இளைஞர் கேட்கின்றனர்
புகைபிடித்தல் உண்மையிலேயே அவ்வளவு மோசமானதா?
புகைபிடித்தல் ஓரனை அவன் சிறுவனாக இருந்தபோதே கவர்ந்திருந்தது. அவனது சித்தி அவளுடைய சிகரெட்டுகளைப் பற்றவைக்கும்போது, தீக்குச்சியை ஊதியணைக்க அவனை அனுமதிப்பாள். 16 வயதிலே புகைபிடித்தல் உண்மையில் எப்படி இருக்குமென்று பார்க்க அவன் முடிவு செய்தான். விருந்து ஒன்றுக்குச் சென்று, ஒரு பெண்ணிடம் ஒரு சிகரெட் கேட்டான்—ஆனால் அதைப் புகைத்து முடிப்பதற்கு முன்பே அவனுக்கு கஷ்டமாகிவிட்டது.
தன் ஆணுக்குரியத் தற்பெருமை பாதிக்கப்பட்டவனாக, ஓரன் தனியாகப் புகைப்பதை “பழக்கப்படுத்த” தீர்மானித்தான். ஒரு நாள் மாலை நல்ல சாப்பாட்டிற்குப் பிறகு, அவன் பயந்தவனாய் சிகரெட் ஒன்றை பற்ற வைத்து புகையை உள்ளே இழுத்தான். என்னே ஆச்சரியம்! மயக்கமோ அருவருப்போ இல்லை. தன்னைக் குறித்து சந்தோஷமடைந்தவனாக, அவன் மறுபடியும் மறுபடியுமாக புகையை உள்ளிழுத்தான், அந்தச் சிகரெட்டை அவன் புகைத்து முடித்தப் பிறகு அவன் மேலும் ஒன்றை விரும்பினான். மேலும் அதற்கு பிறகு இன்னுமொன்று. அடுத்த ஆறு வருடங்களில், ஓரன் சிகரெட்டுகளை ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து புகைப்பவனாவான்.
புகைபிடித்தல்—நிலைமை மாறியுள்ளதா?
ஓரனுடைய செயல்களை இன்று பல இளைஞர்கள் இகழலாம். ஐக்கிய மாகாணங்களின் ஓர் ஆய்வின்படி நாள் ஒன்றுக்கு ஒன்று அல்லது அதற்கு அதிகமான பாக்கெட்டு சிகரெட்டுகள் புகைத்தல் ஒரு நபரை “அதிக ஆபத்திற்குள்ளாக்கியது” என்று கேட்கப்பட்ட வாலிபர்களில் 66 சதவீதத்தினர் நம்பினார்கள். வேடிக்கை என்னவெனில், மிகவும் பலத்த கண்டனங்கள் புகைப்பவர்களிடமிருந்து வருகின்றன! “அது ஓர் அருவருப்பான பழக்கம்” என்று 16 வயதான புகைப்பவர் ஒருவர் சொல்லுகிறார். ஓர் ஆய்வில் புகைபிடிக்கும் பருவவயதினரில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தினர் புகைபிடிப்பது கெடுதலானது என்று அவர்கள் நினைத்ததை ஒப்புக்கொண்டார்கள். ஏறக்குறைய பாதிபேர் அதை விட்டுவிடுவதாக கூறினர், ஐந்து வருடங்களுக்குள்ளாக அதை விட்டுவிடுவதாயிருப்பதாக கூறினார்கள்.
