படிப்புக் கட்டுரை 10
பாட்டு 31 யெகோவாவின் பாதையில் நடப்போம்!
யெகோவாவையும் இயேசுவையும் போல யோசியுங்கள்
“கிறிஸ்து ஒரு மனிதராக இருந்தபோது பாடுகளை அனுபவித்தார்; அதனால், அவர் காட்டிய அதே மனப்பான்மையை நீங்களும் காட்டுங்கள்.”—1 பே. 4:1.
என்ன கற்றுக்கொள்வோம்?
இயேசு யோசிக்கும் விதத்திலிருந்து அப்போஸ்தலன் பேதுரு என்ன கற்றுக்கொண்டார்? அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பார்ப்போம்...
1-2. யெகோவாமேல் அன்பு காட்டுவதில் என்னவெல்லாம் உட்பட்டிருக்கிறது, இயேசு எப்படி யெகோவாமேல் முழு மனதோடு அன்பு காட்டினார்?
“உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்.” (லூக். 10:27) திருச்சட்டத்திலேயே இதுதான் ரொம்ப முக்கியமான கட்டளை என்று இயேசு சொன்னார். யெகோவாமீது அன்பு காட்டுவதில் நம்முடைய இதயம், அதாவது நம்முடைய ஆசைகளும் உணர்ச்சிகளும், சம்பந்தப்பட்டிருக்கிறது. முழு மூச்சோடும் முழு பலத்தோடும் அன்பு காட்டுவதில், நம்முடைய சக்தி எல்லாவற்றையும் பயன்படுத்தி முழு பக்தியைக் காட்டுவது சம்பந்தப்பட்டிருக்கிறது. ஆனால், இயேசு அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. முழு மனதோடு அன்பு காட்ட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார். இதில், நாம் யோசிக்கிற விதம் சம்பந்தப்பட்டிருக்கிறது. நாம் யெகோவா மாதிரியே யோசிக்க முயற்சி செய்ய வேண்டும். யெகோவா யோசிக்கும் விதத்தை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். ஆனாலும் ‘கிறிஸ்துவின் சிந்தையை’ நன்றாகப் புரிந்துகொண்டால் யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், இயேசு அவருடைய அப்பா மாதிரியே யோசித்தார்.—1 கொ. 2:16.
2 இயேசு முழு மனதோடு யெகோவாமேல் அன்பு காட்டினார். யெகோவா தன்னிடம் என்ன எதிர்பார்த்தார் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது; அதைச் செய்வதில் உறுதியாக இருந்தார். அதற்காகக் கஷ்டப்பட வேண்டியிருந்தாலும் அதைச் சகித்துக்கொள்ள தயாராக இருந்தார். யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதிலேயே அவர் குறியாக இருந்ததால், அந்தக் குறிக்கோளை அடைவதில் எந்தத் தடையுமே வந்துவிடாதபடி பார்த்துக்கொண்டார்.
3. இயேசுவிடமிருந்து அப்போஸ்தலன் பேதுரு என்ன கற்றுக்கொண்டார், கிறிஸ்தவர்களை என்ன செய்ய சொல்லி உற்சாகப்படுத்தினார்? (1 பேதுரு 4:1)
3 இயேசு எப்படி யோசிக்கிறார் என்பதை அவர்கூடவே இருந்து கற்றுக்கொள்ளும் வாய்ப்பு பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் கிடைத்தது. பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தை எழுதியபோது, கிறிஸ்து காட்டிய அதே மனப்பான்மையைக் காட்டுங்கள் என்று மற்றவர்களை உற்சாகப்படுத்தினார். (1 பேதுரு 4:1-ஐ வாசியுங்கள்.) “காட்டுங்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் வார்த்தை, அதன் மூல மொழியில், போர்வீரர்கள் ஆயுதங்களோடு தயாராக இருப்பதைக் குறிக்கிறது. ராணுவத்தில் பயன்படுத்தும் வார்த்தையை பேதுரு அந்த வசனத்தில் பயன்படுத்தியிருக்கிறார். அப்படியென்றால், கிறிஸ்துவின் மனப்பான்மை சக்திவாய்ந்த ஆயுதம் போல் இருக்கிறது. அந்த ஆயுதம், பாவ ஆசைகளை எதிர்த்துப் போராடுவதற்கும், சாத்தானின் இந்த உலகத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் நமக்கு உதவும்.—2 கொ. 10:3-5; எபே. 6:12.
