எமது வாசகரிடமிருந்து
நேரடி விவரத்திற்கு பிரதிபலிப்பு “இனியும் பாறையாகவோ தீவாகவோ இல்லை,” என்னும் இதயத்தை உருகவைக்கும் லேரி ரூபனின் கதைக்காக மிக்க நன்றி. (நவம்பர் 22, 1994) பலர் பெரும்பாலும், கடந்தகாலத்தில் துன்பப்பட்டோரைக் கருத்தில் கொள்ள தவறிவிடுகின்றனர். எனக்கு உண்மையிலேயே விசுவாசமிருந்தால், நான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கமாட்டேன் என்று ஒருசமயம் என் சொந்த மகன் கூறினான்! ஆனால், எல்லோராலும் பழையதை வெறுமனே தள்ளிவிட முடிவதில்லை. இத்தகைய மனித அனுபவங்களைத் தொடர்ந்து பிரசுரியுங்கள். அது சிலரது இருதயங்களை இளகச்செய்யும் என கோருகிறேன்.
எம். எல்., பிரிட்டன்
நன்றியைத் தெரிவிக்க வார்த்தையின்றி நான் தவிக்கிறேன். கடந்தகாலத்தில் துர்ப்பிரயோகிக்கப்பட்டதால், மாறாத வடு உண்டாக்கப்பட்டவர்களை அடிக்கடி நாங்கள் எதிர்ப்படுகிறோம். அவர்களை சபையில் செயல்பட வைப்பதும், யெகோவாவுடன் உறவை வளர்த்துக்கொள்ள உதவி செய்வதும் நடுங்க வைக்கும் சவாலாகும். அப்படிப்பட்டவர்கள் அன்பையும் நம்பிக்கையையும் உணருவதற்குக் கற்றுக்கொள்ள முடியும் என்று அந்தக் கட்டுரை காண்பித்தது.
ஜெ. டி., கனடா
இப்போது 25 வருடங்களாக கிறிஸ்தவளாக இருந்து வருகிறேன். கடவுளை தலையறிவில் மட்டுமே உண்மையில் சேவித்தேன், ஆனால் என் இதயமோ, உறுதியான கல்சுவரினுள் வைத்து மூடப்பட்டிருப்பதாக உணருகிறது. நான் குடிவெறிக் குடும்பத்தில் வளர்ந்தேன், அடி உதை, பால்சம்பந்தமாக துர்ப்பிரயோகம், மற்ற காயங்களால் துன்பப்பட்டேன். யெகோவா எவ்வளவோ எனக்காகச் செய்துள்ளார், ஆனால் அவரின்பேரில், அன்பை நான் உணரவில்லை. ஒருவேளை லேரி ரூபன் கதை எனக்கு கொஞ்சம் நம்பிக்கையைக் கொடுத்தது, ஒருநாள் ஒருவேளை வெறுமனே என்னுடைய கடந்தகாலத்திற்காக அழக்கூடும், உணர்ச்சிகளைப் பெறக்கூடும். ஒருவேளை, லேரி ரூபனுக்கு இப்போது கிடைத்துள்ள அன்பு, நம்பிக்கை, ஏற்றுக்கொள்ளப்படுதல் போன்றவை எனக்கும்கூட கிடைக்கக்கூடும்.
ஏ. எஃப்., ஐக்கிய மாகாணங்கள்
முன்னாளைய வாழ்க்கை கதைகள் சில, பயமற்ற, மனதில் போராட்டமற்ற, பலவீனமற்ற அசாதாரண மனிதர்களைப்போல் தோன்றிய ஆட்களின் கதைகளாக இருந்தன. லேரி ரூபனுடைய கதை வித்தியாசமான கோணத்தில் சொல்லப்பட்டது. அவர் ஒளிவுமறைவின்றி, தன் அந்தரங்க உணர்ச்சிகளையும் வெளிப்படையாகக் கூறினார். இந்த வகையான வாழ்க்கை கதைகள், நம்முடைய சொந்த வாழ்க்கையில் நடந்த காரியங்களாக இருப்பதனால், நமக்கு நிஜமானவையாக உள்ளன.
