வாழ்க்கை சரிதை
யெகோவாவின் சேவையில் ஐசுவரியமிக்க வாழ்க்கை
ரசல் கர்ஸன் சொன்னபடி
முதல் உலகப் போர் மூண்டதுடன் ஆரம்பித்த குறிப்பிடத்தக்க சகாப்தத்திற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, செப்டம்பர் 22, 1907-ல் நான் பிறந்தேன். எங்கள் குடும்பம் மிக முக்கியமான விதத்தில் ஐசுவரியமானதாய் இருந்தது. எங்கள் குடும்ப வரலாற்றின் ஒரு சில விவரத்தைக் கேட்ட பிறகு நீங்களே இதை ஒத்துக்கொள்வீர்கள்.
என்னுடைய கர்ஸன் பாட்டியம்மா சிறுமியாய் இருந்தபோது, கடவுளைப் பற்றிய உண்மையை ஏற்கெனவே தேடிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் பருவ வயதை எட்டும் முன்பே தான் பிறந்த ஊராகிய ஸ்விட்ஸர்லாந்திலுள்ள கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகிய ஸ்பீட்ஸ் நகரில் இருந்த வெவ்வேறு சர்ச்சுக்குப் போய்வந்தார்கள். அவர்களுக்குத் திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு 1887-ல், ஐக்கிய மாகாணங்களில் குடியேறினவர்களுடன் கர்ஸன் குடும்பத்தினரும் சேர்ந்துகொண்டனர்.
இந்தக் குடும்பத்தார் ஒஹாயோவில் குடியேறினர். அங்கு 1900-ம் ஆண்டு வாக்கில் தான் தேடிக்கொண்டிருந்த பொக்கிஷத்தை பாட்டியம்மா கண்டுபிடித்தார்கள். அதை, காலம் சமீபம் என்ற தலைப்பில் ஜெர்மன் மொழியிலிருந்த சார்ல்ஸ் டேஸ் ரசலின் புத்தகத்தில் கண்டுபிடித்தார்கள். அவர்கள் வாசித்தவற்றில் பைபிள் சத்திய ஒளி பளிச்சிட்டதை விரைவிலேயே கண்டுகொண்டார்கள். பாட்டியம்மாவுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வாசிக்க வராது; இருந்தாலும் ஆங்கில மொழி காவற்கோபுரம் பத்திரிகைக்கு சந்தா செய்தார்கள். இவ்வாறு பைபிள் சத்தியங்களை அதிகமதிகமாக கற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஆங்கில மொழியையும் சேர்த்து கற்றுக்கொண்டார்கள். ஆன்மீகத்தில் பாட்டியம்மாவிற்கு இருந்த அதே ஈடுபாடு தாத்தாவுக்கு இருக்கவில்லை.
பாட்டியம்மாவுக்கு 11 பிள்ளைகள்; மகன்களில் இருவரான ஜானும் அடால்ஃப்பும் பாட்டியம்மா கண்டுபிடித்திருந்த ஆன்மீக பொக்கிஷத்தை பெரிதும் போற்றினார்கள். ஜான் தான் என் அப்பா; அவர், மிஸ்ஸௌரி மாகாணத்தில் செ. லூயியில், 1904-ல் முன்பு பைபிள் மாணாக்கர்கள் என அறியப்பட்ட யெகோவாவின் சாட்சிகள் நடத்திய மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார். பெரும்பாலான பைபிள் மாணாக்கர்கள் வசதியானவர்களாக இல்லாததால், குறைந்த ரயில் கட்டண சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அம்மாநாடு செ. லூயியில் உலக கண்காட்சி நடத்தப்பட்ட அதே சமயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர் என் சித்தப்பா அடால்ஃப் 1907-ல், நியூ யார்க், நயாகரா ஃபால்ஸில் நடத்தப்பட்ட மாநாட்டில் முழுக்காட்டுதல் பெற்றார். என் அப்பாவும் சித்தப்பாவும் பைபிளில் தாங்கள் கற்றுக்கொண்டவற்றை ஆர்வத்துடன் பிரசங்கித்தார்கள்; கடைசியில் இருவரும் (இப்போது பயனியர்கள் என அழைக்கப்படும்) முழுநேர ஊழியர்கள் ஆனார்கள்.
