குழந்தையைக்—கொண்டுசெல்லுதல் ஆப்பிரிக்க மற்றும் வட அமெரிக்க முறைகள்
நைஜீரியாவிலிருந்து விழித்தெழு! நிருபர்
உலகெங்குமுள்ள மக்கள் தங்கள் குழந்தைகளைப் பல்வேறு முறைகளில் கொண்டுசெல்கிறார்கள். வட அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க முறைகள் முற்றிலும் ஓர் முரண்பாட்டை அளிக்கின்றன.
இந்த வித்தியாசப்பட்ட கண்டங்களில், பொருளாதார நிலைமைகள் முற்றிலுமாக வேறுபடுகின்றன. ஆகவே அவர்கள் கொண்டுசெல்லும் முறைகளும் முற்றிலுமாக வேறுபடும் என்று நாம் எதிர்பார்ப்போம். முதலாவதாக, வட அமெரிக்காவிலுள்ள மக்கள் அடிக்கடி இந்தக் காரியத்தை எப்படி கையாளுகிறார்கள் என்று நாம் பார்ப்போம்.
வட அமெரிக்க முறை
ஐக்கிய மாகாணங்களிலும் உலகின் மற்றுமநேக பகுதிகளிலும், நான்கு-சக்கர பேபி ஸ்ட்ரோலர்கள் அல்லது ப்ராம்கள் [குழந்தையை வைத்துக் கொண்டுசெல்லும் தள்ளுவண்டிகள்] பொதுவான ஒரு முறையாக இருக்கின்றன. பயன்படுத்துவதற்கு அதிக எளியதாகவும், இன்னுமதிக புதுப்பாணியானதாகவும், குழந்தைக்கு அதிக சௌகரியமானதாகவும் ஆக்கும் நாட்டம் சமீப வருடங்களில் இருந்துவருகிறது. அவற்றில் பல பூம்பட்டுவகை மெத்தைகளையும், கழுவக்கூடிய திண்டுகளையும் (pads), உயர்த்தப்பட்ட இருக்கைகளையும் கொண்டிருக்கின்றன.
ஸ்ட்ரோலர்கள், குழந்தைகளுக்கு ஓர் விரும்பத்தக்க ஓய்விடத்தை, அவர்களது நடவடிக்கைகளில் ஓர் மாற்றத்தை, வேதனைதரும் பாதங்களுக்கு ஓர் ஓய்வை அளிக்கின்றன. தூக்கம்வரும் ஒரு குழந்தைக்கு, ஒரு ஸ்ட்ரோலர், சக்கரங்களுள்ள ஒரு படுக்கையைப் போல் இருக்கலாம். நகர்ந்துகொண்டிருக்கும் ஒரு ஸ்ட்ரோலரின் அசைவு, சோர்வுற்று எரிச்சல்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு குழந்தையை அடிக்கடி ஆற்றி, அமைதிப்படுத்துகிறது.
ஸ்ட்ரோலர்கள் பெற்றோருக்கும் வாழ்க்கையை எளிதாக்கலாம். பெற்றோர் ஒருவர் சொன்னார்: “எல்லா இடங்களுக்கும் குழந்தையைத் தூக்கிச்செல்வதைவிட இது எளிதாக இருக்கிறது.” குழந்தை சிறியதாக இருக்கும்போது தூக்கிச்செல்வது எளிதாக இருக்கக்கூடும்; ஆனால் அவன் அல்லது அவள், எடையில் இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரித்தப்பின் கதையே மாறிவிடுகிறது. மேலுமாக, தாங்கள் கட்டுப்படுத்தக்கூடிய ஒரு ஸ்ட்ரோலரில் தங்கள் குழந்தை பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது என்றறிவதில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
ஐக்கிய மாகாணங்களில், ஸ்ட்ரோலர்களை பத்திரமானவையாக உண்டாக்குவதற்கு கவனம்செலுத்தப்படுகிறது. அவை எளிதில் உருண்டு விழ முடியாதபடி, அகன்ற அடித்தளத்தையும், குறைவான புவியீர்ப்பு மையத்தையும் வைத்து திட்டமைக்கப்படுகின்றன. ப்ரேக்குகள் உறுதியானவையாகவும், ஸ்ட்ரோலரில் இருக்கும் குழந்தையால் விடுவிக்கப்பட முடியாத ஒரு நிலையிலும் வைக்கப்படவேண்டும். ஸ்ட்ரோலர் தற்செயலாக மடங்கிவிடுவதைத் தடுப்பதற்காகத் தாழ்ப்பாள்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. “நசுக்கும் இடங்கள்”—பிஞ்சு விரல்களை நசுக்கக்கூடிய பகுதிகள்—இல்லாதபடி கவனம் செலுத்தப்படுகிறது. இருக்கை-பெல்ட்டுகள் கூடுதலான பாதுகாப்பை அளிக்கின்றன.