4. பேதுரு சொன்னதுபோல் செய்ய இந்தக் கட்டுரை எப்படி நமக்கு உதவும்?
4 இயேசுவுடைய மனப்பான்மையைப் புரிந்துகொள்வதற்கும், அதை நாம் வளர்த்துக்கொள்வதற்கும் இந்தக் கட்டுரை உதவும். அதுமட்டுமல்ல, இயேசுவின் உதாரணத்திலிருந்து இந்த மூன்று விஷயங்களையும் கற்றுக்கொள்வோம்: (1) யெகோவாவைப் போல எப்படி யோசிப்பது? (2) எப்படி மனத்தாழ்மையாக இருப்பது? (3) எப்படித் தெளிந்த புத்தியோடு இருப்பது?
யெகோவாவைப் போல யோசியுங்கள்
5. ஒருசமயம் பேதுரு எப்படி யெகோவாவைப் போல யோசிக்கத் தவறிவிட்டார்?
5 ஒருசமயம், பேதுரு யெகோவாவைப் போல யோசிக்காமல் போய்விட்டார். இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், தான் எருசலேமுக்குப் போவார் என்றும், மதத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும், பிறகு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் என்றும் சொன்னார். (மத். 16:21) இதைக் கேட்டு பேதுரு அதிர்ச்சி அடைந்தார். ஏனென்றால், இயேசுதான் இஸ்ரவேலுடைய நம்பிக்கை நட்சத்திரம்; வாக்குக் கொடுக்கப்பட்ட மேசியா! அவருக்கு இப்படியொரு நிலைமை வருவதற்கு யெகோவா எப்படி விடுவார் என்று பேதுரு யோசித்தார். (மத். 16:16) அதனால், இயேசுவைத் தனியாகக் கூட்டிக்கொண்டுபோய், “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்றார். (மத். 16:22) இந்தச் சமயத்தில், பேதுரு யெகோவாவைப் போல யோசிக்கத் தவறிவிட்டார். அதனால், பேதுருவின் யோசனைகள் இயேசுவின் யோசனைகளோடு ஒத்துப்போகவில்லை.
6. யெகோவாவைப் போல யோசிப்பதை இயேசு எப்படிக் காட்டினார்?
6 இயேசுவின் யோசனைகள் அவருடைய அப்பாவின் யோசனைகளோடு அச்சுப்பிசகாமல் அப்படியே ஒத்துப்போனது. அதனால்தான் பேதுருவிடம், “என் பின்னால் போ, சாத்தானே! நீ எனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாய்; நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்” என்றார். (மத். 16:23) யெகோவாவுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்றால், கஷ்டங்களை அனுபவித்து கடைசியில் தன்னுடைய உயிரையும் கொடுக்க வேண்டியிருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அதனால், பேதுரு நல்ல எண்ணத்தோடு சொல்லியிருந்தாலும் இயேசு அதை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சம்பவத்திலிருந்து பேதுரு ஒரு முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொண்டார். எப்போதுமே தன்னுடைய யோசனைகள் யெகோவாவுடைய யோசனைகளோடு ஒத்துப்போக வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டார். இது நமக்கும் ஒரு நல்ல பாடம்!
7. யெகோவாவைப் போல யோசிக்க தயாராக இருந்ததை பேதுரு எப்படிக் காட்டினார்? (படத்தைப் பாருங்கள்.)