அப்படியானால், தெளிவாகவே, புகையிலை நெடுங்காலமாக விரும்பப்பட்டு வரும் நிலையை அங்கீகரியாமையின் பேரலையொன்று அகற்றிப்போடுவதாக பயமுறுத்துகிறது. புகைபிடித்தலினால் ஆரோக்கியத்திற்கு வரும் தீய விளைவுகளைக் குறைத்தல்—25 வருடங்களின் முன்னேற்றம் என்ற தலைப்புடன் ஐ.மா.-வின் கூட்டுப் பொதுநலச் சேவையின் தலைமை மருத்துவ அதிகாரியின் 1989-ன் அறிக்கை சொல்லுகிறதாவது: “1940-களிலும், 1950-களிலும் புகைபிடிப்பது மிகவும் விரும்பப்பட்டது; இப்போது, அதிகரித்து வரும் எண்ணிக்கையினர் இதைத் தவிர்க்கின்றனர். சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், மேலும் மற்ற புகழ் பெற்றவர்கள் சிகரெட் விளம்பரங்களில் தோன்றுவது வழக்கம். இன்று நடிகர்கள். உடற்பயிற்சிப் போட்டியாளர்கள், சமூகத்தில் பெரியவர்கள் மற்றும் அரசியல் வேட்பாளர்கள் புகைபிடிப்பதை காண்பது அரிது. . . . மக்கள் அதிகரித்து வரும் எண்ணிக்கைகளில் புகைபிடிப்பதைவிட்டு வருகிறார்கள்.”
ஐக்கிய மாகாணங்களிலுள்ள எல்லா பெரியவர்களிலும், 1965-ல், 40 சதவிகிதத்தினர் புகைபிடித்தனர். 20 வருடங்களுக்கும் மேலான பிறகு, 29 சதவிகிதத்தினர் மட்டுமே புகைபிடித்தனர். தலைமை மருத்துவ அதிகாரியின் அறிக்கை மேலும் கூறுவதென்னவெனில், “உயிரோடிருக்கும்போது புகைபிடித்த எல்லா பெரியவர்களிலும் சுமார் பாதிபேர் புகைப்பதை விட்டுவிட்டனர்.” 1976-ல், உயிர்நிலைப் பள்ளியிலுள்ள பெரிய மாணவர்களில் ஏறக்குறைய 29 சதவிகிதத்தினர் தினமும் புகைபிடித்தார்கள். பத்து வருடங்களுக்கு மேலானப் பிறகு, 19 சதவிகிதத்தினர் மட்டும் புகைபிடித்தார்கள்.
ஆகவே புகைபிடித்தலைப் பற்றி ஒன்றும் சொல்லத் தேவையில்லை என்று தோன்றலாம். ஆனால் புகைபிடித்தலை எதிர்த்துத் தீவிரமான பிரச்சாரங்களும் மருத்துவரிடமிருந்து கடுமையான எச்சரிக்கைகளும் இருந்தாலும், கூட்டுமொத்த உலகளாவியப் புகையிலையின் பிரயோகம் கணிசமாக உயர்ந்திருக்கிறது! சுமார் 5 கோடி பெரியவர்கள் ஐக்கிய மாகாணங்களில் தொடர்ந்து புகைபிடித்து வருகிறார்கள். மேலும் ஓரனுக்கு நேரிட்டது மற்ற பல வாலிபர்களுக்கும் நேரிட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே சுமார் 3,000 இளம் வயதினர் முதன்முறையாகப் புகைபிடிக்கிறார்கள். அதைக் கூட்டினால் ஆண்டொன்றுக்கு ஆச்சரியப்படத்தக்க அளவில் பத்து லட்சம் புதிய புகைபிடிப்போரை உண்டாக்குகிறது! வியப்பளிக்கும் வகையில், இந்தப் புதிய நிக்கொடின் வெறியர்களில் பெரும்பாலானோர் இளம் பருவவயது பெண்களாக இருக்கிறார்கள்.
புகைபிடித்தலுக்கு எதிரானப் பிரச்சாரம்—புதியதொன்றல்ல!
