ஓர் இசைக்கலைஞர் உண்மையான ஒத்திசைவைத் தெரிந்தெடுக்கிறார்
மேற்கு ஜெர்மனியின் பிரபல இசைக்கலைஞர் ஒருவரை “விழித்தெழு!” பேட்டி காண்கிறது.
ஹன்ஸ், நீங்கள் ஏன் ஓர் இசைக்கலைஞரானீர்கள்?
நான் சிறுவனாக இருக்கையிலேயே இசையைக் கேட்பதற்கு கவர்ந்திழுக்கப்பட்டேன். 1950-களின் முடிவில், தி ஷேடோஸ் மற்றும் தி வென்ச்சர்ஸ் போன்ற இசைக் குழுக்களின் கித்தார் இசை எனக்குக் கிளர்ச்சியூட்டியது. 11-வது வயதில் நான் கித்தார் பாடங்களைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்.
பிறகு நான் கர்நாடக கித்தார் இசையில் ஆர்வம் கொண்டேன்; நான் 18 வயதாக இருக்கையில் அதைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். 1971-ல் இறுதி தேர்வுகளை எழுதினேன். அவை என்னை ஓர் இசை ஆசிரியராக தகுதியாக்கின. மூன்று ஆண்டுகள் நான் இளைஞர்களுக்குப் போதித்தேன்; இசைப் பள்ளி ஒன்றில் பாடங்கள் சொல்லிக் கொடுத்தேன். அப்போதுதான் தொழில் ரீதியாக “கேட்பதற்கு எளிதான சாதாரண” இசையை வாசிக்க நான் ஆரம்பித்தேன்.
தற்செயலாக நான் கித்தாரில் வாசித்த “ஃவெர்தெ” என்ற இசை மிக விரைவில் பிரபலமாயிற்று.
இசை இன்று உங்களுடைய வாழ்க்கையில் என்ன பாகத்தை வகிக்கிறது?
நான் இப்போது இசை வாசிக்கவும் கேட்கவும் விரும்புகிறேன். அதன் மூலமாகத்தான் என்னுடைய வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிக்கிறேன். ஆனால் வித்தியாசமான காரியம் ஒன்று இப்போது என்னுடைய வாழ்க்கையில் முதலிடத்தை வகிக்கிறது, இது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
அது எவ்விதமாக சம்பவித்தது?
ஜனவரி 1977-ல் ஒரு புதிய தவில் வாசிக்கும் ஃவால் என்பவர் எங்களுடைய குழுவில் சேர்ந்தார். அவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்று நாங்கள் அறிந்தவுடன், மதம் என்பது ஒரு தனிப்பட்ட காரியமாக இருப்பதனால், அவருடைய விசுவாசத்தில் உட்படக்கூடாது என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
நாங்கள் ஓர் உல்லாசப் பிரயாணம் சென்றோம்; ஒழுக்க நெறிகள், புகையிலை உபயோகம், மற்றும் மத சம்பந்தமான பண்டிகைகள் போன்றவற்றின் மீதான அவருடைய கருத்துக்கள் எங்களுடையதிலிருந்து முற்றிலும் வித்தியாசப்படுவதை நாங்கள் விரைவில் உணர்ந்தோம். இது ஒவ்வொரு நாளும் உற்சாகமான கலந்தாலோசிப்புகளுக்கு வழிநடத்தியது. ஃவால் தன்னுடைய பதில்களுக்குப் பைபிளை உபயோகித்தார், இது என்னுடைய ஆர்வத்தை வளர்த்தது.
மதத்தைப் பற்றி முன்பு நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
நான் எப்போதும் கடவுளில் நம்பிக்கை வைத்தேன், ஆனால் மனமுவந்து ஒருபோதும் சர்ச்சிற்குச் சென்றதில்லை. ஒருவர் இறைமையியல் படித்தால் மட்டுமே பைபிளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நான் உணர்ந்தேன். இருப்பினும், என்னுடைய சர்ச் ஒருபோதும் விசுவாசத்திற்கு எனக்கு ஓர் உறுதியான அஸ்திபாரத்தைக் கொடுக்க முடியவில்லை. அதனுடைய மதகுருக்கள் எனக்கு ஏமாற்றத்தைத் தந்தனர்.
