தனிச்சிறப்பு வாய்ந்த தொலைநோக்காடி சூரியனின் புதிர்களை வெளிப்படுத்துகிறது
நியு மெக்ஸிக்கோவின் தெற்கேயுள்ள குளிர்ச்சியான லின்கன் தேசீய வனத்தில், வன போஜனத்துக்காக ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு பாலைவனத்தின் உஷ்ணத்திலிருந்து சிறிது நேரம் தப்பித்துக் கொள்ள முயன்றபோது, நியு மெக்ஸிக்கோவில் க்ளெவுட்கிராப்ஃட் அருகே, சன்ஸ்பர்டில் சாக்ரமென்டோ உச்சி வானிலை ஆய்வுக்கூடத்துக்கு எங்களை வழிகாட்டிய ஓர் அறிவிப்புப் பலகையை நாங்கள் பார்த்தோம். எங்கள் மனதில் இப்பொழுது ஆவல் ஏற்பட, சன்ஸ்பர்ட்டுக்கு நாங்கள் காரை செலுத்தினோம்.
எங்களுடைய சிறிய தொகுதியிலிருந்த எவருமே 9,200 அடி உயரத்துக்கு பழக்கப்பட்டவர்களாக இல்லாததால், உச்சியில் விசித்திரமான வடிவங்களிலிருந்த கட்டிடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொலைநோக்காடிகளைப் பார்ப்பதற்காக நடைபாதையில் நடந்து சென்றபோது, நாங்கள் அனைவருமே மூச்சுத் திணறுகிற நிலையிலிருந்தோம். நாங்கள் கவிகை உருவில் ஒரு கட்டிடத்தை எதிர்பார்த்தோம். ஆகவே ஹில்டாப் டோமை நாங்கள் பார்த்தபோது ஏமாற்றமடையவில்லை. ஆனால் பார்வையாளர்கள் அதற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை என்பதைத் தெரிந்துகொண்டோம். பின்னர் நாங்கள் விநோதமாக தோற்றமளித்த ஒரு கட்டிடத்தைப் பார்த்தோம்.
அது உயரமான, ஒடுக்கமான அடிப்பகுதிக் கொண்ட முக்கோண வடிவ கட்டிடமாக நிலத்திலிருந்து மேலெழுந்து நின்றது, இது பார்வையாளர்களுக்கு திறந்துவிடப்பட்டிருந்தது. (புகைப்படத்தைப் பார்க்கவும், அடுத்தப் பக்கம்.) விரைவில், எங்களுக்கு மேலே உயரத்தில் ஒரு கோபுரத்தின் உச்சியிலுள்ள ஒரு தாங்குதளத்திலிருந்து, நீண்ட தொலைநோக்காடிகள் தொங்கிக்கொண்டிருக்கும் ஓர் ஆய்வுக் கூடத்தில் நாங்கள் இருப்பதைக் கண்டோம். மேடையின் மீது கால் வைத்து, கருவியின் சமநிலையைக் கலைத்துவிடாதபடிக்கு அறிவிப்பு பலகைகள் எங்களை எச்சரித்தன.
சூரியனை “தரித்து நிற்கச்” செய்தல்
ஒரு சிறிய வரவேற்பரையில், என்ன ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது என்பதை வண்ண விளக்க வரை படங்கள் விளக்கின, இந்தக் கட்டிடங்களின் தொகுதி, சூரியனை நுணுக்கமாக ஆராய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதை அறிந்து கொள்வது அக்கறையூட்டுவதாக இருந்தது. அங்கு வேலைசெய்து கொண்டிருந்த ஒரு விஞ்ஞானியிடம், இந்தத் திட்டம் சூரியனிலிருந்து எவ்வாறு ஆற்றலைப் பெறலாம் என்பதைக் கற்றறிவதற்காகவா என்பதாக நாங்கள் கேட்டோம். இது அவ்வகையான ஆராய்ச்சி அல்லவென்றும், ஆனால் சூரியனையும் பூமியின் வளிமண்டலத்தின் மீது அதன் பாதிப்பையும், சூரிய மண்டலத்திலுள்ள விண்வெளி மீது அதன் பாதிப்பையும் பற்றிய தகவலை சேகரிப்பதற்காக செய்யப்பட்டு வரும் ஓர் அடிப்படை ஆராய்ச்சி திட்டம் என்றும் அவர் விளக்கினார். மேலுமாக விஞ்ஞானிகள், இடைவிடாமல் அதன் மேற்பரப்பை கவனிப்பதன் மூலம் சூரியனின் உட்புறத்தை ஆய்வு செய்கிறார்கள்.
