வேண்டாதப் பொருட்கள் சேருவது கட்டுக்கடங்காமல் போகும்போது
உங்கள் வீட்டைச் சுற்றி பாருங்கள். வேண்டாத பொருட்களினால் உங்களுக்கு இடமில்லாமல் போகிறதா? ஒரு நண்பர் உங்கள் தனியறைக்குள் பார்த்தால் உங்களுக்கு வெட்கமாக இருக்குமா? சேர்த்து வைக்கப்பட்ட உங்களது உடைமைகளின் குவியலின் கீழ் இருப்பதால் ஒரு குறிப்பிட்ட பொருளை கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறதா? அப்படியானால், இதில் நீங்கள் தனித்தில்லை.
“நிச்சயமாகவே நான் மிகவும் ‘சேமிப்பவன்’” என்று ரால்ஃப் உண்மையை ஒத்துக்கொள்கிறார். “15 வருடங்களுக்கு மேலாக நான் சேர்த்து வைத்த ஆடைகள், செய்தித்தாள்கள், புத்தகங்களில் நான் மூழ்கிக்கொண்டிருந்தேன்” என்று சொல்லுகிறார் லியான். “சுத்தம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே அதை ஆரம்பிப்பதற்கு முன் என்னை சோர்வடையச் செய்கிறது” என்று வேண்டாத பொருட்களுக்கு பலியான மற்றொருவர் புலம்புகிறார்.
வேண்டாத பொருட்கள் நிறைந்த சுற்றுப்புறத்தில் சில பிள்ளைகள் வளருகிறார்கள். அவர்களில் ஒருவர் இவ்வாறு கூறுகிறார்: “எனக்கு நினைவு இருக்கும் நாள் முதல், எங்கள் வீட்டிற்கு முதல் முறையாக வருபவர்கள், வீட்டில் என்ன எதிர்பார்க்கலாம் என்று அவர்களை எச்சரித்திருக்கிறேன். உட்காருவதற்காக ஒரு பொருளை தள்ளி வைத்தால் பரவாயில்லை என்று அவர்களிடம் கூறியிருக்கிறேன்.” வீடு சரியானபடி இல்லாத காரணத்தினால் பெரியவர்களும் கூட அந்நியரை அழைக்கத் தயங்கலாம்.
எவ்வளவு பொருட்களை சேகரித்து இருக்கிறார்கள் என்பதை இடம் மாறுவதை எதிர்ப்படும் வரை மக்கள் அடிக்கடி உணருவதில்லை. ஒருவர் தேவையற்றப் பொருட்கள் சேருவதைக் கட்டுப்படுத்த ஓர் ஒழுங்கான திட்டத்தை உடையவராக இல்லையென்றால் இடம் மாறுவது அதிகமான நேரத்தையும் பணத்தையும் உட்படுத்துகிறது.
ஆனால், பலருக்கு இப்படியாக வேண்டாதவற்றை சுத்தம் செய்வது, எளிதில் பொருட்களை வெளியே தூக்கிப்போடுவதைப் பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. முதலில் பல இடையூறுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அதை ஏன் அவர்கள் தூக்கியெறியக்கூடாது?
வேண்டாதவற்றை சேகரித்த எல்லாருமே 1930-களில் ஏற்பட்ட பணவீக்கத்தை தப்பிப்பிழைத்த முதியோர்கள் என்று சில காலமாக உளவியல் வல்லுநரான லிண்டா W. வாரனும் மருத்துவ சமூகத் தொண்டரான ஜோனா C. ஆஸ்ட்ரமும் நினைத்தார்கள். சேமித்து வைப்பது “அரிதானது மற்றும் தீங்கற்ற பொது வாழ்க்கையிலிருந்து விலகுவதாக” அவர்கள் நினைத்தனர். இருப்பினும், இந்த விஷயத்தைக் குறித்து ஆராய்ந்தப் பிறகு அவர்கள் அறிக்கையிட்டதாவது: “1930-களுக்கு நெடுங்காலத்திற்குப் பிறகு பிறந்த, வேண்டாத பொருட்களை சேமித்து வைப்பவர்களின் ஓர் இளைய தலைமுறையை கண்டுபிடித்ததில் நாங்கள் வியப்படைந்தோம். . . . இப்படிப்பட்ட நடத்தை சாதாரணமானது என்று இப்போது நம்புகிறோம். மேலும் இது தீவிரமாகும்போது வேண்டாத பொருட்களை சேமித்து வைப்பவர்களுக்கு அல்லது அவர்களோடு இருப்பவர்களுக்கு இது பிரச்னைகள் ஏற்படுத்தும்.”