மறுபட்சத்தில், ஃவால் உண்மையில் என்னுடைய கேள்விகளுக்குப் பதிலளிக்கக்கூடியவராக இருந்தார். உதாரணமாக, காயீன் தன்னுடைய மனைவியை எங்கிருந்து அடைந்தான் என்பதைக் குறித்த முந்திய கலந்தாலோசிப்புகள் ஒருபோதும் சரியான பதிலுக்கு வழிநடத்தவில்லை. காயீன் தன்னுடைய சகோதரிகளில் ஒருத்தியை விவாகம் செய்துகொண்டான் என்ற இந்த விளக்கம் எனக்குத் திருப்தியளித்தது.—ஆதியாகமம் 4:17; 5:4.
ஃவால் எனக்கு ஒரு பைபிளைக் கொடுத்தார்; நான் உடனடியாக அதைப் படிக்க ஆரம்பித்தேன். அவர் எனக்காக கொண்டுவந்த பைபிள் பிரசுரங்களையும்கூட நான் வாசித்தேன். பிறகு கேள்விகளினால் அவரைத் தொந்தரவு செய்ய நான் ஆரம்பித்தேன். நான் கற்றுக்கொண்டிருக்கும் மகத்தான காரியங்களை என்னுடைய மனைவி பர்கிட்டிற்குச் சொன்னேன்; அவள் எங்களுடைய ஒழுங்கான பைபிள் படிப்பில் பங்கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியளித்தது. இது 1977-ன் முடிவில் நிகழ்ந்தது.
அப்போது வேதபடிப்பு அதிக பலனுள்ளதாக இருந்திருக்குமல்லவா?
ஆம், அப்படித்தான் இருந்தது. நான் அடிக்கடி என்னுடைய நண்பர்களோடு கலந்தாலோசித்த ஒரு முக்கியமான கேள்விக்கான பதிலுக்கு இது என்னுடைய கண்களைத் திறந்தது. முன்பு ஒருபோதும் ஒரு திருப்தியளிக்கும் பதிலை எங்களால் அடைய முடியவில்லை. நாங்கள் ஒவ்வொருவரும் அவரவருடைய வாழ்க்கைத் தத்துவத்தையே பின்பற்றிக் கொண்டிருந்தோம்.
ஒருவர் பிறக்கிறார், வேலை செய்கிறார், சில காரியங்களைப் பெறுகிறார், பிறகு இறந்துவிடுகிறார் என்ற உண்மை என்னுடைய மனதில் மேம்பட்டு நின்றது. ஆனால் எல்லாம் இவ்வளவுதானா? வாழ்க்கைக்கு என்ன நோக்கம் இருக்கிறது? உதாரணமாக, சில இளைஞர்கள், வாழ்க்கையில் முழுமையாக வாழ்வதற்கு முன்பாக வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே வியாதியுற்றுவிடுகிறார்கள். அநேகர் மரணத்திற்குப் பின்பு ஏதோ ஒன்று தொடர்ந்திருக்கிறது என்ற தெளிவற்ற நம்பிக்கையால் தங்களைத்தாங்களே தேற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் அது உண்மையில் ஆறுதலல்ல. இதைத்தவிர, வல்லரசுகளுக்கிடையேயும் தனிப்பட்டவர்களுக்கிடையேயும் நிலவிக்கொண்டிருக்கும் விரோதங்களைத் தீர்ப்பதற்கு ஜனங்களுக்கு வழியேதும் இல்லாமலிருப்பதை நான் கவனித்தேன்.
நம்முடைய நன்மைக்காக எழுதப்பட்ட கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஒருவர் எவ்வளவு கற்றறியக்கூடும் என்பதைக் காண்பதில் நான் வெகுவாக வியப்புற்றேன். இது ஒரு தெளிவற்ற நம்பிக்கையை அல்ல, உறுதியான மற்றும் நன்கு ஸ்தபிக்கப்பட்ட நம்பிக்கையை அளித்தது. உலக பிரச்னைகளுக்குத் தீர்வு இல்லை என்ற நம்பிக்கையற்ற மனநிலையைக் கொண்டிராதபடிக்கு என்னுடைய பைபிள் படிப்பு எனக்கு உதவியது. உண்மையில், அவற்றை எப்படிக் கையாளுவது என்பதை இது எனக்குக் காட்டியது.
ஃவால் வெகுதூரத்தில் வசித்து வந்ததால், பிற்பாடு எங்களுக்கு அருகில் வசித்த கெர்ஹார்ட் மற்றும் பார்பரா தம்பதி எங்களைச் சந்திப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அவர் என்னைப்போன்று ஓர் இசைக்கலைஞராக இருந்தார். நான் ஒரு ஸ்டூடியோவில் வேலை செய்தபோது அவ்வவ்போது அவரைச் சந்தித்திருந்தேன். ஆனால் இப்போது அவர் எவ்வளவாக மாறியிருக்கிறார் என்பதைக் காண்பதில் நான் வியப்படைந்தேன்.
