படிப்புக் கட்டுரை 16
பாட்டு 64 அறுவடை வேலையில் ஆனந்த நடைபோடுவோம்
ஊழியத்தை இன்னும் சந்தோஷமாக செய்யுங்கள்
“சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்.”—சங். 100:2.
என்ன கற்றுக்கொள்வோம்?
ஊழியத்தை இன்னும் சந்தோஷமாக செய்வதற்கு நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.
1. ஊழியத்தில் மற்றவர்களிடம் பேசுவதைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்? (படத்தையும் பாருங்கள்.)
நம்முடைய பரலோக அப்பா யெகோவாவை நாம் ரொம்ப நேசிக்கிறோம். அதேபோல், நம்மை சுற்றி இருக்கிறவர்களையும் நாம் நேசிக்கிறோம். அவர்களுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறோம். அதனால்தான் நாம் சந்தோஷமாக ஊழியம் செய்கிறோம். ஆனாலும் சிலருக்கு, நல்ல செய்தியை சொல்வது கஷ்டமாக இருக்கலாம். அதற்கு நிறைய காரணங்கள் இருக்கலாம். சிலர் கூச்ச சுபாவம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். ‘என்னால் நன்றாக சொல்லிக் கொடுக்க முடியாது’ என்று வேறுசிலர் நினைக்கிறார்கள். இன்னும் சிலருக்கு, முன்பின் தெரியாத ஒருவருடைய வீட்டுக்குப் போய் பேச தயக்கமாக இருக்கலாம். யாராவது கோபப்பட்டு கத்திவிடுவார்களோ என்று சிலர் பயப்படலாம். யாருடைய வம்பு-தும்புக்கும் போகக்கூடாது என்று வேறுசிலர் நினைக்கலாம். இதுபோன்ற நிறைய காரணங்கள் இருந்தாலும், இது ரொம்ப முக்கியமான வேலையாக இருப்பதால் அவர்கள் தவறாமல் ஊழியம் செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்!
நீங்கள் சந்தோஷமாக ஊழியம் செய்கிறீர்களா? (பாரா 1)
2. ஊழியத்தை உங்களால் சந்தோஷமாக செய்ய முடியவில்லை என்றாலும் நீங்கள் ஏன் சோர்ந்துபோக வேண்டியதில்லை?
2 உங்களுக்கும் அப்படித்தான் இருக்கிறதா? ஊழியத்தை உங்களால் சந்தோஷமாக செய்ய முடியவில்லையா? அப்படியென்றால், சோர்ந்துவிடாதீர்கள்! ஒருவேளை, மற்றவர்களுடைய கவனம் உங்கள்மேல் வரவேண்டாம் என்று நினைத்து நீங்கள் தயங்கலாம். இல்லையென்றால், பிரச்சினை பண்ணுகிற ஆட்களிடமிருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கலாம். சொல்லப்போனால், மற்றவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கும்போது அவர்கள் கோபப்பட்டு கத்தினால் கஷ்டமாகத்தான் இருக்கும். உங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்கிற இந்தக் கவலைகள் எல்லாமே யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். (ஏசா. 41:13) இந்தக் கட்டுரையில், உங்களுடைய கவலைகளை எப்படி சமாளிக்கலாம்... ஊழியத்தை எப்படி இன்னும் சந்தோஷமாக செய்யலாம்... என்பதற்கு ஐந்து டிப்ஸை பார்ப்போம்.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து பலம் பெறுங்கள்
3. பிரசங்கிக்க எரேமியா தீர்க்கதரிசிக்கு எது உதவி செய்தது?
