வாழ்க்கை சரிதை
சிறுவயது முதல் யெகோவாவால் போதிக்கப்பட்டேன்
ரிச்சர்ட் ஏபிரஹாம்சன் சொன்னது
“தேவனே, என் சிறுவயது முதல் எனக்குப் போதித்து வந்தீர்; இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்து வந்தேன்.” சங்கீதம் 71:17-ல் பதிவாகியிருக்கும் இந்த வார்த்தைகள் எனக்கு ஏன் விசேஷ அர்த்தம் உள்ளவை என்பதை விளக்குகிறேன்.
என் அம்மா ஃபானி ஏபிரஹாம்சனை 1924-ல் பைபிள் மாணாக்கர்கள் சந்தித்தார்கள்; யெகோவாவின் சாட்சிகள் அன்று அப்படித்தான் அழைக்கப்பட்டார்கள். அப்போது நான் ஒரு வயதுக் குழந்தை. அம்மா பைபிள் சத்தியங்களைப் படிக்கப் படிக்க அக்கம்பக்கத்தாரிடம் ஓடியோடிப் போய் அவற்றை சொல்வார்கள்; எனக்கும் என் அண்ணனுக்கும் அக்காவுக்கும்கூட அந்த சத்தியங்களை சொல்லித் தருவார்கள். அதனால், வாசிக்க கற்றுக்கொள்வதற்கு முன்பே கடவுளுடைய ராஜ்யம் அளிக்கப்போகும் ஆசீர்வாதங்களைப் பற்றிய நிறைய பைபிள் வசனங்களை மனப்பாடமாக தெரிந்து வைத்திருந்தேன்.
அ.ஐ.மா.-விலுள்ள ஆரிகான் மாகாணத்தில், லெ க்ரான்ட் என்ற நகரில் நான் பிறந்து வளர்ந்தேன். 1920-களின் பிற்பகுதியில், எங்கள் பைபிள் மாணாக்கர் தொகுதியில் சில பெண்களும் பிள்ளைகளும் இருந்தார்கள். நாங்கள் ஒதுக்குப்புறமான பகுதியில் இருந்தபோதிலும் வருடத்திற்கு ஓரிரு முறை பில்க்ரிம்ஸ் என்று அழைக்கப்பட்ட பயணக் கண்காணிகள் எங்களை வந்து சந்தித்தார்கள். இவர்கள் பேச்சுக்கள் கொடுத்து எங்களை உற்சாகப்படுத்தினார்கள், எங்களோடு சேர்ந்து வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தார்கள், பிள்ளைகள் மீது கனிவான அக்கறை காட்டினார்கள். ஷில்ட் டுட்ஜியன், ஜின் ஆரல், ஜான் பூத் ஆகியவர்கள் அப்படிப்பட்ட தங்கமான சகோதரர்களில் சிலர்.
1931-ல் கொலம்பஸிலுள்ள ஒஹாயோவில் நடந்த மாநாட்டில் யெகோவாவின் சாட்சிகள் என்ற பெயரை பைபிள் மாணாக்கர்கள் ஏற்றார்கள். ஆனால் எங்கள் தொகுதியிலிருந்த ஒருவராலும் அந்த மாநாட்டிற்கு போக முடியவில்லை. அப்படி போக முடியாத கம்பெனிகளும் (சபைகள் அன்று கம்பெனிகள் என்று அழைக்கப்பட்டன) ஒதுக்குப்புறமான தொகுதிகளும் அப்பெயரை ஏற்பதாக தீர்மானம் செய்ய அதே வருடம் ஆகஸ்ட் மாதத்தில் அவரவர் ஊரில் கூடினார்கள். லெ க்ரான்ட்டிலுள்ள எங்களது சிறு தொகுதியும் இதைச் செய்தது. பிறகு 1933-ல் த க்ரைஸிஸ் என்ற சிறு புத்தகத்தின் விசேஷ விநியோகிப்பில் கலந்துகொள்வதற்காக நான் ஒரு பைபிள் பிரசங்கத்தை மனப்பாடம் செய்து, முதன் முறையாக தனியாகவே வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தேன்.
1930-களில் எங்கள் ஊழியத்திற்கு மிகுந்த எதிர்ப்பு கிளம்பியது. அதை சமாளிப்பதற்காக டிவிஷன்ஸ் என்று அழைக்கப்பட்ட சிறு பிரிவுகளாக கம்பெனிகள் பிரிக்கப்பட்டன. அவை சிறு மாநாடுகளை நடத்தின. வருடத்திற்கு ஓரிரு முறை டிவிஷனல் காம்ப்பெய்ன்ஸ் என்ற விசேஷ பிரசங்க ஏற்பாடுகளில் கலந்துகொண்டன. பிரசங்கம் செய்ய வேண்டிய முறைகளும், பிரசங்க வேலையில் குறுக்கிடும் போலீஸாரை மரியாதையோடு நடத்த வேண்டிய முறைகளும் அந்த அசெம்பிளிகளில் கற்றுக்கொடுக்கப்பட்டன. சிறிய அல்லது பெரிய நீதிமன்றங்களுக்கு சாட்சிகள் அடிக்கடி இழுத்துச் செல்லப்பட்டதால், ஆர்டர் ஆஃப் ட்ரையல் என்ற ஆலோசனைத் தாளை முன்கூட்டியே படித்து ஒத்திகை பார்த்தோம். எதிர்ப்பை சமாளிக்க இது எங்களுக்கு உதவியது.