என்ன மாற்றங்களை நீங்கள் அர்த்தப்படுத்துகிறீர்கள்?
நீண்ட தலைமயிரோடு ஒரு பாப் இசைக்கலைஞராக கெர்ஹார்ட் இருந்ததை நான் நினைவுகூர்ந்தேன். அவர் தன்னுடைய முகத்தில் ஒரு விகாரமான தோற்றத்தைக் கொண்டிருந்தார்; அவ்வப்போது போதை மருந்துகள் உட்கொண்டார் மற்றும் தன் மனம்போல வாழ்க்கை நடத்தினார். அவர் இப்போது அடையாளங் கண்டுகொள்ள முடியாதபடிக்கு முற்றிலும் மாறியிருந்தார். அவர் அமைதியாகவும் சமநிலையோடும் காணப்பட்டார். அவருடைய தோற்றம் நேர்த்தியாகவும் ஒழுங்காகவும் இருந்தது. இது என்னை அதிகளவாக பாதித்தது.
காலதாமதமின்றி, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற சத்தியம் என்ற புத்தகத்தை உபயோகித்து நாங்கள் ஒரு வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு மணிநேரங்கள் பைபிளைப் படித்தோம். நான் புகைக்காமலும், போதை மருந்துகள் உபயோகிக்காமலும், ஒழுக்கக்கேடான வாழ்க்கை நடத்தாமலும் இருந்ததனால், நான் என்னுடைய வாழ்க்கையை அதிகளவாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நினைத்தேன். இருப்பினும், நான் கடவுளைப் பற்றி அறியவந்தபோது, கிறிஸ்தவர்கள் கடவுளிடமிருந்து பிரிந்திருக்கும் உலகத்தின் பாகமானவர்களல்லர் என்பதைப் புரிந்து கொண்டேன். இது என்னுடைய மனச்சாட்சியைக் கருக்கிட்டது.
யெகோவாவின் சாட்சிகளில் உங்களை வெகுவாகக் கவர்ந்தது எது?
ராஜ்ய மன்றத்திற்கான எங்களுடைய முதல் சந்திப்பை நான் இன்னும் நினைவுகூருகிறேன். அங்கிருந்தவர்கள் நான் பழக்கப்பட்டிருந்தவர்களிலிருந்து வெகுவாக வித்தியாசப்பட்டவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருவரையொருவர் வரவேற்றனர்; அன்பு, சிநேகத்தன்மை மற்றும் ஒத்திசைவு ஆகியவற்றை வெளிக்காட்டினார்கள்.
1978-ல் மியூனிச்சில் நடந்த “ஜெயங்கொள்ளும் விசுவாசம்” என்ற சர்வதேச மாநாட்டில் இதை நான் இன்னும் அதிகளவாக உணர்ந்தேன். இங்கு ஆஜராயிருந்தவர்களுங்கூட கண்ணியமுள்ளவர்களாகவும் நிகழ்ச்சி நிரலிற்குக் கவனத்தோடே செவிசாய்ப்பவர்களாகவும் இருந்தனர். மாநாட்டிற்குப் பிறகு, “சாதாரண” பாவேரியா நாட்டவரின் கூட்டத்திற்கு முன்பு தொழில் ரீதியாக நான் தோன்ற வேண்டியதாக இருந்தது. சாயங்கால வேளையில் ஆஜராயிருந்தவர்களில் சிலர் மதுபானத்தின் பாதிப்பின்கீழ் இருந்ததால் கத்திகளுடன் சண்டையிடுவதில் முடிவடைந்தது.
யெகோவாவின் சாட்சிகளைக் குறித்ததில் வேறொரு காரியமுங்கூட வித்தியாசமாக இருந்தது. இந்த உலகம் மனிதர்களை மிகைப்படுத்திப் புகழ்கிறது. நான் முன்பு எங்கெல்லாம் தோன்றினேனோ அங்கெல்லாம் “அது ராஜாவாகிய ரிக்கி!” என்ற வார்த்தை விரைவில் பரவியது. ஆனால் அது இங்கு அவ்விதமாக இல்லை. தற்செயலாக, என்னுடைய உண்மையான பெயரால் அழைக்கப்படுவது எனக்கு அதிகத்தை அர்த்தப்படுத்துகிறது. என்னுடைய பாஸ்போர்டில் பதிவு செய்யப்பட்டிருப்பதும் மற்றும் அதன் மூலமாக நான் வியாபாரம் நடத்தக்கூடியதுமான என்னுடைய மேடைப் பெயரை, என்னுடைய தொழில் சம்பந்தமாக மட்டுமே நான் உபயோகிக்கிறேன்.
