உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w25 மார்ச் பக். 26-31
  • ‘யெகோவாவின் கை சிறியது என்றா நினைக்கிறாய்?’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘யெகோவாவின் கை சிறியது என்றா நினைக்கிறாய்?’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மோசே மற்றும் இஸ்ரவேலர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
  • பணப் பிரச்சினை வரும்போது
  • எதிர்கால தேவைகளுக்காகத் திட்டம் போடும்போது
  • கடைசி வார்த்தைகள் கற்றுத்தரும் பாடங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
  • முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்பியிருப்பதை காட்டுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2023
  • அடக்கத்தைக் காட்டுங்கள்​—நமக்கு எல்லாம் தெரியாது!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
  • யெகோவா “உயிருள்ள கடவுள்” என்பதை மறந்துவிடாதீர்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2024
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2025
w25 மார்ச் பக். 26-31

படிப்புக் கட்டுரை 13

பாட்டு 4 ‘யெகோவா என் மேய்ப்பர்’

‘யெகோவாவின் கை சிறியது என்றா நினைக்கிறாய்?’

“யெகோவாவினால் இதைச் செய்ய முடியாது என்றா நினைக்கிறாய்?”—எண். 11:23.

என்ன கற்றுக்கொள்வோம்?

நமக்குத் தேவையானதை யெகோவா கண்டிப்பாகக் கொடுப்பார் என்று அவர்மேல் இன்னும் அதிக நம்பிக்கை வைப்பதற்கு இந்தக் கட்டுரை உதவும்.

1. இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது யெகோவாமேல் இருந்த விசுவாசத்தை மோசே எப்படிக் காட்டினார்?

மோசே. யெகோவாமேல் அசைக்க முடியாத விசுவாசத்தை வைத்திருந்தவர். எபிரெய புத்தகத்தில் விசுவாசத்தைக் காட்டியவர்களுடைய பட்டியலில் இவருடைய பெயரும் இருக்கிறது. (எபி. 3:2-5; 11:23-25) இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தபோது மோசே விசுவாசத்தைக் காட்டினார். யெகோவாமேல் நம்பிக்கை வைத்ததால் பார்வோனையும் அவனுடைய படையையும் பார்த்து அசராமல் இருந்தார். செங்கடலைக் கடந்தார். வனாந்தரத்தின் வழியாக மக்களை வழிநடத்திக்கொண்டு போனார். (எபி. 11:27-29) வனாந்தரத்தில், யெகோவா தங்களுடைய தேவைகளைப் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையை நிறைய இஸ்ரவேலர்கள் இழந்துவிட்டார்கள். ஆனால் மோசே நம்பிக்கை இழக்கவே இல்லை. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை. யெகோவா இஸ்ரவேலர்களுக்குத் தேவையான சாப்பாடு, தண்ணீர் எல்லாவற்றையும் காய்ந்துபோன அந்த வனாந்தரத்தில் அற்புதமாகக் கொடுத்தார்.a—யாத். 15:22-25; சங். 78:23-25.

2. “யெகோவாவின் கை ரொம்பச் சிறியது என்றா நினைக்கிறாய்” என்று மோசேயிடம் யெகோவா ஏன் கேட்டார்? (எண்ணாகமம் 11:21-23, அடிக்குறிப்பு.)

2 இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்து இப்போது சுமார் ஒரு வருஷம் ஆகிவிட்டது. விசுவாசத்தில் பலமாக இருந்த மோசேயின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. எல்லா மக்களுக்கும் யெகோவாவால் இறைச்சியைக் கொடுக்க முடியுமா என்று யோசித்தார். அவர்கள் இருந்ததோ வறண்ட வனாந்தரம். அங்கே இருந்த லட்சக்கணக்கான ஆட்களுக்கு யெகோவா எப்படி இறைச்சி கொடுப்பார் என்று மோசேயால் கற்பனைகூட செய்ய முடியவில்லை. அதைப் பற்றி அவர் யெகோவாவிடம் கேள்வி கேட்டார். அதற்கு யெகோவா, “யெகோவாவின் கை ரொம்பச் சிறியது என்றா நினைக்கிறாய்?” என்று கேட்டார். (எண்ணாகமம் 11:21-23-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) இங்கே “யெகோவாவின் கை” என்பது கடவுளுடைய சக்தியை, அதாவது நினைத்ததைச் செய்து முடிக்கிற அவருடைய சக்தியை, குறிக்கிறது. அப்படியென்றால், ‘நான் சொன்னதை என்னால் செய்ய முடியாது என்றா நினைக்கிறாய்?’ என்று மோசேயிடம் யெகோவா கேட்பதுபோல் இருந்தது.