பைபிள் சத்திய பாதையில் ஆரம்ப முன்னேற்றம்
பைபிள் சத்தியங்களையும் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் கீழ் பூமியில் என்றென்றும் வாழும் பைபிள் சார்ந்த நம்பிக்கையையும் பற்றி அதிகமதிகமாக படிப்பதிலும் போற்றுவதிலும் முன்னேறினேன். அந்த சமயத்தில், கிறிஸ்துவோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப்போகும் நம்பிக்கை இல்லாதவர்கள் முழுக்காட்டுதல் எடுப்பது அவ்வளவு அவசியமாக கருதப்படவில்லை. (வெளிப்படுத்துதல் 5:10; 14:1, 3) இருந்தாலும், யெகோவாவின் சித்தத்தை செய்ய நான் திடத்தீர்மானமாக இருந்தால் முழுக்காட்டுதல் பெறலாம் என்று சொல்லப்பட்டது. ஆகவே 1933-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன்.
எனக்கு 12 வயது இருக்கும்போது, சிறப்பாக மேடைப் பேச்சு கொடுக்கும் திறமை எனக்கிருந்ததாக என் ஆசிரியர் நினைத்தார்; ஆகவே எனக்கு அதில் கூடுதலாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யும்படி அம்மாவிடம் சொன்னார். யெகோவாவின் சேவையில் இது எனக்கு உதவும் என்று அம்மாவும் நினைத்தார்கள். ஆகவே எனக்கு பாடங்கள் சொல்லிக் கொடுப்பதற்கு கைமாறாக அந்த ஆசிரியரின் துணிமணிகளை ஒரு வருடத்திற்கு அம்மா சலவை செய்து கொடுத்தார்கள். அந்த பயிற்சி என் ஊழியத்திற்கு உதவியாக இருந்தது. 14 வயதில் எனக்கு கீல்வாதக் காய்ச்சல் (rheumatic fever) வந்தது; இதனால் ஒரு வருடத்திற் கும் மேலாக ஸ்கூலுக்குக்கூட போக முடியவில்லை.
1939-ல் வாரன் ஹென்ஷல் என்ற முழுநேர ஊழியர் எங்கள் பிராந்தியத்திற்கு வந்தார்.a ஆன்மீக ரீதியில், அவர் எனக்கு அண்ணனைப் போலவே இருந்தார், என்னோடு சேர்ந்து வெளி ஊழியத்தில் நிறைய மணிநேரங்களை செலவிட்டார். விடுமுறை பயனியர் சேவை எனப்பட்ட தற்காலிக முழுநேர ஊழியத்தை ஆரம்பிக்க அவர் எனக்கு உதவினார். அவ்வருட கோடைக்காலத்தில் எங்கள் தொகுதி ஒரு கம்பெனியாக ஒழுங்கமைக்கப்பட்டது. சகோதரர் வாரன், கம்பெனி சர்வன்ட்டாக நியமிக்கப்பட்டார், நான் காவற்கோபுர படிப்பு நடத்துநராக நியமிக்கப்பட்டேன். நியு யார்க், புரூக்ளினிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது சர்வதேச தலைமையகமாகிய பெத்தேலில் சேவை செய்ய வாரன் சென்ற பிறகு நான் கம்பெனி சர்வன்ட்டாக பணியாற்றினேன்.
முழுநேர ஊழியத்தில் காலடி வைத்தேன்
கம்பெனி சர்வன்ட்டாக இன்னுமதிக பொறுப்புகளை நிறைவேற்றியது, நிரந்தர முழுநேர ஊழியத்தில் காலடி வைக்கும் என் ஆசையை இன்னும் அதிகரித்தது. மேல்நிலைப் பள்ளியில் மூன்றாம் ஆண்டை முடித்த பிறகு 17-ஆம் வயதில் நான் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தேன். அப்பா எங்கள் நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் அவர் குடும்பத்தை நன்கு கவனித்துக் கொண்டார், உயர்ந்த கொள்கைகளோடு வாழ்ந்தார். என்னை கல்லூரிக்கு அனுப்ப ஆசைப்பட்டார். ஆனாலும், அவரை சார்ந்திருக்காமல் என் சொந்தக் காலில் நிற்கும் பட்சத்தில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் என்று சொல்லிவிட்டார். ஆகவே செப்டம்பர் 1, 1940-ல் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன்.
நான் வீட்டை விட்டு கிளம்பியபோது என் அம்மா நீதிமொழிகள் 3:5, 6 வசனங்களை வாசிக்க சொன்னார்கள்; “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்” என்று அங்கு சொல்லப்பட்டிருக்கிறது. உண்மையில், என் வாழ்க்கையை எப்போதும் யெகோவாவின் கரங்களிலேயே விட்டுவிடுவது எனக்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
கொஞ்ச நாட்களில், வாஷிங்டன் மாகாணத்தின் வட-மத்திப பகுதியில் ஊழியம் செய்துவந்த ஜோ மற்றும் மார்கரட் ஹார்ட் என்பவர்களுடன் சேர்ந்து ஊழியம் செய்தேன். மாட்டுப் பண்ணைகள், ஆட்டுப் பண்ணைகள், அமெரிக்க இந்திய தனி ஒதுக்கீட்டுப் பகுதிகள், அநேக சிறு பட்டணங்கள், கிராமங்கள் என அனைத்தும் உள்ளடங்கியதுதான் எங்கள் பிராந்தியம். 1941, இளவேனில் காலத்தில் வாஷிங்டனின் வனாச்சியிலுள்ள சபையில் நான் கம்பெனி சர்வன்ட்டாக நியமிக்கப்பட்டேன்.
