இளைஞர் கேட்கின்றனர்
என் பிரச்னைகளைத் தீர்க்க யார் உதவக்கூடும்?
“மனுஷன் வருத்தம் அநுபவிக்கப் பிறந்திருக்கிறான்.” துயரத்தில் ஆழ்ந்த யோபு என்னும் பெயருடைய ஒரு மனிதர் சுமார் நான்காயிரம் வருடங்களுக்குமுன் இவ்வாறு சொன்னார். (யோபு 5:7) உங்களுடைய வாழ்க்கை ஒருவேளை யோபின் வாழ்க்கையைப் போல கிட்டத்தட்ட அவ்வளவு சோகமானதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் போதுமான அளவு பிரச்னைகளையும் கஷ்டங்களையும் நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதில் சந்தேகமில்லை.
“உங்களை மிகவும் துன்பப்படுத்துவது எது?” என்று ஓர் அமெரிக்க இளைஞர் தொகுதியிடம் கேட்கப்பட்டது. அவர்களில் அநேகர் பள்ளி, பெற்றோர், பணம், நண்பர்கள், மற்றும் உடன்பிறந்தோர் கவலைகளின் காரணங்களாக இருப்பதாக சொன்னார்கள். உங்களைப் பற்றியதென்ன? சகாக்களின் அழுத்தம், பணக் கவலைகள், அல்லது பள்ளி பிரச்னைகள் ஆகியவற்றை நீங்கள் எதிர்ப்படுகிறீர்களா? பருவமடைதலின் சரீரப்பிரகாரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான ஏற்றத் தாழ்வுகளைச் சமாளிப்பதைக் கடினமானதாக நீங்கள் காண்கிறீர்களா? உங்களுடைய எதிர்காலத்தைப்பற்றி கவலைப்படுகிறீர்களா?
தலையில் உள்ள இந்த எல்லா பிரச்னைகளாலும், நீங்கள் அழுத்தப்பட்டவர்களாகி மனச்சோர்வடைவது எளிதே. உண்மையில், இந்தக் கவலைகளை எல்லாம் உங்களுக்குள்ளேயே வைத்துக்கொண்டிருக்க வேண்டியிருந்தால், உணர்ச்சிப்பூர்வமாக மற்றவர்களிடமிருந்து தனிப்படுத்தப்பட்டவராக உங்களைக் காணலாம். (நீதிமொழிகள் 18:1-ஐ ஒப்பிடவும்.) அப்படியானால் தனிப்பட்ட பிரச்னைகளை நீங்கள் எவ்வாறு தீர்க்கவேண்டும்? உண்மையில் அவற்றை நீங்கள் தனியாக நின்றுதான் எதிர்ப்படவேண்டுமா?
தேவையில்லை, ஏனெனில் உங்களுடைய பிரச்னைகள்—பெரியதாக தோன்றினாலும்—தனித்தன்மை வாய்ந்தவையாக இல்லை. மனித நடத்தையைக் கவனமாக ஆராய்ந்தபின், ஞானியாகிய சாலொமோன் ராஜா, “சூரியனுக்குக் கீழே நூதனமானது ஒன்றுமில்லை,” என்ற முடிவுக்கு வந்தார். (பிரசங்கி 1:9) ஆம், உங்களுடைய பிரச்னைகளைப் போலவே மற்றவர்கள் எதிர்ப்பட்டு வெற்றிகரமாக தீர்வு கண்டிருக்கின்றனர். ஆகவே நீங்கள் எப்போதுமே காரியங்களை உங்களுக்குள்ளேயே வைத்து தீர்வு காணவேண்டிய அவசியம் இல்லை. சிலசமயங்களில் ஏற்கெனவே அவ்வாறு தீர்வு கண்ட ஒருவரிடம் இருந்து நீங்கள் உதவி பெறக்கூடும். என்ன இருந்தாலும், முன்பின் தெரியாத ஓர் இடத்திற்குச் செல்வீர்களானால், ஏற்கெனவே அங்குச் சென்றிருக்கும் ஒருவரிடமிருந்து வழிகளைத் தெரிந்துகொள்ள முயற்சி செய்யமாட்டீர்களா? கேள்வி என்னவென்றால், அத்தகைய உதவிக்காக யாரிடம் நீங்கள் போகவேண்டும்?
