படிப்புக் கட்டுரை 23
“‘யா’வின் ஜுவாலை” அணையாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்
“அன்பின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிகிற தீ ஜுவாலை, அது ‘யா’வின் ஜுவாலை.”—உன். 8:6.
பாட்டு 131 ‘தேவன் இணைத்த பந்தம்’
இந்தக் கட்டுரையில்...a
1. உண்மையான அன்பை பைபிள் எப்படி வர்ணிக்கிறது?
“அன்பின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிகிற தீ ஜுவாலை, அது ‘யா’வின் ஜுவாலை. பாய்ந்து வரும் வெள்ளம்கூட அன்பின் ஜுவாலையை அணைக்க முடியாது. ஓடிவரும் நதிகள்கூட அன்பை அடித்துச் செல்ல முடியாது.”b (உன். 8:6, 7) உண்மையான அன்பு எவ்வளவு அழகாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது, இல்லையா? இந்த வார்த்தைகள் தம்பதிகளுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது: உங்களால் உண்மையான அன்பை நிச்சயம் காட்ட முடியும்!
2. அன்பு அணையாமல் இருப்பதற்குக் கணவனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்?
2 கணவனும் மனைவியும் உண்மையான அன்பைக் காலமெல்லாம் காட்டுவார்களா மாட்டார்களா என்பது அவர்களுடைய கையில்தான் இருக்கிறது. உதாரணத்துக்கு, நெருப்பு அணையாமல் எரிந்துகொண்டே இருக்க வேண்டுமென்றால், அதற்கு நாம் விறகைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் அது சீக்கிரத்தில் அணைந்துவிடும். அதேபோல், கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் அன்பு அழியாமல் இருக்க வேண்டுமென்றால், அவர்களுடைய உறவுக்கு அவர்கள் உரம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். சிலசமயம், அந்த அன்பு தணிவதுபோல் அவர்களுக்குத் தெரியலாம். அதுவும், அவர்களுக்குப் பணப் பிரச்சினையோ... உடல்நலப் பிரச்சினையோ... பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவதில் ஏதாவது பிரச்சினையோ... இருந்தால் சொல்லவே வேண்டாம்! உங்களுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால், உங்களுடைய கல்யாண வாழ்க்கையில் “‘யா’வின் ஜுவாலை” அணையாமல் இருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்? இந்தக் கட்டுரையில், உங்கள் உறவுக்கு உரம் சேர்ப்பதற்கும்... உங்கள் மணவாழ்வு மணம் வீசுவதற்கும்... நீங்கள் செய்ய வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.c
யெகோவாவோடு உங்களுக்கு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்திக்கொண்டே இருங்கள்
யோசேப்பையும் மரியாளையும் போலவே கணவனும் மனைவியும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்திருக்க வேண்டும் (பாரா 3)
3. யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வது, அன்பு தணியாதபடி பார்த்துக்கொள்ள கணவனுக்கும் மனைவிக்கும் எப்படி உதவும்? (பிரசங்கி 4:12) (படத்தையும் பாருங்கள்.)
3 “‘யா’வின் ஜுவாலை” அணையாதபடி பார்த்துக்கொள்ள, கணவனும் மனைவியும் யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்ள உழைக்க வேண்டும். ஆனால், யெகோவாவோடு இருக்கும் பந்தம் எப்படி அவர்களுடைய திருமண வாழ்க்கைக்கு உதவி செய்யும்? யெகோவாவோடு இருக்கும் நட்பை அவர்கள் பெரிதாக நினைக்கும்போது, அவருடைய அறிவுரைகளை உடனடியாகக் கேட்டு நடப்பார்கள். அதனால், அன்பைத் தணிய வைக்கும் பிரச்சினைகளை அவர்களால் தவிர்க்கவும் சமாளிக்கவும் முடியும். (பிரசங்கி 4:12-ஐ வாசியுங்கள்.) யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்திருப்பவர்கள் அவரைப் போலவே நடந்துகொள்ளவும்... அவருடைய குணங்களை வளர்த்துக்கொள்ளவும்... முயற்சி எடுக்கிறார்கள். உதாரணத்துக்கு, கரிசனையோடும் பொறுமையோடும் நடந்துகொள்கிறார்கள், மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்கிறார்கள். (எபே. 4:32–5:1) கணவனும் மனைவியும் இப்படிப்பட்ட குணங்களைக் காட்டும்போது, ஒருவரை ஒருவர் சுலபமாக நேசிக்க முடியும். லீனா என்ற சகோதரிக்குக் கல்யாணமாகி 25 வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. அவர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவோடு நெருக்கமாக இருக்கும் ஒருவர்மேல் அன்பும் மரியாதையும் காட்டுவது ஈஸி.”
