கொடுப்பதன் மகிழ்ச்சி நன்றியுடன் பெற்றுக்கொள்வதன் மூலம் கூடுகிறது
முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அந்தப் புதுமணத் தம்பதிகளைப் மீண்டும் ஒருமுறை மனதிற்கு கொண்டு வாருங்கள். அவர்கள் தனித்திருக்கையில் ஒவ்வொரு வெகுமதியாகப் பிரித்துப் பார்ப்பதையும், அவை ஒவ்வொன்றும் தங்களுக்குத் தேவையானதே என்று சொல்லிக்கொள்வதையும் நீங்கள் காண முடிகிறதா? மணப்பெண் படுக்கை விரிப்புகளையும் தலையணை உறைகளையும் எளிதில் எடுத்து பயன்படுத்துவதற்காக ஒரு தனி அலமாரியில் வைப்பதையும், பீங்கான் சாமான்களையும் சில்வர் பாத்திரங்களையும் இன்னொரு அலமாரியில் வைப்பதையும், எளிதில் அனுதினமும் பயன்படுத்துவதற்கு வசதியாக ரொட்டி வாட்டும் மின்பொறியை சமையலறை அலமாரியில் வைப்பதையும் நீங்கள் காண முடிகிறதா?
இருவருமாக சேர்ந்து ஒவ்வொரு படத்தையும் கவனமாக சரியான இடத்தில் மாட்டுகின்றனர். கடிகாரங்களை வசதியான இடங்களில் வைக்கின்றனர். தங்களுடைய அழகிய சிறிய உணவருந்தும் மேசையில் புதிய மேசை விரிப்புகளை விரிக்கின்றனர். கைத் துவாலை வளையத்திலிருக்கும் ஏற்ற கைத் துவாலைகள் அதற்கு அழகூட்டுகிறது.
குறிப்பாக இந்த ஒரு வெகுமதி அவர்களுக்கு அதிக பிரியமாயிருக்கிறது—தகரக்குவளைகளைத் திறக்க ஒரு மின் சாதனம். இது அடிக்கடி பயன்படுத்தப்படும் என்பது மணப்பெண்ணின் எதிர்பார்ப்பு. தன்னால் வாங்க முடியாது என்பதை அறிந்த ஒரு நெருங்கிய நண்பர் அதைக் கொடுத்தார். இந்தப் படுக்கை விரிப்பு, கை மூட்டுவீக்கங் கொண்ட வயதான தன் சித்தியின் கைவேலை. அதன் அழகிய வேலைப்பாடுகளைச் செய்துமுடிக்க அவளுக்கு அனேக மாதங்கள் எடுத்திருக்கும். அன்பின் உழைப்பை என்னென்று சொல்லுவது!
அவர்கள் ஒவ்வொரு பொருளையும் மதித்துப் போற்றுகிறார்கள். எந்த ஒரு பொருளையாவது கடைக்கு எடுத்துச் சென்று மாற்றவோ அல்லது பணமாக்கவோ முனைந்தார்களா? இல்லை! இப்பொழுதுதான் அன்பின் மிக முக்கியமான பாகம் வருகிறது—தங்களுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுதல். அதைத் தெரிவிக்க அவர்கள் நேரம் எடுத்துக்கொள்வார்களா?
ஒரு பொருளை, விலையுயர்ந்த அல்லது விலைமலிவான ஒரு பொருளை—ஒருவேளை ஒரு பூச்செண்டு, ஒரு பை நிறைய பழம், ஒரு சாதாரண வீட்டுச் செடி போன்ற ஒன்றை நீங்கள் வெகுமதியாகப் பெற்றிருக்கிறீர்களா? நீங்கள் வியாதியாக இருக்கும் போது உங்களுக்குப் பிரியமான நண்பர் ஒருவர் உங்கள் வீட்டைச் சுத்தம் செய்தாரா, அல்லது உங்களால் இயலாதிருக்கும்போது உங்கள் குடும்பத்துக்கு ஒருவேளை உணவு சமைத்துக் கொடுத்தாரா? அதற்காக நீங்கள் அவர்களுக்கு நன்றி சொன்னீர்களா?
