இளைஞர் கேட்கின்றனர் . . .
என்னுடைய பணத்தை நான் எப்படி நிர்வகிக்கலாம்?
பணத்தைக் குறித்து நீ எப்படி உணருகிறாய்? உன் விருப்பப்படி செலவழிக்கவேண்டிய ஒன்றா? சேமிக்கவேண்டிய அல்லது திரட்டிவைக்கவேண்டிய ஒன்றா? தங்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்க தங்களுடைய பெற்றோர் இருக்கிறார்கள் என்பதை அறிந்தவர்களாய், அநேக இளைஞர், பணத்தை எப்படி செலவழிப்பது என்பதைத் தவிர வேறு அம்சத்துக்கு யோசனை செலுத்தாதவர்களாயிருக்கின்றனர்.
என்றபோதிலும், உன் பெற்றோர் உனக்கு எப்பொழுதுமே ஒரு பாதுகாப்பு வலையாக இருக்க மாட்டார்கள். மேலும் உன் பள்ளி நேரத்துக்குப் பின்பு உனக்கு ஒரு வேலை இருக்கிறது அல்லது உன் செலவுக்குக் கிடைக்கும் படி தாராளமாக இருக்கிறது என்பதால் நீ உன் பணத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல் இருக்கலாம் என்பதை அது குறிக்காது. பைபிள் எச்சரிக்கிறது: “இல்லாமற்போகும் பொருள்மேல் [பணத்தின்மேல்] உன் கண்களைப் பறக்கவிடுவானேன்? அது கழுகைப்போலச் சிறகுகளைத் தனக்கு உண்டுபண்ணிக்கொண்டு, ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்.” (நீதிமொழிகள் 23:5) உன்னுடைய பணம் ‘பறந்துபோவதை’ நீ எப்படி தடுக்கக்கூடும்? முதலாவதாக, பணம் மொத்தத்தில் என்னவாக இருக்கிறது என்பதை நீ புரிந்துகொள்ளவேண்டும்.
பணம்—அது ஏன் அத்தனை மதிப்புள்ளது
பணம் பண்டமாற்றம் செய்வதற்கு ஒரு கருவியாக—அதைச் செய்வதற்கு ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருக்கிறது. “எளிதில் சொத்தாக மாற்றப்படக்கூடிய நிலையில் இருப்பது பணம் ஒன்றுதான்” என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா (Encyclopœdia Britannica) கூறுகிறது. உதாரணமாக, உன்னுடைய வானொலி ஓர் உடைமையாக (மதிப்புள்ள ஒன்றாக) கருதப்படலாம். ஆனால் அதை வெறும் ஒரு ரொட்டிக்குப் பதில் பொருளாகக் கொடுத்துவிட முற்படுவதை எண்ணிப்பார். ரேடியோ அந்த ரொட்டியைவிட மதிப்பில் அதிகமாக இருக்கக்கூடும். ஆனால் அந்த ரொட்டி கடைக்காரருக்கு உன்னுடைய ரேடியோ அவசியப்படவில்லை என்றால், அதற்காக அவர் உனக்கு ஒரு ரொட்டியைக் கொடுப்பார் என்பதை எதிர்பார்க்க முடியாது. உன்னுடைய ரேடியோவும் அந்தளவுக்கு மதிப்பற்றதாயிருக்கக் கூடும்! என்றபோதிலும் பணம் உலகமுழுவதும் மதிக்கப்படுகிறது.a எனவே அது நீ விரும்பும் எந்த பொருளுக்கும் அல்லது சேவைக்கும் உடனடியாக, எளிதாக மாற்றப்படக்கூடியது.
எனவே சாலொமோன் ஞானமாகவே பிரசங்கி 7:12-ல் “திரவியமும் கேடகம்,” என்று சொன்னான். இப்படியாக பணம் வாழ்க்கையின் தேவைகளைக் கொண்டிருப்பதற்கும் வாழ்க்கையின் பல இன்பங்களுக்கும் அடிப்படையாக இருக்கிறது. சாலொமோன் மேலுமாகச் சொன்னான்: “விருந்து சந்தோஷத்துக்கென்று செய்யப்படும்; திராட்சரசம் ஜீவனுள்ளோரைக் களிப்பாக்கும்; பணமோ எல்லாவற்றிற்கும் உதவும்.”—பிரசங்கி 10:19.
