மணவிலக்கு கிழக்கும் மேற்கும் சந்திக்குமிடம்
ஜப்பானிலுள்ள விழித்தெழு! நிருபர்
“நானும் என் வேலையிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன்.” பெரிய ஜப்பானிய வர்த்தக நிறுவனம் ஒன்றிலிருந்து ஓய்வு பெறுகிற ஒரு துறை மேலாளரிடம் சொல்லப்பட்ட இவ்வார்த்தைகள் அவருக்கு ஆச்சரியத்தைத் தந்தன. அவருடைய மனைவி அவருடைய துணைவராய் இருப்பதிலிருந்தும், வீட்டமைப்பாளராய் இருப்பதிலிருந்தும் ஓய்வுபெற விரும்பினாள். அவர்களுடைய நாடு அதன் மணவிலக்கு வீதத்தில் அதிகரிப்பைக் கொண்டிருக்கிறது. இவ்வதிகரிப்பு, வியக்கத்தக்க வகையில், நடுத்தர வயதினரையும் முதிர்வயதினரையும் அமிழ்த்திக்கொண்டிருக்கிறது. தங்களுடைய 50-கள் 60-களில் இருக்கும் ஆட்கள் மத்தியில், 20 வருடங்களில் மணவிலக்கின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்திருக்கிறது. தங்களுடைய திருமணத்திலிருந்து பின்வாங்குவதே மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கையைக் கண்டடைவதற்கான அவர்களுடைய கடைசி வாய்ப்பாய் ஆகிவிட்டிருப்பதாகத் தோன்றுகிறது.
வயது அளவுகோலின் மறுமுனையில், தேன் நிலவு சமயங்களின்போது ஒருவரைப்பற்றி ஒருவர் உண்மையை அறிந்துகொள்ளும் இளந்தம்பதிகள் நாரிட்ட ரிக்கோன் (நாரிட்ட மணவிலக்கு) செய்துகொள்ள தீர்மானிக்கின்றனர். நாரிட்ட டோக்கியோவின் சர்வதேச விமான நிலையமாகும். இந்தச் சொற்றொடர் நாரிட்டவுக்குத் திரும்பி வந்தடையும்போது தங்கள் திருமணத்திற்கும் ஒருவருக்கொருவரும் பிரியாவிடை கூறும் புதிதாகத் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளைக் குறிக்கிறது. உண்மையில், ஜப்பானில் 4 தம்பதிகளில் அல்லது 5 தம்பதிகளில் ஒரு தம்பதி மணவிலக்குச் செய்துகொள்ள முயற்சிக்கின்றனர். அவர்கள் மணவிலக்கை ஒரு மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு நுழைவாயிலாகக் கருதுகின்றனர்.
பழைய சீன மதிப்பீடுகள் இன்னும் உறுதியாகக் கைக்கொள்ளப்பட்டுவரும் ஹாங்காங்கிலும்கூட, 1981-க்கும் 1987-க்கும் இடையிலான ஆறு வருடங்களில் மணவிலக்கு வீதம் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில், 1980-க்கும் 1988-க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம்-அல்லாதவர்கள் மத்தியில் மணவிலக்கு அநேகமாக 70 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஒப்புக்கொள்ளக்கூடிய விதமாகவே, கிழக்குத் தேசங்களில் வெகுகாலமாகவே பெண்களின் கருத்துக்கள் அடக்கிவைக்கப்பட்டிருந்தன. உதாரணமாக, ஜப்பானில் பழங்காலத்தில், ஒரு கணவன் தன்னுடைய மனைவியை வெறுமனே “மூன்றரை வரிகள்” எழுதிக் கொடுப்பதன்மூலம் மணவிலக்குச் செய்துவிடலாம். அவன் செய்யவேண்டியதெல்லாம், மணவிலக்கை உறுதிப்படுத்தும் ஒரு வாக்குமூலத்தை மூன்றரை வரிகளில் எழுதி, அத்துண்டு காகிதத்தைத் தன் மனைவியிடம் கொடுப்பதே. மறுபட்சத்தில், அவனுடைய மனைவிக்கோ, கொடுமைப்படுத்தும் கணவன்மார்களிடம் இருந்து தப்பித்துவரும் பெண்களுக்குப் பாதுகாப்பளிக்கும் ஓர் ஆலயத்தில் தஞ்சம்புகுவதைவிட, மணவிலக்குப் பெற எளிய வழி வேறு எதுவும் இருக்கவில்லை. தங்களை ஆதரித்துக்கொள்ள வேறுவழியின்றி, மனைவிமார்கள் அன்பற்றத் திருமணங்களையும் தங்களுடைய கணவன்மார்களின் விவாகத்திற்குப் புறம்பான விவகாரங்களையும்கூட சகித்துக் கொண்டிருக்கவேண்டியிருந்தனர்.