சகாக்கள்—அறிவுரையின் மிகச் சிறந்த ஊற்றுமூலரா?
அநேக இளைஞர் தங்கள் கஷ்டங்களைத் தங்களுடைய சகாக்களிடம் பகிர்ந்துகொள்வதைத் தெரிந்துகொள்கின்றனர். “நான் அனுபவித்துக்கொண்டிருக்கும் மாற்றங்களில் சில தனித்தன்மை வாய்ந்தவையாய் இருப்பதாக சிலசமயங்களில் நான் நினைக்கிறேன்,” என்று விவரிக்கிறாள் இளம் அனிதா. “‘வேறு யாராவது இதை அனுபவிக்கிறார்களா?’ என்று நான் நினைக்கிறேன். இவ்வாறு நினைப்பதற்கு நான் பைத்தியக்காரியாக இருக்கிறேனா என்று நான் என்னையே கேட்டுக்கொள்கிறேன்.” உங்கள் வயதுள்ள யாராவது ஒருவர் உங்கள் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார்கள்; வயதுவந்த ஒருவர்—முக்கியமாக ஒரு பெற்றோர்—குற்றம்காண்பவராக, அல்லது மிக கடுமையாக கையாளுபவராக இருப்பார் என்று நீங்கள் உணரலாம்.
உங்களுடைய சகாக்கள் புரிந்துகொண்டு ஒத்துணர்வைக் காண்பித்து, இரக்கப்படலாம். ஆனால் அவர்கள் எப்போதுமே மிகச் சிறந்த ஆலோசனைகளைத் தராமல் இருக்கலாம். பைபிள் விவரிப்பதுபோல, “முதிர்ச்சியுள்ள ஆட்கள் . . . சரியானதையும் தவறானதையும் கண்டறிய தங்கள் பகுத்தறியும் திறன்களை பயிற்றுவித்திருக்கின்றனர்.” எவ்வாறு? பைபிள் பதில் அளிக்கிறது: “நெடுங்காலம் பயன்படுத்தியதால்,” அதாவது, அனுபவத்தால்! (எபிரெயர் 5:14, தி நியூ இங்கிலிஷ் பைபிள்) அத்தகைய அனுபவம் இல்லாததால், இளைஞர் தங்களுடைய “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும்,” அபூர்வமாகவே வயதுவந்த ஒருவருடைய அளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கின்றனர். (நீதிமொழிகள் 3:21, NW) ஆதலால் உடன் இளைஞர் ஒருவரின் ஆலோசனைக்கு செவிசாய்ப்பது ஆபத்தானது. நீதிமொழிகள் 11:14 (NW) எச்சரிக்கிறது: “திறம்பட்ட வழிநடத்துதல் இல்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்.”
தேவபயமுள்ள பெற்றோரின் மதிப்பு
திறம்பட்ட வழிநடத்துதலைக் கொடுக்க வயதுவந்தோர் பொதுவாகவே சிறந்த நிலையில் இருக்கின்றனர். நீதிமானாகிய யோபு அதை இவ்வாறு சொன்னார்: “முதியோரிடத்தில் ஞானமும் வயதுசென்றவர்களிடத்தில் புத்தியும் இருக்குமே.” (யோபு 12:12) இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவி செய்ய மிக மிக தகுதியுடையவர்கள் தேவபயமுள்ள உங்களுடைய பெற்றோராக இருக்கத்தான் வாய்ப்புள்ளது. அதற்கு ஒரு காரணம், மற்றவர்களைவிட அவர்கள் உங்களை நன்கு அறிந்திருக்கின்றனர். நீங்கள் இப்போது எதிர்ப்படும் அதே நிலைமைகளில் சிலவற்றை அவர்கள் எதிர்ப்பட்டிருக்கின்றனர். ஆகவே துன்பத்திலிருந்து உங்களை விலகிப்போகச் செய்ய அவர்களால் அதிகத்தைச் செய்யமுடியும். ஒரு பெற்றோராக பேசும்போது, சாலொமோன் இவ்வாறு அறிவுரை கூறினார்: “பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, [புரிந்துகொள்ளுதலை, NW] அடையும்படி கவனியுங்கள். நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்.”—நீதிமொழிகள் 4:1, 2.