எனவே 1907-ல் நான் பிறந்த சமயத்தில் ஏற்கெனவே என் குடும்பம் ஆவிக்குரிய விதத்தில் ஐசுவரியமானதாய் இருந்தது. (நீதிமொழிகள் 10:22) என் பெற்றோர் ஜானும் ஐடாவும் ஒஹாயோவிலுள்ள புட்டின் விரிகுடாவில் நடந்த “வெற்றியை நோக்கி” என்ற ஆங்கில மாநாட்டிற்கு 1908-ல் என்னை தூக்கிச் சென்றபோது நான் கைக்குழந்தை. அப்போது ஒரு பயண ஊழியராக இருந்த ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு அம்மாநாட்டின் சேர்மனாய் இருந்தார். அதற்கு சில வாரங்களுக்கு முன்பு, அவர் ஒஹாயோவிலுள்ள டால்டன் நகருக்குச் சென்றிருந்தார்; அங்கு எங்கள் வீட்டிற்கும் வந்து, உள்ளூர் பைபிள் மாணாக்கருக்கென பேச்சுக்களையும் கொடுத்தார்.
அவையெல்லாம் எனக்கு நினைவில்லை; ஆனால், 1911-ல் மேரிலாந்து, மௌண்டன் லேக் பார்க் நகரில் நடந்த மாநாடு எனக்கு நினைவிருக்கிறது. அங்கு நானும் என் தங்கை எஸ்தரும் சார்ல்ஸ் டேஸ் ரசலை சந்தித்தோம்; அவர் பைபிள் மாணாக்கர்களின் உலகளாவிய பிரசங்க வேலைகளை கண்காணித்து வந்தார்.
சரஜெவோவில் இளவரசர் பெர்டினான்ட்டும் அவர் மனைவியும் படுகொலை செய்யப்பட்டதால் உலகமே போர்க்களத்தில் குதித்த நாளான 1914, ஜூன் 28-ல் கொலம்பஸ், ஒஹாயோவில் அமைதியாக நடந்த மாநாட்டிற்கு என் குடும்பத்தினருடன் சென்றுவந்தேன். அந்தச் சிறுவயது முதற்கொண்டே யெகோவாவின் ஜனங்களுடைய அநேக மாநாடுகளுக்கு செல்லும் ஒப்பற்ற வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. அவற்றில் சில கிட்டத்தட்ட நூறு பேர் மட்டுமே கூடிவந்த மாநாடுகள். மற்றவையோ உலகின் மிகப் பெரிய அரங்குகள் சிலவற்றில் நடத்தப்பட்ட மாபெரும் மாநாடுகள்.
பொருத்தமான இடத்தில் எங்கள் வீடு
டால்டனிலிருந்த எங்கள் வீடு, பிட்ஸ்பர்க், பென்ஸில்வேனியாவுக்கும் கிளீவ்லாண்டு, ஒஹாயோவுக்கும் இடையே அமைந்திருந்தது; 1908-ம் ஆண்டு வாக்கிலிருந்து 1918 வரை, கொஞ்சம் பேர் மட்டுமே அடங்கிய பைபிள் மாணாக்கர்களின் சபை கூட்டங்கள் எங்கள் வீட்டிலேயே நடத்தப்பட்டன. எங்கள் வீடு, அநேக பயண பேச்சாளர்களை உபசரிக்கும் மையமாக விளங்கியது. எங்கள் களஞ்சியத்திற்குப் பின்னாலுள்ள இடத்தில் அவர்களுடைய குதிரை வண்டிகளை நிறுத்தி, குதிரைகளை கட்டிப்போட்டுவிட்டு, அங்கு கூடிவந்தவர்களிடம் சுவாரஸியமான அனுபவங்களையும் ஆவிக்குரிய சத்தியங்களையும் பகிர்ந்துகொண்டார்கள். அந்த சந்தர்ப்பங்கள்தான் எவ்வளவாய் ஊக்கமூட்டின!