“நன்றி” என்ற வார்த்தை எவ்வளவு சாதாரண ஒரு வார்த்தை. அதை ஒரு சிறிய மூச்சிலேயே சொல்லிவிடலாம். என்றாலும் அந்த வார்த்தை எவ்வளவாக அசட்டை செய்யப்படுகிறது. ஒருமுறை ஒரு டாக்ஸி ஓட்டுனர் தன்னுடைய வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் மறந்து விட்டுவிட்ட ஒரு பணப்பையை அதற்குரிய சொந்தக்காரரிடம் திருப்பிக்கொடுத்தார். என்னே ஒரு வெகுமதி! அதன் சொந்தக்காரர் ஒரு வார்த்தையும் சொல்லாமல் அந்தப் பணப்பையை வாங்கிக்கொண்டார். இந்த நன்றியில்லாத் தன்மையைப் பார்த்த அந்த டாக்ஸி ஓட்டுனர் எவ்வளவாய் மனவேதனைப்பட்டிருப்பார் என்று கற்பனைசெய்துப் பாருங்கள். “அவன் ‘நன்றி’ என்று மட்டும் செல்லியிருந்தால்,” என்று புலம்பினான்.
உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவர் தொகுதி மக்களுக்கு உதவும் பொருட்டு ஒரு சங்கம் அமைத்தது குறித்து இந்தப் பத்திரிகையின் ஒரு இதழ் அறிக்கை செய்தது. “வாகனங்களில் சக்கரத்தின் டயர் காற்றிழந்துவிட்டால் அவர்களுக்கு அதனைப் பழுதுபார்த்து சக்கரத்தில் மாட்டிக் கொடுப்பதும், எதிர்பாராதவாறு பெட்ரோல் அல்லது டீசல் தீர்ந்துவிட்டால் அவர்களுக்கு அதைக் கொடுப்பதும், மற்றும் வேறு வழிகளிலும் உதவியின்றி திகைத்துக்கொண்டிருக்கும் பயணிகளுக்கு உதவினார்கள்” என்று அந்தக் கட்டுரை குறிப்பிட்டது. ‘தங்களுடைய சேவைக்குப் பணம் பெற்றுக்கொள்வதில்லை. தங்களுடைய சங்கத்தின் கோப்புகளில் வைப்பதற்காக “உங்களுக்கு நன்றி” என்று சொல்லும் ஒரு கடிதத்தை மட்டும் எழுதும்படியாக அந்த வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டார்கள்.’ பலன்கள் யாது? அந்தச் சங்கத்தின் பிரதிநிதி பின்வருமாறு சொன்னார்: “உங்களுக்குத் தெரியுமா, நாங்கள் செயல்பட ஆரம்பித்து இரண்டு வருடங்களில் 150-க்கும் அதிகமான வாகன ஒட்டுனர்களுக்கு உதவியிருக்கிறோம் என்று எமது சங்கத்தின் பதிவுகள் காண்பிக்கிறபோதிலும், இதுவரை நாங்கள் இரண்டே கடிதங்கள்தான் பெற்றிருக்கிறோம்.”
உங்களுடைய உயிரைப் பாதுகாத்த ஒருவருக்கு நீங்கள் எந்தளவாக நன்றிசொல்வீர்கள். அந்த நபர் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வெகுமதியை நீங்கள் கற்பனைசெய்து பாருங்கள்! என்றாலும், ஒருவன் தன்னுடைய உயிரையும் பாராமல், மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பலில் மரணப் பிடியிலிருந்து 17 பேரை மீட்க, கடைசியில் தானோ அதிகக் களைப்புற்றவனாக வீட்டுக்குக் கொண்டுசெல்லப்பட்டான். பல வருடங்களுக்குப் பின்னர், அவனுடைய அந்தத் தீரச்செயலில் மறக்கக்கூடாததாயிருப்பது என்ன என்று கேட்கப்பட்டது, அவன் சொன்னான்: “இது மட்டுந்தான் ஐயா. நான் பாதுகாத்த பதினேழு பேரில் ஒருவர்கூட எனக்கு நன்றி சொல்லவில்லை.”
தயவுள்ள ஒரு செயலுக்கு, ஒரு பொருள் சம்பந்தமான வெகுமதிக்கு, அல்லது உயிராகிய வெகுமதிக்கு “நன்றி” என்று சொல்லுவது பலவீனத்தின் அடையாளமா? இவர்கள் தங்களுடைய சொந்த உயிருக்காக உயிரின் மகா ஊற்றுமூலராகிய யெகோவா தேவனுக்கு எப்பொழுதாவது நன்றி செலுத்துவார்களா? தாங்கள் பார்க்கக்கூடிய ஒருவருக்கு நன்று சொல்ல முடியாவிட்டால், தாங்கள் பார்க்கமுடியாத ஒருவருக்கு நன்றி செலுத்தும் சாத்தியமுண்டா?—1 யோவான் 4:20.
