ப்ரூவரி கல்ச்சில் ஆவிக்குரிய மலர்கள் பூத்தன
வெகு காலத்திற்கு முன்பு செம்பையும் வெள்ளியையும் தங்கத்தையும் பூமியின் ஆழத்தில் எரிமலையின் செயல்பாடு கரைத்தது. நீராவியின் அழுத்தம் இந்தக் கனிமங்களின் பெருமளவை இடைச்சந்துகள் வழியே செல்லும்படி செய்து, இப்போது அ.ஐ.மா.-வின் தென் அரிஜோனாவிலுள்ள ம்யூ மலைகள் என்று அழைக்கப்படுவதன்மீது படிய வைத்தது. 1877-ல், அருகாமையிலிருந்த ஹ்வாசூகா கோட்டையில் படை ஒற்றனாக பணிபுரிந்த ஜாக் டன், தண்ணீரைத் தேடிக்கொண்டிருந்தபோது இந்த அளவற்ற கனிமவளம் அங்கே இருப்பதற்கான அறிகுறியைக் கண்டுபிடித்தார். கனிவள நாடுநரான ஜார்ஜ் வார்ரனை ஒரு துண்டு நிலத்தை முழுமையாக பயன்படுத்திக்கொண்டு கிடைப்பதில் தனக்கு பங்கு தருமாறு கூறினார்.
கனிமங்கள் இருப்பதாக நம்பப்பட்ட அநேக நிலப்பகுதிகளுக்கு உடைமையுரிமையை ஜார்ஜ் வார்ரன் பதிவு செய்துகொண்டார்; ஆனால் நேர்மையற்றவராக அதை தன் கூட்டாளியான ஜாக் டன்னுக்குத் தெரியப்படுத்தாமல் இருந்தார். இந்த நிலப்பகுதிகள் வார்ரனை மிகப் பெரிய பணக்காரராக்கி இருக்கலாம் ஆனால் அளவுக்கதிகமான விஸ்கியினால் பாதிக்கப்பட்டவராய், முட்டாள்தனமாக தன் கண்டுபிடிப்புகளை பந்தயத்தில் பணயம் வைத்தார்; குதிரையைக் காட்டிலும் வேகமாக ஓட முடியும் என்பதாக பந்தயம் கட்டினார். சந்தேகமில்லாமல், அவர் எல்லாவற்றையும் இழந்தார். இந்நிலப்பகுதிகள் கடைசியில் க்வீன் சுரங்கமாக ஆயின. 1975-ல் சுரங்கம் மூடப்படுவதற்கு முன்பாக, பல வருடங்களினூடே, பெரியளவிலான சுரங்கவேலைப்பாடுகளின் மூலம், கிட்டத்தட்ட 40 லட்சம் டன் வெண்கலமும் சொல்ல முடியாத அளவு தங்கமும் வெள்ளியும் ம்யூ மலைகளிலிருந்து எடுக்கப்பட்டன.
உறுதியான பாறைகளில் சுரங்கம் தோண்டுவதற்கு அதற்குரிய சுரங்கத் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இவர்கள் இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி மற்றும் செர்பியாவிலிருந்து வரவழைக்கப்பட்டனர். செயல்படத்தூண்டும் திட்டங்களை பெரும்பாலான சுரங்கத்தொழிற்சாலைகள் அளிப்பதன் காரணமாக, உறுதியான பாறைகளைத் தோண்டும் சுரங்கத் தொழிலாளர்கள் கடின உழைப்பாளிகளாகவும் இருக்கின்றனர். இந்தச் சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பங்களிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததன் காரணமாக அவர்கள் அதிகம் குடிக்கிற சுரங்கத் தொழிலாளர்களாக ஆனார்கள். ஆகவே மது காய்ச்சும் புதிய முயற்சியில் இறங்க துணிவுள்ள ஜெர்மானியர் ஒருவர் சுரங்கங்களுக்கு அருகாமையில் மது வடிசாலை ஒன்றைக் கட்டினார். பானம் பண்ணுவதற்கு முன்பு சிறிது செயற்பாட்டைத் தேவைப்படுத்தும் ஒரு விதமான பொருளை மது வடிசாலைகள் உற்பத்தி செய்கின்றன. அது சில்லென்றும், சிநேகப்பான்மையான சூழ்நிலையிலும் கொஞ்சம் கேளிக்கையுடனும் அளிக்கப்படுவதை அநேகர் விரும்புகின்றனர். ஆகவே, மது வடிசாலைக்கு அருகாமையிலிருந்த ஒரு தெருவில் அநேக பார்கள் கட்டப்பட்டன. இவை அதிக கடினமாக உழைப்பவர்களும் அதிகம் குடிப்பவர்களும் அதிக உறுதியான பாறைகளைத் தோண்டுபவர்களுமான சுரங்கத் தொழிலாளர்களால் நிரம்பி வழிந்தன. கேளிக்கை அளிக்கப்பட்டது, அதாவது விபச்சாரமும் சூதாட்டமும் மதுபானத்தோடு அளிக்கப்பட்டன. இது வெடிமருந்துபோல் செயல்படும் ஒரு கலவையாக இருந்தது. இந்தத் தெரு ப்ரூவரி கல்ச் என்பதாக அழைக்கப்படலாயிற்று. இது, வெறும் 40 கிலோமீட்டர் தொலைவிலிருந்த, மோசமான பேரெடுத்திருந்த பட்டணமாகிய டூம்ஸ்டோனைக் காட்டிலும் அதிக ஆபத்தான ஒன்று என்பதாக பேர் எடுத்தது.