வாஷிங்டனிலுள்ள வாலா வாலாவில் நடந்த அசெம்பிளிகள் ஒன்றில் நான் அட்டென்டன்ட்டாக அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு இளம் சகோதரர் ஒலிபெருக்கி சாதனங்களை கையாள முடியாமல் திண்டாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். ஆகவே நான் அவர் வேலையையும் அவர் என் வேலையையும் செய்யலாமென ஆலோசனை கொடுத்தேன். மண்டல ஊழியர் ஆல்பர்ட் ஹாஃப்மன் திரும்பிவந்தபோது நான் என் வேலையை விட்டுவிட்டு வேறு வேலை செய்துகொண்டிருந்ததை கவனித்தார். சொல்லப்படும் வரை கொடுக்கப்பட்ட வேலையை தொடர்ந்து செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் புன்முறுவலோடு எனக்கு அன்பாக விளக்கினார். அந்த ஆலோசனை இன்னமும் என் மனதில் பசுமையாக இருக்கிறது.
1941, ஆகஸ்ட் மாதத்தில் யெகோவாவின் சாட்சிகள் மிஸ்சௌரியிலுள்ள செ. லூயிஸில் ஒரு பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்தார்கள். ஹார்ட் தம்பதியினர் தங்கள் பிக்கப் டிரக்கின் பின்புறத்திற்கு கூரை போட்டு, அதில் பெஞ்சுகளை வைத்தார்கள். அந்த டிரக்கில்தான் நாங்கள் ஒன்பது பயனியர்கள் செ. லூயிஸுக்கு 2,400 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தோம். போவதற்கு ஒரு வாரமும் வருவதற்கு ஒரு வாரமும் எடுத்தது. மாநாட்டிற்கு உச்ச எண்ணிக்கையாக 1,15,000 பேர் வந்திருந்ததாக போலீஸார் மதிப்பிட்டார்கள். உண்மையில் அவ்வளவு பேர் வந்திருக்க மாட்டார்கள் என்றாலும் அந்த சமயத்தில் ஐக்கிய மாகாணங்களில் இருந்த கிட்டத்தட்ட 65,000 சாட்சிகளைவிட அதிகமானவர்கள் கண்டிப்பாக வந்திருப்பார்கள். அந்த மாநாடு ஆவிக்குரிய விதத்தில் மிகவும் உற்சாகமளித்தது.
புரூக்ளின் பெத்தேலில் சேவை
வனாச்சிக்கு திரும்பிய பிறகு புரூக்ளின் பெத்தேலுக்கு வரச் சொல்லி எனக்கு ஒரு கடிதம் வந்தது. நான் அக்டோபர் 27, 1941-ல் அங்கு சென்றேன். ஃபாக்டரி கண்காணியாக இருந்த நேதன் எச். நார் அவர்களின் ஆபீஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். பெத்தேலைப் பற்றி அவர் எனக்கு அன்பாக விளக்கினார்; பெத்தேல் வாழ்க்கையில் வெற்றி காண யெகோவாவிடம் நெருங்கியிருப்பது அவசியம் என அவர் வலியுறுத்தினார். பிறகு ஷிப்பிங் டிப்பார்ட்மென்ட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். வெவ்வேறு இடங்களுக்கு அனுப்புவதற்காக பிரசுரங்களை கார்ட்டன்களில் பேக் செய்வதுதான் என் வேலை.
ஜனவரி 8, 1942-ல் யெகோவாவின் சாட்சிகளது உலகளாவிய அமைப்பை தலைமை தாங்கி நடத்திய ஜோசஃப் ரதர்ஃபோர்டு இறந்துவிட்டார். ஐந்து நாட்களுக்குப் பிறகு சங்கத்தின் இயக்குநர்கள் சகோதரர் நார் அவர்களை தேர்ந்தெடுத்தனர். சங்கத்தின் வெகுநாள் செயலர்-கணக்கர் டபிள்யூ. ஈ. வான் ஆம்பர்க் இதை பெத்தேல் குடும்பத்திற்கு அறிவித்தபோது இப்படி சொன்னார்: “சி. டி. ரஸல் [1916-ல்] இறந்த பிறகு ஜே. எஃப். ரதர்ஃபோர்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சமயம் எனக்கு நினைவிருக்கிறது. கர்த்தர் தமது வேலையை தொடர்ந்து வழிநடத்தி ஆசீர்வதித்தார். இப்போது நேதன் எச். நார் அவர்களது தலைமையிலும் இந்த வேலை தொடர்ந்து முன்னேறும் என முழுமையாக நம்புகிறேன். ஏனென்றால் இது கர்த்தருடைய வேலை, மனிதனுடையது அல்ல.”