இன்று, வேலையில் மூழ்கிவிடும் பல கணவன்மார்கள் தங்களுடைய குடும்பத்தை முழுவதுமாக ஒதுக்கிவைத்துவிடுகின்றனர். தன்னுடைய நிறுவனத்திற்காக வாழ்வதில் எந்தவித தவறையும் அவன் காண்கிறதில்லை. வேலைக்கான இப்படிப்பட்ட முழு ஈடுபாட்டுடன், பேச்சுத் தொடர்பு கொள்வதற்கான தன் மனைவியின் தேவையை அவன் அசட்டை செய்கிறான். தன் மனைவியைத் தனக்காகச் சமைக்கும், சுத்தம் செய்யும், துணி துவைக்கும், சம்பளமின்றிப் பணியாற்றுகிற ஒரு வேலைக்காரியாகக் கருதுகிறான்.
இருப்பினும், மேலை நாட்டுக் கருத்துக்களின் உட்பிரவேசம், கிழக்கத்திய பெண்கள் திருமணம் மற்றும் திருமண வாழ்க்கையைக் கருதுகிற விதத்தை மாற்றிக்கொண்டிருக்கிறது. “ஆசியாவில் மணவிலக்கு வீதத்தில் அதிகரிப்புக்கு வழிநடத்திய மிக முக்கியமான தனி ஒரு காரணி, சந்தேகமின்றி, பெண்களின் ‘விடுதலையே,’” எனக் குறிப்பிடுகிறது ஆசியா பத்திரிகை (Asia Magazine). சிங்கப்பூரின் ஆலோசனை மற்றும் பராமரிப்பு மையத்தின் இயக்குநரான அந்தோணி ய்யோ இவ்வாறு சொன்னார்: “பெண்கள் தங்கள் உரிமைகளை அதிகம் வலியுறுத்துபவர்களாயும், தங்கள் மதிப்பைப் பற்றி அதிகம் உணர்வுடையவர்களாகவும் ஆகிவிட்டிருக்கின்றனர். அவர்கள் கெட்ட சூழ்நிலைகளை இனிமேலும் அமைதியாகச் சகித்துக்கொள்வதற்கு மனமில்லாதவர்களாய் இருக்கின்றனர். இன்றைய பெண்கள் அதிக தெரிவுகளையும் அசட்டை மற்றும் துர்ப்பிரயோகம் செய்யப்படுவதைப்பற்றி குறைவான சகிப்புத் தன்மையையும் கொண்டிருக்கின்றனர். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டடைய முடியாதவர்களுக்கு மணவிலக்கு உண்மையான ஒரு தெரிவாக இருக்கிறது. முக்கியமாக மணவிலக்கால் ஏற்படும் இழுக்கு வெகுவாகக் குறைக்கப்படும்போது, 25 வருடங்களுக்கு முன் அது எவ்வளவு கடுமையாக இருந்ததோ அவ்வாறில்லாதபோது இது அவ்வாறு இருக்கிறது.”