காலப்போக்கில் மேலுமான மாற்றங்கள் தேவையாக இருந்ததை நான் உணர்ந்தேன். இசை என்னுடைய வாழ்க்கையாகவே இருந்திருக்கிறது. எல்லாமே அதைச் சுற்றியே அமைந்தது. என்னுடைய மனைவி இந்த வாழ்க்கைப் பாணிக்கேற்ப தன்னைச் சரிப்படுத்திக் கொண்டாள். ஆனால் இப்போது இசையில் முற்றிலும் ஆழ்ந்துவிடக்கூடாது என்பதை நான் கற்றறிந்தேன். ஏனென்றால் இது வாழ்க்கையில் மிக முக்கியமான காரியமாக இல்லை. நாங்கள் மேலுமாக முன்னேறினோம்; 1979-ல் யெகோவாவின் சாட்சிகளாக முழுக்காட்டப்பட்டோம்.
உங்களுடைய சொந்த அனுபவத்திலிருந்து, ஆட்கள் மீது இசை கொண்டிருக்கும் பாதிப்பைக் குறித்து நீங்கள் ஏதாவது சொல்லக்கூடுமா?
ஆம். இசை உணர்ச்சி வேகங்களுக்கும் மனச் சாய்வுகளுக்கும் கவர்ச்சியூட்டுகிறது; அவற்றைத் தீவிரமாக்கவும் கூடும். சில வகையான இசை புத்துயிரளிக்கும் இளைப்பாற்றும் பாதிப்பை ஆட்கள்மீது கொண்டிருக்கின்றன; மற்றும் அவர்களை ஓர் அமைதியான மனநிலையில் வைக்கின்றன. இவ்விதமான இசை இனிமையையும் ஒத்திசைவையும் வற்புறுத்துகிறது, ஆனால் தாளத்தையோ எதுகை மோனைகளையோ வலியுறுத்துவதில்லை.
பலத்த ராக் இசை செவிகொடுப்போரில் மூர்க்கமான மற்றும் வன்மையான மனநிலையை உண்டாக்கி, அவர்கள் மேடைக்கு முன்பாக அமளி ஏற்படுத்தியதில் முடிவடைந்ததையும் நான் பார்த்திருக்கிறேன். இத்தகைய இசையின் துடிப்பு நயங்கள் அவர்களுடைய உணர்வுகளை வெளிக்காட்டும் விதத்தில் ஆட்களைத் தூண்டுகிறது.
செவிகொடுத்துக்கேட்க இசையைத் தெரிந்தெடுக்கையில் எது கவனிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
சில பதிவுத்தட்டுகள் ஆவிக்கொள்கையையும் பேய் வணக்கத்தையும் ஊக்குவித்தன என்று நான் அறிய வந்தபோது அவற்றைக் குப்பையில் எறிந்திருக்கிறேன். சாதாரணமாக அவற்றின் உறைகள் மற்றும் பாடலின் வார்த்தைகளால் அத்தகைய பதிவுத்தட்டுகளை ஒருவர் அடையாளங் கண்டுகொள்ளக்கூடும்.
பாடலுடைய வார்த்தைகளின் மதிப்பைக் குறைத்து மதிப்பிடுவது ஒரு தவறாகும். பாடல் இயற்றுபவர்கள் ஒவ்வொருவிதமான ரசனைக்கும் பொருந்த அதை இயற்றுகிறார்கள் என்று தோன்றுகிறது. இளைஞர்களின் இசைக் குழுக்கள் தங்களுடைய சொந்த பிரச்னைகளின் அடிப்படையில் அடிக்கடி பாடல்களை இயற்றுகிறார்கள். இது இளைஞர்களுக்கு அதிக கவர்ச்சியூட்டுவதாக இருக்கிறது, அவர்களுக்கு இந்த வார்த்தைகளெல்லாம் மனப்பாடம். இந்தப் பாடல்கள் போதை மருந்து துர்ப்பிரயோகம், அதிகளவு மதுபானம் உட்கொள்ளுதல் அல்லது ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் “சுயாதீனத்தை” அனுபவிக்கும்படி அவர்களை உற்சாகப்படுத்தலாம். இந்தக் கட்டவிழ்க்கப்பட்ட போக்கு அதனுடைய வல்லமையை இழந்திருக்கிறது. ஏனென்றால் “சுயாதீனத்தை” முழுமையாக அனுபவித்தலானது வெளிப்படையாக தனக்கே உரித்த பிரச்னைகளைக் கொண்டுவந்திருக்கிறது.