ஆபத்துகளைக் குறித்து மக்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள் என்றில்லை. ஏன், புகைபிடித்தலை தவிர்ப்பதற்கான விஞ்ஞானப்பூர்வமானக் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பதற்கு மிக முன்னதாகவே அது ஓர் அருவருப்பான, விரும்பத்தகாதப் பழக்கமென்று இயற்பறிவு மக்களிடம் கூறியது. 90-க்கும் குறைவான ஆண்டுகளுக்கு முன், ஐக்கிய மாகாணங்களின் பல பகுதிகளில் சிகரெட்டுகள் சட்டவிரோதமானவையாக இருந்தன. சில இடங்களில் வெறுமென அவற்றை வைத்திருப்பதே கைது செய்யப்படுவதற்கு ஆதாரமாக இருந்தது. மேலும் நெடுங்காலத்திற்கு முன், புகைபிடித்தலுக்கு எதிராக இன்னும் அதிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
புகைபிடித்தலுக்கெதிராக 17-ம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளைப்பற்றி ஸ்மித்சோனியன் என்ற பத்திரிகை விவரிக்கிறது: “சீனாவிலே, 1638-ல் கொடுக்கப்பட்ட அரச கட்டளையானது இந்தப் பிரயோகத்தை . . . புகையிலையின் பிரயோகத்தை சிரச்சேதத்தண்டனைக்குரிய குற்றமாக்கியது. . . . ருஷ்யாவில் புகைபிடிப்பவர்கள் சவுக்கால் அடிக்கப்பட்டனர்; திரும்பத்திரும்ப தவறு செய்பவர்களின் நாசிகள் அறுக்கப்பட்டன; தொடர்ந்து சட்டத்தை மீறியவர்கள் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்டனர். பெர்ஷியாவிலே அவர்கள் சித்திரவதைக்குள்ளானார்கள், கழுமரத்தில் அறையப்பட்டார்கள் மற்றும்/அல்லது சிரச்சேதம் செய்யப்பட்டார்கள்.”
அப்படிப்பட்ட சட்டங்கள் மிகவும் கடுமையானவை, கொடூரமானவை என்பது உண்மைதான். ஆனால் ஒரு விதத்தில் புகைபிடிப்பவர்கள் தங்கள் சொந்த உடல்களைக் குறித்ததில் கொடூரமாக நடந்து கொள்ளுகிறார்கள்.
புகைபிடித்தல்—அது உங்கள் உடலுக்கு செய்வது
நிக்கொட்டின் புகையிலைக்கு அதன் கேடானக் கவர்ச்சியைத் தரும் ஒரு பகுதிப்பொருளாக இருக்கிறது, ஆனாலும், தி உவோர்ல்ட் புக் என்ஸைக்ளோபீடியா சொல்கிறதாவது: “ஓர் அங்குஸ்தான் அளவு நிக்கொட்டின்—சுமார் 60 மில்லிகிராம் (1/500 அவுன்ஸ்) எடையானது—ஒரே சமயத்தில் உட்கொள்ளப்பட்டால் ஓர் ஆளையே கொன்றுவிடும். சாதாரண சிகரெட் ஒன்றில் சுமார் 1 மில்லிகிராம் (1/30,000 அவுன்ஸ்) நிக்கொட்டின் உள்ளது.”
நிக்கொட்டின் ஒருவேளை துர்ப்பழக்கத்திற்கு அடிமையாக்கும் பலத்தத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது. ஐ.மா. தலைமை மருத்துவ அதிகாரியின் ஓர் அறிக்கை முடிவாகக் கூறுவதாவது: “பெரும்பாலான புகைபிடிப்பவர்கள் இளம் பருவவயதில் புகைபிடிக்க ஆரம்பித்து பிறகு அந்தத் துர்ப்பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். . . . இன்று புகைபிடிப்பவர்களில் 80 சதவிகிதத்தினர் புகைபிடிப்பதை விட்டுவிட விரும்புவதாகக் கூறுகிறார்கள்; புகைபிடிப்பவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் புகைபிடிப்பதை விட்டுவிட ஒரு முறையாவது கடுமையான ஒரு முயற்சியை செய்திருக்கிறார்கள்.” அப்படிப்பட்ட முயற்சிகள் புகையிலை மீது உண்டாக்கும் அரித்தழிக்கும் ஒரு வேட்கை, அமைதியின்மை, முன்கோபம், கவலை, தலைவலிகள், மயக்கம், வயிற்றுக் கோளாறுகள் வேலையில் கவனம் செலுத்த முடியாமை போன்று எப்போதும் திரும்பப்பெறும் வேதனையான அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றன.
