படிப்புக் கட்டுரை 42
“உத்தமமாக நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்”
“உத்தமமாக நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள். யெகோவாவுடைய சட்டத்தின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்.”—சங். 119:1, அடிக்குறிப்பு.
பாட்டு 124 என்றும் உண்மையுள்ளோராய்
இந்தக் கட்டுரையில்...a
யெகோவாவின் உன்னத அரசாட்சிக்கு உண்மையாக இருந்ததால் சிறையில் போடப்பட்டிருந்த அல்லது தற்போது சிறையில் இருக்கிற தைரியமான நம் சகோதர சகோதரிகளில் சிலர் (பாராக்கள் 1-2)
1-2. (அ) சில அரசாங்கங்கள் யெகோவாவின் மக்களுக்கு எதிராக என்ன செய்திருக்கின்றன, ஆனாலும் யெகோவாவின் மக்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள்? (ஆ) துன்புறுத்தப்படும்போதும் நாம் ஏன் சந்தோஷமாக இருக்கலாம்? (அட்டைப் படத்தைப் பார்த்தும் பதில் சொல்லுங்கள்.)
இப்போது 30-க்கும் அதிகமான நாடுகளில், அரசாங்கம் நம் வேலைக்குக் கட்டுப்பாடுகளை அல்லது தடைகளைப் போட்டிருக்கிறது. சில அதிகாரிகள் நம் சகோதர சகோதரிகளை ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். நம் சகோதர சகோதரிகள் என்ன தப்பு செய்தார்கள்? யெகோவாவைப் பொறுத்தவரை, எந்தத் தப்புமே செய்யவில்லை. பைபிளைப் படிப்பது, ஊழியம் செய்வது, கூட்டங்களில் கலந்துகொள்வது... இதையெல்லாம்தான் அவர்கள் செய்தார்கள். அதுமட்டுமல்ல, அரசியல் விஷயங்களில் நடுநிலையோடு இருந்திருக்கிறார்கள். எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும், தங்கள் உத்தமத்தைb விட்டுக்கொடுக்காமல் விசுவாசத்தில் உறுதியாக இருந்திருக்கிறார்கள். இதை நினைத்து அவர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள்!
2 தைரியமான இந்த யெகோவாவின் சாட்சிகளில் சிலருடைய ஃபோட்டோக்களை நீங்கள் பார்த்திருக்கலாம், அவர்களுடைய சிரித்த முகத்தையும் கவனித்திருக்கலாம். அவர்கள் ஏன் அவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள், தெரியுமா? அவர்கள் உத்தமமாக இருப்பதைப் பார்த்து யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார் என்று அவர்களுக்குத் தெரியும். (சங். 15:1, 2, அடிக்குறிப்பு) “நீதியாக நடப்பதால் துன்புறுத்தப்படுகிறவர்கள் சந்தோஷமானவர்கள். . . . மகிழ்ச்சியில் துள்ளிக் குதியுங்கள், ஏனென்றால் பரலோகத்தில் உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும்” என்று இயேசு சொன்னார்.—மத். 5:10-12.
நமக்கு ஒரு முன்மாதிரி
இன்று நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு பேதுருவும் யோவானும் நல்ல முன்மாதிரி வைத்திருக்கிறார்கள் (பாராக்கள் 3-4)
3. அப்போஸ்தலர் 4:19, 20-ன்படி, துன்புறுத்தப்பட்டபோது அப்போஸ்தலர்கள் எப்படி நடந்துகொண்டார்கள், ஏன்?
