உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 மார்ச் பக். 2-7
  • ஞானஸ்நானத்தை தள்ளிப்போடாதீர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஞானஸ்நானத்தை தள்ளிப்போடாதீர்கள்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சமாரியர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்
  • தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் ஞானஸ்நானம் எடுக்கிறார்
  • கொர்நேலியு ஞானஸ்நானம் எடுக்கிறார்
  • கொரிந்தியர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்
  • மலைகளையும் பெயர்க்கும் விசுவாசம்
  • ஞானஸ்நானத்துக்குப் பிறகும் இயேசுவைப் பின்பற்றுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • யெகோவாவுக்கு அர்ப்பணிக்க நீங்கள் தயாரா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 மார்ச் பக். 2-7

படிப்புக் கட்டுரை 9

பாட்டு 51 நம்மை தேவனுக்கு அர்ப்பணித்திருக்கிறோம்

ஞானஸ்நானத்தை தள்ளிப்போடாதீர்கள்!

“ஏன் தாமதிக்கிறாய்? எழுந்து, ஞானஸ்நானம் பெற்றுக்கொள்.”—அப். 22:16.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஞானஸ்நானம் என்ற முக்கியமான படியை தைரியமாக எடுக்க சமாரியர்கள், தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல், கொர்நேலியு மற்றும் கொரிந்தியர்களுடைய உதாரணம் உங்களுக்கு உதவும்.

1. ஞானஸ்நானம் எடுப்பதற்கு என்ன நல்ல காரணங்கள் இருக்கின்றன?

நல்ல நல்ல பரிசுகளை உங்களுக்குக் கொடுத்தவர் யெகோவாதான். உங்களுக்கு உயிர் கொடுத்தவரும் அவர்தான். நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? அவர்மேல் வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்ட ஆசைப்படுகிறீர்களா? அதற்குச் சிறந்த வழி, உங்களையே அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுப்பதுதான்! அப்படிச் செய்தால், நீங்கள் அவருடைய குடும்பத்தில் ஒருவராக ஆவீர்கள்; அவருக்குச் சொந்தமானவராக ஆவீர்கள். அவர் உங்களுக்கு அப்பாவாகவும் நண்பராகவும் இருந்து உங்களை வழிநடத்துவார், உங்களை நன்றாகப் பார்த்துக்கொள்வார். (சங். 73:24; ஏசா. 43:1, 2) அதுமட்டுமல்ல, அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது என்றென்றும் வாழும் வாய்ப்பும் உங்களுக்குக் கிடைக்கும்.—1 பே. 3:21.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 ஏதாவது காரணத்துக்காக ஞானஸ்நானத்தை நீங்கள் தள்ளிப்போட நினைக்கிறீர்களா? உங்களைப் போல் நிறைய பேர் யோசித்திருக்கிறார்கள். லட்சக்கணக்கான ஆட்கள் தங்களுடைய யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் ஞானஸ்நானம் எடுப்பதற்காக மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஞானஸ்நானம் எடுத்த பிறகு, அவர்கள் சந்தோஷத்தோடும் ஆர்வத்தோடும் யெகோவாவுக்குச் சேவை செய்கிறார்கள். சரி, முதல் நூற்றாண்டில் ஞானஸ்நானம் எடுத்த சிலரைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்களுக்கு என்னென்ன தடைகள் இருந்தன என்றும் அவர்களுடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.

சமாரியர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்

3. ஞானஸ்நானம் எடுக்க சமாரியர்கள் சிலருக்கு எதெல்லாம் சவாலாக இருந்திருக்கலாம்?