சாமுவேல் என்ற பெயருடைய கானாவைச் சேர்ந்த ஓர் இளைஞனைப்பற்றி கவனியுங்கள். மேல்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், உலகப்பிரகாரமான படிப்பை மேற்கொள்வதா அல்லது யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு முழுநேர ஊழியனாகும் ஒரு வாழ்க்கைப் பணியை மேற்கொள்வதா என்று அவன் தீர்மானிக்க வேண்டியிருந்தான். “என்னுடைய குடும்பம் நல்ல பேச்சுத் தொடர்பைக் கொண்டிருந்த ஒரு நெருங்கிய குடும்பமாக இருந்ததால், என்னுடைய பெற்றோரிடம் மனம் திறந்து பேசுவது எளிதாக இருந்தது,” என்று அவன் விவரிக்கிறான். சாமுவேலுடைய பெற்றோர் முழுநேர ஊழியத்திற்கு அவனுக்கு வழிகாட்டினர். அந்த வாழ்க்கைப் பணியில் அவன் தொடர்ந்து செழித்தோங்குகிறான். இளைஞர் தங்களுடைய தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்ப்பதில் பெற்றோரை ஈடுபடுத்தும்படி சாமுவேல் சிபாரிசு செய்கிறான். ஏனென்றால், அவன் சொல்கிறான்: “வாழ்க்கையில் அவர்கள் அதிக அனுபவம் உடையவர்களாக இருக்கின்றனர். அதே பிரச்னைகளைக்கூட அவர்கள் எதிர்ப்பட்டிருக்கக்கூடும் . . . எனவே காரியத்தின் இருபக்கங்களைப் பற்றியும் தெளிவான நோக்குநிலையைக் கொடுக்க அவர்கள் ஒரு சிறந்த நிலையில் இருக்கின்றனர்.”
ஆர்வமூட்டும் வகையில், சமீபத்திய பொதுக் கணக்கெடுப்பு (Gallup survey) ஒன்றின்படி, பெரும் எண்ணிக்கையில் இளைஞர்—போதை மருந்துகள், பள்ளிப் படிப்பு, பாலுறவு ஆகிய விஷயங்களிலும்கூட—பெற்றோரின் வழிநடத்துதலை விரும்புகின்றனர்.
‘அவர்கள் என்னைப் புரிந்துகொள்கிறதில்லை!’
வருந்தத்தக்க வகையில், அநேக இளைஞர் தங்களுடைய பருவவயதிற்குள் நுழைந்ததும் தங்களுடைய பெற்றோரிடமிருந்து அகன்று போகிறார்கள். சிலர், “என்னுடைய மதிப்பெண்களைப்பற்றி எனக்கு எவ்வளவு பயமாக இருக்கிறது, மேலும் இந்தப் பள்ளிப் படிப்பு எனக்கு எந்தளவு கடினமாக இருப்பதாக நான் நினைக்கிறேன் என்றெல்லாம் என் பெற்றோரிடம் பேச நான் எவ்வளவோ முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் அவர்கள் வெறுமனே நான் சோம்பேறியாக இருக்கிறேன், நான் இன்னும் அதிகம் படிக்கவேண்டும் என்று சொல்கின்றனர்,” என்று சொன்ன பருவவயது பையனைப்போல உணருகின்றனர். ஆப்பிரிக்காவிலுள்ள ஓர் இளம் கிறிஸ்தவ பெண், “எனக்கு தனிப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன, அதற்காக எனக்கு உதவி தேவைப்படுகிறது என்று என் இருதயத்தின் ஆழத்தில் எனக்குத் தெரியும். ஆனால் என் பெற்றோர் என்னைப் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்று பயப்படுகிறேன்,” என்று சொல்வதன் மூலம் இதைப்போன்ற ஒரு கவலையையே தெரிவித்தாள்.
சந்தேகமின்றி, தேவபயமுள்ள பெற்றோரும் அவ்வப்போது தவறுகின்றனர். அவர்கள் காரியங்களுக்கு அளவுக்குமீறி எதிர்த்தெழலாம், கவனித்துக் கேட்க தவறலாம், உங்களைத் தவறாகப் புரிந்துகொள்ளலாம், அல்லது குற்றம்காண்பவர்களாக இருக்கலாம். இருப்பினும், நீங்கள் அவர்களை உங்கள் வாழ்க்கையிலிருந்து தூக்கி எறியவேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறதில்லை. இயேசு கிறிஸ்து அபூரணராயிருந்த பெற்றோரால் வளர்க்கப்பட்டார். எனினும், இயேசு “அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்,” என்று பைபிள் காட்டுகிறது. அவர்களுடைய செல்வாக்கு அவர் ‘ஞானத்திலும் தேவகிருபையிலும், மனுஷர் தயவிலும் அதிகமதிகமாய் விருத்தியடைய’ உதவிற்று என்பதில் சந்தேகமேயில்லை.—லூக்கா 2:51, 52.