அப்பா பள்ளி ஆசிரியராய் இருந்தார்; ஆனால் அவர் நினைவெல்லாம் மிகச் சிறந்த போதனையளிக்கும் வேலையாகிய கிறிஸ்தவ ஊழியத்தின்மீதே இருந்தது. தன் குடும்பத்தினருக்கு யெகோவாவைப் பற்றி கற்பிப்பதில் அவர் கவனமாய் இருந்தார்; ஒவ்வொரு நாள் மாலையும் நாங்கள் குடும்பமாக ஜெபம் செய்தோம். பிரசங்க வேலையில் அநேகரை சென்று சந்திப்பதற்காக 1919-ம் வருட வசந்தகாலத்தில், எங்கள் குதிரையையும் குதிரை வண்டியையும் விற்றுவிட்டு, 1914 மாடல் ஃபோர்ட் காரை 175 டாலருக்கு அப்பா வாங்கினார். 1919-திலும் 1922-டிலும் அந்தக் காரில்தான் சீடர் பாய்ண்ட், ஒஹாயோவில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க மாநாடுகளுக்கு சென்றுவந்தோம்.
எங்கள் குடும்பத்தார் அனைவருமே—நான், அம்மா, அப்பா, எஸ்தர், என் தம்பி ஜான் ஆகியோர்—வெளி ஊழியத்தில் கலந்துகொண்டோம். ஒரு வீட்டுக்காரர் முதன்முறையாக என்னிடம் பைபிள் கேள்வி ஒன்றை கேட்டது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அப்போது எனக்கு கிட்டத்தட்ட ஏழு வயதிருக்கும். “குட்டிப்பையா, அர்மகெதோனுன்னா என்ன?” என்று அவர் கேட்டார். அப்பா சற்று தொடக்கிவிடவே, பைபிளிலிருந்து அவருக்கு பதிலளிக்க என்னால் முடிந்தது.
முழுநேர ஊழியத்தில் கால் பதித்தல்
1931-ல் கொலம்பஸ், ஒஹாயோவில் நடந்த மாநாட்டில் எங்கள் குடும்பம் கலந்துகொண்டது; அங்கு யெகோவாவின் சாட்சிகள் என்ற புதிய பெயரை ஏற்றுக்கொண்டபோது பரவசமடைந்தோம். ஜானுக்கு அந்தளவுக்கு உற்சாகம் பொங்கியதால் அவனும் நானும் பயனியர் ஊழியத்தில் கால்பதிக்க வேண்டுமென விரும்பினான்.a அவ்வாறே நாங்கள் பயனியர்களானோம்; பிறகு அப்பாவும், அம்மாவும் எஸ்தரும்கூட பயனியர்களாயினர். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிக்கும் மகிழ்ச்சியான வேலையில் ஒற்றுமையுடன் ஈடுபட்ட ஒரு குடும்பம்—என்னே ஒரு பொக்கிஷம்! யெகோவா தந்த இந்த ஆசீர்வாதத்திற்காக அவருக்கு சலிக்காமல் நன்றி தெரிவிக்கிறேன். நாங்கள் ஏற்கெனவே சந்தோஷமாகத்தான் இருந்தோம்; இன்னும் அதிக சந்தோஷமும் எங்களுக்கு காத்திருந்தது.
பிப்ரவரி 1934-ல், புரூக்லின், நியூ யார்க்கிலுள்ள (பெத்தேல் என்று அழைக்கப்பட்ட) யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தில் சேவை செய்ய ஆரம்பித்தேன். சில வாரங்களுக்குப் பின்பு ஜான் என்னோடு சேர்ந்துகொண்டான். 1953-ல் தன் அருமை மனைவி ஜெஸீயை அவன் திருமணம் செய்தவரை நாங்கள் ஒரே அறையில்தான் தங்கினோம்.
நானும் ஜானும் பெத்தேலுக்கு போன பிறகு, எங்கள் பெற்றோர் பயனியர் நியமனம் பெற்று அந்நாட்டில் பல இடங்களுக்குச் சென்றனர்; அவர்கள் போகும் இடங்களுக்கெல்லாம் எஸ்தரும் அவள் கணவர் ஜார்ஜ் ரீட்டும் சென்றனர். எங்கள் பெற்றோர் 1963-ல் தங்கள் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும் வரை பயனியர் ஊழியத்தில் நிலைத்திருந்தனர். எஸ்தரும் அவள் கணவரும் அருமையான குடும்ப வாழ்க்கையை நடத்தினர்; அதனால் தங்கை வழியில் எனக்கு ஏராளமான குட்டிப்பிள்ளைகள் ஆசீர்வாதமாக கிடைத்தனர்; அவர்கள்மீது எனக்கு கொள்ளைப் பிரியம்.
