தாஜ் மஹால் அன்புக்கு நினைவுச் சின்னம்
அது ஓர் அற்புத நகை, கல்லில் ஒரு காதல் கவிதை, மரணத்தில் இழந்த மனைவிக்குத் துக்கிக்கும் ஒரு கணவன் எழுப்பிய
மிகச் சிறந்த நினைவுச்சின்னம் என்றெல்லாம் விவரிக்கப்பட்டிருக்கிறது.
வட இந்தியாவில் தில்லியிலிருந்து கிழக்கே நூறு மைல் தூரத்தில் ஆக்ரா என்ற நகரம் இருக்கிறது. இங்கு நிற்பது, முகமதிய சிற்பக் கலையின் சிறப்புப் பரிசு—தாஜ் மஹால். ஒரு துருக்கிய கலைஞனால் வடிவமைக்கப்பட்டதும், வெள்ளைப் பளிங்குக் கல்லால் கட்டப்பட்டதுமான இந்த அழகியக் கட்டிடம் 1631-ல் மரித்த தன்னுடைய அன்பு மனைவி மும்தாஜ் மஹாலுக்கு ஷா ஜஹான் கட்டிய அன்பின் நினைவுச் சின்னமாக நிற்கிறது. இந்தக் கல்லறை கட்டிமுடிக்கப்படுவதற்கு 20 ஆண்டுகள் எடுத்தன. ஏறக்குறைய 20,000 பணியாட்களை இது உட்படுத்தியது.
முகமதிய செல்வாக்கை 133 அடி உயரத்திலிருக்கும் அதன் கோபுரத் தளமும், வெளிச் சுவரை அலங்கரிக்கும் குரான் வசனங்களும் தெளிவாகக் காண்பிக்கின்றது. ஓர் அமைதலான நீர்த்தேக்கம், விசேஷமாக, நிலா வெளிச்சத்தில் அல்லது சூரியனின் உதயத்திலும் மறைவிலும் ஒரு காதல் செல்வாக்கை வீறார்ந்த கல்லறை மாடத்தின் மீது செலுத்துகிறது.
தன்னுடைய மனைவியின்பேரில் ஷாவுக்கு இருந்த ஆழ்ந்த அன்பு, பைபிளில் சாலொமோனின் உன்னதப்பாட்டில் காணப்படும், தனக்குக் கிட்டாத சூலேமித்திய மேய்ப்பப் பெண்ணின் பேரில் சாலொமோன் அரசனின் அன்புக்கூற்றுகளை நினைவுபடுத்துகிறது. (g89 11/8)