யெகோவாவின் சாட்சிகளுடைய 1995 வருடாந்தரப் புத்தகத்திலிருந்து அனுபவங்கள்
பொருளாதார அக்கறைகளுக்குமுன் ஆவிக்குரிய அக்கறைகளை வைப்பதற்கு உறுதியாக தீர்மானிப்பது, கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கு முக்கிய படியாக இருக்கிறது. பிரான்ஸ் நாட்டைச்சேர்ந்த ஜேக்கஸ் என்ற மீனவரின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது. இவர் மத்தியதரைக் கடலில் உள்ள துறைமுகம் ஒன்றிருந்தது தொழில் செய்துவருகிறார். ஜேக்கஸ் யெகோவாவின் சாட்சிகளோடு சிறிது காலமாகத்தான் பைபிளைப் படித்துக்கொண்டிருந்தார், கோடைகால மாவட்ட மாநாட்டிற்குப் போகவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் அந்த மாநாடு வருடத்திலேயே ஏராளமான மீன் கிடைக்கும் பருவத்தில் வந்தது. அப்பருவத்தில்தான் மீனவர்களில் பெரும்பாலானோர் இரவும் பகலும் உழைத்து, பருவத்திலேயே அதிகப்படியான மீன்களைக் கொண்டுவந்து சேர்ப்பார்கள். அதுமட்டுமல்லாமல், தன்னுடைய படகில் வேலைசெய்ய ஜேக்கஸ் 12 ஆட்களை அமர்த்தியிருந்தார். பருவத்தின் இந்த உட்சக்கட்டத்தில் அவர்கள் அநேக நாட்களுக்கு மீன் பிடிக்கமாட்டார்கள் என்று அவர்களுக்கு அவர் எப்படி விளக்கப்போகிறார்? ஒரு முட்டாள் என்று அழைக்கப்பட்டு ஏராளமான கிண்டலுக்கு ஆளானார். இருந்தபோதிலும் ஜேக்கஸ் ஆவிக்குரிய காரியங்களை உறுதியகா முன்வைத்து, தன்னுடைய மனைவியோடு மாநாட்டிற்குப் போனார்.
மாநாட்டுக்கு அடுத்த திங்கட்கிழமை மீண்டும் தன்னுடைய படகில் பணியாட்களையும் அழைத்துக்கொண்டு மீன்பிடிக்கப் போனார் ஜேக்கஸ். அவர்கள் தங்கள் வலையை இழுத்தபோது. வழக்கமாகக் கிடைக்கும் ஏறக்குறைய 300 கிலோகிராம் சூடைமீன்களுக்குப் பதிலாக, கிட்டத்தட்ட ஒரு டன் எடையுள்ள ப்ரீம் மீன்கள் கிடைத்ததைக் கண்டு வியந்துபோனார்கள். இவை மிகவும் விலையுயர்ந்தவையாயும், மாநாட்டின்போது மீன்பிடிக்கப்போகாத நாட்களில் அவர்கள் ஒருவேளை எவ்வளவு மீன் பிடித்திருப்பார்களோ அதைவிட ஐந்து மடங்கு அதிக மதிப்புள்ளவையாயும் இருந்தன! இதுவரை யாரும் அவ்வளவு அதிக மீன்களைப் பிடித்ததாக அந்த கிராமத்து மீனவர்களில் ஒருவருக்கும் ஞாபகமேயில்லை!
ஆன்டிகுவாவில் நடந்த “தேவ பயம்” மாவட்ட மாநாட்டின் இறுதி நாளன்று, புதிதாக கூட்டுறவுகொள்ளும் ஒரு பெண்மணி, மாநாட்டு மன்றத்தின் நுழைவாயிலுக்கு அருகே காரில் கொண்டுவந்து விடப்பட்டார். அதே காலையில் சற்று நேரத்திற்குப்பின், 23,000 ரூபாய்க்கும் ($2,000 EC) அதிகமான தொகையை வைத்திருந்த தனது பர்ஸ் காணாமல் போயிருப்பதைக் கவனித்தார். கடைசியாக காரிலிருந்து இறங்குவதற்குக் கொஞ்ச நேரத்திற்கு முன்பு அதைப் பார்த்ததாக அவருக்கு ஞாபகம். அவர் வந்த வழியிலேயே கவனமாக தேடிப்பார்த்தும், கார் நிறுத்துமிட உதவியாளரிடம் விசாரித்துப் பார்த்தும் பலனளிக்காமல் போயிற்று, அவரை அழைத்திருந்த சாட்சியோ, “கார் நிறுத்துமிடத்திலோ அல்லது மாநாட்டு மன்றத்திலோ காணப்படுமானால், நண்பர்கள் அதைத் திரும்பக் கொடுத்துவிடுவார்கள். ஏனென்றால் யெகோவாவின் சாட்சிகள் நேர்மையுள்ளவர்கள், அன்புள்ளவர்கள்,” என்று சொல்லி அவருக்குத் தெம்பூட்டினார்.