7 நாட்கள் போகப்போக, யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள பேதுரு தயாராக இருந்தார்; யெகோவாவைப் போல யோசிக்க கற்றுக்கொண்டார். இது நமக்கு எப்படித் தெரியும்? விருத்தசேதனம் செய்யப்படாத மற்ற தேசத்து மக்கள் கடவுளுடைய மக்களின் பாகமாக ஆகும் காலம் வந்தது. அவர்களில் முதல் நபர் கொர்நேலியு. அவருக்கு நல்ல செய்தியைச் சொல்லும் நியமிப்பை கடவுள் பேதுருவுக்குக் கொடுத்தார். இந்த நியமிப்பைச் செய்ய, யோசிக்கும் விதத்தை பேதுரு மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், யூதர்கள் மற்ற தேசத்து மக்களோடு எந்தச் சம்பந்தமும் வைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், யெகோவாவின் யோசனைகளைப் புரிந்துகொண்ட பிறகு, யோசிக்கும் விதத்தை பேதுரு மாற்றிக்கொண்டார். கொர்நேலியுவின் அழைப்பை ஏற்றுக்கொண்டு “எந்த மறுப்பும் தெரிவிக்காமல்” அவர் வீட்டுக்குப் போனார். (அப். 10:28, 29) அவருடைய வீட்டில் இருந்தவர்களுக்கு நல்ல செய்தியைச் சொன்னார். அதைக் கேட்டு அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.—அப். 10:21-23, 34, 35, 44-48.
கொர்நேலியு வீட்டுக்கு பேதுரு போகிறார் (பாரா 7)
8. யெகோவாவைப் போல யோசிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? (1 பேதுரு 3:8)
8 கொஞ்ச வருஷத்துக்குப் பிறகு, பேதுரு “ஒரே சிந்தையோடு இருங்கள்” என்று கிறிஸ்தவர்களுக்கு எழுதினார். (1 பேதுரு 3:8-ஐ வாசியுங்கள்.) ஒரே சிந்தையோடு இருப்பதற்கு, யெகோவா எப்படி யோசிக்கிறார் என்பதை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டு, அதேபோல் யோசிக்க வேண்டும். அதை எப்படிச் செய்யலாம்? இந்த உதாரணத்தைப் பாருங்கள்: கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத். 6:33) இதை மனதில் வைத்து ஒரு சகோதரரோ சகோதரியோ முழுநேர சேவை செய்ய ஆசைப்படுவதாக வைத்துக்கொள்ளுங்கள். அவருடைய குறிக்கோளுக்கு முட்டுக்கட்டையாக எதையாவது சொல்வது சரியாக இருக்குமா? அவரை உற்சாகப்படுத்தி ஆதரவு கொடுத்தால்தானே ஒரே சிந்தையோடு இருப்பதை நம்மால் காட்ட முடியும்?!
மனத்தாழ்மையாக இருங்கள்
9-10. இயேசு எப்படி ரொம்ப ரொம்ப மனத்தாழ்மையாக இருந்ததைக் காட்டினார்?
9 மனத்தாழ்மையாக இருப்பதைப் பற்றி பேதுருவுக்கும் மற்ற அப்போஸ்தலர்களுக்கும் ஒரு முக்கியமான பாடத்தை, தான் இறப்பதற்கு முந்தினநாள் ராத்திரி இயேசு சொல்லிக்கொடுத்தார். பேதுருவையும் யோவானையும் அனுப்பி, கடைசி இரவு விருந்துக்காக ஏற்பாடு செய்ய சொல்லியிருந்தார். பொதுவாக இந்த மாதிரி விருந்துகளில் விருந்தாளிகளுடைய பாதங்களைக் கழுவுவதற்காக ஒரு பாத்திரத்தையும், துண்டையும் எடுத்து வைப்பார்கள். பேதுருவும் யோவானும் இதையெல்லாம் செய்திருப்பார்கள். ஆனால் கேள்வி என்னவென்றால், மற்றவர்களுடைய பாதங்களைக் கழுவும் இந்தத் தாழ்வான வேலையை இப்போது யார் செய்யப்போகிறார்கள்?