4. வருங்கால மேசியாவை வளர்ப்பதற்காக யோசேப்பையும் மரியாளையும் யெகோவா ஏன் தேர்ந்தெடுத்தார்?
4 இப்போது ஒரு பைபிள் உதாரணத்தைப் பார்க்கலாம். வருங்கால மேசியாவை வளர்ப்பதற்காக ஒரு பெற்றோரை யெகோவா தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அப்போது, தாவீதின் வம்சத்தில் நிறைய பேர் இருந்தாலும் அவர்களில் யோசேப்பையும் மரியாளையும்தான் யெகோவா தேர்ந்தெடுத்தார். ஏன் தெரியுமா? ஏனென்றால், அவர்கள் இரண்டு பேருமே யெகோவாவோடு நெருக்கமான பந்தத்தை வைத்திருந்தார்கள். அதுமட்டுமல்ல, அவர்களுடைய திருமண வாழ்க்கையில் எப்போதுமே தனக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள் என்பது யெகோவாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. கணவன் மனைவிகளே, யோசேப்பிடமிருந்தும் மரியாளிடமிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5. யோசேப்பிடமிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
5 யோசேப்பு யெகோவாவின் பேச்சுக்கு உடனே கீழ்ப்படிந்து நடந்தார். அதனால், ஒரு நல்ல கணவராக இருக்க அவரால் முடிந்தது. குறைந்தது மூன்று சந்தர்ப்பங்களிலாவது, யெகோவா அவரிடம் சில விஷயங்களைச் செய்யும்படி சொன்னார். அந்த ஒவ்வொரு தடவையும் யோசேப்பு பெரிய மாற்றத்தைச் செய்ய வேண்டியிருந்தாலும் உடனடியாகக் கீழ்ப்படிந்தார். (மத். 1:20, 24; 2:13-15, 19-21) இப்படி, அவர் கடவுளுடைய பேச்சைக் கேட்டதால் மரியாளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்... மரியாளுக்கு ஆதரவாக இருக்கவும்... மரியாளுக்குத் தேவையானதைச் செய்யவும்... முடிந்தது. இப்படிப்பட்ட கணவர்மேல் அன்பும் மரியாதையும் காட்டுவது மரியாளுக்கு எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும், இல்லையா? கணவர்களே, பைபிள் சொல்லும் ஆலோசனைகளின்படி உங்கள் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டால் நீங்களும் யோசேப்பைப் போலவே நடந்துகொள்ளலாம்.d அந்த ஆலோசனைகளின்படி நடப்பதற்கு நீங்கள் ஒருவேளை சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யும்போது, உங்கள் மனைவிமேல் இருக்கும் அன்பைக் காட்ட முடியும், உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்தவும் முடியும். வனுவாட்டு தீவில் இருக்கும் ஒரு சகோதரிக்குக் கல்யாணமாகி 20 வருஷத்துக்கும் மேல் ஆகிறது. அவர் இப்படிச் சொல்கிறார்: “என் கணவர் ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன்பு அதைப் பற்றி யெகோவா என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து அதன்படி செய்வார். அதனால், அவர்மேல் நான் வைத்திருக்கும் மரியாதை இன்னும் அதிகமாகிறது. அவர் ஒரு முடிவை எடுத்தால் அது சரியாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. என்னால் பயப்படாமலும் கவலைப்படாமலும் இருக்க முடிகிறது.”
6. மனைவிகள் மரியாளிடமிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?