வானிலை ஆய்வுக்கூடம் அங்கு இடம்பெற்றிருப்பதற்கு காரணம், வறட்சியான மலைக்காற்றும் தூய்மைக்கேடு இல்லாமையும் அதற்கு சரியான இடமாக இருப்பதாக எங்கள் வழிகாட்டி விளக்கினார். 1951-ல் ஸ்தபிக்கப்பட்ட இது சூரியனை ஆய்வு செய்வதற்காக ஐக்கிய மாகாணங்களில் கட்டப்பட்ட முதல் கட்டிடமாகும். இந்தப் பெரிய கோபுரம் நிலத்துக்கு மேல் 136 அடி நீட்டிக்கொண்டிருப்பதையும், ஆனால் தொலைநோக்காடியின் மற்றொரு 193 அடி நிலத்துக்கு கீழ் புதைந்து கிடப்பதையும் ஒரு விளக்க வரைபடம் எங்களுக்குக் காண்பித்தது. ஆக தொலைநோக்காடியின் மொத்த நீளம் 329 அடியாகும், உதைப்பந்தாட்டக் களத்தின் நீளம்! தொலைநோக்காடியின் குழாயின் உட்புறம் பெரும்பாலும் காற்று அகற்றப்பட்ட வெற்றிடமாக இருக்கிறது. ஆகவே, சூரிய ஒளி பிரவேசிக்கையில், சூடாக்கப்பட்ட காற்றினாலும் உருச்சிதைவதில்லை. இது வழக்கத்துக்கு மீறிய தெளிவுள்ள பிரதிபிம்பத்துக்கு இடமளிக்கிறது. சூரியனுடைய மேற்பரப்பின் மேன்மையான காட்சி ஆய்வாளர்களுக்குக் கிடைக்கிறது.
முழு தொலைநோக்காடியும் (250 டன்களுக்கு மேலான எடையுள்ளது) பாதரசத்தில் மிதக்கும் தாங்குதளத்திலிருந்து தொங்கிக்கொண்டிருக்கிறது. பூமியின் சுழற்சியை சரியீடு செய்வதற்காக தொலைநோக்காடி தடையின்றி சூழலுவதை இது அனுமதிக்கிறது. இவ்விதமாக, தொலைநோக்காடியை நீண்ட காலப்பகுதிக்கு சூரியனை நோக்கி செலுத்தமுடியும். தொலைநோக்காடியின் சம்பந்தமாக சூரியன் திறம்பட்ட விதத்தில் “தரித்து நிற்கும்” பொருட்டு செய்யப்படுகிறது. இது ஒளிப்புரை என்ற சூரியனின் மேற்பரப்பிலுள்ள மிக நுண்ணிய அம்சங்களையும் சூரியனின் தாழ்வான மண்டலத்தைச் சூழ்ந்துள்ள நிறப்புரையையும் கூர்ந்து கவனிக்கவும் புகைப் படமெடுக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தானிய கொள்கல கவிகை மாடம்
எங்களுடைய காருக்கு நாங்கள் திரும்பி வருகையில், உருண்டையான பண்ணை பசுந்தீவனப் பதனக் குழிப் போல எங்களுக்குத் தோன்றிய அசாதாரணமான ஒரு கட்டிடத்தைக் கடந்து வந்தோம். அது, அவ்விதமாகவே இருந்தது! அது தானிய கொள்கல கவிகை மாடம் என்றழைக்கப்படுகிறது. இது சியர்ஸ் ரோபக் அண்டு கம்பெனியிடமிருந்து வானிலை ஆய்வுக்கூடத்தின் ஆரம்ப நாட்களில் வாங்கப்பட்டது; இது சன்ஸ்பார்ட்டில் முதல் தொலைநோக்காடியை பாதுகாப்பாக வைப்பதற்கு சிறிது மாற்றியமைக்கப்பட்டது. அந்தச் சமயத்தில் விண்வெளிப் பயணம் திட்டமிடப்பட்டுவந்தது, விசேஷமாக அசாதாரணமான சூரிய கிளர்ச்சியால் உண்டுபண்ணப்படக்கூடிய அமைதிகுலைவை தோற்றுவிப்பதில் சூரியன் எவ்விதமாக பூமியின் வளிமண்டலத்தைப் பாதித்தது என்பதைப் பற்றிய தகவலுக்குத் தேவையிருந்தது.