பிப்ரவரி 1942-ல் “தேவராஜ்ய ஊழியத்தில் மேம்பட்ட பாடத்திட்டம்” ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பைபிள் விஷயங்களின் பேரில் ஆராய்ச்சி செய்வது, தகவல்களை சரியாக ஒழுங்கமைப்பது, திறம்பட அவற்றை அளிப்பது போன்ற அம்சங்களில் திறமையை வளர்த்துக்கொள்ள பெத்தேல் அங்கத்தினர்களை பயிற்றுவிப்பதே அந்தப் பாடத்திட்டத்தின் நோக்கம். மேடைப் பேச்சு கொடுப்பதில் நான் ஏற்கெனவே சிறுவயதில் பயிற்சி பெற்றிருந்ததால் இந்த வகுப்பிலும் வேகமாக முன்னேற முடிந்தது.
கொஞ்ச காலத்திற்குள் சர்வீஸ் டிப்பார்ட்மென்ட்டில் நியமிப்பை பெற்றேன்; அது ஐக்கிய மாகாணங்களிலுள்ள யெகோவாவின் சாட்சிகளது ஊழியத்தை மேற்பார்வை செய்யும் இலாகா. அவ்வருட பிற்பகுதியில், சாட்சிகளது கம்பெனிகளை சந்திக்க ஊழியர்களை பயிற்றுவிக்கும் ஒரு திட்டத்தை மீண்டும் தொடங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. ‘சகோதரர்களுக்கு ஊழியர்’ எனப்பட்ட அந்தப் பயண ஊழியர்கள் காலப்போக்கில் வட்டாரக் கண்காணிகள் என்று அழைக்கப்படலாயினர். 1942 கோடை காலத்தில், இந்த ஊழியத்திற்காக சகோதரர்களை பயிற்றுவிக்கும் ஒரு பயிற்சித் திட்டம் பெத்தேலில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தப் பயிற்சியைப் பெறும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அதன் ஆசிரியர்களில் ஒருவரான சகோதரர் நார் இந்தக் குறிப்பை வலியுறுத்தியது விசேஷமாக என் நினைவில் இருக்கிறது: “மனிதர்களை பிரியப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். ஒருவரையுமே உங்களால் பிரியப்படுத்த முடியாமல் போய்விடும். ஆனால் யெகோவாவை பிரியப்படுத்துங்கள். அப்போது யெகோவாவை நேசிக்கும் அனைவரையும் உங்களால் பிரியப்படுத்த முடியும்.”
1942, அக்டோபரில் பயண ஊழியம் ஆரம்பமானது. பெத்தேலில் இருந்த எங்களில் சிலர் வாரயிறுதி நாட்கள் சிலவற்றில் அந்த ஊழியம் செய்தோம். அதற்காக நியு யார்க் நகரைச் சுற்றி 400 கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்த சபைகளை போய் சந்தித்தோம். சபையின் பிரசங்க ஊழிய நடவடிக்கைகளையும் கூட்டங்களுக்கு ஆஜராகியிருந்தோரின் எண்ணிக்கையையும் பற்றிய அறிக்கைகளை பார்வையிட்டோம், சபை பொறுப்புகளை கவனித்து வந்தவர்களோடு கூட்டம் நடத்தினோம், ஓரிரு பேச்சுக்களைக் கொடுத்தோம், உள்ளூர் சாட்சிகளோடு ஊழியம் செய்தோம்.
1944-ல், சர்வீஸ் டிப்பார்ட்மென்ட்டிலிருந்து பயண ஊழியத்திற்காக ஆறு மாதங்களுக்கு அனுப்பப்பட்டவர்களில் நானும் ஒருவன். டிலாவர், மேரிலாந்து, பென்ஸில்வேனியா, வர்ஜீனியா போன்ற மாநிலங்களில் சேவை செய்தேன். பிற்பாடு சில மாதங்களுக்கு கனெடிகட், மாஸசூஸெட்ஸ், ரோட் தீவு ஆகிய இடங்களிலிருந்த சபைகளுக்கு விஜயம் செய்தேன். பெத்தேலுக்கு திரும்பியவுடன் சகோதரர் நார் மற்றும் அவரது செயலர் மில்டன் ஹென்ஷலின் ஆபீஸில் பகுதி நேர வேலை செய்தேன். அப்போதுதான் நம் உலகளாவிய ஊழியத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொண்டேன். டபிள்யூ. ஈ. வான் ஆம்பர்க், அவரது உதவியாளர் க்ரான்ட் சூட்டர் ஆகியோரின் தலைமையில் கணக்கர் அலுவலகத்திலும் பகுதி நேர வேலை செய்தேன். பிறகு 1946-ல் பெத்தேலிலிருந்த நிறைய ஆபீஸுகளை மேற்பார்வை செய்யும் பணியில் நியமிக்கப்பட்டேன்.
வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்
1945-ல் நான் சபைகளை விஜயம் செய்து வந்தபோது ரோட் தீவிலுள்ள ப்ராவிடன்ஸ் நகரில் ஜூல்யா ச்சார்நாஸ்கஸ் என்ற சகோதரியோடு பழக்கம் ஏற்பட்டது. 1947-ன் மத்திபத்தில் நாங்கள் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்தோம். பெத்தேல் சேவையை நான் மிகவும் நேசித்தேன்; ஆனாலும் பெத்தேலில் இல்லாத சகோதரியை திருமணம் செய்துகொண்டு தொடர்ந்து அங்கு சேவை செய்ய அப்போது அனுமதி இல்லை. ஆகவே 1948 ஜனவரியில் பெத்தேல் சேவையை விட்டுவிட்டு ஜூல்யாவை (ஜூலி) மணம் முடித்தேன். ப்ராவிடன்ஸ் நகரில் ஒரு சூப்பர்மார்க்கெட்டில் எனக்கு பகுதி நேர வேலை கிடைத்தது; நானும் ஜூலியும் சேர்ந்து பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம்.
செப்டம்பர் 1949-ல் வடமேற்கு விஸ்கான்ஸினில் வட்டார ஊழியம் செய்ய எனக்கு அழைப்பு வந்தது. பால் பண்ணைகள் ஏராளமாக உள்ள, பெரும்பாலும் சிறு பட்டணங்களும் கிராமங்களும் நிறைந்த பிராந்தியத்தில் பிரசங்கிப்பது ஜூலிக்கும் எனக்கும் மிக வித்தியாசமான அனுபவமாக இருந்தது. குளிர்காலம் நீண்டதாக, கடுங்குளிரானதாக இருந்தது; அநேக வாரங்களுக்கு வெப்பநிலை -20 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக இருந்தது, எங்கும் ஒரே பனி மயம். அப்போது எங்களிடம் கார் இல்லை. ஆனால் எப்படியும் யாராவது எங்களை ஒரு சபையிலிருந்து மற்றொரு சபைக்கு அழைத்துச் சென்றுவிடுவார்கள்.
நான் வட்டார ஊழியத்தை ஆரம்பித்து கொஞ்ச காலத்திற்குள் ஒரு வட்டார மாநாடு நடந்தது. எல்லா வேலைகளும் சரியாக நடக்கிறதா என்று நான் மிக உன்னிப்பாக போய் பார்த்தேன். இதனால் சிலர் சற்று பயந்துவிட்டார்கள். ஆகவே, உள்ளூர் சகோதரர்கள் அவர்களுக்கே உரிய முறையில் எல்லா வேலைகளையும் கவனிப்பார்கள் என்பதால் நான் அந்தளவு தலையிட வேண்டியதில்லை என மாவட்டக் கண்காணியான நிக்கலஸ் கோவலாக் என்னிடம் அன்பாக விளக்கினார். அந்த ஆலோசனை, அநேக நியமிப்புகளை கையாளுவதில் இன்று வரை எனக்கு கைகொடுத்திருக்கிறது.
1950-ல் நான் ஒரு தற்காலிக நியமிப்பைப் பெற்றேன்; நியு யார்க் நகர யாங்கி ஸ்டேடியத்தில் முதன்முதலாக நடக்கவிருந்த பெரிய மாநாட்டிற்கு வரவிருந்த பிரதிநிதிகளுக்கு தங்கும் வசதி செய்து கொடுப்பதே அந்த நியமிப்பு. அந்த மாநாடு ஆரம்பத்திலிருந்து கடைசிவரை மெய்சிலிர்க்க வைத்தது; 67 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள், கூடியிருந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 1,23,707! மாநாட்டிற்குப் பிறகு ஜூலியும் நானும் மறுபடியுமாக பயண ஊழியத்தில் ஈடுபட்டோம். அந்த வட்டார ஊழியம் எங்களுக்கு பிடித்திருந்தது. இருந்தாலும் மற்ற வகையான முழுநேர ஊழியங்களில் ஈடுபடவும் விரும்பினோம். ஆகவே ஒவ்வொரு வருடமும் பெத்தேல் சேவைக்கும் மிஷனரி சேவைக்கும் விண்ணப்பங்கள் அனுப்பினோம். 1952-ல் உவாட்ச்டவர் பைபிள் கிலியட் பள்ளியின் 20-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைப்பை பெற்றபோது பூரிப்படைந்தோம். மிஷனரி சேவைக்கான பயிற்சியை அங்கே பெற்றோம்.
வெளிநாட்டில் சேவை
1953-ல் பட்டம் பெற்ற பிறகு, நாங்கள் பிரிட்டனில் நியமிப்பைப் பெற்றோம். அங்கு இங்கிலாந்திற்கு தெற்கே மாவட்ட கண்காணியாக ஊழியம் செய்தேன். ஜூலியும் நானும் அந்த ஊழியத்தை மிகவும் அனுபவித்து மகிழ்ந்தோம். ஆனால் ஒரு வருடம் ஆவதற்கு முன்பாகவே டென்மார்க் செல்லும்படி புதிய நியமிப்பைப் பெற்றபோது மிகவும் ஆச்சரியமடைந்தோம். டென்மார்க் கிளை அலுவலகத்தை கண்காணிக்க புதிதாக ஒருவர் தேவைப்பட்டார். நான் பக்கத்திலேயே இங்கிலாந்தில் இருந்ததாலும், அப்படிப்பட்ட வேலைக்காக புரூக்ளினில் ஏற்கெனவே பயிற்சி பெற்றிருந்ததாலும் அங்கு போய் உதவி செய்யும்படி அனுப்பப்பட்டேன். நாங்கள் ஃபெர்ரி படகில் நெதர்லாந்திற்கு சென்று, அங்கிருந்து ரயிலில் டென்மார்க்கிலுள்ள கோபன்ஹாகனுக்கு போனோம். ஆகஸ்ட் 9, 1954-ல் அங்கு போய் சேர்ந்தோம்.