6 தன் கணவருக்கு மட்டும் யெகோவாவோடு நெருக்கமான பந்தம் இருந்தால் போதும் என்று மரியாள் நினைக்கவில்லை. தனக்கும் யெகோவாவோடு நெருக்கமான பந்தம் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அவர் கடவுளுடைய வார்த்தையை நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார்.e அதை ஆழமாக யோசித்துப் பார்க்க நேரம் ஒதுக்கினார். (லூக். 2:19, 51) யெகோவாவோடு மரியாள் நெருக்கமான பந்தத்தை வைத்திருந்ததால்தான், அவரால் யோசேப்புக்கு ஒரு நல்ல மனைவியாக இருக்க முடிந்தது. இன்றும் நிறைய மனைவிகள் மரியாளைப் போலவே நடந்துகொள்ள முயற்சி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, ஏமிக்கோ என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “கல்யாணம் ஆவதற்கு முன்பு, எனக்கென்று ஒரு அட்டவணையை வைத்துக்கொண்டு பைபிள் படிப்பது, ஜெபம் செய்வது போன்ற விஷயங்களைச் செய்துவந்தேன். ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு என் கணவர்தான் எங்களுக்காக ஜெபம் செய்வார், வணக்க விஷயங்களில் அவர்தான் தலைமை தாங்குவார். அதனால், இதுபோன்ற விஷயங்களுக்கு என் கணவரையே எதிர்பார்ப்பது பழக்கமாகிவிட்டது. அதன் பிறகு, யெகோவாவோடு எனக்கு இருக்கும் பந்தத்தை நான்தான் பலப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று புரிந்தது. அதனால், இப்போதெல்லாம் நானும் தனியாக ஜெபம் செய்கிறேன், பைபிளைப் படிக்கிறேன், படித்ததை ஆழமாக யோசிக்கிறேன். இப்படி, என் கடவுளோடு இருப்பதற்காக தனியாகவும் நேரம் செலவு செய்கிறேன்.” (கலா. 6:5) மனைவிகளே, யெகோவாவோடு இருக்கும் பந்தத்தை நீங்கள் பலப்படுத்திக்கொண்டே இருந்தால், உங்கள் கணவர் இன்னும் அதிகமாக உங்களை நேசிப்பார், உங்களைப் புகழ்வார்!—நீதி. 31:30.
7. ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வணங்கும் விஷயத்தில் யோசேப்பிடமிருந்தும் மரியாளிடமிருந்தும் தம்பதிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
7 யோசேப்பும் மரியாளும் ஒன்றாகச் சேர்ந்தும் யெகோவாவோடு நெருக்கமாக இருப்பதற்கு முயற்சி எடுத்தார்கள். குடும்பமாகச் சேர்ந்து யெகோவாவை வணங்குவது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் நன்றாகப் புரிந்து வைத்திருந்தார்கள். (லூக். 2:22-24, 41; 4:16) ஆனால், அதைச் செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். அதுவும், அவர்களுடைய குடும்பம் பெரிதாகப் பெரிதாக அது இன்னும் கஷ்டமாக இருந்திருக்கலாம். ஆனாலும், அதை அவர்கள் செய்தார்கள். இன்று இருக்கும் தம்பதிகளுக்கு அவர்கள் எவ்வளவு ஒரு நல்ல உதாரணம்! யோசேப்பையும் மரியாளையும் போலவே உங்களுக்கும் பிள்ளைகள் இருந்தால், கூட்டங்களுக்குப் போவதும் குடும்ப வழிபாடு செய்வதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். உங்கள் துணையோடு சேர்ந்து பைபிளைப் படிப்பதும் ஜெபம் செய்வதும் அதைவிடக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், யெகோவாவை ஒன்றாகச் சேர்ந்து வணங்க நீங்கள் முயற்சி எடுக்கும்போது யெகோவாவிடம் நெருங்கிப்போவீர்கள், உங்கள் துணையிடமும் நெருக்கமாவீர்கள். அதனால், யெகோவாவை வணங்குவதை உங்கள் வாழ்க்கையில் முதலிடத்தில் வையுங்கள்.