இது எவ்வளவு மோசமாக ஆகக்கூடும்? “வேண்டாத பொருட்களினால் திருமணங்கள் பிளவுபடுவதை ஆஸ்ட்ரம் பார்த்திருக்கிறார்,” என்று ஹெல்த் பத்திரிகை அறிக்கையிடுகிறது. சிலர் ஆலோசனை கூறுவதைத் தொழிலாக கொண்டிருப்பவர்களின் உதவியை நாடுகிறார்கள். உண்மையில், ஒருவரது தனிப்பட்டக் காரியங்களை சீரமைத்தல் பற்றி ஆலோசனை வழங்குவது “வளர்ந்துவரும் ஒரு துறையாகவும், நம் அறைகளை சுத்தம் செய்ய நம்மை தொந்தரவு செய்த நம் தாய்மார்கள் செய்ததை, இந்த ஆலோசனை வழங்குபவர்கள் நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 1,000 டாலர் [ஐ.மா.] வரை வசூலிக்கலாம்” என்றும் ஹெல்த் பத்திரிகை கூறுகிறது.
வேண்டாதப் பொருட்களால் உங்களுக்கு அவ்வளவு மோசமாக ஒரு பிரச்னை இல்லாமல் இருக்கலாம். என்றபோதிலும், இப்படிப்பட்ட பொருட்களுக்கும் குப்பைத்தொட்டிக்கும் இடையே உள்ள கீழ்வரும் நான்கு இடையூறுகளை மேற்கொள்ளுவது கடினமாக இருக்கலாம்:
◻ எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய ஒரு தேவை. (“பிறகு வருத்தப்படுவதைவிட இப்பொழுது சேர்த்து வைப்பது நல்லது.”)
◻ பாச உணர்வினால் ஏற்படும் ஒரு பற்று. (“இதை மேரி அத்தை எனக்கு கொடுத்தார்கள்.”)
◻ பிறகு ஏற்படக்கூடிய மதிப்பு. (“என்றாவது ஒரு நாள் அதன் மதிப்பு அதிகமாகலாம்.”)
◻ தேயாமல் அல்லது கெடாமல் இருப்பது. (“தூக்கிப்போட முடியாத அளவிற்கு மிகவும் நல்லதாக இருக்கிறது.”)
இதன் விளைவு? சைக்காலஜி டுடே கூறுவதாவது: “பொருட்களும் அதனால் ஏற்படும் பிரச்னைகளும் அதிகரித்து வருகின்றன.”
ஆகையால் வேண்டாதப் பொருட்கள் சேருவதை எவ்வாறு கட்டுப்படுத்தலாம்?