பெத்தேல் வேலையும் கூட்டுறவும்
தொழில்துறையில் தனக்கிருந்த திறமைகளையெல்லாம் ஜான் பெத்தேலில் பயன்படுத்தினான்; அவற்றில், கையடக்கமான போனோகிராஃப்புகளை தயாரிப்பது போன்ற பெரிய வேலைகளும் அடங்கும். ஆயிரக்கணக்கான யெகோவாவின் சாட்சிகள் இவற்றை வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பயன்படுத்தினர். சந்தாதாரர்களுக்கு அனுப்பப்படும் பத்திரிகைகளை ராப்பிங் மற்றும் லேபலிங் செய்வதற்கான கருவிகளை வடிவமைத்து உருவாக்குவதிலும் ஜான் உதவினான்.
பெத்தேலில் நான் முதன்முதல் புக் பைண்டிங்கில் வேலை செய்தேன். அச்சமயத்தில் மற்ற இளைஞர்களும் ஃபாக்டரியில் வேலை பார்த்தனர்; அவர்கள் இன்னும் பெத்தேலில் உண்மையுடன் சேவை செய்து வருகின்றனர். அவர்களில் கேரி பார்பர், ராபர்ட் ஹாட்ஸ்ஃபெல்ட் ஆகியோரும் அடங்குவர். நான் பிரியத்துடன் நினைத்துப் பார்க்கும் இதுபோன்ற மற்றவர்கள், நேதன் நார், கார்ல் க்ளைன், லைமன் ஸ்விங்கிள், க்ளாவ்ஸ் ஜென்ஸன், கிரான்ட் சூட்டர், ஜார்ஜ் கேங்கஸ், ஆரன் ஹிப்பர்ட், ஜான் ஸீயாரஸ், ராபர்ட் பேன், சார்ல்ஸ் ஃபெக்கல், பென்னோ புர்சிக், ஜான் பெர்ரி ஆகியோராவர்; இவர்கள் இப்போது உயிருடன் இல்லை. அவர்கள் எந்த குறையும் கூறாமல் அல்லது எந்த “பதவி உயர்வையும்” எதிர்பார்க்காமல் வருடக்கணக்கில் உண்மையுடன் உழைத்தனர். என்றாலும், அமைப்பு வளர வளர, ஆவியின் அபிஷேகம் பெற்ற உண்மையுள்ள இந்த கிறிஸ்தவர்களில் அநேகரைத் தேடி கூடுதலான பொறுப்புகள் வந்தன. சிலர் யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவிலும் சேவை செய்தனர்.
சுயதியாக மனப்பான்மைமிக்க இப்படிப்பட்ட சகோதரர்களுடன் சேர்ந்து வேலை செய்வது எனக்கு முக்கியமான ஒரு பாடத்தை கற்றுத்தந்தது. உலகப்பிரகாரமான வேலையில் பணியாளர்களின் உழைப்பிற்கு சம்பளமாக பணம் கிடைக்கிறது. அதுவே அவர்களுக்குக் கிடைக்கும் பலன். பெத்தேலில் சேவை செய்வதால் ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் அபரிமிதமாக கிடைக்கின்றன; ஆவிக்குரிய ஆண்களும் பெண்களும் மட்டுமே அப்படிப்பட்ட பலன்களை நன்றியுடன் போற்றுவர்.—1 கொரிந்தியர் 2:6-16.
1923-ல் பெத்தேலில் டீனேஜராக கால் பதித்தவரான நேதன் நார், 1930-களில் ஃபாக்டரி கண்காணியாக இருந்தார். அவர் தினமும் ஃபாக்டரியில் வந்து வேலைசெய்பவர்கள் ஒவ்வொருவரிடமும் வாழ்த்து தெரிவிப்பார். பெத்தேலுக்கு புதிதாக வந்திருந்த நாங்கள் அவ்வாறு தனிப்பட்ட விதத்தில் காட்டப்படும் அக்கறைக்கு நன்றியுடன் இருந்தோம். 1936-ல், ஜெர்மனியிலிருந்து ஒரு புதிய அச்சு இயந்திரம் வந்தது; இளம் சகோதரர்களில் சிலர் அதை பொருத்துவதற்குள் படாத பாடு பட்டனர். எனவே சகோதரர் நார், மேலாடையை மாட்டிக்கொண்டு அவ்வேலையில் இறங்கிவிட்டார்; அந்த இயந்திரம் இயங்க ஆரம்பிக்கும் வரை ஒரு மாதத்திற்கும் மேலாக எல்லாருடனும் சேர்ந்து வேலை செய்தார்.