என்றபோதிலும் பணம் எல்லாச் சமயத்திலும் எளிதாகக் கிடைப்பதில்லை. அநேக பெற்றோர் குறையாத பண ஊற்றைக் கொண்டில்லை; உன்னுடன் அவர்கள் பகிர்ந்துகொள்ளும் காரியத்துக்காக அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். சாலொமோன் கேட்டான்: “மனுஷன் சூரியனுக்குக்கீழே படுகிற எல்லாப் பிரயாசத்தினாலும் அவனுடைய இருதயத்தின் எண்ணங்களினாலும் அவனுக்குப் பலன் என்ன?” (பிரசங்கி 2:22) தங்களுடைய கடின உழைப்புக்காக பெற்றோர் சிறிதளவு திருப்தியைக் காணலாம்—சிறிதளவு ஊதியமும் பெறலாம். ஏன், சில பெற்றோர் தங்களுடைய குடும்பங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இரவும் பகலும் வேலை செய்கிறார்கள்!
அப்படியிருக்க பணத்தைத் துச்சமாக நினைத்துவிடக்கூடாது. அதை மதித்து ஞானமாகக் கையாளவேண்டும். இதைச் செய்வதற்கு ஒரு வழி, உன்னுடைய பணத்தின் வரவு செலவை திட்டமிடுவதாகும்.
வரவு செலவு திட்டத்தின் மதிப்பு
வரவு செலவு திட்டம் என்பது, உன்னுடைய பணத்தைச் செலவு செய்வதையும் சேமிப்பதையும் நிர்வகிப்பதாகும். மே 1985-ன் பருவ வயது (’Teen) பத்திரிகை பின்வருமாறு சொன்னது: “எல்லாப் பணமும் எங்கே ‘மறைந்துவிடுகிறது’ என்பதை அறிந்துகொள்வது, உன் பணத்தின் மீது கட்டுப்பாட்டை செலுத்துவதனிடமாகவும் உனக்குச் செயல்படக்கூடிய ஒரு வரவு செலவு திட்டத்தில் உன்னை உட்படுத்துவதனிடமாகவும் முதல் படியாக இருக்கிறது.” எனவே நீ எதிர்பார்க்கும் அனைத்து செலவுகளின் ஒரு பட்டியலை முதலாவது தயாரித்துக்கொள்—பிற்பகல் சாப்பாடு, போக்குவரத்து, மற்றும் பொழுதுபோக்கு போன்ற காரியங்களுக்கான ஒரு பட்டியலைத் தயாரித்துக்கொள். பின்பு ஒரு மாதத்துக்கான உன்னுடைய செலவைக் கவனி. இப்பொழுது நீ உன்னுடைய செலவை நியாயமான உண்மையான காரியங்களுக்காக கொண்டிருப்பதற்கும் சேமிப்பு இலட்சியங்களைக் கொண்டிருக்கவும் முடிகிறது.
இந்தக் காரியங்களை ஒருமுறை நிறுவிவிட்டால், சில உறைகளை எடுத்துக்கொண்டு, செலவின் ஒவ்வொரு அம்சத்தின்படியும் அவற்றிற்குப் பேர் கொடுப்பதை முயன்று பார். உதாரணமாக ஓர் உறை மீது “பிற்பகல் சாப்பாட்டு பணம்,” என்று எழுது. மற்றொரு உறை ஏதோ ஓர் எதிர்கால உபயோகத்திற்காக, உதாரணமாக “புதிய சட்டை” அல்லது “புதிய ஷர்ட்” என்று எழுதிவைக்கப்படலாம், உன்னுடைய படியை அல்லது சம்பளத்தை நீ பெறும்போது, தீர்மானிக்கப்பட்ட உன்னுடைய செலவு இலட்சியங்களுக்காக அதை அந்தந்த உறைகளில் பிரித்துவைத்துக்கொள். செலவு வரும்போது, அந்தந்த உறையிலிருந்து எடுத்து செலவு செய்யவேண்டும்.b
ஒரு வரவு செலவு திட்டத்தைப் பின்பற்றப்பார்த்து தோல்வியடைந்து விட்டாயா? நீ தனிமையில் இல்லை. லேயாள் என்ற ஓர் இளம் பெண் சொன்னாள்: “என்னுடைய பணத்தை வரவு செலவு திட்டத்தில் உட்படுத்திட நான் எத்தனையோ முறை முயன்றிருக்கிறேன், ஆனால் நான் அவற்றின்படி செயல்படவில்லை.” என்றபோதிலும், “நான் ஒரு வரவு செலவு திட்டத்தின்படி செயல்படும்போது, நல்ல விதத்தில் சேமிக்கிறேன். எனக்குத் தேவைப்படாத பொருட்களை நான் வாங்குவதில்லை.” வெற்றிக்கு அடிப்படை யாது? சுய கட்டுப்பாடு. ஒரு தீர்மானம் செய்து, அதன்படிச் செய்! உன்னுடைய கட்டுப்பாடற்ற செலவு செய்யும் பழக்கத்தை மேற்கொள்ள உதவிக்காக யெகோவாவிடம் ஜெபி.—லூக்கா 11:13.