பின்னால், 1957-ல் AURA என்ற ஆதாயமில்லாத அமைப்பு (வான்கோள்களின் ஆய்வுக்காக பல்கலைக்கழகங்களின் சங்கம்) அரிசோனாவிலுள்ள டக்ஸனில் கிட் உச்சி தேசீய வானிலை ஆய்வுக்கூடத்தின் சம்பந்தமாக உருவாக்கப்பட்டது; சில்லியிலுள்ள லா செரினாவில் செரோ டோலே இன்டர் அமெரிக்கன் வானிலை ஆய்வுக்கூடம்; மேரிலாண்டிலுள்ள பால்டிமோரில் விண்வெளி தொலைநோக்காடி அறிவியல் நிறுவனம். விஞ்ஞானிகளையும் தகவல்களையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் அனைவருமே சூரியனைப் பற்றிய அதிகப்படியான புரிந்து கொள்ளுதலைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதாக AURA நினைத்தது. தனித்திருந்த இந்த வானிலை ஆய்வுக்கூடத்துக்குப் பூமியின் பல்வேறு பாகங்களிலும் தொடர்புகள் இருந்ததை நாங்கள் காண ஆரம்பித்தோம்.
அதிர்வுறும் சூரியன்
ஓர் ஆய்வு நிர்வாகியான டாக்டர் பெர்னாட் டர்னே, சூரியனைப் பற்றிய எங்களுடைய சில கேள்விகளுக்கு பதிலளிக்க கனிவோடு முன்வந்தார். அவர் சூரிய புவிப்பெளதிக ஆய்வுத்துறையில் வேலைசெய்வதாக விளக்கினார். அது எதை அர்த்தப்படுத்தியது என்பதற்கு எங்களுக்கு ஒரு விளக்கம் தேவைப்பட்டது. அது அங்கே சாக்ரமென்டோ உச்சியில் முதன்முதலாக ஆராயப்பட்டதாக தெரிகிறது. அவர் இவ்விதமாக விளக்கினார்: “சூரியன் அதன் அச்சின் மீது சுழல்வது மட்டுமல்லாமல், ஆனால் அநேக மற்ற வழிகளிலும் இடப்பெயர்ச்சி செய்கிறது. இடைவிடாமல் அதன் மேற்பரப்பை பார்வையிட்டு நிகழும் மாற்றங்களைப் பார்ப்பதன் மூலம் இதை ஆராயமுடியும். இந்த மாற்றங்களிலிருந்து, சூரியனுக்குள்ளே என்ன நிகழ்ந்துகொண்டிருக்கக்கூடும் என்பதைப் பற்றிய கருத்துக்களை சூத்திரவடிவமாக்கி பின்னர் நம்முடைய கருத்துக்களை உறுதிசெய்ய அல்லது தவறென எண்பிக்க பயிற்சி ஆய்வை திட்டமிட முடியும்.”
“சுமார் 1970-ல் சூரியனின் ஓர் அதிர்வு அல்லது குலுக்கம் முன்னறிவிக்கப்பட்டது” என்பதாக அவர் தொடர்ந்து சொன்னார். “ஒரு பெரிய மணி அடிக்கையில் நிகழ்வது போன்ற குலுக்கமாக அல்லது அதிர்வாக அது இருக்கிறது. ஒரு குட்டையில் ஒரு கூழாங்கல்லை தூக்கி எறிவதைப் பற்றிய உதாரணத்தைப் பற்றியும்கூட ஒருவர் யோசிக்கலாம். தாக்கப்பட்ட இடத்திலிருந்து நீரலை வட்டம் குட்டையைக் கடந்துசெல்கையில் எவ்விதமாக குட்டையின் முழு மேற்பரப்பை அது பாதிக்கும்படிச் செய்கிறது என்பதைப் பற்றி ஒருவர் யோசிக்கலாம். சூரியனிலுள்ள அலைகள் சூரியன் முழுவதிலுமாக எல்லாத் திசைகளிலும் செல்வதே வித்தியாசமாக இருக்கிறது.”
இந்த அதிர்வுகள் பல்வேறு மட்டங்களில், ஒருசில மேற்பரப்பின் கீழிருந்தும் மற்றவை சூரியனுக்குள் ஆழத்திலிருந்தும் வெளிப்பட்டு வருவதாகத் தெரிகிறது. இந்த ஆய்வுகளின் காரணமாக, சூரியன் சுமார் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை சுவாசிப்பதைப் போல இலேசாக விரிவடைவதும் பின்னர் மறுபடியுமாக சுருங்குவதும் தெரியவந்திருக்கிறது. 1975-ல் சூரியனின் இந்த அசைவுகளை ஆய்வாளர் ஒருவர் முதன்முதலாகப் பார்த்தார். 1976-ல் ருஷ்ய விஞ்ஞானிகளும்கூட சூரியனுடைய மேற்பரப்பின் ஏற்ற இறக்கத்தைப் பற்றி அறிவிப்பு செய்தனர்.a 1979–80-ல்தானே இந்த அதிர்வு உறுதிசெய்யப்பட்டது. சாக்ரமென்டோ உச்சி வானிலைக் கூடத்தில் பகுதியளவில் இது செய்யப்பட்டது.