3 யூதேயாவின் வடக்கில் இருந்த சமாரியா மற்றும் சீகேமுக்கு அருகிலிருந்த ஒரு மதப்பிரிவைச் சேர்ந்தவர்கள்தான் சமாரியர்கள். ஞானஸ்நானம் எடுக்க அவர்களுக்குச் சில சவால்கள் இருந்தன. சமாரியர்கள் ஐந்தாகமத்தை, அதாவது ஆதியாகமத்திலிருந்து உபாகமம் வரை இருக்கிற புத்தகங்களைத்தான், கடவுளுடைய வார்த்தை என்று நம்பிக்கொண்டிருந்தார்கள். (ஒருவேளை, யோசுவா புத்தகத்தையும் கடவுளுடைய வார்த்தை என்று நம்பியிருக்கலாம்.) ஆனால் கடவுளுடைய வார்த்தை எல்லாவற்றையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. அடுத்து, அவர்களுக்கு இருந்த இன்னொரு சவாலுக்கு வரலாம். உபாகமம் 18:18, 19-ன் அடிப்படையில் மேசியா என்று ஒருவர் வருவார் என்று சமாரியர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். (யோவா. 4:25) ஆனால், இயேசுதான் அந்த வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. “சமாரியர்கள் நிறைய பேர்” அவரை ஏற்றுக்கொண்டாலும் சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை. (யோவா. 4:39) அதோடு, சமாரியர்களுக்கு யூதர்கள்மேல் ஆழமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணம் இன்னொரு சவாலாக இருந்திருக்கலாம். ஆரம்பகால கிறிஸ்தவர்களில் நிறைய பேர் யூத பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்ததால், அவர்களிடமிருந்து மனத்தாழ்மையாகக் கற்றுக்கொண்டு ஞானஸ்நானம் எடுப்பது சமாரியர்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம்.—லூக். 9:52-54.

4. அப்போஸ்தலர் 8:5, 6, 14 சொல்வதுபோல் பிலிப்பு பிரசங்கித்தபோது சில சமாரியர்கள் என்ன செய்தார்கள்?

4 ஞானஸ்நானம் எடுக்க சமாரியர்களுக்கு எது உதவியது? நற்செய்தியாளரான பிலிப்பு ‘கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கித்தபோது’ சமாரியர்கள் சிலர் ‘கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டார்கள்.’ (அப்போஸ்தலர் 8:5, 6, 14-ஐ வாசியுங்கள்.) பிலிப்பு யூத பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஒருவேளை, கடவுள் பாரபட்சம் காட்டுவதில்லை என்பதை ஐந்தாகமத்திலிருந்து கற்றிருந்ததால், அவர் சொன்னதை ஏற்றிருக்கலாம். (உபா. 10:17-19) கிறிஸ்துவைப் பற்றி பிலிப்பு சொன்ன விஷயங்களை அவர்கள் “கூர்ந்து கேட்டார்கள்.” பிலிப்புவை கடவுள்தான் அனுப்பினார் என்பதற்கான தெளிவான ஆதாரங்களைப் பார்த்தார்கள். பிலிப்பு நிறைய அற்புதங்களைச் செய்தார். வியாதியாக இருந்தவர்களைக் குணப்படுத்தினார்; பேய்களைத் துரத்தினார்.—அப். 8:7.

5. சமாரியர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

5 யூதர்கள்மேல் இருந்த தப்பெண்ணத்தால் அல்லது பிலிப்பு சொன்ன விஷயங்கள் புதிதாக இருந்ததால் அந்தச் சமாரியர்கள் அவரைத் தட்டிக்கழித்திருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படிச் செய்யவில்லை. பிலிப்பு சொன்னதெல்லாம் உண்மை என்பது உறுதியாக தெரிந்தபோது ஞானஸ்நானம் எடுப்பதை அவர்கள் தள்ளிப்போடவில்லை. பைபிள் சொல்கிறது: “கடவுளுடைய அரசாங்கத்தையும் இயேசு கிறிஸ்துவின் பெயரையும் பற்றிய நல்ல செய்தியை பிலிப்பு சொன்னபோது, ஆண்களும் பெண்களும் நம்பிக்கை வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.” (அப். 8:12) கடவுளுடைய வார்த்தை சொல்வதெல்லாம் உண்மை என்று நீங்களும் உறுதியாக நம்புகிறீர்களா? உண்மை கிறிஸ்தவர்களின் அடையாளமாக இருக்கிற பாரபட்சம் இல்லாத அன்பை யெகோவாவின் சாட்சிகள் காட்டுகிறார்கள் என்பதை உங்களால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா? (யோவா. 13:35) அப்படியென்றால், ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போடாதீர்கள்; உடனடியாக முடிவு எடுங்கள். யெகோவா உங்களைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்.