3. மோசே மற்றும் இஸ்ரவேலர்கள் பற்றிய பதிவை யோசித்துப் பார்ப்பது ஏன் முக்கியம்?

3 ‘என்னையும் என் குடும்பத்தையும் யெகோவாவால் கவனித்துக்கொள்ள முடியுமா’ என்று நீங்களும் யோசித்திருக்கிறீர்களா? அப்படி யோசித்திருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி, மோசே மற்றும் இஸ்ரவேலர்களுடைய உதாரணத்திலிருந்து நம்மால் பாடம் கற்றுக்கொள்ள முடியும். கடவுளால் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போய்விட்டது என்பதை இப்போது பார்க்கலாம். யெகோவாவின் கை சிறியதில்லை என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிற சில வசனங்களையும் பார்க்கலாம்.

மோசே மற்றும் இஸ்ரவேலர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

4. யெகோவாவால் தங்களைக் கவனித்துக்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் ஏன் நிறைய இஸ்ரவேலர்களுக்கு வந்திருக்கும்?

4 யெகோவா தங்களைக் கவனித்துக்கொள்வாரா என்ற சந்தேகம் இஸ்ரவேலர்களுக்கு ஏன் வந்திருக்கும் என்பதை யோசித்துப் பார்க்கலாம். அவர்கள் எகிப்திலிருந்து வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் பயணம் செய்துகொண்டிருந்தார்கள். பயங்கரமான பெரிய வனாந்தரம் வழியாக போய்க்கொண்டிருந்தார்கள். இஸ்ரவேலர்களோடு ‘பலதரப்பட்ட ஜனங்களும்’ ஏராளமாக இருந்தார்கள். (யாத். 12:38; உபா. 8:15) இந்தப் பலதரப்பட்ட ஜனங்களுக்கு, மன்னாவைச் சாப்பிட்டு சாப்பிட்டு அலுத்துப்போய்விட்டது; இஸ்ரவேலர்களுக்கும் அலுத்துப்போனது. அதனால், அந்த ஜனங்களோடு சேர்ந்து இஸ்ரவேலர்களும் மோசேயிடம் குறைசொல்ல ஆரம்பித்தார்கள். (எண். 11:4-6) எகிப்தில் அவர்கள் சாப்பிட்ட உணவை நினைத்து ஏங்க ஆரம்பித்தார்கள். அவர்கள் குறைசொல்லிக்கொண்டே இருந்ததால், அவர்கள் எல்லாருக்கும் தான்தான் இறைச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மோசே நினைத்துக்கொண்டார். ஆனால், அதை எப்படிச் செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை.—எண். 11:13, 14.

5-6. மற்ற ஜனங்களைப் பார்த்து இஸ்ரவேலர்கள் நன்றி இல்லாமல் போனதிலிருந்து நமக்கு என்ன பாடம்?

5 அந்தக் கூட்டத்திலிருந்த இஸ்ரவேலர்களாக இல்லாத ஜனங்கள் யெகோவாவுக்கு நன்றி இல்லாமல் போனார்கள். அவர்களோடு சேர்ந்து இஸ்ரவேலர்களும் அப்படி ஆகிவிட்டார்கள். இன்று நம்மைச் சுற்றி இருக்கிற நன்றி இல்லாத ஆட்களைப் பார்த்து நாமும் யெகோவாவுக்கு நன்றி இல்லாமல் போய்விட வாய்ப்பு இருக்கிறது. எப்படி? ஒரு காலத்தில் நாம் அனுபவித்த விஷயங்களை நினைத்து நாம் ஏங்க ஆரம்பித்துவிடலாம். அல்லது, மற்றவர்களிடம் இருப்பதைப் பார்த்து பொறாமைப்பட ஆரம்பித்துவிடலாம். இந்த மாதிரி எண்ணங்களை ஓரங்கட்ட வேண்டும். சூழ்நிலை எப்படி இருந்தாலும் திருப்தியோடு இருக்கக் கற்றுக்கொண்டால் சந்தோஷமாக இருப்போம்.