எங்கே ஆரம்பிப்பது
புயற்காற்று ஒன்று வீசி தன் உடைமைகளில் சில பொருட்களை தவிர மற்ற அனைத்தும் அழிக்கப்பட்டால் அவள் எப்படி உணருவாள் என்று கற்பனைசெய்து பார்க்க கேட்கப்பட்ட போது ஒரு பெண் கூறியதாவது: “அனைத்தையும் இழந்துவிடுவதைப் பற்றிய எண்ணமானது எல்லாவற்றைப் பார்க்கிலும் எனக்கு ஒரு சுமை நீங்கிய உணர்வை கொடுத்தது—அதாவது வேண்டியவற்றை பிரித்தெடுப்பதும் வேண்டாதவற்றை கழிப்பதும் போன்ற கவலையின்றி, என்னை குழப்பத்திலிருந்து விடுவித்தது.” வகைப்படுத்தி பிரிப்பதும் தேவையற்ற பொருட்களை தூக்கியெறிவதும் ஒரு சவாலாகலாம் என்பதை இது விளக்குகிறது.
“வேண்டாதவற்றை சேர்ப்பவர்களுக்கு இரண்டு பிரச்னைகள் உள்ளன,” என்கிறார் ஆலோசகராகிய டாரலீ ஷுல்மன். “வீட்டிற்குள் ஏற்கெனவே இருக்கும் பொருட்களும், உள்ளே வரும் பொருட்களும்” ஆகும். சுத்தம் செய்வதில் முழுமையாக ஈடுபடுவதைக் காட்டிலும் ஒரு நாளைக்கு 15 நிமிடத்திற்கு குறைவாக செலவிட்டு ஓர் இடத்தை ஒழுங்குப்படுத்தலாம் என்று அவர் ஆலோசனை கூறுகிறார். வீட்டிற்குள் இருக்கும் வேண்டாத பொருட்களை சமாளிக்க இது ஒரு சிறந்த வழியாகும். ஆனால், “உள்ளே வரும் பொருட்களைப்” பற்றியென்ன?
வீட்டிற்கு ஏதேனும் ஒரு பொருளை வாங்குமுன், உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது எனக்கு உண்மையிலேயே தேவையா? இதை நான் எங்கே வைக்கப் போகிறேன்? இதை நான் உபயோகிப்பேனா?’ இது போன்றக் கேள்விகள் கேட்பதனால் “நீங்கள் வீட்டிற்குள் கொண்டுவர இருந்த பொருட்களில் 75 சதவிகிதத்தை கொண்டு வர மாட்டீர்கள்,” என்று டாரலீ ஷுல்மன் உறுதியாக கூறுகிறார்.
உவாட்ச் டவர் சங்கத்தின் தலைமை காரியாலயங்களிலும் கிளைக்காரியாலயங்களிலும் வசிப்பவர்கள் தங்கள் அறைகளை வேண்டாத பொருட்கள் சேராமல் வைத்துக்கொள்ளவும் ஒவ்வொரு அறைகலன் மீதும் அல்லது அடுக்கம் மீதும் வைக்கப்பட்ட அலங்கார அணிகளின் எண்ணிக்கையை இரண்டு அல்லது மூன்றுக்குள் கட்டுப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள். இது சுத்தம் செய்வதை எளிதாக்குகிறது. மேலும், பார்ப்பதற்கும் இது மிக அழகாக இருக்கிறது. தாள்களும், பத்திரிகைகளும், புத்தகங்களும், புத்தகப் பைகளும், இசைக் கருவிகளும், விளையாட்டுப் பொருட்களும், ஆடைகளும், பாத்திரங்களும் மற்ற இதர பொருட்களும் எல்லா இடத்திலும் கிடக்கவிடக்கூடாது. சரியானபடி மேசை நாற்காலி போன்றவைத் தவிர வேறு எந்தப் பொருளும் அறையின் தளத்தில் இருக்கக்கூடாது. வேண்டாத பொருட்கள் இல்லாத ஒரு சுற்றுப்புறத்தை வளர்க்க விரும்புவோருக்கு இது நிச்சயமாகவே ஒரு மாதிரியாக இருக்கிறது.