3 இன்று நம் சகோதர சகோதரிகள் துன்புறுத்தப்படுவது போலத்தான் முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்த அப்போஸ்தலர்களும் துன்புறுத்தப்பட்டார்கள். யூத உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள், “இயேசுவின் பெயரில் பேசுவதை நிறுத்தும்படி” திரும்பத் திரும்ப அவர்களுக்கு ‘கட்டளையிட்டார்கள்.’ (அப். 4:18; 5:27, 28, 40) அப்போது, அப்போஸ்தலர்கள் என்ன செய்தார்கள்? (அப்போஸ்தலர் 4:19, 20-ஐ வாசியுங்கள்.) “மக்களிடம் பிரசங்கிக்க வேண்டும் என்றும், முழுமையாகச் சாட்சி கொடுக்க வேண்டும் என்றும்” தங்களுக்குக் கட்டளை கொடுத்திருந்தவர் அந்த நீதிபதிகளைவிட உயர்ந்த அதிகாரத்தில் இருந்தவர் என்பது அவர்களுக்குத் தெரிந்திருந்தது. (அப். 10:42) அதனால், அந்த நீதிபதிகளுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்குத்தான் கீழ்ப்படிவோம் என்று பேதுருவும் யோவானும் எல்லா அப்போஸ்தலர்களின் சார்பாகவும் தைரியமாகச் சொன்னார்கள். இயேசுவைப் பற்றிப் பேசுவதை நிறுத்த மாட்டோம் என்றும் தெளிவாகச் சொன்னார்கள். அவர்கள் அந்த நீதிபதிகளைப் பார்த்து, ‘கடவுளோட கட்டளைகளவிட உங்க கட்டளைகள்தான் முக்கியம்னு சொல்ற அளவுக்கு நீங்க துணிஞ்சிட்டீங்களா?’ என்று கேட்டதுபோல் அது இருந்தது.
4. அப்போஸ்தலர் 5:27-29-ன்படி, உண்மைக் கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் அப்போஸ்தலர்கள் என்ன முன்மாதிரியை வைத்தார்கள், நாம் எப்படி அவர்களைப் பின்பற்றலாம்?
4 அப்போஸ்தலர்கள் வைத்த நல்ல முன்மாதிரியைத்தான் இன்றுவரை உண்மைக் கிறிஸ்தவர்கள் பின்பற்றிவந்திருக்கிறார்கள், அதாவது, ‘மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிந்திருக்கிறார்கள்.’ (அப்போஸ்தலர் 5:27-29-ஐ வாசியுங்கள்.) அப்போஸ்தலர்கள் தங்களுடைய உத்தமத்தை விட்டுக்கொடுக்காததால் அடிக்கப்பட்டார்கள். ஆனாலும், “[இயேசுவின்] பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்து . . . சந்தோஷமாக” அந்த யூத உயர் நீதிமன்றத்தைவிட்டுப் போய், தொடர்ந்து பிரசங்கித்தார்கள்!—அப். 5:40-42.
5. என்ன கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும்?
5 அப்போஸ்தலர்கள் வைத்த முன்மாதிரியைப் பற்றி யோசிக்கும்போது நம் மனதில் சில கேள்விகள் வரலாம். நாம் ஏற்கெனவே பார்த்தபடி, அப்போஸ்தலர்கள் மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிடக் கடவுளுக்குத்தான் கீழ்ப்படிந்தார்கள். அதேசமயத்தில், ‘அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு எல்லாரும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்’ என்று பைபிள் சொல்லும் கட்டளைக்கும் கீழ்ப்படிந்தார்கள். (ரோ. 13:1) இந்த இரண்டையும் அவர்களால் எப்படிச் செய்ய முடிந்தது? அப்போஸ்தலன் பவுல் சொன்னது போல, நாம் எப்படி ‘அரசாங்கங்களுக்கும் அதிகாரிகளுக்கும் . . . கீழ்ப்படிகிற’ அதேசமயத்தில் நம்முடைய ராஜாதி ராஜாவான யெகோவாவுக்கும் உத்தமமாக இருக்க முடியும்?—தீத். 3:1.
‘உயர் அதிகாரம்’
6. (அ) ரோமர் 13:1-ல் ‘உயர் அதிகாரம்’ என்று சொல்லப்பட்டிருப்பது யாரைக் குறிக்கிறது, நாம் என்ன செய்ய வேண்டுமென்று கடவுள் சொல்லியிருக்கிறார்? (ஆ) இன்று இருக்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் எந்தளவு அதிகாரம் இருக்கிறது?