8. கணவனுக்கும் மனைவிக்கும் ஒத்துப்போகவில்லை என்றாலும் குடும்ப வழிபாட்டை சந்தோஷமாக்குவதற்கு அவர்கள் என்ன செய்யலாம்?
8 ஆனால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒத்துப்போகவில்லையா? ஒன்றாகச் சேர்ந்து குடும்ப வழிபாடு செய்வதை நினைத்தாலே வெறுப்பாக இருக்கிறதா? அப்படியென்றால், என்ன விஷயத்தைப் பற்றிப் பேச உங்கள் இரண்டு பேருக்குமே பிடித்திருக்கிறதோ அதைப் பற்றிக் கொஞ்ச நேரம் பேசுங்கள். இப்படிச் செய்யச் செய்ய, நீங்கள் இரண்டு பேரும் நெருக்கமாவீர்கள், ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவை வணங்க வேண்டுமென்ற ஆசையும் உங்களுக்கு அதிகமாகும்.
ஒன்றுசேர்ந்து நேரம் செலவிடுங்கள்
9. கணவனும் மனைவியும் ஏன் ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட வேண்டும்?
9 கணவன் மனைவிகளே, உங்களுக்கு இடையில் இருக்கும் அன்பு அணையாமல் இருப்பதற்கு நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுவதும் முக்கியம். அப்படிச் செய்யும்போது, மனதளவில்கூட ஒருவரைவிட்டு ஒருவர் விலகிப் போக மாட்டீர்கள். (ஆதி. 2:24) ரஸ்லன்-லீலியா தம்பதிக்குக் கல்யாணமாகி 15 வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. கல்யாணமான புதிதில் அவர்கள் ஒரு விஷயத்தைப் புரிந்துகொண்டார்கள். அதைப் பற்றி சகோதரி லீலியா இப்படிச் சொல்கிறார்: “ஆபீசுக்குப் போவது, வீட்டு வேலைகள் செய்வது, பிள்ளைகளைப் பார்த்துக்கொள்வது என்று நாங்கள் ரொம்ப பிஸியாக இருந்தோம். அதனால், நாங்கள் நினைத்த அளவுக்கு எங்களால் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிட முடியாது என்று தெரிந்தது. ஆனால் இப்படியே போனால், எங்களுக்குள் இருக்கும் நெருக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் காணாமல் போய்விடும் என்று புரிந்துகொண்டோம்.”
10. கணவனும் மனைவியும் எபேசியர் 5:15, 16-ல் இருக்கும் நியமத்தின்படி எப்படி நடந்துகொள்ளலாம்?
10 எவ்வளவு வேலைகள் இருந்தாலும் கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிட என்ன செய்யலாம்? அதற்காக முன்கூட்டியே திட்டம் போட வேண்டியிருக்கலாம். (எபேசியர் 5:15, 16-ஐ வாசியுங்கள்.) நைஜீரியாவில் இருக்கும் உசோண்டு என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “நான் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று திட்டம் போடும்போது, என் மனைவியோடு சேர்ந்து இருப்பதற்காகவும் நேரம் ஒதுக்குவேன். அந்த நேரத்தை வேறு எதற்கும் கொடுக்க மாட்டேன்.” (பிலி. 1:10) மால்டோவாவில் இருக்கும் ஒரு வட்டாரக் கண்காணியின் மனைவி அனஸ்டாசியா தன்னுடைய நேரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார். அதைப் பற்றிச் சொல்லும்போது, “என் கணவர் அவருடைய பொறுப்புகளைச் செய்யும்போதே நான் என்னுடைய வேலைகளைச் செய்து முடித்துவிடுவேன். அப்போதுதான், நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருப்பதற்கு நேரம் கிடைக்கும்” என்று சொல்கிறார். ஆனால், ஒன்றுசேர்ந்து நேரம் செலவிட முடியாத அளவுக்கு நீங்கள் இரண்டு பேரும் பிஸியாக இருந்தால் என்ன செய்வது?
நீங்களும் உங்கள் துணையும் ஒன்றுசேர்ந்து என்னென்ன விஷயங்களைச் செய்யலாம்? (பாராக்கள் 11-12)
11. ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதி என்னென்ன விஷயங்களையெல்லாம் சேர்ந்து செய்தார்கள்?