3 பைபிள் காலங்களில்கூட, கடவுளுடைய ஊழியர்கள் கஷ்டமான நியமிப்புகளை செய்ய வேண்டியிருந்தது. அதுபோன்ற சமயங்களில், கடவுள் சொன்ன செய்தி அவர்களைப் பலப்படுத்தியது. அதற்கு ஒரு உதாரணம் எரேமியா தீர்க்கதரிசி. பிரசங்கிக்கும் நியமிப்பை யெகோவா அவருக்குத் தந்தபோது அவர் தயங்கினார். “நான் சின்னப் பையன், எனக்குப் பேசத் தெரியாதே” என்று சொன்னார். (எரே. 1:6) ஆனால் அவரால் எப்படி மற்றவர்களிடம் தைரியமாக பேச முடிந்தது? கடவுள் சொன்ன செய்திதான் அவருக்குப் பலத்தைக் கொடுத்தது. அவர் இப்படி சொன்னார்: “எரிகிற நெருப்பை என் எலும்புகளுக்குள் அடைத்து வைத்தது போல உணர்ந்தேன். அதை அடக்கி அடக்கி சோர்ந்துபோனேன்.” (எரே. 20:8, 9) கொஞ்சம்கூட காதில் வாங்காத ஜனங்களிடம் அவர் பேச வேண்டியிருந்தாலும் அவரால் தைரியமாக பிரசங்கிக்க முடிந்தது. யெகோவா அவரிடம் சொல்ல சொன்ன செய்திதான் அவருக்குப் பலத்தைக் கொடுத்தது.
4. கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதைப் பற்றி யோசித்துப் பார்ப்பது ஏன் நல்லது? (கொலோசெயர் 1:9, 10)
4 பைபிளில் இருக்கிற கடவுளுடைய செய்தியைப் படிப்பதன் மூலம் இன்றைக்கும் கிறிஸ்தவர்களுக்குப் பலம் கிடைக்கும். கொலோசெயில் இருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் கடிதம் எழுதியபோது, திருத்தமான அறிவை எடுத்துக்கொள்ள சொல்லி அங்கிருந்த சகோதரர்களை உற்சாகப்படுத்தினார். அப்போதுதான் அவர்களால் ‘யெகோவாவுக்கு ஏற்ற விதத்தில் நடக்க’ முடியும்; அவர்களுடைய ‘எல்லா நல்ல செயல்களுக்கும் பலன்’ கிடைக்கும். (கொலோசெயர் 1:9, 10-ஐ வாசியுங்கள்.) அவர்கள் செய்ய வேண்டிய நல்ல செயல்களில் ஒன்று, நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்வது. அவர்களைப் போலவே நாமும் நல்ல செய்தியை சொல்ல, கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படி செய்தால் யெகோவாமேல் இருக்கிற விசுவாசம் பலமாகும்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய செய்தியை மற்றவர்களுக்கு சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதும் நமக்குப் புரியும்.
5. பைபிளைப் படிக்கும்போது நீங்கள் முழுமையாகப் பயனடைய என்ன செய்ய வேண்டும்?
5 கடவுளுடைய வார்த்தையிலிருந்து முழுமையாக பயனடைய வேண்டுமென்றால் அதை அவசர அவசரமாக வாசிக்கக் கூடாது. நன்றாக நேரம் எடுத்து அதைப் படிக்க வேண்டும், ஆழமாக யோசிக்க வேண்டும். பைபிளை வாசிக்கும்போது உங்களுக்கு ஏதாவது ஒரு வசனம் புரியவில்லை என்றால் அதை விட்டுவிட்டு போய்விடாதீர்கள். அதற்குப் பதிலாக, உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் (ஆங்கிலம்) அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சி கையேட்டை பயன்படுத்தி அந்த வசனத்துக்கான விளக்கத்தைக் கண்டுபிடியுங்கள். நேரமெடுத்து படித்தால் பைபிளில் சொல்லப்பட்டிருப்பது உண்மைதான் என்ற நம்பிக்கை பலமாகும். (1 தெ. 5:21) உங்கள் நம்பிக்கை பலமாக பலமாக நீங்கள் கற்றுக்கொண்டதை மற்றவர்களிடம் சந்தோஷமாக சொல்வீர்கள்.
ஊழியத்துக்கு நன்றாகத் தயாரியுங்கள்
6. ஊழியத்துக்காக நாம் ஏன் நன்றாகத் தயாரிக்க வேண்டும்?
6 நீங்கள் ஊழியத்துக்கு நன்றாகத் தயாரித்தால் மற்றவர்களிடம் தயக்கமில்லாமல் பேச முடியும். ஊழியத்துக்கு எப்படித் தயாராக வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு சொல்லிக்கொடுத்தார். அவர்களை ஊழியத்துக்கு அனுப்புவதற்கு முன்பு அப்படி செய்தார். (லூக். 10:1-11) இயேசு சொல்லிக் கொடுத்ததைக் கேட்டு நடந்ததால், அவர்களால் நிறைய நல்ல விஷயங்களை செய்ய முடிந்தது. அதனால் அவர்கள் ரொம்ப சந்தோஷப்பட்டார்கள்.—லூக். 10:17.
