேல் இருக்கிற பாசத்தினால் அந்தக் குட்டிப் பெண் கெஞ்சுவதைப் பார்க்கும்போது, அந்த அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்!

18 நாமும் இப்படிச் செய்ய வேண்டும் என்றுதான் யெகோவா எதிர்பார்க்கிறார். அதாவது, நாம் ஒருவர்மேல் ஒருவர் அக்கறை காட்ட வேண்டும்... மற்றவர்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும்... என்று எதிர்பார்க்கிறார். அப்படி ஜெபம் செய்யும்போது, சுயநலமில்லாத அன்பை மற்றவர்கள்மேல் வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்; யெகோவா அதைக் கவனிக்கிறார். (2 தெ. 1:3; எபி. 6:10) அதுமட்டுமல்ல, நாம் பார்த்த மாதிரி, சில சந்தர்ப்பங்களில் நாம் செய்கிற ஜெபங்களால் ஒருவருடைய சூழ்நிலைகூட மாறலாம். அதனால், மற்றவர்களுக்காக ஜெபம் செய்வதை நாம் எப்போதும் மறந்துவிடக் கூடாது!

உங்கள் பதில் என்ன?

  • நம்முடைய ஜெபங்கள் “மிகவும் வலிமையுள்ளது” என்று ஏன் சொல்லலாம்?

  • நாம் ஏன் சகோதர சகோதரிகளுக்காகப் பொதுப்படையாகவும் ஜெபம் செய்ய வேண்டும்?

  • தனிப்பட்ட நபர்களுக்காக எப்படிக் குறிப்பாக ஜெபம் செய்யலாம்?

பாட்டு 101 ஒற்றுமையாக உழைப்போம்

a சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b jw.org வெப்சைட்டில் டகேஷி ஷெமேசூ: யெகோவா ‘ஜெபத்தைக் கேட்கிறவர்’ என்ற வீடியோவைப் பாருங்கள்.

c “விசுவாசத்துக்காக சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய பட்டியல்” jw.org வெப்சைட்டில் இருக்கிறது. சிறையில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளின் பெயர்களை அதில் பார்க்கலாம்.

d படவிளக்கம்: சகோதர சகோதரிகள் பிரச்சினையைச் சந்தித்துக்கொண்டு இருந்தாலும் மற்றவர்களுக்காக ஜெபம் செய்கிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்