கண் மறைவில்—தனி அறைக்குள்ளே
“ஒரு நாள் அறிவிப்பில், என் அறையை சரி செய்துவிடுவேன்,” என்கிறாள் ஜோவன், “ஆனால், தனி அறைகள் எப்போதுமே படுமோசமாக இருந்தன.” சிலர் தனி அறைகளை வேண்டாத பொருட்களைத் தூக்கியெறிவதற்கான ஓர் இடமாக அவற்றை வெறுமென பார்க்க முடியாத ஓர் இடத்திற்கு தள்ளிவிட பயன்படுத்துகிறார்கள். ஒரே அளவில் இருக்கும் ஓர் இடத்தில் அதிகம் அதிகமாக போடும்பொழுது பிரச்னை மேலும் மோசமடைகிறது.
சேர்ந்திருக்கும் வேண்டாத பொருட்களிடமிருந்து உங்கள் தனியறைக்கு விடுதலைத் தேவையா? குட் ஹவுஸ்கீபிங் (Good Housekeeping) என்ற பத்திரிகை ஆலோசனை அளிப்பதாவது: “தனியறை-ஒழுங்குபடுத்தும் முறைகள் வெவ்வேறு சாதனங்களாகவும் துணையுறுப்புகளாகவும் எந்த ஓர் இடத்திற்கும் பொருந்துவதற்கு மாற்றியமைக்கப்படக்கூடியதாக கிடைக்கின்றன. உங்கள் வீட்டில் சேமிப்பிட நெருக்கடியை வெல்ல இதில் ஒன்றை பயன்படுத்துங்கள்.” ஆகையால், தனியறையை வேண்டாதப் பொருட்கள் வைக்கும் உங்கள் புகலிடமாக ஆக்கிவிடாதீர்கள். வேண்டாதப் பொருட்கள் இல்லாமலும் ஒழுங்காகவும் வைத்துக்கொள்ளுங்கள்.
உடைமைகளைப் பற்றிய ஒரு சமநிலையான கருத்து
“என் உடைமைகள் என் பிரதிபிம்பமாக, நான் எப்பேர்ப்பட்டவள் என்பதில் பங்கு வகிக்கிறது,” என்றாள் ஒரு பெண். “என் நகைகள் எனக்கு மிகவும் துணையாக இருக்கின்றன,” என்று மற்றொருத்தி மேலும் கூறுகிறாள். “என் மாலைகளையும், மோதிரங்களையும் நான் மிகவும் விரும்புகிறேன்.” மற்றொரு பெண் “இதுவே நான்—இதுவே என் தனித்தன்மை, இதை நீங்கள் வெளியே தூக்கிப்போடக்கூடாது!” என்று எதிர்ப்பு தெரிவிக்கிறாள்.
இதற்கு மாறாக, இயேசு கிறிஸ்து கூறியதாவது: “தனக்கு சொந்தமானவைகள், தன்னுடைய தேவைகளுக்கு அதிகமாக இருப்பினும், ஒரு மனிதனின் உயிரை பாதுகாக்க இயலாது.”—லூக்கா 12:15, தி ஜெருசலேம் பைபிள்.
இப்படியாக வேதாகமம் நமது உடைமைகளை குறித்து ஒரு சமநிலை நோக்கை உற்சாகப்படுத்துகிறது. ஒழுங்கமைப்பை மேம்படுத்தி, சபையில் சேவைசெய்யும் மூப்பர்களுக்கு இதை ஒரு தேவையாகச் செய்கிறது.—1 தீமோத்தேயு 3:2.
உங்கள் வீட்டில் உங்களுக்கு இடமில்லாமல் போகும் ஓர் இடத்தில் மேற்கூறிய ஆலோசனைகளை பொருத்த ஆரம்பித்தால் என்ன? தினமும் முயற்சி செய்து, உங்கள் உடைமைகளைக் குறித்து ஒரு சமநிலையான நோக்கைக் கொண்டு வேண்டாதப் பொருட்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். (g91 8⁄8)
[பக்கம் 24-ன் பெட்டி/படம்]
வகைப்படுத்துதலும் அப்புறப்படுத்துதலும்
நீங்கள் கவனமில்லாமல் இருந்தால் உங்கள் வீடுகளில் எளிதில் வேண்டாத பொருட்களை சேரச்செய்யும் குறிப்பிட்ட பொருட்களை குறித்து சில உபயோகமுள்ள ஆலோசனைகள் கீழே உள்ளன.