எங்களில் அநேகர் ஈடுகொடுக்க முடியாத அளவுக்கு சகோதரர் நார் மிக கடினமான உழைப்பாளி. அதே சமயத்தில் சாவகாசமாக பொழுதைக் கழிக்கவும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஜனவரி 1942-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய பிரசங்க வேலையை மேற்பார்வை செய்யும் பொறுப்பேற்றிருந்த பிறகும்கூட சில சமயங்களில் நியூ யார்க், சௌத் லான்ஸிங்-க்கு அண்மையில் இருந்த வளாகத்தில் பெத்தேல் குடும்ப அங்கத்தினர்களுடனும் கிலியட் மிஷனரி பள்ளி மாணவர்களுடனும் சேர்ந்து பேஸ்பால் விளையாடினார்.
ஏப்ரல் 1950-ல், நியூ யார்க், புரூக்லினில் 124 கொலம்பியா ஹைட்ஸ்-ல் புதிதாக கட்டப்பட்ட 10 மாடி குடியிருப்பு கட்டடத்திற்கு பெத்தேல் குடும்பம் மாறிச் சென்றது. அங்கிருந்த புதிய சாப்பாட்டு அறையில் எல்லாருமாக சேர்ந்து அமர்ந்து சாப்பிட முடிந்தது. இந்த குடியிருப்பு கட்டடத்தின் கட்டட வேலை கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது; அச்சமயத்தின்போது எங்களால் காலை வணக்க நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. அந்நிகழ்ச்சியை திரும்ப தொடர முடிந்தபோது எவ்வளவு மகிழ்ச்சி! பெத்தேல் குடும்பத்திற்கு புதிதாய் வரும் அங்கத்தினர்களின் பெயர்களை ஞாபகப்படுத்த சகோதரர் நாருக்கு உதவுவதற்காக, சேர்மன் டேபிளில் தனக்குப் பக்கத்தில் அமரும்படி அவர் என்னை நியமித்தார். 50 வருடங்களுக்கு காலை வணக்கம் மற்றும் காலை உணவு சமயத்தில் அதே இடத்தில்தான் எனக்கு இருக்கை. பிறகு ஆகஸ்ட் 4, 2000-ல், அந்த சாப்பாட்டு அறை மூடப்பட்டது; முன்னாள் டவர்ஸ் ஓட்டலில் புதுப்பிக்கப்பட்டிருந்த சாப்பாட்டு அறைகளில் ஒன்றுக்கு மாற்றப்பட்டேன்.
1950-களில் சிறிது காலம் ஃபாக்டரியில் வரி அச்சுப்பொறியில் (Linotype machine) வேலை செய்தேன்; அப்போது, பிரிண்டிங் பிளேட்டுகளை தயாரிக்கும் வேலையின் ஒரு பகுதியான, அச்சு வரிப்பாளங்களை (Slugs) பக்கம் பக்கமாக அடுக்க வேண்டிய வேலை எனக்கு நியமிக்கப்பட்டது. அந்த வேலை எனக்கு அந்தளவுக்குப் பிடித்தமானதல்ல; ஆனால் இயந்திரங்களை மேற்பார்வை செய்துவந்தவரான வில்லியம் பீட்டர்சன் என்னிடம் அன்பாக இருந்ததால் எப்படியோ அங்கு இனிதாய் நேரம் நகர்ந்தது. பிறகு 1960-ல், 107 கொலம்பியா ஹைட்ஸ்-ல் புதிதாக கட்டப்பட்ட குடியிருப்பு கட்டடத்திற்கு பெயிண்ட் அடிக்க வாலண்டியர்கள் தேவைப்பட்டனர். வளர்ந்து வந்த எங்கள் பெத்தேல் குடும்பத்திற்குத் தேவையான புதிய கட்டடப் பணியில் கைகொடுக்க மகிழ்ச்சியுடன் முன்வந்தேன்.