6. ரூபனுடைய உதாரணம் உங்களுக்கு எப்படி உதவியாக இருக்கிறது?

6 ஜெர்மனியில் இருக்கிற ரூபன், யெகோவாவின் சாட்சிகளுடைய குடும்பத்தில் பிறந்தான். யெகோவா உண்மையிலேயே இருக்கிறாரா என்ற சந்தேகம் அவனுக்கு இளம் வயதில் வந்தது. அப்போது ரூபன் என்ன செய்தான்? அந்த விஷயத்தைப் பற்றி நன்றாகத் தெரியாததால்தான் சந்தேகம் வருகிறது என்பதைப் புரிந்துகொண்டான். அதைப் பற்றி நன்றாகப் படிப்பது என்று முடிவு எடுத்தான். ரூபன் சொல்கிறான்: “எனக்கு இருந்த சந்தேகங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்ய நினைத்தேன். பரிணாமத்தைப் பற்றிப் படித்தேன். அதுவும், நிறைய தடவை!” உங்கள்மீது அக்கறையுள்ள படைப்பாளர் இருக்கிறாரா? என்ற ஆங்கில புத்தகத்தையும் ரூபன் படித்தான். அதைப் படித்த பிறகு கடவுள்மேல் அவனுக்கு இருந்த நம்பிக்கை ரொம்பவே அதிகம் ஆனது. ‘யெகோவா உண்மையிலேயே இருக்கிறார்!!’ என்று ரூபன் தனக்கே சொல்லிக்கொண்டான். ஒருசமயம், நம்முடைய உலகத் தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்கிற வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அங்கே சேவை செய்கிறவர்கள் வெவ்வேறு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை அவன் பார்த்தான். அசந்துபோனான்! ஜெர்மனிக்குத் திரும்பி வந்ததும் ஞானஸ்நானம் எடுத்தான். அப்போது அவனுக்கு 17 வயது. உங்களுக்கும் சத்தியத்தைப் பற்றி ஏதாவது சந்தேகம் இருந்தால் நம் பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்யுங்கள். ‘திருத்தமான அறிவு’ சந்தேகங்களை விரட்டியடிக்கும். (எபே. 4:13, 14) அதோடு, யெகோவாவின் மக்கள் மத்தியில் இருக்கிற அன்பையும் ஒற்றுமையையும் பற்றிய அனுபவங்களைக் கேட்கும்போதும், உங்கள் சபையிலேயே அதை நேரடியாகப் பார்க்கும்போதும் யெகோவாவின் குடும்பத்தை அதிகமாக நேசிப்பீர்கள்.

தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் ஞானஸ்நானம் எடுக்கிறார்

7. எப்படிப்பட்ட எண்ணத்தை சவுல் மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது?

7 தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் யூதர்கள் மத்தியில் ரொம்ப பிரபலமாக இருந்தார். யூத மத சட்டங்களைக் கரைத்துக் குடித்திருந்தார். (கலா. 1:13, 14; பிலி. 3:5) சவுல் கிறிஸ்தவர்களைப் பயங்கரமாகத் துன்புறுத்தினார். அதுதான் கடவுளுடைய விருப்பம் என்று நினைத்தார். ஏனென்றால் அந்தச் சமயத்தில், யூதர்கள் கிறிஸ்தவர்களை விசுவாசதுரோகிகளாகப் பார்த்தார்கள். (அப். 8:3; 9:1, 2; 26:9-11) இப்போது, சவுல் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவராக மாறினால், அவரும் துன்புறுத்தப்படுவார்; அதைச் சந்திக்க அவர் தயாராக வேண்டியிருந்தது.

