எமது வாசகரிடமிருந்து
கண் அறுவை சிகிச்சை “ஆரை கருவிழித்திறப்பு —அது என்ன?” (செப்டம்பர் 22, 1994) ஒரு ஒளிவிலகல் அறுவை மருத்துவராக, என் சொந்த கண்களுக்கு இந்த அறுவையை செய்துகொண்டு, 2,000-க்கும் அதிகமானோருக்கும் செய்திருக்கும் என்னை உங்களுடைய கட்டுரையின் தரமும் துல்லியமும் மிகவும் கவர்ந்தது. வருந்தத்தக்க வகையில், மருத்துவ துறையல்லாத மற்ற செய்தித்துறை வாயிலாக பொதுமக்களுக்குக் கொடுக்கப்படும் தகவல்கள் பெரும்பாலும் துல்லியமற்றவையாகவும், தவறாக வழிநடத்துபவையாகவுமே இருக்கின்றன. ஆரை கருவிழித்திறப்பு அறுவை சிகிச்சையின் நன்மை தீமைகளை விளக்கியதில் உங்களுடைய பத்திரிகை மிகச் சிறந்த பணியாற்றியிருக்கிறது என்று நான் உணர்ந்தேன்.
ஆர். எஃப். பி., ஐக்கிய மாகாணங்கள்
மரணம் “அப்பா ஏன் சாக வேண்டும்?” (ஆகஸ்ட் 22, 1994) மற்றும் “அப்பா செத்த நினைப்பிலிருந்து எவ்வாறு நான் மீள முடியும்?” (செப்டம்பர் 8, 1994) ஆகிய “இளைஞர் கேட்கின்றனர் . . .” கட்டுரைகளை நான் எந்தளவுக்குப் போற்றுகிறேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். என்னுடைய பெற்றோர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்றாலும், என்னுடைய அன்பார்ந்த இருவரின் மரணத்தினால் சமீபத்தில் நான் துயரத்தில் ஆழ்ந்தேன். இந்தக் கட்டுரைகள் எனக்குப் பெரும் ஆறுதலைக் கொடுத்து, அத்தகைய பெருந்துயரைச் சமாளிப்பது எவ்வாறு என்பதைக் காண்பித்தன.
டி. ஹெச்., பிரான்ஸ்
ராஜ்ய மன்றத்தில் ஒரு பேச்சைக் கொடுத்த பிறகு, என் அப்பா இறந்துவிட்டார். அதிலிருந்து நான் துயரத்தோடும் கோபத்தோடும் போராடிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு நேசிக்கப்பட்டவரும் யெகோவாமீது இவ்வளவு பக்தி வைத்திருந்தவருமான ஒருவர் இப்படி திடீரென்று மரிப்பது நியாயமல்லவே என்று யோசித்தேன். அந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது, நொறுங்குண்ட என் இதயத்தைக் குணப்படுத்த யெகோவா உதவிக்கரம் நீட்டியதை நான் உணர்ந்தேன்.
எஸ். ஏ., நைஜீரியா
என்னுடைய அப்பா புற்றுநோயினால் இறந்துபோனார். இதைச் சமாளிக்க முயற்சித்தது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. என்னுடைய சொந்த உணர்ச்சிகளோடு இந்தக் கட்டுரை இவ்வளவு ஒத்திருப்பதைப் பார்ப்பது வியப்பூட்டுவதாய் இருந்தது. வேதனைதரும் விஷயம் என்னவென்றால் என்னுடைய வாழ்க்கையில் இப்பொழுது நடைபெறும் அனைத்தையும் அவரால் பார்க்க முடியவில்லையே என்பதுதான். என்னுடைய வாழ்நாள் கனவை, ஒரு முழுநேர ஊழியராக வாழ்க்கைப் பணியை, இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறேன். நான் இந்த ஊழியம் செய்வதை என் அப்பா பார்க்கவேண்டும் என்று அதிகம் விரும்பினேன். அவருடைய ஆச்சரியகரமான வழிநடத்துதலும், ஞானமும் இப்போது எனக்குக் கிடைக்காமல்போவது சிலசமயங்களில் கஷ்டத்தைக் கொடுக்கிறது. ஆனால் கரிசனையுள்ள மற்றவர்கள் இருக்கிறார்கள் என்றறிவது பேரளவு ஆதரவாக இருக்கிறது.