6 ரோமர் 13:1-ஐயும் அதன் அடிக்குறிப்பையும் வாசியுங்கள். இந்த வசனத்தில், ‘உயர் அதிகாரம்’ என்று சொல்லப்பட்டிருப்பது, மக்கள்மேல் அதிகாரம் செலுத்தும் மனித ஆட்சியாளர்களைக் குறிக்கிறது. இப்படிப்பட்ட அதிகாரிகளுக்குக் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிய வேண்டும். ஏனென்றால், அவர்கள் சட்டம்-ஒழுங்கைக் காக்கிறார்கள், சிலசமயம் யெகோவாவின் மக்களுக்கு ஆதரவாகவும் நிற்கிறார்கள். (வெளி. 12:16) அதனால்தான், நாம் அவர்களுக்கு வரி கொடுக்க வேண்டும்... பணம் கட்ட வேண்டும்... அவர்களுக்குப் பயப்பட வேண்டும்... மதிப்புக் கொடுக்க வேண்டும்... என்றெல்லாம் கடவுள் சொல்லியிருக்கிறார். (ரோ. 13:7) ஆனால், யெகோவா அனுமதித்திருப்பதால் மட்டும்தான் அந்த அரசாங்கங்களுக்கு அதிகாரம் இருக்கிறது. ரோம ஆளுநரான பொந்தியு பிலாத்து விசாரித்தபோது இயேசு இதைத் தெளிவாகச் சொன்னார். இயேசுவைக் கொல்லவோ காப்பாற்றவோ தனக்கு அதிகாரம் இருக்கிறது என்று பிலாத்து சொன்னபோது, “மேலே இருந்து உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்படவில்லை என்றால் எனக்கு எதிராக எதையும் செய்ய உங்களுக்கு அதிகாரம் இருக்காது” என்று இயேசு சொன்னார். (யோவா. 19:11) பிலாத்துவைப் போலவே இன்று இருக்கும் எல்லா ஆட்சியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஓரளவு அதிகாரம்தான் இருக்கிறது.
7. என்னென்ன சூழ்நிலைகளில் நாம் மனித ஆட்சியாளர்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது, அவர்கள் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?
7 கடவுளுடைய சட்டங்களை மீறச் சொல்லாத வரைக்கும் அரசாங்கங்கள் போடுகிற சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படிகிறோம். ஆனால், செய்யக் கூடாதென்று கடவுள் சொல்லியிருப்பதை அரசாங்கங்கள் செய்யச் சொல்லும்போது அல்லது செய்ய வேண்டுமென்று கடவுள் சொல்லியிருப்பதை செய்யக் கூடாதென்று அரசாங்கங்கள் சொல்லும்போது நாம் கீழ்ப்படிவது இல்லை. உதாரணத்துக்கு, ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக சண்டை போடச் சொல்லி அரசாங்கங்கள் இளைஞர்களைக் கட்டாயப்படுத்தலாம்.c அல்லது, நம்முடைய பைபிளையோ பிரசுரங்களையோ பிரசங்க வேலையையோ கூட்டங்களையோ தடை செய்யலாம். ஆட்சியாளர்கள் தங்களுடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும்போது, உதாரணத்துக்கு கிறிஸ்துவின் சீஷர்களைத் துன்புறுத்தும்போது, யெகோவாவுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டும்! ஏனென்றால், அவர் அவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்!—பிர. 5:8.
8. யெகோவாவுக்கு இருக்கும் அதிகாரத்துக்கும் மனித அரசாங்கங்களுக்கு இருக்கும் அதிகாரத்துக்கும் என்ன வித்தியாசம்?
8 மனித அரசாங்கங்களைப் பற்றி பைபிள் சொல்லும்போது, “உன்னத அதிகாரம்” என்று சொல்லாமல் “உயர் அதிகாரம்” என்றுதான் சொல்கிறது. ஏனென்றால், கடவுளுக்கு மட்டும்தான் உன்னத அதிகாரம் இருக்கிறது, அதாவது எல்லா அதிகாரமும் இருக்கிறது. அதனால்தான், யெகோவாவை ‘மகா உன்னதமானவர்’ என்று பைபிள் நான்கு தடவை சொல்கிறது.—தானி. 7:18, 22, 25, 27.
‘மகா உன்னதமானவர்’
9. தானியேல் தீர்க்கதரிசி எதையெல்லாம் தரிசனங்களில் பார்த்தார்?