உங்களுடைய சொந்த பெற்றோரின் ஞானத்திலிருந்தும் அனுபவத்திலிருந்தும் நீங்கள் பயனடைகிறீர்களா? இல்லையென்றால், வளரிளமை (Adolescence) என்ற புத்தகத்தில் ஈஸ்ட்வுட் அட்வாட்டர் என்பவரால் சொல்லப்பட்டதைக் கவனியுங்கள்: “பருவவயதினர் தங்களுடைய சகாக்களால் மட்டுக்குமீறி செல்வாக்கு செலுத்தப்படுபவர்களாக மாறினால், அது சகாக்களின் பலத்த கவர்ச்சியின் காரணத்தைவிட, பெற்றோர்-வளரிளமை பருவத்தினர் உறவுமுறையில் ஏதோ குறைவுபடுவதாலேயே அவ்வாறு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது.” உங்கள் பெற்றோரோடு என்ன விதமான உறவுமுறையை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள்? (கலாத்தியர் 6:5) அண்மையில் நீங்கள் அவர்களோடு பேச்சுத் தொடர்புகொள்வதை தவிர்த்துவிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் காரியங்களை முன்னேற்றுவிக்க உங்களால் முடிந்ததை ஏன் செய்யக்கூடாது?a இது சாலொமோன் அழைத்ததுபோல ஒருவருடைய பெற்றோருக்கு, ‘பிரியமான குமாரனாய்’ அல்லது பிரியமான குமாரத்தியாய் இருப்பதன் ஒரு பாகமாக இருக்கிறது.—நீதிமொழிகள் 4:3.
இப்போது ஐக்கிய மாகாணங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும் மால்கம் என்ற கானாவைச் சேர்ந்த ஓர் இளைஞன், தன்னுடைய உணர்ச்சிகளைப் பெற்றோர் புரிந்துகொள்ளவில்லை என்பதாக ஒருகாலத்தில் நினைத்தான். ஆனாலும் அவர்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவத்தையும் கடவுளுடைய வார்த்தையின் சிட்சையையும் அவனுக்குத் தொடர்ந்து தெரியப்படுத்தி வந்தனர். தன்னுடைய பெற்றோருக்கு எழுதிய ஒரு சமீபத்திய கடிதத்தில் மால்கம் எழுதினான்: “கடந்தகாலத்தில் நாம் கருத்துவேறுபாடுகளைக் கொண்டிருந்திருக்கிறோம் என்று எனக்குத் தெரியும். பின்னோக்கி நினைத்துப் பார்க்கையில், என்னுடைய பிடிவாதத்தை நீங்கள் சகித்துக்கொண்டு, நான் எடுத்த சில தீர்மானங்களை என் வாழ்க்கையில் அமைதியாக ஏற்றுக்கொண்டதை குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். நான் சொல்வதை நம்புங்கள், மற்ற குடும்பங்களில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும், [நம்முடைய குடும்பத்தில்] பைபிள் நிச்சயமாக ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியது. மீண்டும் நன்றி.”
நீங்களே நடைமுறையான ஞானத்தைப் பெறுங்கள்!
உங்கள் பெற்றோரின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுதல், உங்கள் வளர்ச்சியை மட்டுப்படுத்துவதற்கு நேர்மாறாக, மிகவும் விரைவில் முதிர்ச்சியடைந்த வயதுவந்தவராக ஆவதற்கு அதுவே வழியாக இருக்கலாம். காலப்போக்கில் நீங்களும் அவர்களைப்போல, ‘விவேகம், அறிவு, சிந்திக்கும் திறன்’ ஆகியவற்றை வளர்க்கமுடியும். (நீதிமொழிகள் 1:4, NW) பிரச்னைகளை ஆராய்ந்து அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதுபற்றி நல்ல முடிவுகளை எடுக்க நீங்கள் தகுதியுள்ளவர்களாக ஆக்கப்படுவீர்கள்.