பொறுப்புள்ள ஸ்தானங்களில் இருந்த சில சகோதரர்கள் புரூக்ளின் தலைமையகத்திலிருந்து வந்த ஆலோசனைகளை ஏற்க மறுத்தது ஒரு பிரச்சினையாக இருந்தது. அதோடு, நம் பிரசுரங்களை டேனிஷ் மொழிக்கு மொழிபெயர்த்து வந்த நான்கு பேரில் மூவர் பெத்தேலை விட்டு போய்விட்டார்கள்; இறுதியில் அவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொள்வதையே நிறுத்திவிட்டார்கள். ஆனால் யெகோவா எங்கள் ஜெபங்களைக் கேட்டார். மொழிபெயர்ப்பு வேலையை பகுதி நேரமாக முன்பு செய்திருந்த இரண்டு பயனியர்களான யார்ன் மற்றும் ஆன்னா லார்ஸன் அவ்வேலையை முழுநேரமாக செய்ய முன்வந்தார்கள். இவ்வாறு பத்திரிகைகள் ஒரு இதழ்கூட தவறாமல் தொடர்ந்து டேனிஷ் மொழியில் பிரசுரமாகி வந்தன. அந்தப் பயனியர் தம்பதியினர் இன்னமும் டென்மார்க் பெத்தேலில் இருக்கிறார்கள். யார்ன், கிளை அலுவலகக் குழுவின் ஒத்திசைவிப்பவராக பணியாற்றி வருகிறார்.
அந்த ஆரம்பக் கட்டத்தில் சகோதரர் நார் எங்களை தவறாமல் வந்து சந்தித்தது உற்சாகத்தின் ஊற்றாக இருந்தது. அவர் நேரமெடுத்து எங்களோடு உட்கார்ந்து பேசி, அனுபவங்களை பகிர்ந்துகொள்வார்; பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என புரிந்துகொள்ள அவை உதவின. ஒருமுறை 1955-ல் அவர் எங்களை சந்தித்தபோது அச்சக வசதிகளோடு ஒரு புதிய கிளை அலுவலகத்தைக் கட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. டென்மார்க்கிற்கு தேவையான பத்திரிகைகளை நாங்களே தயாரிக்க அவ்வாறு திட்டமிடப்பட்டது. கோபன்ஹாகனின் வடக்கே இருந்த புறநகர்ப் பகுதியில் நிலம் வாங்கப்பட்டது. 1957 கோடை காலத்திற்குள் புதிய கட்டிடத்தில் நாங்கள் குடிபுகுந்தோம். அச்சு இயந்திரங்களை நிறுவுவதிலும் இயக்குவதிலும் சகோதரர் ஹாரி ஜான்சன் உதவினார்; அவரும் அவரது மனைவி காரினும் கிலியட் பள்ளியின் 26-ஆம் வகுப்பில் படித்துவிட்டு அப்போதுதான் டென்மார்க் வந்திருந்தார்கள்.
டென்மார்க்கில் பெரிய மாநாடுகளை நடத்த நாங்கள் இன்னும் திறம்பட ஒழுங்கமைக்கப்பட்டோம். ஐக்கிய மாகாணங்களில் மாநாடுகளை ஏற்பாடு செய்வதில் பெற்றிருந்த அனுபவம் இப்போது எனக்கு உதவியாக இருந்தது. 1961-ல் கோபன்ஹாகனில் நடந்த பெரிய சர்வதேச மாநாட்டிற்கு 30-க்கும் அதிகமான நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். கூடிவந்திருந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 33,513-ஆக இருந்தது. 1969-ல் ஸ்கான்டிநேவியாவில் அதுவரை நடந்தவற்றிலேயே மிகப் பெரிய மாநாட்டை ஏற்பாடு செய்தோம். அதற்கு வந்திருந்தவர்களின் உச்ச எண்ணிக்கை 42,073!
1963-ல் கிலியட் பள்ளியின் 38-வது வகுப்பில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டேன். இது, முக்கியமாக கிளை அலுவலக உறுப்பினர்களை பயிற்றுவிப்பதற்காகவே சற்று மாற்றியமைக்கப்பட்ட விசேஷ பத்து-மாத பயிற்சி. மறுபடியும் புரூக்ளின் பெத்தேல் குடும்பத்தோடு ஒன்றுசேருவதும், தலைமையக வேலைகளை பல ஆண்டுகளாக கவனித்து வந்திருந்தோரின் அனுபவத்திலிருந்து நன்மையடைவதும் மிகுந்த சந்தோஷமளித்தது.
அந்தப் பயிற்சிக்குப் பின்பு, மறுபடியும் டென்மார்க்கிற்கு திரும்பி என் பொறுப்புகளை கவனிக்க ஆரம்பித்தேன். அதோடு மண்டலக் கண்காணியாக சேவிக்கும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. மேற்கு மற்றும் வட ஐரோப்பாவிலுள்ள கிளை அலுவலகங்களை சந்தித்து அங்கிருந்த உறுப்பினர்களை உற்சாகப்படுத்தி தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உதவினேன். சமீப காலத்தில் மேற்கு ஆப்பிரிக்காவிலும் கரிபியனிலும் மண்டலக் கண்காணியாக சேவித்தேன்.