படிப்பதற்கான பிரசுரங்கள்: பழைய பத்திரிகைகளையும், செய்தித்தாள்களையும் தூக்கியெறிவது உங்களுக்கு கடினமாக இருக்கிறதா? ‘இதை ஒரு நாள் நான் படிக்க வேண்டும்,’ என்று உங்களிடம் நீங்களே கூறும்படி ஒரு தலைப்பு உங்களை எளிதில் கவருகிறதா? முழு பத்திரிகையையோ அல்லது செய்தித்தாளையோ எடுத்து வைப்பதைவிட அக்கறையைத் தூண்டும் கட்டுரையை மட்டும் கத்திரித்து “படிக்க வேண்டும்” என்று தலைப்பிட்ட காகித கோவயில் வைத்திடுங்கள். போதியக் காலத்திற்குள் படிக்கப்படவில்லை என்றால்—அதாவது ஒரு சில வாரங்களில்—அதை வெளியே அகற்றி போடுங்கள்.
உடைகள்: உங்களுக்குச் சொந்தமான ஆடைகளில் பாதி ஆடைகளை நீங்கள் அணியாமல் இருக்கும்போதும், உங்கள் உடைகளை வைக்கும் அலமாரி ஒவ்வொரு ஆண்டும் பெரிதாகிக்கொண்டே போகிறதா? சிலர் தங்களிடம் சொல்லிக் கொள்வதாவது: “நான் பத்து பவுண்டுகள் எடைக் குறைந்த பிறகு இது எனக்கு அழகாக இருக்கும்.” தனியறையில் உள்ள எதையும், எல்லாவற்றையும் வைத்துகொள்வதற்கு இது அனுமதிக்கிறது. வேண்டாத உடைகள் இவ்விதம் சேருவதை தடுப்பதற்கு, ஒரு வருடம் முழுவதும் ஏதாவது அணியப்படவில்லையென்றால் “முடிவெடுக்கப்படாதது” என்ற பெட்டியில் போடுங்கள். பிறகு, ஒரு குறுகிய காலம் சென்ற பிறகும் அது அணியப்படவில்லையென்றால் அதை யாருக்காவது கொடுத்துவிடுங்கள் அல்லது வெளியே அப்புறப்படுத்துங்கள்.
அஞ்சல்: அன்றாட அடிப்படையில் அஞ்சலை அப்புறப்படுத்துங்கள். தனிப்பட்ட கடிதங்களையும், நீங்கள் வைத்துவைக்க வேண்டும் என்று விரும்பும் இதர கடிதங்களையும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு கோவயில் வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனி காகிதக் கோவயை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு பிறகு ஒரு புதிய மாத கடிதங்களை வைப்பதற்கு ஒரு காகிதக் கோவயில் உள்ளவற்றை அப்புறப்படுத்துங்கள். நியமம் என்னவென்றால் காகிதக்கோவை-யில் வையுங்கள், வந்தப்படியே சேர்த்து வைக்காதீர்கள். நீங்கள் நிறைய விளம்பரக் கடிதங்களை பெறுவீர்களானால் உடனடியாகவே அது உங்களுக்கு தேவைப்படுமா என்று தீர்மானியுங்கள். தேவைப்படாது என்றால் வெளியே போடுங்கள். தீர்மானம் செய்யவில்லை என்றால் “முடிவெடுக்கப்படாதது” என்ற பெட்டியில் ஒரு வாரத்திற்கு போட்டு வையுங்கள். அதற்குள் ஒரு முடிவுக்கு வரவில்லையென்றால் அதை வெளியே அகற்றுங்கள்.