6 யெகோவா கொடுத்த வாக்குறுதியை இஸ்ரவேலர்கள் நினைத்துப் பார்த்திருக்க வேண்டும். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குப் போன பிறகுதான், நிறைய நல்ல நல்ல விஷயங்களை அவர்களுக்குச் செய்யப்போவதாக யெகோவா சொல்லியிருந்தார். போகும் வழியில், அதாவது வனாந்தரத்தில், அப்படிச் செய்வதாகச் சொல்லவில்லை. அதே மாதிரிதான், இந்த உலகத்திலேயே எல்லா விஷயங்களும் கிடைத்துவிடும் என்று நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. யெகோவா நமக்கு நல்ல நல்ல விஷயங்களை புதிய உலகத்தில்தான் தரப்போகிறார். அதனால், இப்போது நம்மிடம் இல்லாத விஷயங்களைப் பற்றி யோசிக்காமல், யெகோவா கொடுத்திருக்கும் எதிர்கால வாக்குறுதிகளைப் பற்றி யோசிக்க வேண்டும். யெகோவாமேல் வைத்திருக்கிற நம்பிக்கையை வளர்ப்பதற்கு உதவும் வசனங்களையும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

7. யெகோவாவால் எப்போதுமே நமக்கு உதவி செய்ய முடியும் என்று நாம் ஏன் உறுதியாக நம்பலாம்?

7 “யெகோவாவின் கை ரொம்பச் சிறியது என்றா நினைக்கிறாய்?” என்று ஏன் மோசேயிடம் யெகோவா கேட்டார் என்று நீங்கள் யோசிக்கலாம். தனக்கு இருக்கிற பலத்தைப் பற்றி மட்டுமல்ல, ஒருவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும், தன்னால் அவருக்கு உதவ முடியும் என்பதை மோசேக்குப் புரியவைக்க யெகோவா அப்படிக் கேட்டிருக்கலாம். வறண்ட வனாந்தரத்தில், எங்கோ ஒரு மூலையில் அவர்கள் இருந்தாலும், யெகோவாவால் அவர்களுக்குத் தேவையான இறைச்சியைக் கொடுக்க முடியும். “யெகோவா பலத்த கையினாலும், ஓங்கிய புயத்தினாலும் [அதாவது, நீட்டப்பட்ட கையினாலும்]” தன்னுடைய சக்தியைக் காட்டினார். (சங். 136:11, 12, தமிழ் O.V.) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், என்ன கஷ்டத்தில் இருந்தாலும், யெகோவாவால் நமக்கு உதவ முடியும்.—சங். 138:6, 7.

8. இஸ்ரவேலர்கள் செய்த அதே தப்பை நாம் எப்படிச் செய்யாமல் இருக்கலாம்? (படத்தையும் பாருங்கள்.)

8 சொன்ன மாதிரியே யெகோவா அவர்களுக்கு இறைச்சியைக் கொடுத்தார். எக்கச்சக்கமான காடைகள் வந்து குவியும்படி செய்தார். இருந்தாலும், இந்த அற்புதத்துக்கு இஸ்ரவேலர்கள் நன்றியோடு இருக்கவில்லை. பேராசை பிடித்துத் திரிந்தார்கள். ராத்திரியும் பகலுமாக எக்கச்சக்கமான காடைகளைச் சேகரித்து வைத்தார்கள். காடைகளுக்காக அவர்கள் ‘ஆலாய்ப் பறந்ததை’ பார்த்து யெகோவா பயங்கரமாகக் கோபப்பட்டார். அதனால் அவர்களைத் தண்டித்தார். (எண். 11:31-34) இதிலிருந்து ஒரு நல்ல பாடத்தை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஜாக்கிரதையாக இல்லை என்றால், நமக்கும் பேராசை வந்துவிடும். நாம் பணக்காரர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, ‘பரலோகத்தில் பொக்கிஷங்களைச் சேர்த்து’ வைப்பதற்குத்தான் முயற்சி செய்ய வேண்டும். யெகோவாவிடமும் இயேசுவிடமும் நெருக்கமான நட்பு வைத்துக்கொள்வதுதான் நமக்கு முக்கியமாக இருக்க வேண்டும். (மத். 6:19, 20; லூக். 16:9) அப்படிச் செய்தால், நமக்கு என்ன தேவையோ அதை யெகோவா நிச்சயம் கொடுப்பார் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்.