சி. டி., ஐக்கிய மாகாணங்கள்
உலகத்தைக் கவனித்தல் விழித்தெழு! மிகவும் கவனமான முறையில் தயாரிக்கப்படுவதைக் குறித்து உங்களைப் பாராட்ட விழைகிறேன். “உலகத்தைக் கவனித்தல்” பகுதியை விசேஷமாகப் போற்றுகிறேன். இது வெவ்வேறு தலைப்புகளில் சுருக்கமாக எழுதப்படுகிறது. இருந்தபோதிலும், அதன் பயனுள்ள அறிவுரையும், ஆர்வத்தைக் கிளறிவிடும் விஷயங்களும், குறிப்புகளும் என்னுடைய பழக்கவழக்கங்களில் அநேகத்தை மாற்ற உதவி செய்திருக்கின்றன. “உலகத்தைக் கவனித்தல்” வாசிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது.
டி. சி. சி., பிரேஸில்
ஹைம்லிக் முயற்சி நான் 11 வருடங்களாக தகுதிபெற்ற ஒரு முதலுதவி ஆசிரியராக இருந்துவந்திருக்கிறேன். ஆகவே “உலகத்தைக் கவனித்தல்” பகுதியில் வெளிவந்த “உணவு அடைத்துக்கொள்ளுதல்” (ஆகஸ்ட் 22, 1994) என்ற விஷயத்தைப் பற்றி கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன். அதில் ஹைம்லிக் முயற்சி என்றழைக்கப்படும் முறையைப்பற்றி குறிப்பிடுகிறீர்கள். எனினும், வயிற்றில் ஒரு குத்து குத்தினால் மூச்சு அடைத்துக்கொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததுதானே. ஆகவே முதலுதவி செய்யவேண்டிய சந்தர்ப்பத்தில் ஹைம்லிக் முயற்சி நிலைமையை மோசமாக்கலாம்.
ஜி. பி., ஆஸ்திரியா
ஐரோப்பிய மருத்துவ நிபுணர்களில் சிலர் ஹைம்லிக் முயற்சி ஆபத்தானது எனவும் வேறுவழியே இல்லாதபட்சத்தில் மட்டுமே இதைப் பயன்படுத்தலாம் எனவும் சிபாரிசு செய்கின்றனர். இருப்பினும் இதை சரியான முறையில் பயன்படுத்தினால், ஹைம்லிக் முயற்சியானது, அடைத்துக்கொள்ளும் ஆளுக்கு உதவியளிக்கும் வேறெந்த முறையைக்காட்டிலும் மேம்பட்ட ஒரு முறையாக இருக்கிறது என்று ஐக்கிய மாகாணங்களில் உள்ள மருத்துவர்கள் பொதுவாக நினைக்கிறார்கள். அடைத்துக்கொண்டு சாவும் ஆபத்தைப் பார்க்கும்போது உள்காயத்தினால் ஏற்படும் வேதனை கொஞ்சம்தான் என்று கருதப்படுகிறது. உதாரணமாக, இம்முறையினால் நான்கேநான்கு சந்தர்ப்பங்களில் தான் இரைப்பைத் துளைகள் ஏற்பட்டதாக இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கின்றன என்பதாக ஐ.மா.-வில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று கூறிற்று. ஐரோப்பிய டாக்டர்களும் ஐ.மா. டாக்டர்களும் இந்த விஷயத்தில் எப்போதாவது ஒத்துப்போவார்களா என்பது விரைவில் தெரியவரும்.—ED.