9 தானியேல் தீர்க்கதரிசி சில தரிசனங்களைப் பார்த்தார். எல்லா அதிகாரத்துக்கும் மேலான உன்னத அதிகாரம் யெகோவாவுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை அந்தத் தரிசனங்கள் தெளிவாகக் காட்டின. முதலில் தானியேல் நான்கு பெரிய மிருகங்களைப் பார்த்தார். அவை உலக வல்லரசுகளுக்கு அடையாளமாக இருந்தன. அதாவது, அன்று இருந்த பாபிலோன், மேதிய-பெர்சியா, கிரேக்கு, ரோம் ஆகிய வல்லரசுகளுக்கும், இன்று இருக்கும் ஆங்கிலோ-அமெரிக்க வல்லரசுக்கும் அடையாளமாக இருந்தன. (தானி. 7:1-3, 17) அடுத்ததாக, பரலோக நீதிமன்றத்தில் யெகோவா தன் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதை தானியேல் பார்த்தார். (தானி. 7:9, 10) அதன் பிறகு தானியேல் பார்த்த விஷயம், இன்று இருக்கும் ஆட்சியாளர்களுக்கு ஓர் எச்சரிப்பாக இருக்கிறது!
10. தானியேல் 7:13, 14, 27-ன்படி, எல்லா அதிகாரத்தையும் யெகோவா யாரிடம் கொடுக்கிறார், இதிலிருந்து அவரைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்?
10 தானியேல் 7:13, 14, 27-ஐ வாசியுங்கள். கடவுள் மனித அரசாங்கங்களிடமிருந்து எல்லா அதிகாரத்தையும் எடுத்து, இன்னுமதிக தகுதியும் பலமும் பெற்ற மற்றவர்களிடம் கொடுக்கிறார். யாரிடம்? ‘மனிதகுமாரனைப் போன்ற ஒருவரிடமும்’ (அதாவது இயேசு கிறிஸ்துவிடமும்), ‘மகா உன்னதமானவருடைய பரிசுத்தவான்களிடமும்’ (அதாவது “சதா காலத்துக்கும்” ஆட்சி செய்யப்போகும் 1,44,000 பேரிடமும்) கொடுக்கிறார். (தானி. 7:18) இதைச் செய்ய யெகோவாவுக்கு மட்டும்தான் அதிகாரம் இருக்கிறது. அப்படியென்றால், அவர்தான் ‘மகா உன்னதமானவர்’ என்பதில் சந்தேகமே இல்லை!
11. யெகோவாவுக்குத்தான் உன்னத அதிகாரம் இருக்கிறது என்பதை தானியேல் எழுதிய வேறென்ன விஷயங்கள் காட்டுகின்றன?
11 தரிசனத்தில் தானியேல் பார்த்த விஷயம், ஏற்கெனவே அவர் சொன்ன விஷயங்களோடு ஒத்துப்போகிறது. “பரலோகத்தின் கடவுளை” பற்றி அவர் சொன்னபோது, “ராஜாக்களை நீக்குபவரும் நியமிப்பவரும் அவர்தான்” என்று சொன்னார். அதோடு, “உன்னதமான கடவுள்தான் மனிதர்களுடைய ராஜ்யத்துக்கெல்லாம் ராஜா, . . . தனக்கு விருப்பமானவனிடம் ஆட்சியைக் கொடுக்கிறார்” என்றும் சொன்னார். (தானி. 2:19-21; 4:17) யெகோவா எப்போதாவது ராஜாக்களை நீக்கியிருக்கிறாரா அல்லது நியமித்திருக்கிறாரா? ஆம், அதில் சந்தேகமே இல்லை!
யெகோவா பெல்ஷாத்சாரிடமிருந்து ஆட்சியைப் பிடுங்கி மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் கொடுத்தார் (பாராக்கள் 12)
12. கடந்தகாலங்களில் யெகோவா எப்படி ராஜாக்களின் ஆட்சியைக் கவிழ்த்தார் என்பதற்கு ஓர் உதாரணம் சொல்லுங்கள். (படத்தைப் பாருங்கள்.)