8. (அ) ஞானஸ்நானம் எடுக்க சவுலுக்கு எது உதவியது? (ஆ) அப்போஸ்தலர் 22:12-16 சொல்கிற மாதிரி சவுலுக்கு எப்படி அனனியா உதவினார்? (படத்தையும் பாருங்கள்.)

8 ஞானஸ்நானம் எடுக்க சவுலுக்கு எது உதவியது? வானத்திலிருந்து இயேசு பேசியபோது, ஒரு பிரகாசமான ஒளி சவுலின் கண்களைக் குருடாக்கியது. (அப். 9:3-9) மூன்று நாளுக்கு அவர் விரதமிருந்து நடந்ததை ஆழமாக யோசித்துப் பார்த்தார். இயேசுதான் மேசியா என்றும், அவரைப் பின்பற்றுகிறவர்கள்தான் உண்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சவுல் புரிந்துகொண்டார். அதுமட்டுமல்ல, ஸ்தேவானின் கொலையில் தனக்கும் பங்கு இருந்ததை நினைத்தபோது அவருடைய மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்திருக்கும். (அப். 22:20) மூன்று நாளுக்குப் பிறகு, இயேசுவின் சீஷரான அனனியா சவுலை சந்தித்தார், அவருக்குப் பார்வை கிடைக்க உதவினார். தள்ளிப்போடாமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுக்க அவரை உற்சாகப்படுத்தினார். (அப்போஸ்தலர் 22:12-16-ஐ வாசியுங்கள்.) அனனியாவின் உதவியை சவுல் ஏற்றுக்கொண்டு ஒரு புதிய பயணத்தைத் தொடங்கினார்.—அப். 9:17, 18.

ஞானஸ்நானம் எடுப்பதற்காக சவுல் தண்ணீருக்குள் இறங்குகிறார். சுற்றியிருக்கிறவர்கள் அதைச் சந்தோஷமாகப் பார்க்கிறார்கள்.

ஞானஸ்நானம் எடுக்க யாராவது உங்களை உற்சாகப்படுத்தும்போது சவுலைப் போலவே நீங்களும் அதை ஏற்றுக்கொள்வீர்களா? (பாரா 8))


9. சவுலிடமிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்கிறீர்கள்?

9 சவுலிடமிருந்து நம்மால் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியும். பெருமையோ மனித பயமோ தன்னுடைய ஞானஸ்நானத்துக்குத் தடையாக இருக்க அவர் அனுமதிக்கவில்லை. கிறிஸ்துவைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொண்டபோது மனத்தாழ்மையோடு தன் வாழ்க்கையை மாற்றிக்கொண்டார். (அப். 26:14, 19) ஒரு கிறிஸ்தவராக மாறினால் துன்புறுத்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்று தெரிந்தே அவர் அந்த முடிவை எடுத்தார். (அப். 9:15, 16; 20:22, 23) ஞானஸ்நானத்துக்குப் பிறகு, தனக்கு வந்த சோதனைகளைச் சமாளிக்க யெகோவாவையே நம்பியிருந்தார். (2 கொ. 4:7-10) நீங்களும் ஞானஸ்நானம் எடுத்து ஒரு யெகோவாவின் சாட்சி ஆகும்போது, உங்கள் விசுவாசத்துக்குச் சோதனைகள் வரலாம். ஆனால் யெகோவாவும், இயேசு கிறிஸ்துவும் உங்கள் கூடவே இருப்பார்கள் என்பதில் உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்.—பிலி. 4:13.