10 கொஞ்சம்கூட தயங்காமல் இயேசு அந்த வேலையில் இறங்கினார். பொதுவாக, வேலைக்காரர்கள் செய்கிற வேலையை இயேசு செய்யத் தயாரானார். அவர் தன்னுடைய மேலங்கியைக் கழற்றி வைத்துவிட்டு, இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக்கொண்டார். பிறகு, பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பினார். அப்போஸ்தலர்களுடைய பாதங்களைக் கழுவ ஆரம்பித்தார். (யோவா. 13:4, 5) பன்னிரெண்டு பேருடைய பாதங்களையும் கழுவ கண்டிப்பாக அவருக்குக் கொஞ்ச நேரம் எடுத்திருக்கும். அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்த யூதாஸின் பாதங்களையும் இயேசு கழுவினார். அவர் எவ்வளவு மனத்தாழ்மையாக இருந்தார் என்பதை இவையெல்லாம் காட்டியது. இயேசு செய்ததைப் பார்த்து அவருடைய அப்போஸ்தலர்கள் வாயடைத்துப் போனார்கள். பிறகு, இயேசு அவர்களிடம் பொறுமையாக இப்படிச் சொன்னார்: “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று புரிந்துகொண்டீர்களா? என்னை ‘போதகர்’ என்றும், ‘எஜமான்’ என்றும் நீங்கள் கூப்பிடுவது சரிதான். ஏனென்றால், நான் போதகர்தான், எஜமான்தான். எஜமானாகவும் போதகராகவும் இருக்கிற நானே உங்கள் பாதங்களைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவருடைய பாதங்களை ஒருவர் கழுவ வேண்டும்.”—யோவா. 13:12-14.
பேச்சில் மட்டும் அல்ல, யோசிக்கிற விதத்திலும் மனத்தாழ்மையைக் காட்ட வேண்டும்
11. மனத்தாழ்மையைக் கற்றுக்கொண்டதை பேதுரு எப்படிக் காட்டினார்? (1 பேதுரு 5:5) (படத்தையும் பாருங்கள்.)
11 இயேசு காட்டிய மனத்தாழ்மையிலிருந்து பேதுரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொண்டார். இயேசு பரலோகத்துக்குப் போன பிறகு பேதுரு ஒரு அற்புதத்தைச் செய்தார். பிறவியிலேயே கால் ஊனமாக இருந்த ஒரு மனிதனை அவர் குணப்படுத்தினார். (அப். 1:8, 9; 3:2, 6-8) இதைப் பார்த்ததும் அவரைச் சுற்றி ஜேஜே என்று கும்பல் கூடியது. (அப். 3:11) பேர், புகழ், பதவி போன்றவற்றைப் பெரிதாக நினைக்கும் ஒரு பின்னணியிலிருந்து பேதுரு வந்திருந்தாலும், இந்தச் சமயத்தில் எல்லா புகழையும் யெகோவாவுக்கும் இயேசுவுக்குமே கொடுத்தார். பேதுரு சொன்னதைக் கவனியுங்கள்: “[இயேசுவுடைய] பெயர்தான், அவருடைய பெயரில் நாங்கள் வைத்திருக்கிற விசுவாசம்தான், நீங்கள் பார்க்கிற, அறிந்திருக்கிற இந்த மனுஷனின் கால்களைப் பலப்படுத்தியிருக்கிறது.” (அப். 3:12-16) கிறிஸ்தவர்களுக்கு பேதுரு எழுதிய கடிதத்தில், மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள் என்று சொன்னார். இந்த வார்த்தைகள், இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு இயேசு தன் அப்போஸ்தலர்களுடைய பாதங்களைக் கழுவியதை நமக்கு ஞாபகப்படுத்துகிறது, இல்லையா?—1 பேதுரு 5:5-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.
பேதுரு அற்புதத்தைச் செய்த பிறகு அதற்கான புகழை யெகோவாவுக்கும், இயேசுவுக்கும் கொடுத்தார். நாமும் பேர், புகழ், பலனை எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு மனத்தாழ்மையாக நல்லது செய்ய வேண்டும் (பாராக்கள் 11-12)
12. நாம் எப்படி பேதுரு மாதிரி தொடர்ந்து மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளலாம்?
12 மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்வதன் மூலம் நாம் பேதுருவைப் போல நடந்துகொள்ளலாம். மனத்தாழ்மையாக இருக்கிறோம் என்பதை நம்முடைய பேச்சில் காட்டினால் மட்டும் போதாது, நாம் யோசிக்கிற விதத்திலும் காட்ட வேண்டும். மனத்தாழ்மை என்பதற்கு பேதுரு பயன்படுத்தியிருக்கிற வார்த்தை, நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் நம் மனதில் என்ன யோசிக்கிறோம் என்பதையும் குறிக்கிறது. நாம் மற்றவர்களுக்கு நல்லது செய்யும்போது, அவர்களுடைய பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காக அதைச் செய்வதில்லை. அவர்கள்மேலும் யெகோவாமேலும் நமக்கு அன்பு இருப்பதால்தான் செய்கிறோம். மற்றவர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ நாம் யெகோவாவுக்கும், மற்றவர்களுக்கும் சந்தோஷமாக சேவை செய்தால், மனத்தாழ்மையாக இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம்.—மத். 6:1-4.