அக்கறைக்குரிய காரியம் என்னவெனில், பவுல் அப்போஸ்தலன் கொரிந்தியருக்கு எழுதிய போது, தங்களுடைய பணத்தில் சிலவற்றை “திட்டமிடும்படி” ஆலோசனை கூறுகிறான்: “அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.” (1 கொரிந்தியர் 16:1, 2) பின்பு அந்தப் பணம் தேவையிலிருந்த கிறிஸ்தவர்களுக்கான ஒரு விசேஷ நிதிக்கு வழங்கப்பட்டது. பவுலின் இந்த ஆலோசனையைப் பின்பற்றுவது அந்தக் கொரிந்திய கிறிஸ்தவர்களுடைய பாகத்தில் உண்மையான சுய கட்டுப்பாட்டை உட்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதன் ஆசீர்வாதங்கள் அப்படிப்பட்ட முயற்சியைப் பயனுடையதாகச் செய்தது!
ஒரு குறிப்பிட்ட வரவு செலவு திட்டத்திலிருந்து நீயும் நன்மையடைவாய் என்பதில் சந்தேகமில்லை. ஏவியன் என்ற ஓர் இளைஞன் கூறுகிறான்: “நீதிமொழிகள் 21:5-ல் குறிப்பிடப்பட்டிருப்பவனைப் போல, அடுத்த சம்பள நாள் வருவதற்கு முன் “பதறுகிறவனாக” ‘தரித்திரத்தை நோக்கிச் சென்றேன்.’ வரவு செலவு திட்டம் என்னை அதிக பொறுப்புள்ளவனாக்குகிறது.”
கடன் குறித்து கவனமாயிருத்தல்
“இப்பொழுது வாங்கிக்கொள்ளுங்கள், பின்னர் பணம் செலுத்துங்கள்!” என்று பல வியாபாரிகள் ஊக்குவிக்கிறார்கள். கவனத்தோடும் அறிவோடும் பயன்படுத்தப்ணடும்போது, கடன் அதன் இடத்தைக் கொண்டிருக்கிறது. என்றபோதிலும் கடனாக வாங்கப்பட்ட பணம் கவலீனமாக பயன்படுத்தப்பட்டால், கெவின் என்ற ஓர் இளைஞன் அழைத்தவிதமாக அது “ஒரு வகை அடிமை”யாகும்..—நீதிமொழிகள் 22:7-ஐ ஒப்பிடவும்.
சில இளைஞருக்குக் கடன் வசதி தங்களுக்குத் தேவையிராத அல்லது இயலாத பொருட்களை வாங்குவதை எளிதாக்கிவிடுகிறது. மாதக் கடைசியில் செலுத்த வேண்டிய தொகையை செலுத்தாவிட்டால், நீ கடன்பட்டிருக்கும் தொகைக்கு வட்டி கூட்டப்படுகிறது. திருப்பி செலுத்துவதற்கு எவ்வளவு நீண்ட காலம் எடுக்கிறதோ, அந்தளவுக்கு அந்தப் பொருளின் விலை கூடிவிடுகிறது. எனவே காலப்போக்கில், உனக்கு தேவையானவற்றிற்காக சேமித்து வைத்து, பின்பு ரொக்கமாகப் பணம் செலுத்தி வாங்குவது மலிவாயிருக்கும்.
‘சிறு துளி . . . ’
ஃபிலிஸ் என்ற ஓர் இளம் பெண் குறிப்பிட்டதாவது: “நமக்குக் கஷ்டங்கள் எப்பொழுது வரும் என்பது நமக்குத் தெரியாததால் நாம் பணத்தை சேமித்துவைக்க வேண்டியது மிகவும் அவசியம்.” (பிரசங்கி 9:11-ஐ ஒப்பிடவும்.) ஆம், நீ நோய்ப்பட்டு ஒரு வேலையை இழக்கக்கூடும். உன்னுடைய பெற்றோருங்கூட கஷ்டத்துக்குள் வந்து, உன்னுடைய படியைக் கொடுக்க முடியாத நிலைக்குள்ளாகலாம். எனவே உன்னுடைய வரவு செலவு திட்டத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்புத் தொகையாக ஒதுக்கிவைப்பது நல்லது. நிதிநிலை சார்ந்த ஒரு புயல் வீசினால், அதை சமாளிக்க இது உதவியாயிருக்கும்.
இப்பொழுது ஓர் உண்டிப்பெட்டி அல்லது உன் காலணிப் பெட்டி பணம் சேர்த்துவைப்பதற்கான ஒரு நல்ல இடமாகத் தென்படக்கூடும். என்றபோதிலும், வட்டியைப் பெற்றுத்தரக்கூடிய ஒரு வங்கியில் பணத்தைச் சேமிப்பது குறித்து இயேசு பேசினார். (மத்தேயு 25:27) அப்படியிருக்க, வங்கியில் உனக்கென்று ஒரு சேமிப்புக் கணக்கைத் துவக்குவது குறித்து நீ ஏன் உன் பெற்றோருடன் கலந்துபேசக்கூடாது? சில இடங்களில் சேவைக் கட்டணத்தைத் தவிர்க்க ஒரு பெரிய தொகையைக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தாலும், ஒரு சேமிப்பு திட்டம் செயல்பட, நீ ஒரு பெரிய தொகையைக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வெற்றிக்குத் திறவுகோல், உன்னுடைய சேமிப்புக் கணக்கில் பணத்தை ஒழுங்காக கூட்டிவருவது.