11 கணவன் மனைவிகளே, ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியின் உதாரணம் உங்களுக்கு உதவி செய்யும். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மத்தியில் அவர்களுக்கு ரொம்ப நல்ல பெயர் இருந்தது. (ரோ. 16:3, 4) அவர்களுடைய திருமண வாழ்க்கையைப் பற்றி பைபிள் எதுவும் பெரிதாகச் சொல்வதில்லை. ஆனால், அவர்கள் ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்தார்கள்... ஊழியம் செய்தார்கள்... மற்றவர்களுக்கு உதவி செய்தார்கள்... என்றெல்லாம் சொல்கிறது. (அப். 18:2, 3, 24-26) சொல்லப்போனால், பைபிள் அவர்களைப் பற்றிச் சொல்லும்போதெல்லாம் இரண்டு பேரையும் சேர்த்துதான் சொல்கிறது.
12. கணவனும் மனைவியும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிட என்னவெல்லாம் செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)
12 இன்று கணவன் மனைவிகள் எப்படி ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியைப் போல் நடந்துகொள்ளலாம்? உங்களுக்கும் உங்கள் துணைக்கும் என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள். அதில் சில வேலைகளை நீங்கள் தனியாகச் செய்வதற்குப் பதிலாக ஒன்றாகச் சேர்ந்து செய்ய முடியுமா? உதாரணத்துக்கு, ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் சேர்ந்து ஊழியம் செய்தார்கள். நீங்களும் அப்படிச் செய்ய அடிக்கடி நேரம் ஒதுக்குகிறீர்களா? ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் மற்ற வேலைகளையும் ஒன்றாகச் சேர்ந்து செய்தார்கள். நீங்களும் உங்கள் துணையும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்யாமல் இருக்கலாம். ஆனால், வீட்டு வேலைகளை ஒன்றாகச் சேர்ந்து செய்யலாம், இல்லையா? (பிர. 4:9) ஒரு வேலையைச் செய்ய ஒருவருக்கு ஒருவர் ஒத்தாசையாக இருக்கும்போது ஒரே டீமாக இருப்பதுபோல் உணருவீர்கள், பேசுவதற்கும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். ராபர்ட்-லின்டா தம்பதிக்குக் கல்யாணமாகி 50 வருஷத்துக்கும் மேல் ஆகிறது. ராபர்ட் இப்படிச் சொல்கிறார்: “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நாங்கள் ரொம்ப பிஸியாக இருப்பதால் பொழுதுபோக்கிற்காக ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுவது எங்களுக்குக் கஷ்டம். ஆனால், நான் பாத்திரங்களைக் கழுவும்போது என் மனைவி அதையெல்லாம் துடைத்து வைப்பாள். நான் தோட்ட வேலை செய்யும்போது அவள் எனக்கு ஒத்தாசையாக இருப்பாள். அப்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். இந்த மாதிரி விஷயங்களை ஒன்றாகச் சேர்ந்து செய்யும்போது நாங்கள் இன்னும் நெருக்கமாகிறோம். அதோடு, எங்களுக்குள் இருக்கும் அன்பும் பாசமும் அதிகமாகிக்கொண்டே போகிறது.”
13. உண்மையிலேயே அன்னியோன்னியமாக இருப்பதற்கு கணவனும் மனைவியும் என்ன செய்ய வேண்டும்?
13 கணவனும் மனைவியும் ஒன்றாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் அன்னியோன்னியமாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இதைப் பற்றி பிரேசில் நாட்டில் இருக்கும் ஒரு சகோதரி சொல்லும்போது, “ஒரே வீட்டில் இருக்கிறோம் என்பதற்காக ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுகிறோம் என்று நாம் தப்புக்கணக்குப் போட்டுவிடலாம். ஏனென்றால், இன்று நம் கவனத்தைத் திசைதிருப்புவதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதனால், என் கணவரோடு சேர்ந்து இருப்பது மட்டும் போதாது, அப்படி சேர்ந்து இருக்கும்போது என் கவனமெல்லாம் அவர்மேல்தான் இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டேன்” என்று சொல்கிறார். இந்த விஷயத்தில் ப்ரூனு-டேஸ் தம்பதி ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். சகோதரர் ப்ரூனு இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடும்போது, எந்த இடைஞ்சலும் இருக்கக் கூடாது என்பதற்காக எங்கள் ஃபோனைக்கூட எடுத்து வைத்துவிடுவோம்.”