பொழுதுபோக்கிற்கும் மற்றும் நடனத்திற்கும் இசை தவறான இச்சைகளையுங்கூட எழுப்பக்கூடும். பாடகர் சந்தோஷத்தைக் குறித்தும் இளகிய அன்பைக் குறித்தும் பாடுகிறார்; செவிகொடுப்போரில் அநேகர் இது தங்களுடைய வாழ்க்கைத் துணையில் இல்லாமலிருப்பதை உணரலாம். கலைஞன் எதைக் குறித்து பாடிக்கொண்டிருக்கிறானோ அதினால் அடிக்கடி அடையாளங்கண்டுகொள்ளப்படுகிறான். நான் அறிந்த சில இசைக் கலைஞர்கள் இந்தக் காரணத்திற்காகவே பெண்களின் பிரியமான பாத்திரராக இருக்கிறார்கள்.
ஒருவர் ஒரு தடவை இந்தக் கற்பனை உலகில் மூழ்குகையில், இது அந்த இசைக் கலைஞரை பூஜிக்குமளவிற்கு அவனை வழிநடத்தக்கூடும். இது ஞாபகச் சின்னமாக ஒரு கையெழுத்தைக் கேட்பதன்மூலம் தீங்கற்ற விதமான ஆரம்பிக்கலாம். ஆனால் சிலர் அந்தக் கலைஞரைத் தங்களுக்கு முன்மாதிரியாகக் கருதி, அவரை ஓர் உயர்ந்த பீடத்தின்மேல் வைப்பதன்மூலமாக, அவர்கள் அவரை ஒரு விக்கிரமாக்குகிறார்கள். அவர்கள் அந்த நட்சத்திரத்தின் படத்தைச் சுவரில் தொங்கவிடலாம் மற்றும் அவர் உடுத்துவதுபோல் ஆடை அணிந்து, சிகை அலங்காரம் செய்ய ஆரம்பிக்கலாம்; இவ்விதமாக தங்களுடைய சொந்த ஆள்தன்மையைத் தங்களிடமிருந்து நீக்கிவிடுகிறார்கள். ஆனால் கிறிஸ்தவர்கள் வணக்கம் கடவுளுக்கு மட்டுமே உரித்தானது என்பதை மனதில் வைப்பது அவசியம்.
உங்களுடைய தொழிலையும் கிறிஸ்தவ கடமைகளையும் ஒன்றுசேர்த்து நீங்கள் எவ்விதமாக சமாளிக்கிறீர்கள்?
நான் இன்னும் ஒரு குழுவோடு பிரயாணம் செய்து வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிக்க வேண்டுமென்றால், ஒரு தொழில் ரீதியான இசைக் கலைஞராக தொடர்ந்திருக்க நான் விரும்பவில்லை. நான் முன்பு வாரக்கணக்கில் பிரயாணம் செய்ய வேண்டியிருந்தபோது, உலத்திலிருந்தான அழுத்தம் வலுத்துக் கொண்டிருந்ததை நான் கவனித்தேன்; மேலும் நான் பலவீனமடைந்து கொண்டிருந்தேன். வாராந்திர கிறிஸ்தவ கூட்டங்களும் என்னுடைய உடன் கிறிஸ்தவர்களோடான கூட்டுறவும் எவ்வளவு அவசரமாக எனக்குத் தேவைப்பட்டது என்பதை நான் உணர்ந்தேன்! இப்போது என்னுடைய சூழ்நிலைமை மாறியிருப்பதனால், யெகோவாவின் சாட்சிகளின் உள்ளூர் சபையில் ஒரு மூப்பராக கூடுதலான உத்திரவாதங்களையும் நான் கையாள முடிகிறது.