“உண்மையில் சூரியன் அநேக அசாதாரணமான அசைவுகளைக் கொண்டிருக்கிறது. சூரியனின் மீதுள்ள அனைத்துமே வாயுவாக இருப்பதால், சூரியனுடைய மேற்பரப்பின் சில பகுதிகளால் மற்றவற்றைக் காட்டிலும் வேகமாகச் சுழலமுடியும். . . . இங்கே சன்ஸ்பார்ட் ஆய்வுக்கூடத்தில் நாங்கள் செய்வது போல், சூரியனை இடைவிடாமல் கண்காணித்துவருவதன் மூலம், சூரியனின் உட்பரப்பு எவ்விதமாகச் சுழன்றுக்கொண்டிருக்கிறது என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். . . . சூரியன் நிலநடுக் கோட்டில் வேகமாகச் சுழலுவதன் காரணமாக மேற்பரப்பில் அதிகமான கலப்புகள் நிகழகின்றன, இது அநேக விநோதமான நிகழ்ச்சிகளை உண்டுபண்ணுகிறது. இந்த அசாதாரணமான பெயர்ச்சி சூரியனின் உட்புறத்தில் காந்தப்புலங்களை உருவாக்குகிறது, இது மேற்பரப்புக்கு மிதந்து வருகிறது. சூரியனில் காணப்படும் கரும்புள்ளிகள் இந்தக் காந்தப் புலங்களின் வெளிக்காட்டாகும்” என்று டாக்டர் டர்னே தொடர்ந்தார்.
சூரியனை இரவும் பகலும் கவனித்துக்கொண்டிருத்தல்!
டாக்டர் டர்னே இவ்விதமாக விளக்கினார்: “சூரியனின் மேற்பரப்பில் நடைபெறும் எல்லாச் செயற்பாடுகளையும் எல்லா மாற்றங்களையும் நாம் பார்க்கும்படிக்கு நாம் இடைவிடாமல் சூரியனை கவனித்துக்கொண்டிருப்பது உண்மையில் அவசியமாக இருக்கிறது. பூமி ஒவ்வொரு நாளும் சுழன்று கொண்டிருப்பதன் காரணமாக, பூமியின் மேற்பரப்பில் ஓரிடத்தில் இதைச் செய்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. அப்படியென்றால் பூமி முழுவதிலும் சூரிய வானிலை ஆய்வுக் கூடங்கள் இருப்பது அவசியமாயிருக்கிறது என்று அர்த்தமாகிறது.”
தற்போது இது கூடாத காரியமாக இருக்கிறது. ஆனால் 1980–81-ல் சாக்ரமென்டோ உச்சியிலிருந்து ஒருசில விஞ்ஞானிகள், மூன்று, மூன்று மாத காலங்களுக்கு சூரியனை பார்வையிடுவதற்காக தென்துருவத்துக்குப் பிரயாணப்பட்டு போனார்கள் என்று டாக்டர் டர்னே எங்களிடம் சொன்னார். சூரியன் தென்துருவத்தில் மூன்று மாதங்கள் வரையாக மறைவதில்லை. ஆதலால் ஒரே தொலைநோக்காடியின் மூலம் இடைவிடாமல் இரவும் பகலும் அது கவனிக்கப்பட முடியும். இந்தத் தகவலைச் சேகரிப்பது, பூமியின் பல இடங்களை உட்படுத்தியதை அறிவது அக்கறையூட்டுவதாக இருந்தது. விஞ்ஞானிகள் ஒருநாள் சூரியனின் எல்லா அதிர்வுகளையும் வகைப்படுத்தி சூரியனிற்குள்ளே என்ன நடைபெறுகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்காக அவைகளை விளக்கக்கூடியவர்களாக இருப்பார்கள் என்று நம்பிக்கையோடிருக்கிறார்கள். ஆய்வாளர்கள் இப்பொழுது இதைச் செய்வதற்காக, பூமி முழுவதும் இணைதிட்ட ஆய்வுக்கூடங்களை உருவாக்கும் எதிர்பார்ப்புகளை உடையவர்களாக இருக்கிறார்கள்.