ராத்திரி நேரத்தில் இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் எக்கச்சக்கமான காடைகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

வனாந்தரத்தில் நிறைய இஸ்ரவேலர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? நமக்கு என்ன பாடம்? (பாரா 8)


9. எதை நாம் உறுதியாக நம்பலாம்?

9 இன்றும் யெகோவா தன்னுடைய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டுகிறார். அதற்காக, நமக்குப் பணப் பிரச்சினையோ சாப்பாட்டுப் பிரச்சினையோ வராது என்று சொல்ல முடியாது.b ஆனால் அப்படியே வந்தாலும், யெகோவா நம்மை அம்போவென்று விட்டுவிட மாட்டார். பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்குத் தேவையான உதவியைச் செய்வார். இப்போது, இரண்டு சூழ்நிலைகளைப் பார்க்கலாம்: (1) நமக்குப் பணப் பிரச்சினை வரும்போது, (2) எதிர்காலத்துக்காக ஏதாவது சேர்த்து வைக்க யோசிக்கும்போது. இந்தச் சூழ்நிலைகளில், நம்முடைய தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்வார் என்று நாம் எப்படி நம்பிக்கையோடு இருக்கலாம் என்று பார்க்கலாம்.

பணப் பிரச்சினை வரும்போது

10. பணப் பிரச்சினை எப்படியெல்லாம் வர வாய்ப்பு இருக்கிறது?

10 இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க, பணப் பிரச்சினை நமக்கு அதிகமாகலாம். அரசியல் குழப்பங்கள், போர்கள், இயற்கைப் பேரழிவுகள், தொற்றுநோய் போன்ற காரணங்களால் நமக்கு எதிர்பாராத செலவுகள் வந்துவிடலாம். அல்லது, நம்முடைய வேலை பறிபோவதற்கும், சொத்துப்பத்துகளையோ வீட்டையோ இழப்பதற்கும் அவை காரணமாக ஆகிவிடலாம். அப்படி நடந்தால் நாம் ஒரு புது வேலையைத் தேட வேண்டியிருக்கலாம். அல்லது நம் குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதற்காக வேறு ஒரு இடத்துக்கு குடிமாற வேண்டியிருக்கலாம். இந்த மாதிரி சமயங்களில் முடிவுகளை எடுக்கும்போது, யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

11. பணப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கு எது உதவும்? (லூக்கா 12:29-31)

11 உங்களுடைய மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் சொல்லுங்கள்; அது உங்களுக்கு ரொம்பவே உதவியாக இருக்கும். (நீதி. 16:3) நல்ல முடிவுகளை எடுக்க யெகோவாவிடம் ஞானம் கேளுங்கள். ‘என்ன ஆகுமோ என்று அநாவசியமாகக் கவலைப்படாமல்’ இருப்பதற்கும், மனஅமைதியோடு இருப்பதற்கும் உதவி கேளுங்கள். (லூக்கா 12:29-31-ஐ வாசியுங்கள்.) வாழ்க்கைக்கு எது தேவையோ அதுமட்டும் கிடைத்தால் போதும் என்று திருப்தியாக இருப்பதற்கும் அவரிடம் உதவி கேளுங்கள். (1 தீ. 6:7, 8) பணப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம் என்பதற்கு நம்முடைய பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்து பாருங்கள். பணப் பிரச்சினையைச் சமாளிப்பது சம்பந்தமாக நம்முடைய வெப்சைட்டில் இருக்கிற கட்டுரைகள் நிறைய பேருக்கு ரொம்ப பிரயோஜனமாக இருந்திருக்கிறது.