இறுதியில், பெரும்பாலான சுரங்கத் தொழிலாளர்கள் திருமணம் செய்துகொண்டு தங்கள் குடும்பங்களைப் பராமரிப்பதற்காக வீடுகளைக் கட்டினர். இங்கிலாந்திலிருந்து வந்திருந்த சுரங்கத் தொழிலாளர்கள் 19-வது நூற்றாண்டு ஆங்கிலேய சுரங்கத் தொழிலாளர்கள் வசிப்பதுபோன்ற வீடுகளைக் கட்டினர்; செர்பியாவிலிருந்து வந்தவர்கள் செர்பிய சுரங்கத் தொழிலாளர்கள் வசிப்பதுபோன்ற வீடுகளையும்; ஜெர்மனியிலிருந்து வந்தவர்கள், ஜெர்மானிய வீடுகளையும்; இத்தாலியிலிருந்து வந்தவர்கள் இத்தாலிய வீடுகளையும்; அயர்லாந்திலிருந்து வந்தவர்கள் அயர்லாந்திய வீடுகளையும் கட்டினர். முதலில் இருந்த நகரமாகிய பழங்காலத்திய பிஸ்பி, செங்குத்தான பள்ளத்தாக்கிலே கட்டப்பட்டதன் காரணமாக, அங்குள்ள வீடுகள் பள்ளத்தாக்கின் சுவர்களுடைய எல்லா பக்கங்களிலும், அந்தப் பாறை நிலத்தில் எங்கெல்லாம் மண் தோண்டி எடுக்கப்பட முடியுமோ அங்கெல்லாம் கட்டப்பட்டிருந்தன. வீடுகளின் இந்த அசாதாரணமான தொகுப்பு இறுதியில் 20,000-க்கும் மேற்பட்ட ஜனங்களுக்கு இடமளித்தது, அவர்களில் பெரும்பாலானோர் சுரங்கத் தொழிலாளிகளும் அவர்களது குடும்பத்தினருமே. இப்போது அது உலகம் முழுவதிலிருந்தும் சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுக்கிறது. இச்சுரங்கங்களில் மிக அதிக பணத்தை முதலீடு செய்த ஒரு மனிதனின் பெயரிலிருந்துதான் இப்பட்டணம் பிஸ்பி என்ற பெயரைப் பெற்றது. அந்த மனிதன் தன் பெயரைப் பெற்றிருக்கும் அந்தப் பட்டணத்திற்கு உண்மையில் ஒருபோதும் வரவில்லை.
பட்டணம் வளரவளர, ப்ரூவரி கல்ச்சிலுள்ள பார்களின் எண்ணிக்கையும் அதோடுசேர்ந்து வளர்ந்தது. ஒரு சமயத்தில் 30-க்கும் அதிகமான பார்கள் இரண்டு ப்ளாக் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்தன, மிகப் பெரிய சிவப்பு விளக்குப் பகுதியும்கூட கல்ச்சிலிருந்து சிறிது தொலைவில் செழித்தோங்கியது.
ஒருசில சாட்சி குடும்பங்கள் 1950-ல் பிஸ்பிக்கு குடியேறினார்கள். அவர்கள் அங்கே பிரசங்கித்தது, யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபை உருவாக்கப்படுவதில் விளைவடைந்தது. 1957-க்குள்ளாக 12 அங்கத்தினர்களைக் கொண்டிருக்கும் அளவுக்கு அந்தச் சபை வளர்ச்சியடைந்தது. ஒன்றாக கூடுவதற்கு அவர்களுக்கு ஓர் இடம் தேவைப்பட்டதன் காரணமாக, தங்களால் கொடுக்க முடிந்த அளவுக்கேற்றாற்போல் ஓர் இடத்தை வாடகைக்கு எடுத்தனர். செயின்ட் எல்மோவின் சலூன் உள்ள தெருவுக்கு எதிர்ப்புறம், ப்ரூவரி கல்ச்சில் உள்ள ஒரு கடையின் முன்புறத்தில் அது அமைந்திருந்தது. சுற்றுவட்டாரங்களில் இருந்த ஒழுக்கக்கேடான நிறுவனங்களுக்கு அடிக்கடி சென்ற ஜனங்களோடு அவர்கள் சில பிரச்சினைகளை எதிர்ப்பட்டனர். எப்போதாவது, ஒரு குடிவெறியன் மாலை கூட்டத்தின்போது உள்ளே திரிந்து கடைசியில் வெறுமனே பின்வரிசையில் அமர்ந்து செவிகொடுத்துக் கேட்பான், சிலர் நன்கொடையும்கூட அளித்துவிட்டுச் சென்றனர்.