10. ஹானாவின் உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

10 கிழக்கு ஐரோப்பாவில் இருக்கிற ஹானாவும் அவளுடைய குடும்பமும் குர்து இனத்தைச் சேர்ந்தவர்கள். அவளுடைய அம்மா ஞானஸ்நானம் எடுத்துவிட்டார். ஹானாவும் தன்னுடைய அப்பாவின் அனுமதியோடு 9 வயதிலிருந்து பைபிள் படிப்பைப் படிக்க ஆரம்பித்தாள். ஆனால், அவளுடைய சொந்தபந்தங்கள் அதை எதிர்த்தார்கள். அவர்கள், அவளுடைய குடும்பத்தோடு சேர்ந்து வாழ்ந்துவந்தார்கள். முன்னோர்களுடைய மதத்தைவிட்டு ஒருவர் போவது குடும்பத்துக்கே அவமானம் என்று நினைத்தார்கள். ஹானாவுக்கு 12 வயதானபோது ஞானஸ்நானம் எடுக்க முடிவு எடுத்தாள். அதனால் அப்பாவிடம் அனுமதி கேட்டாள். அவளாக ஆசைப்பட்டு ஞானஸ்நானம் எடுக்க நினைக்கிறாளா அல்லது யாராவது கட்டாயப்படுத்துகிறார்களா என்று ஹானாவின் அப்பா கேட்டார். அதற்கு ஹானா, “எனக்கு யெகோவாவை ரொம்பப் பிடிக்கும்” என்று சொன்னாள். அவள் சொன்னதைக் கேட்டு ஞானஸ்நானம் எடுக்க அவளுடைய அப்பா அனுமதித்தார். ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட ஹானாவின் சொந்தக்காரர்கள் அவளைக் கேலிக் கிண்டல் செய்தார்கள், மோசமாக நடத்தினார்கள். அதில் ஒருவர், “நீ யெகோவாவின் சாட்சியாக ஆவதற்குப் பதிலாக ஒழுக்கங்கெட்டுப் போயிருக்கலாம். சிகரெட் பிடித்து சீர்கெட்டு போயிருக்கலாம்” என்றுகூட சொன்னார். இதையெல்லாம் ஹானா எப்படிச் சமாளித்தாள்? “உறுதியாக இருக்க யெகோவா எனக்கு உதவினார். அப்பாவும் அம்மாவும் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.” எந்தெந்த சந்தர்ப்பங்களில் எப்படியெல்லாம் யெகோவா உதவி செய்திருக்கிறார் என்பதை ஹானா எழுதி வைத்திருக்கிறாள். யெகோவா செய்த உதவிகளை மறந்துவிடக் கூடாது என்பதற்காக அதையெல்லாம் அடிக்கடி எடுத்துப் பார்க்கிறாள். எதிர்ப்பை நினைத்து நீங்களும் பயப்படுகிறீர்களா? ஹானாவுக்கு உதவி செய்த யெகோவா உங்களை மட்டும் கைவிட்டுவிடுவாரா என்ன?—எபி. 13:6.

கொர்நேலியு ஞானஸ்நானம் எடுக்கிறார்

11. ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போட கொர்நேலியு எதைக் காரணமாகச் சொல்லியிருக்கலாம்?

11 கொர்நேலியுவிடமிருந்தும் நம்மால் நிறைய கற்றுக்கொள்ள முடியும். அவர் ரோமப் படையில் ஒரு “அதிகாரியாக இருந்தார்.” சுமார் 100 வீரர்களுக்குத் தளபதியாக இருந்தார். (அப். 10:1, அடிக்குறிப்பு.) சமுதாயத்திலும், ராணுவத்திலும் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்திருக்கலாம். அதுமட்டுமல்ல, அவர் “மக்களுக்குப் பல தானதர்மங்கள் செய்தார்.” (அப். 10:2) இவருக்கு நல்ல செய்தியைச் சொல்ல அப்போஸ்தலன் பேதுருவை யெகோவா அனுப்பினார். கொர்நேலியு ஒரு பெரிய அந்தஸ்தில் இருந்ததால் ஞானஸ்நானம் எடுக்கத் தயங்கினாரா?

12. ஞானஸ்நானம் எடுக்க கொர்நேலியுவுக்கு எது உதவியது?