“தெளிந்த புத்தியோடு இருங்கள்”
13. “தெளிந்த புத்தியோடு” இருப்பது என்றால் என்ன?
13 “தெளிந்த புத்தியோடு” இருப்பது என்றால் என்ன? (1 பே. 4:7) தெளிந்த புத்தியோடு இருக்கிற ஒரு கிறிஸ்தவர், எந்த முடிவை எடுத்தாலும் அந்த விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசிப்பார். அப்படிப்பட்ட ஒருவர், வாழ்க்கையில் வேறு எதையும்விட யெகோவாவோடு தனக்கு இருக்கிற பந்தம்தான் ரொம்ப முக்கியம் என்று நினைப்பார். அதுமட்டுமல்ல, தன்னையே ரொம்ப பெரிய ஆளாகவோ தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றோ நினைக்க மாட்டார். வழிநடத்தலுக்காக அடிக்கடி ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவை நம்பியிருப்பதைக் காட்டுவார்.
14. ஒருசமயம் பேதுரு எப்படி யெகோவாவை சார்ந்திருக்காமல் போய்விட்டார்?
14 இறப்பதற்கு முந்தினநாள் ராத்திரி, இயேசு தன்னுடைய சீஷர்களிடம் இந்த எச்சரிப்பைக் கொடுத்தார்: “இன்று ராத்திரி எனக்கு நடக்கப்போவதைப் பார்த்து நீங்கள் எல்லாரும் என்னைவிட்டு ஓடிப்போவீர்கள்.” ஆனால் பேதுரு, தான் அப்படியெல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை என்று ரொம்ப நம்பிக்கையோடு இருந்தார். “உங்களுக்கு நடக்கப்போவதைப் பார்த்து மற்ற எல்லாரும் உங்களைவிட்டு ஓடிப்போனாலும் நான் ஓடிப்போகவே மாட்டேன்!” என்று சொன்னார். அன்று ராத்திரி சீஷர்கள் சிலரிடம், “நீங்கள் விழித்திருந்து, தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்ற ஆலோசனையையும் இயேசு கொடுத்தார். (மத். 26:31, 33, 41) இந்த ஆலோசனையைக் கேட்டு, பேதுரு தொடர்ந்து ஜெபம் செய்திருந்தால்... யெகோவாவைச் சார்ந்து இருந்திருந்தால்... அந்த ராத்திரி இயேசுவைத் தெரியவே தெரியாது என்று சொல்லியிருக்க மாட்டார். தைரியமாக, ‘நான் அவருடைய சீஷர்’ என்று சொல்லியிருப்பார். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அதை நினைத்து பிறகு வருத்தப்பட்டார்.—மத். 26:69-75.
15. இறப்பதற்கு முந்தினநாள் ராத்திரி இயேசு எப்படித் தெளிந்த புத்தியோடு நடந்துகொண்டார்?
15 இயேசு யெகோவாவை முழுமையாக நம்பியிருந்தார். பரிபூரணராக இருந்தாலும், இறப்பதற்கு முந்தினநாள் ராத்திரி அவர் திரும்பத் திரும்ப ஜெபம் செய்வதன் மூலம் தெளிந்த புத்தியோடு நடந்துகொண்டார். அதனால்தான் தன்னிடம் யெகோவா என்ன எதிர்பார்த்தாரோ அதைச் செய்வதற்கான தைரியம் அவருக்குக் கிடைத்தது. (மத். 26:39, 42, 44; யோவா. 18:4, 5) இயேசு இப்படி அடிக்கடி ஜெபம் செய்ததை பேதுரு தன் வாழ்க்கையில் மறந்திருக்கவே மாட்டார்.