14. ஒரு தம்பதிக்கு ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடவே பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்?
14 ஆனால், உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடவே பிடிக்கவில்லையா? ஒருவேளை, ஒருவருக்குப் பிடித்தது இன்னொருவருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். இல்லையென்றால், இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கடுப்பேத்திக்கொண்டே இருக்கலாம். அப்போது என்ன செய்வது? ஆரம்பத்தில் நாம் பார்த்த நெருப்பு உதாரணத்தை எடுத்துக்கொள்ளலாம். எடுத்தவுடனேயே அது குபுகுபுவென்று எரிய ஆரம்பித்துவிடாது. விறகுகளைப் போடப்போடத்தான் அது நன்றாக எரிய ஆரம்பிக்கும். முதலில் சின்னச் சின்ன விறகுகளைப் போடுவோம், பிறகு பெரிய பெரிய விறகுக் கட்டைகளைப் போடுவோம். அதேபோல், நீங்கள் ஏன் தினமும் உங்கள் துணையோடு கொஞ்ச நேரமாவது செலவு செய்யக் கூடாது? உங்கள் இரண்டு பேருக்குமே பிடித்த விஷயத்தை மட்டும் அப்போது செய்யுங்கள், சண்டை வருவதுபோல் எதையும் செய்துவிடாதீர்கள். (யாக். 3:18) இப்படி, சின்னதாக ஆரம்பிப்பதுகூட போகப்போக உங்களுக்கு இடையில் இருக்கும் அன்பை மறுபடியும் கொழுந்துவிட்டு எரிய வைக்கும்.
ஒருவருக்கு ஒருவர் மரியாதை காட்டுங்கள்
15. அன்பு தணியாமல் இருப்பதற்கு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவது ஏன் முக்கியம்?
15 தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் மதிப்புமரியாதை காட்டுவது ரொம்ப முக்கியம். அது ஆக்சிஜன் மாதிரி. ஆக்சிஜன் இருந்தால்தான் நெருப்பு நன்றாக எரியும். இல்லாவிட்டால் அது உடனே அணைந்துவிடும். அதேபோல், தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை காட்டினால்தான் அவர்களுக்குள் இருக்கும் அன்பு கொழுந்துவிட்டு எரியும். இல்லாவிட்டால் அது சீக்கிரத்தில் தணிந்துவிடும். அதேசமயத்தில், ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் துணைக்கு மரியாதை காட்டுவதாக நீங்கள் நினைத்தால் போதாது, நீங்கள் மரியாதை காட்டுவதை உங்கள் துணை உணர வேண்டும். ஆரட்-பென்னி தம்பதிக்குக் கல்யாணமாகி 25 வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டது. சகோதரி பென்னி இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் ஒருவருக்கு ஒருவர் மரியாதை காட்டுவதால் எங்கள் வீட்டில் அன்புக்கும் சந்தோஷத்துக்கும் பஞ்சமே இல்லை. எங்களால் மனம்விட்டுப் பேசிக்கொள்ளவும் முடிகிறது. ஏனென்றால், ஒருவருடைய கருத்துக்கு இன்னொருவர் மதிப்பு கொடுப்போம்.” அப்படியென்றால், உங்கள் துணைக்கு நீங்கள் மரியாதை காட்டுவதாக அவரே உணர வேண்டுமென்றால் நீங்கள் என்ன செய்யலாம்? ஆபிரகாம், சாராளின் உதாரணத்தைக் கவனியுங்கள்.
கிறிஸ்தவ கணவர்கள், தங்கள் மனைவி சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலம் அவளுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் (பாரா 16)
16. ஆபிரகாமின் உதாரணத்திலிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 பேதுரு 3:7) (படத்தையும் பாருங்கள்.)