சூரியனின் சுடர் எழுச்சியும் ஒளிமுடியும்
“இங்கே சாக்ரமென்டோ உச்சியில் வேறு என்ன ஆராயப்பட்டு வருகிறது?” என்பதே டாக்டர் டர்னேயிடம் நாங்கள் கேட்ட அடுத்தக் கேள்வியாகும். அவர் சூரியனின் சுடர் எழுச்சிப் பற்றி எங்களுக்குச் சொன்னார். “இந்தப் பேராற்றல் வாய்ந்த சுடர் எழுச்சிகள் சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளிப்புறமாக விண்வெளிக்குள் லட்சக்கணக்கான மைல்கள் வெடித்து, பூமியில் வந்துசேரும் போது வானொலி செய்தி இணைப்புகளை சிதைக்கும் துகள்களை வெளியேற்றுகிறது. சூரியனுக்கு வெளியே இடைவிடாமல் பெருக்கெடுத்துவரும் துகள்கள் சூரிய காற்று என்றழைக்கப்படுகிறது. இது, சூரியனின் மேற்பரப்பின் சுழற்சிவேகத்தைக் குறைக்க, இது சூரியனுக்குள் ஆழத்தில் நிகழும் சுழற்சியின் மீது செயல்படுகிறது. விளைவு, சூரியனுக்கு முதுமை ஏற்படுகையில் படிப்படியாக சுழற்சியின் வேகம் குறைகிறது. சூரியனின் உட்பகுதி, மேற்பரப்பின் சிதைவுக்கு எவ்விதமாக பிரதிபலிக்கிறது என்பது இங்கே ஆராயப்படும் காரியங்களில் ஒன்றாகும்.”
வானிலை ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்டுவரும் மற்றொரு ஆராய்ச்சி, தினந்தோறும் சூரியனின் செல்விளிம்புடைய ஒளிமுடியை புகைப்படமெடுப்பதை உட்படுத்துகிறது. சூரியனைச் சுற்றியுள்ள உஷ்ணம் எவ்விதமாக தினந்தோறும் மாறுகிறது என்பதை இந்தப் படங்கள் தெரிவிக்கின்றன. சூரியனிலிருந்து உயர்வெப்பநிலை பரவிகிடக்கும் தூரத்தைக் காண்பிக்கும் விளக்கவரைபடங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த விளக்க வரைபடங்கள் தினந்தோறும் மாறுகின்றன, இவை விண்வெளி பயணிகளுக்கு பயனுள்ளத் தகவலை அளிக்கின்றன.
சூரியனின் இன்றியமையாத பங்கு
பூமியின் மீது உயிர் தொடர்ந்திருப்பதற்கு சூரியனிலிருந்து ஆற்றல் அவசியமாயிருக்கிறது. அது நம்மை, நம் பார்வையை, மற்றும் பூமியின் தாவரங்களையும் மிருகங்களையும் பாதிக்கிறது. மேற்கத்திய ஐக்கிய மாகாணங்களில் 22–ஆண்டு வறட்சி சுழற்சி, சுமார் 22 ஆண்டின், முழுமையான கரும்புள்ளி சுழற்சியோடு சம்பந்தப்பட்டதாக தோன்றுவதற்கு அத்தாட்சி இருப்பதைக் காட்டும் ஆய்வு கட்டுரை ஒன்று 1979-ல் வெளியிடப்பட்டது. சூரியனின் நடவடிக்கையிலும் சீதோஷண நிலையின் மீது அதனுடைய சாத்தியமான பாதிப்புகளும் இதில் அக்கறைக்கு ஒரு காரணமாகும்.
1950-களில், சாக்ரமென்டோ உச்சி வானிலை ஆய்வுக்கூடமே முதல் முதலாக சூரிய நிலையெண்ணை நிர்ணயிக்க உதவிபுரிந்தது. இது பூமியிலிருந்து சூரியனுக்குள்ள தூரத்தில் விண்வெளியில் ஒரு பொருளை வந்தடையும் ஆற்றலின் மொத்த அலகுகளாகும். ஒருவேளை அதிக முக்கியமாக இருப்பது சூரிய நிலையெண் எவ்வளவு மாறுபடுகிறது என்பதே.
சூரியனின் கரும்புள்ளிகள், சூரியனின் அதிக அக்கறையூட்டும் அம்சங்களில் ஒன்றாகவும், பூமியின் மீது நம்மைப் பாதிக்கும் ஒன்றாகவும் இருக்கின்றன. சூரியனின் கரும்புள்ளிகள் முதல்முதலாக கலிலியோவினால் கவனிக்கப்பட்டன. சூரிய கரும்புள்ளி சுழற்சி 11 ஆண்டுகளுக்கு நீடித்திருக்கிறது என்றும் ஒரு முழு சூரிய கரும்புள்ளி சுழற்சி இரண்டு 11–வருட சூரிய கரும்புள்ளி செயற்பாடுகளைக் கொண்டிருக்கிறது என்றும் தீர்மானிக்கப்பட்டது. டாக்டர் டர்னே விளக்கிய வண்ணமாக: “சூரிய கரும்புள்ளிகள் காந்த களங்களாகும். அவை இருண்டிருப்பதற்குக் காரணம் ஆற்றலை இடம் விட்டு இடம் கொண்டு செல்லும் இயக்கங்களை அவை தடைசெய்துவிடுகின்றன. சூரியனின் மேற்பரப்பிலுள்ள இந்தக் காந்த களங்களின் அழிவினால் சுடர் எழுச்சிகள் உண்டாவதாகக் கருதப்படுகிறது. இது பேரளவான ஆற்றலை விடுவிக்க, இது வானொலி அலைகளின் தொடர்பை சிதைத்து நம்முடைய வளிமண்டலத்தின் ஒருசிலப் பகுதிகளை மின்மயமாக்குவதன் மூலம் நம்மைப் பாதிக்கின்றன. இந்த ஆற்றல் வடதுருவ ஒளி மற்றும் தென் துருவ ஒளி அல்லது துருவ ஒளி வீச்சுகள் என்றழைக்கப்படும், மனிதவர்க்கத்துக்கு சரித்திரம் முழுவதிலுமே அற்புதமாக இருந்திருக்கும் ஒன்றை உண்டுபண்ணுகிறது.”