12 ஞானஸ்நானம் எடுக்க கொர்நேலியுவுக்கு எது உதவியது? “வீட்டிலிருந்த எல்லாரோடும் சேர்ந்து [கொர்நேலியு] கடவுளுக்குப் பயந்து நடந்தார்” என்று பைபிள் சொல்கிறது. அதுமட்டுமல்ல, அவர் எப்போதும் கடவுளிடம் மன்றாடினார். (அப். 10:2) பேதுரு நல்ல செய்தியைச் சொன்னபோது கொர்நேலியுவும் அவருடைய வீட்டில் இருந்தவர்களும் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார்கள். உடனடியாக ஞானஸ்நானமும் எடுத்தார்கள். (அப். 10:47, 48) குடும்பத்தோடு யெகோவாவை வணங்க என்னவெல்லாம் மாற்றங்களைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்ய கொர்நேலியு தயாராக இருந்தார்.—யோசு. 24:15; அப். 10:24, 33.

13. கொர்நேலியுவிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

13 சவுல் மாதிரியே கொர்நேலியுவும் ஒரு நல்ல அந்தஸ்தில் இருந்தார். அதைக் காரணம்காட்டி அவர் ஞானஸ்நானத்தைத் தள்ளிப்போட்டிருக்கலாம். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. ஞானஸ்நானம் எடுக்க நீங்களும் பெரிய பெரிய மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், கண்டிப்பாக யெகோவா உங்களுக்கு உதவுவார். பைபிள் சொல்வதுபோல் வாழ நீங்கள் உறுதியாக இருந்தால் அவர் நிச்சயம் உங்களை ஆசீர்வதிப்பார்.

14. ட்சுயோஷி என்பவருடைய உதாரணத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

14 ஜப்பானைச் சேர்ந்தவர் ட்சுயோஷி. அவர், இக்கிநோபா மலர் அலங்காரப் பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு உதவியாளராக இருந்தார். ஞானஸ்நானம் எடுப்பதற்காக அவர் தன்னுடைய வேலையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பொதுவாக, சவ அடக்க நிகழ்ச்சிகளில் மலர் அலங்காரம் செய்வதும், அங்கே நடக்கும் புத்த மத சடங்குகளில் கலந்துகொள்வதும் தலைமை ஆசிரியரின் வழக்கம். அவரால் போக முடியாதபோது, அவர் சார்பாக ட்சுயோஷி அதில் கலந்துகொள்வார். ட்சுயோஷி பைபிளைப் படிக்க ஆரம்பித்த பிறகு மரணத்தைப் பற்றிய உண்மைகளைக் கற்றுக்கொண்டார். தன்னுடைய வேலை ஞானஸ்நானத்துக்குத் தடையாக இருப்பதைப் புரிந்துகொண்டார். அதனால், புத்த மத சடங்குகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று முடிவெடுத்தார். (2 கொ. 6:15, 16) இதைப் பற்றித் தலைமை ஆசிரியரிடம் பேசினார். என்ன நடந்தது தெரியுமா? புத்த மத சடங்குகளில் கலந்துகொள்ளாமல் இருக்க அவருக்கு அனுமதியும் கிடைத்தது, வேலையும் பறிபோகவில்லை! பைபிளைப் படிக்க ஆரம்பித்து கிட்டத்தட்ட ஒரு வருஷத்தில் அவர் ஞானஸ்நானம் எடுத்தார்.a யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்காக நீங்களும் உங்களுடைய வேலையில் ஏதாவது மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கிறதா? அப்படியென்றால், தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தேவையானதை யெகோவா நிச்சயம் கொடுப்பார்.—சங். 127:2; மத். 6:33.

கொரிந்தியர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்

15. ஞானஸ்நானம் எடுக்க கொரிந்தியர்களுக்கு எதெல்லாம் தடையாக இருந்திருக்கும்?