1970-களின் பிற்பகுதியில், மொழிபெயர்ப்பு மற்றும் அச்சு வேலைகளை விஸ்தரிப்பதற்கு பெரிய கிளை அலுவலகத்தை கட்ட டென்மார்க்கிலிருந்த சகோதரர்கள் இடம் தேட ஆரம்பித்தார்கள். கோபன்ஹாகனின் மேற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் ஒரு நல்ல இடம் கிடைத்தது. அங்கே புதிய கிளை அலுவலகத்தை கட்டுவது சம்பந்தமாக திட்டங்கள் போடுவதிலும் வடிவமைப்பதிலும் மற்றவர்களோடு சேர்ந்து வேலை செய்தேன். அந்தப் புதிய கட்டடத்தில் பெத்தேல் குடும்பத்தினரோடு சேர்ந்து வசிக்கப் போகும் காலத்தை ஜூலியும் நானும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தோம். ஆனால் எங்கள் ஆசை நிறைவேறவில்லை.
மீண்டும் புரூக்ளினுக்கு
நவம்பர் 1980-ல் புரூக்ளின் பெத்தேலில் சேவை செய்ய ஜூலியும் நானும் அழைக்கப்பட்டோம்; நாங்கள் 1981, ஜனவரி மாத ஆரம்பத்தில் அங்கு போய் சேர்ந்தோம். அப்போது எங்களுக்கு சுமார் 60 வயது. கிட்டத்தட்ட பாதி வாழ்நாள் காலத்தை டென்மார்க்கிலிருந்த எங்கள் அருமையான சகோதர சகோதரிகளோடு செலவிட்ட பிறகு மறுபடியும் ஐக்கிய மாகாணங்களுக்கு திரும்புவது எங்களுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் எங்களுக்கு பிடித்தமான இடத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காமல், செய்து முடிக்க வேண்டிய நியமிப்புகளின் பேரிலும் அதனால் சந்திக்கவிருந்த சவால்களின் பேரிலும் கவனத்தை ஒருமுகப்படுத்த ஆரம்பித்தோம்.
நாங்கள் புரூக்ளின் சென்று செட்டில் ஆனோம். ஜூலி அக்கௌன்ட்ஸ் ஆபீஸில் வேலை செய்ய வேண்டியிருந்தது; டென்மார்க்கிலும் அதே வேலையைத்தான் அவள் செய்திருந்தாள். நானோ ரைட்டிங் டிப்பார்ட்மென்ட்டில் வேலை செய்து, பிரசுரங்களை தயாரிப்பதற்கு தேவையான அட்டவணையை போடுவதில் உதவ வேண்டியிருந்தது. 1980-களின் ஆரம்பத்தில் புரூக்ளினில் நடந்த வேலைகளில் மாற்றம் செய்யப்பட்டது; டைப்ரைட்டர்களுக்கும் காய்ச்சிய ஈயத்தை பயன்படுத்தி அச்சுக்கோர்க்கும் முறைகளுக்கும் பதிலாக, கம்ப்யூட்டர் செயல்முறைகளும் ஆஃப்செட் ப்ரின்ட்டிங்கும் துவங்கப்பட்டது. அப்போது எனக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாது, ஆனால் அமைப்பு சம்பந்தப்பட்ட செயல்முறைகளைப் பற்றியும் ஆட்களோடு வேலை செய்யும் விதத்தைப் பற்றியும் கொஞ்சம் அறிந்து வைத்திருந்தேன்.
கொஞ்ச நாளிலேயே ஆர்ட் டிப்பார்ட்மென்ட்டை நன்கு ஒழுங்கமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது; ஏனென்றால் ஆஃப்செட் கலர் ப்ரின்ட்டிங் செய்ய ஆரம்பித்தோம்; அதற்காக கலர் படங்களும் ஃபோட்டோக்களும் பயன்படுத்தப்பட்டன. ஒரு கலைஞராக எனக்கு எந்த அனுபவமும் இருக்கவில்லை என்றாலும் ஒழுங்கமைக்கும் வேலைகளை என்னால் செய்ய முடிந்தது. ஆகவே அந்த டிப்பார்ட்மென்ட்டை கண்காணிக்கும் பொறுப்பை ஒன்பது வருடங்கள் ஏற்று நடத்தினேன்.
1992-ல் ஆளும் குழுவின் பிரசுரிக்கும் கமிட்டியில் உதவி புரிய நியமிக்கப்பட்டேன்; அதன் பிறகு கணக்கர் அலுவலகத்திற்கு வேலை மாற்றம் செய்யப்பட்டேன். இங்கே யெகோவாவின் சாட்சிகளது நிதி சம்பந்தமான வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
இளவயது முதல் சேவை
இளவயதிலும் சரி, 70 ஆண்டுகளாக நான் யெகோவாவிற்கு சேவை செய்திருக்கும் காலத்திலும் சரி அவர் தமது வார்த்தையாகிய பைபிள் மூலமாகவும் தமது அருமையான அமைப்பிலுள்ள உதாரகுணம் படைத்த சகோதரர்கள் மூலமாகவும் எனக்கு பொறுமையோடு கற்பித்திருக்கிறார். நான் 63 ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர ஊழியத்தை அனுபவித்து மகிழ்ந்திருக்கிறேன்; அதில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக விசுவாசமுள்ள என் மனைவி ஜூலியோடு சேர்ந்து ஊழியம் செய்திருக்கிறேன். யெகோவா என்னை அபரிமிதமாக ஆசீர்வதித்திருக்கிறார் என உள்ளப்பூர்வமாக உணருகிறேன்.