12 எல்லா ‘உயர் அதிகாரத்துக்கும்’ மேலான உன்னத அதிகாரம் தனக்குத்தான் இருக்கிறது என்பதை யெகோவா பல தடவை தெளிவாகக் காட்டியிருக்கிறார். மூன்று உதாரணங்களை இப்போது பார்க்கலாம். எகிப்தின் ராஜாவான பார்வோன் யெகோவாவின் மக்களை அடிமைகளாகப் பிடித்துவைத்துக்கொண்டு, அவர்களை விடுதலை செய்ய முடியாதென்று திரும்பத் திரும்பப் பிடிவாதமாகச் சொன்னான். ஆனால் யெகோவா அவர்களை விடுதலை செய்தார், பார்வோனையும் செங்கடலில் சமாதியாக்கிவிட்டார்! (யாத். 14:26-28; சங். 136:15) பாபிலோனின் ராஜா பெல்ஷாத்சார் ஒரு பெரிய விருந்து வைத்து, ‘பரலோகத்தின் எஜமானுக்கு மேலாகத் தன்னை உயர்த்தினான்.’ யெகோவாவைப் புகழ்வதற்குப் பதிலாக ‘வெள்ளியாலும் தங்கத்தாலும் . . . செய்த தெய்வங்களைப் புகழ்ந்தான்.’ (தானி. 5:22, 23) ஆனால், அவனுடைய அகங்காரத்தை யெகோவா அடக்கினார். “அன்றைக்கு ராத்திரியே” பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான்! அவனுடைய ராஜ்யத்தை மேதியர்களுக்கும் பெர்சியர்களுக்கும் யெகோவா கொடுத்தார். (தானி. 5:28, 30, 31) பாலஸ்தீனாவை ஆட்சி செய்த முதலாம் ஏரோது அகிரிப்பா, அப்போஸ்தலன் யாக்கோபைக் கொன்றான். அப்போஸ்தலன் பேதுருவையும் தீர்த்துக்கட்டுவதற்காக அவரைச் சிறையில் அடைத்தான். ஆனால், அவனுடைய சதித்திட்டத்தை யெகோவா தவிடுபொடியாக்கிவிட்டார்! “யெகோவாவின் தூதர் அவனைத் தாக்கினார்,” அவன் புழுபுழுத்துச் செத்துப்போனான்.—அப். 12:1-5, 21-23.
13. உலக ஆட்சியாளர்கள் எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் சரி, யெகோவா அவர்களை ஒழித்துக்கட்டிவிடுவார் என்பதற்கு ஓர் உதாரணம் கொடுங்கள்.
13 உலக ஆட்சியாளர்கள் ஒன்றுசேர்ந்து எவ்வளவு பெரிய கூட்டணி அமைத்தாலும் சரி, யெகோவாவின் உன்னத அதிகாரத்துக்குமுன் அவர்கள் ஒன்றுமே இல்லை! இதையும் யெகோவா நிரூபித்துக் காட்டியிருக்கிறார். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்களுக்கு எதிராக 31 கானானிய ராஜாக்கள் ஒன்றுதிரண்டு வந்தபோது யெகோவா இஸ்ரவேலர்களுக்காகப் போர் செய்தார். அந்த ராஜாக்கள் எல்லாரையும் தோற்கடிக்கவும், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தின் பெரிய பெரிய பகுதிகளைக் கைப்பற்றவும் இஸ்ரவேலர்களுக்கு உதவினார். (யோசு. 11:4-6, 20; 12:1, 7, 24) அதேபோல், சீரியாவின் ராஜா பெனாதாத் தன்னோடு 32 ராஜாக்களைக் கூட்டிக்கொண்டு இஸ்ரவேலர்களுக்கு எதிராகப் படைதிரண்டு வந்தபோது, யெகோவா அவர்களை ஒரேயடியாக ஒழித்துக்கட்டினார்!—1 ரா. 20:1, 26-29.
14-15. (அ) யெகோவாவின் உன்னத அரசாட்சியைப் பற்றி நேபுகாத்நேச்சார் ராஜாவும் தரியு ராஜாவும் என்ன சொன்னார்கள்? (ஆ) யெகோவாவைப் பற்றியும் அவருடைய தேசத்தைப் பற்றியும் சங்கீதக்காரன் என்ன சொன்னார்?