7. ஊழியத்துக்காக நாம் எப்படித் தயாரிக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)
7 சரி, நாம் எப்படி ஊழியத்துக்குத் தயாரிக்கலாம்? நாம் என்ன சொல்லப்போகிறோம்... அதை எப்படி இயல்பாக சொல்லப்போகிறோம்... என்றெல்லாம் யோசித்துப் பார்க்கலாம். பேசும்போது அவர்கள் என்னவெல்லாம் சொல்ல வாய்ப்பிருக்கிறது, அதற்கு எப்படியெல்லாம் பதில் சொல்லலாம் என்பதையும் யோசித்துப் பார்க்கலாம். பிறகு, ஊழியம் செய்யும்போது பதட்டப்படாமல் சிரித்த முகத்தோடும் நட்போடும் பேச நாம் முயற்சி செய்யலாம்.
நன்றாகத் தயாரியுங்கள் (பாரா 7)
8. அப்போஸ்தலன் பவுல் சொன்ன உதாரணத்தின்படி, எந்த விதத்தில் கிறிஸ்தவர்கள் மண்பாத்திரங்களாக இருக்கிறார்கள்?
8 நாம் செய்யும் ஊழிய வேலையை அப்போஸ்தலன் பவுல் ஒரு உதாரணத்தோடு விளக்கினார். அவர் இப்படி சொன்னார்: “நாங்கள் இந்தப் பொக்கிஷத்தை மண்பாத்திரங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொ. 4:7) அந்த பொக்கிஷம் எது? கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்திதான் அந்த பொக்கிஷம். அது, மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது. (2 கொ. 4:1) அப்படியென்றால், மண்பாத்திரம் எதைக் குறிக்கிறது? நல்ல செய்தியை மற்றவர்களிடம் சொல்கிற கடவுளுடைய ஊழியர்களான நம்மைத்தான். பவுலுடைய காலத்தில் சாப்பாடு, திராட்சமது, பணம் போன்ற விலைமதிப்புள்ள பொருள்களைக் கொண்டுபோவதற்கு மண்பாத்திரங்களைத்தான் வியாபாரிகள் பயன்படுத்தினார்கள். அதேமாதிரி, இந்த விலைமதிப்புள்ள செய்தியை மற்றவர்களிடம் சொல்லும் வேலையைக் கடவுள் நம்மிடம் கொடுத்திருக்கிறார். அவருடைய உதவியோடு, இந்த ஊழிய வேலையை நம்மால் தொடர்ந்து செய்ய முடியும்.
தைரியத்துக்காக ஜெபம் செய்யுங்கள்
9. ஊழியம் செய்யும்போது பயமாக இருந்தால் என்ன செய்யலாம்? (படத்தையும் பாருங்கள்.)
9 சிலசமயங்களில், மற்றவர்கள் நாம் சொல்வதைக் கேட்க மாட்டார்களோ, நம்மை எதிர்ப்பார்களோ என்று பயம் வரலாம். இந்தப் பயத்தை எப்படிச் சமாளிக்கலாம்? ஊழியம் செய்யக் கூடாது என்று அப்போஸ்தலர்களுக்குக் கட்டளை போடப்பட்டபோது அவர்கள் என்ன சொல்லி ஜெபம் செய்தார்கள் என்று பாருங்கள். அவர்கள் பயப்படுவதற்குப் பதிலாக, கடவுளுடைய “வார்த்தையை முழு தைரியத்தோடு பேசிக்கொண்டே இருக்க” உதவ சொல்லி ஜெபம் செய்தார்கள். யெகோவா அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு உடனடியாக பதில் கொடுத்தார். (அப். 4:18, 29, 31) அதேமாதிரி இன்றைக்கும் நமக்குப் பயமாக இருந்தால் யெகோவாவிடம் உதவி கேட்டு உடனடியாக ஜெபம் செய்ய வேண்டும். மனிதர்களைப் பார்க்கும்போது பயம் வரக்கூடாது, அவர்கள்மேல் அன்பு வரவேண்டும் என்று ஜெபம் செய்யுங்கள்.