ஆகிலும், ஒருவரை நிக்கொட்டினால் கறைபடுத்துவதைப் பார்க்கிலும் சிகரெட்டுகள் அதிகமாக பாதிக்கின்றன; பற்றவைக்கப்பட்ட ஒரு சிகரெட் சுமார் 4,000 விதவிதமான இரசாயனப் பொருட்களை வெளியேற்றும் ஓர் உண்மையான நச்சுத் தொழிற்சாலையாகும். இந்த இரசாயனப் பொருட்களில் நாற்பத்திமூன்று பொருட்கள் புற்றுநோய் உண்டுபண்ணுவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. நுரையீரல்களிலும் நுரையீரல்களுக்கு போகும் காற்று வழிகளிலும் ஒட்டிக்கொள்ளும் பிசுபிசுப்பான தார்-ஐப் போல் அவற்றில் சில உள்ளன. இது பின்னர் நுரையீரல் சார்ந்த புற்றுநோய் உண்டாவதில் விளைவடையக்கூடும். “சிறுநீர்ப்பை, கணையம், மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட புற்றுநோய்க்கு ஏதுவான காரணமாகவும் வயிற்றில் வரும் புற்றுநோயுடன் சம்பந்தப்பட்டதாகவும்” புகைபிடித்தல் கருதப்படுகிறது.—புகைபிடித்தலினால் ஆரோக்கியத்திற்கு வரும் தீய விளைவுகளைக் குறைத்தல்.
புகைபிடிப்பவர் ஒருவருக்குப் புற்றுநோய் வளர பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் வெறும் ஒரு சிகரெட் என்றாலும் அது அதிகக் கேடுவிளைவிக்கக்கூடியதாக உள்ளது. நிக்கொட்டின் உங்கள் இருதயத்துடிப்பை துரிதப்படுத்தி, உங்கள் உடலின் பிராணவாயுவின் தேவையை அதிகப்படுத்துகிறது. துர்ப்பாக்கியமான விதத்தில், சிகரெட் புகை கரிமல்ஓருயிரகையையும் (கார்பன் மோனக்ஸைட்)—தானியங்கி மோட்டார் வண்டிகளின் புகைபோக்கிகள் வெளியேற்றும் நச்சுப்புகை—கொண்டிருக்கிறது. இந்த நச்சுப் பொருள் இரத்த ஓட்டத்தை நோக்கி சென்று, இருதயத்திற்கும் மற்ற முக்கிய உறுப்புகளுக்கும் பிராணவாயு செல்வதை உண்மையிலேயே தடுக்கிறது. இதை விட மோசமான வகையில், நிக்கொட்டின் இரத்தக்குழாய்களை குறுகியதாக்கி, பிராணவாயு செல்வதை மேலும் குறைவாக்குகிறது. இதனால் புகைபிடிப்பவர்களுக்கு இருதயநோய் அச்சுறுத்துமளவிற்கு அதிகமாக உள்ளது.
வயிற்றுப்புண், கருச்சிதைவு பாதிக்கப்பட்ட குழந்தைகள், சந்ததி சிதைவு, மாரடைப்பு—புகைபிடிப்பவர்கள் எதிர்ப்படும் மற்ற பல அபாயங்களில் இவை சில. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலும் சுமார் 25 லட்சம் புகையிலை சம்பந்தப்பட்ட மரணங்கள் ஏற்படுகின்றன. இந்தச் சாவுகளில் 4,00,000-க்கு மேலானவை ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே ஏற்படுகின்றன. ஐ.மா.-வின் தலைமை மருத்துவ அதிகாரி கூறுவதாவது: “ஐக்கிய மாகாணங்களில் ஒவ்வொரு ஆறு சாவுகளிலும் ஒன்றுக்கும் மேலானவைக்கு புகைபிடித்தல் காரணமாக உள்ளது. நம் சமுதாயத்தில் ஏற்படும் மரணத்திற்கு மிகவும் முக்கியமான தடுக்கக்கூடிய ஒரு காரணமாக புகைபிடித்தல் உள்ளது.” தற்போது 20 வயதிற்கு கீழே உள்ளவர்களில் சுமார் 20 கோடி பேரை புகைபிடித்தல் இறுதியில் கொன்றுபோடும் என்று சில உடல்நல அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.
ஆனால் புகைபிடிப்போர் அவர்களை மட்டுமே பாதிப்பதில்லை. அவர்களுடைய நச்சுப் புகையை மற்றவர்கள் சுவாசிக்கச் செய்து, புகைபிடிக்காதவர்களையும் நுரையீரல் புற்றுநோய் மற்றும் இதர சுவாசநோய்களின் ஆபத்துகளுக்கு உட்படுத்துகிறார்கள்.
