நீங்கள் உயிருள்ள ஒரு கடவுளை வணங்குகிறீர்களா?
தடாஷி இஷிகுரோ இரண்டாம் உலக மகா யுத்தத்துக்குப் பின் பிறந்த போதிலும்—ஜப்பானின் பேரரசர் தன் தெய்வீகத்தை மறுத்துப் பேசிய அந்தச் சரித்திர சம்பவத்துக்கும் பின் பிறந்தபோதிலும்—பேரரசர் தெய்வீகமானவர் என்பதை அவர் தொடர்ந்து நம்பினார். “அவர் தன்னுடைய தெய்வீகத்தை மறுதலித்திருக்கக்கூடாது,” என்றார் தடாஷி.
என்றபோதிலும், அவருடைய சகோதரர் இந்தக் காரியத்தின் பேரில் இப்படியாக நியாயவிவாதம் செய்ய ஆரம்பித்தார்: ‘இந்தப் பேரரசரும் மற்ற எந்த மனிதர்களைப்போலவே முதுமையடைந்து நோயடைகிறார். எல்லா மனிதருக்கும் ஏற்படும் காரியத்திலிருந்து— மரணத்திலிருந்து—அவர் விலக முடியாது. அவர் தன்னையே மீட்டுக்கொள்ள முடியாதிருக்க, மற்றவர்களை மீட்டுக்கொள்வது பற்றி குறிப்பிடுவதற்கில்லை.’ அந்த உரையாடலின் போது அவருடைய சகோதரர் பைபிளிலிருந்து மேற்கோள் காண்பித்தார். அவ்வுரையாடலுக்குப் பின், தடாஷி தன் நம்பிக்கைகளைச் சற்று நெருங்கப் பார்க்க தீர்மானித்தார்.—பிரசங்கி 3:19; ரோமர் 5:12.
காலப்போக்கில் அவர் பைபிள் கொடுக்கும் புத்திமதியில் அமைந்த ஞானத்தைக் காண ஆரம்பித்தார்: “பிரபுக்களையும் இரட்சிக்கத் திராணியில்லாத மனுபுத்திரனையும் நம்பாதேயுங்கள்.” ஏன் நம்பக்கூடாது? ஏனென்றால், “அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம்,” என்று பைபிள் சொல்லுகிறது. (சங்கீதம் 146:3, 4) ஆம், அழிவுள்ள மனிதர்களைத் தெய்வங்களாக நம்பியிருப்பது ஏமாற்றத்துக்கும், அழிவுக்குமே வழிநடத்துகிறது!
ஜப்பானிய தீவுக்கூட்டம் சூரிய தேவதையாகிய அமெத்தரசு ஓமிகாமியின் தந்தை இஜனாகியின் ஈட்டியிலிருந்து சொட்டிய நீர்த்துளிகளிலிருந்து உருவானதாக சொல்லப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட நம்பிக்கை உண்மையில் எந்தவித ஆதாரமுமற்றது. அப்படியிருக்க ஜப்பானிய பேரரசர் இந்தத் தேவதையின் வம்சத்தில் வந்த மனிதர், எனவே தெய்வீகமானவர் என்ற நம்பிக்கையைப் பற்றியதென்ன? இதுவும் ஆதாரமற்ற கற்பனைக் கதையாக இல்லையா? தாங்கள் உண்மையில் அறியாததைத் தொழுதுகொண்டனர், எனவே தங்களுக்கு உதவியளிக்க முடியாத ஒருவர் சார்பில் ஆயிரக்கணக்கான ஜப்பானியர் தங்களுடைய உயிரைப் பலியிட்டனர். எவ்வளவு விசனமான ஒரு காரியம்!
தன்னுடைய சகோதரருடன் தான் கொண்டிருந்த உரையாடலின் பலனாக, நம்முடைய அழகிய பூமியும் அதிலுள்ள உயிர்வாழ்வும் வல்லமை வாய்ந்த அன்புள்ள ஒரு சிருஷ்டிகரின் வேலைப்பாடு என்பது தடாஷிக்குத் தெளிவானது. (எபிரெயர் 3:4) பைபிள் குறிப்பிடுகிறபடி, உண்மையான கடவுள் “என்றென்றைக்கும்” கடவுளாயிருக்கிறார். (சங்கீதம் 90:2) அவர் நித்தியத்துக்கும் உயிரோடிருக்கிறவர். அவர் 70 அல்லது 80 வயதுக்கு உட்பட்டவர் அல்ல, அல்லது ஆலோசகர்களிடமிருந்து வரும் ஆலோசனையைச் சார்ந்திருப்பவரும் அல்ல.—சங்கீதம் 90:10; ரோமர் 11:34.