ஸ்ட்ரோலர்கள் $20-க்கும் மேலிருந்து அதற்கு சுமார் எட்டு அல்லது பத்து மடங்கு அதிகமான விலைகளில் கிடைக்கக்கூடும். சுமார் $300-க்கு சில்லறையில் விற்கப்படும் சொகுசு மாடல் ஒன்று, மிகப் பெரிய கூடை ஒன்று, பூம்பட்டுவகைத் துணியாலான உட்புறம், வானிலையால் பாதிக்கப்படாத வெளிப்புறம், பலதிசை சக்கர நகர்வு ஏற்பாடு, சீக்கிரத்தில் மடங்கும், குறைந்த எடையுள்ள சட்டம் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. அம்மா அல்லது அப்பா மென்னடை ஓட்டத்தை ஓடிக்கொண்டே குழந்தையையும் தள்ளிச்செல்ல அனுமதிக்கும் விசேஷித்த வகையில் திட்டமைக்கப்பட்ட “மென்னடை ஓட்டக்காரரின் ஸ்ட்ரோலர்கள்” சுமார் $380-க்கு விற்கப்படுகிறது.
ஆப்பிரிக்க முறை
ஆப்பிரிக்காவிலும் ஆசியாவின் பல நாடுகளிலும், தாய்மார், தங்கள் தாய்மாரும் அவர்களுக்கு முன்னிருந்த தாய்மாரும் செய்ததுபோலவே தங்கள் முதுகுகளில் குழந்தைகளைத் தூக்கிச் செல்கிறார்கள். அநேக ஆப்பிரிக்கர்கள் அதைச் அழைக்கிறபடி “குழந்தையை முதுகில் தூக்கிச்செல்லுதல்” (Baby-backing) குறைந்த செலவுடையதாகவும் அதிக வசதியானதாகவும் இருக்கிறது. தேவைப்படுகிற ஒரே கருவி என்னவென்றால், சுற்றிப்போர்த்தும் துணி எனப்படும் ஒரு பலமான, நீள்சதுர துண்டு துணியாகும். எளிய, பாதுகாப்பான ஒரு முறையில், தாய் குனிந்து, தன் குழந்தையை தன் முதுகில் வசதியான நிலையில் வைத்து, பின்னர் தன்னையும் குழந்தையையும் அந்தத் துணியால் சுற்றி, சேர்த்துக் கட்டுகிறாள்.
குழந்தைகளை அவற்றிற்குரிய இடத்தில் வைத்துக் கட்டும்போது அவை எப்போதாவது விழுகின்றனவா? இது ஏறக்குறைய ஒருபோதும் சம்பவிப்பதில்லை. ஒரு குழந்தையை வைத்துக் கட்டும்போது, தாய் ஒரு கையை வைத்து தாங்குதல் அளித்து மற்ற கையால் அந்தச் சுற்றிப்போர்த்தும் துணியை இறுக்குகிறாள். சற்று வயதான குழந்தைகளைப் பற்றி நைஜீரிய பெண்ணாகிய ப்ளெஸ்ஸிங் சொன்னாள்: “குழந்தைகள் எதிர்ப்பதில்லை; அவர்கள் இறுகப் பற்றிக்கொள்கிறார்கள். தங்கள் தாயின் முதுகில் இருப்பதை அவர்கள் விரும்புகிறார்கள். சில சமயங்களில் அங்கு இருக்கவேண்டுமென்று அழுகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தை அங்கு கஷ்டப்பட்டால், அந்தத் தாய் அந்தச் சுற்றிப்போர்த்தும் துணியை சரியான இடத்தில் வைக்கும்வரையாக அதன் ஒரு கையையோ அல்லது இரண்டு கைகளையுமோ தன் பக்கமாகத் தன் மேற்கைகளைப் பற்றிக்கொள்ளச் செய்யலாம்.”
மிகச் சிறிய குழந்தைகளின் கழுத்தைத் தாங்கிப்பிடிப்பதற்காக, தாய்மார் இரண்டாவது துண்டு துணியைப் பயன்படுத்துகின்றனர்; முக்கியமான சுற்றிப்போர்த்தும் துணியைக் கட்டுவதுபோலவே இதையும் கட்டுகிறார்கள். மிகச் சிறிய அல்லது உறங்கும் குழந்தைகளுக்குக் கூடுதலான தாங்குதல் கிடைப்பதற்காக குழந்தையின் கைகள் அந்தச் சுற்றிப்போர்த்தும் துணியால் மூடப்படுகின்றன. கொஞ்சம் வயதான குழந்தைகள் தங்கள் கைகள் கட்டப்படாமல் உல்லாசமாக விடப்படுகின்றனர்.
ஆப்பிரிக்க தாய்மார் தங்கள் குழந்தைகளைத் தங்கள் முதுகுகளில் எவ்வளவு நாட்களுக்குக் கொண்டுசெல்கிறார்கள்? கடந்த காலங்களில் நைஜீரியாவிலுள்ள யாரபா போன்ற சில இனத்தொகுதிகள் தங்கள் குழந்தைகளை மூன்று வயது வரையாக முதுகில் வைத்துக் கொண்டுசென்றனர். அதற்கிடையில் அவன் அல்லது அவளது இடத்தை எடுத்துக்கொள்ளும்படி அந்தத் தாய் வேறொரு குழந்தையைப் பெற்றாலொழிய, தற்போது சுமார் இரண்டு வயது வரையாக ஒரு குழந்தைக்கு இலவச சவாரி கிடைக்கிறது.
