இது இனிமேலும் இரகசியமாயில்லை
“Pleas keep this secret read it to no stranger” (“இந்த இரகசியத்தை யாருக்கும் சொல்லாமல் அறிமுகமற்ற எவரிடமும் வாசிக்காதீர்”)
நவீன எழுத்திலக்கணத்தின் நிறுத்தக் குறியீடுகளின் எந்தத் திருத்தமும் இல்லாமல், ஆங்கிலத்தில் 1863-ல், அமெரிக்க உள்நாட்டுப் போரின்போது, உவில்லியம் ஹெச். மாரி, வர்ஜீனியாவிலுள்ள அக்குவியா கிரீக்கிலிருந்து இந்த அறிமுக எச்சரிக்கையை பென்ஸில்வேனியாவிலிருந்த தன் பாலிய மனைவியாகிய இலைஸா ஆனுக்கு எழுதினார். அவருக்கு வயது 24, சமீபத்தில் மணமானவர், பென்ஸில்வேனியாவிலுள்ள ஹனோவர் டவுனிலிருந்து வந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படை வீரராக இருந்தார். இவர் அரசியல் கூட்டாட்சியைச் சேர்ந்த வட மாநிலங்களின் சார்பாகப் போரில் ஈடுபட்டிருந்தார். இவருடைய விரோதிகள்? அரசியல் கூட்டாட்சியிலிருந்து விலகிப்போன தென் மாநிலங்களின் கூட்டமைப்பை ஆதரித்த பிற அமெரிக்கர்கள் ஆவர். இவர்கள் தங்கள் பொருளாதார விவகாரங்களில் கொலம்பியா மாவட்டத்திலுள்ள வாஷிங்டனிலிருந்து வந்த கூட்டாட்சியின் (வடக்கத்திய) குறுக்கிடுதலைக் குற்றஞ்சாட்டுபவர்களாக இருந்தனர். மாரி எதை இரகசியமாக வைக்கும்படி விரும்பினார்? சீக்கிரத்தில் நாம் பார்க்கலாம், ஆனால் முதலில் சில பின்னணி தகவலை ஆராய்வோம்.
அரசியல் கூட்டாட்சியிலிருந்து ஏழு தென் மாநிலங்களும் விலகிய போது அமெரிக்க உள்நாட்டுப் போர் 1861-ல் ஆரம்பித்தது, இதற்கடுத்து இன்னும் நான்கு மாநிலங்கள் விலகவிருந்தன. இந்த 11 மாநிலங்களும் கூட்டமைப்பை உருவாக்கின. அடிமைத்தன நீட்டிப்பு வடக்குக்கும் தெற்குக்கும் இடையே முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக இருந்தது. வடக்கு அடிமைத்தனத்தை ஒழித்துக்கட்ட முடியும் என்று செல்வந்தர்களாகிய தெற்கத்திய பண்ணையாரால் விவாதிக்கப்பட்டது, ஏனெனில் அதன் பொருளாதாரம் ஆயிரக்கணக்கான ஐரோப்பிய குடிபுகுபவரால் தக்கவைக்கப்பட்டிருந்தது. என்றபோதிலும், பருத்தியை அடிப்படையாகக் கொண்ட, தெற்கின் பொருளாதாரம், வளங்கொழிப்பதற்குக் கிட்டத்தட்ட நாற்பது லட்ச அடிமைகளைத் தேவைப்படுத்தியது. குறைந்தபட்சம், அதைத்தான் அவர்கள் நம்பினார்கள்.
ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன் எதை நம்பினார்? ஆகஸ்ட் 1862-ல் அவர் எழுதினார்: “அரசியல் கூட்டாட்சியைக் காப்பாற்றுவதே இந்தப் போராட்டத்தில் என்னுடைய பிரதான குறிக்கோளாக இருக்கிறது, அடிமைத்தனத்தைக் காப்பாற்றுவதோ ஒழித்துக்கட்டுவதோ கிடையாது. எந்த அடிமைகளையும் விடுவிக்காமல் அரசியல் கூட்டாட்சியைக் காப்பாற்ற முடியுமானால் நான் அதைச் செய்வேன்; எல்லா அடிமைகளையும் விடுவித்து என்னால் அதைக் காப்பாற்ற முடியுமானால், நான் அதைச் செய்வேன்.” இதற்குச் சற்று பிற்பாடு, ஜனவரி 1, 1863-ல், கலகக்கார ஆதிக்கத்திலிருந்த எல்லா அடிமைகளுக்கும் லிங்கன் விடுதலையை அறிவித்தார். இது தெற்கத்திய அடிமை எஜமான்களுக்குப் பயங்கரமான பொருளாதார வீழ்ச்சியாக இருந்தது; அவர்கள் கருதியது போல, எந்த இழப்பீடுமில்லாமல் “பல கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள அடிமையென்னும் சொத்தை” இவர்கள் இழந்தனர்.
அந்தப் பயங்கரமான உள்நாட்டுப் போர், 1861-65 வருடங்களின்போது, காயப்பட்ட அநேகர் உட்பட குறைந்தபட்சம் 6,18,000 இளம் அமெரிக்கர்களின் உயிர்களைக் கொள்ளைக் கொண்டது—எந்தவொரு போரிலும் இருந்ததைவிட உயிரிழந்த, காயப்பட்ட அமெரிக்கரின் எண்ணிக்கை இதில் அதிகம். உவில்லியம் மாரி தன் டையரியையும் ஜனவரி 25, 1863 தேதியிட்ட தன் இரகசிய மடலையும் வரைந்தபோது இந்தப் போரில் முழுமையாக ஈடுபட்டவராகத் தன்னைக் கண்டார். சாதாரண படை வீரராக, போரைப் பற்றிய அவருடைய இரகசிய முடிவுகள் யாவை?
மனக்கசப்புற்ற மடல்
தன் மனைவி தனக்கு அனுப்பிவைத்த “அந்தப் புகையிலைக்கும் மற்ற பொருட்களுக்கும்” நன்றி சொல்லி மடலைத் தொடங்கி பின்னர் எழுதுகிறார்: “இந்தப் போர் முழு மோசடிவாய்ந்த போராகவும் பணம் திரட்டுவதற்கான போராகவும் இருப்பதாக நான் நம்புகிறேன், காணவுஞ்செய்கிறேன். எல்லாரும் எவ்வளவு பணம் திரட்ட முடியுமோ அவ்வளவு பணம் திரட்டப் பார்க்கின்றனர், இதுவே இந்தப் போர் நீடிக்கும்படி செய்கிறது; இந்தப் போர் எவ்வாறு நடக்கிறது என்பதை இப்போது நாங்கள் காண்கிறோம். நான் மாத்திரம் பழக்கப்பட்ட சூழலில் மீண்டும் இருந்திருந்தால், என்னைத் திரும்பவும் படையில் சேரும்படி சொல்லுகிற முதல் மனிதனை நான் அடித்து வீழ்த்திவிடுவேன். நாங்கள் இங்கு நாய்களைப் போல பாவிக்கப்படுகிறோம், எங்களைக் காட்டிலும் நாய்கள் பல நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன; இந்த 4 மாதங்களுக்கு எனக்குச் சம்பளம் மாத்திரம் கிடைத்திருந்தால், நான் இங்கிருந்து தப்பியோட முயன்றிருப்பேன். நித்தம் நாங்கள் படுமோசமாக நடத்தப்படுகிறோம்.”
அவர்கள் இருந்த இடத்தை அவர் விவரித்தார்: “இது மிகவும் நல்ல இடம், ஒரு நல்ல காட்சியையும் பார்க்க முடியும். படோமக் [ஆற்றுக்கு] படகுகள் வருவதை காண முடியும் . . . சில நாட்கள் [ரெயில்] கார்களை ஏற்றும் மிக கடினமான வேலை செய்கிறோம், பாதியளவு உணவையே நாங்கள் உட்கொள்கிறோம். கையில் பணம் மாத்திரம் இருந்திருந்தால் ஓடிவிட்டிருப்போம் என எங்களுடைய பையன்கள் பலர் பேசுகின்றனர் . . . நாங்கள் அணிவகுத்துச் சென்று, எப்போது பார்த்தாலும் கடினமான வேலைகளையே செய்கிறோம்.”