14 தான் மகா உன்னதமானவர் என்பதை யெகோவா திரும்பத் திரும்ப நிரூபித்திருக்கிறார். சில உதாரணங்களைப் பார்க்கலாம். யெகோவாதான் எல்லா புகழுக்கும் தகுதியானவர் என்பதை பாபிலோன் ராஜா நேபுகாத்நேச்சார் ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, தன்னுடைய ‘பேர்புகழையும் சொந்த சக்தியையும் பலத்தையும்’ பற்றிப் பெருமையடித்தான். அதனால் யெகோவா அவனைப் பைத்தியமாக்கினார். புத்தி தெளிந்த பிறகு அவன் ‘உன்னதமான கடவுளைப் போற்றிப் புகழ்ந்து,’ “[யெகோவாவின்] அரசாட்சியே என்றென்றும் நிலைத்திருக்கும்” என்றும், ‘ஒருவராலும் அவரை தடுக்க முடியாது’ என்றும் சொன்னான். (தானி. 4:30, 33-35) உத்தமமாக இருந்த தானியேலை சிங்கக் குகையிலிருந்து யெகோவா காப்பாற்றியபோது, தரியு ராஜா இப்படி அறிவித்தான்: “ஜனங்கள் தானியேலின் கடவுளுக்குப் பயந்து நடுங்க வேண்டும் என்று நான் உத்தரவு கொடுக்கிறேன். அவர்தான் உயிருள்ள கடவுள், அவர்தான் என்றென்றும் வாழ்கிறவர். அவருடைய ராஜ்யம் ஒருபோதும் அழியாது, அவருடைய உன்னத அரசாட்சி என்றென்றும் நிலைத்திருக்கும்.”—தானி. 6:7-10, 19-22, 26, 27, அடிக்குறிப்பு.
15 “தேசங்கள் செய்த சூழ்ச்சிகளை யெகோவா முறியடித்தார். ஜனங்கள் போட்ட திட்டங்களை அவர் குலைத்துப்போட்டார்” என்று சங்கீதக்காரன் சொன்னார். அதோடு, “யெகோவாவைக் கடவுளாகக் கொண்ட தேசம் சந்தோஷமானது. தன்னுடைய சொத்தாக அவர் தேர்ந்தெடுத்திருக்கிற ஜனம் சந்தோஷமானது” என்றும் சொன்னார். (சங். 33:10, 12) இதைப் படிக்கும்போதே, யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க வேண்டுமென்று நமக்குத் தோன்றுகிறது, இல்லையா?
இறுதிப் போர்
யெகோவாவின் பரலோகப் படைகளுக்குமுன் தேசங்களின் கூட்டணி வெறும் தூசுதான்! (பாராக்கள் 16-17)
16. ‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ என்ன நடக்கும் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம், ஏன்? (படத்தைப் பாருங்கள்.)
16 கடந்தகாலங்களில் யெகோவா என்னவெல்லாம் செய்தார் என்று நாம் பார்த்தோம். சீக்கிரத்தில் அவர் என்ன செய்வார் என்று நாம் எதிர்பார்க்கலாம்? தனக்கு உண்மையாக இருப்பவர்களை ‘மிகுந்த உபத்திரவத்திலிருந்து’ காப்பாற்றுவார் என்று நாம் நம்பிக்கையோடு இருக்கலாம். (மத். 24:21; தானி. 12:1) முக்கியமாக எந்தச் சமயத்தில் அவர்களை யெகோவா காப்பாற்றுவார்? மாகோகு தேசத்து கோகு, அதாவது தேசங்களின் கூட்டணி, உலகம் முழுவதும் இருக்கும் தன் மக்களை வெறித்தனமாகத் தாக்கும்போது அவர்களை அவர் காப்பாற்றுவார். ஐநா சபையைச் சேர்ந்த 193 நாடுகளும் அந்தக் கூட்டணியில் இருந்தால்கூட, மகா உன்னதமானவருக்கும் அவருடைய பரலோகப் படைகளுக்கும்முன் அவை வெறும் தூசுதான்! யெகோவா இப்படி வாக்குக் கொடுக்கிறார்: “எல்லா தேசங்களுக்கு முன்பாகவும் நான் என்னை மகிமைப்படுத்துவேன். நான் பரிசுத்தமானவர் என்று நிரூபிப்பேன். நான் யார் என்று காட்டுவேன். அப்போது, நான் யெகோவா என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”—எசே. 38:14-16, 23; சங். 46:10.
17. பூமியின் ராஜாக்களுக்கும் யெகோவாவுக்கு உத்தமமாக நடக்கிறவர்களுக்கும் என்ன எதிர்காலம் காத்திருப்பதாக பைபிள் சொல்கிறது?