12. குடும்பத்துக்காக நல்ல முடிவுகள் எடுப்பதற்கு ஒருவர் என்னென்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ள வேண்டும்?

12 கைநிறைய சம்பாதிக்கலாம் என்பதற்காக சிலர் தங்களுடைய குடும்பத்தை விட்டு ரொம்ப தூரம் போய் வேலை செய்கிறார்கள். அவர்கள் எடுத்த முடிவு முட்டாள்தனமானது என்று பிறகுதான் புரிந்துகொள்கிறார்கள். அதனால், ஒரு வேலையைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு, எவ்வளவு சம்பளம் கிடைக்கும் என்று மட்டுமே யோசிக்காதீர்கள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் யெகோவாவோடு இருக்கிற பந்தம் எப்படிப் பாதிக்கப்படும் என்று யோசியுங்கள். (லூக். 14:28) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் என்னுடைய துணையை விட்டுவிட்டு தனியாக இருந்தால் என்னுடைய கல்யாண வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படும்? சபைக் கூட்டங்களுக்குப் போவது, ஊழியத்துக்குப் போவது, சகோதர சகோதரிகளோடு நெருங்கி இருப்பது என இவையெல்லாம் எப்படிப் பாதிக்கப்படும்?’ உங்களுக்குப் பிள்ளைகள் இருந்தால், ‘நான் என் பிள்ளைகளோடு இல்லையென்றால், “யெகோவா சொல்கிற விதத்தில் அவர்களைக் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி” அவர்களை வளர்க்க முடியுமா?’ என்ற முக்கியமான கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். (எபே. 6:4) யெகோவாவுடைய சட்டங்களைப் பற்றித் தெரியாத உங்களுடைய சொந்தபந்தங்களும், நண்பர்களும் சொல்வதைக் கேட்பதற்குப் பதிலாக, யெகோவா என்ன யோசிப்பார் என்பதைப் புரிந்துகொண்டு அதுபோல் செய்யுங்கள்.c ஆசியாவில் இருக்கிற டோனி என்ற சகோதரருக்கு வெளிநாட்டில் வேலை செய்ய நிறைய வாய்ப்புகள் வந்தது. கைநிறைய சம்பளமும் கொடுப்பதாகச் சொன்னார்கள். ஆனால், அதைப் பற்றி அவர் ஜெபம் செய்தார். தன்னுடைய மனைவியோடு கலந்துபேசினார். அதற்குப் பிறகு, அந்த வேலை வாய்ப்புகளை ஓரங்கட்டினார். குடும்பச் செலவுகளைக் குறைக்கத் திட்டம்போட்டார். இப்போது தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்த்து டோனி இப்படிச் சொல்கிறார்: “நிறைய பேர் சத்தியத்துக்கு வருவதற்கு என்னால் உதவி செய்ய முடிந்திருக்கிறது. என் பிள்ளைகளும் யெகோவாவுக்குச் சேவை செய்வதில் ரொம்ப ஆசையாக இருக்கிறார்கள். மத்தேயு 6:33-ல் சொல்லியிருப்பதுபோல் வாழ்ந்தால், யெகோவா நம்மை நிச்சயம் பார்த்துக்கொள்வார் என்று எங்களுடைய அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டோம்.”

எதிர்கால தேவைகளுக்காகத் திட்டம் போடும்போது

13. வயதான காலத்தில் நம்மைக் கவனித்துக்கொள்வதற்காக இப்போது நாம் என்ன சில நியாயமான விஷயங்களைச் செய்யலாம்?