இருந்தபோதிலும், போரில் நேரடியாக ஈடுபட்ட மனிதர்கள் பட்ட பாடுகளோடு இவற்றை ஒப்பிடுகையில் இந்தக் கஷ்டங்கள் ஒன்றுமேயில்லை. ஒரு போரில், தென் தளபதியாகிய டி. ஹெச். ஹில் தன்னுடைய 6,500 மனிதரில் 2,000 பேரை இழந்தார். அவர் எழுதினார்: “அது போரல்ல, படுகொலையாகும்.” (பர்க் டேவிஸ் எழுதிய கிரே ஃபாக்ஸ்) வடக்கிலும் மேற்கிலும் படைத்துறை கட்டாய ஆள்சேர்ப்புக்கான நிபந்தனைகள், பணமுள்ள ஆட்கள் விதிவிலக்கைப் பெறலாம் அல்லது நிறைய பணம் செலுத்தி படைத்துறையிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்பதாக இருந்தன. அது “பணக்காரனின் போரும் ஏழ்மையானவனின் சண்டையு”மாக இருப்பதாய் தெற்கிலுள்ள ஏழை மக்கள் சிலர் புகார் செய்தனர். போரில் சேவிக்க படைத்துறை சிற்றலுவலர் மாரி பணிக்கொடை அளிக்கப்பட்டார், கிடைத்த ஊதியத்தைக் கொண்டு ஒரு அடுமனையை நிறுவினார்.
ஜார்ஜியாவிலிருந்த ஆன்டர்சன்வில் போன்ற போர் கைதி முகாம்களில் வந்தடைந்தவர்கள் பெரும்பாலும் கொடூரமான நிலைமைகளுக்கு ஆட்பட்டார்கள். “ஒரு மென்னோடை அதனூடே பாய்ந்தது. போதிய சுகாதாரமின்மை, இட நெருக்கடி, திறந்தவெளிகளில் இருப்பது, ஆரோக்கியமற்ற சூழ்நிலைமைகளுக்கு உள்ளாகச்செய்யும் போதிய உணவில்லாமை ஆகியவற்றோடு நோய் வீதமும் இறப்பு வீதமும் மிகவும் உயர்ந்துவிட்டிருந்தன.” (ஆன்டர்சன்வில், ஒரு சிற்றேடு) கைதிகளாகவுங்கூட இருந்த ரெய்டர்ஸ் (சூறையாடுவோர்) என்றழைக்கப்பட்ட சிறு குற்றவாளி கும்பல்களின் கொலைபாதகமான, கொள்ளையாடும் நடத்தை படுமோசமானதாக இருந்தது. “சூறையாடும் வன்முறையான வெறியை” அவர்கள் முன்னேற்றுவித்தனர். ஏதோவொரு காரணத்தினால், ஆன்டர்சன்வில்லில் குறைந்தபட்சம் 12,920 படை வீரர்கள் மாண்டனர்.
1995-ல் மனிதவர்க்கம் எந்தவிதத்திலாவது முன்னேறியிருக்கிறதா? சரித்திரத்திலிருந்து பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றனவா? ருவாண்டா, லைபீரியா, பால்கன் நாடுகள் மேலும் போர் நடந்த பல்வேறு இடங்களில் உண்டான பயங்கரமான படுகொலைகள் மனிதனோடு மனிதன் மனிதாபிமானமற்று நடப்பதற்கான சமீப உதாரணங்களாகும். கத்தோலிக்கரும் ஆர்த்தடாக்ஸ் மத நம்பிக்கையாளர்களும் கிறிஸ்தவர்களாகத் தங்களை உரிமைபாராட்டினாலும் கிறிஸ்து இயேசுவின் அன்பான முன்மாதிரிக்கு இசைய செயல்படத் தவறியிருக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகள் மாத்திரம் தங்கள் நடுநிலைமையைக் காத்துக்கொண்ட ஆட்களாக, இனிமேலும் போரைக் கற்க அல்லது அதில் ஈடுபட மறுத்திருக்கின்றனர். அது ஓர் இரகசியமல்ல.—ஏசாயா 2:4; மீகா 4:3.