16 சாராளை ஆபிரகாம் மதிப்புமரியாதையோடு நடத்தினார். சாராளின் மனதில் இருப்பதைக் கேட்டுத் தெரிந்துகொண்டார், அவளுடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்தார். ஒருசமயம், சாராள் ரொம்ப துக்கத்தில் இருந்தாள். தன்னுடைய சோகத்தையும் கோபத்தையும் ஆபிரகாமிடம் கொட்டித் தீர்த்தாள். சொல்லப்போனால், பிரச்சினைக்குக் காரணமே ஆபிரகாம்தான் என்று சொல்லிவிட்டாள். பதிலுக்கு ஆபிரகாமும் ஆத்திரத்தில் கத்தினாரா? இல்லை. சாராள் தனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் ஒரு நல்ல மனைவி என்பது ஆபிரகாமுக்குத் தெரிந்திருந்தது. அதனால், சாராள் பேசும்போது ஆபிரகாம் கவனித்துக் கேட்டார், அந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய முயற்சியும் செய்தார். (ஆதி. 16:5, 6) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? கணவர்களே, குடும்பத்துக்காக முடிவுகளை எடுக்கும் அதிகாரம் உங்களுக்குத்தான் இருக்கிறது. (1 கொ. 11:3) ஆனாலும், ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு உங்கள் மனைவியின் கருத்தைக் கேளுங்கள். அதுவும், அந்த முடிவு உங்கள் மனைவியைப் பாதிக்கும் என்றால் அப்படிக் கேட்பது ரொம்ப முக்கியம். அதுதான் ஒரு அன்பான கணவருக்கு அழகு. (1 கொ. 13:4, 5) சிலசமயம், உங்கள் மனைவி ரொம்ப கவலையாக இருக்கலாம், தன் மனதில் இருப்பதை உங்களிடம் சொல்ல ஆசைப்படலாம். அவர் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதன் மூலம் அவருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுக்கிறீர்களா? (1 பேதுரு 3:7-ஐ வாசியுங்கள்.) டிமீட்ரி-ஏன்ஜிலா தம்பதிக்குக் கல்யாணமாகி கிட்டத்தட்ட 30 வருஷங்கள் ஆகிவிட்டன. தன் கணவர் எப்படித் தன்னை மதிப்புமரியாதையோடு நடத்துகிறார் என்பதைப் பற்றி ஏன்ஜிலா இப்படிச் சொல்கிறார்: “எனக்கு மனசு சரியில்லாதபோதும் நான் மனசுவிட்டுப் பேச நினைக்கும்போதும் என் கணவர் நான் பேசுவதைக் கேட்க ரெடியாக இருப்பார். நான் உணர்ச்சிவசப்பட்டு எதையாவது பேசினால்கூட அவர் என்னிடம் பொறுமையாக நடந்துகொள்வார்.”
17. சாராளின் உதாரணத்திலிருந்து மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (1 பேதுரு 3:5, 6)
17 ஆபிரகாம் எடுத்த முடிவுகளை மனசார ஏற்றுக்கொள்வதன் மூலம் சாராள் அவர்மேல் மரியாதை காட்டினாள். (ஆதி. 12:5) ஒருசமயம், திடீரென்று விருந்தாளிகள் வந்தபோது அவர்களை உபசரிக்க வேண்டுமென்று ஆபிரகாம் முடிவு பண்ணினார். அதனால் சாராளிடம், அவள் செய்துகொண்டிருந்த வேலைகளை விட்டுவிட்டு ரொட்டி சுடச் சொன்னார், அதுவும் எக்கச்சக்கமான ரொட்டிகளைச் சுடச் சொன்னார். (ஆதி. 18:6) சாராளும் ஆபிரகாமின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்து, அவர் சொன்னதை உடனே செய்தாள். மனைவிகளே, நீங்களும் உங்கள் கணவர் எடுக்கும் முடிவுகளுக்கு ஆதரவு காட்டுவதன் மூலம் சாராளைப் போலவே நடந்துகொள்ளலாம். அப்போது, உங்களுடைய திருமண பந்தம் பலப்படும். (1 பேதுரு 3:5, 6-ஐ வாசியுங்கள்.) போன பாராவில் நாம் பார்த்த டிமீட்ரி, தன் மனைவி எப்படித் தனக்கு மரியாதை காட்டுகிறாள் என்று விளக்கினார். “நான் எடுக்கும் முடிவுகள் பிடிக்கவில்லை என்றால்கூட என் மனைவி அதற்கு ஒத்துழைப்பாள். நான் எடுக்கும் முடிவுகளால் ஏதாவது பிரச்சினை வந்தால்கூட அவள் என்னைக் குறை சொல்வதில்லை” என்று சொன்னார். நமக்கு மரியாதை காட்டும் ஒருவர்மேல் அன்பு காட்டுவது எவ்வளவு சுலபமாக இருக்கும்!