13 வயதான காலத்தில் நம்மையே நாம் கவனித்துக்கொள்ள திட்டங்கள் போடும்போதும், யெகோவாமேல் நம்பிக்கை வைத்திருப்பதைக் காட்ட முடியும். நம்முடைய எதிர்கால தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும் என்றுதான் பைபிளும் சொல்கிறது. (நீதி. 6:6-11) அதனால், எதிர்காலத்துக்காகச் சேமித்து வைப்பதில் எந்தத் தப்பும் இல்லை. பணம் ஓரளவு பாதுகாப்பைத் தரும்தான். (பிர. 7:12) ஆனால், பணத்தைச் சேமித்து வைப்பதே நம்முடைய வாழ்க்கையாக ஆகிவிடாதபடி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

14. எதிர்காலத்துக்காகத் திட்டம் போடும்போது எபிரெயர் 13:5-ஐ எப்படி மனதில் வைத்துக்கொள்ளலாம்?

14 “கடவுளுடைய பார்வையில் பணக்காரனாக இல்லாமல்,” உலகத்தில் சொத்துகளைச் சேர்த்து வைப்பது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இயேசு சொன்ன உதாரணத்திலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. (லூக். 12:16-21) நாளைக்கு என்ன நடக்கும் என்று நம் யாருக்குமே தெரியாது. (நீதி. 23:4, 5; யாக். 4:13-15) அதோடு, இயேசுவுடைய சீஷர்களாக இருப்பதால் நமக்கு வேறொரு பிரச்சினையும் வர வாய்ப்பிருக்கிறது. தன்னுடைய சீஷராக இருக்க விரும்புகிறவர்கள், தங்களுடைய உடைமைகள் எல்லாவற்றையும் “விட்டுவிட்டு” வருவதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்று இயேசு சொன்னார். (லூக். 14:33) முதல் நூற்றாண்டில், யூதேயாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அதுபோன்ற ஒரு இழப்பைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள். (எபி. 10:34) நம்முடைய காலத்தில்கூட அரசியல் கட்சிகளுக்கு ஆதரவு கொடுக்காததால், நிறைய பணம் பொருளை நம்முடைய சகோதர, சகோதரிகள் இழந்திருக்கிறார்கள். (வெளி. 13:16, 17) இந்த சூழ்நிலைகளைச் சமாளிக்க எது அவர்களுக்கு உதவியது? “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று கடவுள் சொல்லியிருக்கிற வாக்குறுதியின் மேல் நம்பிக்கை வைத்தது அவர்களுக்கு உதவியது. (எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.) வயதான காலத்தில் நம்மையே நாம் பார்த்துக்கொள்வதற்காக திட்டங்கள் போடுவதில் தப்பில்லை. அதேசமயத்தில், எதிர்பாராத சம்பவங்கள் ஏதாவது நடந்துவிட்டால், யெகோவா நமக்கு உதவி செய்வார் என்று முழுமையாக நம்பியிருக்கலாம்.

15. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை எப்படிப் பார்க்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

15 சில கலாச்சாரங்களில், வயதான காலத்தில் பிள்ளைகள் தங்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே மக்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தப் பிள்ளைகளை தங்களுடைய “ஓய்வூதிய திட்டமாக” அந்தப் பெற்றோர்கள் பார்க்கிறார்கள். ஆனால் பைபிள் என்ன சொல்கிறது? பெற்றோர்கள்தான் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள வேண்டும். (2 கொ. 12:14) பெற்றோர்களுக்கு வயதாக வயதாக, பிள்ளைகளிடமிருந்து அவர்களுக்குச் சில உதவிகள் தேவைப்படலாம். அது எதார்த்தம்தான். அந்த மாதிரி உதவிகளை பிள்ளைகளும் சந்தோஷமாகச் செய்வார்கள். (1 தீ. 5:4) அதேசமயத்தில், கிறிஸ்தவ பெற்றோர்கள் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். பிள்ளைகளிடமிருந்து பண உதவி கிடைக்கும் என்ற நோக்கத்தோடு பிள்ளைகளை வளர்த்தால் பெற்றோர்களுக்குச் சந்தோஷம் கிடைக்காது. அதற்குப் பதிலாக, தங்கள் பிள்ளைகள் யெகோவாவின் ஊழியர்களாக ஆவதற்கு உதவி செய்தால் உண்மையிலேயே அவர்களுக்குச் சந்தோஷம் கிடைக்கும்.—3 யோ. 4.