உன்னுடைய குடும்பம் ஏழ்மையில் இருந்தால், அல்லது இளைஞர் செலவுக்குத் தங்களுடைய சொந்த பணத்தைக் கொண்டிருப்பது அரிதாயிருக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு தேசத்தில் நீ வாழ்ந்துவருவாயானால், அப்பொழுது என்ன? அப்படியிருந்தாலும் உன்னுடைய குடும்பம் ஒரு சில உடைமைகளைக் கொண்டிருக்கிறது, அவை கொஞ்சமாக இருக்கக்கூடும். ஆனால் குடும்பத்தின் வருமான வாய்ப்பினிடமாக உன்னுடைய மனப்பான்மை ‘ஏனோதானோ’ என்று இருக்குமானால், நீ உன்னுடையதும் உன்னுடைய சொந்த குடும்பத்தினுடையதுமான நலனுக்கு எதிராக செயல்படுகிறவனாயிருப்பாய். உன்னுடைய பெற்றோர் உன்னைப் பராமரிக்கக் கடினமாய் உழைக்கும் உழைப்புக்கு நிச்சயமாகவே நீ “நன்றிகெட்டவனாக” இருக்க விரும்பமாட்டாய்.—நீதிமொழிகள் 29:21.
எனவே உனக்கென்று பணம் கொஞ்சமாக இருந்தாலும் இல்லாமலிருந்தாலும், பணத்தின் பேரில் ஒரு பொறுப்புள்ள மனநிலையைக் காண்பி. காரியங்களை வீணாக்குவதை நீ தவிர்க்கலாம், உதாரணமாக உணவுப் பொருட்கள். (யோவான் 6:12, 13-ஐ பார்க்கவும்.) கண்ணாடி அல்லது பாடபுத்தகங்கள் போன்ற மாற்றிக்கொள்வதற்குக் கடினமான விலையுயர்ந்த பொருட்களை மதிப்பாய் நடத்து. இந்தக் காரியத்தில் உன்னுடைய ஊக்கமான முயற்சியை உன் பெற்றோர் வெகுவாகப் போற்றுவார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இருப்பதற்கில்லை.
நீதிமொழிகள் 11:28 நினைவுபடுத்துகிறது: “தன் ஐசுவரியத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போலே தழைப்பார்கள்.” பணம் நம்முடைய தேவைகளைக் கவனித்துக் கொள்வதாயிருக்க வேண்டும். ஆனால் ஒரு கிறிஸ்தவன் ஐசுவரியவானாவதற்கு வேலைசெய்துகொண்டிருப்பவனாக இருக்கக்கூடது. மத்தேயு என்னும் ஓர் இளைஞன் இப்படியாகச் சொல்கிறான்: “பணத்துக்கு அதன் இடம் இருக்கிறது, ஆனால் அதுவே எல்லாம் அல்ல.” அது வெறும் ஓர் உபகரணம், ஆம், ஒரு “கேடகம்.” (பிரசங்கி 7:12) அதை ஞானமாக, விவேகமாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள். தனிப்பட்ட மற்றும் குடும்ப உத்தரவாதங்களைக் கவனிப்பதற்கு உன் பணத்தை நீ எப்படி ஞானமாக பயன்படுத்தவேண்டும் என்பதைப் பிப்ரவரி இதழ் கலந்தாராயும். (g88 12⁄22)
[அடிக்குறிப்புகள்]
a பணவீக்கம் தேசீய ரூபாய் நோட்டுகளைப் பயனற்றதாக்கியிருக்கும் தேசங்கள் இதற்கு ஒரு விதிவிலக்கு.
b “உன் பணத்தை வரவு செலவு கணக்குக்குள் கொண்டுவா—அது எளியதோர் முறை” என்ற கட்டுரை பிப்ரவரி 8, 1986 விழித்தெழு! பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
“நான் ஒரு வரவு செலவு திட்டத்தின்படி செயல்படும்போது, நல்ல விதத்தில் சேமிக்கிறேன். எனக்குத் தேவைப்படாத பொருட்களை நான் வாங்குவதில்லை”
[பக்கம் 26-ன் படம்]
பொறுப்புள்ள இளைஞர்கள் ஞானமாகவே தங்களுடைய பணத்தில் கொஞ்சத்தை சேமித்து வைக்கிறார்கள்