அடுத்தநாள் காலை, தனக்கே சேரக்கூடிய, பணமாக்கப்படாத ஒரு காசோலை அந்தப் பர்ஸுக்குள் இருந்தது அவருக்கு ஞானம் வந்ததால், அதைக் கொடுத்த வர்த்தக நிறுவனத்திற்கு டெலிபோன் செய்தார். அந்நிறுவனத்தைச் சேர்ந்த பெண் அவரை வியப்பில் ஆழ்த்தும்வண்ணம், “யெகோவாவின் சாட்சிகளில் ஒரு ஆள், எனக்கு உங்களை தெரியுமா, அவர் உங்களை எங்குக் காணமுடியும் என்றெல்லாம் இப்போதுதான் கூப்பிட்டுக் கேட்டார். நேற்று அவர்களுடைய மாநாட்டு மன்றத்துக்கு வெளியே உங்களுடைய பர்ஸைக் கண்டெடுத்தாராம்” என்று சொன்னார். யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே கடவுள் பயமுள்ள ஆட்கள்தான் என்பதில் இந்தப் பெண்மணிக்கு எப்போதையும்விட அதிக நம்பிக்கை ஏற்பட்டது.
மெக்ஸிகோவைச் சேர்ந்த எடில்பெர்ட்டோ ஜ்வேரஸ், ஒரே நாளில் தற்கொலை செய்துகொண்ட தனது அண்ணனுக்காகவும் தன்னுடைய மகனுக்காகவும் துக்கம் கொண்டாடிக்கொண்டிருந்தார். அவர் சொல்கிறார்: “துயரகரமான இந்தச் சம்பவத்தைக் கண்டதும், எனது வீட்டுச் சுவரில் ஒருபக்கம் முழுவதையும் அடைத்துக்கொண்டிருந்த எனது கடவுட்களிடம் (சொரூபங்களிடம்) சென்று, என் மகனை உயிரோடு திரும்பக் கொண்டு வரவேண்டும், இல்லையென்றால் அவர்கள் எல்லாவற்றையும் வெளியே தூக்கிப் போடவேண்டியிருக்கும் என்று சொன்னேன். எட்டு நாட்களுக்குப் பிறகு, அந்தக் கடவுட்கள் தங்களுடைய வல்லமையைக் காட்டவேயில்லை என்பதைப் பார்த்ததும், அவர்களை என் வீட்டிலிருந்து தூக்கி வீசினேன். என் அன்பானவர்களை இழந்த துயரம் தாளாமல் மனம் கசந்து கண்ணீர் வடித்தேன்.
“பள்ளி ஆசிரியர் ஒருவர் என்னிடம் வந்து ஆறுதல் அளிக்க முயற்சித்தார். புதிய ஏற்பாடு ஒன்றை எனக்குக் கொடுத்துவிட்டு அதை வாசிக்கும்படி கூறினார். ஆனால் நானோ பைபிளை ஒருபோதும் பார்த்ததே கிடையாதாகையால் அது எனக்கு அவ்வளவு ஆர்வமூட்டுவதாக இல்லை. எனவே அதை ஒரு பக்கமே வைத்துவிட்டேன். அச்சமயத்தில் ஒரு பெந்தெகொஸ்தே ஆள் என்னைப் பார்க்க வந்திருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கையில், ப்ரீஃப் கேஸோடு ஒரு மனிதன் வருவதைக் கவனித்தேன். அவர் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் என்பதை அந்தப் பெந்தெகொஸ்தே ஆள் புரிந்துகொண்டு, அவருக்கு வேதாகமத்தைப்பற்றி அதிகம் தெரியும், ஆகவே அவரைக் கூப்பிட்டு பேசலாம் என்று யோசனை சொன்னார். அந்தச் சாட்சியும் உள்ளே வந்தார். நான் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதைத் தெரிந்துகொண்டு, உயிர்த்தெழுதலைப்பற்றி என்னிடம் பேசத் தொடங்கினார். இது உண்மையிலேயே எனக்கு ஆர்வமூட்டுவதாக இருந்தது.”
இந்தச் சாட்சி, நீண்ட தூரம் நடந்து வரவேண்டியிருந்த போதிலும், எடில்பெர்ட்டோவைத் தவறாமல் வந்து சந்திக்கத் தொடங்கினார். “பிறகு என்னுடைய புதிய விசுவாசத்தைக் குறித்து மற்றவர்களிடம் பேச ஆரம்பித்தேன். அவர்களில் மூன்று பேர் சத்தியத்தில் ஆர்வம் காட்டி, என்னுடைய வீட்டில் கூடிவர ஆரம்பித்தனர். எனவே அந்தப் பிரஸ்தாபி எங்களை சந்திக்க வந்தபோது, நாங்கள் நான்கு பேரும் பைபிளைப் படித்தோம்,” என்கிறார் எடில்பெர்ட்டோ ஜ்வேரஸ், சத்தியத்தை ஏற்றுக்கொண்டு யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தார்.