சூரிய ஆய்வுகள் சூரிய கரும்புள்ளி செயற்பாடுகள் இருக்கும்போது நம்முடைய வளிமண்டலத்தில் நிகழக்கூடிய மண்ணியல் காந்த புயல்களை முன்னறிவிக்க உதவக்கூடும். இவை உலகசெய்தி தொடர்புகளை பாதிக்கின்றன. இவ்விதமாக விமானப் பயணம் போன்ற, நல்ல வானொலி செய்தித் தொடர்பின் மீது சார்ந்திருக்கும் நடவடிக்கைகளைப் பாதிக்கின்றன. துணைக்கோள் அலைபரப்பீடு உட்படுத்தும் பெருஞ்செலவின் காரணமாக பெரும்பாலான செய்தி தொடர்பு இன்னும் நிலத்தின் மீது வானொலி ஒலிப்பரப்பனுப்பீட்டுக் கருவி மூலமாகவே செய்யப்பட்டு வருகிறது. சூரிய கரும்புள்ளிகளால் விடுவிக்கப்படும் ஆற்றல், வானொலி அலைகளை பூமிக்குத் திரும்ப பிரதிபலிக்கச் செய்கின்ற, பூமியைச் சுற்றிக்கொண்டிருக்கும் அயனப்பட்ட துகள்களின் உறையைத் தகர்த்துவிடுகின்றன. உறை பயனற்றதாகிவிடும்போது வானொலி செய்திகள் இழக்கப்பட்டுவிடுகின்றன.
சூரிய வெளிச்சத்தைப் பற்றி அதிகம் அறிவது அவசியமாகும். நம்முடைய உணவை உற்பத்தி செய்யும் தாவரங்கள், நம்முடைய உணவில் சர்க்கரைச் சத்தையும் மற்ற வேதியற்பொருட்களையும் உண்டுபண்ணுவதற்கு சூரிய வெளிச்சத்தைச் சார்ந்திருக்கின்றன. சூரிய வெளிச்சத்தினால் உண்டுபண்ணப்படும் புகைப்பட இரசாயன எதிர்செயல்கள் கருப்பு வெள்ளையிலும், வண்ணத்திலும் புகைப்படமெடுக்க நம்மை அனுமதிக்கிறது. ஆகவே, நமக்கு மிக அருகாமையிலுள்ள நட்சத்திரங்களைப் பற்றி, தங்களால் முடிந்த அனைத்தையும் கற்றுக்கொள்வது அநேகருக்கு விவேகமாகத் தெரிகிறது.
சன்ஸ்பாட்டுக்கு எங்களுடைய குறுகிய விஜயத்திலிருந்தும், நிபுணர்களிடம் நாங்கள் பேசியதிலிருந்தும் சூரியனைப் பற்றிய நம்முடைய அறிவில் வெகுவாக நாம் கட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருப்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். நம்மில் பெரும்பாலானோருக்குத் தெரிந்ததெல்லாம், குளிரான மழைக்காலத்தில் சூரியனைப் போற்றுவதும், கோட மாதங்களில் இத்தனை உஷ்ணமாக இல்லாதிருப்பதை நாம் விரும்புவதுமே ஆகும். சூரியனின் நுணுக்கங்களுக்குள் கணநேரம் பார்வையிடுவதை நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். மனிதவர்க்கம் இப்போதுதானே, நமக்கு நன்மை செய்கிற நட்சத்திரமாகிய சூரியனின் அதிசயத்தை உண்மையில் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறது என்ற முடிவுக்கே நாங்கள் அனைவரும் வரவேண்டியதாயிருந்தது.—அளிக்கப்பட்டது. (g90 3/8)
[அடிக்குறிப்புகள்]
a சோவியத் யூனியன் கிழக்கு சைபீரியவில் இர்க்குட்ஸியில் கவர்ச்சிகரமான சூரிய ஆராய்ச்சி துறை ஒன்று இருக்கிறது. உலகத்திலேயே மிக சக்திவாய்ந்த சூரிய வானொலி தொலைநோக்காடி அவர்களிடம் இருக்கிறது. சூரியனின் அசைவை அதன் உதயம் துவங்கி அஸ்தமனம் வரை நுட்பமாக படம்பிடிக்கச் சாத்தியமுள்ள 256 அலைவாங்கியை அது கொண்டுள்ளது.