1940-ல் பயனியர் சேவைக்காக நான் வீட்டை விட்டு கிளம்பியபோது என் அப்பா கேலியாக இப்படி சொன்னார்: “இங்க பாருப்பா, இதுக்காக நீ வீட்டை விட்டு கிளம்பிய பிறகு, எந்த உதவிக்கும் இங்க ஓடி வரலாம்னு மட்டும் நினைக்காதே.” இத்தனை ஆண்டுகளாக அப்படிப்பட்ட ஒரு நிலை எனக்கு வந்ததே இல்லை. யெகோவா எனக்குத் தேவையான எல்லாவற்றையும் தாராளமாக அள்ளித் தந்து ஆசீர்வதித்திருக்கிறார்; உதாரகுணம் படைத்த உடன் கிறிஸ்தவர்கள் மூலமாக பெரும்பாலும் அதை செய்திருக்கிறார். பிற்பாடு என் அப்பாவும் ஊழியத்திற்கு மரியாதை காட்ட ஆரம்பித்தார்; 1972-ல் இறப்பதற்கு முன்பாக பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்வதில் சற்று முன்னேறவும் செய்தார். பரலோக நம்பிக்கை பெற்றிருந்த என் அம்மா 1985-ல் தனது 102-வது வயதில் இறக்கும் வரை யெகோவாவை உண்மையோடு சேவித்தார்.
முழுநேர ஊழியத்தில் பிரச்சினைகள் வருவதுண்டு என்றாலும் அதை விட்டுவிட வேண்டுமென்று ஜூலியும் நானும் ஒருபோதும் நினைத்ததில்லை. இந்தத் தீர்மானத்தில் உறுதியாயிருக்க யெகோவா எப்போதும் எங்களுக்கு உதவியிருக்கிறார். என் பெற்றோருக்கு வயதாகி உதவி தேவைப்பட்ட சமயத்தில்கூட என் அக்கா விக்டோரியா மார்லன் முன்வந்து அவர்களை நன்கு கவனித்துக்கொண்டார். அவர் செய்த அன்பான உதவியால்தான் எங்களால் முழுநேர ஊழியத்தை தொடர்ந்து செய்ய முடிந்திருக்கிறது; ஆகவே அதற்கு நாங்கள் ஆழ்ந்த நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
எல்லா நியமிப்புகளிலும் ஜூலி எனக்கு பக்கபலமாக இருந்துவந்திருக்கிறாள்; யெகோவாவிற்கு தன்னையே ஒப்புக்கொடுத்திருப்பதில் அதுவும் உட்பட்டிருப்பதாக கருதுகிறாள். இப்போது எனக்கு 80 வயதாகிவிட்டது, உடல்நலப் பிரச்சினைகளும் இருக்கின்றன; இருந்தாலும் யெகோவா என்னை அபரிமிதமாக ஆசீர்வதித்திருப்பதாக உணருகிறேன். சங்கீதக்காரனின் வார்த்தைகள் எனக்கு மிகுந்த உற்சாகமளிக்கின்றன; சிறுவயது முதல் கடவுள் தனக்கு போதித்து வந்திருப்பதைப் பற்றி சொன்ன பிறகு அவர் இவ்வாறு மன்றாடினார்: ‘இப்பொழுது தேவனே, வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தை நான் அறிவிக்குமளவும், முதிர்வயது வரைக்கும் என்னைக் கைவிடீராக.’—சங்கீதம் 71:17, 18.
[அடிக்குறிப்பு]
a யெகோவாவின் சாட்சிகளது ஆளும் குழு அங்கத்தினராக பல வருடங்கள் சேவை செய்த மில்டன் ஹென்ஷலின் அண்ணன்தான் வாரன்.
[பக்கம் 20-ன் படம்]
1940-ல் பயனியர் சேவையை ஆரம்பித்தபோது, அம்மாவுடன்
[பக்கம் 21-ன் படம்]
என்னோடு பயனியர் செய்த ஜோ மற்றும் மார்கரட் ஹார்ட் தம்பதியினருடன்
[பக்கம் 23-ன் படம்]
ஜனவரி 1948-ல் எங்கள் திருமண நாளின்போது
[பக்கம் 23-ன் படம்]
1953-ல், கிலியட் பள்ளியில் சக மாணவர்களோடு. இடமிருந்து வலம்: டான் மற்றும் வர்ஜினியா வார்ட், ஹேர்டூடா ஸ்டேஹங்கா, ஜூலி, நான்
[பக்கம் 23-ன் படம்]
1961, டென்மார்க், கோபன்ஹாகனில் ஃப்ரெட்ரிக் டபிள்யூ. ஃப்ரான்ஸ், நேதன் எச். நார் ஆகியோருடன்
[பக்கம் 25-ன் படம்]
இன்று ஜூலியுடன்