தைரியத்துக்காக ஜெபம் செய்யுங்கள் (பாரா 9)
10. தன்னைப் பற்றி சாட்சி கொடுக்க யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்? (ஏசாயா 43:10-12)
10 தன்னுடைய சாட்சிகளாக இருப்பதற்கு நம்மை யெகோவா தேர்ந்தெடுத்திருக்கிறார்; தைரியமாக இருக்க நமக்கு உதவி செய்வதாகவும் அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசாயா 43:10-12-ஐ வாசியுங்கள்.) ஊழியத்தை நாம் தைரியமாக செய்ய நான்கு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, நல்ல செய்தியை சொல்லும்போது இயேசு நம் கூடவே இருக்கிறார். (மத். 28:18-20) இரண்டாவதாக, நமக்கு உதவி செய்ய யெகோவா தேவதூதர்களை நியமித்திருக்கிறார். (வெளி. 14:6) மூன்றாவதாக, நாம் படித்த விஷயங்களை ஞாபகத்துக்குக் கொண்டுவர தன்னுடைய சக்தியைக் கொடுத்து உதவுகிறார். (யோவா. 14:25, 26) நான்காவதாக, சகோதர சகோதரிகளை கொடுத்திருக்கிறார். யெகோவாவுடைய உதவியோடும் சகோதர சகோதரிகளுடைய உதவியோடும் நம்மால் தைரியமாக ஊழியம் செய்ய முடியும்.
வளைந்துகொடுங்கள், நம்பிக்கையோடு இருங்கள்
11. ஊழியத்தில் நிறைய மக்களைப் பார்க்க வேண்டும் என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
11 மக்களை வீட்டில் பார்க்க முடியாததால் நீங்கள் சோர்ந்துபோகிறீர்களா? அப்படியென்றால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘வீட்டில் இல்லையென்றால் அவர்கள் எங்கே இருப்பார்கள்?’ (அப். 16:13) ‘ஒருவேளை வேலைக்குப் போயிருப்பார்களா? அல்லது கடைக்குப் போயிருப்பார்களா?’ அப்படியென்றால், தெருவில் பார்க்கிற மக்களிடம் உங்களால் சாட்சி கொடுக்க முடியுமா? ஜோஷுவா என்ற சகோதரர் என்ன சொல்கிறார் என்றால், “நான் ஷாப்பிங் மால் அல்லது வண்டிகள் நிறுத்துகிற இடங்களுக்குப் போய், அங்கே இருக்கிற மக்களிடம் நல்ல செய்தியை சொல்லியிருக்கிறேன்.” அவரும், அவருடைய மனைவி ப்ரிஜெட்டும் சாயங்காலத்திலும் ஞாயிற்றுக்கிழமை மத்தியானத்திலும் ஊழியம் செய்யும்போது வீடுகளில் நிறையப் பேரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள்.—எபே. 5:15, 16.
வேறொரு நேரத்தில் அல்லது புது வழிகளில் ஊழியம் செய்யுங்கள் (பாரா 11)
12. மக்கள் எதை நம்புகிறார்கள், எதைப் பற்றி பேசினால் ஆர்வமாக கேட்பார்கள் என்று நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?
12 நீங்கள் சொல்கிற செய்தியை மக்கள் ஆர்வமாக கேட்கவில்லை என்றால், அவர்கள் உண்மையிலேயே என்ன நம்புகிறார்கள் அல்லது எதை பேசினால் ஆர்வமாக கேட்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஜோஷுவாவும் ப்ரிஜெட்டும் நம்முடைய துண்டுப்பிரதிகளின் தலைப்புகளில் இருக்கிற கேள்விகளைக் கேட்டு ஆட்களிடம் பேச ஆரம்பிக்கிறார்கள். உதாரணத்துக்கு, பைபிள் எப்படிப்பட்ட புத்தகம்? என்ற துண்டுப்பிரதியைப் பயன்படுத்தி இப்படிக் கேட்கிறார்கள்: “சிலர் பைபிளைக் கடவுள் கொடுத்த புத்தகம் என்று நினைக்கிறார்கள். சிலர் அப்படி நினைப்பதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” இந்த மாதிரி கேள்வி கேட்பதால் நிறைய பேரிடம் அவர்களால் நன்றாகப் பேச முடிகிறது.