107 கொலம்பியா ஹைட்ஸ் கட்டடத்தின் பெயிண்டிங் வேலை முடிந்த வெகு சீக்கிரத்தில், பெத்தேலுக்கு வரும் பார்வையாளர்களை வரவேற்கும் பணியில் அமர்த்தப்பட்டது எனக்கு இன்ப அதிர்ச்சியை தந்தது. ரிசப்ஷனிஸ்ட்டாக கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றுவது பெத்தேலில் செலவிட்ட மற்ற வருடங்களைப் போலவே அருமையான வருடங்களாகும். பெத்தேலை பார்வையிடவோ அதன் புதிய அங்கத்தினர்களாகவோ யார் வந்தாலும், ராஜ்ய அதிகரிப்புக்காக செய்யப்படும் வேலையில் நாங்கள் அனைவரும் இணைந்து முயற்சி செய்வதன் பலன்களை நினைத்துப் பார்த்தது சிலிர்ப்பூட்டியது.
பைபிளை கருத்தூன்றி படிப்பவர்கள்
எங்கள் பெத்தேல் குடும்பம் ஆவிக்குரிய வகையில் செழித்தோங்குகிறது; ஏனெனில் அங்கத்தினர்கள் பைபிளை நெஞ்சார நேசிக்கிறார்கள். நான் முதன்முதலில் பெத்தேலுக்கு வந்தபோது, புரூஃப் ரீடராய் பணியாற்றிய எம்மா ஹேமில்ட்டனிடம் பைபிளை அவர்கள் எத்தனை தடவை படித்திருக்கிறார்கள் என கேட்டேன். “முப்பத்தைந்து தடவை; அதற்கு மேல் எத்தனை தடவை என்று சரியாக நினைவில்லை” என்று பதிலளித்தார்கள். அதே சமயத்தில் பெத்தேலில் சேவை செய்துவந்த அஞ்சா நெஞ்சமுடைய மற்றொரு கிறிஸ்தவரான ஆன்டன் கார்பர் சொல்வார்: “கைக்கெட்டிய தூரத்திலேயே பைபிளை வைத்திருங்கள்.”
சகோதரர் ரசல் இறந்த வருடமான 1916-க்குப் பிறகு, அவர் பார்த்து வந்த அமைப்பு சம்பந்தப்பட்ட பொறுப்புகளை ஜோசஃப் எஃப். ரதர்ஃபர்டு ஏற்றுக்கொண்டார். ரதர்ஃபர்டு கனல் பறக்க பேசும், திறம்பட்ட மேடை பேச்சாளர்; அவர் ஒரு வழக்கறிஞராக, ஐக்கிய மாகாணங்களின் உச்ச நீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சிகளின் சார்பாக வழக்குகளில் வாதாடினார். ரதர்ஃபர்டு 1942-ல் இறந்த பிறகு, சகோதரர் நார் அவருடைய பொறுப்பை ஏற்றுக்கொண்டார்; பொதுப் பேச்சுக்களை திறம்பட்ட விதத்தில் கொடுப்பதற்காக அவர் கடினமாக உழைத்தார். அவருடைய அறைக்கு அருகில் நான் தங்கியிருந்ததால், அவர் திரும்பத் திரும்ப பேச்சுக்களை ஒத்திகை பார்ப்பதை கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட கடின முயற்சியால், காலப்போக்கில் அவர் ஓர் அருமையான பொதுப் பேச்சாளராக ஆனார்.
பிப்ரவரி 1942-ல், பெத்தேலில் எங்கள் அனைவரது கற்பிக்கும், பேசும் திறமையை வளர்க்க ஓர் ஏற்பாட்டை துவக்க சகோதரர் நார் உதவினார். அந்தப் பள்ளி பைபிள் ஆராய்ச்சிக்கும் பொதுப் பேச்சிற்கும் முக்கியத்துவம் கொடுத்தது. ஆரம்பத்தில், பைபிள் கதாபாத்திரங்களைப் பற்றி சுருக்கமான பேச்சு கொடுக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் நியமிப்பு கிடைத்தது. முதலாவது எனக்கு கிடைத்த பேச்சு மோசேயைப் பற்றியது. 1943-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் அதைப் போன்ற பள்ளி ஆரம்பிக்கப்பட்டது; இன்றுவரை அப்பள்ளி தொடர்ந்து நடத்தப்படுகிறது. பைபிள் அறிவை அடைவதற்கும், திறம்பட கற்பிக்கும் முறைகளை வளர்ப்பதற்குமே இன்றும் பெத்தேலில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.