15 அந்தக் காலத்திலிருந்த கொரிந்து நகரம் பொருளாசைக்கும் ஒழுக்கக்கேட்டுக்கும் பேர்போன இடமாக இருந்தது. அங்கே வாழ்ந்த நிறைய பேருடைய வாழ்க்கைமுறை கடவுளுக்குப் பிடிக்காத மாதிரி இருந்தது. அந்த மாதிரி ஒரு ஊரில் வாழ்கிறவர்களுக்கு நல்ல செய்தியை ஏற்றுக்கொள்வதும், மாற்றங்களைச் செய்வதும் சவால்தான். இருந்தாலும், பவுல் கொரிந்து நகரத்துக்குப் போய் கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியைச் சொன்னபோது, அதைக் கேட்ட “பலரும் எஜமான்மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் எடுத்தார்கள்.” (அப். 18:7-11) அதற்குப் பிறகு, இயேசு கிறிஸ்து ஒரு தரிசனத்தில் பவுலுக்குத் தோன்றி, “இந்த நகரத்தில் என்னுடைய மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள்” என்றார். அதனால், இன்னும் ஒன்றரை வருஷத்துக்கு பவுல் அங்கேயே தங்கி நல்ல செய்தியைச் சொன்னார்.

16. ஞானஸ்நானத்துக்குத் தடையாக இருந்த விஷயங்களை மாற்றிக்கொள்ள கொரிந்தியர்களுக்கு எது உதவியது? (2 கொரிந்தியர் 10:4, 5)

16 ஞானஸ்நானம் எடுக்க கொரிந்தியர்களுக்கு எது உதவியது? (2 கொரிந்தியர் 10:4, 5-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய வார்த்தையும் அவருடைய சக்தியும்தான் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்ய அவர்களுக்கு உதவியது. (எபி. 4:12) கிறிஸ்துவைப் பற்றிய நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டபோது, அவர்களிடம் இருந்த கெட்ட பழக்கங்களை அவர்களால் மாற்றிக்கொள்ள முடிந்தது. உதாரணத்துக்கு குடிவெறி, திருட்டு, ஆணோடு ஆண் உறவுகொள்வது போன்ற பழக்கங்களைக்கூட அவர்களால் மாற்றிக்கொள்ள முடிந்தது.—1 கொ. 6:9-11.b

17. கொரிந்தியர்களிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

17 கொரிந்தியர்களில் சிலர் கெட்ட பழக்கங்களில் ஊறிப்போய் இருந்தாலும், தங்களால் ஒரு கிறிஸ்தவராக ஆகவே முடியாது என்று நினைக்கவில்லை. முடிவில்லாத வாழ்வுக்குப் போகிற இடுக்கமான வாசல் வழியாகப் போவதற்கு முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள். (மத். 7:13, 14) ஞானஸ்நானம் எடுப்பதற்காக நீங்கள் ஏதாவது பெரிய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறதா? ஏதாவது கெட்ட பழக்கத்தை விட வேண்டியிருக்கிறதா? உங்கள் முயற்சியைக் கைவிட்டுவிடாதீர்கள். கெட்டதைச் செய்யத் துடிக்கும் எண்ணத்தை விட்டுவிடுவதற்கு கடவுளுடைய சக்தியைக் கேட்டு தொடர்ந்து கெஞ்சுங்கள்.

18. மோனிகாவின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவி செய்கிறது?

18 ஜார்ஜியாவில் இருக்கிற மோனிகா, ஞானஸ்நானம் எடுப்பதற்காக, தப்பான பொழுதுபோக்கையும் அசிங்கமான பேச்சையும் விட்டுவிட வேண்டியிருந்தது. அவள் சொல்கிறாள்: “நான் டீனேஜில் இருந்தபோது, மாற்றங்கள் செய்ய ஜெபம்தான் எனக்குப் பலம் கொடுத்தது. நான் சரியானதைச் செய்யத்தான் விரும்புகிறேன் என்பது யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அவர் எப்போதும் எனக்கு உதவி செய்தார், என்னை வழிநடத்தினார்.” 16 வயதில் மோனிகா ஞானஸ்நானம் எடுத்தாள். யெகோவாவுக்குச் சேவை செய்ய நீங்கள் ஏதாவது கெட்ட பழக்கத்தை விட்டுவிட வேண்டியிருக்கிறதா? மாற்றங்கள் செய்ய யெகோவாவிடம் உதவி கேட்டுக்கொண்டே இருங்கள். அவர் தன்னுடைய சக்தியை உங்களுக்கு அளவில்லாமல் கொடுப்பார்.—யோவா. 3:34.