சொகுசாக தாயின் முதுகில் கட்டப்பட்டிருக்கும் குழந்தை, தாய் போகும் இடத்திற்கெல்லாம் போகலாம்—படிகளில் ஏறுவது இறங்குவது, கரடுமுரடான பகுதிகளில் செல்வது, வாகனங்களில் ஏறுவது இறங்குவது ஆகிய அனைத்தையும் செய்யலாம். ஆனால் நடைமுறையானதும் செலவற்றதுமான கொண்டுசெல்லும் முறையாக இருப்பதோடுகூட, முதுகில் தூக்கிச்செல்லும் முறை ஆறுதல் போன்ற முக்கியமான உணர்ச்சிப்பூர்வமான தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அழும் குழந்தை ஒன்று தாயின் முதுகில் வைக்கப்படுகிறது; குழந்தை தூங்கிவிடுகிறது, தாய் தன் வேலையைத் தொடர்கிறாள்.
தூங்குகிற ஒரு குழந்தையை முதுகிலிருந்து படுக்கைக்கு மாற்றி கிடத்தும்போது மென்மையாகச் செயல்படுவது அவசியம், ஏனென்றால் குழந்தைகள் தொந்தரவு செய்யப்படுவதை விரும்புவதில்லை. இதைச் செய்வதற்கு, தாய் பக்கவாட்டில் கவனமாகப் படுத்துக்கொண்டு, பின்னர் அந்தச் சுற்றிப்போர்த்தும் துணியை மெதுவாக அவிழ்க்கிறாள்; அந்தத் துணி இப்போது விரிப்பாகிவிடுகிறது. சில சமயங்களில், முதுகில் இருப்பதைப் போன்ற அதே பாதுகாப்புணர்வை அளிப்பதற்காக, குழந்தையின் முன்னால் ஒரு தலையணையை அணைப்பாகக் கொடுப்பாள்.
குழந்தையை முதுகில் தூக்கிச்செல்வதற்கு மற்ற பயன்களும் உண்டு. தாய் தன் குழந்தையின் தேவைகளை எப்போதும் கவனித்துக்கொள்ள உதவுகிறது. குழந்தை சோம்பலுணர்ச்சியுடன், எரிச்சலடைந்ததாக, காய்ச்சலடிப்பதாக உணர்ந்தால், அல்லது சிறுநீர் கழித்திருந்தால், அவள் அதை உணர்ந்துகொள்வாள். குழந்தையை முதுகில் தூக்கிச் செல்லுதல் நீண்டகால பயன்களையும் கொண்டுவரலாம். வளர்ச்சியும் முன்னேற்றமும் என்ற ஆங்கில புத்தகம் குறிப்பிடுகிறது: “குழந்தைப் பருவத்தில் உடல்ரீதியில் நெருக்கமாக இருத்தல், தாய்க்கும் குழந்தைக்கும் இடையே பாதுகாப்பான, அன்பான ஒரு பிணைப்பை உருவாக்கி, பிற்பட்ட வருடங்களில் மற்றவர்களுடனுள்ள உறவுகளுக்கு அடிப்படையை உருவமைக்கிறது. இந்தப் பிணைப்பில் முக்கியமான அம்சமானது, நெருங்கி அணைக்கப்பட்ட குழந்தை தன் தாயின் கருப்பையில் இருந்தபோது அவன் அல்லது அவள் செய்ததுபோலவே தாயின் இருதயத் துடிப்பின் சந்தத்தை எளிதாகக் கண்டறிந்துகொள்ள முடிவதேயாகும் என்று நம்பப்படுகிறது.”
குழந்தையை முதுகில் தூக்கிச்செல்லுதல் அளிக்கக்கூடிய நெருங்கிய தொடர்பை குழந்தைகள் விரும்புகின்றன. ஆப்பிரிக்காவில் தாய்மாரின் முதுகுகளிலிருக்கும் மகிழ்ச்சியான குழந்தைகளைக் காண்பதற்கு வெகு தூரம் செல்லவேண்டியதில்லை. சில அமைதியாகத் தூங்குகின்றன. மற்றவை தங்கள் தாயின் முடி, காதுகள், அல்லது அட்டிகையை வைத்து விளையாடுகின்றன. இன்னும் சில, தாய் தன் நடைக்கு ஏற்றவாறு மெதுவாகப் பாடுகையில், திருப்தியான சத்தங்களுடன் அவையும் சேர்ந்துகொள்கின்றன.
ஆம், குழந்தைகளைக் கொண்டுசெல்வதற்கான ஆப்பிரிக்க முறை வழக்கமாக வட அமெரிக்க முறையிலிருந்து மிகவும் வித்தியாசப்பட்டதாக இருக்கிறது. ஆனால் ஒவ்வொன்றும் அதன் பண்பாட்டுக்கு உகந்ததாயும் அதன் நோக்கத்தை நிறைவேற்றுவதாயும் இருக்கிறது.