உங்கள் சொந்தத் தீர்மானத்தை செய்தல்
புகையிலையினால் வரும் அபாயங்களைப் பற்றி எச்சரிக்கவும் அதனுடைய உபயோகத்தைக் குறைக்கவும் ஒவ்வொரு நாடும் நடவடிக்கை எடுத்திருப்பது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. என்றபோதிலும், ஆபத்துகள் வலியுறுத்தப்பட்டாலும் பல வாலிபர் மத்தியில் இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. “நான் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்தால் திருப்தியடைகிறேன்” என்கிறார் 15 வயதான ஹாலி. “புற்றுநோயை பெறுவதாக ஒருபோதும் எண்ணுகிறதில்லை.”
ஞானமாக ஒரு நீதிமொழி சொல்வதாவது: “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்; பேதைகளோ நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்.” (நீதிமொழிகள் 27:12) புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகி அதற்கான தண்டனையை, அதாவது புற்றுநோய், இருதயக்கோளாறு, சுவாச நோய்களை அனுபவிக்க நீங்கள் உண்மையிலேயே விரும்புகிறீர்களா? நிக்கோட்டின் புகைபிடிப்பதனால் பெறக்கூடிய இன்பங்களுக்காக ஒருவர் வாய் துர்நாற்றம், மோசமான இறுமல், மற்றும் மஞ்சள்நிற பற்களை பெறுவது அவசியமா?
மறுபட்சத்தில், புகைபிடிப்பதை தவிர்ப்பதற்கு ஒரு மிக முக்கியமான காரணமிருக்கிறது: கடவுளுடன் கொண்டிருக்கும் நட்பை பாதுகாக்க உங்களுக்கு இருக்கும் ஆசை. நீங்கள் ஒருவருக்கு ஒரு விலையுயர்ந்தப் பரிசைக் கொடுத்து, அதை அவனோ, அவளோ தூக்கி எறிந்துவிட்டால் நீங்கள் வருத்தப்படமாட்டீர்களா? அதேவிதமாக, கடவுள் நமக்கு “ஜீவனையும் சுவாசத்தையும்” கொடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:25) அந்தப் பரிசை நீங்கள் தவறாக உபயோகிக்கும்போது அவர் எப்படி உணருகிறார் என்பதைக் கற்பனைசெய்து பாருங்கள்! ஆகவே தான் அப்போஸ்தலனாகிய பவுல் இப்படியாக எழுதினார்: “இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் [கடவுளோடு அங்கீகரிக்கப்பட்ட உறவை கொண்டிருப்பது], நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.” (2 கொரிந்தியர் 7:1) வெறுமென மாம்சத்தை தீட்டுப்படுத்துவது, அதாவது ஒருவர் சரீரத்தை மோசமான இரசாயனப் பொருட்களால் மாசுப்படுத்துவது மட்டுமன்றி புகைபிடிப்பது இன்னும் அதிகளவில் பாதிக்கிறது; அது ஒருவர் ஆவியையும் அல்லது கட்டுப்படுத்தும் சிந்தனா சக்தியையும் பாதிக்கிறது. புகைபிடிப்பது மோசமானது, தன்னலமானது, தெய்வீகமற்றது.
இப்படியெல்லாம் இருந்தபோதிலும், பல வாலிபர்கள் புகைபிடிக்கும் ஆசைக்கு இன்னும் இடம்கொடுக்கிறார்கள். இது ஏன் இப்படி இருக்கிறது. மற்றும் அப்படிப்பட்ட அழுத்தங்களை ஒரு வாலிபர் எப்படி எதிர்த்து நிற்கலாம் என்பது பின்வரும் கட்டுரையின் பொருளாக இருக்கும். (g91 8⁄8)
[பக்கம் 16-ன் படம்]
உங்களை நீங்களே சிக்கிக்கொள்ள இடங்கொடுப்பதற்கு முன்பாக, விளைவுகளை எண்ணிப்பாருங்கள்