பிப்ரவரி 1943-ல், கிலியட் மிஷனரி பள்ளி முதலாவதாக தொடங்கியது. இப்போதோ அதன் 111-வது வகுப்பின் பட்டமளிப்பு சமீபத்தில்தான் நடந்தது! 58 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டுள்ள அந்தப் பள்ளி, 7,000-க்கும் மேற்பட்டோருக்கு உலகமுழுவதிலும் மிஷனரிகளாக சேவை செய்ய பயிற்சி அளித்துள்ளது. அந்தப் பள்ளி துவங்கிய வருடமான 1943-ல், உலகமுழுவதிலும் 1,00,000-க்கும் சற்று அதிகமானோரே யெகோவாவின் சாட்சிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்கின்றனர்!
என் ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல்
கிலியட் நிறுவப்படுவதற்கு சற்று முன்பு, ஐக்கிய மாகாணங்கள் முழுவதிலும் சபைகளை சந்திப்பதற்காக பெத்தேலில் இருந்த நாங்கள் மூவர் நியமிக்கப்பட்டோம். இந்த சபைகளை ஆவிக்குரிய வகையில் பலப்படுத்த ஒரு நாளோ, சில நாட்களோ, ஒரு வாரமோகூட தங்கினோம். சகோதரருக்கு ஊழியர்கள் (servants to the brethren) என்று நாங்கள் அழைக்கப்பட்டோம்; அந்தப் பெயர் வட்டார ஊழியர் அல்லது வட்டார கண்காணி என்று பின்பு மாற்றப்பட்டது. என்றாலும், கிலியட் பள்ளி ஆரம்பிக்கப்பட்ட பிறகு விரைவிலேயே, சில வகுப்புகளை நடத்துவதற்காக நான் திரும்ப அழைக்கப்பட்டேன். இரண்டு முதல் ஐந்து வகுப்புகளுக்கு ரெகுலராக பாடம் நடத்தினேன்; அதே சமயத்தில் ரெகுலராக வகுப்பை நடத்திவந்த போதனையாளர்களில் ஒருவருக்குப் பதிலாகவும் 14-வது வகுப்பை நடத்தினேன். யெகோவாவின் அமைப்பின் நவீன நாளைய சரித்திரத்தின் குறிப்பிடத்தக்க ஆரம்ப சம்பவங்களை மாணவர்களுடன் சேர்ந்து கலந்தாலோசிக்க முடிந்தது—அவற்றில் பெரும்பாலானவற்றை என் சொந்த அனுபவத்திலிருந்தே விவரிக்க முடிந்தது—என் அபரிமிதமான ஆவிக்குரிய ஆஸ்தியை இன்னும் முழுமையாக மதித்துணர செய்தது.
உருண்டோடிய வருடங்களில் நான் அனுபவித்திருக்கும் மற்றொரு ஒப்பற்ற பாக்கியம், யெகோவாவின் ஜனங்களுடைய சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டதாகும். 1963-ல், “நித்திய நற்செய்தி” மாநாடுகளுக்கு பிரதிநிதிகளாய் சென்ற 500-க்கும் மேற்பட்டவர்களுடன் உலகமுழுவதும் பயணித்தேன். நான் கலந்துகொண்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மற்ற மாநாடுகள்: 1989-ல் போலந்தில் வார்ஸா, 1990-ல் ஜெர்மனியில் பெர்லின், 1993-ல் ரஷ்யாவில் மாஸ்கோ. ஒவ்வொரு மாநாட்டிலும், நாஸி ஆட்சியிலோ, கம்யூனிஸ்ட் ஆட்சியிலோ, அல்லது இரண்டிலுமோ பல பத்தாண்டுகளுக்கு துன்புறுத்துதலை சகித்த நம் அருமை சகோதர சகோதரிகளில் சிலரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவை விசுவாசத்தை பலப்படுத்தும் அருமையான அனுபவங்கள்!