இன்றைய இளைஞரில் பலர் தாங்கள் பெற்றிடும் வெகுமதிக்கு அல்லது தயவின் செயலுக்கு இருதயப்பூர்வமாக நன்றி தெரிவிப்பது அவர்களுக்குக் கடினமாக இருப்பதில் ஆச்சரியம் உண்டோ? பெற்றோர் தாமே “தயவுசெய்து” என்றும் “நன்றி” என்றும் சொல்லாதிருப்பார்களானால், அவர்களுடைய பிள்ளைகளுங்கூட அப்படிச் செய்ய மாட்டார்கள்.
போற்றுதலின்மை, நாம் “கடைசி நாட்களில்” வாழ்கிறோம் என்பதற்கு ஓர் அடையாளம். பவுல் அப்போஸ்தலன் பின்வருமாறு சொன்னான்: “கடைசி நாட்களில் கொடிய காலங்கள் வரும். எப்படியெனில் மனுஷர்கள் தற்பிரியராயும் . . . நன்றியறியாதவர்களாயும் . . . இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1, 2.
போற்றுதலை எப்படி காண்பிப்பது
அச்சிடப்பட்ட நன்றி அட்டைகளைத் தயாரித்தலும் விற்பனை செய்தலும் ஒரு பெரிய வியாபாரம். இவற்றில் பல நம் உணர்ச்சிகளை மிக அழகாகத் தெரிவிப்பதாயிருக்கின்றன. நமக்கு வெகுமதிகள் கொடுத்த அல்லது தயை காண்பித்த ஆட்களுக்கு இவற்றை வாங்கி அனுப்புவது மிகவும் வசதியாயிருக்கிறது. அதோடுகூட அவற்றிற்குத் தனிப்பட்டவிதத்தில் நம் உணர்வைத் தெரிவிப்பது, போற்றுதலை நம்முடைய சொந்த வார்த்தைகளில் நம்முடைய சொந்த கைப்பட எழுதித் தெரிவிப்பது—ஒருவேளை நாம் பெற்ற வெகுமதியைக் குறிப்பிட்டு, அதை நாம் எவ்வளவாகக் போற்றுகிறோம் என்பதையும் அதை உபயோகிப்பதில் எவ்வளவாக மகிழ்ச்சியடைகிறோம் அல்லது மகிழ்ச்சியடைவோம் என்பதையும் தெரிவிப்பது ஓர் அன்பான, தயவான செயலாக இருக்காதா?
இத்துடன்கூட, கூடுமானவரை, நன்றியை மலர்ந்த முகத்துடன் சொல்லில் தெரிவிப்பதும், கைகுலுக்கல், அன்போடு அணைத்தல், அல்லது அன்பின் மற்ற வெளிக்காட்டுதல்கள் மூலம் தெரிவிப்பதும் கொடுத்தவரால் போற்றப்படாதா? அப்படிச் செய்ய நமக்கு நேரம் இல்லை என்று குறைகூறுவோமானால், அவற்றைக் கொடுத்தவர் நமக்காக செலவழித்த நேரத்தையும், முயற்சியையும், பணத்தையுங் குறித்து சிந்தித்துப் பாருங்கள். கொடுப்பவரின் மகிழ்ச்சி நாம் காண்பிக்கும் போற்றுதலினால் கூட்டப்படுகிறது.
எல்லாரிலும் மிக அதிகமாகக் கொடுத்தவராகிய இயேசுவின் வார்த்தைகளை நாம் நினைவுக்குக் கொண்டுவருவது நல்லது: “பெற்றுக்கொள்வதிலிருப்பதைவிட கொடுப்பதிலேயே மிகுந்த மகிழ்ச்சி உண்டு.” (அப்போஸ்தலர் 20:35, NW) விரைவில், வரக்கூடிய நீதியான பூமிக்குரிய பரதீஸில், மனித குடிகள் தாங்கள் பெற்றிருக்கும் உயிராகிய பரிசுக்காக யெகோவாவுக்கு அனுதினமும் நன்றிசெலுத்துகிறவர்களாயிருப்பது மட்டுமின்றி, அயலகத்தாரின் தயவான செயல்களுக்காக அன்பான போற்றுதலைத் தெரிவிப்பவர்களாயுமிருப்பார்கள். இப்பொழுதே நாம் போற்றுதல் தெரிவிப்பவர்களாயிருந்து, யெகோவாவின் அங்கீகாரத்தையும் நம்முடைய அயலகத்தாரின் தயவையும் கொண்டிருப்போமாக. (g87 11⁄22)