நாங்கள் நியமிக்கப்பட்ட இடத்துக்கு வந்துசேர்ந்ததும், வாரயிறுதிகளில் பஸ் போக்குவரத்து இல்லாததால், கூட்டங்களுக்கு 10 கிலோமீட்டர் தூரத்திலிருந்து நடந்து வந்த நான்கு பிரஸ்தாபிகள் இருந்தனரென அவர்களுக்கு தெரியவந்தது என்பதாக பிரேஸில் நாட்டின் வடபகுதியில் உள்ள ஒரு விசேஷ பயனியர் எழுதுகிறார். அந்தப் பிரஸ்தாபிகள் வாழும் ஊரிலேயே கூட்டங்களை நடத்த பயனியர்கள் தீர்மானித்தனர். முதல் ஞாயிற்றுக்கிழமையன்று 40 பேர் வந்திருந்தனர். இரண்டாவது கூட்டத்திற்கு, வீட்டிற்குள் இருந்தவர்களின் எண்ணிக்கை அதேதான் இருந்தது. ஆனால் வெளியே அசெம்பிளி ஆஃப் காட் சர்ச்சின் பாஸ்டரும் அவருடைய கூட்டத்தைச் சேர்ந்த 15 பேரும் இருந்தனர். அவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர், ஆனால் வெளியிலிருந்து கவனிப்பதையே விரும்பினார்கள். இந்தப் பயனியர் சொல்லுகிறார்: “அந்தக் கூட்டத்தின் முடிவில், அவர்களோடு பேசிய அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல நான் வெளியே போனேன். நானும் அவரைப்போல ஒரு பாஸ்டராகத்தான் இருந்தேன் என்று அந்தப் பாஸ்டரிடம் சொன்னேன். அவர் கேட்டார்: அப்படியானால் அதெப்படி இப்போது ஒரு யெகோவாவின் சாட்சியாக ஆகிவிட்டீர்கள்?” இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க நான் அவரை ஏன் வீட்டுக்கு வரும்படி அழைத்தேன், அவரும் சம்மதித்தார். ஒரு சில வாரங்களிலேயே அவரும் அவருடைய கூட்டத்தினரில் சிலரும் தங்களுடைய சர்ச்சை விட்டு வெளியேறி, எங்களோடு பைபிளைப் படிக்கத் தொடங்கினார்கள்.”
அந்த ஊரில் நடத்திய முதன் நினைவு ஆசரிப்புக்கு, அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே 140 பேர் வந்திருந்தனர். வருந்தத்தக்க விதத்தில், ஒலி பெருக்கிக் கருவி ஒன்றுமில்லாதிருந்தது. தன்னுடைய சர்ச்சிலிருந்து அக்கருவியைக் கேட்டு கடன் வாங்கிவர முயற்சிப்பதாக ஒரு கத்தோலிக்க பெண் யோசனை கூறினார். அவருடைய பாதிரியிடம் சென்று அதைப் பற்றி கேட்டபோது, “இது யெகோவாவின் சாட்சிகளுக்கா?” என்று பாதிரி கேட்டார். “ இல்லை, சாட்சிகள் எட்டுபேர் மட்டும்தான் இருக்கிறார்கள். ஒலிபெருக்கிக் கருவி அங்குள்ள 100-க்கும் அதிகமான கத்தோலிக்கர்களுக்குத் தேவைப்படுகிறது!” என்று அவர் பதில் சொன்னார். அவருடைய யோசனையொன்றும் பலிக்கவில்லை. புரட்டஸ்டன்ட் பெண் ஒருவரும் இதேபோல ஒரு யோசனை கூறினார். ஆனால் அந்தப் போதகரோ, “யெகோவாவின் சாட்சிகளுக்குக் கிடையாது!” என்று சொல்லிவிட்டார். அந்தப் பெண்ணோ “நானும் இந்தச் சர்ச்சின் மற்ற அங்கத்தினர்களும் இதற்காக நன்கொடை அளித்திருக்கிறோம். ஆகவே இதை உபயோகிக்க எங்களுக்கு ஓரளவு உரிமை இருக்கிறது?!” என்று வாதாடினார். அதைக்கேட்டதும் அக்கருவியைக் கடனாக கொண்டுபோகும்படி அவர் அனுமதித்தார். அந்த நினைவு ஆசரிப்பைத் தொடர்ந்து அநேக புதிய பைபிள் படிப்புகள் தொடங்கப்பட்டன. தனிப்படுத்தப்பட்டிருக்கும் நபர்களுக்கு யெகோவாவின் சாட்சிகள் உண்மையிலேயே எவ்வாறு உதவுகின்றனர் என்பதைப் பற்றி அந்த ஊரிலுள்ள அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர்.