18. அன்பு தணியாமல் இருப்பதற்கு தம்பதிகள் உழைக்கும்போது அவர்களுக்கு என்ன நன்மை கிடைக்கும்?
18 கணவன் மனைவிக்கு இடையில் கொழுந்துவிட்டு எரியும் அன்பை அணைத்துவிட வேண்டும் என்பதுதான் சாத்தானின் எண்ணமே. அந்த அன்பு இல்லாமல்போய்விட்டால் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவைவிட்டுப் பிரிந்துபோய்விடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். ஆனால், உண்மையான அன்பை அணைக்கவே முடியாது! அதனால் உங்களுடைய அன்பு, உன்னதப்பாட்டில் சொல்லப்பட்டிருப்பது போல எப்போதும் கொழுந்துவிட்டு எரியும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்வில் யெகோவாவுக்கு முதலிடம் கொடுங்கள்... உங்கள் துணையோடு நேரம் செலவிடுங்கள்... அவருடைய உணர்ச்சிகளுக்கு மதிப்புக் கொடுங்கள்... அவருடைய தேவைகளைக் கவனித்துக்கொள்ளுங்கள். இப்படியெல்லாம் செய்யும்போது, உண்மையான அன்பின் பிறப்பிடமாக இருக்கிற யெகோவாவுக்குப் புகழ் சேர்ப்பீர்கள். அதோடு, உங்கள் திருமண வாழ்வில் அன்பின் ஜுவாலை என்றென்றும் கொழுந்துவிட்டு எரியும்!
பாட்டு 132 என் உயிர் நீ!
a திருமணம் என்ற பரிசை யெகோவா மனிதர்களுக்குக் கொடுத்திருக்கிறார். இந்தப் பந்தத்தில் கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் விசேஷமான விதத்தில் அன்பைக் காட்ட முடியும். ஆனால் சிலசமயங்களில், அந்த அன்பு குறைந்துபோவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்களுக்குக் கல்யாணம் ஆகியிருந்தால், உங்கள் துணைமேல் தொடர்ந்து அன்பு காட்டுவதற்கும்... சந்தோஷமான திருமண வாழ்க்கையை அனுபவிப்பதற்கும்... என்ன செய்யலாம் என்று இந்தக் கட்டுரை சொல்லும்.
b என்றுமே மாறாமலும் அழியாமலும் இருக்கும் உண்மையான அன்பு, “‘யா’வின் ஜுவாலை” என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், அப்படிப்பட்ட அன்பின் பிறப்பிடமே யெகோவாதான்.
c உங்கள் துணை யெகோவாவை வணங்காதவராக இருந்தாலும், உங்கள் திருமண பந்தத்தைப் பலப்படுத்திக்கொள்ள இந்த ஆலோசனைகள் உதவும்.—1 கொ. 7:12-14; 1 பே. 3:1, 2.
d உதாரணத்துக்கு, jw.org-லும் JW லைப்ரரியிலும் வரும் “குடும்ப ஸ்பெஷல்” என்ற தொடர் கட்டுரைகளில் இருக்கும் நடைமுறையான ஆலோசனைகளைப் பாருங்கள்.
e பிப்ரவரி 2016 காவற்கோபுரம், பக். 17, பாரா 17-ஐப் பாருங்கள்.