[பக்கம் 14-ன் பெட்டி]
சூரிய வெப்பநிலைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
ஜான் ரபுள்ஸ்கை எழுதிய சூரியனின் வாழ்வும் மரணமும் என்ற புத்தகம் பக்கங்கள் 59 மற்றும் 60-ல் இவ்விதமாக விளக்குகிறது: “வெப்பநிலையின் பொருள்பற்றி நாம் சற்று புரிந்துகொள்ள வேண்டும். வேறுபட்ட இரண்டு வகைகள் உண்டு. ஒன்று ‘இயக்க வெப்பம்’; மற்றொன்று ‘தாவு வெப்பம்.’ இயக்க வெப்பம் என்பது ஒரு துகளின் சராசரி அணுதிரண்மங்களின் இயக்க ஆற்றலின் அளவாக இருக்கிறது. இந்த இயக்கத்தின் வேகம் அதிகமாக இருக்க, வெப்பநிலை உயர்வாக இருக்கும். சூரிய வளிமண்டலத்தின் வெப்பநிலைகளைக் குறித்து நாம் பேசுகையில், இந்த இயக்க வெப்பத்தைப் பற்றியே நாம் பேசுகிறோம். அப்படியென்றால் நாம் சொல்வது என்னவென்றால், சூரிய வளிமண்டலத்திலுள்ள துகள்களின் இயக்கத்தின் சராசரி வேகம், ஒளிப்புரையிலிருந்து நாம் மேல்நோக்கிச் செல்கையில் அதிகரிக்கிறது. இந்தத் துகள்கள் லட்சக்கணக்கான டிகிரி வெப்பத்தைக் கொண்டிருந்தாலும் அவை உங்கள் தோலை கொப்புளித்துப் போகச் செய்யமுடியாது.
“மறுபட்சத்தில், தாவு வெப்பம் என்பது ஒரு பொருளால் வெளியிடப்படும் கதிர்வீச்சின் மொத்த தொகை மற்றும் தரத்தின் அளவாக இருக்கிறது. சூரியனின் உள்ளே ஆழத்தில் வெப்பத்தைப் பற்றி நாம் பேசுகையில் இந்த அர்த்தத்தில் அச்சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஓர் அனற்கொழுந்தின் வெப்பமும்கூட தாவு வெப்பமாக இருக்கிறது.
“ஆனால் சூரிய வளிமண்டலத்தைக் குறித்துப் பேசுகையில், வெப்பத்தை விளக்க இந்தத் தாவு அர்த்தத்தில் நாம் பயன்படுத்த முடியாது. ஒளிமுடியின் வெப்பம் 10,00,000 டிகிரி [செல்சியஸ்] தாவு வெப்பமாக இருந்தால், சூரியனின் வளிமண்டலம், நாம் ஒளிப்புரையை காண இயலாத வண்ணம் அது அத்தனை பிரகாசமாக இருக்கும். உண்மையில் இது இவ்விதமாக இருக்குமானால் சூரியனின் வளிமண்டலம், அவ்வளவு கதிர்வீச்சை வெளியிடுவதால், சூரியனிலிருந்து வெகுதொலைவிலுள்ள ப்ளூட்டோ மிகுந்த உஷ்ணத்தினால் ஆவியாகிவிடும். சூரிய வளிமண்டலத்தில் வெப்பம் தாவு வெப்பமாக இல்லாமல் இயக்கு வெப்பமாக இருப்பது நமக்கு நன்மையாக இருக்கிறது.
“இது சூரிய வளிமண்டலம் கதிர்வீச்சை வெளியிடுவதே இல்லை என்பதை அர்த்தப்படுத்தாது. இது அதிகமான அளவில் கதிர்வீச்சை வெளியிடுவது மட்டுமல்லாமல், அது அதிக விநோதமான ஒரு வகையை வெளியிடுகிறது. ஒளி முடியின் மேற்பாகங்கள் X கதிர்களையும் கொஞ்சம் காணக்கூடிய வெளிச்சத்தையும் வெளியிடுகையில், தாழ்வான பாகங்கள் புறஊதா ஒளியை வெளியிடுகின்றது. இந்தக் கதிர் வீச்சு பூமிக்கு அதிமுக்கியமாகும்; ஏனென்றால் இது பூமியின் வளிமண்டலத்தின் பல்வேறு அடுக்குகளை உண்டுபண்ணுகிறது.”