மாறாக, பைபிள் சிருஷ்டிகரைக் குறித்து இப்படியாகச் சொல்லுகிறது: “அவர் தமது சித்தத்தின்படியே வானத்தின் சேனையையும் பூமியின் குடிகளையும் நடத்துகிறார், அவருடைய கையைத் தடுத்து, அவரை நோக்கி: ‘என்ன செய்கிறீரெ’ன்று சொல்லத்தக்கவன் ஒருவனும் இல்லை.” (தானியேல் 4:35) தங்களுடைய சொந்த சித்தத்தையே நிறைவேற்ற இயலாதவர்கள், ஆனால் கடவுட்களாக நடத்தப்படும் மனிதர்களிலிருந்து அவர் எவ்வளவு வித்தியாசப்பட்டவராயிருக்கிறார்!
தடாஷி பைபிளைத் தொடர்ந்து படித்த போது, அதைத் தம்முடைய பரிசுத்த ஆவியால் ஏவி எழுதப்படச்செய்த கடவுள் பேரில் அவருடைய விசுவாசம் வளர்ந்தது. இவர் ஒரு புராணக் கற்பனைக் கடவுள் அல்ல. மாறாக, அவர் உண்மையில் உயிரோடிருக்கும், காணக்கூடாத ஒருவர். மனிதர்களை எழுதும்படியாகத் தம்முடைய ஆவியால் ஏவி எழுதப்பட்ட பைபிளில் தம்முடைய பெயர் யெகோவா என்று அவர் நமக்குச் சொல்லுகிறார். (சங்கீதம் 83:17) அவர் என்ன செய்திருக்கிறார், என்ன செய்ய நோக்கங்கொண்டிருக்கிறார், தாம் எப்படி வணங்கப்பட வேண்டும் என்பதையும் சொல்லுகிறார். என்றபோதிலும், யெகோவாவில் உங்கள் நம்பிக்கை விருதாவாகப் போகதபடிக்கு அவர் உயிரோடிருக்கும் ஒரு கடவுள் என்பதில் நீங்கள் எவ்விதம் நிச்சயமாயிருக்கலாம்?
சரி, மற்ற அனைவரிலும் தாம் மேன்மை பொருந்தியவர் என்பதை அறிக்கையிடும் வகையில் யெகோவா பின்வருமாறு சொன்னார்: “நானே தேவன், வேறொருவரும் இல்லை, நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன்.”—ஏசாயா 46:9, 10.
இப்படியாக, எதிர்காலத்தை முன்னறிவிக்கும் அவருடைய திறமையாலும், தம்முடைய சித்தத்தை நிறைவேற்றிடும் திறமையாலும் அவருடைய தெய்வத்துவம் உறுதிசெய்யப்படுகிறது. கடவுட்களாக பக்தி செலுத்தப்படும் மனிதர்கள் அவர்களுடைய குடிமக்களால் பாதுகாக்கப்படவேண்டியிருக்க, இவரோ தம்முடைய ஊழியர்களைப் பாதுகாத்து இரட்சிக்க முடிந்தவர். எனவே, காலப்போக்கில் தடாஷி பைபிளின் கடவுளைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார். யெகோவா தேவனைச் சேவிப்பதில் அவருடைய சாட்சிகளில் ஒருவராகத் தன்னுடைய சகோதரரைச் சேர்ந்துகொண்டார்.
நீங்கள் யாரைத் தொழுதுகொள்வீர்கள்?
இன்று அநேக கடவுட்கள் வணங்கப்பட்டுவருகிறார்கள். இதில் மக்கள் தெய்வீக சக்திகளை உரித்தாக்கும் மனிதரும் அடங்குவர். பைபிள் குறிப்பிடுவதாவது: “வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு.” (1 கொரிந்தியர் 8:5) உதாரணமாகப் பூர்வீக கிரேக்கப் பட்டணமாகிய அத்தேனே பட்டணத்தில், “அறியப்படாத தேவனுக்கு,” என்று எழுதப்பட்டிருந்த ஒரு பலிபீடம் கட்டப்பட்டிருந்தது. (அப்போஸ்தலர் 17:23) எனவே தாங்கள் உண்மையில் அறியாதிருந்ததைத் தொழுதுகொள்வதாக ஒப்புக்கொள்வோரில் அத்தேனியரும் அடங்குவர்.