சீக்கிரத்தில், ராஜ்ய மன்றத்திற்காக ஓர் இடத்தை சபை விலைக்கு வாங்கியது. ப்ரூவரி கல்ச்சிலிருந்தும் அதன் ஒழுக்கக்கேடான சுற்றுப்புறத்திலிருந்தும் பதினோரு கிலோமீட்டர் தொலைவில் அவ்விடம் இருந்தது. 1958-ல் இந்த மன்றம் கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. கட்டிடம் புதுப்பிக்கப்பட்டு, மூன்று மடங்கு விரிவாக்கப்பட்டு இன்னும் சபைக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்துவருகிறது.
1975-ல் சுரங்கங்கள் மூடப்பட்டுவிட்டன, பட்டணமும் ஏறத்தாழ அவற்றுடன் மூடப்பட்டுவிட்டது. சுரங்கத் தொழிலாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் சுரங்கங்கள் இன்னும் இயங்கிக்கொண்டிருந்த பட்டணங்களுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். அங்கேயே இருந்துவிட்ட குடியிருப்பாளர்கள், ஓய்வுபெற்ற சுரங்கத் தொழிலாளிகளும் அவர்களது குடும்பத்தினராகவுமே பெரும்பாலும் இருந்தனர்.
புகழ்பெற்ற ப்ரூவரி கல்ச் இப்போது சுற்றுலா பயணிகளைக் கவரும் இடமாக இருக்கிறது. ஒரே ஒரு பார்தான் அங்கு இயங்குகிறது, மது வடிசாலை கட்டிடம் இப்போது குடும்ப ரெஸ்டரென்டாக செயல்படுகிறது. சிவப்பு விளக்குப் பகுதியின் சில அடையாளங்கள் அந்தப் பகுதியில் உள்ள சில வீடுகளைச் சுற்றியிருக்கும் வேலிகளில் காணப்பட்டாலும்கூட அது தகர்க்கப்பட்டிருக்கிறது. அந்த வேலிகள் துருப்பிடித்த கட்டில் ஸ்பிரிங்குகளாலும் ஃப்ரேமுகளாலும் செய்யப்பட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் கவனத்தை ஈர்த்த ஒழுக்கக்கேடான ப்ரூவரி கல்ச் இப்போது ஆர்வத்தோடு இருப்பவர்களைக் கவர்ந்திழுக்கும் விசித்திரமான இடமாகவே இருக்கிறது.
சபை இப்போது 48 பிரஸ்தாபிகளைக் கொண்டிருக்கிறது, அது வளர்ச்சியடைந்து வருகிறது. வீட்டுக்கு வீடு பிரசங்கிப்பது மிகவும் ஆர்வமூட்டுவதாய் இருக்கிறது. இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, இத்தாலி, செர்பியா ஆகிய இடங்களிலிருந்து ஆரம்பத்தில் வந்திருந்த ஓய்வுபெற்ற சுரங்கத் தொழிலாளிகளையும் அநேக கலைஞர்களையும் சாட்சிகள் சந்திக்கிறார்கள். அக்கலைஞர்களில் சிலர், நுழைவாயில் முகப்பில் தங்கள் கைவேலைப் பொருட்களை காட்சிக்கு வைத்திருக்கின்றனர்.