[பக்கம் 15-ன் பெட்டி/வரைப்படம்]
சூரியன்—பூமியின் நட்சத்திரம்
சூரியன் உயிர் வாழ்வதற்கு உதவிசெய்யும் வெப்பத்தையும் ஒளியையும் நம்முடைய பூமிக்கு அளிக்கும் மாபெரும் உலைக்களமாகும். முக்கியமாக ஹைட்ரஜன் வாயுவாலான மிகப்பெரிய இந்த வானின் ஒளிக்கோளம், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பூமிகளுக்கு ஆதரவளிக்கக்கூடும்! என்றபோதிலும் நட்சத்திரங்களைப் பொறுத்தவரையில் மிகப் பெரியவற்றில் ஒன்றாக இது இல்லை. விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் வண்ணமாக, இந்த ஆற்றலின் ஊற்றுமூலம் நுணுக்கங்கள் நிறைந்ததாக இருக்கிறது. உதாரணமாக, “பெரும்பாலான காணப்படத்தக்க ஒளி, 100 கி.மீ. [60 மைல்] அடர்த்தியுள்ள ஒளிப்புரையினுள்ளிருக்கும் பகுதியிலிருந்து வெளிப்படுகிறது.” என்றபோதிலும் சூரியனின் ஆரம் 4,32,651 மைல்களாக இருப்பதாக கணக்கிடப்படுகிறது.—ஐயன் நிக்கல்சனின் தி சன்.
சூரியனின் வடிவமைப்பு
உட்பகுதி—சூரியனின் மையப்பகுதியில் மிக அதிகமான வெப்பம் காணப்படும் அணு “எரி” மண்டலம்.
ஒளிக்கதிர்களை வீசும் மண்டலம்—உட்பகுதியிலிருந்து ஆற்றல், காமா கதிர்களாகவும் X கதிர்களாகவும் கதிர்வீச்சின் மூலமாக இந்த மண்டலத்தின் வழியாக மாற்றப்படுகிறது.
இணைப்பு மண்டலம்—உகைப்பியக்கம் மூலமாக ஒளிக்கதிர்களை வீசும் மண்டலத்திலிருந்து ஆற்றல் கடந்துவரும் ஒரு குளிர்ச்சியான பிரதேசம்.
ஒளிப்புரை—உண்மையில் சூரியனின் எல்லா ஒளியும் சூரியனின் இந்த வெளிப்படையான மேற்பரப்பிலிருந்து வெளிப்படுகிறது. அது ஓரளவு ஒளிபுகு தன்மையுள்ளது, “ஒரு சில நூறு கிலோ மீட்டர்கள் ஆழம் வரையாக அதைக் காணமுடியும்.” (தி சன்) வெப்பம் சுமார் 10,000 டிகிரி பாரன்ஹீட்டாக இருக்கிறது.
நிறப்புரை—முழு சூரிய கிரகண சமயத்தில் மாத்திரமே காணப்படுகிறது. ஒருசில ஆயிர மைல்கள் அடர்த்தியான வாயுவின் மெல்லிய அடுக்கு, ஆனால் ஒளிப்புரையைவிட வெப்பமானது, சுமார் 18,000 டிகிரி பாரன்ஹீட்.
ஒளிமுடி—முழு சூரிய கிரகண சமயத்தில் மாத்திரமே தெரிகிறது, அப்போது தொலைதூரம் வரை பரவியும் மிக அதிக வெப்பமும் கொண்ட இறகுகளாகவும் கோடுகளாகவும் தோன்றுகிறது.
[வரைப்படம்] (முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
நிறப்புரை
ஒளிப்புரை
இணைப்பு மண்டலம்
ஒளிக்கதிர்களை வீசும் மண்டலம்
மையப் பகுதி
[பக்கம் 13-ன் வரைப்படம்/படம்]
கண்ணாடிகள் (நிலமட்டத்துக்கு மேலே 136 அடி)
நில மட்டம்
காற்றில்லாத வெற்றிடக் குழாய்கள் சுழலுகின்றன (250 டன்கள்)
193 அடி
221 அடி நில மட்டத்துக்குக் கீழே
[படத்திற்கான நன்றி]
From a sketch by National Optical Astronomy Observatories
[பக்கம் 16-ன் படம்]
சூரிய சுவாலை
[படத்திற்கான நன்றி]
Holiday Films
[பக்கம் 16-ன் படம்]
சூரியனின் கரும்புள்ளிகள்
National Optical Astronomy Observatories