கடந்த சுமார் 25 ஆண்டுகளின்போது மேலை நாடுகளும்கூட ஓர் ஆழ்ந்த மாற்றத்தினூடே சென்றிருக்கின்றன. இம்மாற்றத்தை “கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்க குடும்பத்தைப் பேரளவில் தகர்த்த பூமியதிர்ச்சி,” என்றழைத்தார் சாமுவேல் H. ப்ரெஸ்டன். 1985-ல் பதினெட்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளைக் கொண்ட அனைத்துக் குடும்பங்களில் அநேகமாகக் கால்பாகம் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்களாக இருந்தன; இது பெரும்பாலும் மணவிலக்கின் காரணமாகவே. 1984-ல் பிறந்த 60 சதவீத குழந்தைகள் 18 வயதை அடையுமுன் ஓர் ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் வாழ்ந்துகொண்டிருக்கலாம் என்று முன்னறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருமண ஏற்பாடு பலவீனமாகிக்கொண்டு வரும்போது, மணவிலக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கைக்கு நுழைவாயிலா? விடை காண, தங்கள் குடும்பப் பிரச்னைகளுக்கு மணவிலக்குத்தான் சகல சஞ்சீவி என மக்களைக் கருதவைத்தது எது என்பதை முதலில் ஆராய்வோமாக.
[பக்கம் 4-ன் பெட்டி]
“பிரிந்து வாழ்தல்” அதன் கனி
உண்மையான மணவிலக்குகளுடைய எண்ணிக்கைகளுக்கடியில் “செயலற்ற” மணவிலக்குகள் ஒளிந்து கிடக்கின்றன. அநேக பெண்கள் பொருளாதாரத் துறையில் இன்னும் தங்களுடைய கணவன்மார்களைச் சார்ந்திருந்து, நிலவியிருக்கும் ஆண்கள் ஆதிக்க பாரம்பரியத்திற்குக் கீழ்ப்படுத்தப்படும் ஜப்பானில், தம்பதிகள் வேண்டாவெறுப்பாக ஒரே கூரையின்கீழ், “பிரிந்து வாழ்தல்” என்றழைக்கப்படும் நிபந்தனையில் பிரிந்து வாழலாம். அத்தகைய சூழ்நிலை ஒன்றில், மனைவிமார்கள் தங்கள் சக்தியனைத்தையும் பிள்ளை வளர்ப்பில் செலவிடும் மனப்போக்கைக் கொண்டிருக்கின்றனர். இந்தத் தாய்மார்கள் பெரும்பாலும் தங்களுடைய பிள்ளைகளை, மட்டுக்குமீறிய பாதுகாப்புடன் வளர்க்கின்றனர். இதனால் இக்குழந்தைகள் பிற்காலத்தில் தங்கள் சொந்தக் கால்களில் நிற்பது கடினமாகிவிடுகிறது.
இதன் விளைவாக, இத்தகைய தாய்மார்களின் மகன்கள் வளர்ந்து, திருமணம் செய்துகொள்ளும்போது, அநேகர் “அன்போடு தொடாதீர் மனநிலை” (no-touch syndrome) காரணமாகத் துன்புறுகின்றனர். இவர்கள் திருமணமாகி பல்லாண்டுகள் கழித்தும் தங்களுடைய மனைவிமார்களை ஒருபோதும் அன்புடன் தொடுவதே கிடையாது. அவர்கள் “ஐ லவ் மம்மி” என்றழைக்கப்படும் பிரச்னையினால் பாதிக்கப்பட்டு, பெரும்பாலும் தங்களுடைய தாய்மார்கள் சொன்னார்கள் என்பதற்காகத் திருமணம் செய்துகொண்டனர். ஆஸாஹி ஈவ்னிங் நியூஸ் சொல்கிறபடி, இந்தப் பிரச்னை பத்து ஆண்டுகளாக வளர்ந்து வந்திருக்கிறது; வெட்கப்படுவதன் காரணமாக ஆயிரக்கணக்கான ஆண்கள் உதவியை நாட பயப்படுகின்றனர் என்று திருமண ஆலோசனை நிபுணர் டாக்டர் யாசூஷி நாரபாயாஷி கூறுகிறார்.