சேப்பல்கள் ஏன் மூடப்பட்டு வருகின்றன
சர்ச்சுகள், சேப்பல்கள் (chapels), பாடகர் குழுக்கள், நிலக்கரி—50 ஆண்டுகளுக்கு முன்பு எனப்படும் அவ்வளவு சமீப காலம் வரையாக, சுரங்கம் வெட்டும் சௌத் வேல்ஸின் பள்ளத்தாக்குகளில் நீங்கள் இருந்தீர்கள் என்பதைக் குறிக்கும் நிச்சயமான அடையாளங்களாய் அவை இருந்தன. ஒவ்வொரு நூறு கஜ தூரத்திலும், ஒரு வெல்ஷ் அல்லது ஓர் ஆங்கில பாப்டிஸ்ட் சேப்பலை, அல்லது மெத்தடிஸ்ட்டுகளுக்கு, கால்வினிஸ்டிக் மெத்தடிஸ்ட்டுகளுக்கு, காங்ரிகேஷனலிஸ்ட்டுகளுக்கு, பிரஸ்பிட்டேரியன்களுக்கு, இன்னும் அது போன்றவர்களுக்குச் சமமானதை, நீங்கள் எதிர்ப்பட்டதாகத் தோன்றுகிறது. வெல்ஷ் மக்கள் பலர் தங்கள் தேசிய மொழியைப் பேசியதால், கிட்டத்தட்ட ஒவ்வொரு மதத்துக்கும் அதனதன் மொழியில் தனித்தனி சேப்பல்கள் இருந்தன. டெலிவிஷன் செல்வாக்கு செலுத்தின ஐந்து பத்தாண்டுகளும் மாறிவரும் மதிப்புகளும் அவையெல்லாவற்றையும் அடியோடு மாற்றிவிட்டிருக்கின்றன.
ரான்டா பள்ளத்தாக்கிலிருக்கும் பிளின்க்ளிடக்கில் வசிக்கும் வெல்ஷ் மனிதரான இல்வன் ஜோன்ஸ், ரான்டாவைச் சேர்ந்த டஜன்கணக்கான சேப்பல்களுக்கு வரும் முடிவைப் பதிவு செய்வதில் பல்லாண்டுகளைச் செலவழித்திருக்கிறார். உள்ளூர் செய்தித்தாளான ரான்டா லீடர், சேப்பல்களின் தற்போதைய நிலையைக் குறித்துக் காட்டுவதாய், பெரும்பாலும் 19-வது நூற்றாண்டிலிருந்து தேதியிடப்பட்டிருக்கும், கிட்டத்தட்ட நூறு சேப்பல்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கை கூறியது: “நிலக்கரி சுரங்கவேலை திடீரென வளர்ச்சியடைந்த ஆண்டுகளிலிருந்து பள்ளத்தாக்கு வாழ்க்கையினுடைய இவ்விரண்டு ஆதாரங்களின் [மதமும் கரியும்] முடிவான வீழ்ச்சிவரையாக அது செல்கையில், இப் பெரிய கட்டடங்கள் ரான்டாவின் உயிர்நாடியாய் இருந்தன.”
வேல்ஸில் மட்டுமல்லாமல் ஐரோப்பாவின் பல பாகங்களில், மதத்தினுடைய செல்வாக்கு வீழ்ச்சி அடைந்திருப்பதற்கு அந்தப் பட்டியல் ஒரு மாதிரியாய் விளங்குகிறது. அறுபத்தெட்டு சேப்பல்கள் “இப்போது தகர்க்கப்பட்டவையாக” பட்டியலிடப்பட்டன. பத்தொன்பது சேப்பல்கள் பிற உபயோகங்களுக்காக மாற்றியமைக்கப்பட்டிருந்தன. சில உதாரணங்களாவன: “ஓர் ஆய்க்கிடோ வீரக்கலை கிளப்பாக மாற்றப்பட்டது,” “ஃபிளாட்டுகளாக [அபார்ட்மெண்ட்டுகளாக] மாற்றப்பட்டது,” “பண்டகசாலையாக திருத்தியமைக்கப்பட்டது,” “ஒரு ஷாப்பிங் பகுதியாக மாற்றப்பட்டது,” “ஒரு மருந்துக் கடையாக மாற்றப்பட்டது.” பட்டியலிடப்படாத ஒன்று, பெனீக்ரேக்கில், பல்லாண்டுகளுக்கு முன்பு, யெகோவாவின் சாட்சிகளுடைய வளர்ச்சியடைந்துவரும் ரான்டா சபைக்காக ஒரு ராஜ்ய மன்றமாக மாற்றப்பட்டது.
பொய் மத உலகப் பேரரசான “மகா பாபிலோன்” சம்பந்தமாக பைபிள் முன்னுரைத்தவிதமாக, அதன் அடையாளப்பூர்வமான தண்ணீர்களான, மக்களின் ஆதரவு, உலகின் பல பாகங்களில் வற்றிவருகின்றன. சீக்கிரத்தில் உலகின் அரசியல் அமைப்புகள், உலகளாவிய வகையில் யெகோவா தேவனின் நாமத்தையும் நோக்கத்தையும் தெய்வநிந்தனை செய்திருக்கும் பொய் மதத்தைப் பாழாக்கும்படியான ‘[கடவுளின்] எண்ணத்தை நிறைவேற்றுகையில்,’ மதத்துக்கு எதிராகத் திரும்பும்.—வெளிப்படுத்துதல் 17:5, 15-17. a
[அடிக்குறிப்பு]
a மகா பாபிலோனின் முடிவைப் பற்றிய விவரமான தகவலுக்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தில், பக்கங்கள் 258-66-ஐக் காண்க.