இப்போது நான் வீட்டிலேயே பாடல்கள் இயற்றி எழுதுகிறேன். பிற்பாடு ஒரு ஸ்டூடியோவில் பதிவு செய்தல் நடக்கும். சில சமயங்களில் விழாக் கச்சேரிகளில் நான் மேடையில் தோன்றுவேன், அப்போது நான் ஒரு குறுகிய காலத்திற்கு வீட்டிற்கு வெளியே இருப்பேன். சாதாரணமாக, கிறிஸ்மஸ், புதுவருடம் மற்றும் திருவிழாக் காலங்களில் இசைக் கலைஞர்கள் தங்களுடைய மிகப் பெரிய வருமானத்தைக் கொண்டிருந்தபோதிலும், நான் அச்சமயங்களில் மேடையில் தோன்றுவதில்லை. ஒவ்வொரு மாலை வேளையிலும் தொடர்ந்து இசையை வாசிப்பது என்னுடைய விலைமதிப்பில்லா விசுவாசத்தைச் சேதப்படுத்திவிடலாம்.
நீதியுள்ள ஒரு புதிய ஒழுங்கிற்கான பைபிள் நம்பிக்கையைக் கண்டடைந்திருப்பதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மேலும் என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஆட்களுக்கு இதைச் சொல்ல நான் விரும்புகிறேன். ராஜ்ய செய்தியை ஏந்திக்கொண்டு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடையே வீட்டுக்கு வீடு ஒழுங்காக செல்கிறேன். என்னுடைய சொந்த நேரத்தை நான் திட்டமிடக்கூடுமாதலால், பகல் நேரங்களில் அக்கறைகாட்டும் ஆட்களோடு நான் அடிக்கடி பைபிள் படிப்புகள் நடத்துகிறேன். ஒரு குடும்பத்தில் நான்கு பேர் பைபிள் சத்தியத்தைக் கண்டுபிடிக்க எங்களால் உதவ முடிந்ததால் என்னுடைய மனைவியும் நானும் களிகூர்ந்தோம்.
எதிர்காலத்தை நீங்கள் எவ்விதமாக நோக்குகிறீர்கள்?
எப்போதெல்லாம் ஆயுதப்போட்டி, பசி, சுற்றுப்புற தூய்மைக்கேடு, மற்றும் உலகத்திலிருக்கும் மற்ற பிரச்னைகளைக் குறித்து நான் நினைத்தேனோ—ஒரு மாற்றத்திற்கு மெய்யான நம்பிக்கை ஒன்றும் இல்லை என்று நான் எண்ணினேன். வாழ்க்கை ஏதாவது நோக்கத்தைக் கொண்டிருக்கிறதா என்று என்னையே கேட்டுக்கொண்டேன். கடவுள் ஒவ்வொரு காரியத்தையும் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டிருக்கிறார் என்பதை இப்போது நான் அறிந்து, காரியங்களின்பேரில் ஒரு வித்தியாசமான நோக்கத்தைக் கொண்டிருக்கிறேன். சங்கீதம் 37:37, 38 காட்டும் விதமாக, கடவுளுடைய பக்கத்திலிருப்பவர்களின் எதிர்காலம் “சமாதானமாக” இருக்கும், ஆனால் “அறுப்புண்டுபோவதே” துன்மார்க்கரின் எதிர்காலம்.
வெளிப்படுத்துதல் 21:4-லுள்ள வார்த்தைகள் இன்னும் எனக்குக் கிளர்ச்சியூட்டுகின்றன: “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” இது நோய் மற்றும் மரணத்திற்கான முடிவை அர்த்தப்படுத்தும், ஆம், பொல்லாப்பான “முந்தினவைகள்” எல்லாவற்றின் முடிவைக் குறிக்கும். பிறகு, பூமி ஒரு சமாதானமுள்ள பரதீஸாக மாறும்.
பைபிள் படித்தது என்னுடைய வாழ்க்கைக்கு உண்மையான ஒத்திசைவைக் கொண்டுவந்திருப்பதுபோல, கடவுள் எல்லா சிருஷ்டிகளையும் சமாதானமுள்ள சர்வலோக ஒத்திசைவிற்குள் கொண்டுவருவார்.—ஹன்ஸ் லின்கென்ஃபெல்டரோடு ஓர் உரையாடல். (g88 8⁄22)
[பக்கம் 13-ன் படம்]
ஓர் இசைக் கலைஞனான என்னுடைய வாழ்க்கை 1977-ல் மாற்றமடைய ஆரம்பித்தது
[பக்கம் 15-ன் படம்]
ஹன்ஸ் (மையப் பகுதியில் இடது பக்கத்தில் கித்தார் வாசிப்பவர்)—அவருடைய மனைவிக்கு அடுத்ததாக உட்கார்ந்துகொண்டு, கிறிஸ்தவ கூட்டுறவை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்