இன்று நாமுங்கூட, அறியாததைத் தொழுதுகொள்வதில் உட்பட்டுவிடக்கூடிய சாத்தியம் உண்டு. பேரரசர் தெய்வீகமானவர் என்ற நம்பிக்கையைப் பரப்பிய பொய் ஊழியர்களால் வஞ்சிக்கப்பட்டு, இலட்சக்கணக்கான ஜப்பானியர்கள் அப்படிப்பட்ட வணக்கத்தில் ஈடுபட்டார்கள். பேரரசர்தாமே வஞ்சிக்கப்பட்டிருக்கிறார். எனவே ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: நம்முடைய பெற்றோர் ஏதோ ஒன்றை உண்மையென நம்புகிறார்கள், அல்லது மத ஊழியர்கள் ஏதோ ஒன்றை உண்மையென சொல்லுகிறார்கள் என்பதுதானே அதை அப்படியாக்கிவிடுவதில்லை. நாம் உண்மையில் எதை அறிந்திருக்கிறோம் மற்றும் நாம் எதை வணங்குகிறோம் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
பூர்வீக அத்தேனியர் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்திற்கு முன் வாழ்ந்த ஜப்பானியர் மட்டுமே தாங்கள் அறியாததைத் தொழுதுகொண்டவர்கள் என்று சொல்லுவதற்கில்லை. இன்றுங்கூட, கிறிஸ்தவமண்டலத்தின் இலட்சக்கணக்கான மக்கள் ஒரு திரித்துவத்தை வணங்குகிறார்கள். நீங்கள் அப்படிப்பட்டவர்களில் ஒருவரென்றால், பின்வருமாறு கேட்டுக்கொள்ளுங்கள்: நான் வணங்கிவரும் கடவுளை உண்மையிலேயே நான் அறிந்திருக்கிறேனா? அவருடைய பெயர் என்ன? அவர் ஒரு கடவுளில் மூவராக எப்படி இருக்க முடியும்? என்னுடைய நம்பிக்கையின் ஊற்றுமூலம் என்ன?
திரித்துவத்தில் நம்பிக்கையுடையவர்கள் அதை இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் கற்பித்தார்கள், அது ஒரு பைபிள் போதனை என்று ஒருவேளை நினைத்துக்கொண்டிருக்கக்கூடும். ஆனால் அது அப்படி இல்லை. நியு கத்தோலிக்க என்சைக்ளோபீடியா (New Catholic Encyclopedia) இப்படியாக ஒப்புக்கொள்கிறது: “‘ஒரு கடவுளில் மூன்று ஆட்கள்’ என்ற கோட்பாடு பலமாக ஸ்தபிக்கப்பட்டதல்ல, நிச்சயமாகவே 4-வது நூற்றாண்டின் முடிவுக்கு முன்னால் [இயேசுவும் அவருடைய அப்போஸ்தலரும் பூமியில் வாழ்ந்து நூற்றாண்டுகளானப் பின்] கிறிஸ்தவ வாழ்க்கையிலும் விசுவாசத்திலும் முழுவதுமாய் ஜீரணிக்கப்படவில்லை. . . . அப்போஸ்தல தந்தையர் மத்தியில் அப்படிப்பட்ட ஒரு மனநிலைக்கு அல்லது எண்ணத்திற்கு வழிநடத்திய எதுவும் சற்றும் நெருங்கவில்லை.”
மறுபட்சத்தில், இயேசு கிறிஸ்து மனிதனாக பூமிக்கு வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர், புராணக் கட்டுக்கதைகளைச் சார்ந்திருந்த மதங்களைப் பின்பற்றிய மக்கள் மத்தியில் திரித்துவ போதனை பலமாக வேரூன்றியிருந்தது. உதாரணமாக, பூர்வ எகிப்தியர் ஆசிரிஸ், இஸிஸ் (மனைவி), ஹோரஸ் (மகன்) என்ற திரித்துவத்தை வணங்கிவந்தார்கள். இந்து மதத்தினர் இன்றுவரையாகவும் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய முத்தலை திரித்துவத்தை வணங்கிவருகிறார்கள்.
எனவே உங்களைச் சூழ உள்ள மக்களுடைய வழியில் தொழுதுகொள்வதற்குப் பதிலாக, நீங்கள் உண்மையில் எதைத் தொழுதுகொள்கிறீர்கள் என்பதை நிச்சயப்படுத்திட பரிசோதித்துப் பாருங்கள். கடவுள் “நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல,” அவரை உள்ளான மனதுடன் தேடுகிறவர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியும் என்று அறியாததைத் தொழுதுகொண்ட அத்தேனியர்களிடம் சொல்லப்பட்டது. நாமுங்கூட அந்த உண்மையான, உயிருள்ள கடவுளை உள்ளான மனதுடன் தேடுவோமானால், அவரைக் கண்டுபிடிப்போம் என்பதில் உறுதியாயிருக்கலாம்.—அப்போஸ்தலர் 17:27. (g89 12/22)
[பக்கம் 10-ன் படம்]
தடாஷி தன்னுடைய நம்பிக்கைகளைச் சற்று நெருங்கப் பார்க்க தீர்மானித்தார்