மலைகளையும் பெயர்க்கும் விசுவாசம்

19. மலை போன்ற பிரச்சினைகளைத் தகர்த்தெறிய எது உங்களுக்கு உதவும்? (படத்தையும் பாருங்கள்.)

19 ஞானஸ்நானம் எடுக்க உங்களுக்கு எப்படிப்பட்ட தடைகள் இருந்தாலும் சரி, இதை மறந்துவிடாதீர்கள்: யெகோவா உங்களை ரொம்ப நேசிக்கிறார், அவருடைய குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இயேசு தன்னுடைய சீஷர்கள் சிலரிடம் இப்படிச் சொன்னார்: “உங்களுக்குக் கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட இந்த மலையைப் பார்த்து, ‘இங்கிருந்து பெயர்ந்து அங்கே போ’ என்று சொன்னால், அது பெயர்ந்துபோகும்; உங்களால் முடியாத காரியம் ஒன்றுமே இருக்காது.” (மத். 17:20) இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் சீஷர்களாகி கொஞ்ச வருஷம்தான் ஆகியிருந்தது. அவர்களுடைய விசுவாசம் இன்னும் வளர வேண்டியிருந்தது. போதுமான அளவு விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால் மலை போன்ற பிரச்சினைகளைக்கூட தகர்த்தெறிய யெகோவா அவர்களுக்கு உதவுவார் என்று இயேசு நம்பிக்கை கொடுத்தார். யெகோவா உங்களுக்கும் உதவுவார்!

மாநாட்டில், புதிதாக ஞானஸ்நானம் எடுத்தவர்கள் வருவதைப் பார்த்து சகோதர சகோதரிகள் சந்தோஷமாகக் கைகளைத் தட்டுகிறார்கள்.

யெகோவா உங்களை ரொம்ப நேசிக்கிறார், அவருடைய குடும்பத்தில் நீங்களும் ஒருவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார் (பாரா 19)c


20. அந்தக் காலத்திலும், இந்தக் காலத்திலும் நாம் பார்த்த கிறிஸ்தவர்களுடைய உதாரணம் என்ன செய்ய உங்களைத் தூண்டுகிறது?

20 ஞானஸ்நானம் எடுக்க உங்களுக்கு ஏதாவது தடை இருப்பது தெரியவந்தால், அதைத் தகர்க்க உடனே நடவடிக்கை எடுங்கள். அந்தக் காலத்திலும் இந்தக் காலத்திலும் நாம் பார்த்த கிறிஸ்தவர்களுடைய உதாரணம் உங்களுக்குப் பலத்தையும், உற்சாகத்தையும் கொடுக்கும் என்று நம்புகிறோம். அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்க இவர்களுடைய உதாரணம் உங்களுக்கு உதவியாக இருக்கும். வாழ்க்கையிலேயே நீங்கள் எடுக்கிற மிகச் சிறந்த முடிவு ஞானஸ்நானம் எடுப்பதுதான்!

ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி இவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

  • சமாரியர்கள்

  • தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் மற்றும் கொர்நேலியு

  • கொரிந்தியர்கள்

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

a ட்சுயோஷி ஃப்யூஜீயீ என்ற சகோதரருடைய வாழ்க்கை சரிதையை செப்டம்பர் 8, 2005 விழித்தெழு! பத்திரிகையில் பக். 20-23-ல் பாருங்கள்.

b ‘ஞானஸ்நானம் எடுப்பதை ஏன் தள்ளிப்போடுகிறீர்கள்?’ என்ற வீடியோவை jw.org-ல் பாருங்கள்.

c படவிளக்கம்: ஞானஸ்நானம் எடுத்துவிட்டு வருகிறவர்களை, சகோதர சகோதரிகள் அன்பாக வரவேற்கிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்