யெகோவாவின் சேவையில் என் வாழ்க்கை ஐசுவரியமிக்கதாய் இருந்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை! ஆவிக்குரிய ஆசீர்வாதங்களுக்கு அளவேயில்லை. அதுமட்டுமின்றி, பொருள் சம்பந்தப்பட்ட ஐசுவரியங்களைப் போல் அல்லாமல், இந்த ஐசுவரியங்களை பிறருக்கு கொடுக்க கொடுக்க குறையாமல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். தாங்கள் யெகோவாவின் சாட்சிகளாக வளர்க்கப்படாமல் இருந்திருந்தால் எத்தனை நன்றாக இருந்திருக்கும் என்று சொல்வதை அவ்வப்போது கேட்டிருக்கிறேன். கடவுளின் அமைப்பிற்கு வெளியே வாழ்க்கையை அனுபவித்த பிறகு பைபிள் சத்தியங்கள் தங்களுக்கு கிடைத்திருந்தால் அவற்றை இன்னும் நன்கு மதித்துணர முடிந்திருக்கும் என தாங்கள் நினைப்பதாக சொல்கின்றனர்.
இப்படி இளைஞர்கள் சொல்வதைக் கேட்கையில் எனக்கு மிகவும் சங்கடமாய் இருக்கும்; ஏனெனில் யெகோவாவின் வழிகளைப் பற்றிய அறிவில் வளர்க்கப்படுவது மிகச் சிறந்ததில்லை என்றே அவர்கள் சொல்கின்றனர். ஆனால், மக்கள் தங்கள் வாழ்க்கையில் பின்னால் பைபிள் சத்தியத்தைக் கற்றுக்கொள்கையில், என்னென்ன கெட்ட பழக்கவழக்கங்களையும் தீய எண்ணங்களையும் கைவிட வேண்டியுள்ளன என்பதை நினைத்துப் பாருங்கள். என் பெற்றோர் தங்கள் மூன்று பிள்ளைகளையும் நீதியின் வழியில் வளர்த்திருப்பதை நினைத்து நான் எப்பொழுதுமே அதிக நன்றியுடன் இருந்திருக்கிறேன். ஜான் ஜூலை 1980-ல் தனது மரணம் வரை யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியனாய் நிலைத்திருந்தான்; எஸ்தர் இந்நாள்வரை உண்மையுள்ள சாட்சி.
உண்மையுள்ள அநேக கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் அரிய நட்பை நான் அனுபவித்திருக்கிறேன்; அவற்றை ஆசை ஆசையாய் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். பெத்தேலில் 67-க்கும் மேற்பட்ட வருடங்களை இன்பமாய் கழித்துவிட்டேன். நான் திருமணம் செய்துகொள்ளாத போதிலும், அநேக ஆவிக்குரிய மகன்களும் மகள்களும் பேரக்குழந்தைகளும் எனக்குண்டு. நம் உலகளாவிய ஆவிக்குரிய குடும்பத்தில், இதுவரை நான் சந்தித்திராத அன்பார்ந்த புதியவர்கள் அனைவரையும் அருமையானவர்களாக எண்ணிப்பார்த்து பெருமிதம் அடைகிறேன். ‘யெகோவாவின் ஆசீர்வாதமே ஐசுவரியத்தைத் தரும்’ என்ற வார்த்தைகள் எத்தனை நிஜமானவை!—நீதிமொழிகள் 10:22.
[அடிக்குறிப்பு]
a மார்ச் 8, 1932-ல் நான் முழுக்காட்டுதல் பெற்றேன். ஆகவே பயனியராக வேண்டும் என்ற தீர்மானத்திற்குப் பின்புதான் நான் முழுக்காட்டுதலே பெற்றேன்.
[பக்கம் 20-ன் படம்]
இடமிருந்து வலம்: மடியில் என் தம்பி ஜானை வைத்திருக்கும் அப்பா, எஸ்தர், நான், என் அம்மா
[பக்கம் 23-ன் படங்கள்]
1945-ல் கிலியட் வகுப்பில் பாடம் நடத்துதல்
மேலே வலம்: கிலியட் பள்ளி போதனையாளர்களான எட்வார்டோ கெல்லர், ஃப்ரெட் ஃப்ரான்ஸ், நான், ஆல்பர்ட் ஷ்ரோடர்
[பக்கம் 24-ன் படம்]
யெகோவாவின் சேவையில் என் ஐசுவரியமிக்க வாழ்க்கையை எண்ணிப்பார்த்தல்