வளர்ச்சிக்கு ஒரு காரணம் ப்ரூவரி கல்ச்சில் இருந்த ரவுடிகளின் ஒரே பாரான செயின்ட் எல்மோஸ் என்றழைக்கப்பட்ட பாருக்கு ஒரு காலத்தில் அடிக்கடி சென்றுகொண்டிருந்த ஒரு பெண் இனியும் அங்கு செல்லாததே ஆகும். அவளது பெயர் ஜூலி. ஜூலி அங்கு சென்றது மட்டுமல்லாமல் தவறாமல் சென்ற ரவுடி வாடிக்கையாளர்களில் ஒருத்தியாகவும் இருந்தாள். அங்கு அளிக்கப்பட்ட பல்வேறு விதமான கேளிக்கைகளிலும் அடிக்கடி நடைபெறும் சண்டைகளிலும்கூட, அதுவும் சிலசமயம் ஆண்களுடன் நடக்கும் சண்டைகளிலும்கூட அவள் பங்கெடுத்தவளாக இருந்தாள். அவளது வீட்டிற்கு வந்த யெகோவாவின் சாட்சிகளுடைய பளிச்சென்று தெரிந்த வித்தியாசத்தினால் ஜூலி அவர்களது செய்தியினிடமாக கவரப்பட்டாள். ஜூலி மிகப் பெரிய மாற்றங்களை செய்ய வேண்டியதாய் இருந்தது. இதற்கு பல வருடங்களை எடுத்திருந்தாலும் ஜூலி இப்போது சுறுசுறுப்பான, முழுக்காட்டப்பட்ட சாட்சியாக இருக்கிறாள். அவளது கணவரும் மூன்று பிள்ளைகளும்கூட ஒழுங்காக கூட்டங்களுக்கு வருகின்றனர், முன்னேற்றமும் காண்பிக்கின்றனர்.
வெகு காலத்திற்கு முன்பு அங்கு படிந்திருந்த மண்ணியல் சார்ந்த பொக்கிஷங்களின் காரணமாக பிஸ்பி ஒரு பட்டணமாக ஆனது. ஜனங்கள் இனியும் அவற்றை தேடுவதில்லை, ஆனால் உண்மையான பொக்கிஷத்தை அநேகர் தேடிக்கொண்டிருக்கின்றனர். உண்மையான கடவுளாகிய யெகோவாவைப் பற்றியும் அவரது ராஜ்யத்தைப் பற்றியுமான அறிவே அப்பொக்கிஷம். ப்ரூவரி கல்ச்சில் இருந்த பழைய ராஜ்ய மன்றத்தின் சுற்றுப்புறம் படுமோசமான ஒழுக்க சீர்கேடாக இருந்தது, ஆனால் அந்த மன்றத்திற்குள்ளே ஆவிக்குரிய மலர்கள் பேணி வளர்க்கப்பட்டன. பழைய ராஜ்ய மன்றத்தில் கூடிக்கொண்டிருந்த அந்த 12 பிரஸ்தாபிகளில் 7 பேர் ஒழுங்கான பயனியர்களாக இருந்தனர். ஏழு பிள்ளைகளும்கூட இருந்தனர். மன்றத்திற்குள்ளே இருந்த வைராக்கியமான இந்தச் சிறு தொகுதியினர் அனுபவித்த கட்டியெழுப்பும் ஆவிக்குரிய சூழ்நிலை, வெளியே இருந்த ஒழுக்கக்கேடான சூழ்நிலையை வென்றதாக தோன்றுகிறது.
இந்தப் பிள்ளைகளில் ஆறு பேர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஏதோவொரு வகையான முழுநேர ஊழியத்தில் பின்னர் ஈடுபட்டனர். உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளிக்கு ஜான் ஜ்ரிஃப்ஃபின் சென்றார். இனியும் மிஷனரி ஊழியத்தில் இல்லாதபோதிலும், அவருக்கு நியமிக்கப்பட்ட நாடான கோஸ்டா ரிகாவில் ஒரு மூப்பராக இன்னும் யெகோவாவை சேவித்து வருகிறார். அவரது சகோதரியான காரலன் (இப்போது ஜாஸோ), அரிஜோனாவிலுள்ள ஸியர்ரா விஸ்டாவில் ஒழுங்கான பயனியராக சேவித்து வருகிறார். நான்ஸி ப்யூவும்கூட கிலியட்டுக்குச் சென்றார், சிலியில் மிஷனரியாக சேவித்தார். இப்போது ஒரு மிஷனரியாக இல்லாவிட்டாலும்கூட இன்னும் அங்கேதான் இருக்கிறார். அவரது சகோதரரான பீட்டர் பயனியர் ஊழியம் செய்து தேவை இருக்கும் இடமான ஸ்பெய்னில் சேவை செய்ய அங்கு சென்றார். சூஸனும் பெத்தனி ஸ்மித்தும் பிஸ்பியில் ஒட்டுமொத்தமாக 50 வருடங்களாக ஒழுங்கான பயனியர்களாக இருந்து வந்திருக்கின்றனர், இன்னும் அங்கேயே சேவை செய்கின்றனர்.
ப்ரூவரி கல்ச்சில் ஆவிக்குரிய மலர்களை பூக்கச் செய்யுமளவுக்கு கடவுளுடைய வார்த்தை உண்மையிலேயே ‘வல்லமைமிக்கதாய்’ இருக்கிறது. (எபிரெயர் 4:12)—அளிக்கப்பட்டது.
[பக்கம் 23-ன் படம்]
இந்தக் கட்டிடத்தின் மேல்மாடியில்தான் ராஜ்ய மன்றம் முதலில் இருந்தது