ஒரு தம்பதி, தங்களுடைய மகளிடமும் மருமகனிடமும் வீடியோ காலில் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மகளும் மருமகனும், கட்டுமான வேலையில் உடுத்தும் உடையைப் போட்டிருக்கிறார்கள்.

யெகோவாவை நம்பியிருக்கும் தம்பதிகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி முடிவுகளை எடுக்கும்போது பைபிள் நியமங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் (பாரா 15)d


16. பிள்ளைகள் தங்களையே பார்த்துக்கொள்வதற்குப் பெற்றோர்கள் எப்படிச் சொல்லிக்கொடுக்கலாம்? (எபேசியர் 4:28)

16 எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் எப்படித் தங்களையே கவனித்துக்கொள்ளலாம் என்பதைச் சொல்லிக்கொடுங்கள். அப்படி நீங்கள் சொல்லிக்கொடுக்கிற சமயத்தில், நீங்கள் யெகோவாமேல் எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் என்பதைக் காட்டுங்கள். கடினமாக உழைப்பது எவ்வளவு முக்கியம் என்பதை சின்ன வயதிலேயே சொல்லிக்கொடுங்கள். (நீதி. 29:21; எபேசியர் 4:28-ஐ வாசியுங்கள்.) பள்ளியில் நன்றாகப் படிக்கவும் பிள்ளைகளுக்கு உதவுங்கள். கல்வியை ஞானமாகப் பயன்படுத்துவதற்கும் உதவுங்கள். இது சம்பந்தமான பைபிள் நியமங்களை நீங்கள் நன்றாக ஆராய்ச்சி செய்து பாருங்கள்; நல்ல முடிவுகளை எடுக்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். அப்படிச் செய்தால், பிள்ளைகள் தங்களுக்குக் கிடைத்த கல்வியைப் பயன்படுத்தி, தங்களையே கவனித்துக்கொண்டு ஊழியம் செய்யவும், முடிந்தால் பயனியர் செய்யவும், கற்றுக்கொள்வார்கள்.

17. நாம் எந்த விஷயத்தில் உறுதியோடு இருக்கலாம்?

17 நம்முடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதற்கான திறமையும் ஆசையும் யெகோவாவுக்கு இருக்கிறது. அவருடைய உண்மையுள்ள ஊழியர்களாக இதை நாம் முழுமையாக நம்புகிறோம். இந்த உலகத்தின் முடிவு நெருங்க நெருங்க, யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை உரசிப்பார்க்கிற சோதனைகள் வரலாம். ஆனால் என்ன நடந்தாலும் சரி, யெகோவாமேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையில் உறுதியோடு இருக்கலாம். யெகோவா அவருடைய சக்தியைப் பயன்படுத்தி நமக்குத் தேவையானதை கட்டாயம் கொடுப்பார். யெகோவாவுடைய கை சிறியது என்றா நினைக்கிறீர்கள்?!

உங்கள் பதில் என்ன?

  • மோசேக்கும் இஸ்ரவேலர்களுக்கும் நடந்த சம்பவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

  • பணப் பிரச்சினை வரும்போது நாம் எப்படி யெகோவாவை நம்பியிருப்பதைக் காட்டலாம்?

  • எதிர்காலத்துக்காகத் திட்டம் போடும்போது நாம் எதை மனதில் வைத்துக்கொள்ளலாம்?

பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

a அக்டோபர் 2023 காவற்கோபுரத்தில் “வாசகர் கேட்கும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.

b செப்டம்பர் 15, 2014 காவற்கோபுரத்தில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியைப் பாருங்கள்.

c ஏப்ரல் 15, 2014 காவற்கோபுரத்தில் “ஒருவராலும் இரண்டு எஜமான்களுக்கு சேவை செய்ய முடியாது” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

d படவிளக்கம்: யெகோவாவை நம்பியிருக்கும் ஒரு தம்பதி தங்களுடைய மகளிடம் வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய மகளும், மருமகனும் ராஜ்யமன்ற கட்டுமான சேவையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்