17 கோகு தாக்கும்போது யெகோவா தன்னுடைய இறுதிப் போரான அர்மகெதோனை ஆரம்பிப்பார். “பூமி முழுவதுமுள்ள ராஜாக்களை” அவர் அழித்துவிடுவார். (வெளி. 16:14, 16; 19:19-21) “நேர்மையானவர்கள் மட்டும்தான் இந்தப் பூமியில் குடியிருப்பார்கள். உத்தமமாக நடக்கிறவர்கள் மட்டும்தான் அதில் தங்கியிருப்பார்கள்.”—நீதி. 2:21, அடிக்குறிப்பு.
நம் உத்தமத்தை விட்டுக்கொடுக்கவே கூடாது
18. உண்மைக் கிறிஸ்தவர்கள் பலர் என்ன செய்யத் தயாராக இருந்திருக்கிறார்கள், ஏன்? (தானியேல் 3:28)
18 பல நூற்றாண்டுகளாகவே, உண்மைக் கிறிஸ்தவர்கள் பலர் தங்களுடைய உன்னதப் பேரரசரான யெகோவாமேல் இருக்கும் அன்பினால் தங்களுடைய சுதந்திரத்தையும் உயிரையும்கூடத் தியாகம் செய்யத் தயாராக இருந்திருக்கிறார்கள். யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க வேண்டும் என்பதில் அவர்கள் ரொம்ப உறுதியாக இருக்கிறார்கள். நெருப்புச் சூளையிலிருந்து காப்பாற்றப்பட்ட மூன்று எபிரெய வாலிபர்களைப் போலவே இவர்களும் உறுதியாக இருக்கிறார்கள்.—தானியேல் 3:28-ஐ வாசியுங்கள்.
19. எதன் அடிப்படையில் யெகோவா தன் மக்களை நியாயந்தீர்ப்பார், அதனால் இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
19 கடவுளுக்கு உத்தமமாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி தாவீது இப்படி எழுதினார்: “யெகோவா மக்களுக்குத் தீர்ப்பு கொடுப்பார். யெகோவாவே, என்னுடைய நீதிக்கும் உத்தமத்துக்கும் தகுந்தபடி எனக்குத் தீர்ப்பு கொடுங்கள்.” (சங். 7:8) இன்னொரு சங்கீதத்தில், “என்னுடைய உத்தமமும் நேர்மையும் என்னைப் பாதுகாக்கட்டும்” என்று தாவீது எழுதினார். (சங். 25:21) என்ன நடந்தாலும் சரி, நம் உத்தமத்தை விட்டுக்கொடுக்காமல் எப்போதுமே யெகோவாவுக்கு உண்மையாக வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை! அப்படி வாழும்போது, சங்கீதக்காரனைப் போலவே நாமும், “உத்தமமாக நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள். யெகோவாவுடைய சட்டத்தின்படி நடக்கிறவர்கள் சந்தோஷமானவர்கள்” என்று அனுபவப்பூர்வமாகச் சொல்வோம்!—சங். 119:1, அடிக்குறிப்பு.
பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!
a உயர் அதிகாரத்துக்கு, அதாவது உலகத்தில் இருக்கும் அரசாங்கங்களுக்கு, நாம் கீழ்ப்படிய வேண்டுமென்று பைபிள் சொல்கிறது. ஆனால், சில அரசாங்கங்கள் யெகோவாவையும் அவருடைய ஊழியர்களையும் கடுமையாக எதிர்க்கின்றன. அப்படியிருக்கும்போது, நாம் எப்படி மனித அரசாங்கங்களுக்கும் கீழ்ப்படிந்து, அதேசமயத்தில் யெகோவாவுக்கும் உத்தமமாக இருக்க முடியும்?
b வார்த்தையின் விளக்கம்: யெகோவாவுக்கு உத்தமமாக இருப்பது என்றால், சோதனைகள் வந்தாலும் அவருக்கும் அவருடைய உன்னத அரசாட்சிக்கும் உண்மையாக இருப்பதைக் குறிக்கிறது.
c “அன்று இஸ்ரவேலர்கள் போர் செய்தார்கள்—நாம் ஏன் செய்வதில்லை?” என்ற கட்டுரையை இந்த இதழில் பாருங்கள்.