13. மக்கள் நாம் சொல்வதை கேட்கவில்லை என்றாலும் நாம் எதில் உறுதியாக இருக்கலாம்?
13 நாம் சொல்கிற செய்தியை மக்கள் கேட்கவில்லை என்றாலும், நாம் ஊழியத்தில் வெற்றி அடைந்துவிட்டோம் என்று சொல்லலாம். எப்படி? யெகோவாவும் அவருடைய மகனும் என்ன செய்ய சொன்னார்களோ அதைத்தான் நாம் செய்திருக்கிறோம். அதாவது, அவர்களைப் பற்றி சாட்சிக் கொடுத்திருக்கிறோம். (அப். 10:42) அதனால் வீட்டில் ஆட்கள் இல்லையென்றாலும் சரி, நாம் சொல்கிற செய்தியை அவர்கள் கேட்கவில்லை என்றாலும் சரி, நாம் சந்தோஷப்படலாம். ஏனென்றால், பரலோகத்தில் இருக்கிற நம்முடைய அப்பாவை நாம் சந்தோஷப்படுத்தியிருக்கிறோம்.—நீதிமொழிகள் 27:11-ஐ வாசியுங்கள்.
14. ஆர்வம் காட்டுகிற ஒருவரை வேறொரு பிரஸ்தாபி கண்டுபிடித்தால்கூட நாம் ஏன் சந்தோஷப்படலாம்?
14 ஆர்வம் காட்டுகிற ஒருவரை வேறொரு பிரஸ்தாபி கண்டுபிடித்தால்கூட நாம் சந்தோஷப்படலாம். நாம் செய்கிற இந்த வேலையைக் காணாமல் போன ஒரு பிள்ளையைக் கண்டுபிடிக்கிற வேலைக்கு ஒப்பிட்டு ஒரு காவற்கோபுரம் சொன்னது. அந்தப் பிள்ளையை நிறையப் பேர் தேடப் போவார்கள், ஒவ்வொரு பகுதியாகப் போய் தேடுவார்கள். ஆனால், அந்தப் பிள்ளையைக் கண்டுபிடித்தப் பிறகு, கண்டுபிடித்தவர் மட்டுமல்ல தேடிப் போன எல்லாருமே சந்தோஷப்படுவார்கள். அதேமாதிரிதான் நாம் செய்கிற இந்த சீஷராக்கும் வேலையும்! நம் சபையில் இருக்கிற எல்லாரும் சேர்ந்து ஒரு ‘டீமாக’ இந்த வேலையை செய்கிறோம். அப்படி செய்தால்தான் ஊழியப் பகுதியை நம்மால் முழுமையாக செய்து முடிக்க முடியும். அதனால், புதிதாக ஒருவர் நம்முடைய கூட்டத்துக்கு வந்தால் நாம் எல்லாருமே சந்தோஷப்படுகிறோம்.
யெகோவாமேலும் மக்கள்மேலும் இருக்கிற அன்பை அதிகமாக்குங்கள்
15. மத்தேயு 22:37-39 சொல்கிறபடி செய்வது ஊழியத்தில் நம்முடைய ஆர்வத்தை அதிகமாக்க எப்படி உதவும்? ( படத்தையும் பாருங்கள்.)
15 யெகோவாமேலும் மக்கள்மேலும் இருக்கிற அன்பை நாம் அதிகமாக்கினால், ஊழியத்தை ஆர்வமாக செய்ய முடியும். (மத்தேயு 22:37-39-ஐ வாசியுங்கள்.) நாம் ஊழியம் செய்வதைப் பார்த்தால் யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று யோசித்துப் பாருங்கள். அதேமாதிரி மக்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்தால் அவர்களும் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள்! அதுமட்டுமல்ல, நாம் சொல்கிற செய்தியைக் கேட்டு மக்கள் யெகோவாவை வணங்க ஆரம்பித்தால், அவர்களுக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை காத்திருக்கிறது.—யோவா. 6:40; 1 தீ. 4:16.
யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் இருக்கிற அன்பை அதிகமாக்கும்போது ஊழியத்தை சந்தோஷமாக செய்ய முடியும் (பாரா 15)
16. வீட்டிலேயே அடைந்து கிடக்கிற மாதிரி ஒரு சூழ்நிலை வந்தாலும் நாம் எப்படி சந்தோஷமாக ஊழியம் செய்ய முடியும்? உதாரணங்களை சொல்லுங்கள்.
16 வீட்டை விட்டு வெளியில் போக முடியாத சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? அப்படியென்றால் யெகோவாமேலும் மற்றவர்கள்மேலும் அன்பு காட்டுவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று யோசித்துப் பாருங்கள். சாம்வேல்-டேனியா தம்பதி என்ன செய்தார்கள் என்று பார்க்கலாம். கோவிட்-19 சமயத்தில் அவர்கள் வீட்டிலேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அந்தக் கஷ்டமான சூழ்நிலையில் அவர்கள் போனில் சாட்சி கொடுத்தார்கள், கடிதங்கள் எழுதினார்கள், ஸும் (zoom) மூலமாக நிறைய பைபிள் படிப்புகளை நடத்தினார்கள். சாம்வேல் அந்த சமயத்தில் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். மருத்துவமனையில் அவர் யாரையெல்லாம் பார்த்தாரோ அவர்களிடமெல்லாம் சாட்சி கொடுத்தார். அவர் சொல்கிறார்: “வாழ்க்கையில் பிரச்சினைகள் நம்மை இடி மாதிரி தாக்கும்போது நாம் உடைந்துவிடுவோம். சுத்தமாக தெம்பு இல்லாத மாதிரி இருக்கும். விசுவாசத்துக்கு அது ஒரு பெரிய சோதனை! ஆனால், இந்த மாதிரி சமயத்தில் நம்மால் செய்ய முடிந்ததை நினைத்து சந்தோஷப்பட வேண்டும்.” சாம்வேலின் கஷ்டங்கள் ஒரு பக்கம் இருக்க, டேனியாவும் கீழே விழுந்து மூன்று மாதம் படுத்த படுக்கையாக ஆகிவிட்டார். அதற்கு அப்புறம், ஆறு மாதத்துக்கு டேனியா வீல்சேரிலேயே இருக்க வேண்டியிருந்தது. டேனியா சொல்கிறார்: “என்னுடைய சூழ்நிலையில் என்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தேன். அந்த சமயத்தில் என்னை கவனிக்க வந்த நர்சிடம் நான் நல்ல செய்தியை சொன்னேன். எங்களுடைய வீட்டுக்கு சாமான் கொடுக்க வந்தவர்களிடமும் பேசினேன். அதுமட்டுமல்ல, மருத்துவ கருவிகளை விற்கும் ஒரு கம்பெனியில் வேலை செய்யும் ஒரு பெண்ணிடமும் நான் ஃபோனில் பேசுவேன்.” சாம்வேலாலும் டேனியாவாலும் முன்பு போல் ஊழியம் செய்ய முடியவில்லைதான். ஆனால் தங்களால் செய்ய முடிந்த எல்லாவற்றையும் செய்ததால் சந்தோஷமாக இருந்தார்கள்.
17. இந்தக் கட்டுரையில் பார்த்த டிப்ஸ், ஊழியத்தை சந்தோஷமாக செய்ய உங்களுக்கு எப்படி உதவி செய்யும்?
17 ஒரு உணவு சமைக்கும்போது, அதற்குத் தேவையான எல்லா பொருள்களையும் போட்டால்தான் அது ருசியாக இருக்கும். இல்லையென்றால், அந்த சமையல் சொதப்பல்தான்! இந்தக் கட்டுரையில் ஐந்து டிப்ஸை பார்த்தோம். இந்த ஐந்தையுமே பயன்படுத்தினால்தான் பயத்தையும் தயக்கத்தையும் விரட்டி அடிக்க முடியும்; ஊழியத்தை சந்தோஷமாக செய்ய முடியும்.
ஊழியத்தை சந்தோஷமாக செய்ய இவையெல்லாம் எப்படி உங்களுக்கு உதவும்?
நேரம் எடுத்து தயாரிப்பது
தைரியத்துக்காக ஜெபம் செய்வது
யெகோவாமேலும் மக்கள்மேலும் இருக்கிற அன்பை அதிகமாக்குவது
பாட்டு 80 யெகோவா நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்