எஃப். டி. எஸ்., பிரேஸில்
Rh காரணக்கூறு இப்படிப்பட்ட விவாதத்திற்குரிய பொருளை அத்தகைய விதத்தில் கொண்டுசெல்கின்ற விழித்தெழு! உண்மையில் போற்றுதலுக்குரியது. “Rh காரணக்கூறும் நீங்களும்” (டிசம்பர் 8, 1994) என்ற கட்டுரையில் அணுகிய முறையானது மதவெறிக்குரியதல்ல. அந்தப் பொருளானது, விஞ்ஞான நுணுக்கத்துடனும், அப்போதைக்கப்போது முன்னேற்றுவிக்கப்பட்ட, மருத்துவ சொற்றொடருடனும் இருந்தது, இருப்பினும், சொற்றொடர்கள் தெளிவாகவும் புரிந்துகொள்ளும்படியும் இருந்தன. யெகோவாவின் சாட்சிகள் மனித உயிருக்கு மதிப்பில்லாத முரண்பாடான மதவெறியர்கள் என்ற குற்றச்சாட்டை நிராகரிக்கிறது.
ஐ. ஆர்., ஜெர்மனி
நான் கர்ப்பிணியாக இருக்கிறேன், என் குழந்தையின் இரத்தத்திற்கு எதிராக நோய் எதிர்ப்பொருளை உருவாக்குவதிலிருந்து தடுப்பதற்காக, எனக்கு ஊசி தேவை என மருத்துவர் கூறினார். எனக்கு Rh காரணக்கூற்றைப்பற்றி ஒன்றுமே தெரியாது, அதை மறுக்கவில்லை. அந்த ஊசி இரத்தத்திலிருந்துதான் செய்யப்படுகிறது என்பதை அறிந்தவுடன், கடவுளுடைய சட்டத்தை மீறியிருக்கக்கூடும் என்று நான் பயந்தேன். உங்களுடைய கட்டுரை, கடைசியாக, மனசாட்சியைப் பொருத்த காரியம் என்று விளக்கியதன்மூலம் எனக்கு உதவிசெய்தது.
சி. டபிள்யு., ஐக்கிய மாகாணங்கள்
மதத்தைப்பற்றி பேசுதல் நான் ஒரு கிறிஸ்தவனாக வளர்க்கப்பட்டாலும், பொது பிரசங்க ஊழியத்தில் முழுமையாக ஈடுபட, விசேஷமாக என் பள்ளி சகாக்களின் மத்தியில் மிகவும் கூச்சப்பட்டேன். “இளைஞர் கேட்கின்றனர் . . . கடவுளைப்பற்றி ஏன் பேசவேண்டும்?” (செப்டம்பர் 22, 1994) என்ற கட்டுரையில் நீங்கள் கொடுத்த புத்திமதி, அந்த ஊழியத்தின் முக்கியத்துவத்தை எனக்கு ஞாபகப்படுத்தியது. போதுமான தகுதியுடன் கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பவனாக ஆவதற்கு உங்களுடைய உற்சாகமூட்டுதலை மனதில் ஏற்றுக்கொள்கிறேன்.
கே. கே., நைஜீரியா
எனக்கு வயது 12, யெகோவாவின் சாட்சிகளுள் ஒருத்தி என்று சொல்ல, உண்மையில் வெட்கப்பட்டுக்கொண்டிருந்தேன். என் பள்ளி சகாக்கள், என்னை வெளி ஊழியத்தில் பார்க்கக்கூடாது என்று நினைத்தேன். அந்தக் கட்டுரை, நான் மட்டும் இந்தப் பிரச்சினையை எதிர்ப்படவில்லை என்பதை கண்டுகொள்ள உதவியது, வெட்க உணர்வையும் மேற்கொள்ள உதவியது.
எம். வி. எஸ்., பிரேஸில்