16. தெளிந்த புத்தியை வளர்த்துக்கொண்டதை பேதுரு எப்படிக் காட்டினார்? (1 பேதுரு 4:7)
16 அதற்குப் பிறகு, அடிக்கடி ஜெபம் செய்வதன் மூலம் யெகோவாவை நம்பியிருக்க பேதுரு கற்றுக்கொண்டார். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, பேதுருவிடமும் மற்ற அப்போஸ்தலர்களிடமும் ஊழியம் செய்யும் பொறுப்பைக் கொடுத்தார். அந்தப் பொறுப்பைச் செய்ய, கடவுளுடைய சக்தி அவர்களுக்குக் கிடைக்கும் என்றும் சொன்னார். ஆனால், அந்தச் சக்தி கிடைக்கும்வரை எருசலேமில் அவர்களைக் காத்திருக்கச் சொன்னார். (லூக். 24:49; அப். 1:4, 5) காத்திருந்த சமயத்தில் பேதுரு என்ன செய்தார்? பேதுருவும் மற்ற கிறிஸ்தவர்களும் “விடாமல் ஒருமனதோடு ஜெபம் செய்துகொண்டிருந்தார்கள்.” (அப். 1:13, 14) கொஞ்ச காலத்துக்குப் பிறகு பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தில், தெளிந்த புத்தியோடு இருக்கச் சொல்லி கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். அடிக்கடி ஜெபம் செய்து யெகோவாவை நம்பியிருக்கவும் சொன்னார். (1 பேதுரு 4:7-வாசியுங்கள்.) அவரும் யெகோவாவை நம்பியிருக்கக் கற்றுக்கொண்டார், சபைக்குத் தூணாக ஆனார்.—கலா. 2:9.
17. நமக்கு இயல்பாகவே சில திறமைகள் இருந்தாலும் நாம் எதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)
17 தெளிந்த புத்தியோடு இருக்க வேண்டும் என்றால், நாம் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும். சில விஷயங்களைச் சுலபமாக செய்து முடிக்கிற அளவுக்கு நமக்குத் திறமைகள் இருக்கலாம்; ஆனாலும் அடிக்கடி ஜெபம் செய்ய வேண்டும் என்பதை மறந்துவிடக் கூடாது. குறிப்பாக, முக்கியமான தீர்மானங்கள் எடுக்க வேண்டிய சமயத்தில் யெகோவாவுடைய வழிநடத்தலுக்காக ஜெபம் செய்ய வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம், நமக்கு எது நல்லது என்பது அவருக்குத்தான் தெரியும் என்று நாம் நம்புவதைக் காட்டுகிறோம்.
அடிக்கடி ஜெபம் செய்து, யெகோவாவையே நம்பியிருக்க பேதுரு கற்றுக்கொண்டார். நாமும் உதவி கேட்டு அடிக்கடி ஜெபம் செய்யும்போது தெளிந்த புத்தி இருப்பதைக் காட்டுவோம். அதுவும், முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும்போது! (பாரா 17)a
18. யெகோவா யோசிக்கிற மாதிரியே யோசிக்க எப்படிப் பழகிக்கொள்ளலாம்?
18 நாம் யெகோவாவுடைய குணங்களைக் காட்டும் விதத்தில் அவர் நம்மைப் படைத்திருக்கிறார். அதற்கு நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். (ஆதி. 1:26) உண்மைதான், அச்சுப்பிசகாமல் யெகோவா மாதிரியே நம்மால் நடந்துகொள்ள முடியாது. (ஏசா. 55:9) இருந்தாலும் பேதுரு செய்ததுபோல், யெகோவா மாதிரியே யோசிக்க நம்மாலும் பழகிக்கொள்ள முடியும். அதனால், யெகோவா எப்படி யோசிக்கிறார் என்று தொடர்ந்து கற்றுக்கொள்ளலாம். மனத்தாழ்மையாக இருக்கலாம். தெளிந்த புத்தியோடு இருக்கலாம்.
பாட்டு 30 என் தந்தை, என் தேவன், என் தோழன்!
a படவிளக்கங்கள்: இன்டர்வியூவுக்காக காத்திருக்கும் ஒரு சகோதரி மனதுக்குள் ஜெபம் செய்கிறார்.