எல்லா இளைஞரும் தேவபயமுள்ள பெற்றோரைக் கொண்டிருக்க ஆசீர்வதிக்கப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம். இருப்பினும், உங்கள் பெற்றோர் கிறிஸ்தவர்களாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் சொல்லுக்கு சரிவர செவிசாய்க்க வேண்டாம் என்ற முடிவுக்கு வருவது தவறாகும். அவர்கள் இன்னும் உங்களுடைய பெற்றோராகத்தான் இருக்கிறார்கள் என்ற முறையில் அவர்கள் கனப்படுத்தப்படவேண்டும். (எபேசியர் 6:1-3) அதுமட்டுமின்றி, அவர்களுக்கு நீங்கள் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார்த்தால், கொடுப்பதற்கு அவர்கள் அதிக நடைமுறையான ஆலோசனைகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதை நீங்கள் உடனடியாக கண்டுபிடிக்கலாம். ஆவிக்குரிய வழிநடத்துதல் உங்களுக்குத் தேவைப்படும்போது, கிறிஸ்தவ சபையில் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஓர் அங்கத்தினரிடம் மனம்விட்டுப் பேச முயற்சி செய்யுங்கள். புரிந்துகொள்ளுதலோடும், இரக்கமுமுள்ள இருதயத்தோடும், நல்நோக்கோடும் கவனித்துக்கேட்கிற வயதுவந்த ஒருவரைக் கண்டுபிடிப்பது அங்குக் கடினமானதல்ல.
யெகோவாவின் ஆவி வேண்டிக்கொள்பவர்களுக்கு உதவியின் மற்றும் பலத்தின் உடனடி ஊற்றுமூலமாக இருக்கிறது என்பதையும் நினைவில் வையுங்கள். (லூக்கா 11:13) பைபிளிலும் உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பைபிள்சார்ந்த பிரசுரங்களிலும் உங்களுக்குக் கிடைக்கக்கூடிய அபரிமிதமான தகவல்களையும் யெகோவா கொடுத்திருக்கிறார். ஏன், இந்தத் தொடர்கட்டுரைதானேயும் தங்களுடைய பிரச்னைகளுக்கு நடைமுறையான பதில்களைக் காண ஆயிரக்கணக்கான இளைஞருக்கு உதவியிருக்கிறது! ஆழமாகத் தோண்டி ஆராய்ச்சி செய்ய கற்றுக்கொள்வதன் மூலம், அநேகப் பிரச்னைகளை நீங்களே தீர்த்துக்கொள்ளலாம்.—நீதிமொழிகள் 2:4.
சந்தேகமின்றி, பிரச்னைகளை அனுபவிப்பது வாழ்க்கையின் ஒரு பாகமாக இருக்கிறது. ஆனால் அது சங்கீதக்காரன் கொண்டிருந்த அதே நம்பிக்கையான நோக்குநிலையைக் கொண்டிருக்க உதவுகிறது. அவர் எழுதினார்: “நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்.” (சங்கீதம் 119:71) ஆம், பிரச்னைகளைத் தீர்ப்பது உங்களை உருவமைத்து பயிற்றுவிக்கும். ஆனால் அவற்றை நீங்கள் தன்னந்தனியே இருந்து சமாளிக்கவேண்டிய அவசியமில்லை. உதவியைத் தேடுங்கள். வழக்கமாக அது கேட்பவர்களுக்கு கிடைக்கிறது. (g93 12/8)
[அடிக்குறிப்புகள்]
a இந்த விஷயத்தில் பயனுள்ள அநேக ஆலோசனைகளுக்கு, உவாட்ச்டவர் பைபிள் அன்ட் டிராக்ட் சொஸையிட்டியால் பிரசுரிக்கப்பட்ட இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள், என்ற புத்தகத்தின் 2-ம் அதிகாரத்தைப் பார்க்கவும்.
[பக்கம் 19-ன் படம்]
பெற்றோரின் வழிநடத்துதலை ஏற்றுக்கொள்ளுதலே, மிக விரைவில் முதிர்ச்சியடைந்த வயதுவந்தவராக ஆவதற்கு வழியாக இருக்கலாம்